Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,புவி வெப்பமடைதல் இருக்கும் போதிலும், துருக்கியின் இஸ்தான்புல்லில் இதுபோன்ற குளிர்காலங்களும் பனிப்பொழிவு நாட்களும் தொடர்ந்து ஏற்படும்

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,மார்க்கோ சில்வா

  • பதவி,பிபிசி வெரிஃபை

  1. 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரேசிலில் 30வது ஐநா காலநிலை உச்சிமாநாடு நடைபெறும் நிலையில், காலநிலை மாற்றம் குறித்த தவறான கூற்றுகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவி வருகின்றன. அப்படிப்பட்ட ஐந்து தவறான தகவல்களையும் உண்மை என்ன என்பதையும் இங்கு விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

கூற்று 1: காலநிலை மாற்றம் மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல

மனிதர்களால் காலநிலை மாறவில்லை எனும் வகையில் சமூக ஊடகங்களில் சிலரால் பதிவிடப்படுகின்றன.

பூமியின் வரலாறு முழுவதும் வெப்பமாதல் மற்றும் குளிர்ச்சியடைதலின் சுழற்சிகளைக் கடந்து வந்துள்ளது என்பது உண்மைதான். அது பெரும்பாலும் எரிமலை செயல்பாடு அல்லது சூரிய செயல்பாட்டில் நிகழ்ந்த மாறுபாடுகள் போன்ற இயற்கைக் காரணிகளால் நடந்துள்ளன. ஆனால், இந்த மாற்றங்கள் நீண்டகால அளவில், அதாவது ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்தவை.

உலக வானிலை அமைப்பின் தகவல்படி, கடந்த 150 ஆண்டுகளில் பூமி சுமார் 1.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பமடைந்துள்ளது. இந்த வெப்பமயமாதல் விகிதம் முந்தைய ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காணப்படவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அமைப்பு (IPCC), இது "சந்தேகத்திற்கு இடமின்றி" மனித நடவடிக்கைகளால், முதன்மையாக நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படுவதாகக் கூறுகிறது.

விளம்பரம்

ஐபிசிசி என்பது காலநிலை ஆய்வை மதிப்பாய்வு செய்வதற்கும், பூமி மீது நடப்பது என்ன என்பது குறித்த சான்றுகள் சார்ந்த அறிக்கைகளை வழங்குவதற்கும் விஞ்ஞானிகளை ஒன்றிணைக்கும் ஓர் ஐ.நா. அமைப்பாகும்.

காலநிலை மாற்றம், 30வது காலநிலை உச்சி மாநாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலக்கரி என்பது புதைபடிவ எரிபொருளாகும், இதை எரிக்கும்போது அதிக பசுங்குடில் வாயுக்கள் வெளியாகின்றன.

புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்துவதால் பசுங்குடில் வாயுக்கள் வெளியாகின்றன. அவை பூமியைச் சுற்றி ஒரு போர்வையைப் போலச் செயல்படுகின்றன. வளிமண்டலத்தில் கூடுதல் ஆற்றலை கிரகித்து வைத்து வெப்பத்தை அதிகரிக்கின்றன.

"காலநிலை மாற்றம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயமல்ல. அது ஆதாரங்களின் அடிப்படையிலானது," என்று லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த காலநிலை விஞ்ஞானி ஜாய்ஸ் கிமுட்டாய் கூறுகிறார்.

"புவியின் காலநிலை அமைப்பின் ஒவ்வொரு மூலையிலும் மனித நடவடிக்கைகளின் தடங்கள் தெளிவாகத் தெரிகின்றன" என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

கூற்று 2: உலகம் சூடாகவில்லை, குளிர்ச்சியடைந்து வருகிறது

போலந்து அல்லது கனடா போன்ற இடங்களிலுள்ள சில சமூக ஊடக பயனர்கள், தங்கள் பகுதிகளில் வழக்கத்தைவிட குளிர்ச்சியான வானிலை நிலவுவதை, 'புவி வெப்பமாதல் குறித்து விஞ்ஞானிகள் பொய் சொல்கிறார்கள்' என்பதற்கான சான்றாகக் கருதுகின்றனர்.

இது தவறு.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், EPA

வானிலை என்பது பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் குறுகிய கால நிலைமைகளைக் குறிக்கும். ஆனால், காலநிலை என்பது நீண்டகாலம் நிலவும் சூழலைக் குறிக்கிறது.

"சில பகுதிகள் குறுகிய கால அல்லது உள்ளூர் குளிர்ச்சியை அனுபவித்தாலும், நீண்டகால உலக வெப்பநிலை பதிவுகள், புவியின் மேற்பரப்பு ஒட்டுமொத்தமாக வெப்பமடைந்து வருவதைத் தெளிவாகக் காட்டுவதாக" பிலிப்பைன்ஸின் காலநிலை விஞ்ஞானி முனைவர் ஜோசப் பாஸ்கான்சிலோ கூறுகிறார்.

கடந்த 1980களில் இருந்து, ஒவ்வொரு தசாப்தமும் முந்தையதைவிட வெப்பமாக இருந்து வருகிறது, இது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உலக வானிலை ஆய்வு அமைப்பு கூறுகிறது.

2024ஆம் ஆண்டு மிக வெப்பமான ஆண்டாகப் பதிவானது. உலகளாவிய சராசரி வெப்பநிலை, 1800களின் பிற்பகுதியில் இருந்த அளவைவிட 1.55 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.

கூற்று 3: கார்பன்-டை-ஆக்சைடு ஒரு மாசுபடுத்தி அல்ல

மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தை மறுக்கும் சமூக ஊடக பயனர்கள் பெரும்பாலும் கரிம வாயுவை "மாசுபடுத்தும் காரணி அல்ல" என்றும் மாறாக அதுவொரு "தாவர உணவு" என்றும் கூறுகின்றனர்.

பிபிசி, போர்த்துகீசியன் மற்றும் குரோஷிய மொழிகளில் பார்த்த பதிவுகள், வளிமண்டலத்தில் அது அதிகமாக இருப்பது இயற்கைக்கு நல்லது என்றுகூடக் கூறுகின்றன.

மாசுபடுத்திகள் அல்லது மாசுக் காரணிகள் என்பவை, சுற்றுச்சூழலில் சேரும் போது அந்த அமைப்புக்கோ அல்லது மனித ஆரோக்கியத்திற்கோ தீங்கு விளைவிக்கும் பொருட்களாகும்.

வளிமண்டலத்தில் சாதாரண மட்டங்களில், பூமியில் வாழ்வதற்கு கரிம வாயு அவசியம். கரிம வாயுவை போன்ற பசுங்குடில் வாயுக்கள் இல்லாமல் போனால், உயிர் வாழும் சூழலை உருவாக்க முடியாமல் பூமி குளிரானதாக இருக்கும் என்று நாசா கூறுகிறது.

தாவரங்கள் கரிம வாயுவை, நீர் மற்றும் சூரிய ஒளியுடன் சேர்த்து, ஆக்சிஜன் மற்றும் கரிம பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்துகின்றன. அவை பூமியின் பெரும்பாலான உணவுச் சங்கிலிகளின் அடிப்படையாக உள்ளன.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், DANIEL MUNOZ/AFP via Getty Images

படக்குறிப்பு, வளிமண்டலத்தில் உள்ள கரிம வாயு தாவர வளர்ச்சிக்கும் உணவுச் சங்கிலிக்கும் அவசியம்.

ஆனால், வளிமண்டலத்தில் அதிகமாக கரிம வாயு சேரும்போது, விஞ்ஞானிகள் அதை "மாசுபடுத்தி அல்லது மாசுக் காரணி" என்று வகைப்படுத்துகிறார்கள். ஏனெனில், அது தீங்கு விளைவிக்கத் தொடங்குகிறது.

2024ஆம் ஆண்டில் கரிம வாயு சராசரியை விட அதிக அளவை எட்டியது. அதாவது காற்றில் உள்ள பத்து லட்சம் மூலக்கூறுகளில் 280 மூலக்கூறுகள் கரிம வாயுவினுடையவை என்ற அளவில் 1750களில் இருந்தன. அந்த நிலை மாறி, தற்போது பத்து லட்சம் காற்று மூலக்கூறுகளில் 423 கரிம வாயுக்களினுடையவை என்கிற அளவுக்கு கரிம வாயுவின் அளவு அதிகரித்துள்ளதாக உலக வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

மனிதனால் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு செறிவு அதிகரிப்பிற்கும் புவி வெப்பமாதலுக்கும் தொடர்பு இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்து நிரூபித்துள்ளனர். இது சுற்றுச்சூழல் அமைப்புகளில் பரந்த அளவிலான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

"காடுகள் அதிக தீ விபத்துகளுக்கு உள்ளாகி வருகின்றன. வறட்சி அல்லது வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைகின்றன. இயற்கையான சூழலியல் அமைப்புகளின் சமநிலை குலைவதால் காட்டுயிர்கள் வாழ்விடத்தை இழக்கின்றன," என்று கனடாவை சேர்ந்த சூழலியல் நிபுணர், பாதுகாப்பு விஞ்ஞானி மற்றும் ஆலோசகர் மிச்செல் கேலமண்டீன் கூறுகிறார்.

வளிமண்டலத்தில் கரிம வாயு அதிகரிப்பது, தாவர வளர்ச்சியை மேம்படுத்த முடியும். ஆனால் இது அதனால் ஏற்படும் வெப்ப அழுத்தம் மற்றும் நீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட காலநிலை மாற்றத்தின் எதிர்மறை விளைவுகளை ஈடுசெய்யப் போதுமானதாக இருக்காது என்று ஐபிசிசி கூறுகிறது.

கூற்று 4: காட்டுத்தீக்கு காலநிலை மாற்றம் காரணம் அல்ல

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா, தென் கொரியா, துருக்கியில் பெரிய காட்டுத்தீ ஏற்பட்டது. அதுபோன்ற சமயங்களில், சில சமூக ஊடக பயனர்கள், தீ வைக்கப்படுவதே இதற்கு காரணம் என்று கூறி, அதில் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளுக்கு இருக்கும் பங்கை நிராகரிக்கின்றனர்.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த ஆண்டு காட்டுத்தீயால் ஸ்பெயின் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தீ வைப்பவர்களைக் கைது செய்வது குறித்த வைரல் பதிவுகள், குறிப்பிட்ட தீயை காலநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்தும் விஞ்ஞானிகள் மற்றும் அரசியல்வாதிகளை கேலி செய்யும் பதிவுகளால் பெரும்பாலும் நிரம்பியுள்ளன.

ஆனால், பல தீ விபத்துகள் உண்மையில் மனிதர்களால் வேண்டுமென்றேவோ அல்லது தற்செயலாகவோ தொடங்கி இருந்தாலும், காட்டுத்தீயை அந்த ஒரு காரணத்துடன் குறைத்து மதிப்பிடுவது, "அடிப்படையில் தவறாக வழிநடத்தும் செயல்" என்று கொலம்பியா தேசிய பல்கலைக்கழகத்தில் தீ சூழலியல் குறித்து ஆய்வு செய்யும் முனைவர் டொலோர்ஸ் ஆர்மென்டெராஸ் கூறுகிறார்.

ஒருசில காட்டுத்தீ சம்பவங்களை காலநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்துவது கடினம். ஏனெனில், காடுகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன, நிலப்பரப்பு உள்படப் பல காரணிகளும் ஓரளவுக்கு காட்டுத் தீக்கு காரணமாகின்றன.

ஆனால், காலநிலை மாற்றம் காட்டுத்தீ ஏற்படுவதற்கும் பரவுவதற்கும் ஏற்ற நிலைமைகளை உருவாக்குவதை நாம் அறிவோம்.

வட அமெரிக்காவின் மேற்குப் குதி அல்லது தெற்கு ஐரோப்பா போன்ற பகுதிகளில், காலநிலை மாற்றம் 'தீ வானிலை' என்று அழைக்கப்படுவனவற்றின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக ஐபிசிசி கூறுகிறது. அதாவது, நீண்டகால வறண்ட சூழல், தீவிர வெப்பம் மற்றும் அதீத காற்று ஆகியவற்றின் கலவையைக் கொண்ட வானிலை.

அந்த நிலைமைகளில், காட்டுத்தீ ஏற்படுவது, மின்னல் போன்ற இயற்கையான காரணத்தால் ஏற்படுவதாக இருந்தாலும் சரி அல்லது தீ வைப்பு, விபத்து போன்ற மனிதர்களால் ஏற்படுத்தப்படுவதாக இருந்தாலும் சரி, ஏராளமான தாவரங்களை எரித்து தீவிர காட்டுத்தீ ஏற்பட வழிவகுக்கின்றன.

"இப்போதைய கேள்வி தீ வைக்கப்படுவதா அல்லது காலநிலை மாற்றமா என்பதல்ல. அதிக தீவிரத்துடன் கூடிய வெப்பமான காலநிலை, எந்தவொரு காட்டுத்தீ சம்பவத்தின் விளைவுகளையும் எப்படி தீவிரப்படுத்துகிறது என்பதே. இந்த விளைவுதான், இப்போது நாம் பல இடங்களில் கவனிக்கும் பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ சம்பவங்களை ஏற்படுத்துகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், LUIS ACOSTA/AFP via Getty Image

படக்குறிப்பு, ஐ.நா.வின் 30வது காலநிலை உச்சிமாநாட்டை நடத்தும் பிரேசில் மற்றும் அண்டை நாடுகள் 2024இல் கடுமையான வறட்சியை எதிர்கொண்டன.

கூற்று 5: காலநிலை 'பொறியியல்' தீவிர வானிலைக்கு காரணமாகிறது

வானிலையை மாற்றியமைத்தல் அல்லது புவி பொறியியல் (geoengineering) காரணமாகக் கடுமையான மழை, வெள்ளம் அல்லது சூறாவளி ஏற்படுவதாகச் சொல்லப்படும் கருத்துகள் தொடர்ந்து இணையத்தில் பரவி வருகின்றன.

கடந்த ஆண்டு துபையில் அல்லது ஸ்பெயினின் வலென்சியாவில் திடீர் வெள்ளம் ஏற்பட்ட போது, பல சமூக ஊடக பயனர்கள் அத்தகைய நடைமுறைகளே காரணம் என்று கூறினர்.

ஆனால், வானிலையை மாற்றியமைத்துக் கையாளுதல் மற்றும் புவி பொறியியல், இரண்டுமே ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. உலகின் பல்வேறு பகுதிகள் அனுபவிக்கும் வானிலை உச்சநிலையை இவை குறிக்கவில்லை.

வானிலையை மாற்றியமைப்பது சாத்தியம். அதில், மேக விதைப்பு என்பது மிகவும் பொதுவான நுட்பங்களில் ஒன்று. சமீபத்திய ஆண்டுகளில் சீனா, மெக்சிகோ, இந்தியா உள்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இது பயன்படுத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்க அரசாங்க அறிக்கை கூறுகிறது.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, 2024ஆம் ஆண்டில் துபையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை காலநிலை மாற்றம் மோசமாக்கி இருக்கலாம் என்று ஓர் அறிவியல் ஆய்வு முடிவு செய்துள்ளது

நீராவி உறைந்து போவதை ஊக்குவிக்க, மழை அல்லது பனிக்கான வாய்ப்பை அதிகரிக்க, சிறிய துகள்களை (சில்வர் ஐயோடைட் போன்றவற்றை), ஏற்கெனவே இருக்கும் மேகங்களில் விதைப்பது இந்தச் செயல்முறையில் அடங்கும்.

"இத்தகைய வானிலை கையாளுதல் நுட்பங்கள் மிகக் குறுகிய காலத்திற்கு உள்ளூர் அளவில் செயல்படுத்தப்படுகின்றன. எனவே, கடந்த பல தசாப்தங்களாக இந்த பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் காலநிலையில் ஏற்படும் விரைவான மாற்றங்களை இந்த நுட்பங்களால் கணக்கிட முடியாது" என்கிறார் இந்திய அறிவியல் நிறுவனத்தின் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் கோவிந்தசாமி பாலா.

மேக விதைப்பு போன்ற வானிலையை மாற்றியமைக்கும் நுட்பங்களின் செயல்திறன் குறித்து சில விவாதங்கள் இருந்தாலும், அவை மட்டுமே பெரிய வெள்ளம் அல்லது பெரிய அளவிலான புயல்களை ஏற்படுத்த முடியாது என்று விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.

மறுபுறம், புவி பொறியியல் என்பது காலநிலையை மாற்றும் குறிக்கோளுடன் சுற்றுச்சூழலைக் கையாளும் முயற்சிகளைக் குறிக்கிறது.

இதில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஒரு வடிவம், சூரிய கதிர்வீச்சு மாற்றம். அதாவது, சூரிய ஒளியை மீண்டும் விண்வெளியில் பிரதிபலிக்கச் செய்யவும், கோட்பாட்டளவில் பூமியை குளிர்விக்கவும், வளிமண்டலத்தில் சில பொருட்களின் நுண்துகள்களைத் தெளிப்பதே சூரிய கதிர்வீச்சு மாற்றமாகும்.

பிரிட்டன் உள்படப் பல நாடுகளில், சமீபத்திய ஆண்டுகளில் சூரிய பொறியியல் ஆராய்ச்சியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆபத்தான வெப்பமாதலைக் கட்டுப்படுத்த உதவுமா என்பதைப் புரிந்துகொள்ளும் முயற்சிகளாக இவை உள்ளன.

உலகம் அனுபவித்து வரும் சில தீவிர வானிலைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?

காலநிலை மாற்றமே, வெப்ப அலைகள் அல்லது அதிக மழைப்பொழிவு போன்ற சில வகையான தீவிர வானிலைகள் உருவாவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாகவும், அந்த நிலைமைகளைத் தீவிரப்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwy7lx1jrv0o

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

புவி வெப்பமடைதல்

இதைப்பற்றி அமெரிக்க அதிபர் அப்படி எதுவுமே இல்லை என்கிறாரே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இதைப்பற்றி அமெரிக்க அதிபர் அப்படி எதுவுமே இல்லை என்கிறாரே?

முதலாளிகளுக்கு பணம் பெருக்குவது மட்டுமே குறி அண்ணா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.