Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட சாதனை; நேபாளத்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை சுவைத்தது இத்தாலி

Published By: Vishnu

12 Feb, 2026 | 10:29 PM

image

(நெவில் அன்தனி)

நேபாளத்துக்கு எதிராக மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் மொஸ்கா சகோதரர்களின் சாதனைமிக்க பிரிக்கப்படாத ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட உதவியுடன் இத்தாலி 10 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

1202_crishan_kalugamage_on_right_italy_v

அறிமுக அணியாக இந்த வருடம் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் இத்தாலி தனது இரண்டாவது போட்டியில் முதலாவது வெற்றியை சுவைத்தது.

அப் போட்டியில் அன்தனி, ஜஸ்டின் சகோதரர்களின் அபார துடுப்பாட்டங்களும் இலங்கை வம்சாவளி வீரர் கிரிஷான் ஜோர்ஜ் ப்ரியன்த பெர்னான்டோ கலுகமகேயின் துல்லியமான பந்துவீச்சும் இத்தாலியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

இன்றைய போட்டியில் நேபாளத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 ஓட்டங்களைப் பெற்று வெற்றீயீட்டியது.

1202_anthony_mosca_ity_vs_nepal..png

1202_anthony_mosca_ity_vs_nepal..png

மொஸ்கா சகோதரர்களான ஜஸ்டின் - அன்தனி ஆகிய இருவரும் பகிர்ந்த இந்த இணைப்பாட்டமானது ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் சகோதர்கள் இருவர் பகிர்ந்த முதலாவது சத இணைப்பாட்டமாகும். அத்துடன் சகோதரர்கள் பகிர்ந்த அதிகூடிய இணைப்பாட்டமாகும்.

பாகிஸ்தானின் அக்மால் சகோதரர்களான உமர் - கம்ரன் ஆகியோர் 2014இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 93 ஓட்டங்களே இதற்கு முன்னர் சகோதரர்கள் இருவர் பகிர்ந்த அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆரிப் ஷெய்க் (27), அணித் தலைவர் ரோஹித் பௌடெல் (23), ஆசிப் ஷெய்க் (20), கரன் கேசி (18), திப்பேந்த்ரா சிய் அய்ரி (17) ஆகிய ஐவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் கிரிஷான் கலுகமகே 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பென் மனென்டி 4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/238520

  • Replies 64
  • Views 2.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    பெப் 07 தானே ஆரம்பம். கிறிஸ்மஸுக்கு முன்னர் கேள்விக்கொத்து தயாரிக்கலாம். மழையால்☔️ எத்தனை போட்டிகள் தடைப்படும் என்றும் ஒரு கேள்வி போடலாம்.🤣 20 பேர் வரை கலந்துகொண்டால்தான் சுவாரஸ்யம்😁

  • கந்தப்பு
    கந்தப்பு

    கிருபன் சிறப்பாக கடந்த T20 போட்டியினை நடாத்தியதினால் அவரை மீண்டும் இம்முறையும் போட்டியை நடாத்தும் படி வேண்டிகொள்கிறேன்.

  • சிம்பாவே அணி இலங்கையணிக்கு சவாலாக உருவெடூத்துள்ளது, சிம்பாவே அணியும் இலங்கை அணி போல நிண்டகாலமாக விளையாடும் அணிதான், புதிதாக வரும் அணிகள் வெகு வேகமாக முன்னேறிவருகிறார்கள் சில அணிகள் பின் தங்கி விடுக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ குழு புள்ளிகள் நிலையில் முதலிடம்

Published By: Vishnu

12 Feb, 2026 | 11:28 PM

image

(நெவில் அன்தனி)

டெல்ஹி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (12) இரவு மின்னொளியில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் நமிபியாவை 93 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் 4 புள்ளிககளைப் பெற்றுள்ள இந்தியா, ஏ குழுவுக்கான அணிகள் நிலையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைக் குவித்தது.

இந்தியா சார்பாக துடுப்பாட்ட வரிசையில் முதல் 6 வீரர்களில் அணித் தலைவர் சூரியகுமார் யாதவ்வைத் தவிர மற்றைய ஐவரும் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

ஆரம்ப விக்கெட்டில் பகிரப்பட்ட 25 ஓட்டங்களில் 22 ஓட்டங்களை சஞ்சு செம்சன் பெற்றதுடன் மற்றைய ஆரம்ப வீரர் இஷான் கிஷான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 பந்துகளில் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைக் குவித்தார்.

இஷான் கிஷான் 2ஆவது விக்கெட்டில் திலக் வர்மாவுடன் 31 பந்துகளில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

திலக் வர்மா 25 ஓட்டங்களைப் பெற்றதுடன் சூரியகுமார் யாதவ் 12 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து  ஹார்திக் பாண்டியா, ஷிவம் டுபே ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 205 ஓட்டங்களாக உயர்த்தினர்.

1202_hardik_pandiya_ind_vs_namibia.png

ஹார்திக் பாண்டியா 28 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களையும் ஷிவம் டுபே 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆனால், அவர்கள் இருவர் உட்பட ஐவர் 5 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

பந்துவீச்சில் அணித் தலைவர் ஜேர்ஹாட் இரேஸ்மஸ் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

1202_gerhard_erasmus_namibia_vs_india.pn

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஐவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் சர்வதேச அனுபவமற்ற அவர்களால் அவற்றை கணிசமான எண்ணிக்கைகளாக மாற்றமுடியாமல் போனது.

லூரென் ஸ்டீன்கேம்ப் (29), ஜனர் ஃப்ரைலின்க் (22), ஜான் நிக்கோல் லொஃப்டி - ஈட்டன் (13), ஜேர்ஹாட் இரேஸ்மஸ் (18), ஸேன் க்றீன் (11) ஆகியோர் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹார்திக் பாண்டியா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஹார்திக் பாண்டியா

https://www.virakesari.lk/article/238521

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவை திக்குமுக்காடவைத்து வெற்றிகொண்டு வரலாறு படைத்தது ஸிம்பாப்வே

13 Feb, 2026 | 04:47 PM

image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் அவுஸ்திரேலியாவை திக்குமுக்காட வைத்த ஸிம்பாப்வே 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு வரலாறு படைத்தது.

இதன் மூலம் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஸிம்பாப்வே வெற்றியீட்டியுள்ளது.

1302_muzarabani_zim_vs_aus.png

2007இல் நடைபெற்ற முதலாவது அத்தியாத்தில் அவுஸ்திரேலியாவை ஸிம்பாப்வே 5 விக்கெட்களால் வெற்றிகொண்டிருந்தது.

இப்போது 19 வருடங்களுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவை மீண்டும் சந்தித்த ஸிம்பாப்வே அபார வெற்றியை ஈட்டியது.

இன்றைய போட்டியில் சகலதுறைகளிலும் ஸிம்பாப்வே பிரகாசித்து அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்டதன் மூலம் பி குழுவுக்கான அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.

இக் குழுவில் இலங்கை 4 புள்ளிகளுடன் 3.050 என்ற மிகச் சிறந்த நிகர ஓட்டவேகத்துடன் முதலிடத்தில் இருக்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸிம்பாப்வே, 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

ஸிம்பாப்வே சார்பாக  துடுப்பெடுத்தாடிய நான்கு வீரர்களும் தமது இன்னிங்ஸ்களை நன்கு திட்டமிட்டு விளையாடிமை ஏனைய அணிகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

ஸிம்பாப்வேயின் மொத்த எண்ணிக்கையில் 86 ஓட்டங்களே பவுண்டறிகளில் வந்தன. மற்றைய 83 ஓட்டங்கள் ஒற்றைகள், இரட்டைகளாக கிடைத்தன.

1302_sikkandar_raza_i_zim_vs_aus.png

ப்றயன் பெனெட், தடிவன்ஷே மாருமணி ஆகிய இருவரும்  ஆரம்ப விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தடிவன்ஷே மாருமணி 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதனைத் தொடர்ந்து ப்றயன் பெனெட், ரெயான் பியூரி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மொத்த எண்ணிக்கை 131 ஓட்டங்களாக இருந்தபோது மாக்கஸ் ஸ்டொய்னிஸ் வீசிய பந்தை ரெயான் பியூரி ஓங்கி அடித்தபோது அந்தப் பந்து ஸ்டொய்னிஸில் கையைப் பதம்பார்த்து காயப்படுத்தியது.

ஸ்டொய்னிஸ் உடனடியாக சிகிச்சைக்காக களத்தை விட்டு வெளியேறியதும் அவரது ஓவரைப் பூர்த்தி செய்ய அழைக்கப்பட்ட கெமரன் க்றீன் முதல் பந்திலேயே ரெயான் ப்யூரியை ஆட்டம் இழக்கச் செய்தார்.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ப்றயன் பெனெட் 56 பந்துகளில் 7 பவுண்டறிகள் உட்பட 64 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா 13 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத மூன்றாவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

கெமரன் க்றீன் 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அவுஸ்திரேலிய அணியில் அதிரடிக்கு பெயர்பெற்ற ட்ரவிஸ் ஹெட், கெமரன் க்றீன், டிம் டேவிட் ஆகியோர் இடம்பெற்றபோதிலும் அவர்களால் எதையும் சாதிக்க முடியாமல் போனது.

1302_matt_renshawzim_vs_aus.png

அவுஸ்திரேலிய இன்னிங்ஸில் மூவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொட்டனர்.

அவர்களில் தனித்து போராடிய மெட் ரென்ஷோ 44 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பெற்றார்.

க்லென் மெக்ஸ்வெல் சிரமத்திற்கு மத்தியில் 32 ஓட்டங்களையும் பதில் அணித் தலைவர் ட்ரவிஸ் ஹெட் 17 ஓட்டங்களையும்    பெற்றனர்.

காயத்துக்குள்ளான மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 6 ஓட்டங்ளை மாத்திரமே பெற்றார்.

1302_zimb_celebrate_win_vs_aus.png

பந்துவீச்சில் ப்ளெசிங் முஸராபனி 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ப்றட் இவான்ஸ் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/238587

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவை சாய்த்த ஜிம்பாப்வே - 4 விக்கெட் எடுத்து 'ஷாக்' கொடுத்த இவர் யார்?

பிளெசிங் முசரபானி

பட மூலாதாரம்,Ishara S. KODIKARA / AFP via Getty Images

படக்குறிப்பு,பிளெசிங் முசரபானி

13 பிப்ரவரி 2026, 11:04 GMT

புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜிம்பாப்வேயின் இந்த வெற்றியின் நாயகன் பிளெசிங் முசரபானி ஆவார்.

29 வயதான பிளெசிங் முசரபானி ஜிம்பாப்வேவுக்கு போட்டியை வென்றெடுக்கும் ஒரு பந்துவீச்சை நிகழ்த்தினார்.

நான்கு ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார்.

பிளெசிங் முசரபானி சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல அனுபவத்தைக் கொண்டுள்ளார், 2018 இல் டி20 போட்டிகளில் அறிமுகமானார்.

இதுவரை விளையாடிய 84 டி20 சர்வதேச போட்டிகளில் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பிளெசிங் முசரபானி அதிக ரன்களை கொடுக்காத பந்துவீச்சுக்கு பெயர் பெற்றவர், இதுவரை இந்த 84 போட்டிகளில் 7.14 என்ற எகானமி விகிதத்தில் ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

பிளெசிங் முசரபானி

பட மூலாதாரம்,Robert Cianflone/Getty Images

உயரம் 6 அடி 8 அங்குலம்

முசரபானி 21 வயதில் அறிமுகமானபோது, அவரது உயரம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன.

அவரது உயரம் 6 அடி 8 அங்குலம். முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலை விட உயரமானவர்.

டி20 கிரிக்கெட்டைத் தவிர, கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முசரபானி அற்புதமாக செயல்பட்டார்.

2025 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளராக முசரபானி இருந்தார்.

கடந்த ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தக் காலகட்டத்தில், ஒரு இன்னிங்ஸில் 58 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த செயல் திறனாக இருந்தது.

2021 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாடிய அவர், ஆறு போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 2022 ஆம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு இன்னும் ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx28pqxgj37o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடுமையாக போராடி கனடாவை வெற்றிகொண்டது ஐக்கிய அரபு இராச்சியம்

Published By: Vishnu

13 Feb, 2026 | 09:04 PM

image

(நெவில் அன்தனி)

டெல்லி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற கனடாவுக்கு எதிரான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் கடுமையாக போராடிய ஐக்கிய அரபு இராச்சியம் இரண்டு பந்துகள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

ஜுனைத் சித்திக் பதிவுசெய்த 5 விக்கெட் குவியலும் ஆரியன்ஸ் ஷர்மா, சொஹெய்ப் கான் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் ஐக்கிய அரபு இராச்சியம் வெற்றிபெற உதவின.

கனடாவினால் நிர்ணயிக்கப்பட்ட 151 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்களை இழந்த ஐக்கிய அரபு இராச்சியம் 13ஆவது ஓவரில் 66 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஆட்டம் இழந்த முதல் நால்வரில் ஒருவரேனும் 5 ஓட்டங்களுக்கு மேல் பெறவில்லை. இருவர் தலா 4 ஓட்டங்களையும் மற்றைய இருவர் தலா 5 ஓட்டங்களையும் பெற்றனர்.

மொத்த எண்ணிக்கையான 66 ஓட்டங்களில் 44 ஓட்டங்களை ஆரியன்ஸ் ஷர்மா பெற்றிருந்தார்.

வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 81 ஓட்டங்களில் 84 ஓட்டங்களை ஆரியன்ஷ் ஷர்மா, சொஹெய்ப் கான் ஆகிய இருவரும் பகிர்ந்த நிலையில் சொஹெய்ப் கான் 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

1302_aryans_sharma_uae_vs_canada.png

1302_sohaib_khan_uae_vs_canada.png

அதன் பின்னர் களம் புகுந்த மொஹம்மத் அர்பான் வெற்றிக்கு தெவையான ஒரு ஓட்டத்தைப் பெற்றுக்கொடுத்தார்.

ஆரியன்ஷ் ஷர்மா 53 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் சாத் பின் ஸபார் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த கனடா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

கனடா 6ஆவது ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 38 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

1302_harsh_thakke_canada_vs_uae.png

இதனைத் தொடர்ந்து நவ்னீத் தாலிவல், ஹார்ஷ் தக்கர் ஆகிய இருவரும் 58 ஓட்டங்களைப் பகிரந்து அணியை ஓரளவு சிறந்த நிலையில் இட்டனர்.

ஹார்ஷ் தக்கர் 50 ஓட்டங்களையும் நவ்னீத் தாலிவல் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

மத்திய வரிசையில் ஷ்ரேயஸ் மொவ்வா 21 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஜுனைத் சித்திக் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் ஸ்கொட்லாந்துக்கு எதிராக ரி20 உலகக் கிண்ண ஆரம்பத் தினத்தன்று ரொமாரியோ ஷெப்பர்ட் பதிவு செய்த 5 விக்கெட் குவியலைத் தொடர்ந்து 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த இரண்டாவது வீரர் ஜூனைத் சித்திக் ஆவார்.

https://www.virakesari.lk/article/238608

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்தை 93 ஓட்டங்களால் இலகுவாக வென்றது ஐக்கிய அமெரிக்கா

Published By: Vishnu

13 Feb, 2026 | 11:06 PM

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அமெரிக்காவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் சென்னை சேப்பாக்கம் எம்.எஸ். சிதம்பரம் விளையாட்டரங்கில்  வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் 93 ஓட்டங்களால் ஐக்கிய அமெரிக்கா இலகுவாக வெற்றி பெற்றது.

சய்ட்டேஜா மூக்கமல்லா, ஷுப்ஹான் ரஞ்சேன் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்களும் ஹார்மீத் சிங், ஷட்லி வன் ஷோக்வைக் ஆகியோரின் கட்டுப்பாடான பந்துவீச்சுகளும் அமெரிக்காவை இலகுவாக வெற்றி பெறச் செய்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அமெரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது.

கனடாவுக்கு எதிராக 2024 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பெற்ற 197 ஓட்டங்கள் என்ற தனது அதிகூடிய மொத்த எண்ணிக்கையை சமப்படுத்த போட்டியில் ஒரு ஓட்டத்தால் அமெரிக்கா தவறியது.

அணித் தலைவர் மோனாங்க் பட்டேல், சய்ட்டேஜா மூக்கமல்லா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 55 ஓட்டங்களும் சய்ட்டேஜா மூக்கமல்லா, ஷுப்ஹாம் ரஞ்சேன் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 54 ஓட்டங்களும் ஐக்கிய அமெரிக்காவின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது.

சய்ட்டேஜா மூக்கமல்லா 51 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 79 ஓட்டங்களையும் ஷுப்ஹாம் ரஞ்சேன் ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களையும் மொனாங்க் பட்டேல் 36 ஓட்டங்களையும் ஷயன் ஜஹாங்கிர் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாஸ் டி லீட் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

197 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 15.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

பாஸ் டி லீட் (23), அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (20), மெக்ஸ் ஓ'தௌட் (13), ரோலோவ் வன் டேர் மேர்வ் (10) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஹார்மீத் சிங் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷட்லி வன் ஷோக்வைக் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் மொஹ்சின் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகன்: ஹார்மீத் சிங்

https://www.virakesari.lk/article/238612

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து 5 விக்கெட்டுக்களால் வெற்றி

Feb 14, 2026 - 07:10 PM

இங்கிலாந்து 5 விக்கெட்டுக்களால் வெற்றி

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (14) இடம்பெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

ஸ்கொட்லாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ரிச்சி பெரிங்டன் (Richie Berrington) 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். 

பந்து வீச்சியில் இங்கிலாந்து அணி சார்பில் ஆதில் ராசிட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

அதற்கமைய 153 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது.

https://adaderanatamil.lk/news/cmlmd4zgm000a356nxtd8nmzt

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடப்பு ரி20 உலகக் கிண்ணத்தில் அதிகூடிய மொத்த எண்ணிக்கை குவித்த அயர்லாந்து இலகுவாக ஓமானை வீழ்த்தியது

Published By: Vishnu

14 Feb, 2026 | 11:01 PM

image

(நெவில் அன்தனி)

ஓமானுக்கு எதிராக எஸ்.எஸ்.சி. மைதானத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாதனைமிகு மொத்த எண்ணிக்கையைக் குவித்த அயர்லாந்து 96 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 235 ஓட்டங்களைக் குவித்து நடப்பு உலகக் கிண்ணத்தில் அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான சாதனையை நிலைநாட்டியது.

ஓமானுக்கு எதிராக இலங்கை பெற்ற 225 ஓட்டங்கள் என்ற சாதனையை அயர்லாந்து முறியடித்தே புதிய சாதனை நிலைநாட்டியது.

அத்துடன் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் அயர்லாந்து பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகவும் இது பதிவானது.

1402_locan_tucker.png

அயர்லாந்து துடுப்பாட்டத்தில் அசத்திய லோக்கன் டக்கர் 51 பந்துகளில் 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக 94 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

டக்கர், கெரத் டிலேனி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இது ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் 5ஆவது விக்கெட்டுக்கான அதிகூடிய இணைப்பாட்டமாகும்.

கெரத் டிலேனி 30 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டறிகள்., 4 சிக்ஸ்களுடன் 56 ஓட்டங்களைக் குவித்தார்.

ஜோர்ஜ் டொக்ரெல் 9 பந்துகளில் 5 சிக்ஸ்களை வீளாசி 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஷக்கீல் அஹ்மத் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் 18 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

11ஆவது ஓவரில் ஓமான் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.

ஆரம்ப வீரர் ஆமிர் கலீம் 50 ஓட்டங்களையும் ஹமாத் மிர்ஸா 46 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

ஆனால், கடைசி 8 விக்கெட்கள் 42 ஓட்டங்களுக்கு சரிந்தன.

1402_aamir_kaleem_oman_vs_ire.png

பந்துவீச்சில் ஜொஷ் லிட்ல் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெறி மெக்காத்தி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெத்யூ ஹம்ப்றீஸ் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: லோக்கன் டக்கர்

https://www.virakesari.lk/article/238665

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடப்பு ரி20 உலகக் கிண்ணத்தில் 3ஆவது நேரடி வெற்றியை ஈட்டிய  முதலாவது அணி தென் ஆபிரிக்கா

Published By: Vishnu

14 Feb, 2026 | 11:17 PM

image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழுப் போட்டியில் 7 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றியீட்டியது.

இதன் மூலம் இந்த வருட ரி20 உலகக் கிண்ண போட்டியில் 3ஆவது நேரடி வெற்றியை ஈட்டிய முதலாவது அணி என்ற பெருமையை தென் ஆபிரிக்கா பெற்றுக்கொண்டது.

இந்த வெற்றியுடன் தென் ஆபிரிக்கா சுப்பர் 8 சுற்றில் விளையாட பெரும்பாலும் தகுதிபெற்றுக்கொண்டுள்ளது.

அப் போட்டியில் மாக்கோ ஜென்சனின் 4 விக்கெட் குவியல், அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராமின் ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன தென் ஆபிரிக்காவின் வெற்றியை இலகுவாக்கின.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.

மார்க் செப்மன் 48 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் 32 ஓட்டங்களையும் பின் அலன் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மாக்கோ ஜென்சன் 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் மாக்கோ ஜென்சன் பதிவு செய்த முதலாவது 4 விக்கெட் குவியல் இதுவாகும்.

176 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அதிகூடிய வெற்றி இலக்கை விரட்டிக் கடந்த அணி என்ற பெருமையை தென் ஆபிரிக்கா பெற்றுக்கொண்டது.

1402_aiden_markram__sa_vs_nz.png

ஏய்டன் மார்க்ராம் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய 44 பந்துகளில் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 84 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

குவின்டன் டி கொக் (20), ரெயான் ரிக்கெல்டன் (21), டிவோல்ட் ப்ரவிஸ் (21), டேவிட் மில்லர் (24 ஆ.இ.) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.

குவின்டன் டி கொக்குடன் ஆரம்ப விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்த ஏய்டன் மார்க்ராம்,  2ஆவது விக்கெட்டில் ரெயான் ரிக்கெல்டனுடன் 40 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் டேவிட் மில்லருடன் 47 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

ஆட்டநாயகன்: மாக்கோ ஜென்சன்

https://www.virakesari.lk/article/238666

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றது

Published By: Digital Desk 3

15 Feb, 2026 | 05:14 PM

image

(நெவில் அன்தனி)

மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற நேபளாத்துக்கு எதிரான சி குழு போட்டியில் 9 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டிய மேற்கிந்தியத் தீவுகள், ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றது.

அதேவேளை, 3ஆவது நேரடி தோல்வியைத் தழுவிய நேபாளம் முதல் சுற்றுடன் வெளியேறுகிறது.

இன்றைய போட்டியல் சிரேஷ்ட வீரர் ஜேசன் ஹோல்டர் பதிவுசெய்த 4 விக்கெட் குவியல், ஷாய் ஹோப் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன மேற்கிந்தியத் தீவுகளை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நேபாளம் 20 ஓவர்களும் தாக்குப்பிடித்து 8 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.

15 ஓவர்கள் நிறைவில் நேபாளம் 6 விக்கெட்களை இழந்து 73 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

எனினும் சிரேஷ்ட வீரரும் அனுபவசாலியுமான திப்பேந்த்ர சிங் அய்ரீ, 8ஆம் இலக்க வீரர் சோம்ப்கால் காமி ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.

1502_dipendra_singh_airee_and_sompal_kam

அய்ரீ பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார்.

சோம்ப்பால் காமி 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவர்களைவிட லோக்கேஷ் பாம் (13), ஆசிப் ஷெய்க் (11), குல்சான் ஜா (11) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

134 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

1502_sahi_hope.png

அணித் தலைவர் ஷாய் ஹோப் 44 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 61 ஓட்டங்களுடனும் ஷிம்ரன் ஹெட்மயர் 32 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 46 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத இரண்டாவது விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஆரம்ப வீரர் ப்றெண்டன் கிங் 22 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆட்டநாயகன்: ஜேசன் ஹோல்டர்.

https://www.virakesari.lk/article/238735

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு - சுழல் வியூகங்களுக்கு இடையே போராடி ரன் எடுத்த இந்திய வீரர்கள்

இஷான் கிஷன் 27 பந்துகளில் அரை சதத்தை கடந்தார்

பட மூலாதாரம்,Viraj Kothalawala/MB Media/Getty Images

படக்குறிப்பு,இஷான் கிஷன் 27 பந்துகளில் அரை சதத்தை கடந்தார்

15 பிப்ரவரி 2026, 13:06 GMT

புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

நடப்பு டி20 உலகக் கோப்பையில் லீக் ஆட்டம் ஒன்றில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பந்து வீச்சை தேர்வு செய்வதாக கூறினார். இன்றைய டாஸின் போதும் இரு கேப்டன்களும் கைகுலுக்கவில்லை.

போட்டி தொடங்கிய முதல் ஓவரிலேயே இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்தார். எனினும் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா தொடர்ந்து ஆடினர்.

அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்த போதும் இஷான் கிஷன் பெரிய ஷாட்களை ஆடி இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். அவருக்கு பக்கபலமாக திலக் வர்மா சிங்கிள் ரன்களை எடுத்து ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்து கொடுத்தார். பவர் பிளே முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது.

இஷான் கிஷன் 27 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். அதிரடியாக ஆடிவந்த இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா களத்தில் இருந்தனர்.

இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா வலுவான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர்

பட மூலாதாரம்,Matthew Lewis-ICC/ICC via Getty Images

படக்குறிப்பு,இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா வலுவான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர்

24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த திலக் வர்மா சயிம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா முதல் பந்திலேயே ஆட்டமிழக்க இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சவால் கொடுத்த சயிம் அயூப்

இந்திய பேட்டர்களுக்கு பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் சயிப் அயூப் பெரும் சவால் கொடுத்தார். 4 ஓவர்களை வீசிய அவர் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீசினார்.

இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா என அனைத்துமே பெரிய விக்கெட்டுகள். பெரும்பாலும் 'அரௌண்ட் தி ஸ்டம்ப்' வந்து ஸ்டம்ப் லைனில் சீராக வீசிக்கொண்டே இருந்தார். அதன் பலனாக ரன்கள் கட்டுக்குள் இருந்ததோடு விக்கெட்டுகளும் கிடைத்தது.

18 ஓவர்களை வீசிய ஸ்பின்னர்கள்

இந்த இன்னிங்ஸின் 20 ஓவர்களில் 18 ஓவர்களை பாகிஸ்தான் ஸ்பின்னர்களே வீசினார்கள். சல்மான் அகா, சயிம் அயூப், அப்ரார் அஹமது, முகமது நவாஸ், சதாப் கான், உஸ்மான் தாரிக் என 6 ஸ்பின்னர்கள் அந்த 18 ஓவர்களை வீசினார்கள்.

வேகப்பந்துவீச்சாளர்களில் ஷஹீன் அஃப்ரிடி மட்டுமே 2 ஓவர்கள் வீசினார். மற்றொரு வேகப்பந்துவீச்சு ஆப்ஷனான ஃபஹீம் அஷ்ரஃப் பாகிஸ்தான் கேப்டனால் பயன்படுத்தப்படவில்லை.

3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி

இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடாத அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா மீண்டும் இடம் பிடித்துள்ளார். இந்திய அணி ஒரேயொரு பிரதான வேகப்பந்துவீச்சாளரை மட்டுமே இன்று களமிறக்குகிறது. ஜஸ்ப்ரித் பும்ரா தவிர்த்து ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் மற்ற வேகப்பந்துவீச்சு ஆப்ஷன்களாக உள்ளனர்.

வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல் என்று 3 ஸ்பின்னர்களைக் களமிறக்கியிருக்கிறது இந்தியா. பாகிஸ்தானும் உஸ்மான் தாரிக், அப்ரார் அஹமது, சதாப் கான், முகமது நவாஸ் என பல ஸ்பின்னர்களை தங்கள் பிளேயிங் லெவனில் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் பிளேயிங் லெவன் விவரம் பின் வருமாறு:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா

பாகிஸ்தான் அணியில் உஸ்மான் தாரிக்

பாகிஸ்தானின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம் பின்வருமாறு, சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் ஆகா (கேப்டன்), பாபர் அசாம், ஷதாப் கான், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் ஷா அப்ரிடி, உஸ்மான் தாரிக், அப்ரார் அகமது

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,Getty Images

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த கடைசி 5 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7 முறை இந்திய அணியும் ஒரு முறை பாகிஸ்தான் அணியும் வென்றுள்ளன. ஆனால் பாகிஸ்தான் அணியின் சமீபத்திய செயல்பாடு மற்றும் வீர்களின் ஃபார்ம் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

ஆரம்பத்தில் இந்த போட்டிக்கான அனுமதியை மறுத்த பாகிஸ்தான் அரசு, பல்வேறு ஊகங்களுக்குப் பிறகு, இறுதியில் முடிவை மாற்றிக் கொண்டு, தனது அணி உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதி அளித்தது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியபோது, இரு அணிகளின் மோதலை விட இரு நாடுகளுக்கு இடையிலான மோசமான உறவுகள் குறித்துதான் அதிகம் விவாதிக்கப்பட்டது என்பதும் உண்மைதான்.

கைகுலுக்காத கலாசாரம் தொடர்கிறது

இந்தியா, பாகிஸ்தான்

பட மூலாதாரம்,Matthew Lewis-ICC/ICC via Getty Images

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டியில் இரு அணி கேப்டன்கள் இன்றும் கைகுலுக்குவதை தவிர்த்துவிட்டனர்.

2025 ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது இரு அணி கேப்டன்களும் கைகுலுக்குவதை தவிர்த்தனர். அதே போல போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதை தவிர்த்தனர். இந்திய அணியின் இந்த செயல் பேசுபொருளானது. காஷ்மீரின் பஹல்ஹாமில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களோடு நிற்க இந்த முடிவை எடுத்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமா யாதவ் கூறினார். இந்த விஷயத்தில் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் ஐசிசியிடம் முறையிட்டது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் கைகுலுக்கல் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இது பற்றி சூர்யகுமார் யாதவிடம் செய்தியாளர் சந்திப்பில் நேற்று கேட்கப்பட்ட போது டாஸ் போடும் நேரத்தில் கைகுலுக்குவதைப் பற்றி பார்ப்போம். 24 மணி நேரம் காத்திருங்கள் என்றார். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவும் அதே பதிலை கூறினார். இந்த நிலையில், டாஸின் போது மீண்டும் கைகுலுக்கலை தவிர்த்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c62d67klkqxo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றி!

Feb 16, 2026 - 06:26 PM

இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையிலான இன்று (16) இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

டெல்லியில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் வில் ஜாக்ஸ் 53 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இத்தாலி அணி சார்பில் கிராண்ட் ஸ்டீவர்ட் மற்றும் கிரிஷான் கலுகமகே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி, 161 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திமே பெற்றது.

இத்தாலி அணி சார்பில் பென் மனென்டி அதிகபட்சமாக 60 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

https://adaderanatamil.lk/news/cmlp6gdi6000p356ndbq69lae

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து

Published By: Vishnu

16 Feb, 2026 | 10:41 PM

image

(நெவில் அன்தனி)

இத்தாலிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற இத்தாலிக்கு எதிரான ஐசிசி ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் சிரமத்திற்கு மத்தியில் இங்கிலாந்து 3 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் இக் குழுவிலிருந்து இரண்டாவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட இங்கிலாந்து தகுதிபெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் ஏற்கனவே சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருந்தது.

1602_will_jacks_eng_vs_italy.png

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.

13 ஆவது ஓவரில் இங்கிலாந்தை 5 விக்கெட் இழப்புக்கு 105 ஓட்டங்களுக்கு இத்தாலி பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தி இருந்தனர்.

ஆனால், வில் ஜெக்ஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இங்கிலாந்துக்கு 200 ஓட்டங்களைக் கடக்க உதவினார்.

இதனிடையே சாம் கரனுடன் 6ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களை வில் ஜெக்ஸ் பகிர்ந்தார்.

வில் ஜெக்ஸ் 22 பந்துகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவரைவிட டொம் பென்டன் (30), பில் சோல்ட் (28), சாம் கரன் (25), ஜேக்கப் பெத்தெல் (23) ஆகியோர் 20க்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

1602_crishan_kalugamage.png

பந்துவீச்சில் க்ரிஷான் கலுகமகே 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் க்ரான்ட் ஸ்டுவர்ட் 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

203 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து சவால் விடுத்த இத்தாலி, 15ஆவது ஓவரில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்தது.

ஆனால் அதன் பின்னர் இத்தாலி 43 ஓட்டங்களுக்கு கடைசி 6 விக்கெட்களை இழந்தது.

ஆரம்பத்தில் 4 ஓவர்கள் நிறைவில் இத்தாலி 3 விக்கெட்களை இழந்து 22 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

ஆனால், ஜஸ்டின் மொஸ்கா (43), பென் மெனெட்டி ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு சவால் விடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன.

பென் மெனெட்டி 25 பந்துகளில் 4 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 60 ஓட்டங்களைக் குவித்தார்.

1602_grant_stewart_ity_vs_eng.png

மத்திய வரிசையில் க்ரான்ட் ஸ்டுவர்ட் 23 பந்துகளில் 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 43 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஜெமி ஓவர்ட்டன் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சாம் கரன் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: வில் ஜெக்ஸ்

https://www.virakesari.lk/article/238835

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெத்தும் குவித்த அபார சதம் இலங்கையை சுப்பர் 8க்கு அழைத்துச் சென்றது; முதல் சுற்றுடன் அவுஸ்திரேலியா வெளியேற்றம்

Published By: Vishnu

16 Feb, 2026 | 11:41 PM

image

(பல்லேகலை அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தீர்மானம் மிக்க ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அபார சதத்தின் உதவியுடன் இலங்கை சுப்பர் 8 சுற்று தகுதியைப் பெற்றது.

இந்தப் போட்டியில் சகலதுறைகளிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திய இலங்கை 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றி பெற்றது.

இலங்கையின் இந்த வெற்றியானது அவுஸ்திரேலியாவை ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து முதல் சுற்றுடன் வெளியேற்றியது.

பெத்தும் நிஸ்ஸன்க குவித்த ஆட்டம் இழக்காத அபார சதம், குசல் மெண்டிஸ் பெற்ற அரைச் சதம் என்பன இலங்கையின் வெற்றியை சுலபமாக்கின.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

பெத்தும் நிஸ்ஸன்க ஆரம்பம் முதல் கடைசிவரை மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 52 பந்துகளில் 10 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 100 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ரி20 உலகக் கிண்ணத்தில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த முதலாவது சதம் இதுவாகும். அத்துடன் இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்தில் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையை பெத்தும் நிஸ்ஸன்க நிலைநாட்டினார்.

ரி20 உலகக் கிண்ணத்தில் மஹேல ஜயவர்தனவுக்குப் பின்னர் சதம் குவித்த இரண்டாவது இலங்கை வீரர் பெத்தும் நிஸ்ஸன்க ஆவார்.

அது மட்டுமல்லாமல் பல்லேகலை மைதானத்தில் ரி20 உலகக் கிண்ண சதம் குவித்த முதலாவது இலங்கையர் என்ற பெருமையையும் பெத்தும் நிஸ்ஸன்க தனதாக்கிக்கொண்டார்.

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் பெத்தும் நிஸ்ஸன்க பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும். இலங்கை சார்பாக சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் குவித்த முதலாவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெத்தும் நிஸ்ஸன்க பெற்றுக்கொண்டார்.

இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் இரண்டு போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய காமில் மிஷாரவுக்குப் பதிலாக இன்றைய போட்டிக்கு இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட மூத்த வீரர் குசல் ஜனித் பெரேரா ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார். (8 - 1)

எனினும் பெத்தும் நிஸ்ஸன்கவும் குசல் மெண்டிஸும் இரண்டாவது விக்கெட்டில் 66 பந்தகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

குசல் மெண்டிஸ் 38 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 51 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் தொடர்ச்சியாக 3 அரைச் சதங்கள் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையை குசல் மெண்டிஸ் நிலைநாட்டினார்.

குசல் மெண்டிஸ் ஆட்டம் இழந்ததும் பெத்தும் நிஸ்ஸன்க சதம் குவிப்பதற்கு மிகுந்து ஒத்துழைப்புடன் துடுப்பெடுத்தாடிய பவன் ரத்நாயக்க 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பெத்தும் நிஸ்ஸன்கவும் பவன் ரட்நாயக்கவும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவுக்கு ஓட்டங்களை அள்ளிக்கொடுத்த இலங்கை பந்துவீச்சாளர்கள் 9ஆவது ஓவரிலிருந்து துல்லியமாக பந்துவீசி எதிரணியைக் கட்டுப்படுத்தினர்.

அணிக்கு மீண்டும் திரும்பிய அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் (54), ட்ரவிஸ் ஹெட் (56) ஆகிய இருவரும் 51 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஸ்திரமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன. (130 - 4 விக்.)

இந் நிலையில் ஜொஷ் இங்லிஸ் (27), க்லென் மெக்ஸ்வெல் (22) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர்.

ஆனால், க்ளென் மெக்ஸ்வெல் உட்பட 6 விக்கெட்கள் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.

துஷான் ஹேமன்த 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வெ வ்வேறு வியூகங்களுடன் பந்துவீசிய துஷ்மன்த சமீர 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க.

https://www.virakesari.lk/article/238839

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'கடவுளின் மடியில்...' : ஐந்தே ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிய இலங்கை - ஆஸ்திரேலிய கேப்டன் கூறியது என்ன?

இலங்கை - ஆஸ்திரேலியா, டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 17 பிப்ரவரி 2026, 06:28 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

டி20 உலகக் கோப்பையின் லீக் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை. இதன்மூலம் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்குள் அதிகாரபூர்வமாக நுழைந்தது. தொடர்ந்து இரண்டாவது போட்டியைத் தோற்றிருக்கும் ஆஸ்திரேலியாவின் சூப்பர் 8 வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகியிருக்கிறது.

ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுக்க, அதை இரண்டு ஓவர்கள் மீதமிருக்கும்போதே எட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

தொடக்க வீரர் நிசங்கா 52 பந்துகளில் சதமடித்து இலங்கை அணிக்கு மிகமுக்கிய வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

2007 முதல் நடந்துகொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 12 முறை மட்டுமே சதங்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. 11 வீரர்களே அந்த மூன்று இலக்க ஸ்கோரை எட்டியிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இப்போது நிசங்காவும் இணைந்திருக்கிறார்.

நிசங்காவும் சரி, இலங்கையும் சரி... முதல் பந்து முதல் இலக்கை எட்டும் வரை மிகவும் நேர்த்தியாக இந்த சேஸை எதிர்கொண்டனர். பெரிய 'ரிஸ்க்' ஏதும் எடுக்கவில்லை. அடிப்பதற்கு ஏற்ற பந்துகள் கிடைத்தபோது அதை சரியாக பயன்படுத்திக்கொண்டனர். களத்தில் பனியின் தாக்கம் இருந்ததும் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. அதனால் ஆரம்பத்திலிருந்தே தேவைப்படும் ரன்ரேட்டுக்கு அருகிலேயே பயணித்தது இலங்கை அணி. விக்கெட்டுகளும் கையில் இருந்ததால் எந்த இடத்திலும் இலங்கை அணி நெருக்கடியை உணராமல் சேஸ் செய்தது.

இலங்கை - ஆஸ்திரேலியா, டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார் நிசங்கா

நெருக்கடிக்கு மேல் நெருக்கடி

சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேவிடம் தோற்றது ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்ல, இலங்கைக்குமே நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை தோற்று, ஆஸ்திரேலியா ஓமனையும், ஜிம்பாப்வே அயர்லாந்தையும் வென்றால் ஜிம்பாப்வே vs இலங்கை போட்டி நாக் அவுட் போல ஆகிவிடும். அந்தப் போட்டியின் வென்றாலும் ரன்ரேட் முக்கியம் என்ற நிலை வந்திருக்கக்கூடும்.

அப்படியொரு நிலையில் தான் இந்தப் போட்டிக்குள் கால் வைத்தது இலங்கை அணி. டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தவர்களுக்கு முதல் ஓவரே கவலை தந்தது - 16 ரன்கள். இரண்டாவது ஓவரில் 9 ரன்கள். அதற்கடுத்து ஓவரிலோ அதைவிடப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான மதீஷா பதிரானா காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார்.

முக்கியமான ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா போன்ற ஒரு அணிக்கெதிராக இலங்கை பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான தோல்வியிலிருந்து மீண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் ஆடிய ஆஸ்திரேலியாவோ ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் டார்கெட் செய்து அடித்தது.

பவர்பிளே முடிவிலேயே ஆஸ்திரேலியா 70 ரன்கள் எடுத்துவிட்டது. 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் எதுவும் இழக்காமல் அந்த அணி 97 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி. அவர்களின் ரன்ரேட் 12.12 ஆக இருந்தது. டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்திருந்தார். கேப்டன் மிட்செல் மார்ஷும் அதை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அப்படியொரு நிலையில் ஆஸ்திரேலிய அணி இருந்ததால், அதன்பிறகு கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், ஜாஷ் இங்லிஸ், டிம் டேவிட், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், கூப்பர் கானலி என அதிரடி வீரர்கள் நிறைந்திருந்ததால் அவர்கள் நிச்சயம் 220 - 230 ரன்களுக்கு மேலேயே எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருந்தது.

இலங்கை - ஆஸ்திரேலியா, டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,டிராவிஸ் ஹெட் - மிட்செல் மார்ஷ் பார்ட்னர்ஷிப் 8.3 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்தது

ஐந்தே ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிய இலங்கை

வேகமாகச் சென்றுகொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸுக்கு 9-வது ஓவர் ஒரு வேகத்தடையாக அமைந்தது. அந்த ஓவருக்குப் பிறகு இலங்கை அணி ஆட்டத்தை தங்கள் கைக்குள் கொண்டுவந்தது.

ஹேமந்தா வீசிய ஒன்பதாவது ஓவரில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். மூன்றாவது வீரராகக் களமிறங்கிய கேமரூன் கிரீன் அந்த அதிரடியைத் தொடர நினைத்தார். ஆனால், அது அவருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பாதகமாக முடிந்தது. இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொள்ள முனைந்த அவர், சில தருணங்களில் கிரீஸுக்கு வெளியே வந்தும் பெரிய ஷாட்கள் அடிக்க முற்பட்டார்.

ஹேமந்தா பந்துவீச்சில் கேமரூன் கிரீன் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ஒரு ஸ்டம்பிங் அப்பீலை எதிர்கொண்டார். ஆனால், கிரீன் அந்த முறை தப்பிவிட்டார். ஆனால், டுனித் வெல்லாலகே வீசிய அடுத்த ஓவரில் அவரால் தப்பிக்க முடியவில்லை.

பத்தாவது ஓவரின் கடைசிப் பந்தில் அவர் இறங்கி வந்து அடிக்க முற்பட, அந்தப் பந்து நன்கு வெளியே செல்ல, கிரீனால் அதை அடிக்க முடியவில்லை. பந்தை சட்டென்று பிடித்து ஸ்டம்பிங் செய்து கிரீனை வெளியேற்றினார் குசல் மெண்டிஸ்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது இலங்கைக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. 11-வது ஓவரில் இரண்டு வாய்ப்புகளை உருவாக்கினார் ஹேமந்தா. நன்றாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் மிட்செல் மார்ஷ், அவர் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்த பந்திலேயே புதிய பேட்டர் இங்லிஸை அவுட்டாக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்டம்பிங் செய்வதற்கான வாய்ப்பை இம்முறை குசல் மெண்டிஸ் தவறவிட்டார்.

இப்படி தொடர்ச்சியாக அதிரடி மட்டுமே காட்டுவது என்ற மனநிலையில் வந்தது ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பின்னடைவாக அமைந்தது. அதேநேரத்தில், நல்ல லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசி இலங்கை பௌலர்கள் விக்கெட்டுகளை சாய்த்தனர். 13-வது ஓவரில் பந்துவீச வந்த கமிந்து மெண்டிஸ், டிம் டேவிட்டை வெளியேற்ற ஆஸ்திரேலியா 130/4 என்ற நிலைக்கு வந்தது.

9 முதல் 13 வரையிலான ஐந்து ஓவர்களில் 34 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா. 12.12 என்றிருந்த ரன்ரேட் 10.07 ஆகக் குறைந்தது. அதன்பிறகு மேக்ஸ்வெல் மற்றும் இங்லிஸ் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினாலும், அவர்களால் ரன்ரேட்டை அதிகப்படுத்தவோ இல்லை அதே ரன்ரேட்டை தொடரவோ முடியவில்லை. களத்தில் பாய்ந்து மேக்ஸ்வெல் கேட்சை பிடித்து அந்த பார்ட்னர்ஷிப்பையும் உடைத்தார் நிசங்கா.

இலங்கை - ஆஸ்திரேலியா - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கிளென் மேக்ஸ்வெல் கேட்ச்சை பாய்ந்து பிடித்த நிசங்கா

ரன்ரேட்டை அதிகரிக்கும் முயற்சியில் கடைசி கட்டத்திலும் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை இழக்க, அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் அந்த அணி 6 ரன்களை மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது.

இப்படி உத்வேகமாக முதல் இன்னிங்ஸை முடித்த இலங்கை அணி, அதே உத்வேகத்தோடு பேட்டிங் செய்து வெற்றியையும் வசப்படுத்தியது. இதன் மூலம் பி பிரிவில் இருந்து முதல் அணியாக சூப்பர் 8 சுற்றை உறுதி செய்தது.

"கடவுளின் மடியில்"

இந்தத் தோல்வி ஆஸ்திரேலியாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அணி 3 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்றிருக்கிறது. இனி ஓமன் உடனான போட்டியில் வெற்றி பெற்றாலும் அவர்களால் 4 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடியும். அதனால், ஜிம்பாப்வே அணி அடுத்த இரு போட்டிகளிலும் தோற்றால் மட்டுமே அவர்கள் சூப்பர் 8 வாய்ப்பு பற்றி நினைத்துப் பார்க்க முடியும். அப்போதும் கூட ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 3 அணிகளில் எந்த அணிக்கு நல்ல ரன்ரேட் இருக்கிறதோ, அந்த அணியே அடுத்து சுற்றுக்கு முன்னேறும். எனவே ஆஸ்திரேலியா தற்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.

இலங்கை - ஆஸ்திரேலியா - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ், "இலங்கை அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது. எங்களுக்குக் கிடைத்த தொடக்கத்தை ஒப்பிடும்போது குறைவான ஸ்கோரே எடுத்தோம். நாங்கள் இப்போது கடவுளின் மடியில் இருக்கிறோம். டிரஸ்ஸிங் ரூமில் பல உணர்வுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அயர்லாந்து, ஜிம்பாப்வே போட்டியை நம்பிக்கையுடன் பார்ப்போம்" என்று கூறினார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் ஜிம்பாப்வே - அயர்லாந்து போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றுவிட்டால் ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1kgj8w9r71o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.