Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் மாதம் தொடங்கிக் கொண்டிருந்த புத்தாண்டை ஜூலியஸ் சீசர் ஜனவரியாக மாற்றியது ஏன்?

மார்ச் மாதம் தொடங்கிக் கொண்டிருந்த புத்தாண்டை ஜூலியஸ் சீசர் ஜனவரியாக மாற்றியது ஏன்?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜூலியஸ் சீசர் ரோமானிய நாட்காட்டியில் இருந்த குழப்பங்களைத் தீர்க்க சீர்திருத்தங்களை மேற்கொண்டார்

கட்டுரை தகவல்

  • க.சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஜனவரி 1, இன்று உலகம் முழுவதும் மக்கள் புத்தாண்டை வரவேற்கின்றனர். இது இப்போதைய காலகட்டத்தில் இயல்பான ஒன்றாகத் தோன்றினாலும், எப்போதுமே இப்படி இருந்ததில்லை.

உண்மையில், நவீன கால நாட்காட்டிகளின் மூலமாக இருக்கக்கூடிய பண்டைய ரோம் அதன் கால அளவுகோல்களில் ஆண்டின் முதல் மாதமாக ஜனவரியை கருதவில்லை. ஆம், அப்போது மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதமாகக் கணக்கிடப்பட்டது.

ஆண்டின் தொடக்கம் மார்ச் மாதத்தில் இருந்து ஜனவரி மாதத்திற்கு மாறியதன் பின்னணியில் நாட்காட்டி குழப்பங்கள், அரசியல் தேவைகள், வானியல் திருத்தங்கள் எனப் பல காரணிகள் பங்கு வகிக்கின்றன.

ஜனவரி எப்போது, எப்படி ஆண்டின் முதல் மாதமாக மாறியது என்பதைப் புரிந்துகொள்ள, ரோமானிய நாட்காட்டி அடைந்த பரிணாம வளர்ச்சிகளை நாம் அறிய வேண்டும். அதில் அடுத்தடுத்து நிகழ்ந்த தவறுகள் எப்படி பெரிய சீர்திருத்தங்களைச் செய்வதற்கான உந்துதலாக அமைந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மார்ச் முதல் தொடங்கிய ரோமானிய ஆண்டுகள்

ஆரம்பக் கால ரோமானிய நாட்காட்டி சந்திரனின் சுழற்சிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டதாக 'அவர் காலண்டர்: தி ஜூலியன் காலண்டர் அண்ட் இட்ஸ் எரர்ஸ்' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

இந்த நாட்காட்டியை நவீன கண்ணோட்டத்தில் பார்க்கும்போது உங்களுக்கு வினோதமாகத் தெரியலாம். அந்த நாட்காட்டியின்படி, மார்ச் மாதத்தில் இருந்து ஆண்டு தொடங்குகிறது. அதோடு, ஓர் ஆண்டுக்கு வெறும் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன.

அந்தப் பத்து மாதங்களில், ஆறு 30 நாட்களுடனும் நான்கு 31 நாட்களுடனும் இருந்துள்ளன. ஆண்டின் கடைசி மாதமாக டிசம்பர் இருந்துள்ளது.

மேக்ரோபியஸ், சென்சோரினஸ் போன்ற பண்டைய ரோமானிய தத்துவஞானிகளின் கூற்றுப்படி, ஓர் ஆண்டுக்கு பத்து மாதங்களும் 304 நாட்களும் மட்டுமே இருந்தன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

மார்ச் மாதம் தொடங்கிக் கொண்டிருந்த புத்தாண்டை ஜூலியஸ் சீசர் ஜனவரியாக மாற்றியது ஏன்?

பட மூலாதாரம்,Getty Images

ரோமானிய நாட்காட்டியின்படி,

  • மார்ச், மே, குயின்டிலிஸ், அக்டோபர் மாதங்கள் 31 நாட்களைக் கொண்டிருந்தன.

  • ஏப்ரல், ஜூன், செக்ஸ்டிலிஸ், செப்டம்பர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் 30 நாட்களைக் கொண்டிருந்தன.

இந்த வரிசையில், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகியவை முறையே ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது மாதங்களாகக் கணக்கிடப்பட்டன. அதில் மொத்தம் 304 நாட்கள் இருந்தன. மேலும் வரலாற்றுப் பதிவுகளின்படி, அப்போது ஜனவரி, பிப்ரவரி என்ற மாதங்களே இருந்திருக்கவில்லை.

அப்படியெனில் மீதி நாட்கள் என்னவாயின? அந்த நாட்காட்டியில் குளிர்காலம் கணக்கிடப்படவில்லை. ஆண்டின் அந்த இரு மாதங்களுக்கு விவசாயமே நடக்காது என்பதால், அந்த நாட்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சூரியன் உதித்தது, மறைந்தது. ஆனால், ஆரம்பக்கால நாட்காட்டியின்படி, அதிகாரபூர்வமாக ஒரு நாள்கூட கடக்கவில்லை. இந்தச் சிக்கலை, நாட்காட்டியில் நிலவிய குழப்பத்தை ரோமின் இரண்டாவது மன்னரான நூமா போம்பிலியஸ் நிவர்த்தி செய்ய முயன்றார்.

மார்ச் மாதம் தொடங்கிக் கொண்டிருந்த புத்தாண்டை ஜூலியஸ் சீசர் ஜனவரியாக மாற்றியது ஏன்?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜூலியஸ் சீசர் ஜனவரி மாதத்தை மீண்டும் ஆண்டின் முதல் மாதமாக கி.மு.45 முதல் கொண்டு வந்தார்

ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் சேர்க்கப்பட்டது எப்படி?

ரோமானிய நாட்காட்டியில் நிலவிய இந்தக் குழப்பத்தைச் சரிசெய்ய, நூமா போம்பிலியஸ்தான் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களைச் சேர்த்தார்.

கடந்த 1921ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பதிப்பகம் வெளியிட்ட 'தி காலண்டர்: இட்ஸ் ஹிஸ்டரி, ந்ச்சர் அண்ட் இம்ப்ரூவ்மென்ட்' என்ற நூல் இதுகுறித்துப் பேசுகிறது. அதன்படி, "நூமா கூடுதலாக 50 நாட்களைச் சேர்த்து, ஆண்டின் நாள் கணக்கை 354 நாட்களாக உயர்த்தியதாகக் கூறுகிறது. ஆனால், ரோமானியர்கள் இரட்டைப்படை எண்களை துரதிர்ஷ்டமானவை என்று நம்பினர்.

இதற்காக அவர் பல மாதங்களின் மொத்த நாள் கணக்கை 30இல் இருந்து 29 ஆகக் குறைத்து, கூடுதலாக 50 நாட்களைச் சேர்த்து 12 மாதங்கள் கொண்ட நாட்காட்டியை உருவாக்கினார்."

ஜனவரி மாதத்தில் இரட்டைப்படை எண்ணிக்கையில் நாட்கள் இருந்ததால் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்பட்டது. பிப்ரவரி மாதம், பாதாள தெய்வங்களுடன் தொடர்புடையதாக இருந்ததால், அதற்கு இரட்டைப்படை எண்ணிக்கையில் நாட்கள் ஒதுக்கப்பட்டன. இந்தச் சீர்திருத்தத்தை செய்ததன் மூலம் போம்பிலியஸ் ஆண்டின் நாள் கணக்கை 355 ஆக உயர்த்தினார்."

கி.மு.700ஆம் ஆண்டு வாக்கில், நூமா போம்பிலியஸ் ஆட்சியின்போது ரோமானிய ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு புதிய மாதங்கள் சேர்க்கப்பட்டன. ஜனவரி ஆண்டின் தொடக்கத்திலும், பிப்ரவரி ஆண்டின் இறுதியிலும் சேர்க்கப்பட்டன.

மார்ச் மாதம் தொடங்கிக் கொண்டிருந்த புத்தாண்டை ஜூலியஸ் சீசர் ஜனவரியாக மாற்றியது ஏன்?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ரோமானிய நாட்காட்டியில் சூரிய ஆண்டைவிட 10 நாட்கள் குறைவாக இருந்ததால், பருவங்களின் காலம் மாறிக்கொண்டே இருந்தது

குழப்பத்தில் தத்தளித்த ரோமானிய நாட்காட்டி

ஒரு நாட்காட்டி சரியாகச் செயல்படுவதற்கு, சிவில் ஆண்டுக் கணக்கு சூரிய ஆண்டுடன் பொருந்தி வரவேண்டும். அப்போதுதான் ஒவ்வோர் ஆண்டிலும் பருவ காலங்கள் ஒரே நேரத்தில் திரும்ப வரும்.

சிவில் ஆண்டு நீளமாக இருந்தால், பருவகாலங்கள் மெதுவாகப் பின்னோக்கி நகரும். அதுவே மிகக் குறுகியதாக இருந்தால், பருவகாலங்கள் வேகமாக முன்னோக்கி நகரும்.

'அவர் காலண்டர்: தி ஜூலியன் காலண்டர் அண்ட் இட்ஸ் எரர்ஸ்' நூலின்படி, "பண்டைய எகிப்தியர்கள் ஆண்டுக்கு 12 மாதங்களையும், மாதத்திற்கு 30 நாட்களையும் கொண்ட எளிய முறையைப் பயன்படுத்தினர். அதோடு, ஆண்டின் இறுதியில் கூடுதலாக ஐந்து நாட்களைச் சேர்த்தனர்.

ஆனால் அவர்கள் மிகுநாளாண்டு (Leap year) முறையைப் பின்பற்றாத காரணத்தால், ஒவ்வோர் ஆண்டும் கால் பங்கு நாளின் கணக்கு தவறியது. இதன் விளைவாக எகிப்திய புத்தாண்டு ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு நாட்களில் வந்தது. இதனால் எகிப்திய நாட்காட்டி நிலையற்றதாக இருந்தது."

இதுவே ரோமானிய நாட்காட்டியை எடுத்துக்கொண்டால், வேறொரு பிரச்னை நிலவியது. நூமா மாதங்களை பன்னிரண்டாக மாற்றி, ஆண்டுக்கு 355 நாட்கள் கொண்ட நாட்காட்டியை கொண்டு வந்தார். இருந்தாலும், இதன்படியான ஆண்டுக் கணக்கு சூரிய ஆண்டைவிட சுமார் 10 நாட்கள் குறைவாக இருந்தது.

மார்ச் மாதம் தொடங்கிக் கொண்டிருந்த புத்தாண்டை ஜூலியஸ் சீசர் ஜனவரியாக மாற்றியது ஏன்?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஆரம்பக்கால ரோமானிய நாட்காட்டியில் பத்து மாதங்களே இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன

இதைச் சரிசெய்யவில்லை என்றால் ஒவ்வோர் ஆண்டும் பருவங்களின் காலம் மாறிக்கொண்டே இருக்கும். இதற்கு நூமா ஒரு தீர்வைக் கொண்டு வந்தார். அதாவது மற்றுமொரு புதிய மாதத்தை இடைச்செருகலாக சேர்த்தார். இந்தப் புதிய மாதம், பிப்ரவரி 23 மற்றும் 24ஆம் தேதிக்கு இடையே சேர்க்கப்பட நூமா உத்தரவிட்டார்.

இந்த இடைச்செருகல் மாதத்தில் ஓர் ஆண்டில் 22 நாட்கள், மற்றோர் ஆண்டில் 23 நாட்கள் என மாறி மாறி இருந்து வந்தது. இதனால், நான்கு ஆண்டுகளில் 1420 நாட்களுக்குப் பதிலாக மொத்தம் 1,465 நாட்கள் உருவாயின. அதாவது, சராசரி ஆண்டின் நாட்கள் எண்ணிக்கையை 366¼ நாட்கள் என்றானது. இதன் விளைவாக, சூரிய ஆண்டைவிட ஒரு நாள் கூடுதலாகக் கணக்கிடப்படும் நிலை உருவானது.

பின்னர், இந்தப் புதிய பிழையைச் சரிசெய்ய, ஒவ்வொரு மூன்றாவது எட்டு ஆண்டு காலத்திலும் நான்கு இடைச்செருகல் மாதங்களுக்குப் பதிலாகத் தலா 22 நாட்களைக் கொண்ட மூன்று இடைச்செருகல் மாதங்கள் மட்டுமே இருக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. இது 24 ஆண்டுகளில் 24 நாட்களைக் குறைத்து, சராசரி ஆண்டை 365¼ நாட்களாகக் குறைத்து, நாட்காட்டி கணக்கீட்டை சூரிய ஆண்டுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு வந்தது.

கோட்பாட்டின்படி, இந்த அமைப்பு நன்றாகச் செயல்பட்டிருக்க முடியும். ஆனால் நடைமுறையில் இந்த இடைச்செருகல்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மதகுருமார்களிடம் இருந்தது.

அவர்கள் அரசியல் காரணங்களுக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினர். ஒரு நீதிபதியின் பதவிக்காலத்தை நீட்டிக்க ஆண்டில் ஓர் ஆண்டின் காலகட்டத்தை நீட்டிப்பது, தேர்தல்களை விரைவுபடுத்த ஆண்டை சுருக்குவது போன்றவற்றில் ஈடுபட்டனர். இத்தகைய தந்திரங்களின் விளைவாக, ரோமானிய நாட்காட்டி பெரும் குழப்பத்தில் சிக்கித் தத்தளித்தது.

மார்ச் மாதம் தொடங்கிக் கொண்டிருந்த புத்தாண்டை ஜூலியஸ் சீசர் ஜனவரியாக மாற்றியது ஏன்?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ரோமின் இரண்டாவது மன்னர் நூமா போம்பிலியஸ், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களை ரோமானிய நாட்காட்டியில் சேர்த்தார்

மீண்டும் மார்ச் மாதமாக மாறிய ஆண்டு தொடக்கம்

"ஓவிட் என்ற ரோமக் கவிஞரின் கூற்றுப்படி, நூமா போம்பிலியஸ் கொண்டு வந்த நாட்காட்டி முறை கி.மு.452 வரை பயன்பாட்டில் இருந்தது" என்று தி காலண்டர்: இட்ஸ் ஹிஸ்டரி, ஸ்டிரக்ச்சர் அண்ட் இம்ப்ரூவ்மென்ட் என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

பின்னர், "டிசெம்வீர் என்று அழைக்கப்படும் பத்து ரோமானிய நீதிபதிகள் அடங்கிய குழு மீண்டும் மாதங்களின் வரிசையை மாற்றி மார்ச் மாதத்தையே முதல் மாதமாக நிர்ணயித்தது."

இதன் மூலம் நூமாவுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த பழைய மரபுக்கே ரோம் திரும்பியது. ஆனால், இந்தத் திருத்தங்களும்கூட நாட்காட்டியில் நிலவிய ஆழமான சிக்கலைத் தீர்க்கவில்லை, குழப்பம் தொடர்ந்தது.

ஜூலியஸ் சீசரின் காலப்பகுதியில், சூரிய ஆண்டுக்கும் ரோமானிய நாட்காட்டி படியான ஆண்டுக்கும் இடையே சுமார் மூன்று மாதங்கள் வேறுபாடு இருந்தது.

குளிர்காலம் இலையுதிர் காலத்திலும், இலையுதிர் காலம் கோடைக்காலத்திலும் வந்தன. இப்படியாக வளர்ந்து வந்த குழப்பம், நாட்காட்டியை முற்றிலுமாகச் சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது.

ஜூலியஸ் சீசர் கொண்டு வந்த சீர்திருத்தம்

இவ்வளவு குழப்பங்கள் நிறைந்த கால அளவீடுகளைப் பார்த்த ஜூலியஸ் சீசர், கி.மு. 46இல் சோசிஜெனெஸ் என்ற அலெக்சாண்டிரிய வானியலாளரின் உதவியுடன், ரோமானிய நாட்காட்டியில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை செய்தார்.

ரோமானிய பண்டிகைகள் அனைத்தும் பருவ காலங்களைச் சார்ந்தே இருந்ததால், நாட்காட்டியிலுள்ள குழப்பங்களைச் சரி செய்வதை அவசியமானதாகக் கருதினார் சீசர்.

மார்ச் மாதம் தொடங்கிக் கொண்டிருந்த புத்தாண்டை ஜூலியஸ் சீசர் ஜனவரியாக மாற்றியது ஏன்?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜூலியஸ் சீசர் நாட்காட்டியில் சீர்திருத்தங்களை மேற்கொண்ட கி.மு.46ஆம் ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது

அதுவரைக்கும் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்பட்டு வந்த முறையை முற்றிலுமாகக் கைவிட முடிவு செய்தார் ஜூலியஸ் சீசர். மேலும், சூரியனை அடிப்படையாகக் கொண்ட, 365 நாட்கள் மற்றும் 6 மணிநேரங்களைக் கொண்ட ஆண்டு நாட்காட்டியை ஏற்றுக்கொள்வது அவரது முக்கிய முடிவாக இருந்தது.

ஆனால், இதற்காக அவர் கி.மு.46 என்ற ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மட்டும் பற்பல மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. இதனால் அந்த ஆண்டு வரலாற்றில் 'குழப்பமான ஆண்டு (The Year of Confusion)' என்ற பெயரையும் பெற்றது.

கி.மு.46இல், பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு, சீசர் வழக்கம் போல 23 நாட்களைக் கொண்ட இடைச்செருகல் மாதம் ஒன்றைச் சேர்த்தார். இதன் மூலம், ஜனவரியில் 29 நாட்கள், பிப்ரவரியில் 28 நாட்கள் மற்றும் இடைச்செருகல் மாதத்தில் 23 நாட்கள் என மொத்தம் 80 நாட்கள் ஆனது.

பின்னர், அதே ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையிலும் முறையே 34 மற்றும் 34 நாட்களைக் கொண்ட இரு மாதங்களைக் கூடுதலாகச் சேர்த்தார். இதன் மூலம் கி.மு.46 மொத்தமாக 445 நாட்களைக் கொண்ட ஆண்டாக அமைந்தது. அதோடு, ரோமானிய நாட்காட்டியில் நிலவிவந்த குழப்பங்களும் சரி செய்யப்பட்டன.

ஜூலியஸ் சீசர் பல்வேறு மாற்றங்களைப் புகுத்தி, நாட்காட்டியில் நிலவி வந்த குழப்பங்களுக்குத் தீர்வு கண்ட கி.மு.46-ஐ "கடைசி குழப்பமான ஆண்டு" என்று ரோம தத்துவஞானி மேக்ரோபியஸ் விவரித்துள்ளார்.

மார்ச் மாதம் தொடங்கிக் கொண்டிருந்த புத்தாண்டை ஜூலியஸ் சீசர் ஜனவரியாக மாற்றியது ஏன்?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கி.மு. 8இல் அகஸ்டஸ் சீசரின் பெயரால், 'செக்ஸ்டிலிஸ்' என்ற மாதம் ஆகஸ்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது

ஜூலியன் சீர்திருத்தத்திற்குப் பிறகு...

ஜூலியஸ் சீசர் உருவாக்கிய புதிய கால அளவுகோலின்படி, ஓர் ஆண்டுக்கு 365 நாட்கள் இருந்தன. ஒவ்வொரு நான்காவது ஆண்டும் ஒரு கூடுதல் நாள் சேர்க்கப்பட்டு, அது மிகுநாளாண்டாக (Leap Year) கணக்கில் கொள்ளப்பட்டது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்ற மிகுநாள், பிப்ரவரி மாதத்தில் சேர்க்கப்பட்டது. கி.மு.45 சீசரால் சீர்திருத்தப்பட்ட முதல் ஆண்டாக இருந்தது.

'அவர் காலண்டர்: தி ஜூலியன் காலண்டர் அண்ட் இட்ஸ் எரர்ஸ்' நூலிலுள்ள தகவலின்படி, கி.மு.45ஆம் ஆண்டின் முதல் மாதமாக ஜனவரி மீண்டும் முன்னுக்கு கொண்டுவரப்பட்டது.

கி.மு.44ஆம் ஆண்டு, சீசரின் நினைவாக 'குயின்டிலிஸ்' என்ற மாதம் ஜூலை எனப் பெயர் மாற்றப்பட்டது. கி.மு.8ஆம் ஆண்டு, அகஸ்டஸ் சீசரின் பெயரால், 'செக்ஸ்டிலிஸ்' என்ற மாதம் ஆகஸ்ட் என்று மாற்றப்பட்டது.

இதற்குப் பிறகும்கூட, ரோமானிய மதகுருமார்கள் மிகுநாளாண்டு விதியைத் தவறாகப் புரிந்துகொண்டு, நான்கு ஆண்டுகளுக்குப் பதிலாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகுநாளைச் சேர்த்தனர்.

இதனால் 36 ஆண்டுகளுக்கு நீடித்த இந்தச் சிக்கல், கி.மு.9 மற்றும் கி.பி.3ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சரிசெய்யப்பட்டது. அதன் பிறகு ஜூலியன் காலண்டர் சரியாகச் செயல்பட்டது.

மார்ச் மாதம் தொடங்கிக் கொண்டிருந்த புத்தாண்டை ஜூலியஸ் சீசர் ஜனவரியாக மாற்றியது ஏன்?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,போப் 13ஆம் கிரிகோரி

ஜூலியன் நாட்காட்டியில் இருந்த சிறு பிழை

சீசர் ஒரு சூரிய ஆண்டு 365 நாட்கள் மற்றும் 6 மணிநேரம் நீளம் கொண்டது எனக் கருதினார். ஆனால் உண்மையில் அதன் நீளம், 365 நாட்கள், 5 மணிநேரம், 48 நிமிடம் மற்றும் 46 விநாடிகளாக இருந்தது.

அதாவது, ஜூலியன் நாட்காட்டியில், ஓராண்டுக்கான கால அளவு 11 நிமிடங்கள், 14 விநாடிகள் நீளமாக இருந்தது.

இந்தப் பிசிறு ஆரம்பத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், அடுத்தடுத்து வந்த நூற்றாண்டுகளில் வானியல் கணக்குகளில் சில குழப்பங்களை ஏற்படுத்தியது.

குறிப்பாக, ஈஸ்டர் நாள் கடைபிடிக்கப்பட்டபோதுதான், இந்தப் பிசிறு பெரும்பான்மையாக கவனத்தை ஈர்த்தது.

உதாரணமாக, கி.பி.325இல், வசந்தகாலத்தில் மார்ச் 24ஆம் தேதி வரவேண்டிய சம இரவு நாள் (spring equinox), மார்ச் 21இல் வந்தது. காலம் நகர்ந்து கொண்டேயிருக்க, அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் வசந்தகால சம இரவு நாளும் மேலும் மேலும் முன்கூட்டியே வந்து கொண்டிருந்தது. இதன் நீட்சியாக, 1545ஆம் ஆண்டளவில், சமஇரவு நாள் மார்ச் 11க்கு சரிந்திருந்தது.

"ஒவ்வோர் ஆண்டும் வசந்தகால சம இரவு பகல் (Vernal Equinox) நாளுக்குப் பிறகு தோன்றும் முதல் முழு நிலவு நாளை அடிப்படையாக வைத்து பண்டிகை கொண்டாடப்பட்டதாகவும் அதைச் சரியாகக் கணக்கிடுவதில் ஜூலியன் நாட்காட்டி குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும்" 'தி கேலண்டர்: இட்ஸ் ஹிஸ்டரி, ஸ்டிரக்ச்சர் அண்ட் இம்ப்ரூவ்மென்ட்' நூலில் அதன் ஆசிரியர் அலெக்சாண்டர் பிலிப் குறிப்பிட்டுள்ளார்.

"ஜூலியன் நாட்காட்டியின்படி, ஒராண்டுக்கு 365.25 நாட்கள். ஆனால், உண்மையில் ஓராண்டுக்கு 365.24219 நாட்கள். இதனால், ஒவ்வோர் ஆண்டிலும் சிற்சில நிமிடங்கள் என்ற அளவில் உண்மையான கால அளவு மாறிக் கொண்டே வந்தது.

அதாவது 128 ஆண்டுகளுக்கு ஒரு நாள் என்ற கணக்கில் வானியல் நிகழ்வுகள் முன்னதாகவே நிகழ்ந்துகொண்டிருந்தன," என்று எட்வர்ட் கிரஹாம் ரிச்சர்ட்ஸ் தனது மேப்பிங் டைம்: தி காலண்டர் அண்ட் இட்ஸ் ஹிஸ்டரி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியில், இந்தப் பிரச்னைக்கு 1572ஆம் ஆண்டில் 13ஆம் கிரிகோரி போப் ஆனபோது தீர்வு கிடைத்தது.

வானியலாளரும் காலக்கணிப்பு வல்லுநருமான அலோய்சியஸ் லிலியஸ் இதற்குத் தீர்வாக ஒரு திட்டத்தை முன்வைத்தார். அதற்கு, 1582 பிப்ரவரி 24ஆம் தேதியன்று போப் 13ஆம் கிரிகோரி ஒப்புதல் வழங்கினார்.

அந்த ஒப்புதல் படிவத்தின்படி, நாட்காட்டியை சரி செய்வதற்காக பத்து நாட்கள் நீக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1582ஆம் ஆண்டில் அக்டோபர் 4ஆம் தேதிக்குப் பிறகு வந்த நாள் 15ஆம் தேதியாகக் குறிப்பிடப்பட்டது என்று அலெக்சாண்டர் பிலிப் தனது நூலில் எழுதியுள்ளார்.

இப்படியாக, ஆரம்பக்கால ரோமில் மார்ச் மாதத்தில் தொடங்கிய புத்தாண்டு, நூமா, சீசர், 13ஆம் கிரிகோரி ஆகியோரின் காலத்தில் ஜனவரிக்கு மாற்றப்பட்டு, இன்றளவும் ஜனவரியே புத்தாண்டு மாதமாக நீடித்து வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2x9x9gkv7o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.