தகுமோ… இது முறையோ!
sudumanal
கிரீன்லாந்து விவகாரம்
image: axious. co
1721 இல் டென்மார்க் இனால் காலனியாக்கப்பட்டு, பின் இணைக்கப்பட்டதுதான் கிரீன்லாந்து தீவு. வரலாற்றுப் போக்கில் டென்மார்க் இத் தீவுக்கு ஒரு சுய ஆட்சிப் பிரதேசம் (Autonomous Territory) என்ற அந்தஸ்தைக் கொடுத்து வைத்திருக்கிறது. அவை இரண்டும் டென்மார்க் இராசதானி (Kingdom of Denmark)என்ற வடிவத்துள் இணைக்கப்பட்டுள்ளன. கிரீன்லாந்தின் வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு, நீதித்துறை என்பன டென்மார்க் இன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. பெருமளவு நிதி உதவியை டென்மார்க் வழங்குகிறது. அதிக இயற்கை கனிம வளங்களைக் கொண்டது இத் தீவு. அத்தோடு மேற்குப் பிராந்தியத்திற்கு மூலோபாய ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும்.
இதன் காரணமாக ட்றம்ப் கிரீன்லாந்த்து மீது கண் வைத்திருப்பதும் அதை அவர் கையகப்படுத்த உறுதியுடன் இருப்பதும் அழுத்தமாகத் தெரிகிறது. அவரது நிகழ்ச்சி நிரலில் அடுத்தது அதுதானா என்பதும், அத் தீவு போர் மூலம் கைப்பற்றப்படுமா என்பதும் சந்தேகத்துக்கு உரியன. அடுத்தது கிரீன்லாந்துதான் என எழுப்பிவிடப் பட்டிருக்கிற செய்தி ஒரு கவனத் திசைதிருப்பலாகவும் இருக்கலாம். எதிர்பாராமல் ஈரான் மீதோ கொலம்பியா மீதோ தாக்குதல் நடந்தாலும் ஆச்சரியமில்லை. ஈரானில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பின் சாதகமான நிலையை ஈரானிய மக்களின் அரசுக்கெதிரான போராட்டம் சிஐஏ க்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
கொலம்பியா அரச தலைவர் Gustavo Petro அவர்கள் முன்னாள் M-19 விடுதலை இயக்கப் போராளியாவார். இடதுசாரிய சிந்தனை முறை கொண்டவர். அதனால் ட்றம் க்கு அவர் ஒரு sick man ஆக தெரிகிறார். இதுகுறித்து ட்றம்ப் க்கு மிக காட்டமான முறையில் அவர் பதிலளித்திருக்கிறார். தான் சமாதான ஒப்பந்தத்துக்குப் பிறகு ஆயுதம் ஏந்துவதில்லை என முடிவெடுத்து இருந்ததாகவும், அமெரிக்கா போருக்கு வந்தால் அதன் பிறகு தான் மீண்டும் ஆயுதம் ஏந்தத் தயங்க மாட்டேன் எனவும் சொல்லியிருக்கிறார். வெனிசுவேலா தலைவரையும் துணைவியாரையும் கடத்தியது குறித்து ஒரு காட்டமான அரசியல் விமர்சனத்தையும் முன் வைத்திருக்கிறார். “விரும்பினால் வந்து கைது செய்” என ட்றம்ப் க்கு சவால் வேறு விடுத்திருக்கிறார். இது ஓர் இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறை இல்லாதிருக்கலாம். வாய்ச் சவடால் ஆகவும் இருக்கலாம். ஆனால் அமெரிக்காவுடனான போரில் வெற்றி பெறுவதான சவடால் அல்ல அது. தன்னை கைதுசெய்ய முடியாது என்பதான சவடாலுமல்ல. ஒரு போராளியாக இருந்த ஆன்மாவின் குரல் அது, அடங்க மறுக்கும் உணர்வு அது என புரிந்துகொள்ள இடமுண்டு. அதனால் கிரீன்லாந்தையும் விட, ட்றம்ப் கொலம்பியா அல்லது ஈரான் மீது முதலில் கவனத்தைக் குவித்திருக்க சாத்தியம் அதிகம் உள்ளது.
ட்றம்பின் இந்த ஒரு வருட ஆட்சியில் அவரது அணுகுமுறை இப்படி தடாலடியாகவேதான் நிகழ்த்தப்படுகிறது. கிரீன்லாந்து மீது ட்றம்புக்கு இருக்கிற கவனத்தை இது குறைத்து மதிப்பிடுவதாகாது. ஆனால் பலரும் எதிர்பார்ப்பதுபோல் கிரீன்லாந்தை ட்றம்ப் விரைந்து கைப்பற்றுவாரா என்பதுதான் கேள்வி. ஆட்சிக்கு வந்து இந்த ஒரு வருடத்தில் அவர் ஆறு நாடுகள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார். அதை போர் என்ற நிலைக்குள் நகர்த்தாமல் அச்சமூட்டுகிற வேலையோடும், மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடும் மட்டும் நிறுத்திக் கொண்டிருக்கிறார். ஈரான், ஈராக், சிரியா, நைஜீரியா, யேமன், இப்போ வெனிசுவேலா என குண்டுவீசி திரும்பியிருக்கிறார். வெனிசுவேலா மீது எல்லை மீறி நடந்திருக்கிறார். ஒரு நாட்டின் அதிபரை இன்னொரு வல்லாதிக்க நாட்டின் தலைவர் நாடு புகுந்து கடத்திக் கொண்டு வரலாம் என்ற செயலும், அதில் அரசியல் நியாயம் காண்பதும், ஆதரிப்பதும் மிக ஆபத்தானது. இதை மற்றைய வல்லாதிக்க நாடுகளும் கடைப்பிடித்தால் இந்த உலகம் என்னவாகும். இனி, வெனிசுவேலா மீது அவர் எடுக்கப்போகும் அடுத்த நடவடிக்கை எப்படி அமையப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். வெனிசுவேலா மண்ணில் அவர் இராணுவ ஆக்கிரமிப்பை அல்லது நிலைகொள்ளலை மேற்கொள்வதன் மூலம் அவர் சேற்றுள் கால்வைக்கப் போகிறாரா இல்லையா என்பது தெரிய வரும்.
“ஆக்ரிக் பகுதியிலுள்ள கிரீன்லாந்துக்கு குறுக்குமறுக்கான ரசியாவும் சீனாவும் ஓடித்திரிகிறது. அது மேற்கு பிராந்தியத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கிறது. அமெரிக்காவிற்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் இருக்கிறது. அவர்களை டென்மார்க் இனால் கையாள முடியாது. நேட்டோவின் அங்கமாக இருக்கிற எம்மால்தான் கையாள முடியும்” என்று நியாயம் கற்பிக்கிறார். “We need Greenland” என ஒரே போடாய்ப் போட்டிருக்கிறார்.
ஐரோப்பாவோ ஒரு நேட்டோ நாட்டை இன்னொரு நேட்டோ நாடு தாக்குவது “தகுமோ… இது முறையோ” என்ற றேஞ்ச் இல் வார்த்தைகளை அளந்து பேசுகிறார்கள். “அமெரிக்காவுக்கும் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கும் உறவு இருக்கிறது. அதன் அடிப்படையில் கிரீன்லாந்தில் அமெரிக்க படைத்தளமும் இருக்கிறது. கிரீன்லாந்தின் இறைமையை அமெரிக்கா மீறுவது சர்வதே சட்டவிதிகளுக்கு முரணானது” என்கிறார், Mette Frederiksen அவர்கள். அவரின் உயர்ந்தபட்ச மென்மையான எச்சரிக்கை “அது நடந்தால் அதுவே நேட்டோவின் முடிவாக இருக்கும்” என்பதுதான். அதற்கு அப்பால் போகவில்லை. அவர் வெனிசுவேலா மீதான ட்றம்ப் இன் செயலையும் கண்டிக்கவோ, ஆதாரம் காட்டிப் பேசவோ இல்லை. நேட்டோவின் 5வது சரத்துப்படி நேட்டோவிலுள்ள ஒரு நாட்டை தாக்கினால் அது நேட்டோவின் எல்லா நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குலாக கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகும். நேட்டேவுக்குள் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இடையில் இராணுவ தாக்குதல் அல்லது ஆக்கிரமிப்பு நடந்தால், எப்படி அது கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து தெரியவில்லை. அதுகுறித்து இந்த தலைவர்கள் எவரும் பேசிக் கேட்டதில்லை.
பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, ஸ்பெயின், போலந்து, இத்தாலி மற்றும் டென்மார்க் தலைவர்கள் ஒன்றுகூடி விட்டிருக்கும் அறிக்கையில் அமெரிக்காவின் இந்த முயற்சியை நேரடியாகக் கறாராகக் கண்டிக்காமல் வார்த்தைகளை கவனமாக வெளியிட்டிருக்கின்றனர். “கிரீன்லாந்து மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டும், மற்றவர்கள் அல்ல” என்கிறது அந்த அறிக்கை. அத்தோடு சர்வதேச சட்டவிதிகளை சுட்டிக்காட்டி, ஒரு நாட்டின் இறைமை பற்றி பேசுவதோடு அந்த அறிக்கை தீர்ந்து போகிறது. இதே சர்வதேச சட்டத்தை மதிக்காமல், ஐநாவின் பாதுகாப்புச் சபை அனுமதி பெறாமல், யூகோஸ்லாவியா, லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் என அமெரிக்கா தலைமையில்; நேட்டோ ஜக்கற் அணிந்து போருக்குப் போனபோது இந்த அறம் எங்கே ஒளிந்திருந்தது. இப்போதுகூட பெரும்பாலான ஐரோப்பிய தலைவர்களுக்கு வெனிசுவேலா மீதான இதே சர்வதேச சட்டவிதிகள், இறைமை என்ற அளவுகோல்கள் “செல்லாது செல்லாது” என்றே இருக்கிறது.
டென்மார்க் உட்பட்ட ஐரோப்பிய தலைவர்கள் கிரீன்லாந்துப் பிரச்சினையை இராஜதந்திர ரீதியில் அணுகி தீர்க்க ட்றம்பை சந்தித்து பேச இடமுண்டு. அதற்குமுன் அரச செயலர் மார்க்கோ ரூபியோ இவர்களைத் தேடி வரவிருக்கிறார். ட்றம்ப் கொம்பனி மூன்று தேர்வுகளை முன்வைத்திருக்கிறது. முதலாவது தேர்வு கிரீன்லாந்தை வாங்குவது. ஆனால் கிரீன்லாந்து மக்கள்” எமது நிலம் விற்பனைக்கு இல்லை” என திடமாகக் கூறுகிறார்கள். டென்மார்க்கும் அதை பலமுறை கூறிவருகிறது.
இரண்டாவது தேர்வு, ஒரு சட்டபூர்வமான ஒப்பந்தத்தை (COFA-compact of free association) செய்வது ஆகும். பசிபிக் பிராந்தியத்திலுள்ள Micronesia, Palau, Marshall Islands ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா இம்மாதிரியான ஒப்பந்தத்தை செய்து ஆளுகைக்குள் வைத்திருக்கிறது. ஆனால் அவை முழு இறைமையுள்ள நாடுகள் என அமெரிக்கா சொல்கிறது. பொருளாதார உதவியையும் பாதுகாப்பையும் அமெரிக்கா இந் நாடுகளுக்கு வழங்குகிறது. இதேபோன்றதொரு தீர்வுக்குள் கிரீன்லாந்தை இட்டுச் செல்ல ட்றம்ப் முயற்சிக்கலாம்.
இந்த இரு தேர்வுகளும் சரிவராத பட்சத்தில் அமெரிக்கா போரை அடுத்த தேர்வாக நாடலாம். அது போராக இருக்குமா என்பதுதான் கேள்வி. இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து 1946 இல் அமெரிக்கா கிரீன்லாந்தின் பாதுகாப்பை பொறுப்பெடுத்தது. இப்போதும் படைத்தளத்தை கிரீன்லாந்தில் அமெரிக்கா வைத்திருக்கிறது. 836000 சதுர மைல்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய இத் தீவின் சனத்தொகை வெறும் 57000 மட்டுமே. அதற்கென தனித்த இராணுவம் கிடையாது. டென்மார்க் இராணுவம்தான் அங்கும் உள்ளது.
ஐரோப்பாவின் பாதுகாப்பை ஐரோப்பா தனித்து நின்று முழுமையாக உத்தரவாதப்படுத்தவில்லை. நேட்டோ என்ற அமைப்பின் கீழ் உத்தரவாதப்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை. அதையும் மிகத் திருத்தமாகச் சொன்னால் நேட்டோவிலுள்ள ஐரோப்பிய நாடுகளின் தேசிய ரீதியிலான பாதுகாப்பை மேவி, தமது வளத்தை நேட்டோவுக்குள் தாரைவார்க்கிறது என்பதே பொருத்தமானது. இந் நாடுகள் நேட்டோவின் பாதுகாப்பு நிதியை தமது தேசிய வருமானத்தின் (GDP) ஐந்து வீதமளவில் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஆயுத உற்பத்தியைக்கூட தன்னிறைவாக உருவாக்காமால் அமெரிக்காவிடம் பெருமளவு ஆயுதத்தை வாங்க வேண்டிய நிலையில் தொழில்நுட்ப ரீதியிலும், உற்பத்தித் திறனிலும், அணுவாயுத வளர்ச்சியிலும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன.
இந்த பலவீனங்கள் நேட்டோவின் சாரதியாக அமெரிக்கா குந்தியிருப்பதற்கான ஒரு பகுதிக் காரணங்கள் ஆகும். 2024 இல் நேட்டோவுக்கான 1.4 திரில்லியன் டொலர் பாதுகாப்புச் செலவில் அமெரிக்காவின் பங்கு மட்டும் சுமார் 66 சதவீதமாக இருக்கிறது. உயர் தொழில்நுட்பங்கள் கொண்ட வேவு பார்க்கும் கருவிகள், விமானங்கள், உளவுப்படை தகவல் பரிமாறல்கள், ஆயுதங்கள் எல்லாவற்றுக்கும் தமது உற்பத்திகளை விடவும் பெருமளவில் அமெரிக்காவில் தங்கியிருக்கிறார்கள். ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கை கூட ஐரோப்பாவை மையமாக வைத்து சுயாதீனமாக வரையப்பட்டிருக்கவில்லை என்பது குறித்து அரசியல் அறிஞர்கள் நீண்ட காலமாக விமர்சித்து வருகிறார்கள். அமெரிக்காவின் ஒரு இழுவை வண்டியாக ஐரோப்பா நேட்டோவுக்குள் செயற்படுகிறது. பாதுகாப்பில் மட்டுமல்ல, பொருளாதார ரீதியிலும் அமெரிக்காவிடம் பெருமளவு தங்கியிருக்கிறது.
எனவே ஐரோப்பா அமெரிக்காவிடமிருந்து திடீரென நாணயக் கயிற்றைக் கழற்றி எறிந்துவிட்டு சுதந்திரமாக ஓடமுடியாது. அதை செய்வதாக இருந்தாலும் அதற்கொரு கால அவகாசம் தேவை. அதைத்தான் மக்ரோன் (இப்போ ஜேர்மன் சான்சலர் மேர்ற்ஸ் உம்) வலியுறுத்தி வருகிறார். ஐரோப்பாவுக்கான இராணுவமும் சுயமான பாதுகாப்பு கட்டமைப்பும் தேவை என்கின்றனர். ஐரோப்பாவில் நின்று இதை உறுதியாகச் சொல்லும் மக்ரோன் ட்றம்ப் முன்னால் -வளைந்து நெளியும் உடல் மொழியைத் தாண்டி- நிமிர்ந்து நின்று சொல்ல முடியாதவராக இருக்கிறார். ஆக அமெரிக்காவுக்கு ஐரோப்பா தேவைப்படுவதை விட, ஐரோப்பாவுக்கு அமெரிக்கா வேண்டும். அமெரிக்கா -நேட்டோவுக்கு வெளியில்- சுயாதீனமாக 80 நாடுகளில் 750 க்கு மேற்பட்ட படைத்தளங்களை கொண்ட வலிமையான நாடு. எனவே அமெரிக்காவுக்கும் (மிகுதி நேட்டோ நாடுகளான) ஐரோப்பாவுக்கும் போர் வரும் என ஒரு ஜனரஞ்சகக் கனவை காணலாம். அதைத் தாண்டி எதுவும் நடைபெற சாத்தியமில்லை.
image:npr. org
கிரீன்லாந்தின் மீதான ஆசை ட்றம்ப் இலிருந்து தொடங்கியதல்ல. அது 19ம் நூற்றாண்டில் தொடங்கியது. 1867 இல் அமெரிக்கா ரசியாவிடமிருந்து அலாஸ்காவை பணம் கொடுத்து வாங்கியபோதே, டென்மார்க் இடமிருந்து கிரீன்லாந்தை வாங்கும் திட்டத்தை அமெரிக்க அரச செயலர் William H. Seward என்பவர் முன்வைத்திருந்தார். சரிவரவில்லை. பிறகு, 1910 இல் டென்மார்க்கின் அமெரிக்க தூதர் Maurice Francis Egan இன்னொரு திட்டத்தை முன்வைத்தார். அமெரிக்கா கைப்பற்றி வைத்திருந்த பிலிப்பைன்ஸ் இன் Mindanao தீவை கொடுத்து டென்மார்க் இன் காலனியான கரீபியன் தீவுகளையும் (Danish Vergin Islands) கிரீன்லாந்தையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளலாம் என்பது அவரது ஆலோசனையாக முன்வைக்கப்பட்டது. அதுவும் சரிவரவில்லை. இருந்தபோதும் Danish Vergin Islands இனை அமெரிக்கா 1917 இல் டென்மார்க்கிடமிருந்து -25 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கத்தைக் கொடுத்து- வாங்கிக் கொண்டது. 1946 இல் இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி Harry Truman கிரீன்லாந்துக்கு 100 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கக் கட்டிகளை பேரமாக வைத்து விலைபேசினார். டென்மார்க் ஏற்கவில்லை.
இவ்வாறு காலனியாதிக்க பேரங்களினூடு வளர்ந்த மனக்கட்டமைப்போடு நவீன காலனியவாதி ட்றம்ப் வெளிக்கிளம்பியிருக்கிறார். மேற்குலகம் முன்வைக்கும் எல்லா ஜனநாயகக் கட்டமைப்புகளும் நடைமுறைகளும் “காலனிய மனக்கட்டமைப்பு” என்ற உளவியல் நோயைத் தாண்டி இருப்பதில்லை. அது தமது நாடுகளின் இறைமையைப் பேணும் வலுவான ஐனநாயகக் கட்டமைப்பைக் கொண்டதாகவும், அதேநேரம் மற்றைய (தாம் தவிர்ந்த) நாடுகளின் இறைமையை, குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீனமெரிக்க நாடுகளின் இறைமையை மறுப்பதாகவும், வளச் சுரண்டலை இயல்பாக்கம் செய்ததாகவும் இரட்டைத்தன்மை வாய்ந்த அளவுகோலைக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணம் இந்த சாகா வரம் பெற்ற காலனிய மனக் கட்டமைப்புத்தான் (colonial mindset).
அதனால் மேற்குலக ஜனநாயகம் என்பது ஒரு பண்பாக வளர்ச்சியடையவில்லை. நிர்வாகக் கட்டமைப்பாக குறுக்கப்பட்டுவிட்டது. மற்றைய பண்பாடுகளை, தனித்துவங்களை, அதனூடான நாகரிக வளர்ச்சியை, அரச கட்டமைப்பின் வரலாற்று ரீதியான வளர்ச்சியை, அதன் வடிவங்களை, சுயாதீனங்களை, முழு இறைமையை ஏற்கவில்லை. தமது நியமங்களுக்கு (norms) வெளியேயான மனிதர்களை அது சக மனிதராக முழுமையாக ஏற்கவில்லை. தம் அளவுக்கு நாகரிகம் அடையாதவர்கள் என்றே கணிக்கிறது. ஐரோப்பிய மையவாத சிந்தனைக்குள்ளும் (euro-centric mentality), அதன் அளவுகோலுக்குள் மட்டும் நின்று, மற்றைய நாடுகளுக்கு வகுப்பு எடுப்பதாகவும், கருத்தியலை உருவாக்குவதாகவும், கதையாடல்களை கட்டமைப்பதாகவும், அதையே எமக்கு ஊட்டுவதாகவும், உலகப் பொதுமையாக இயல்பாக்கம் செய்வதாகவும் தன் பணி செய்கிறது. அதுவே “காலனிய மனக்கட்டமைப்பு” ஆகும்.
வெனிசுவேலா மீது அமெரிக்கா அத்துமீறியதற்கும், அந்த வளங்களை கொள்ளையடிக்க முனைவதற்கும், அந்த நாட்டை நிர்வகிக்குமளவுக்கு செல்வதற்கும், மிரட்டுவதற்கும் இதே காலனிய மனக்கட்டமைப்புத்தான் அவர்களது மூளைக்குள் ஓடித் திரிகிறது. இந்த இறைமை மீறலையும் அடாத்தையும் கண்டித்து பேச தயக்கம் காட்டுகிற ஐரோப்பிய மனநிலை இப்போதும் இதே கட்டமைப்புச் சேற்றுக்குள்தான் உழல்கிறது. உதாரணமாக ரசியாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக எழுந்த குரல்கள் அமெரிக்காவின் வெனிசுவேலா மீதான அத்துமீறலின் பக்கம் போகவே இல்லை. கமாஸின் ஒக்ரோபர் தாக்குதலில் இறந்த 1200 இஸ்ரேலிய மக்களை பேசுமளவுக்கு காஸா இனப்படுகொலை பற்றி அது பேசுவதில்லை. ‘ஆசியாவின் ஐரோப்பியர்கள்’ என்ற புனைவுவாத அரவணைப்போடு, இஸ்ரேலிய சியோனிஸ்டுகளை கண்டிப்பதுமில்லை. மாறாக ஆதரவு கொடுக்கிறது. கிரீன்லாந்து விடயத்தில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இருக்கும் இந்த சமாந்தரமான மனக்கட்டமைப்பானது தமக்குள் போரைவிட சமரசத்தையே முன்வைக்கும் சாத்தியம்தான் அதிகம். அந்த பேரத்தில் டென்மார்க் காலனியவாதிகள் அபகரித்த கிரீன்லாந்து தீவினது மக்கள் பகடைக் காய்களாக மாறினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை!
ravindran.pa
08012026
https://sudumanal.com/2026/01/08/தகுமோ-இது-முறையோ/#more-7568
By
கிருபன் ·