Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் மூன் என்றால் என்ன? அதை எப்போது, எங்கே காணலாம்?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி ஸ்பெயினில் படம் பிடிக்கப்பட்ட சூப்பர் மூன்

கட்டுரை தகவல்

  • த.வி. வெங்கடேஸ்வரன்

  • பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

டிசம்பர் 4, 2025 சூப்பர் முழு நிலா

"சூப்பர் மூன்" என்பது ஒரு மெய்யான வானியல் நிகழ்வு அல்ல. நிலவு பூமிக்கு அருகில் இருக்கும்போது ஏற்படும் முழு நிலாவை குறிக்க பொதுவெளியில் பயன்படுத்தப்படும் கருத்து மட்டுமே.

ஆண்டின் கடைசி முழு நிலா, டிசம்பர் 4, 2025 அன்று, ஒரு 'சூப்பர் முழு நிலா'வாக (Supermoon) நிகழும். டிசம்பர் 5ஆம் தேதி காலை 04:45 மணிக்கு சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் வரிசையாக வரும்போது, நிலவு பூமியிலிருந்து வெறும் 3,57,219 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே இருக்கும்.

அந்த நேரத்தில், முழு நிலவின் விட்டம் சராசரி முழு நிலாவைவிட கிட்டத்தட்ட 7 சதவிகிதம் பெரிதாகவும், பிரகாசம் 16 சதவிகிதம் கூடுதலாகவும் இருக்கும். இதுவே "சூப்பர் முழு நிலா".

எங்கே, எப்போது காணலாம்?

டிசம்பர் 4ஆம் தேதி மாலை நிலவு உதயமாகும் நேரத்தில், கிழக்கு நோக்கி மறைப்பு ஏதுமில்லாத இடமாகத் தேர்வு செய்து, கிழக்கு முகமாகப் பார்த்தல் சூப்பர் மூன் தென்படும்.

'உண்மையான' முழு நிலா நிலை, அதாவது 'வானவியல் பார்வையில் முழு நிலா நிலை' (astronomical full Moon) டிசம்பர் 5ஆம் தேதி காலை 04:45 மணிக்கு (இந்திய நேரம்) நிகழும்.

ஆனால் நிலா உதயத்திற்குப் பிறகு கிழக்கு அடிவானத்தில் தாழ்வாக இருக்கும்போது பார்ப்பதே, சூப்பர் முழு நிலாவைக் காணச் சிறந்த நேரம். அடிவானில் முழு நிலா பெரிதாகக் காட்சி தரும்; இதை "நிலா மாயை" (moon illusion) என்பார்கள். ஏன் இப்படியான பார்வைத் தோற்றம் நிகழ்கிறது என்பது இன்னமும் புதிராகத்தான் உள்ளது.

சூப்பர் மூன் என்றால் என்ன?

"சூப்பர் மூன்" என்பது நிலவு பூமிக்கு மிக அருகில் இருக்கும் 'அண்மை நிலை'யில் (Perigee) ஏற்படும் ஒரு முழு நிலாவாகும். நிலவு பூமியைச் சுற்றி வரும் பாதை சரிவட்டமானது அல்ல, அதுவொரு நீள்வட்டப் பாதை.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதன் விளைவாக, நிலவுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் மாறுபடுகிறது. பூமியின் மையத்தில் இருந்து நிலாவின் மையம் வரையிலான தூரம், அண்மை நிலையில் (Perigee) 3,63,396 கிலோமீட்டர் முதல் தொலைவு நிலையில் (apogee) 4,05,504 கிலோமீட்டர் வரை அலைவுறும்.

இந்திய வானியலில், நிலாவின் சுற்றுப்பாதையில் அதன் மிக அருகிலுள்ள புள்ளியான 'அண்மை நிலை' (perigee) 'சீக்கிரோச்சம்' என்றும், மிகத் தொலைவிலுள்ள புள்ளியான 'தொலைவு நிலை' (apogee) 'மந்தோச்சம்' என்றும் அழைக்கப்படுகிறது.

முழு நிலா கட்டத்தில், நிலவு பூமிக்கு மிக அருகிலுள்ள புள்ளியான அண்மை நிலையில் (சீக்கிரோச்சம்) இருக்கும்போது "சூப்பர் மூன்" ஏற்படுகிறது. இதேபோல, அமாவாசை நிலவு ஏற்படும்போது நிலவு அண்மை நிலையில் இருந்தாலும், அதுவும் 'சூப்பர் மூன்'தான். ஆனால் அப்போது நிலாவின் வட்டுத் தோற்றம் காணப்படாது. எனவே, அது பற்றி இங்கு விவாதிக்கப் போவதில்லை. சுருக்கமாக, அதன் அண்மை நிலைக்கு அருகில் ஏற்படும் முழு நிலாவையே 'சூப்பர் மூன்' என்று குறிப்பிடுகிறோம்.

சூப்பர்மூன் என்பது என்ன? எங்கே, எப்போது காணலாம்?

அது ஏன் 'சூப்பர்' மூன்?

நமக்கு அருகிலுள்ள பொருள்கள், தொலைவில் உள்ளவற்றைவிட இயற்கையாகவே பெரிதாகத் தோன்றுகின்றன. இதன் விளைவாக, நிலவு அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வரும்போது அதன் தோற்ற அளவு மாறுபடுகிறது.

அது மிக அருகிலுள்ள புள்ளியான அண்மை நிலையில் (perigee) பெரிதாகவும், தொலைவு நிலையில் (apogee) சிறிதாகவும் இருக்கும்.

இதேபோல், ஒளிரும் ஒரு பொருள் அருகில் இருக்கும்போது பிரகாசமாகத் தோன்றி, அதுவே தொலைவாகச் செல்லும்போது மங்குகிறது. இதன் விளைவாக, பூமிக்கு மிக அருகே அண்மை நிலையில் இருக்கும் ஒரு சூப்பர் மூன், தொலைவு நிலையில் இருக்கும் முழு நிலாவைவிட விட்டத்தில் 14 சதவிகிதம் வரை பெரிதாகவும், 30 சதவிகிதம் வரை பிரகாசமாகவும் இருக்கும்.

முழு நிலா என்றால் என்ன?

முழு நிலா என்பது நிலவு பூமியில் இருந்து காணும்போது நிலாவின் வட்டம் முழுமையாக ஒளிர்வதாகத் தோன்றும் பிறைக்கட்டமாகும். இது பூமி, சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் வரும்போது ஏற்படுகிறது. இந்த வரிசையமைப்பின் காரணமாக, சூரிய ஒளி நிலவுடைய முகத்தின் மீது முழுமையாகப் படர்ந்து முழு முகத்தையும் ஒளிர வைக்கிறது, அதை வானில் ஒரு பிரகாசமான, வட்ட வட்டு போல தோன்றச் செய்கிறது.

பொதுவாக, முழு நிலா சூரிய அஸ்தமனத்தில் உதயமாகி, அடுத்த சூரிய உதயத்தின்போது மறைகிறது. நாம் இந்த இரவு முழுவதையும் 'முழு நிலா' என்றே சொல்கிறோம்.

இருப்பினும், வானியலாளர்கள் நிலவு சூரியனுக்கு சரியாக 180 டிகிரி எதிர்த் திசையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கணத்தையே 'வானவியல் பார்வையில் முழு நிலா' என்று கருதுகிறார்கள்.

நிலவும் பூமியும் அவற்றின் சுற்றுப்பாதைகளில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதால், சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரு கோட்டில் வரிசையாக ஒரு கணம் மட்டுமே நிலை கொள்ளும்; பின்னர் அவை நகர்ந்து விடும்.

எனவே, மெய்யான 'முழு நிலா' நிகழ்வு ஒரு கணமே நீடிக்கும். எடுத்துக்காட்டாக, டிசம்பர் 4 அன்று 23:15 UTC (டிசம்பர் 5, 2025, காலை 04:45 இந்திய நேரம்), இந்த மூன்று வான்பொருட்களும் வரிசையாக அமைந்து 'வானவியல் முழுநிலா நிலை' (astronomical full Moon) ஏற்படும்.

சூப்பர்மூன் என்பது என்ன? எங்கே, எப்போது காணலாம்?

பட மூலாதாரம்,Getty Images

சூப்பர் மூன் எப்போது நிகழ்கிறது?

வானவியல் முழு நிலாவை போலவே, நிலாவும் அதன் அண்மை நிலையில் (perigee) ஒரு கணமே இருக்கும். எனவே, முழு நிலா, அண்மை நிலை (perigee) ஆகிய இரு நிகழ்வுகளும் ஒருபோதும் சரியாக ஒரே நேரத்தில் நடக்காது. 21ஆம் நூற்றாண்டில், ஒரு முழு நிலா ஒருபோதும் சரியாக அண்மை நிலையுடன் (perigee) ஒத்துப்போவதில்லை.

முழு நிலாவும் அண்மை நிலையும் (perigee) 21ஆம் நூற்றாண்டில் நவம்பர் 26, 2034 அன்று காலை 04:02 மணிக்கு (இந்திய நேரம்) மிக நெருக்கமாக நிகழ்கிறது. அப்போது நிலவு வெறும் 356,448 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே இருக்கும். நவம்பர் 26 அன்று காலை 03:36 மணிக்கு முழு நிலா நிகழ்ந்த சுமார் 26 நிமிடங்களுக்குப் பிறகே அண்மை நிலை நிகழும்.

இதேபோல, முழு நிலாவும் அண்மை நிலையும் (perigee) மிக நெருக்கமாக நிகழ்ந்ததற்கு ஓர் எடுத்துக்காட்டு நவம்பர் 14, 2016. அப்போது இரு நிகழ்வுகளுக்கும் இடையிலான நேர இடைவெளி 2 மணிநேரம் 29 நிமிடங்களுக்கும் குறைவாக இருந்தது. கிட்டத்தட்ட வானவியல் முழுநிலா நிலையும், நிலவு அண்மை நிலையை அடைவதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததாகக் கூறலாம்.

இருப்பினும், நடைமுறையில், "90 சதவிகித விதி" பயன்படுத்தப்படுகிறது. அதாவது, முழு நிலா கட்டம், நிலவு ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகிலுள்ள அண்மையில் (perigee) 90%-க்குள் இருக்கும்போது நிகழுமானால், பூமியில் இருந்து பார்க்கும்போது முழு நிலவின் அளவு (பார்வைக்கோணம்) கணிசமாகக் கூடும். இதைத்தான் சூப்பர் மூன் என்கிறார்கள். மேலும் இந்தக் கட்டத்தில் பூமியின் மையத்தில் இருந்து நிலாவின் மையம் 3,67,607 கிலோமீட்டருக்கு குறைவாக இருக்கும்.

சூப்பர்மூன் என்பது என்ன? எங்கே, எப்போது காணலாம்?

பட மூலாதாரம்,Costfoto/NurPhoto via Getty Images

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வானவியல் முழு நிலா நிகழ்வுக்கு முன்னும் பின்னும் 24 மணிநேரத்திற்குள் நிலவு அண்மை நிலைப் புள்ளியைக் (perigee) கடந்தால், அது 'சூப்பர் மூன்' என்று வகைப்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, ஆண்டின் முதல் வானவியல் முழு நிலா, ஜனவரி 14 அன்று காலை 03:58 மணிக்கு நிகழ்ந்தது. அப்போது நிலவு 3,78,038 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

நிலவு அதன் அண்மை நிலைப் புள்ளியை (perigee) ஜனவரி 8 அன்று காலை 05:06 மணிக்கு அடைந்தது, இது முழு நிலாவுக்கு சுமார் 142 மணிநேரம் 52 நிமிடங்களுக்கு முன்னதாகும். எனவே, அது ஒரு சூப்பர் மூன் அல்ல.

இதற்கு மாறாக, நவம்பர் 5 அன்று மாலையில், 18:50 மணிக்கு முழு நிலா நிகழ்ந்தது. அப்போது நிலவு 3,56,852 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது மற்றும் நவம்பர் 6 அன்று காலை 04:00 மணிக்கு அண்மை நிலைப் புள்ளியைக் (perigee) கடந்தது. இது முழு நிலா நிகழ்வுக்கு சுமார் 9 மணிநேரம் 10 நிமிடங்களுக்குப் பிறகு நிகழ்ந்தது. எனவே, இதுவே ஒரு சூப்பர் மூன்.

சூப்பர் மூன்கள் தொடர்ச்சியாகவே வரும்

ஒவ்வோர் ஆண்டும், மூன்று அல்லது நான்கு சூப்பர் மூன்கள் அடுத்தடுத்து நிகழும். நிலவின் இரண்டு இயக்கங்கள் சூப்பர் மூனின் கால அலவைத் தீர்மானிக்கின்றன. ஒரு முழு நிலவு நிலையில் இருந்து மறுபடியும் முழுநிலவு நிலையை அடைய சுமார் 29.5306 நாட்கள் ஆகும். இருப்பினும், பூமியைச் சுற்றி அண்மை நிலையில் இருந்து மறுபடி அதே அண்மை நிலைக்கு (perigee to perigee) வந்து சேர சுமார் 27.5545 நாட்கள் ஆகும்.

இந்த இரண்டு சுற்றுகளும் ஒத்துப்போகும்போது சூப்பர் மூன் ஏற்படுகிறது. இந்த இரண்டு காலங்களுக்கு இடையிலான சிறிய வித்தியாசம் காரணமாகத்தான் ஆண்டுதோறும் வெவ்வேறு மாதங்களில் சூப்பர் மூன்கள் உருவாகின்றன.

இந்த ஆண்டில் (2025) அக்டோபர் 7, நவம்பர் 5, டிசம்பர் 4 ஆகிய அடுத்தடுத்த முழுநிலவுகள் சூப்பர் மூன்கள். இதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 3, 2026 முழுநிலவும் சூப்பர் மூன் தான். அடுத்த ஆண்டில்(2026), நவம்பர் 24, டிசம்பர் 24 ஆகிய இரண்டும் சூப்பர் மூன். 2027ஆம் ஆண்டில், சூப்பர் மூன் ஜனவரி 22, பிப்ரவரி 20 ஆகிய தேதிகளில் நிகழும்.

சூப்பர்மூன் என்பது என்ன? எங்கே, எப்போது காணலாம்?

பட மூலாதாரம்,Getty Images

வானியல் கருத்தல்ல

"சூப்பர் மூன்" என்ற கருத்து கிரகணம் போன்ற மெய்யான வானியல் நிகழ்வல்ல. எனினும் கடந்த சில ஆண்டுகளில் பொது மக்களிடையே கணிசமான உற்சாகத்தையும் ஊடக கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த 1979ஆம் ஆண்டு டெல் ஹோரோஸ்கோப் (Dell Horoscope) இதழில் அமெரிக்க ஜோதிடர் ரிச்சர்ட் நோலே (Richard Nolle) எழுதிய கட்டுரையைத் தொடர்ந்தே சூப்பர் மூன் என்ற கருத்து பிரபலமானது.

அதில், "புது நிலா அல்லது முழு நிலா, நிலவு ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதையில் பூமிக்கு மிக அருகிலுள்ள அண்மையில் (90 சதவிகிதத்திற்குள்) இருக்கும்போது நிகழ்வது சூப்பர் மூன்" என்று நோலே வரையறை செய்தார். ஏன் இந்த அளவுகோல் என்பதற்கு எந்தவித விளக்கத்தையும் அவர் தரவில்லை. எனவே இது வெறும் கருத்து மட்டுமே.

சூப்பர் மூனின் இயக்க முறைக்குப் பின்னாலுள்ள நிலவின் இயக்கம் குறித்துப் பண்டைய காலம் தொட்டே அறிந்திருந்தனர். 29.5 நாட்களுக்குப் பிறகு முழு நிலா மறுபடி மறுபடி வரும் சுழற்சியை எளிதாக அறிந்த பண்டைய மக்கள் மேலும் கூர்ந்து நிலவின் இயக்கத்தைக் கவனித்தபோது வேறொரு விசித்திரமான இயக்கத்தையும் கண்டார்கள்.

அதாவது, விண்மீன்களின் பின்னணியில் நிலவின் தினசரி இயக்கம் சீராக அமையவில்லை. சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்களில் மெதுவாகவும் இயங்கியது.

இன்று நிலவின் இந்த விசித்திர இயக்கத்திற்குப் பின்னாலுள்ள விதியை நாம் அறிவோம். கெப்லர் மூன்றாவது விதியின்படி நீள்வட்டப் பாதையில் செல்லும்போது நிலவு போன்ற வான்பொருள் அண்மைப் புள்ளிக்கு அருகே வேகமாகச் செல்லும்; தொலைவுப் புள்ளிக்கு அருகே மெதுவாகச் சுற்றும். அதாவது அது பூமிக்கு மிக அருகிலுள்ள அண்மை நிலையில் (perigee) இருக்கும்போது சராசரியைவிட வேகமாகவும், பூமியில் இருந்து மிகத் தொலைவிலுள்ள தொலைவு நிலையில் (apogee) இருக்கும்போது வழக்கத்தைவிட மெதுவாகவும் நகரும்.

வானியலாளர்கள் வேகத்தில் உள்ள இந்த வித்தியாசத்தை 'பிறழ்வு' (anomaly) என்று குறிப்பிடுகிறார்கள். நிலவு அண்மை நிலையில் இருந்து தொடங்கி மீண்டும் அண்மை நிலையை அடைந்து ஒரு சுழற்சியை முடிப்பதற்கு எடுக்கும் காலத்தை 'நிலவின் பிறழ் மாதம்' (anomalistic month) என்பார்கள்.

பண்டைய பாபிலோனிய வானியலாளர்கள் முதல் இந்திய வானியலாளர்கள் வரை பலரும் நிலவின் வேகத்திலுள்ள இந்த மாறுபாட்டை (பிறழ்வை, anomaly) அறிந்திருந்தனர். இந்திய சித்தாந்த வானியலில், நிலவின் மெதுவான இயக்கம் 'மந்தம்' என்றும், வேகமான இயக்கம் 'சீக்கிரம்' என்றும் அழைக்கப்பட்டது.

வாஸிஷ்ட சித்தாந்தம் பிறழ் மாதத்திற்கு (anomalistic month) இரண்டு வெவ்வேறு கால அளவுகளைப் பதிவு செய்கிறது. முதலாவது சற்று எளிமையானது: 248/9 நாட்கள், அல்லது சுமார் 27.5556 நாட்கள். இதை மெய் அளவோடு ஒப்பிட்டால் வெறும் சுமார் 0.00104 நாட்கள் மட்டுமே வேறுபடுகிறது.

மற்றொரு பகுதியில், பிறழ் மாத காலம் 3031/110 நாட்கள் என்ற மிகத் துல்லியமான மதிப்பீட்டைத் தருகிறது. இது சுமார் 27.5545 நாட்களுக்குச் சமம். அதாவது மெய் அளவிலிருந்து வெறும் 0.00000579 நாட்கள் மட்டுமே வேறுபடுகிறது. அவ்வளவு துல்லியமாக உற்றுநோக்கி நிலவின் இயக்கத்தைப் பண்டைய வானவியல் அறிஞர்கள் கணித்துள்ளனர்.

(கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clydzv34p70o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.