Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாதனை படைக்க விண்வெளி சென்ற சீனர்கள் - கிரிக்கெட் பந்து அளவு குப்பையால் அடுத்தடுத்த சிக்கல்

சீனா, விண்வெளி நிலையம், தியான்கொங்

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • த. வி.வெங்கடேசுவரன்

  • பிபிசி தமிழுக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

சீனாவுக்குச் சொந்தமான தியான்கொங் விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்களை மீட்பதற்கான விண்கலம் இன்று (நவம்பர் 25) விண்ணில் ஏவப்பட உள்ளது.

ஏப்ரல் 24, 2025-ஆம் தேதி, சீனாவின் சென்சோ-20 விண்கலத்தில், சென் தோங் தலைமையில், வாங் ஜீ மற்றும் சென் ஜோங்ருய் ஆகியோர் அடங்கிய மூவர் குழு, சீனாவின் தியான்கொங் விண்வெளி நிலையத்தை அடைந்தது.

சுமார் 200 நாட்களுக்கு மேல் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்து சாதனை படைப்பது இவர்களின் நோக்கமாக இருந்தது.

சீன தாய்கோனாட்டுகள் (சீனா தனது விண்வெளி வீரர்களை 'தாய்கோனாட்' என அழைக்கிறது) நீண்டகாலம் விண்வெளியில் தங்கிய சாதனையைப் படைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், தனது மூன்று விண்வெளிப் பயணங்களில் மொத்தமாக 400 நாட்கள் விண்வெளியில் கழிக்கும் சாதனையை குழுத் தலைவர் சென் தோங் படைப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்தச் சாதனைகளை நிறைவேற்றிய பின், நவம்பர் 5-ஆம் தேதி புகழுடன் வீடு திரும்புவதே இவர்கள் திட்டம்.

ஆனால், ஒரு சிறிய விண்வெளிக் குப்பை திடீர் என்று வந்து, தலைவிதியையே மாற்றி விட்டது.

விண்வெளிக் குப்பை மோதலால், மூவரும் பூமி திரும்பப் பயணிக்க வேண்டியிருந்த சென்சோ-20 விண்கலம் பழுதடைந்தது. எனவே, அதில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் எப்படி பூமிக்குத் திரும்புவார்கள் என்பதே கேள்விக்குள்ளானது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

75a09730-c92f-11f0-9fb5-5f3a3703a365.jpg

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்சோ-21 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டபோது

விண்ணில் சிக்கிய குழு

பூமி திரும்பும் பயணத்திற்காக விண்கலத்தைத் தயார்படுத்தும் பரிசோதனையின் போது, விண்கலத்தின் கண்ணாடி ஜன்னல்களில் விரிசல்கள் இருப்பதை இவர்கள் கண்டறிந்தனர்.

சுமார் கிரிக்கெட் பந்து அளவுக்கு, 10 சென்டிமீட்டர் விட்டம் உள்ள ஒரு விண்வெளிக் குப்பை, வேகமாகப் பாய்ந்து வந்து சென்சோ-20-ஐ மோதி சேதப்படுத்தியது எனக் கருதப்படுகிறது.

விண்கலத்தின் கண்ணாடி ஜன்னல்களில் விரிசல் ஏற்படுத்தும் அளவுக்கு பலமான மோதல் ஏற்பட்டிருந்தால், அதன் தொடர்ச்சியாக விண்கலத்தின் வெப்பப் பாதுகாப்பு அமைப்பை சேதப்படுத்தியிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்தது. எனவே, அந்த விண்கலத்தில் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவது சாத்தியமற்றதாகிவிட்டது.

கடந்த ஆண்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோர் தொழில்நுட்பக் கோளாறுகளால் பல மாதங்கள் சிக்கிக்கொண்ட சம்பவத்தைப் போன்றே, இப்போது சென்சோ-20 குழுவினரும் விண்ணில் சிக்கிக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சீன விண்வெளி நிலையம்

சுமார் 390 கிலோமீட்டர் தூரத்தில் பூமியைச் சுற்றி வரும் தியான்கொங் எனும் இந்த சீன விண்வெளி நிலையம், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் ஒப்பிடும்போது அதன் ஆறில் ஒரு பங்கு அளவே உள்ளது. அடுத்தடுத்த கட்டுமானத்தில் விரிவாக்கம் செய்ய சீனா உத்தேசித்துள்ளது.

மூன்று பேர் 180 நாட்கள் வரை வசதியாக தங்கிச் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டாலும், பணிக்குழு மாறும் நாட்களில் ஆறு பேரையும் தற்காலிகமாக தங்க வைக்க முடியும்.

பொதுவாக, விண்வெளி நிலையத்தில் மூவர் தங்கி ஆய்வு செய்வார்கள். எந்த விண்கலத்தில் விண்வெளி நிலையத்தை அடைந்தார்களோ, அதே விண்கலம் தயார் நிலையில் இருக்கும். அவசரகால சூழ்நிலையில் பூமிக்குத் திரும்புவதற்கான மீட்பு ஊர்தியாகவும் அதே விண்கலம் செயல்பட தயாராக இருக்கும்.

தங்கி செயல்படும் குழுவின் பணி முடியும் தருவாயில், புதிய பணிக்குழுவினர் வேறொரு விண்கலத்தில் விண்வெளி நிலையத்தை வந்தடைவார்கள். புதிய குழுவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, பழைய குழு தங்களைக் கொண்டு வந்த அதே விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவது வழக்கம்.

சீனா, விண்வெளி நிலையம், தியான்கொங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளம்

ஆனால், சென்சோ-20 பயன்பாட்டிற்கு உபயோகமற்றதாக ஆகிவிட்டதால், வழக்க நடைமுறையை கைக்கொள்வது சாத்தியமற்றதாக ஆகிவிட்டது.

இந்தச் சிக்கலின் விளைவாக, தியான்கொங் விண்வெளி நிலையத்தில் மூன்று பேருக்குப் பதிலாக ஆறு பேர் தங்கும் நிலைமை ஏற்பட்டது.

எனினும், விண்வெளி நிலையத்தின் தியான்ஹே மைய தொகுதி மற்றும் வென்டியன் ஆய்வகத் தொகுதி ஆகியவற்றில் தலா மூன்று பயணிகள் தூங்கும் வசதிகள் உள்ளன. எனவே, ஆறு பேரும் தங்கி உறங்குவதற்கு இடவசதி சிக்கல் எதுவுமில்லை.

உணவு, தண்ணீர், உபகரணங்கள், ஏவுகல எரிபொருள் போன்றவற்றைச் சுமந்து, தியான்சோ எனும் ஆளில்லா ரோபோட் விண்வெளிக் கலம், சுமார் எட்டு மாதங்களுக்கு ஒருமுறை விண்வெளி நிலையத்தை அடையும்.

இதுபோல, கடந்த ஜூலையில், தியான்சோ-9 ரோபோட் விண்கலம் சரக்குகளை ஏற்றி வந்து பொருள்களை வழங்கியது.

எனவே, விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்பவர்களுக்குத் தேவையான பொருள்களில் குறைவேதுமில்லை. தேவை ஏற்பட்டால், அடுத்த தியான்சோ விண்கலம் மூலம் பொருள்களை பூமியிலிருந்து அனுப்பி வைக்க முடியும்.

விண்வெளி 'இசை நாற்காலிகள்' விளையாட்டு

முக்கிய சிக்கல், விண்வெளி நிலையத்தின் மறுசுழற்சி அமைப்பில் ஏற்படும் தாக்கம்தான். மூன்று பேர் கூடுதலாகக் கூடுதல் நாட்கள் தங்குவதால், நீர், ஆக்சிஜன், உணவு போன்றவற்றின் நுகர்வு வீதம் அதிகரிக்கும்.

வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேறும் நீரை மறுசுழற்சி செய்து சுத்தம் செய்துதான் பயன்படுத்துவார்கள்.

அதேபோல, சுவாசித்த காற்றிலிருந்து கார்பன் டை ஆக்சைடை நீக்கி, ஆக்சிஜனைப் பிரித்து மீண்டும் மறுசுழற்சி செய்வார்கள். இதுபோன்ற மறுசுழற்சி அமைப்புகள் கொண்டுதான் விண்வெளி நிலையம் மனிதர்கள் வாழத்தகுந்த நிலையைப் பேணுகிறது.

கூடுதல் நபர்கள் தங்கி வாழும்போது, இந்த மறுசுழற்சி அமைப்புகள் மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டியிருக்கும். இதுதான் முக்கிய சாவல்.

எனவேதான், சீன விண்வெளி நிறுவனம் எப்போதும் ஒரு லாங் மார்ச்-2எஃப் ஏவுகலத்தையும், ஒரு மாற்று சென்சோ விண்கலத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கிறது. தேவை ஏற்பட்டால், எட்டரை நாட்களுக்குள் விரைவாக ஏவி விண்வெளி நிலையத்தை அடைந்து விட முடியும்.

சில நாட்கள், பாதுகாப்பாகத் தங்கியிருக்க விண்வெளி நிலையத்தில் அவசரகால ஏற்பாடுகள் உண்டு. அவசரநிலை ஏற்பட்டால், மாற்று விண்கலத்தை ஏவி விண்வெளி நிலையத்தில் உள்ள பயணிகளைக் காப்பாற்றி பூமிக்குக் கொண்டு வர முடியும்.

ரயில் பெட்டிகளை முன்னும் பின்னும் மற்ற பெட்டிகளில் இணைக்க முடியும். அதுபோல, சீன விண்வெளி நிலையத்தில், ஒரே சமயத்தில் அதிகபட்சமாக மூன்று விண்கலங்களை மட்டுமே இணைத்து வைக்க முடியும்.

சீனா, விண்வெளி நிலையம், தியான்கொங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென் தோங் தலைமையிலான சென்சோ-20 குழு நவம்பர் 14-ஆம் தேதி பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பியது.

அண்மையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தின் போது, ஏற்கனவே சென்சோ-20, சென்சோ-21 (அடுத்த பணிக்குழு) என்ற இரண்டு குழுக்களின் விண்கலங்களும், சரக்குகளைக் கொண்டு சென்ற தியான்சோ-9 விண்கலமும் இணைக்கப்பட்டிருந்தன. எனவே, புதிய மீட்புக் கலத்தை இணைக்க இடமில்லாமல் போனது.

எனவேதான், 'இசை நாற்காலிகள்' விளையாட்டைப் போன்ற ஒரு தீர்வைச் சீன விண்வெளிப் பொறியாளர்கள் வகுத்தனர். சமீபத்தில் விண்வெளி நிலையத்தை அடைந்த சென்சோ-21-ஐ பயன்படுத்தி, சென்சோ-20 குழுவைப் பூமிக்குக் கொண்டு வருவது.

இதன் மூலம் ஒரு விண்கல இணைப்பு மையம் (Docking Port) காலியாகும். மேலும், விண்வெளி நிலையத்தில் மூவர் மட்டுமே இருப்பார்கள். அடுத்ததாக, ஆளில்லாத நிலையில் சென்சோ-22 விண்கலத்தை ஏவுவது. இந்தச் சென்சோ-22 விண்வெளி நிலையத்தில் மீதமுள்ள மூவருக்கு மீட்பு விண்கலமாகச் செயல்படும். இதுவே திட்டம்.

இதன் விளைவாக, சென் தோங் தலைமையிலான சென்சோ-20 குழு, சென்சோ-21 குழு வந்த விண்கலத்தைப் பயன்படுத்தி, நவம்பர் 14-ஆம் தேதி பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பியது.

சென்சோ-21 இல் சென்ற விண்வெளி வீரர்களான குழுத் தலைவர் சாங் லூ தலைமையில், சாங் ஹோங்க்ஜாங் மற்றும் சீனாவின் இளைய தாய்கோனாட்டான வூ ஃபெய் ஆகிய மூவர் குழு தற்போது தியான்கொங்க் விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது, இவர்கள் பூமி திரும்ப எந்த விண்கலமும் அவர்களுடன் இணைக்கப்பட்ட நிலையில் இல்லை.

மீட்புக் கலத்தை ஏவுதல்

நாளின் எந்த நேரத்திலும் சென்னையிலிருந்து திருச்சிக்குப் பேருந்து இயக்க முடியும். ஆனால், நினைத்த சமயத்தில் எப்போது வேண்டுமென்றாலும் விண்வெளி நிலையத்தை நோக்கி விண்கலத்தை இயக்க முடியாது.

பறந்து செல்லும் பறவையைத் தாக்க, திசையிலும் நேரத்திலும் முன்னே குறி வைப்பது போல, தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கும் பூமியில் இருந்து விண்கலத்தை ஏவி, பூமியைச் சுற்றி வரும் விண்வெளி நிலையத்தை அடைவது சிக்கலானது.

பூமியின் ஏவுதளத்துக்குச் சரியான நிலையில் விண்வெளி நிலையம் வரும் நேரத்தில் ஏவினால்தான், விண்கலத்தை விண்வெளி நிலையத்தைச் சந்திக்கச் செய்ய முடியும். அடுத்த ஏவல் உகந்த காலம் நவம்பர் 25-ஆம் தேதி கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டது.

அதாவது, பத்து நாட்கள் மட்டுமே எந்த மீட்புக் கலமும் இல்லாமல் மூவர் குழு விண்வெளியில் ஆபத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். மேலும், ஆளில்லாத நிலையில் ஏவப்படுவதால், கூடுதல் உணவு, எரிபொருள் போன்ற சரக்குகளை அனுப்ப முடியும்.

அமெரிக்காவில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோரை மீட்பது ஒன்பது மாதங்கள் எடுத்துக்கொண்டதை ஒப்பிடுகையில், சீன நிறுவனம் வெறும் மூன்று வாரங்களில் முழு செயல்பாட்டையும் நிறைவேற்ற உள்ளது.

சீனா, விண்வெளி நிலையம், தியான்கொங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விண்வெளி வீரர்கள் குழுத் தலைவர் சென் தோங்

ஆபத்தை உணர்த்துகிறது

வெற்றிகரமான மீட்பு முயற்சி, சீன விண்வெளி பயணிகளுக்கு பெரும் ஆறுதலாக இருந்தாலும், அது ஒரு பெரும் எச்சரிக்கை மணி. தாழ் விண்வெளிப் பாதையில் (Low Earth Orbit) தினமும் அதிகரித்து வரும் விண்வெளிக் குப்பைகளின் ஆபத்தை இது உணர்த்துகிறது.

1957-ல் சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக்கை (Sputnik) ஏவியதிலிருந்து, உலகின் பல நாடுகளும் நிறுவனங்களும் தங்களின் விண்வெளிப் பயணங்களின் போது, செயலிழந்த செயற்கைக்கோள்கள், ஏவுகலப் பகுதிகள், குப்பைகள் போன்றவற்றை விண்வெளியில் விட்டுவிட்டு வந்துள்ளன.

இதன் விளைவாக, 10 சென்டிமீட்டருக்கு அதிகமான 34,000-க்கும் மேற்பட்ட பொருள்கள், பூமியை மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகின்றன என ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. மிளகு அளவுள்ள நுண்குப்பைகளின் எண்ணிக்கை பல லட்சம் எனவும் கூறப்படுகிறது.

துப்பாக்கி தோட்டாவின் வேகத்தை விட பல மடங்கு கூடுதலான வேகத்தில் பயணிக்கும் இந்த நுண்பொருள்களும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சீனா, விண்வெளி நிலையம், தியான்கொங்

பட மூலாதாரம், Getty Images

விண்குப்பை மோதும் அபாயம் ஏற்பட்டதால், விண்வெளி வீரர்கள் தங்களின் திரும்பும் விண்கலங்களில் புகுந்து, அவசரமாகப் பிரிந்து செல்லத் தயாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்ட சம்பவங்கள் ஆண்டுதோறும் நடந்து வருகின்றன.

1967-இல் ஏற்படுத்தப்பட்ட விண்வெளி ஒப்பந்தம் (Outer Space Treaty) மற்றும் 1972-ல் வெளிவந்த பொறுப்பு ஒப்பந்தம் (Liability Convention) போன்ற ஐ.நா. சட்டங்கள், விண்வெளி முயற்சிகள் குறித்த தனித்தனி நாடுகளின் பொறுப்புகளை வரையறுக்கின்றன. ஆனால், விண்வெளிக் குப்பைக்கென தனியான சர்வதேச சட்டம் இல்லை.

'யார் குப்பை செய்கிறார்களோ, அவர்களே அதற்குப் பொறுப்பேற்பது தான் சரி' அல்லவா? எனினும், விண்வெளிக் குப்பை குறித்து யார் பொறுப்பு என்பது குறித்த சர்வதேசச் சட்டங்கள் தெளிவாக இல்லை.

விண்வெளி வணிகம் பெருகி வரும் நிலையில், விண்வெளிக் குப்பை குறித்த வலுவான சர்வதேச சட்ட ஏற்பாட்டை உருவாக்குவது, இக்காலத்தின் மிக முக்கியத் தேவையாக உருவெடுத்துள்ளது.

(கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3w7pgnze5qo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.