Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜடேஜாவுக்கு பதில் சஞ்சு சாம்சன் : சிஎஸ்கே முடிவால் யாருக்கு லாபம்?

ஐபிஎல் டிரேட்: சாம்சன் - ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா 'ஐபிஎல் டிரேட்' உறுதியாகியிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அங்கமாக விளங்கிய ஜடேஜாவையும், ஆல்ரவுண்டர் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதற்குப் பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருக்கிறார்.

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை ஏலத்தைத் தவிர்த்து 'டிரேட்' மூலமாகவும் வீரர்களை வாங்க முடியும். 2009ம் ஆண்டு முதலே ஐபிஎல் டிரேட்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பல அணிகள் இதில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் இதில் ஆர்வம் காட்டியதில்லை.

16 சீசன்களில் அந்த அணி ஒரேயொரு முறை ராபின் உத்தப்பாவை டிரேட் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வாங்கியது. இப்போது அதே அணியிலிருந்து சாம்சனையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

தங்கள் அணிகளின் முக்கிய அங்கமாகக் கருதப்பட்ட வீரர்கள் மாறியது ஏன்? இந்த டிரேட் யாருக்கு பெரிய அளவில் லாபகரமாக அமைந்திருக்கிறது? இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமைந்திருக்கும் விஷயங்கள் என்ன?

ஐபிஎல் டிரேட்: சாம்சன் - ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

இரு அணிகளின் முக்கிய அங்கமாக இருந்த வீரர்கள்

ஜடேஜா, சாம்சன் இருவருமே தங்கள் அணிகளில் நெடுங்காலம் முக்கிய வீரர்களாக இருந்தவர்கள். 2012ம் ஆண்டு முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த ஜடேஜா, 12 சீசன்கள் அந்த அணிக்காக ஆடியிருக்கிறார். ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் என 200 போட்டிகளில் சூப்பர் கிங்ஸுக்காக ஆடியிருக்கிறார் அவர்.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள்படி அந்த அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும், அந்த அணியோடு மூன்று முறை (2018, 2021, 2023) ஐபிஎல் பட்டமும் வென்றிருக்கிறார் அவர்.

அதேசமயம் சஞ்சு சாம்சன் 11 ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார். 155 போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடிய அவர், இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள்படி சுமார் 32 என்ற சராசரியில் 4219 ரன்கள் (அனைத்து போட்டிகளிலும்) எடுத்திருக்கிறார். அந்த அணிக்காக அதிக ரன்கள் எடுத்திருப்பவர் அவர்தான்.

மேலும், 2021ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த சாம்சன், 2022 சீசனில் அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். 2024ல் அவர் தலைமையில் அந்த அணி மூன்றாவது இடம் பிடித்தது.

இப்படி அந்த அணிகளின் பெரிய அங்கமாக இருந்த வீரர்களை இரு அணிகளும் டிரேட் செய்ய முன்வந்தது பலருக்கும் ஆச்சர்யமளிப்பதாக உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் சொன்ன காரணம் என்ன?

இந்த டிரேட் உறுதியான பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கத்தில், அந்த அணியின் நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் பேசிய வீடியோ வெளியிட்டிருந்தனர். அதில் இது மிகவும் கடினமான முடிவாக இருந்ததாகக் கூறிய அவர், தரமான இந்திய டாப் ஆர்டர் பேட்டர்களை மினி ஏலத்தில் எடுப்பது கடினம் என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

"ஒரு டாப் ஆர்டர் இந்திய பேட்டரின் தேவையை அணி உணர்ந்தது. ஏலத்தில் அதிக இந்திய பேட்டர்கள் இருக்கமாட்டார்கள் என்பதால் இந்த 'டிரேட் விண்டோவில்' ஒருவரை கொண்டுவருவது என்று முடிவு செய்தோம்.

சிஎஸ்கேவின் வெற்றிப் பயணத்தில் முக்கிய அங்கமாக இருந்த ஜடேஜாவை விடுவது எளிதான முடிவாக இருக்கவில்லை. சிஎஸ்கே நிர்வாகம் எடுத்த முடிவுகளிலேயே இதுதான் கடினமானது என்றுகூட சொல்லலாம்.

இந்த சமயத்தில் அணியின் எதிர்கால மாற்றத்தை (transition) கருத்தில் கொண்டு இந்த கடினமான முடிவை எடுத்திருக்கிறோம். ஜடேஜாவோடு கலந்துபேசி சுமுகமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார் காசி விஸ்வநாதன்.

அதுமட்டுமல்லாமல், அணியின் பல வீரர்கள் தங்கள் கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால், எதிர்காலத்துக்கான ஓர் அணியைக் கட்டமைக்கும் நோக்கோடு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதுபற்றிப் பேசிய அவர், "தன் 'வைட் பால்' கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால் ஜடேஜாவும் மாற்றம் தரும் வேறு வாய்ப்புகளுக்குத் தயாராகத்தான் இருந்தார். சாம் கரணும் எங்களுக்கு சீரான செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார்.

நான் முன்பே சொன்னதுபோல் இவர்கள் இருவரையும் விடுவது மிகவும் கடினமான முடிவுகளுள் ஒன்று. அணியின் பல வீரர்கள் தங்கள் கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால், எதிர்காலத்துக்கான ஒரு அணியை அடுத்த ஒருசில ஆண்டுகளில் கட்டமைப்பது மிகவும் முக்கியம்." என்றார்.

இந்நிலையில், சாம்சனை எதிர்காலத்துக்கான ஒரு வீரர் என அவர் குறிப்பிட்டார். "சஞ்சு சாம்சன் சுமார் 4500 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும் ஒரு அனுபவ ஐபிஎல் பேட்டர். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். அவருக்கு கிட்டத்தட்ட 30 வயது தான் (31 வயது) ஆகிறது. அதனால் எதிர்காலத்துக்கு இது நல்ல முடிவாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்" என்று சாம்சனை டிரேட் செய்ததற்கான காரணத்தை அவர் தெரிவித்தார்.

ஐபிஎல் டிரேட்: சாம்சன் - ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தோனி, ரெய்னா தவிர்த்து சூப்பர் கிங்ஸுக்காக 200 போட்டிகள் ஆடிய ஒரே வீரர் ஜடேஜா தான்

ராஜஸ்தான் ராயல்ஸ் & ஜடேஜா சொன்னது என்ன?

இந்த டிரேட் பற்றிப் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநர் குமார் சங்கக்காரா, "ஜடேஜா மீண்டும் அணிக்குத் திரும்புவது சிறப்பான தருணம். அவருக்கு இந்த அணியை, ரசிகர்களை நன்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளில் அனைத்து ஏரியாவிலும் பங்களிக்கக்கூடிய ஒரு சிறந்த வீரராக அவர் உருவெடுத்திருக்கிறார். அவருடைய அனுபவம், அமைதியான தன்மை, போட்டித்தன்மை ஆகியவை ஒரு நல்ல எதிர்காலத்தை நாங்கள் கட்டமைக்க உதவும்" என்று கூறினார்.

சாம் கரண், ஜடேஜா இருவரும் தங்களுக்கு பல பரிமாணங்களில் உதவுவதாக அவர் தெரிவித்தார். "சாம் கரண் கொஞ்சம் வேறு மாதிரியான வீரர் என்றாலும், அவரும் முக்கியமான சில பரிமாணங்கள் கொண்டுவருகிறார். அவர் பயமறியாத வீரர். எளிதில் தன்னை தகவமைத்துக்கொள்பவர். நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிக்கக்கூடியவர். பேட்டிங், பௌலிங் இரண்டிலும் பங்களிக்கக்கூடியவர்" என்றும் அவர் கூறினார்.

2008 மற்றும் 2009 சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜடேஜா, முதல் ஐபிஎல் சீசனில் அந்த அணியோடு சாம்பியன் பட்டமும் வென்றார்.

அந்த அணியோடு மீண்டும் இணைவது பற்றிப் பேசிய ஜடேஜா, "எனக்கு முதல் மேடையும், முதல் வெற்றிச் சுவையையும் கொடுத்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ். இங்கு மீண்டும் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இது எனக்கு ஒரு அணி மட்டுமல்ல. இது என் வீடு. இங்குதான் என் முதல் ஐபிஎல் கோப்பையை வென்றேன். இப்போது இருக்கும் வீரர்களோடு இணைந்து இன்னும் நிறைய கோப்பைகள் வெல்ல ஆசைப்படுகிறேன்" என்றார்.

இந்த டிரேட் மூலம் யாருக்கு வெற்றி?

இரண்டு அணிகளுமே பெரிய வீரர்களை டிரேட் செய்திருந்தாலும், இதனால் யாருக்கு அதிக லாபம் என்ற விவாதங்களும் எழவே செய்திருக்கின்றன. இதுபற்றிப் பேசிய தமிழ்நாடு ஆண்கள் அண்டர் 19 அணியின் தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் சிஎஸ்கே வீரருமான யோ மஹேஷ், சூப்பர் கிங்ஸுக்கு சற்று கூடுதல் லாபம் என்று தெரிவித்தார்.

"இந்த டிரேடைப் பொறுத்தவரை இரண்டு அணிகளுக்குமே வெற்றி தான். இரு அணிகளுமே அவர்களுக்கு இருந்த வெற்றிடத்தை நிரப்பியிருக்கிறார்கள். ஏனெனில், சாம்சன் பல கட்டங்களை நிரப்புகிறார். அவர் ஒரு நீண்ட காலத்துக்கான வீரர், ஒரு நல்ல டாப் ஆர்டர் பேட்டர், சிறந்த கீப்பர், அதுமட்டுமல்லாமல் கேப்டன்ஸி அனுபவம் கொண்ட வீரரும் கூட. சூப்பர் கிங்ஸுக்கு தேவையாக இருந்த பல வெற்றிடங்களை அவர் நிரப்புகிறார்" என்று கூறினார் யோ மஹேஷ்.

நீண்ட நாள்களாக ஒரு தரமான கீப்பரை சூப்பர் கிங்ஸால் வாங்க முடியாமல் இருந்த நிலையில், இந்த டிரேட் அவர்களுக்கு சாதமாக அமைந்திருப்பதாகக் கூறினார் அவர். மேலும், இவ்விரு வீரர்களின் வயதைக் கணக்கில் கொள்ளும்போது, சூப்பர் கிங்ஸுக்கு இந்த ஒப்பந்தம் சற்று கூடுதல் சாதகமாக அமைந்திருப்பதாக அவர் கூறினார்.

சாம்சனுக்கு 31 வயதாகும் நிலையில், ரவீந்திர ஜடேஜா அடுத்த மாதம் 37 வயதில் அடியெடுத்து வைப்பார்.

"சாம்சன் - சூப்பர் கிங்ஸ் எதிர்காலத்துக்கான அடித்தளம்"

சாம்சனை மையமாக வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒரு அணியைக் கட்டமைக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாகக் கூறுகிறார் யோ மகேஷ்.

"சாம்சன் ஒரு சிறந்த வீரர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு பெரிய 'பிராண்ட்'. அவருக்கு நல்ல பெயரும் மதிப்பும் இருக்கிறது. மார்க்கெட்டிங் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் அது சூப்பர் கிங்ஸுக்கு பெரிய சாதகம். அதுமட்டுமல்லாமல் சாம்சன் தமிழ் பேசக்கூடியவர். ரஜினிகாந்த் ரசிகர் வேறு. இதெல்லாம் நம் ரசிகர்களுக்குப் பிடித்துப்போகும். சாம்சனை நம்முள் ஒருவனாக அவர்கள் பார்க்கத் தொடங்குவார்கள். அது ருதுராஜ் கெய்க்வாடுக்கு நடக்கவில்லை" என்றார் அவர்.

அதுமட்டுமல்லாமல் சாம்சனை உடனடியாக கேப்டனாக்குவது நல்லது என்றும் அவர் கருதுகிறார். "18 கோடி ரூபாய் கொடுத்து ஒரு பெரிய வீரரை வாங்கிவிட்டு, சிஎஸ்கே தாமதம் செய்யக்கூடாது. அவரை உடனடியாக கேப்டனாக்கவேண்டும். ருதுராஜ் போன்று அவருக்கு அந்த ரோலில் செட் ஆக அவகாசம் எடுத்துக்கொள்ளாது. அவர் ஏற்கெனவே ஒரு அணியை பல ஆண்டுகளாக வழிநடத்தியிருக்கிறார். சொல்லப்போனால் அவர் தலைமையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு சீரான முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. அதனால், அவர் எளிதாக அந்த இடத்தை நிரப்பிவிடுவார்" என்கிறார் யோ மகேஷ்.

சாம்சனை கேப்டனாக்கும் முடிவு ருதுராஜ் கெய்க்வாட் மீதான நெருக்கடியையும் குறைக்கும் என்கிறார் அவர். 2022, 2023 சீசன்களில் ஒரு பேட்டராக அவர் எப்படி சோபித்தாரோ, அதே மாதிரியான செயல்பாட்டை கேப்டன் பதவி இல்லாதபோது அவரால் நெருக்கடியின்றி கொடுக்கமுடியும் என்பது அவரது வாதமாக இருக்கிறது.

ஐபிஎல் டிரேட்: சாம்சன் - ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூப்பர் கிங்ஸ் அணியின் கீப்பராக யார் செயல்படுவார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது

கீப்பர் யார்? தோனியா, சாம்சனா?

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவரும் சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருப்பதன்மூலம், கீப்பராக யார் செயல்படுவார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

ஒருசில வல்லுநர்கள், இது தோனி 'இம்பேக்ட்' வீரராக விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்றார்கள். அவர் முழங்கால் பிரச்னையால் தொடர்ந்து அவதிப்படுவதால் இப்படியொரு வாதத்தை சிலர் முன்வைத்தனர்.

அதேசமயம் தோனியின் சிறப்பே அணி ஃபீல்டிங் செய்யும்போது அவர் கொடுக்கும் பங்களிப்புதான் என்பதால், அவர் ஃபீல்டிங்கில் இருக்கவேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இந்த விஷயம் பற்றிப் பேசிய யோ மகேஷ், "சொல்லப்போனால் தோனி அறிவிக்கப்படாத ஒரு 'இம்பேக்ட்' வீரராகத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார். கடைசி 10 பந்துகள் இருக்கும்போதுதான் ஆடவருகிறார். அவருடைய பெரிய பங்களிப்பு என்பது ஃபீல்டிங்கில் இருக்கும்போதுதான். அதேசமயம் வேறு கேப்டன்கள் இருக்கும்போது அவரும் மெல்ல தலையீட்டைக் குறைத்துக்கொண்டிருக்கிறார். இப்போதும் அதுதான் நடக்கும் என்று நம்புகிறேன். ஒருசில போட்டிகள் சாம்சன் செட் ஆகும் வரை அவர் கீப்பிங் செய்துவிட்டு, மெல்ல அவர் அந்த பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்" என்றார்.

சாம்சன் தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவருவதால் அவர் நிச்சயம் கீப்பிங் செய்யவே விரும்புவார் என்று குறிப்பிட்டார் யோ மகேஷ்.

ஐபிஎல் டிரேட்: சாம்சன் - ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் அடித்து சிஎஸ்கேவை வெற்றி பெற வைத்தார் ஜடேஜா

ஜடேஜா: சென்னையின் இழப்பும், ராயல்ஸின் லாபமும்

ரவீந்திர ஜடேஜா சென்னையில் இருந்து சென்றிருப்பது உணர்வுபூர்வமாக ரசிகர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிவித்தார் யோ மகேஷ்.

"இத்தனை ஆண்டுகள் ரசிகர்கள் அவரை தங்களுள் ஒருவராகப் பார்த்திருக்கிறார்கள். அவரும் அதை திரும்ப வெளிப்படுத்தியிருக்கிறார். இதை ஒரு வீடு என்றே கருதியிருக்கிறார். அவரும், அஷ்வினும் ஒன்றாகப் பந்துவீசி எதிரணிகளை தடுமாற வைத்த தருணங்கள், ஜடேஜா பாய்ந்து பிடித்த கேட்ச்கள், 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியின் கடைசி 2 பந்துகளில் பௌண்டரிகள் அடித்து அவர் வெற்றி பெறவைத்த அந்தத் தருணம்... இப்படி பல்வேறு தருணங்கள் சென்னை ரசிகர்களுக்கு அவரை மிகவும் நெருக்கமாகக் கொண்டுவந்து வைத்துள்ளன" என்றார் அவர்.

கடந்த 2 சீசன்களாக ஜடேஜாவின் பந்துவீச்சில் ஏற்பட்ட சிறு சரிவு அணி நிர்வாகம் இந்த முடிவை எடுப்பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூட அவர் கருதுகிறார். கடந்த சீசன் 32.40 என்ற சராசரியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த ஜடேஜா, 2024 சீசனில் 46.13 என்ற சராசரியில் 8 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

அதேசமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவரால் சிறப்பாக செயல்படமுடியும் என்று சொல்லும் யோ மகேஷ், அதற்கான காரணத்தையும் கூறுகிறார்.

"கடந்த 2 ஆண்டுகளாக சேப்பாக்க ஆடுகளம் முன்பு போல் சுழலுக்கு ஒத்துழைக்கவில்லை. அது ஜடேஜாவின் செயல்பாட்டில் பிரதிபலித்தது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸின் ஹோம் கிரவுண்டான சவாய் மான்சிங் ஸ்டேடியம் அவருக்கு உகந்ததாக இருக்கும். அது பெரிய மைதானம். பந்து கொஞ்சம் மெதுவாகவும், கீழ் தங்கியும் செல்லும். அங்கு சராசரி ஸ்கோரே 160 - 170 போலத்தான் இருக்கும். அங்கு ஜடேஜாவால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியும்" என்று யோ மகேஷ் கூறினார்.

கடந்த சீசன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சுழற்பந்துவீச்சே பிரதான பிரச்னையாக இருந்ததாகவும், அதை ஜடேஜா மூலம் அவர்கள் ஓரளவு தீர்த்திருப்பதாகவும் யோ மகேஷ் நம்புகிறார். அதுமட்டுமல்லாமல், சமீப ஆண்டுகளாக ஆல்ரவுண்டர்கள் இல்லாமல் அந்த அணி பல போட்டிகளில் 5 பிரதான பௌலர்களை மட்டுமே வைத்து களமிறங்கும் சூழ்நிலை பல போட்டிகளில் ஏற்பட்டிருக்கிறது. ஜடேஜா, சாம் கரண் ஆகியோரின் வருகை மூலம் அந்த பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் அவர்.

இதனால் தான் இந்த டிரேட் இரண்டு அணிகளுக்குமே வெற்றிகரமானது என்று குறிப்பிடுகிறார் யோ மகேஷ். எதிர்காலத்தை கணக்கில் கொள்ளும்போது சூப்பர் கிங்ஸுக்கு கூடுதல் லாபம் என்று சொல்லும் அவர், சாம்சனை ராயல்ஸ் இழந்ததை விட, ஜடேஜாவை சூப்பர் கிங்ஸ் இழந்தது உணர்வுபூர்வமாக பெரிய இழப்பு என்றும் கூறினார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8ey35nwwlpo

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அணியில் இருந்து பத்திரனா, கொன்வே, ரச்சின் ரவிந்திரா போன்றவர்கள் நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

ரச்சின் ரவிந்திரா

சிறிது காலத்திலேயே மக்களின் மனதை கொள்ளை கொண்டவர்.

அதிரடியாக ஆடக் கூடியவர்.

கடந்த போட்டியில் சொதப்பி விட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2026 IPL : மதீஷ பத்திரனவை விடுவித்தது CSK!

Nov 15, 2025 - 05:42 PM

2026 IPL : மதீஷ பத்திரனவை விடுவித்தது CSK!

2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. 

அதன்படி, அண்மைக்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக மாறியிருந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவை, வரவிருக்கும் தொடருக்காக அணியின் நிர்வாகம் விடுவிக்க முடிவு செய்துள்ளது. 

கடந்த ஆண்டு இவரை இந்திய ரூபா 13 கோடிக்கு சென்னை அணி தக்கவைத்திருந்தது. 

2023 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக தனது முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற மதீஷ பத்திரன, தான் விளையாடிய முதல் தொடரிலேயே வெற்றி பெற்ற அணியில் ஒரு அங்கமானார். 

அந்தத் தொடரில் அவர் தனது அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரை அவர் 32 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

மதீஷ பத்திரன மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அப்போதைய தலைவர் மகேந்திர சிங் தோனி கூட, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் மதீஷ பத்திரன கவனத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அவ்வாறு செய்தால், அவரால் நீண்டகால தொழில்முறை பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

எவ்வாறாயினும், சென்னை அணிக்கு மதீஷ பத்திரன தேவைப்பட்டால், எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ள வீரர்களின் ஏலத்தில் அவரை மீண்டும் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது. 

ஏலத் திகதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படவுள்ள வீரர்களின் பட்டியலை இந்திய நேரப்படி இன்று மாலை 3.00 மணிக்கு முன் வெளியிட வேண்டியிருந்தது. 

அதன்படி, மதீஷ பத்திரனவைத் தவிர, நியூசிலாந்து வீரர்கள் டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா உட்பட பல வீரர்களை விடுவிக்கவும் சென்னை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmi08z6ia01n1o29ng29mia8a

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் சங்கக்கார!

Nov 17, 2025 - 01:19 PM

ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் சங்கக்கார!

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மீண்டும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

2021 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ரோயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய குமார் சங்கக்கார வழிநடத்தலில் சஞ்சு செம்சுன் தலைமையிலான அணி கடந்த நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 

இருப்பினும் 2024 உலகக் கிண்ண வெற்றிக்கு இந்திய அணியை வழிநடத்திய பயிற்சயாளர் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயிற்சியாளரானார். 

ஆனால் சஞ்சு செம்சனுடன் ஏற்பட்ட பகைமை வதந்திகளை தொடர்ந்து அண்மையில் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை துறந்தார். 

இதனால் 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வழிநடத்துவதற்காக மீண்டும் குமார் சங்கக்கார தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை பயிற்சியாளராக சங்கக்கார நியமிக்கப்பட்டதற்கு சிறப்பு AI வீடியோவை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெளியிட்டுள்ளது. 

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்கி மாஸாக நடந்து காட்சியை AI மூலமாக சங்ககாரா நடந்து வருவது போல எடிட் செய்துள்ளனர். 

ஹுகும் பாடலின் இந்தி வெர்சனை இந்த எடிட் வீடியோவிற்கு பயன்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmi2uflpf01p5o29n77iwr40o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரர்களை தக்க வைப்பதில் ஆச்சர்யம் தந்த சிஎஸ்கே அணி மினி ஏலத்தில் என்ன செய்யப் போகிறது?

சிஎஸ்கே - ஐபிஎல் - ரிடன்ஷன்

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 17 நவம்பர் 2025

ஐபிஎல் 2026 தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி அபு தாபியில் நடக்கிறது. இதற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை சனிக்கிழமை (நவம்பர் 15) வெளியிட்டன.

11 ஆண்டுகளாக தங்கள் அணியின் முக்கிய அங்கமாக இருந்த ஆண்ட்ரே ரஸலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் வெளியே விட்டிருக்கிறது. வெங்கடேஷ் ஐயர், கிளென் மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டன், ரவி பிஷ்னாய் போன்ற பல முன்னணி வீரர்கள் தங்கள் அணிகளிலிருந்து கழற்றி விடப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மதீஷா பதிரானா, டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா என அவர்களின் அங்கமாக இருந்த பல வீரர்களை வெளியே விட்டிருக்கிறார்கள். டிரேட் செய்யப்பட்ட ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் தவிர்த்து 10 வீரர்களை ரிலீஸ் செய்திருக்கிறது சிஎஸ்கே.

சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் இந்த அதிரடி முடிவுக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன? என்ன திட்டத்தோடு அவர்கள் ஏலத்தில் களமிறங்குவார்கள்?

தக்கவைத்த வீரர்கள் யார்? ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள் யார்?

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் (டிரேட்), ஆயுஷ் மாத்ரே, டெவால் பிரெவிஸ், ஷிவம் தூபே, ஊர்வில் பட்டேல், நூர் அஹமது, நாதன் எல்லிஸ், ஷ்ரேயாஸ் கோபால், கலீல் அஹமது, ராமகிருஷ்ணா கோஷ், முகேஷ் சௌத்ரி, ஜேமி ஓவர்டன், குர்ஜப்னீத் சிங், அன்ஷுல் கம்போஜ்.

ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள்: ரவீந்திர ஜடேஜா (டிரேட்), ஆண்ட்ரே சித்தார்த், தீபக் ஹூடா, சாம் கரண் (டிரேட்), டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, மதீஷா பதிரானா, கமலேஷ் நாகர்கோட்டி, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி, விஜய் சங்கர்

இதுவரை பார்க்காத சிஎஸ்கே

வழக்கமாக இப்படி மினி ஏலத்துக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யாது. அதிகபட்சம் 4 அல்லது 5 வீரர்களை மட்டும் ரிலீஸ் செய்வார்கள். அவர்களும்கூட பெரும்பாலும் போட்டிகளில் விளையாடாத இளம் வீரர்களாகவோ, சோபிக்காத வெளிநாட்டு வீரர்களாகவோ தான் இருப்பார்கள். ஆனால், இம்முறை மெகா ஏலத்தில் ரீடெய்ன் செய்திருந்த வீரர் உள்பட பலரையும் சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ரிலீஸ் செய்திருப்பது ஆச்சர்யமான ஒரு விஷயமாக கிரிக்கெட் வட்டத்தில் பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் உணர்வுகளைக் கடந்து யோசிக்கத் தொடங்கிவிட்டது என்கிறார் கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீ.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஐபிஎல் அணிகள் தங்களின் பழைய சென்ட்டிமென்ட்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு இம்முறை முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். இது மிகவும் நல்ல விஷயம். இப்போது சென்டிமென்ட் எல்லாம் பார்க்காமல் எதிர்காலத்துக்கு என்ன முக்கியம், கோப்பை வெல்ல என்ன முக்கியம் என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்" என்றார்.

சிஎஸ்கே - ஐபிஎல் - ரிடன்ஷன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிஎஸ்கே-வின் அணுகுமுறைக்கு ஏற்ற வீரர்கள் என்று கருதப்பட்ட ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா போன்றவர்களும் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள்

"மற்ற அணிகள் நிறைய வீரர்களை ரிலீஸ் செய்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அப்படிச் செய்ததில்லை. அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று வீரர்களை ரிலீஸ் செய்வார்கள். எப்போதும் குடும்பம் என்ற அந்த உணர்வை அவர்கள் கடைபிடிப்பார்கள். ஆனால், கடந்த 2 சீசன்களில் அதன் செயல்பாடு அனைத்தையும் மாற்றியுள்ளது. அதேசமயம், நல்ல செயல்பாட்டைக் காட்டிய வீரர்களைத் தக்கவைத்துவிட்டு, மற்றவர்களை ரிலீஸ் செய்து மிகச் சரியான முடிவை எடுத்திருக்கிறார்கள்" என்றும் அவர் கூறினார்.

2024 சீசனில் முதல் முறையாக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்கிய சூப்பர் கிங்ஸ். அப்போது ஐந்தாவது இடமே பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. அடுத்த சீசனோ, இன்னும் மோசமாக அமைந்தது. 14 போட்டிகளில் நான்கில் மட்டுமே வென்ற சிஎஸ்கே, கடைசி இடமே பிடித்தது. காயத்தால் கேப்டன் ருதுராஜ் பாதியில் விலக, அதன்பின் தோனி அந்தப் பதவியை ஏற்று அணியை வழிநடத்தினார். ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு சீசன்கள் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாதது இதுவே முதல் முறை.

இதனைத் தொடர்ந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை இல்லாத அதிரடி முடிவுகளை எடுத்திருக்கிறது என்று கருதப்படுகிறது. ஜடேஜா - சாம்சன் டிரேட் குறித்துப் பேசிய அந்த அணியின் நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் கூட, "எதிர்காலத்தை மனதில் வைத்து ஜடேஜாவை டிரேட் செய்யும் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டியதாகிவிட்டது" என்று கூறியிருந்தார்.

பேட்டிங்: இளைஞர்கள் கொடுத்த நம்பிக்கை

கடந்த ஆண்டு சூப்பர் கிங்ஸின் பேட்டிங் பெரும் விமர்சனங்களை சந்தித்தது. 180 ரன்களை சேஸ் செய்வது அவர்களால் இயலாத காரியமாக இருந்தது. பெரும்பாலான வீரர்கள் மற்ற அணிகளைப் போல் வேகமாக ரன் குவிக்கத் தடுமாறினார்கள். கான்வே, ரச்சின், திரிபாதி, ஹூடா, விஜய் சங்கர் என பெரும்பாலான பேட்டர்கள் வெளியே அனுப்பப்பட அது முக்கியக் காரணமாக இருக்கும்.

இவர்கள் எல்லோருமே 'சிஎஸ்கே பிராண்ட் ஆஃப் கிரிக்கெட்டர்ஸ்' என்று கருதப்பட்டவர்கள். தடாலடி அதிரடி பேட்டர்களை விட கொஞ்சம் நிதானம், கொஞ்சம் அதிரடி என்று ஆடும் இவ்வகை பேட்டர்களையே சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகம் நம்பியிருந்தது. ஆனால், இவர்கள் கடந்த சீசன் சொதப்பியதும், மற்ற அணிகள் அதிரடி வீரர்களை வைத்து அடுத்த தளத்தை நோக்கிப் பயணித்ததும் சிஎஸ்கேவின் மாறாத அணுகுமுறை மீது கேள்வியெழுப்பியது.

சிஎஸ்கே - ஐபிஎல் - ரிடன்ஷன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆண்டு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட பிரெவிஸ் இப்போது முக்கிய வீரராக உருவெடுத்திருக்கிறார்

அதுமட்டுமல்லாமல், சீசனின் இறுதி கட்டத்தில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர்களே பழைய அணுகுமுறையிலிருந்து மாறி புதிய பாதையை நோக்கிப் பயணிப்பதற்கான உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார்கள் என்கிறார் நானீ.

"கடந்த சீசன் இறுதியில் மாற்று வீரர்களாக வந்த இளம் பேட்டர்களான மாத்ரே, ஊர்வில், பிரெவிஸ் ஆகியோர் தங்கள் அநாயச அதிரடி ஆட்டத்தால் போட்டிகளின் போக்கையே மாற்றினார்கள். அவர்கள் புதிய அணுகுமுறையின் தேவையை உணர்த்தியிருக்கிறார்கள். அதுதான் இந்த மாற்றத்துக்கான காரணம்" என்று கூறிய அவர், இந்த இளம் வீரர்களோடு சஞ்சு சாம்சன் இணைவது சூப்பர் கிங்ஸின் பேட்டிங்கை நன்கு பலப்படுத்தியிருக்கிறது என்கிறார்.

இப்போது தக்க வைத்திருக்கும் பேட்டர்களைப் பார்க்கும்போது, மாத்ரே, சாம்சன், ருதுராஜ், துபே, பிரெவிஸ் என சூப்பர் கிங்ஸின் டாப் 5 முழுமையாக இருக்கிறது. கேப்டன் ருதுராஜை சுற்றி, முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டும் வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். அதனால் புதியதொரு பேட்டிங் அணுகுமுறையை சிஎஸ்கேவிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

பந்துவீச்சு: நிறைய கேள்விகள் இருக்கின்றன

இங்குதான் சென்னை சூப்பர் கிங்ஸ் மீது நிறைய கேள்விகள் எழுகின்றன. முக்கியமாக ஜடேஜாவை டிரேட் செய்துவிட்டு இன்னொரு முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பதிரானாவையும் விடுவித்தது இரண்டு பெரிய ஓட்டைகளை ஏற்படுத்திவிட்டது. மெகா ஏலத்துக்கு முன்னதாக 13 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டிருந்தார் பதிரானா. சூப்பர் கிங்ஸின் எதிர்காலமாகப் பார்க்கப்பட்ட அவர், அதற்குள் விடுவிக்கப்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

அவரது பந்துவீச்சு முறை மாறியது, அவரது செயல்பாட்டில் தாக்கம் ஏற்படுத்தியது. அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் நானீ.

"பதிரானாவின் பௌலிங் ஆக்‌ஷன் மாறிவிட்டது. இப்போது அவர் இலங்கை அணியில் கூட அதிகம் ஆடுவதில்லை. தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவில் நடந்த லீக்குகளிலும் அவர் சோபிக்கவில்லை. அதனால் இந்த முடிவை புரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாமல் 13 கோடி ரூபாய் என்ற தொகையும் இந்த முடிவுக்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம். இப்போது வெளியே விட்டுவிட்டு, ஏலத்தில் குறைந்த தொகைக்கு எடுக்க நினைத்திருப்பார்கள். நிச்சயம் அவரை சென்னை அணி எடுக்கும் என்றே நான் நம்புகிறேன்" என்றும் அவர் கூறினார்.

இன்னொருபக்கம் எல்லிஸ் சமீபமாக சிறப்பாக செயல்படுவதால், அவர் பிரதான வேகப்பந்துவீச்சாளராக கருதப்படுவார் என்று கூறப்படுகிறது. ஆனாலும், பதிரானாவை சிஎஸ்கே மீண்டும் எடுக்கக் கூடும் என்று நானீ நம்புகிறார்.

சிஎஸ்கே - ஐபிஎல் - ரிடன்ஷன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜடேஜா, அஷ்வின் இருவருமே இல்லாததால் சூப்பர் கிங்ஸின் சுழற்பந்துவீச்சு சற்று பலவீனமடைந்துள்ளது

"கடந்த 2 ஆண்டுகளாக சேப்பாக்கம் முன்பு போல் சுழலுக்கு சாதகமான ஆடுகளமாக இருக்கவில்லை. அதனால் வேகப்பந்துவீச்சுக்கு உகந்த ஆடுகளங்களை அமைத்து, அதற்கு ஏற்ப அணியை கட்டமைப்பது சாதகமான விஷயமாக இருக்கும். அது சாம்சன் போன்ற சிஎஸ்கே பேட்டர்களுக்குமே கூட உகந்ததாக இருக்கும். அப்படி செய்தால் இரண்டாவது வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரும் தேவை" என்கிறார் அவர்.

சேப்பாக்கத்தின் தன்மை குறித்தும், அதைச் சார்ந்த சூப்பர் கிங்ஸ் கட்டமைப்பு குறித்தும் கடந்த சீசனில் அதிகம் விவாதிக்கப்பட்டது.

சிஎஸ்கே அணிக்கு சுழல் தான் வெகுகாலம் அடையாளமாக இருந்தது. அதற்கு ஏற்ப கடந்த மெகா ஏலத்தில் ஒரு பெரும் சுழல் கூட்டணியை அவர்கள் உருவாக்கினார்கள். ஏற்கெனவே ஜடேஜாவை ரீடெய்ன் செய்திருந்தவர்கள், நூர் அஹமது மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வினை வாங்கினார்கள். ஆனால், நூர் அஹமது தவிர்த்து மற்ற இருவராலும் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை.

அதுமட்டுமல்லாமல் தோனியைப் போல் ருதுராஜ் கெய்க்வாட் சுழலை பெருமளவு பயன்படுத்தவும் யோசிக்கிறார். 2024 சீசனில் சேப்பாக்கத்தில் ஒருசில போட்டிகளில் 17-18 ஓவர்கள் வரை வேகப்பந்துவீச்சாளர்களையே அவர் பயன்படுத்தினார். இப்போது அவரே அணியின் கேப்டன் என்று சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில், நானீ சொல்வதைப் போல் மாற்றம் நடக்கக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அஷ்வின் ஓய்வு பெற்றுவிட, ஜடேஜாவும் டிரேட் செய்யப்பட்டுவிட நூர் அஹமது மட்டுமே அணியின் முன்னணி ஸ்பின்னராக இருக்கிறார். இவர்போக, ஷ்ரேயாஸ் கோபால் மட்டுமே இப்போது தக்கவைக்கப்பட்டிருக்கும் ஒரே ஸ்பின்னர். அவர் கடந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட பயன்படுத்தப்படவில்லை.

இந்த மினி ஏலத்தில் ராகுல் சஹார், ரவி பிஷ்னாய் போன்ற வெகுசில அனுபவ ஸ்பின்னர்களே இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவரை வாங்கினாலும், அதிகபட்சம் 2 பிரதான ஸ்பின்னர்களோடு மட்டுமே சிஎஸ்கே களமிறங்கக்கூடும்.

இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே கேமரூன் கிரீனை வாங்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நடந்தால் அது ஹிட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சை பலப்படுத்தும். பேட்டிங் அணுகுமுறையில் இன்னும் நேர்மறை எண்ணத்தை வலுப்படுத்தும்.

அதேசமயம் அவருக்குப்பதில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களான மேக்ஸ்வெல், கூப்பர் கானொலி, லியாம் லிவிங்ஸ்டன் போன்ற யாரையேனும் வாங்கும் பட்சத்தில் அது சுழற்பந்துவீச்சை ஓரளவு பலப்படுத்தலாம்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை அறியப்பட்ட அணுகுமுறையில் இருந்து மாறி வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதை இந்த ரிடன்ஷன் பட்டியல் உணர்த்துகிறது. டிசம்பர் 16-ஆம் தேதி நடக்கும் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி அதிரடியாக சில வீரர்களை வாங்கக்கூடும். அதற்கான பெரும் தொகை அவர்களிடம் இருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgyqpk15pwo

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிஎஸ்கே-வில் ஜடேஜாவின் இடத்தை நிரப்பப் போவது யார்? - வீரர்கள் ஏலம் மீதான எதிர்பார்ப்புகள்

ஐபிஎல் 2026 ஏலம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியன் பிரீமியர் லீக் 2026 தொடருக்கான ஏலம் வரும் செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 16) அபுதாபியில் நடக்க உள்ளது.

இந்த ஏலத்துக்கான பட்டியலில் 359 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்களில் 244 பேர் இந்திய வீரர்கள், 115 பேர் வெளிநாட்டு வீரர்கள். அதிகபட்சம் மொத்தம் 77 இடங்கள் நிரப்பப்படலாம்.

இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த இடங்களை நிரப்ப வேண்டும், எந்த வீரர்களை வாங்கக்கூடும் என்று பார்ப்போம்.

சூப்பர் கிங்ஸிடம் என்ன இருக்கிறது?

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த சீசனில் கடைசி இடத்தையே பிடித்தது. அதனால், பல வீரர்களை அந்த அணி இம்முறை விடுவித்தது. தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வு பெற்றுவிட, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் டிரேட் செய்து சஞ்சு சாம்சனை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே.

இப்போது சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ்.தோனி, சஞ்சு சாம்சன், டெவால் பிரீவிஸ், ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல், ராம்கிருஷ்ணா கோஷ், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், நூர் அஹமது, கலீல் அஹமது, நாதன் எல்லிஸ், குர்ஜப்னீத் சிங், முகேஷ் சௌத்ரி, ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

மொத்தம் 16 வீரர்கள் தக்கவைக்கப்பட்டு இருப்பதால், அந்த அணி இன்னும் அதிகபட்சமாக 9 பேரை வாங்கலாம். அதில் 4 வெளிநாட்டு வீரர்களை வாங்கலாம். இந்த ஏலத்தில் சூப்பர் கிங்ஸ் அணிக்கு 43.40 கோடி ரூபாய் மீதமிருக்கிறது.

கேமரூன் கிரீனை வாங்க வேண்டுமா?

ஐபிஎல் 2026 ஏலம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியிருக்கிறார் கேமரூன் கிரீன்

இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மீதுதான் கிரிக்கெட் வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. காயம் காரணமாக கடந்த மெகா ஏலத்தில் பங்கேற்காத அவர், இந்த ஏலத்தின் முதல் செட்டில் (பேட்டர்கள்) இடம்பெற்றுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (64.30 கோடி ரூபாய்), சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளிடமுமே அதிக தொகை இருப்பதால், இவ்விரு அணிகளும் கிரீனுக்காக கடுமையாகப் போட்டியிட வாய்ப்பு உள்ளது. முந்தைய ஐபிஎல் ஏல சாதனைகள் முறியடிக்கப்படலாம் என்றும், 30 கோடி ரூபாயைக்கூட தாண்டலாம் என்றும் பேசப்படுகிறது.

அதேநேரம், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு கேமரூன் கிரீன் அவசியம் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது.

"கேமரூன் கிரீனை வாங்கினால் சூப்பர் கிங்ஸின் மிடில் ஆர்டர் நன்கு பலமடையும். கிரீன், பிரீவிஸ், துபே ஆகியோர் அடங்கிய மிடில் ஆர்டர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்கிறார் முன்னாள் சிஎஸ்கே வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன். அவர் நான்காவது வீரராக விளையாட நன்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறும் அவர், தேவைப்பட்டால் ஓப்பனராகவும் கிரீனால் விளையாட முடியும் என்கிறார்.

மறுபுறம் கிரீனை முதன்மையான இலக்காக வைக்க வேண்டாம் என்கிறார் கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீ.

"நைட் ரைடர்ஸுக்கு நிச்சயம் கிரீன் தேவை. அவர்களின் கையில் பெரிய தொகை இருப்பதால், அதைக் குறைப்பதற்காக சிஎஸ்கே கிரீனுக்கு ஏலம் கேட்க வேண்டும். ஆனால், ஓர் அளவு வரை ஏலம் கேட்டுவிட்டு விட்டுவிட வேண்டும். ஏனெனில், சிஎஸ்கே வேறு சில இடங்களை நிரப்ப வேண்டிய தேவை இருக்கிறது" என்கிறார் அவர்.

கிரீனுக்கு பதில் வேறொரு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்

கேமரூன் கிரீன் வேண்டாம் என்று சொல்லும் நானீ, இன்னொரு ஆஸ்திரேலிய வீரரை சூப்பர் கிங்ஸ் குறிவைக்க வேண்டும் என்கிறார். அதற்குக் காரணமாக அவர் சொல்வது, ரவீந்திர ஜடேஜாவால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம்.

"ரவீந்திர ஜடேஜா இல்லாதது மிகப்பெரிய வெற்றிடம். அதை நிரப்ப இரண்டு வீரர்களே தேவைப்படும். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய ஒரு வீரர் வேண்டும். கிரீன் அப்படிப்பட்ட வீரர்தான் என்றாலும், சுழற்பந்துவீச்சு சிஎஸ்கே-வுக்கு மிகவும் அவசியம்" என்கிறார் நானீ.

தற்போது சூப்பர் கிங்ஸ் அணியில் நூர் அஹமது, ஷ்ரேயாஸ் கோபால் என இரண்டு ஸ்பின்னர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அஷ்வின், ஜடேஜா என பிளேயிங் லெவனில் ஆடக்கூடிய இரண்டு பெரிய வீரர்களை சிஎஸ்கே இழந்திருப்பதால், அதுதான் அந்த அணியின் பிரதான இலக்காக இருக்க வேண்டும் என்கிறார் நானீ. அதனால்தான் கிரீனுக்கு பதிலாக மற்றொரு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான கூப்பர் கானலியை சிஎஸ்கே வாங்க வேண்டும் என்கிறார்.

ஐபிஎல் 2026 ஏலம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜடேஜாவின் இடத்தை கூப்பர் கானலியை வைத்து நிரப்ப வேண்டும் என்கிறார் வர்ணனையாளர் நானீ

"கூப்பர் கானலி பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. ஆனால், அவர் சூப்பர் கிங்ஸுக்கு பொருத்தமான வீரராக இருப்பார். இடது கை மிடில் ஆர்டர் பேட்டிங், இடது கை ஸ்பின் என ஜடேஜாவின் இடத்தை அவரால் அப்படியே நிரப்ப முடியும். அவர் எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு மைக்கேல் பெவன் போலச் செயல்படுவார். சிறப்பாக ஆட்டத்தை முடித்துக் கொடுக்கக் கூடியவராக வருவார்.

மிகவும் நிதானமான மனோபாவம் கொண்டவராக இருக்கிறார். நல்ல இடது கை ஸ்பின்னர். அற்புதமான ஃபீல்டரும்கூட. இதே வயதில் ஜடேஜா எப்படி இருந்தாரோ, அதைவிடத் திறமைசாலியாக இப்போது கானலி இருக்கிறார்" என்று கூறினார் நானீ.

ஆஸ்திரேலியாவுக்காக அனைத்து ஃபார்மட்களிலும் விளையாடிவிட்டார் 22 வயதான கானலி. 2022 அண்டர் 19 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் அவர் செயல்பட்டிருந்தார்.

கிரீனை வாங்காமல் கானலியை வாங்குவதன் மூலம் பெரும் தொகையைச் சேமிக்க முடியும் என்றும், அதன்மூலம் இந்திய ஸ்பின்னர், வெளிநாட்டு ஃபினிஷர், வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் ஆகிய இடங்களில் முதலீடு செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

அதோடு, "வெங்கடேஷ் ஐயர் கடந்த ஆண்டைப் போல மிகப்பெரிய தொகைக்குப் போக மாட்டார் என்று நினைக்கிறேன். அதனால், சிஎஸ்கே அவரை வாங்கலாம். அவர் சுமார் 6 கோடி ரூபாய்க்கு ஏலம் போகலாம்" என்று கணிக்கிறார் நானீ.

வெளிநாட்டு ஃபினிஷர் யார்?

ஐபிஎல் 2026 ஏலம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,டேவிட் மில்லரை லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ரிலீஸ் செய்திருக்கிறது

ஒருவேளை பிளேயிங் லெவனில் இன்னும் அனுபவமிக்க வெளிநாட்டு ஃபினிஷர் வேண்டுமென்று சூப்பர் கிங்ஸ் நினைத்தால், லியாம் லிவிங்ஸ்டனை வாங்கலாம் என்று சொல்கிறார் நானீ. அவராலும் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடத்தை நிரப்ப முடியும் என்கிறார் அவர்.

கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியோடு ஐபிஎல் சாம்பியன் ஆகியிருந்த லியாம் லிவிங்ஸ்டன் அந்த அணியால் ரிலீஸ் செய்யப்பட்டார். அவருக்கும் இந்த ஏலத்தில் பல அணிகள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"ஒரேயொரு பிரச்னை என்னவெனில், அந்த நாளில் எப்படிப்பட்ட லிவிங்ஸ்டன் களம் காண்பார் என்பதைத்தான் சொல்ல முடியாது. கணிக்க முடியாத வீரர் அவர்" என்கிறார் நானீ.

அதேநேரம் டேவிட் மில்லர் சிஎஸ்கே அணிக்குப் பொருத்தமான வீரராக இருப்பார் என்கிறார் வித்யுத் சிவராமகிருஷ்ணன்.

"ஃபினிஷிங் ரோல் செய்வதற்கு டேவிட் மில்லர் பொருத்தமான வீரராக இருப்பார். நல்ல அனுபவம் கொண்டவர். துபே பந்துவீச்சில் தற்போது நல்ல முன்னேற்றம் கொண்டிருப்பதால், ஆல்ரவுண்டரைத்தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த ஓரிரு ஓவர்களை துபேவால் நிரப்ப முடியும்" என்கிறார் அவர்.

லக்னௌ அணியால் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கும் டேவிட் மில்லர் ஐபிஎல் அரங்கில் மூவாயிரம் ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். 2022 ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய அங்கமாக விளங்கினார் அவர். சாம்சன், மாத்ரே, கெய்க்வாட், பிரீவிஸ் என வலது கை பேட்டர்கள் நிறைந்த சிஎஸ்கே பேட்டிங் ஆர்டரில் இடது கை பேட்டர் ஒருவர் இணைவது அணிக்குக் கூடுதல் பலமாக அமையும்.

எந்த இந்திய சுழற்பந்துவீச்சாளர்?

ஐபிஎல் 2026 ஏலம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2025 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார் விக்னேஷ் புத்தூர்

ராகுல் சஹர், ரவி பிஷ்னாய் என இந்தியாவின் இரண்டு முன்னணி ஸ்பின்னர்கள் இந்த ஏலத்தில் இடம் பெற்றிருப்பதால், அவர்களுள் ஒருவரை சிஎஸ்கே வாங்க முயலக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"பிஷ்னாய், சஹர் இருவரில் ஒருவரை வாங்குவதென்றால், சஹரை வாங்குவது நல்லது. ஏனெனில், பிஷ்னாய் கிட்டத்தட்ட ஒரு மிதவேகப்பந்துவீச்சாளர் போலத்தான். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரே மாதிரி கூக்ளியாக வீசுவார். அது சேப்பாக்காத்திற்கு ஒத்து வராது" என்று சொல்லும் நானீ, 'ஃபிங்கர் ஸ்பின்னர்' தான் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்று கூறினார்.

அப்படியான அனுபவ இந்திய பௌலர்கள் ஏலத்தில் இல்லாததும் கானலியின் அவசியத்தை உணர்த்துவதாகக் கூறுகிறார் அவர்.

"ஒருவேளை விக்னேஷ் புத்தூர் கிடைத்தால் அவரைக்கூட வாங்கலாம். சென்னைக்கு ஏற்ற வீரராக இருப்பார்" என்றார் நானீ. ஏற்கெனவே இன்னொரு இடது கை ரிஸ்ட் ஸ்பின்னரான நூர் அஹமது இருக்கிறாரே என்று கேட்டதற்கு, "அக்‌ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா இருவருமே இந்திய அணிக்கு ஆடுகிறார்கள் அல்லவா, அதுபோலத்தான். நல்ல தாக்கம் ஏற்படுத்தக் கூடிய ஒரே மாதிரியான திறமையுள்ள வீரர்கள் ஆடுவதில் தவறேதும் இல்லை" என்கிறார்.

கூடுதலாக, வெஸ்ட் இண்டீஸின் அகீல் ஹொசைன்கூட சூப்பர் கிங்ஸுக்கு ஏற்ற வீரராக இருப்பார் என்கிறார் வித்யுத்.

பதிரணாவா வேறு வேகப்பந்துவீச்சாளரா?

ஐபிஎல் 2026 ஏலம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2025 மெகா ஏலத்துக்கு முன்பாக ரீடெய்ன் செய்த பதிரணாவை தற்போது ரிலீஸ் செய்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்

வேகப்பந்துவீச்சாளர் பதிரணாவை சூப்பர் கிங்ஸ் ரிலீஸ் செய்திருந்த நிலையில், அவரை சூப்பர் கிங்ஸ் மீண்டும் இந்த ஏலத்தில் வாங்குவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலவு செய்து அவரை வாங்க வேண்டியதில்லை என்பதே அவர்கள் இருவரின் கருத்தாகவும் இருக்கிறது.

முஸ்தஃபிசுர் ரஹ்மான், ஃபசல்ஹக் ஃபரூக்கி, லுங்கி எங்கிடி போன்ற 'பேஸ் ஆஃப் தி விக்கெட்' போடும் பௌலர்களை வாங்கலாம் என்று கூறும் நானீ, ஜேசன் ஹோல்டர்கூட நல்ல தேர்வாக இருப்பார் என்கிறார்.

"முன்பெல்லாம் இல்லாததுபோல் ஹோல்டர் தற்போது பேட்டிங், பௌலிங் இரண்டிலும் முன்னேற்றம் கண்டுள்ளார். நன்கு பௌன்சர்களையும், யார்க்கர்களையும் பயன்படுத்துகிறார். நன்கு சிக்ஸர்களும் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்" என்கிறார் அவர்.

வித்யுத்தோ, ஜம்மு காஷ்மிரை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஆகிப் நபியை வாங்கலாம் என்கிறார்.

"ஆகிப் நவி நல்ல ஃபார்மில் இருக்கிறார். பவர்பிளேவில் பந்தை நன்கு நகர்த்தக் கூடியவர். அதேபோல டெத் ஓவர்களில் யார்க்கர்களையும் சிறப்பாக வீசுவார். அவர் சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை பலமாக்குவார்" என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czxg3ng9q7yo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் மினி ஏலத்தில் 'டிமாண்ட்' அதிகம் உள்ள 5 வீரர்கள் இவர்களா?

ஐபிஎல் 2026 ஏலம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கேமரூன் கிரீன்

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐபிஎல் தொடருக்கான (2026) மினி ஏலம் நாளை (டிசம்பர் 16) நடக்கிறது. அபு தாபியில் நடக்கும் இந்த ஏலத்துக்கான பட்டியலில் 359 வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இதில் 244 இந்திய வீரர்கள் மற்றும் 115 வெளிநாட்டு வீரர்கள்.

அணிகளைப் பொறுத்தவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அதிகபட்சமாக 13 காலியிடங்கள் இருக்கின்றன. அதேபோல் அந்த அணிதான் அதிகபட்ச தொகையோடு (ரூ 64.3 கோடி) ஏலத்துக்குள் நுழையப்போகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் 9 இடங்கள் மீதமிருக்கின்றன. அவர்களுக்கு 43.4 கோடி ரூபாய் மீதமிருக்கிறது. மும்பை இந்தியன்ஸுக்கோ 2.75 கோடி ரூபாய் மட்டுமே மீதமிருக்கிறது.

இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிக அணிகளின் கவனத்தை ஈர்க்கப்போகும், அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தப்போகும் ஐந்து வீரர்கள் யார்?

முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன், வர்ணனையாளர் நானி, பத்திரிகையாளரும் வர்ணனையாளருமான பகவதி பிரசாத் மூவரும் பிபிசி தமிழுக்கு அவர்களின் கருத்துகளைத் தெரிவித்தார்கள். அவர்கள் பட்டியலில் பொதுவாக இருந்த 5 வீரர்களின் பட்டியல் இது. அதற்காக அவர்கள் கொடுத்த காரணங்கள் என்ன?

1. கேமரூன் கிரீன்

ஐபிஎல் 2026 ஏலம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கேமரூன் கிரீன்

இந்த ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது கேமரூன் கிரீன். எந்த இடத்திலும் களமிறங்கக்கூடிய அதிரடி பேட்டர், வேகப்பந்துவீச்சாளர் மற்றும் நல்ல ஃபீல்டர் என்பதால் அவரை வாங்க எந்த அணியுமே ஆசைப்படும்.

தனது மேலாளர் செய்த தவறால் ஏலத்தில் தான் பேட்டராக பதிவு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறிய கிரீன், தான் பந்துவீசத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

அதேசமயம், "கிரீன் பேட்டராகப் பதிவு செய்யப்பட்டிருப்பது அவர் பெரிய தொகைக்குப் போவதற்கு உதவும். ஏனெனில், அவர் பெயர் முதல் செட்டிலேயே இடம்பெற்றிருக்கிறது. அதனால், கொல்கத்தா, சென்னை போன்ற அணிகள் தங்களின் தொகையை செலவு செய்வதற்கு முன்பே இவர் பெயர் வந்துவிடும் என்பதால், நிச்சயம் இரு அணிகளுக்கும் இடையே ஏலத்தின்போது இவரை வாங்க கடும் போட்டி இருக்கும்" என்கிறார் பகவதி பிரசாத்.

இந்த அணிகள் போக சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய அணிகள் ஓரளவு கிரீனுக்காக முயற்சி செய்யலாம்.

ஆனால், சென்னை, கொல்கத்தா போல் இவர்களால் அந்த ஒற்றை வீரர் மீது பெரும் முதலீடு செய்யமுடியாது என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு வேறு சில தேவைகள் இருப்பதாகவும் சொல்லும் நானி, கொல்கத்தாவை நிறைய செலவளிக்க வைப்பதற்காக சென்னை இவரை வாங்க ஏலம் கூறலாம் என்கிறார்.

ஆண்ட்ரே ரஸல் போன்ற ஒரு வீரரின் இடத்தை நிரப்பவேண்டும் என்ற கட்டாயம் கொல்கத்தாவுக்கு இருப்பதால், அவர்கள் கிரீனை வாங்கவேண்டும் என்று காத்திருப்பார்கள் என்கிறார் அவர்.

ஐபிஎல் 2026 ஏலம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,லியாம் லிவிங்ஸ்டன்

2. லியாம் லிவிங்ஸ்டன்

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மற்றொரு வெளிநாட்டு வீரர் லியாம் லிவிங்ஸ்டன். கடந்த மெகா ஏலத்தில் அவரை பெங்களூரு வாங்கியிருந்தது. ஆனால், பின்னர் அவரை ரிலீஸ் செய்துவிட்டார்கள். அதனால் பல அணிகளும் தற்போது இவரை வாங்க நினைப்பார்கள்.

"ஒரு நல்ல மிடில் ஆர்டர் அதிரடி பேட்டர், லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் இரண்டுமே வீசக்கூடியவர் என்பதால் இவருக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் வித்யுத்.

சென்னை, கொல்கத்தா,ஹைதராபாத், டெல்லி போன்ற அணிகள் இவரைக் குறிவைக்கலாம். தங்கள் நம்பர் 4 இடத்தை பலப்படுத்தவேண்டும் என்று நினைத்தால் குஜராத் டைட்டன்ஸும் இவரை வாங்க நினைக்கலாம்.

ஃபினிஷராகப் பயன்படுத்த முடியும் என்பதால் எல்லா அணிகளுமே லிவிங்ஸ்டனை வாங்க நினைப்பார்கள் என்பது வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

"அவர் இதுவரை ஐபிஎல் அரங்கில் பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஆனால், மிகச் சிறந்த திறமைசாலி. ஆட்டத்தை மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர்'' என்கிறார் நானி.

3. வெங்கடேஷ் ஐயர்

ஐபிஎல் 2026 ஏலம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வெங்கடேஷ் ஐயர்

மெகா ஏலத்தில் 23.75 கோடி ரூபாய்க்கு வாங்கிய வெங்கடேஷ் ஐயரை, இப்போது ரிலீஸ் செய்திருக்கிறது கொல்கத்தா.

"அவரால் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் என எங்குமே விளையாட முடியும். எந்த இடத்திலும் விளையாடக்கூடிய ஒரு இந்திய வீரரை எல்லா அணிகளுக்குமே பிடிக்கும். என்ன, அவர்கள் அவரை எப்படிப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஏலத்தில் அவருக்காக போட்டியிடுவார்கள்" என்று கூறினார் பகவதி பிரசாத்.

"கடந்த முறைபோல் அல்லாமல் அவர் 8-10 கோடி ரூபாய்க்குள் ஏலம் போனால் நல்லது" என்கிறார் நானி.

"போன முறை அந்தப் பெரிய தொகையே அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. இம்முறை குறைவான தொகைக்கு ஏலம் போவது, அவரது செயல்பாட்டுக்கு நல்லது" என்று அவர் கூறினார்.

இவருக்கும் சென்னை vs கொல்கத்தா இடையே போட்டி நிலவலாம். அதேசமயம், லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு போன்ற அணிகளுமே இவரை வாங்க முயற்சி செய்யலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

4. மதீஷா பதிரனா

ஐபிஎல் 2026 ஏலம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மதீஷா பதிரனா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீண்ட காலம் பயணிப்பார் என கருதப்பட்டவரை அந்த அணி வெளியே விட்டது ஆச்சர்யமாகக் கருதப்பட்டது.

கடந்த மெகா ஏலத்துக்கு முன்னதாக அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்திருந்தது.

"பதிரனா தற்போது அவரது பௌலிங் ஆக்‌ஷனை மாற்றியதால் அவரது செயல்பாட்டில் சரிவு ஏற்பட்டுவிட்டது. அதனால் முன்பு ஏற்படுத்திய தாக்கத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை" என்று கூறினார் பகவதி பிரசாத். இருந்தாலும் 'எக்ஸ் ஃபேக்டர்' என்று கருதப்படும் ஒரு வீரரை வாங்க நிச்சயம் அணிகள் ஆர்வம் காட்டுவார்கள் என்றும் அவர் கூறினார்.

கிட்டத்தட்ட எல்லா அணிகளுக்குமே வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரின் தேவை இருக்கிறது என்பதால் பதிரானாவுக்கு கொஞ்சம் போட்டி இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

5. ஜேசன் ஹோல்டர்

ஐபிஎல் 2026 ஏலம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜேசன் ஹோல்டர்

"இம்முறை ஹோல்டர் சிறந்த ஃபார்மில் இருப்பதால், முன்பை விட அவருக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கலாம்" என்கிறார் பகவதி பிரசாத்.

எப்போதுமே வெளிநாட்டு ஆல்ரவுண்டர்களுக்கான தேவை ஐபிஎல் ஏலத்தில் அதிகமாக இருக்கும். ஹோல்டர் இதுவரை பல அணிகளுக்கு விளையாடியிருந்தாலும், பெரிய தாக்கம் ஏற்படுத்தியதில்லை. ஆனால், இம்முறை அவரது ஃபார்ம், அவர் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும் என்கிறார் அவர்.

"முன்பெல்லாம் இல்லாததுபோல் ஹோல்டர் தற்போது பேட்டிங், பௌலிங் இரண்டிலும் முன்னேற்றம் கண்டுள்ளார். நன்கு பௌன்சர்களையும், யார்க்கர்களையும் பயன்படுத்துகிறார். நன்கு சிக்ஸர்களும் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்" என்று நானியும் சொல்கிறார். கிட்டத்தட்ட எல்லா அணிகளுமே அவருக்கு போட்டியிடக்கூடும் என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clydx2q9q0do

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.