Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாசுகி கணேசானந்தனின் “Brotherless Night”

குடும்பத்தை விடுமுறைக் கால அங்காடி மேய்தலுக்காக இறக்கி விட்டு பார்ன்ஸ் அன்ட் நோபிள் புத்தகக் கடைக்குள் நுழைந்து நடந்த போது தற்செயலாகக் கண்ணில் பட்டது வி.வி. கணேசானந்தனின் "Bortherless Night” என்ற நாவல்.

large.Frontcoverbrotherlessnight.jpg

இது இந்திய எழுத்தாளரின் படைப்பா அல்லது  இலங்கை எழுத்தாளரினுடையதா என்ற  குழப்பத்திற்கான விடை அட்டைப் படத்திலேயே தெரிந்தது:  சைக்கிளோடும் பெண்கள் எங்கள் ஊர் வர்த்தகச் சின்னங்கள், ஒரு heritage என்று கூடச் சொல்லலாம். அதிகம் புனைவுகளை வாசிக்காத நான், ஒரு ஆர்வத்தில் வாங்கி வந்து ஆமை வேகத்தில் வாசித்து முடித்தேன். இதைப் பற்றி எழுதுவதா, தவிர்ப்பதா என்ற குழப்பத்தில் இருந்த போது விவிஜி யின் இன்னொரு சிறுகதை யாழில் இணைக்கப் பட்டிருந்தது நினைவிற்கு வந்தது. 

விவிஜி நேரடியாக "நாவல்" என்று மட்டும் குறிப்பிட்டிருந்தாலும் கூட, இது ஒரு “வரலாற்று நாவல்”. 83 கலவரத்தில் பாதிக்கப் பட்ட ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம், வடக்கு நோக்கிக் குடிபெயர்ந்து அதன் பின்னர் படிப்படியாக உள் நாட்டுப் போரினால் சூழ்ந்து கொள்ளப் பட்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. கொழும்பில் ஆரம்பிக்கும் நாவல் 2009 இல் நியூயோர்க்கில் முடிவடைகிறது.   மிகச் சுருக்கமாகச் சொன்னால், 83 இல் இருந்து 2009 விடுதலைப் போரின் ஆயுதப் போராட்டம் நிறைவடையும் வரையான சம்பவங்களே நாவலின் சம்பவங்களாக விரிகின்றன. இந்த சம்பவங்களின் நாயகர்களும், நாயகிகளும் கூட, பெருமளவுக்கு நிஜமாக அந்தக் காலப் பகுதியில் வாழ்ந்த மனிதர்களே என்பது அந்தக் காலப் பகுதியில் வாழ்ந்த ஒரு வாசகருக்கு இலகுவாகப் புரியும்.   எனவே, இந்தக் காலப் பகுதியில் வடக்கில் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகள், அரசியல் படுகொலைகள், இந்திய இராணுவ வருகையின் பின்னர் மோசமான மனித உரிமைகளின் நிலை, திலீபனின் உண்ணா நோன்பு, அந்தக் காலப் பகுதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வான ராஜினி திராணகம படுகொலை என்பன நாவலின் மையங்களாகத் திகழ்கின்றன. இந்த நிகழ்வுகளின் விபரிப்பின் போது, பின்னணியில் வந்து போகும் பாத்திரங்களில் அந்தக் காலத்து புலிகள் இயக்கப் பிரமுகர்களையும் கூட இலகுவாக அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது. கிட்டு மாமா தனது "Honda CD200" இல் யாழ் வீதிகளில் பறக்கும் போது அவரது தோள்களில் சில சமயங்களில் அமர்ந்து பயணிக்கும் செல்லப் பிராணியான “மகாக்” குரங்கு கூட வந்து போகிறது கதையில்.

என்னுடைய புரிதலின் படி, நாவலின் முதுகெலும்பாகத் திகழ்வது புலிகள் அமைப்பு எவ்வாறு மாற்றுக் கருத்துக்களை அனுமதிக்காத, ஒற்றைத் தலைமையைத் தமிழர்களிடம் ஊன்ற விளைந்த ஒரு அமைப்பாகத் திகழ்ந்தது என்ற கதையாடல் தான். இலங்கை இராணுவம்/அரசு, புலிகள் அமைப்பு, இந்திய இராணுவம் என எல்லாத் தரப்புகள் மீதும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விமர்சனம் வைக்கப் பட்டிருந்தாலும், மிகப் பெரும்பான்மையான விமர்சனம் புலிகள் அமைப்பு மீதும், அடுத்த படியாக அதிக பட்ச விமர்சனம் இந்திய இராணுவம் மீதும் வைக்கப் பட்டு எழுத்தாளர் கதையாடலைக் கொண்டு செல்கிறார். 

புலிகள் அமைப்புப் பற்றிய விமர்சனங்களைப் பொறுத்த வரையில், சில விடயங்களில் உண்மைத் தன்மையும், உறுதி செய்யப் பட்ட தகவல்களும் அடிப்படையாக அமைந்திருந்தாலும், சில முக்கியமான இடங்களில் இணையத்தில் நடக்கும் அரட்டைகளின் வழி பெற்ற தகவல்களும், புலிகளின் எதிர்ப்பாளர்கள் கட்டிய கதைகளும் அடிப்படையாக பயன் பட்டிருக்கின்றன. உதாரணமாக, 90 களில் துரோகிகள் எனக் குற்றஞ் சாட்டப் பட்டு மின்சாரத் தூண்களில் கட்டிச் சுட்டுக் கொல்லப் பட்டவர்கள் அதிகமானோர் சாதி நிலையில் குறைந்தவர்களாக இருக்கலாம் என்ற அடிப்படையில்லாத சந்தேகங்கள் நாவலில் குறிப்பிடப் படுகின்றன. இப்படிக் கொல்லப் பட்டோர் எல்லோரும் துரோகிகள் அல்ல என்பது ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும், ஆனால் சாதி வேற்றுமை இவர்களது கொலைக்குக் காரணமாக இருந்தது என்பது தரவுகள் இல்லாத ஒரு புனைவு.  இதே போல இன்னொரு உதாரணமாக பெண் கரும்புலியாகச் செல்லும் ஒரு போராளி இந்திய இராணுவத்தால் வல்லுறவுக்குள்ளான ஒருவர் என்ற சித்திரிப்பும் தெரிகிறது. பாலியல் பலாத்காரத்திற்குள்ளான ஒரு பெண்ணிற்கு தமிழ் சமூகம் காட்டும் வேற்றுமையும், பழிவாங்கும் உணர்வும் கரும்புலிகளாக அந்தப் பெண்கள் மாற முதன்மைக் காரணம் என்பது போன்ற - சில சிங்கள/இந்திய பிரச்சாரவாதிகளால் கட்டப் பட்ட கதைகளின் அடிப்படையிலான- சித்தரிப்பு இது.

இந்தப் புலிகளின் மீதான விமர்சனம் என்பது "என் தனிப் பட்ட அரசியல்" என்ற பொறுப்புத் துறப்பை விவிஜி பின்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். வேறு யாரையும் அவர் குற்றம் சாட்டவில்லை. ஆனால், நாவலின் பின்னிணைப்பாக விவிஜி தந்திருக்கும் ஷெல்பி  போல்க் என்ற எழுத்தாளருடனான உரையாடலில், "முறிந்த பனை" நூலினை வாசித்த பின்னர் தான் இந்த நாவலை எழுதும் தூண்டுதல் எழுத்தாளருக்கு உருவானதாகக் குறிப்பிடுகிறார். இந்த நாவலுக்கான தன் ஆராய்ச்சியை பல்வேறு நூல்கள், குறுந்திரைப் படங்கள், கட்டுரைகள் வழியாக மேற்கொண்டதாகவும் எழுத்தாளர் குறிப்பிடுகிறார். இந்தக் கட்டுரைகள், இலங்கையின் உள்நாட்டுப் போர் தொடர்பான நூல்கள் அனேகமானவை இந்தியாவின் நாராயணசாமி, இலங்கையின் அகிலன் கதிர்காமர், திருவரங்கன், ஹூல் சகோதரர்கள் ஆகியோரினால் எழுதப் பட்டிருப்பவையாக எனக்குத் தெரிகின்றன (நாவலின் மேலதிக வாசிப்புப் பட்டியலில் இவை இருக்கின்றன).  

அடிக்கடி இங்கே நான் தாயகத்தை  "சின்னத்திரையில் பார்த்து விட்டு எழுதுவோர்" என்று சிலரைக் கண்டிப்பதுண்டு. அதே போல, ஒரு உள்நாட்டுப் போரின்  சமூகவியலை - அதுவும் பெரும்பாலும் போரினால் பாதிக்கப் பட்ட தமிழ் சிவிலியன்களின் சமூகவியலை- வெறுமனே, ஒரு குறிப்பிட்ட பார்வை உடைய தரப்பின் வரலாற்று நூல்கள் , கட்டுரைகள்  வழியாக மட்டுமே வாசித்து ஆய்வு செய்து ஒரு வரலாற்றுப் புனைவை விவிஜி உருவாக்கியிருக்கிறார் எனக் கருதுகிறேன். இது அவரது படைப்புச் சுதந்திரம் என்றாலும், இதனால் புலிகளின் ஆட்சி மோசமான அடக்கு முறைக் கூறுகள் மட்டுமே கொண்ட ஒரு இஸ்லாமிய ஆயுதக் குழுவின் ஆட்சி போன்றது என்ற விம்பத்தை உண்மை நிலவரம் தெரியாத வாசகர்களிடம் ஏற்படுத்தி விடும் பேராபத்து இருக்கிறது. 

இது ஆங்கில வாசகர்களை நோக்கிய ஒரு நாவல் என்பதால் இந்த ஆபத்து நிச்சயமாக இருக்கிறது. விவிஜியின் எழுத்துலகப் பிரசன்னம் காரணமாக, அவரது முதல் நாவலான “Love Marriage” சுவீடிஷ், பிரெஞ்சு, குரோஷிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. அதே போல இந்த நாவலும் மொழி மாற்றம் செய்யப் படும் போது, ஒரு வரலாற்றுப் புனைவினூடாக தமிழர்களின் ஆயுதப் போராட்டம் குறித்து நியாயமில்லாத ஒரு கதையாடலை பரப்பும் பேராபத்தும் இருக்கிறது.

-ஜஸ்ரின்

வாசுகி கணேசானந்தன்: அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் ஆங்கில உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் வி.வி.கணேசானந்தன், இது வரை இரண்டு நாவல்களை வெளியிட்டுள்ளார். இவரது இரண்டாவது நாவலான “Brotherless Night” அமெரிக்க NPR இன் "ஆண்டின் சிறந்த நூல்-2024" என்ற கௌரவம் பெற்றிருக்கிறது. மேலும், 2024 இல், Women’s Prize for Fiction, Carol Shields Prize, New York Times Editors’ Choice ஆகிய கௌரவங்களையும், பரிசுகளையும் பெற்றிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவரை முன்னர் அறிந்திருக்கவில்லை. அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஜஸ்டின்.

உங்களின் மிகச் சுருக்கமான வடிவத்தில் இருந்து, இந்த நாவல் மிகவும் பக்கச் சார்பாகவும், அடிப்படையிலேயே தவறுகள் உள்ளது போன்றும் தெரிகின்றது. ஆனாலும் நேரம் கிடைக்கும் போது இதை வாசிக்க வேண்டும் என்றிருக்கின்றேன்.

எவ்வளவு தான் மொழிகளில் ஆற்றல்கள் இருந்தாலும், மண்ணுடனும் அங்கிருந்த மனிதர்களுடனும் ஒட்டி ஒட்டி வாழ்ந்திருக்கா விட்டால், பல விடயங்களை என்றுமே புரிந்துகொள்ள முடியாது என்றே நினைக்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.