Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமிக்கை

கிறிஸ்டி நல்லரெத்தினம்- ஜூலை 13, 2025 No Comments

வீட்டின் நடுவே இருந்த ஊஞ்சல் தனியே ஆடிக்கொண்டிருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ தேவாரங்களை முணுமுணுத்துக் கொண்டோ இருக்கும் அப்பு அங்கில்லை. அவரின் சிம்மாசனம் அது. அதில் உட்கார்ந்து கொண்டு எங்கள் குடும்ப பிணைக்குகளை பஞ்சாயத்து செய்யும் அந்த ஜீவன் இல்லாத வீடு வெறிச்சோடிக்கிடந்தது.

oonjal3-300x158-1.jpg?resize=600%2C400&s

அப்பு, அவர்தான் என் தாத்தா, என்னிடம் கொண்டிருந்த அந்தப் பாசப்பிணைப்பு புறவயமானதன்று. எங்கள் இருவரையும் இணைத்த அந்த நூலை எவரும் தொட்டதில்லை. ‘“ ஏ, பையா, உன்ன உங்கம்மா தூக்கிறதக்கு முன்னமே நான்தான் தொட்டுத் தூக்கினன் தெரியுமோ?” என்று கூறி பெருமைப்படுவார். என்னை ஏனே அவர் ‘“பையா” என்று அழைப்பதில் ஒரு அணுக்கமான உரிமையும் உறவும் இருப்பதாய் தோன்றும்.

அம்மாதான் அவர் ஒரே மகள். எனவே அவருடன் தாத்தாவின் பாசமுடன் உரிமையும் ஒட்டிக்கொண்டது. ‘மகள், அத எடு… இத எடு’ என்று அம்மாவை விரட்டிக்கொண்டே இருப்பார். அம்மாவும் அவர் அன்பில் அடைக்கலமாவார்.

அப்பாவிற்கும் தாத்தாவிற்குமிடையே ஏனே பசை போதவில்லை. அப்பா எமது குடும்பத்தில் சங்கமமானது அறுபதுகளில். அப்பா ஒரு ‘வேதக்காறன்’. சமயம் மாறி வந்து அம்மாவை கைப்பிடித்ததாலோ என்னவோ அப்பாவின்மேல் ஒரு தாத்தாவிற்கு ஒரு இரண்டாந்தரம். அப்பாவிடம் தாத்தா நேராக முகம்பார்த்து பேசமாட்டார். அப்பா என்றும் மந்தையில் இல்லாத ஆடு.

ஒரு முறை அப்பாவிற்கும் அப்புவிற்கும் இடையே ஏதோ பிணக்கு “என்ர சையிக்கிள தொட வேண்டாம் எண்டு சொல்லு” என்று அம்மாவிடம், அப்பாவின் காது பட, சற்று உரக்கவே சொல்லிவிட்டார். சாமானிய குடும்பங்களில் சைக்கிள்தான் அந்நாட்களில் டெஸ்லர். வீட்டிற்கு ஒரு வாகனம் மட்டுமே. அப்பாவோ சாது. ஒருபோதும் அப்புவை போருக்கழைத்ததில்லை! எதிர்வசை பாடி பிளவை பெரிதாக்கும் எண்ணம் அப்பாவிற்கில்லை. அப்புவின் சைக்கிளை அப்பாவும் பின்னர் தொட்டதில்லை.

அப்புவைத் தேடி வீட்டிற்கு பலர் வந்து போவதால் எப்போதும் எங்கள் வீடு களைகட்டியிருக்கும். அதற்கும் காரணம் உண்டு. அப்புதான்  ஊர் எலும்பு முறிவு மற்றும் ‘பாம்புக்கடி’ வைத்தியர் …. வைத்தியர் என்ன வைத்தியர் … ஊர் பரியாரியார். 

எங்கள் ஐந்து அறை கல் வீட்டின் முன் பரந்து இருக்கும் குருத்து மணல் முற்றம். முற்றத்தின் மருங்கில் இரண்டு பெரிய மாமரமும் பலா மரமும் (அதென்ன பலா? பிலா மரம் என்றே வாசியுங்கள்!) கிளை விரித்து நிற்கும் வேப்ப மரமும் இருந்தன. அப்புவைப்பார்க்க வருவோர் கூடி இருக்க ஒரு திறந்த ஓலை மேய்ந்த ஒரு குடில். குடில் என்றதும் ‘அம்புலிமாமா’வில் நீங்கள் பார்த்த குட்டி குடிலை கற்பனையில் இழுத்து வந்து எங்கள் முற்றத்தில் வைக்காதீர்கள். உயர்ந்த கூரையுடன் அறைகள் போல் இரு தடுப்பு சுவர் வேலி போட்டு மேய்ந்த அமைப்பு அது. அப்பு இருக்க கதிரை மேசை வசதிகள் உண்டு. மேசை மேல் இருக்கும் ‘ஒத்த றூள் கொப்பி’ தான் அப்பு மருந்து எழுதும் றெஜிஸ்டர். நோய் என வருவோரை தன் முன் இருக்கும் கதிரையில் அமர்த்தி நாடி பிடித்து, இருமச் சொல்லி, முட்டியை தட்டி மேலும் ஏதோ ஏதோ பரீட்சாத்தங்கள் செய்து பின் மேசைக்கு பின்னே இருந்த அலுமாரியை திறந்து வடகம், தூள்கட்டு என பல உருவங்களில் மருந்துகளை பரிமாறுவார். அவற்றை எப்போது சாப்பிட வேண்டும் என்ற விபரங்களை நான் சொன்ன ‘ஒத்த றூள்’ கொப்பியின் ஒரு பக்கத்தில் எழுதி அடிமட்டம் வைத்து கிழித்து நோயாளிக்கு கையளிப்பார். அப்பு எவருக்கும் ‘தண்ணி மருந்து’ கொடுத்ததை கண்டதில்லை. “இந்த தூளை தேனில கரைச்சு விடியத்தால சாப்பிட வேணும் கண்டியோ? …. என்ன… நான் சொல்லுறது விளங்தோ?” என்று சொல்லி தன் வார்த்தைகளின் புரிதலை உறுதிப்படுத்திக் கொள்வார். தேனுக்குப் பதிலாய் முலைப்பாலும் வந்து போகும்.

எலும்பு முறிவிற்கு ‘பத்துப் போட’ வருபவர்களைப்பார்க்க எனக்கு ஆர்வம் இல்லை. ஒரு முறை மரத்தால் விழுந்தவனை நாலு பேர் தூக்கிக் கொண்டு வந்து கிடத்தினர். அப்பு அருகில் குந்திக்கொண்டு குசலம் விசாரிப்பது போல் அவனிடம் பேசிக் கொண்டு அவனின் நோய்ப்பட்ட கையை மருந்தெண்ணை  தடவி மெதுவாக நீவி விட்டார். அவனும் அப்புவின் கேள்விகளுக்கு அனுகிய குரலில் “ஓம் ஐயா… ஓம் ஐயா” என்று பதில் சொல்லிக் கொண்டு இருந்தான். அவன் முழங்கையில் விலகிய எலும்பு துருத்திக் கொண்டு முழங்கையில் நீலம் பாவித்து வீங்க வைத்திருந்தது. அப்பு அவன் மேல் கையை பலமாக பற்றியவாறு கேள்விகளை தொடுத்தவாறு இருந்தார். ‘இந்த முறை விழைச்சல் எப்படி?… இந்த போகத்தில நெல்லு வில என்னவாம்?…..’ போன்ற கமம் செய்பவனிடம் கேட்கும் கேள்விகளால் அவன் காதை நிரப்புவார். அவன் கவனம் எல்லாம் அவரின் கேள்விகளுக்கு பதில் தேடுவதிலேயே அப்போது இருந்தது. அதுதான் தருணம் என்று அப்பு உணர்ந்திருக்க வேண்டும். சடாரெண்டு அவன் கையை ஒரு பொம்மையின் கையை திருகுவதைப் போல் திருகி பலமாக இழுத்து விட்டார். “ஐயோ… எண்ட ஆண்டவனே “ என்ற அவன் கூக்குரல் கூரையை பிய்த்தது! இந்த தருணத்திற்கு காத்திருந்தாற்போல் அப்பு ஒரு புன்சிரிப்புடன் ”இனி பத்து ஒண்டு போட்டா சரி, எலும்பு மூட்டுக்குள்ள சரியா கொளுவிற்று .. மூண்டு கிழமையில பத்த கழற்ற ஏலும் “ என்று வலியால் துடித்தவனுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி இனி ‘பத்துப்போடு’வதற்கான ஆயுத்தங்களில் இறங்கினார்.

அப்புவின் எலும்பு  முறிவு வைத்தியத்தை விட பாம்புக்கடி வைத்தியம் பார்க்க சுவாரசியமாக, ஒரு நாடகத்தன்மையுடன் கூடியதாய், இருக்கும். 

ஒருமுறை எங்கள் ‘வயல்காறன்’ வேலுமணியை வயல் அறுவடை சீசனில் ஏதோ பாம்பு கடித்துவிட்டது. ஊரார், அவன் வாயில் நுரை தள்ள, தூக்கிக்கொண்டு அப்புவிடம் ஓடி வந்தனர். “புடையன் பாம்பு கடிச்சிப்போட்டாம் ஐயா” என்ற சபையோரின் சாட்சியத்தை  காதில் வாங்காமல் கடித்த பாம்பின் உடல் அடையாளங்களை முதலில் கேட்டறிந்து கொண்டார் அப்பு. அந்த விபரணையில் இருந்து கடித்த பாம்பு என்னவென்று கணித்துக் கொண்டு அதற்கான மந்திரங்களை ஓதத் தொடங்கினார். ஏறிய விஷத்தை இறங்கும்படி உருக்கமாய் அம்மாளிடம் வேண்டுவதாகவே அந்த மந்திரங்கள் ஓதப்பட்டன. ஆம், அவை கட்டளைகள் என்பதை விட வேண்டுதல்களே!

அப்பு கையில் ஒரு வேப்பிலை கத்தை எடுத்துக் கொண்டார்.. வேலுமணி அரை பிரஃஜையுடன் வாயில் நுரை தள்ள தரையில் பாதி உணர்வுடன் கிடந்தான். அப்புவின் ஒரு கையில் வேப்பம் கொத்து … மறு கையில் ஒரு கைப்பிடி மிளகு. வேப்பம் கொத்தால் அவன் கன்னதில் பலமாக மாறி மாறி அறைந்தவாறு மந்திரங்கள் ஓதியவாறு ஒரு மிளகை அவன் பற்களுக்கிடையே திணித்து “மிளக முன் பல்லால கடிச்சி நுனி நாக்கால ருசி பாரு… என்ன உறைக்குதா சொல்லு?”  என்று கேட்க அவன் இல்லை என்பதற்கு அடையாளமாக தலையை பக்கவாட்டில் அசைத்தான். பாம்பின் விஷம் தலைவரைக்கும் ஏறிவிட்டது என்பதை உணர்ந்தார் அப்பு. இல்லையெனில் மிளகு உறைத்திருக்க வேண்டுமே. இனி காலம் தாழ்த்த முடியாது….. செய்வதை விரைவாய் செய்தாக வேண்டும். மீண்டும் வேப்பம் கொத்து கசையடியும்  உச்சஸ்தானத்தில் மந்திரங்களும் தொடர்ந்தன. மீண்டும் அதே பரீட்சை…. மிளகு அவனுக்கு உறைக்கவில்லை…. விஷம் இன்னும் இறங்கவில்லை. மந்திரமும் கசையடியும் தொடர ஒரு கட்டத்தில் “ஐயா… மிளகு உறைக்கிதையா” என்றான் உரத்த குரலில். வேப்பம் கொத்தின் விசையோ அப்புவின் மந்திர ஓதல்களோ…. ஏதோ ஒன்று அந்த மாயையை செய்தன. “விஷம் இறங்கிற்று… இறங்கிற்று … அம்மாளே நன்றி அம்மா!“ என்று பூரண திருப்தியுடன் கூறி தலையை நிமிர்த்தி சூழ்திருந்த கூட்டத்தை பெருமையுடன் பார்த்தார் அப்பு. சூழ்ந்திருந்த கூட்டமும் வாய் திறந்து நின்றது!

ஊர்க்கோயில் இருந்த திசையில் தலையை திருப்பி இரு கரங்களையும் தலைக்கு மேல் கூப்பி தெய்வானை அம்மானை வணங்கி அந்த சடங்கை முடித்து வைத்தார். 

அப்புவுடனான என் உறவு திவ்வியமானது. அப்பு நல்ல கதை சொல்லி. எனக்கு கம்பராமாயணத்தையும் கீதையையும் ஒரு தொடர்கதையின் சுவாரசியத்துடன் சொல்வார். ராமாயணம் ராமர் கதையை சொல்லும் ஆனால் காட்சியாக காட்டாது என்போர் சிலர். ஆனால் அப்புவின் விவரணங்களுடன் கூடிய ராமர் கதையில் காட்சிகள் அவர் வார்த்தைகளில் ஒரு ரம்யமான காட்சியாய்  திரைப்படம் போல் கண் முன்னே விரியும். அவர் வார்த்தைகளில் வனத்தில் சீதை மட்டுமல்ல நானும் வனத்தில் ஒரு கல்லில் உட்கார்த்து காட்சிகள ரசிக்கும் ஒரு உணர்வை உருவாக்கித்தருவார்.

கதை கேட்கும் படலம் முடிந்ததும் ஒரு சிறு பரிசளிப்பு. அவர் அறையில் இருந்த பெரிய முதிரை மர அலுமாரியின் மேல் தட்டில் அவரின் வேட்டி சால்வையின் பின் மறைத்து வைத்திருக்கும் சிறு டப்பாவை திறந்து இரண்டு மூன்று ‘மில்க்டொபி’ இனிப்புகளை பரிசளிப்பார். மூன்றுதான் தினக்கணக்கு. அம்மாவின் கட்டளையை மீறி நடக்கும் ஒரு இரகசிய பரிசளிப்பு இது.

‘“அப்பு, இவன் சின்னவனுக்கு டொபி, சொக்களட் ஒண்டும் கொடுக்காதேயுங்கோ…. பல்லு சூத்தை குத்திப் போடும்“ என்ற அம்மாவின் அறிவுரைகளும் புறக்கணிக்கப்படும்.

வாய் நிறைய இனிப்புக்களுடன் நான் அம்மாவிடம் மாட்டிக் கொண்ட தருணங்கள் உண்டு. “ அப்பு, இவன்ர வாய்க்குள்ள டொபி போல…. நீங்களோ குடுத்த நீங்கள்?” என்ற கேள்விக்கு பலமான மறுப்பு தலையாட்டல் அப்புவின் தரப்பில் இருந்து வரும். அப்பு இப்படி குறும்பு பொய் பேசும் வேளையில் தன் வலது கை விரல்களை மடக்கி பெருவிரலை ஆள்காட்டி விரலூடாக நுழைத்து ஒரு சமிக்கை செய்வார். அவர் கண்கள் குறும்பு சிரிப்புடன் “என் விரலைப் பார்” என்று சொல்லாமல் சொல்லும். இது எங்கள் இருவருக்கும் மட்டுமே புரியும் இரகசிய பரிபாஷை! 

x.   x.     x.     x.      x.    x.     x

நாட்கள் உருண்டோடி ஆண்டுகளுக்குள் அடங்கி அவையும் உருண்டோடி….

அப்புவிற்கு பாரிசவாதம் வந்து உடலின் இடது பக்கத்தை இழுத்துக் கொண்டது. சாமி அறைக்குப்பக்கத்தில் தான் அப்புவின் அறை.

அந்த அறையில் இருந்து இப்போ அவர் வெளியே வருவதில்ல. எங்கள் வயல்காரன் சாமித்தம்பிதான் இப்போ அப்புவுக்கு எல்லாம். அவனுக்கும் அப்படி ஒன்றும் இள வயது இல்லை. காலையில் அவரை அணைத்தவாறு மூச்சு முட்ட தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கிணற்றடியில் இருந்த கதிரையில் உட்கார்த்தி ஒரு குளியல். அவனே அப்புவின் தலையை துவட்டி புது வேட்டி உடுப்பித்து மீண்டும் அவரை வீட்டிற்குள் தூக்கிக்கொண்டு போவான். அப்புவிற்கு சாப்பாடு பிசைந்துதான் ஊட்டி விட வேண்டும். பற்கள் விடைபெற்றுக்கொண்ட வயது அவருக்கு. அதுவும் சாமித்தம்பியின்ர  வேலைதான். ஆனால் அம்மாதான் சோறு கறிகள் எல்லாம் பீங்கானில் பரிமாறி தன் கையால பிசைந்து “சாமித்தம்பி…. இத அப்புவிற்கு தீத்தி விடு பாப்பம்… வேணாம் எண்டு சொன்னாலும் எல்லாத்தையும் தீத்தி விடப்பாரு… நேத்து மத்தியானமும் நல்லா சாப்பிட யில்ல… வர வர உடம்பும் சூம்பிக்கொண்டு போகுது!” என்று சொல்லி வேதனையுடன் அங்கலாய்ப்பார். அம்மாவிற்கும் முன்னரைப் போல் ஓடி ஆடி வேலை செய்ய முடியாது. நாடியில் கைவைத்தபடி அப்புவின் குளியலை பார்த்து ‘எப்படி இருந்த மனுஷன்? வயசு தான் என்னமா அப்புவின்ர சௌந்தரியத்த சிதைச்சுப் போட்டுது?” என்று முணுமுணுப்பார் அம்மா. அப்புவின் தேக சுகம் தேய்பிறையாய் மாறி வருவது அம்மாவின் சோகத்திற்கு முதல் காரணி. வாழ்வின் சோகங்களை வலைக்கரண்டி போட்டா வடித்தெடுக்க முடியும்? வாழ்ந்துதானே கழிக்க வேண்டும். அதுவே உலக நியதி அல்லா?

அம்மாவிற்கும் இது தெரியாததல்ல. 

ஒரு நாள் அயல் வீட்டு செல்வி மாமி அப்புவின் நிலையை புரிந்து கொண்டு  “இஞ்ச பாரு புள்ள… எத்தின நாளுக்கு பெரிய ஐயாவ வீட்டோட வச்சு பாக்கப்போறா?  சாமித்தம்பியும் நெல்லு மூட்டய தூக்கிற மாதிரி அவர கஸ்டப்பட்டு தூக்கிற்று கிணத்தடியும் வீடும் எண்டு திரியிறான். ஒரு நாளைக்கு தடுக்கி விழுந்தினமோ அவ்வளவுதான். சீவன் போயிடும் கண்டயோ?”  என பயம் காட்டினார்.

செல்வி மாமி சொன்னதும் அம்மாவிற்கு சரியாகவே பட்டது.

அப்பாவை மாரடைப்பால் மூன்று வருடங்களுக்கு முன் இழந்த அம்மா தனியாக அப்புவை பார்ப்பதை ஒரு சுமையாகவே  இப்போது கண்டார்.

நானும் மனிசியும் மகனும் குடும்பத்தோட கொழும்பு தெமத்தகொடவில இடம்பெயர்ந்துவிட்டதால் அம்மாவும் தனது கைத்துணையை இழந்து விட்டிருந்தார். தினசரி இரவு கைபேசி அழைப்புகளில் அப்புவின் நிலமை பற்றி அழுது புலம்புவது இப்போ வாடிக்கையாகிவிட்டது.

செல்வி மாமி அம்மாவிடம் ‘“டவுனில இப்ப புதிசா ஒரு வயோதிபர் மடம் திறந்திரிக்கினமாம்… இப்ப கனடாவில இருக்கிற  நம்மட கோயிலடி சண்முகத்தின்ர  கொப்பரும் அங்கதானாம் இப்ப இருக்கிறாராம். வேளைக்கு நம்மட ஊர் சாப்பாடு… வருத்தம் வாதை எண்டால் உடனே டாகுத்தர் அங்கேயே வந்து பாப்பினமாம். ஒவ்வொரு நாளும் தியானம், யோகாசானம் எண்டு எல்லாம் இருக்குதாம். ஒருக்கா உன்ர மகனோட கதைச்சிப்  போட்டு அப்புவையும் அங்க சேத்து விடலாம்தானே?” என்று ஓதி வைத்தாள். அம்மா தனது தினசரி நச்சரிப்புக்களுடன் இந்த செய்தியையும் என்னுடன் பகிர்ந்தார். அம்மாவின் வார்த்தைகளின் வலிமையை என்றும் உணர்ந்தவன் நான். ஒரு முடிவை எடுத்த பின் அதன் சாரத்தை என்னிடம் கூறி என் அனுமதிக்காய் காத்திராமல் ‘“அதத்தான் செய்வம் மகன்” என்று சம்பாஷணையை முடிப்பார்.

அப்புவின் இடப்பெயர்ச்சி அடுத்த மாதமே நடந்து முடிந்தது. என்னால் வேலை நிமித்தம் கொழும்பில் இருந்து ஊருக்கு உடனே திரும்பி வர முடியவில்லை. ஆனால் அடுத்த மாதமே லீவில் தனியே ஊர் திரும்பி அப்புவின் புதிய வாசஸ்தலத்தை பார்க்க விரைந்தேன்.

அம்மா அப்புவை அந்த வயோதிபர்  மடத்தில் சேர்ப்பதற்கு பட்ட கஸ்டங்களை பட்டியல் போட்டார். வயல்காரன் சாமித்தம்பியின் பங்களிப்பை சிலாகித்துப் பேசினர் அம்மா. எனது இடைவெளியை நிரப்பிய அவன் உண்மையில் ஒரு புண்ணியவான்தான். 

அப்பு இல்லாத எங்கள் வீடு களையிழுந்து வெறிச்சோடியிருந்தது. அப்பு உட்காந்திருக்கும் ஊஞ்சல் சலனமற்று ஸ்தம்பித்து நின்றிருந்தது..

தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு தனது சொந்தங்கள் எடுக்கும் முடிவுகளால் நிகழும் இந்த இடப்பெயர்வுகள் கொடியன.

தமது விருப்பத்திற்கு மாறாக, சொந்தங்கள் சொல்லும்  தேன் பூசிய வார்த்தைகளை நம்பவது  போல் பாசாங்கு செய்து,  மௌனமே மொழியாகி பெட்டிக்குள் அடங்கும் பாம்பாக எத்தனை ஜென்மங்கள் தம் புளித்துப் போன மீதி  வாழ்க்கையை சோகத்தில் வாழ்ந்து கரைக்கின்றன?

மண்ணை மீறும் விதைகளாய் வாழ்ந்து காட்டுகிறேன் பார் என்று சமூகத்தை சவாலுக்கு அழைத்த இளமை ஓய்ந்துவிட வேர்கள் வெட்டப்பட்ட மரத்தின் தனிமையுடன் தம் குறுகிய உலகினுள் சுருங்கிக் கொண்ட  ஜீவன்களின் பிரதிநிதிதான்  அப்பு இன்று.

அப்புவின் காலை உணவு பரிமாறப்பட்டதும் நானும் அம்மாவும் அவரை பர்க்க அந்த வயோதிபர் மடத்திற்கு சென்றிருந்தோம். அப்புவிற்கென ஒரு தனி அறை. மேலே மின்விசிறி சுழன்று அறைக்கு ஒரு ஆடம்பரத்தை கொடுத்தது. அப்பு உட்கார்ந்து வாசிக்க நல்ல மரக்கதிரை ஒன்று. மூலையில் ஒரு அரை அலுமாரி. குளியறைக்கு அழைத்துச்செல்லும வாசல் கதவு மூடியிருந்தது. கட்டிலின் அருகில் தொங்கிக் கொண்டிருந்த ‘காலிங் பெல்’. அடித்தால் உதவிக்கு ஆள் வரும்.

அப்பு என்றும் போலவே வெள்ளை ‘பாலாமணி’ யும் சாரனும்  அணிந்து இருந்தார். கட்டிலில் படுத்தவாறு இருந்தவர் எம்மைக் கண்டதும் எழுத்து உட்கார எத்தனித்தார். முடியவில்லை. 

‘“ நீங்க படுங்க அப்பு… நான் கட்டிலில கிட்ட  இருக்கிறன்… எழும்பி கஸ்டப்பட வேணாம் “ என்று கூறி அருகில் அமர்ந்து கொண்டேன். 

அம்மாவும் ‘“ எப்படி அப்பா, எல்லாம் வசதி தானே… நல்லா பாத்துக் கொள்ளுகினமா?… உங்கட சாப்பாட்டில சீனி சேர்க்க வேண்டாம் எண்டு சொல்லியிருக்கன்…. இண்டைக்கு குளிப்பாட்டினவையளோ?” என்ற கேள்விக்கு அப்பா இல்லை என்று தலையாட்டியே பதிலளித்தார். 

மீண்டும் ஏதோ சொல்ல வேண்டும் போல் அவருக்கு தோன்றியிருக்க வேண்டும். முகத்தில் ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய மெளனம்… பறிபோன சொற்களை மீட்டெடுக்கும் மெளனம்.

‘“மகள் … நான் வீட்டுக்கு வந்து இருக்கப்போறன் மகள்… இஞ்ச ஏலாது…. இஞ்ச இந்த அறைக்குள்ள தனிச்சிப் போயிட்டன் பிள்ள … பயமாய் இருக்கு மகள்… இஞ்ச எனக்கு யாரு இருக்கா?“  என்றபோது  அவர் உடல் குலுங்கி அடங்கியது. அப்புவின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் அம்மா என் முகத்தைப் பார்த்தார். அப்புவின் கண்கள் பனித்ததை அம்மாவும் கவனித்தார்.

‘பையா… தனிச்சுப் போயிட்டன் ராசா… சாப்பாடும் குளிப்பும்தான் வாழ்கையில்ல பையா… குடும்பமடா… குடும்பம்.  அது இஞ்ச இல்ல மகன் … என்னை நம்மட வீட்டுக்கு கூட்டிப் போ ராசா“ என்று என்னைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் இடியாய் என்னுள் இறங்கின.

அப்போது அறைக்கதவு திறந்து கொள்ள அந்த வயோதிபர் மடத்தின் ‘மேற்ரன்’  உள்ளே நுழைந்து எம் எல்லோரையும் கண்களால் துலாவி “ ஓ… ஐயாவ பார்க்க எல்லொரும் வந்திருக்காங்க போல“ என்று கூறி பின் அப்புவைப் பார்த்து “ எப்பிடி ஐயா இருக்கிறீங்கள். எல்லாம் வசதிதானே? ஏதாவது தேவையென்டால் சொல்லவேணும். என்ன… சந்தோசம் தானே?” என்ற கேள்விக்கு ‘“ஓம் … மெத்த சந்தோசம்… மெத்த சந்தோசம்” என்று தலையை ஆட்டியவாறு கூறி என் கண்களை ஏறிட்டுப்பார்த்தார் அப்பு. பின் அவர் கண்கள் தன் வலது கை விரல்களில் குத்திட்டு நின்றன. என் பார்வை அப்புவின் அந்த கை விரல்களில் குவிந்தது.

பெருவிரல் ஆள்காட்டி விரலூடாக நுழைந்து எம்மிருவருக்கு மட்டும் தெரிந்த அந்த இரகசிய சமிக்கையை உருவாக்கிக் காட்டிற்று!

https://solvanam.com/2025/07/13/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.