Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 1

24 Nov, 2025 | 02:25 PM

image

இந்தியா, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (24) இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மதுரையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற தனியார் பஸ் ஒன்றும், தென்காசியிலிருந்து கோவில்பட்டிக்குச் சென்ற மற்றொரு பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் இரண்டு பஸ்களும் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த 28 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/231279

  • கருத்துக்கள உறவுகள்
  1. அரசுப் பேருந்துகளின் நெருக்குதலே தனியார் பேருந்துகளின் வேகம் .தனியார் பேருந்துக்கு முன்னும் பின்னும் இரண்டு நிமிட இடைவெளியில் அரசுப் பேருந்துகளை இயக்கி நெருக்கடி கொடுப்பதுதான் காரணம்

  2. கவன சிதைவுக்கு காரணம் அனைத்து பேருந்துகளிலும் பாட்டு கேட்க தடை செய்ய வேண்டும் பயணிகளிடம் பாட்டு கேட்பதற்கான செல்போன்கள் உள்ளன.

  3. குறிப்பிட்ட ஊரை சொல்லி டிக்கெட் ஏறிய பின்பும் கத்தி, பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே செல்லவே அரைமணி நேரம் ஆக்கி விடுவார்கள்,சில பஸ்கள் 60 நிமிடம் கூட எடுத்துக்கொள்ளும். நகருக்குள் தேவையில்லாமல் விட்ட நேரத்தை பிடிக்கிறேன் என நெடுஞ்சாலைகளில் மிக வேகமாக வண்டி ஓட்டுவது.

  4. குறிப்பாக பெண் பயணிகள். அரசு பஸ்க்கு முன்னால் சீக்கிரம் போவீர்களா என்று கேட்டுத்தான் ஏறுகிறார்கள். பெண் பயணிகள் ஓட்டுநர் அருகே உட்கார்ந்து அவர்களை உசுப்பேற்றுகிறார்கள்.பெண் பயணிகளை பஸ்சின் பின் பகுதியில் அமரவைத்தாலே பாதி விபத்து குறையும்.

  5. வருவாய் அதிகம் எதிர்பார்க்கும் உரிமையாளர் வருவாய் குறைந்தால் ஓட்டுநர் நடத்துனரின் வேலை பறிபோகும் என்ற அவல நிலையும் காரணம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்காசி விபத்து: 7 பேர் பலிக்கு தனியார் பேருந்துகளின் அதிவேகம் தான் காரணமா?

தென்காசி, சாலை விபத்து, தனியார் பேருந்துகள், சட்டம்

படக்குறிப்பு, தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களில் கீர்த்திகாவின் (நடுவே இருப்பவர்) தாய் மல்லிகாவும் ஒருவர்.

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

(இந்த கட்டுரையில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)

''எனக்கு 5 வயதாக இருக்கும்போதே எனது தந்தை இறந்துவிட்டார். அதற்கு பிறகு என் அம்மாதான் பீடி சுற்றும் வேலை பார்த்து என்னை எம்.ஏ. பி.எட். படிக்க வைத்தார். ஆனால் அவரும் இந்த விபத்தில் இறந்துவிட்டார். இப்போது நான் இருவரையும் இழந்து நிற்கிறேன். ''

பார்வையற்ற மாற்றுத்திறனாளியான கீர்த்திகாவின் வார்த்தைகள் இவை.

தென்காசி அருகே கடந்த நவம்பர் 24 ஆம் தேதியன்று 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களில் கீர்த்திகாவின் தாய் மல்லிகாவும் ஒருவர்.

மல்லிகா உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த இந்த விபத்துக்கு, தனியார் பேருந்துகளின் அதிவேகமும், இரு மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாக இருப்பதும் காரணமென்று பேருந்தில் பயணம் செய்து தப்பியவர்கள், நேரில் பார்த்தவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.

விபத்து நடந்த தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்வதற்கு விரைவில் டெண்டர் விடப்பட வாய்ப்புள்ளதாகவும், தனியார் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லுார் அருகில் கடந்த நவம்பர் 24ஆம் தேதியன்று காலை 11 மணியளவில் 2 தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 6 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

தென்காசியிலிருந்து கோவில்பட்டிக்குச் சென்ற தனியார் பேருந்தும், சங்கரன்கோவிலில் இருந்து தென்காசிக்குச் சென்ற தனியார் பேருந்தும் இடைக்கால் என்ற ஊருக்கு முன்பாக உள்ள துரைசாமிபுரம் என்ற இடத்தில் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் 2 பேருந்துகளின் ஓட்டுநர்களும் காயங்களுடன் உயிர்தப்பினர். எலத்துார் காவல் நிலையத்தில் பதிவான வழக்கின்படி, விபத்தில் 96 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் தாயை இழந்து நிற்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி

தென்காசி, சாலை விபத்து, தனியார் பேருந்துகள், சட்டம்

படக்குறிப்பு,மல்லிகா உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த இந்த விபத்துக்கு, தனியார் பேருந்துகளின் அசுர வேகமும் ஒரு காரணம் என பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த விபத்து நடந்த இடத்திலும், மருத்துவமனையிலும் பிபிசி தமிழ் களஆய்வு செய்து, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், உயிர் தப்பியவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் பலரையும் நேரில் சந்தித்துப் பேசியது.

இறந்துபோன 7 பேரில் புளியங்குடி ரோட்டரி கிளப் வீதியைச் சேர்ந்த மல்லிகாவும் ஒருவர். உறவினர் ஒருவரின் மரண நிகழ்வுக்கு சென்றபோது இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மல்லிகாவின் கணவர் முத்துராமன், 25 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். மல்லிகாதான் தன்னுடைய ஒரு மகன் மற்றும் இரு மகள்களை படிக்க வைத்துள்ளார். இவர்களில் மூன்றாவது மகள் கீர்த்திகா (வயது 33) பார்வையற்ற மாற்றுத்திறனாளி.

கீர்த்திகாவின் நிலை குறித்து அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், கீர்த்திகாவிடம் பேசி ஆறுதல் கூறியுள்ளார். அவருக்கு புளியங்குடி நகராட்சியில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணி நியமன ஆணை வழங்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கீர்த்திகாவின் இல்லத்திற்கு வந்து இதற்கான ஆணையை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார்.

பிபிசி தமிழிடம் பேசிய கீர்த்திகா, ''என் 5 வயதிலேயே அப்பா இறந்துவிட்டதால் எனக்கு எல்லாமே அம்மாதான். அவர்தான் பீடி சுற்றி என்னை எம்.ஏ. பி.எட் படிக்க வைத்தார். விபத்து நடந்த அன்று காலையில் சீக்கிரமே வந்துவிடுவதாக சொல்லிவிட்டுத்தான் சென்றார். பேருந்து மெதுவாகச் சென்றிருந்தால் என் அம்மாவுக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது.'' என்றார்.

தென்காசி, சாலை விபத்து, தனியார் பேருந்துகள், சட்டம்

படக்குறிப்பு,கீர்த்திகாவின் இல்லத்திற்கு நேரில் வந்து பணி நியமன ஆணையை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார்.

''நான் எம்.ஏ. பி.எட் முடித்து ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்கிறேன். என்னை ஆசிரியராக்க வேண்டுமென்பது என் தாயின் ஆசை. எனக்கும் அதுதான் விருப்பம். எனவே எனக்கு ஆசிரியர் பணி வழங்கினால் பேருதவியாக இருக்கும்.'' என்றார் கீர்த்திகா.

கேரளாவைச் சேர்ந்த சுரேஷ், தன் மனைவி முத்துலட்சுமி, 2 சகோதரிகளுடன் உறவினர் ஒருவரின் மரணத்துக்காக தமிழகம் வந்துள்ளார். இந்த விபத்தில் அவருடைய 2 கால்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள சுரேஷ், எழுந்து நடக்க இன்னும் பல மாதங்களாகலாம்.

''மிக மோசமான விபத்து அது. நாங்கள் சென்ற பேருந்து சற்று மெதுவாக ஓரமாகத்தான் சென்றுகொண்டிருந்தது. எதிரே வந்த பேருந்து மிக வேகமாக வலதுபுறத்தில் ஏறிவந்துவிட்டது. மோதாமலிருக்க இடது புறத்தில் நாங்கள் சென்ற பேருந்து ஓட்டுநர் எவ்வளவோ திருப்ப முயன்றும் முடியவில்லை. அதில் நிறைய பேருக்கு மோசமாக அடிபட்டது.'' என்றார் சுரேஷ்.

மனைவி இறந்ததே தெரியாமல் சிகிச்சை பெறும் கணவர்

தென்காசி, சாலை விபத்து, தனியார் பேருந்துகள், சட்டம்

படக்குறிப்பு,லதா, தன் மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோது, இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

விபத்தில் இறந்துபோன 7 பேரில் சுரேஷின் மனைவி முத்துலட்சுமியும் ஒருவர். நவம்பர் 27 ஆம் தேதியன்று பிபிசி தமிழ் சுரேஷிடம் பேசும் வரையிலும் தன் மனைவி இறந்தது அவருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. தன் மனைவி வேறொரு பகுதியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்று பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லதா, தன் மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோது, இந்த விபத்தில் சிக்கியுள்ளார். பிபிசி தமிழ் அவரைச் சந்தித்த நவம்பர் 27 ஆம் தேதியன்று காலையில் அவருடைய மகளின் திருமணம் நடந்து முடிந்தது, ஆனால், தன் மகளின் திருமணத்தில் லதாவால் கலந்துகொள்ள முடியவில்லை என கண்ணீருடன் கூறினார்.

இடைக்காலில் இருந்து கடையநல்லுார் வரையிலான வெறும் 15 நிமிட பயணத்துக்காக பேருந்து ஏறிய ராஜேஷ், விபத்தில் சிக்கி கால் உடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உட்பட பேருந்துகளில் பயணம் செய்து உயிர் தப்பியவர்கள், காயமடைந்தவர்கள், விபத்து நடந்த இடத்துக்கு அருகில் வசிப்பவர்கள் அனைவருமே, 'தனியார் பேருந்துகளின் அசுர வேகமே இதற்குக் காரணம்' என்கின்றனர்.

இந்த விபத்துக்குப் பின் அந்த வழித்தடப் பேருந்தின் பர்மிட்டை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ரத்து செய்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த மல்லிகாவின் உறவினரான பழனியம்மாளும் அதே பேருந்தில் பயணம் செய்தவர். ''நாங்கள் சென்ற பேருந்து மிகமிக வேகமாகச் சென்றது. ஒவ்வொரு முறை பிரேக் போடும்போதும் நாங்கள் முன்னே முட்டிக்கொள்ளும் நிலைதான் இருந்தது. எப்போது இறங்குவோம் என்ற அச்சம்தான் இருந்தது. நாங்கள் அச்சப்பட்டவாறே விபத்து நடந்துவிட்டது.'' என்று அவர் கூறுகிறார்.

குறுகலான தேசிய நெடுஞ்சாலை

தென்காசி, சாலை விபத்து, தனியார் பேருந்துகள், சட்டம்

படக்குறிப்பு,விபத்து நடந்த பகுதி

விபத்து நடந்த துரைசாமிபுரம் என்ற இடம், தமிழகம்–கேரளம் ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் திருமங்கலம்–கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் (என்.எச்.744) ஒரு பகுதியாகவுள்ளது. ஆனால் ராஜபாளையத்திலிருந்து இந்த சாலையின் பெரும்பான்மையான பகுதிகள், மிகவும் குறுகலான இரு வழிச்சாலையாக மட்டுமே உள்ளன.

துரைசாமிபுரத்தில் விபத்து நடந்த இடத்திலும் இதேபோன்று இரு வழிச்சாலை மட்டுமே உள்ளது. அதிலும் ஒரு பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதியிலுள்ள இரு வழிச்சாலையில் டிவைடரும் இல்லை. அந்த இடத்தில்தான் இடது புறமாக வந்த பேருந்தின் மீது, எதிரே வந்த பேருந்து மிகவும் வலது புறமாக வேகமாக ஏறிச்சென்றதில்தான் இந்த விபத்து நடந்துள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. தென்காசியிலிருந்து வந்த பேருந்து சாலையை விட்டு இடது புறமாகச் செல்ல முயற்சி செய்தும், எதிரே வந்த பேருந்து கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்ததால் இந்த விபத்து நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த இடத்துக்கு மிக அருகில் கடை வைத்துள்ள முப்பிடாதி, இந்த விபத்தை நேரில் பார்த்துள்ளார். பிபிசி தமிழிடம் அதுபற்றி விவரித்த அவர், ''முதலில் பெரும் சத்தத்தைக் கேட்டு டயர் வெடித்து விட்டது என்றுதான் நினைத்தோம். அப்போதுதான் இரு பேருந்துகளும் மோதிக்கொண்டது தெரியவந்தது. எங்களால் முடிந்தவரை உதவி செய்து பலரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இந்த சாலையில் எல்லா வாகனங்களுமே வேகமாகத்தான் செல்கின்றன.'' என்றார்.

தென்காசி, சாலை விபத்து, தனியார் பேருந்துகள், சட்டம்

படக்குறிப்பு,முப்பிடாதி

'தனியார் பேருந்துகளின் அசுர வேகம்'

அதே பகுதியில் குடியிருக்கும் முப்பிடாதி என்ற மற்றொரு பெண்ணும் இதே கருத்தை தெரிவித்தார். தனியார் பேருந்துகளின் அதீத வேகத்தால் இந்த சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதாகக் கூறிய அவர், அந்த பேருந்துகளால் ஏற்கெனவே பல உயிர்கள் ஒன்றிரண்டாக பறிக்கப்பட்டுவந்த நிலையில், இப்போது மொத்தமாக 7 உயிர்கள் போயிருப்பதாக தெரிவித்தார்.

துரைசாமிபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ''இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்பது தென்காசி மக்களின் நீண்ட கால கோரிக்கை. அது தாமதமாகி வரும் நிலையில், தனியார் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.'' என்றார்.

பேருந்துகளில் கூட்டத்தை ஏற்றுவதில் நடக்கும் போட்டியில்தான், தனியார் பேருந்துகள் அசுர வேகத்தில் இயக்கப்படுவதாகக் குற்றம்சாட்டுகிறார் புளியங்குடியைச் சேர்ந்த மாடசாமி. விபத்து நடந்த பேருந்தில் பயணம் செய்த அவர், சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய மாடசாமி, ''நாங்கள் சென்ற பேருந்து மங்களாபுரத்தில் பயணிகளை ஏற்றிப் புறப்பட்ட அடுத்த நிமிடமே மிகவேகமாக இயக்கப்பட்டது. அடுத்த 2, 3 நிமிடங்களில் இடைக்காலில் பேருந்தை நிறுத்த வேண்டிய நிலையில், இந்த துாரத்துக்குள் இவ்வளவு வேகமாக இயக்க வேண்டிய அவசியமேயில்லை. இடைக்காலில் நிற்கும் நான்கைந்து பேரை ஏற்ற வேண்டுமென்ற நோக்கத்தோடு வேகமாகச் சென்றதுதான் இந்த விபத்துக்குக் காரணம்.'' என்றார்.

''அந்த டிக்கெட்களால் கிடைக்கும் 200–300 ரூபாய் வருவாய்க்காக இன்றைக்கு 7 உயிர்கள் பலி வாங்கப்பட்டிருக்கின்றன. இத்தனை உயிர்களும் அந்த 300 ரூபாய் வருமானமும் ஒன்றா...தனியார் பேருந்துகள் வேகத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் இதுபோன்ற விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்வதைத் தடுக்கவே முடியாது.'' என்றார் மாடசாமி.

சாலை விரிவாக்கம், வேகக்கட்டுப்பாடு ஆகிய இரண்டு மட்டுமே, விபத்துக்களைக் குறைப்பதற்கான வழி என்பதே தென்காசி மாவட்ட மக்களின் ஒருமித்த கருத்தாகவுள்ளது. இந்த விபத்துக்குப் பின், தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்தி சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில் தனியார் பேருந்து உரிமையாளர்களும் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

தென்காசி, சாலை விபத்து, தனியார் பேருந்துகள், சட்டம்

படக்குறிப்பு,மாடசாமி

தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறுவது என்ன?

இதுகுறித்து பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில் பேசிய திருநெல்வேலி மாவட்ட (தென்காசி மாவட்டத்துக்கென்று தனியாக சங்கம் இல்லை) தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர், ''தற்போதுள்ள நேர அட்டவணை 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த போக்குவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. உதாரணமாக ஒரு கி.மீ. துாரத்துக்கு 90 வினாடிதான் அவகாசம் தரப்படுகிறது. இப்போது வாகனங்கள் பெருகிவிட்டன. போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டது. ஆனால் நேர அட்டவணை மாற்றப்படவில்லை.'' என்றார்.

''நேரத்தை ஈடுகட்ட வேகமாக இயக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஓட்டுநர்கள் தள்ளப்படுகின்றனர். அரசு பேருந்துகளும் அதிகமாக இயக்கப்படுகின்றன. நேரமும் அவர்களுக்கு ஏற்றாற்போல நிர்ணயிக்கப்படுகிறது. ஆனாலும் விதிகளை மீறி வேகமாக இயக்குவதை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. ஓட்டுநர்களுக்கு நிறைய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். எங்கள் கோரிக்கையையும் அரசு பரிசீலிக்க வேண்டும்.'' என்றார் அவர்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் கூறுவது என்ன?

விபத்துக்கான காரணங்கள், பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து சில கேள்விகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் பிபிசி தமிழ் முன் வைத்தது. அதற்கு பதிலளித்த அவர், ''என்.எச்.744 விரிவாக்கத்துக்கான நிலமெடுப்புப் பணி முடிந்துவிட்டது. மறுமதிப்பீடு தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்திடமிருந்து வந்ததும் டெண்டர் பணி துவங்கும். முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'' என்றார்.

''விபத்துக்குப் பின் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டத்தை, நானும் எஸ்பியும், ஆர்டிஓக்களும் நடத்தினோம். அதில் சாலை விதிகளைக் கடைபிடித்து பாதுகாப்பாக பேருந்துகளை இயக்கவும், வேகத்தைக் குறைக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தரப்பிலிருந்து சில கோரிக்கைகளை வைத்தனர். அவையும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்.

மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 2023 ஆம் ஆண்டில், தேசிய அளவில் சாலை விபத்துகளில் 1,72,890 பேர் மரணமடைந்துள்ளனர். தேசிய அளவில் அதிக விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், விபத்து உயிரிழப்புகளில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது.

தமிழக காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் ஜனவரி–ஜூலை இடையிலான 7 மாதங்களில், 10,792 விபத்துகளில் 11,268 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டில் 9,844 விபத்துகளில் 10,241 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 1027 உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இந்நிலையில்தான் இந்த ஒரே விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0mpv747m7do

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.