Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நூல் அறிமுகம் : உட்துறைமுகம்!

ஆசிரியர்: வி. கௌரிபாலன்
நூல் வகை: தமிழ் நாவல்; 332 பக்கங்கள்
பதிப்பகம்: விடியல் பதிப்பகம்
வெளியீட்டு ஆண்டு: 2022

“உட்துறைமுகம்” ஒரு தமிழ் நாவல். ஆயுதப் போருக்குப் பிந்திய தற்கால ஈழச் சமூகத்தில் இலங்கையின் திருகோணமலையை மையமாக கொண்ட தனியொருவனுக்கு நேரும் அவலத்தையும் எதிர்கொள்ளலையும் சித்தரிக்கும் ஒரு படைப்பு. வி. கௌரிபாலன் எழுதிய இந்நாவலை விடியல் பதிப்பகம் 2022-ம் ஆண்டு வெளியிட்டது, மேலும், இது அகமும் புறமும் இழந்து நிற்கும் தற்கால ஈழச் சமூகத்தில் மறைக்கப்படும் ஒரு போராட்டத்தை உள்ளோட்டமாக விவரிக்கிறது.

‘உட்துறைமுகம்’ என்பது திருகோணமலை நகரின் ஒரு நிலக் குறியீடு, அடையாளம். இது மட்டுமல்ல வாழ்வியலின் குறியீடு; குறுக்கு வெட்டி: துறைமுக உள்ளக விசாலத்தை கொண்டுணர உதவும் ஒரு நிலப்பாதை. ‘Inner Harbor Road ‘ என்றாலே பலருக்கு திருகோணமையின் முகவெட்டை, குறிப்பாக துறைமுக வனப்பை அள்ளித்தரும் ஒரு பாதைவலையம். வெறும் 2.54 km அளவுள்ள ஒரு பாதை. ஆனால், அது தான் திருகோணமலை நகரின் உயிர்ப்பாதை; கடலும் நிலமும் இணையும் ஒரு புள்ளிக்கோடு. ‘உட்துறைமுகம்’, இந்நாவலின் பெயராக அமைவது நாவலின் உள்ளக வீச்சை, 1970 -கள் முதல் 2022 வரையான ஒரு காலகட்ட நிகழ்வுகளின் படலங்களாகத் தரும் நாவல் ஆகத் திகழ்கிறது. இதனால் இந்நாவல் கொண்டிருக்கும் வரலாற்றுச் சம்பவங்களால் இது வரலாற்று விபரண ஆவணமாக கவனம் கொள்ள வைக்கிறது.

‘உட்துறைமுகம்’ நாவல் முன்வைக்கும் ‘கரு’ என்பது திருகோணமலையின் ஒரு வரலாற்று முகம்.

சுதந்திரத்துக்கு பின்னரான திருகோணமலையின் சமூகப் பொருளாதாரம் மற்றும் இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவ இடம் சார் புவியியல், அரசியல் செல்நெறிப்போக்கு மிகவும் சிக்கலானது; பல களங்களை கண்டது; பல்முனைத் கடலசார் பயணத் தளங்களில் வலம் வருபவை. பல வல்லரசுகளின் கண்கொண்ட நிலம், மற்றும் தமிழர்களின் கனவுத் தலைநகரம்; இதயபூமி. இந்த ஈழத் தமிழர்களின் இதயத்தில் செருகிய பல கூர்முனை வாட்களின் வலிகள்; பீறிட்டு வடிந்த இரத்தக் கறைகள் தரும் அழிக்கமுடியாத விம்பங்கள் நாவலின் படிமங்களாகின்றன. இவை ஓர் ஆழ்ந்த வாசகனுக்கு பல்பரிமாணத் தரிசனங்களாகின்றன. நீண்ட காலமாக மனித் தடம் படாத ஓர் அடர்ந்த காட்டின் மௌனமாக, தேடல்களில் காணக் கிடைக்கும் மணற்குன்றுகளில் படிந்துள்ள கனிமப் படிமங்களாகப் புலப்படுகின்றன.

ஈழத்தமிழர்களின் கடந்த காலங்களையும் சமகாலப் போக்குகளையும் உள்ளெடுத்து சிலாகித்து வெளிப்படுத்தும் நாவல் இலக்கியப் படைப்புக்கள் தனித்த ஈர்ப்பைப் பெறுகின்றன. ஏனெனில், மற்றைய படைப்புக்களை விட ஓர் உயிர்ப்பான பல நினைவுகொள் காலங்களை, பலரது வாழ்வின் நினைவழியாத் துண்டங்களை, அதில் வாழ்ந்த மனிதர்களது பல்நிலை மௌனங்களை, கரைந்து போக முடியாக் காலத்துயர்களை வாசகர் கண்முன் காட்ட முடியும். இதன் ஒரு சான்றாக ‘உட்துறைமுகம்’ நாவல் அமைந்திருக்கிறது.

ஒரு நாவல், தனக்குள் கொண்டிருக்கும் பரந்த காலத்தை அதன் களத்தை முன்வைத்து எம்முடன் உறவு கொண்டாடினாலும் அதன் கனதி, மொழி, முன்வைப்பு, அசைவு மற்றும் முக்கியமாக அதன் கரு போன்றவனவால் ஒரு சிறந்த நாவல் இலக்கிய படைப்பாகின்றது. கௌரிபாலனின் நாவல் நடை, மொழி ஒரு சினிமா விம்பங்களுக்குரிய அனுபவ உணர்வுநிலை மொழிவழி காட்சியாக வாசகர்களுக்கு விரிகின்றது.

ஒரு படைப்பு குறிப்பாக ஒரு நாவல் சிறந்தது என உணரவைப்பது, ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் புதையுண்ட பல்வேறு அனுபவங்களிலிருந்து வெளித்தள்ளும் ஒத்திசைவான உணர்நிலை உந்துகைதான்.

‘உட்துறைமுகம்’ கொண்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் அதைத் தேர்தெடுத்த மொழி தரும் அனுபவம் மற்றும் குறியீடுகள் கடந்த கால வாழ்வின் கனதியை, ஆழத்தை மதிப்பீடுகளாகின்றன. உட்துறைமுக ஆக்கத்தின் மூலம் கிடைக்கும் அனுபவம் என்பது கடந்த கால நிகழ்வுகள் தரும் உணர்வு நிலையாக வாசகரை நிலைக்க வைக்கிறது.

திருகோணமலையில் வாழ்ந்த, வாழும் ஒவ்வொருவருக்கும் மெய்நிலை தளங்களில் தம்மைக் காணும் ஒரு அனுபவ நிலையை இந்நாவலின் வழி வாசகர்க்குக் கடத்துகிறார் படைப்பாளி.

திருக்கோணமலையின் முகங்கள் எங்கும் பல தழும்புகள்- வதைகள், வேதனைகள் பல. நிலச்சுவாந்தர்களின் அடாவடித்தனங்கள், அடிமைத்தனங்கள், துறைமுகக் கலாச்சாரம் கொண்டுவந்த பெண்கள் மீதான வன்முறைகள், குடியேற்றங்கள் கொடுத்த வன்முறைகள், அதற்கு எதிரான உள்ளுர் மக்களின் தொடர் போராட்டங்கள், ஆயுத எதிர் வன்முறைகள். ஆயுத குழுக்களின் வருகை, ஆயுத இயக்கங்கள் மற்றும் அதன் மீதான அரச வன்முறையின் முழுப்பலத்தையும் எம்முள் தன தாங்கும் வலி, உட்கொள்ளும் வேதனை தான் ‘உட்துறைமுகம்’ வாசிப்பு அனுபவ நிலை.

திருகோணமலை மாவட்டம் மூன்று நில மண்டலங்களை கொண்டது. வட திருகோணமலை வடமாகாணத்தின் ஒரு தொடர் பகுதி எனலாம். தெற்கு திருகோணமலை, மூதூர் மண்டலம், மட்டக்கிளப்பு மாவட்டத்தின் தொடக்க தளம். திருகோணமலை நகர், இந்த இரண்டு மண்டலங்களின் செல்வாக்கு கொள்ளும் மற்றும் செல்வாக்கு கொடுக்கும் ஒரு துறைமுக நகர். இந்த மூன்று மண்டலங்களும் மூன்று சமூகப் பொருளாதார தளங்களில் இயங்கினாலும் கடந்தகால வன்முறைகளின் ஒட்டுமொத்த செல்வாக்கும் இந்த மூன்று மண்டலங்களிலும் பரந்த, படிந்த ஓன்று. கடந்தகால திருகோணமலை மாவட்ட வன்முறைகளின் வரலாறு முழுமையாக வருவதாயின் ‘உட்துறைமுகத்தின்’ பங்கு அதற்கு வலுவாக இருக்கும்.

புதிய திசைகளைத் திறந்துவிட்ட எழுத்து கொலம்பிய எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸுடையது. அவரின் மொழியும் கதை சொல்லும் முறையிலும் ஒரு வீச்சத்தை தந்தவர். தனி மனிதர்களின், அவர்களின் அகம் புறம் மற்றும் சுற்றும் சூழலின் மனஉணர்வுகளை, அழுத்தங்களை, பார்க்கப்படாத யதார்த்த அசைவுகளை தனது மாய எதார்த்தத்தால் வளம் படுத்தியவர். கௌரின் ‘உட்துறைமுகம்’ தரும் ‘தரிசனமும்’ அதுதான். பெத்தவன், அல்லது அரியமாக வலம் ஒரு தனி மனிதனை சுற்றி சுழலும் வாழ்வின் அழுத்தங்களை நாவல் மையம் கொண்டு நகருகின்றது. வாழ்வின் மீதான நெருக்கடிகள்-அவனின் குடுப்பம், ஊரும் உறவுகளும் கொள்ளும் வன்முறை நெருக்கடிகளை திருகோணமலையின் குறிப்பாக திருகோணமலை நகரின் அரச வன்முறைகளின் நிலப்படவரவியலை அழகாக படம்பிடிக்கின்றது; துளிர் விடும் இன வாதம் எவ்வாறு ஒரு சகவாழ்வு நிலமாக திகழ்ந்த திருகோணமலையின் சிதைவுக்கு வழிவிட்டது என்பதை நாவல் தரும் சம்பவங்களும், கதை மாந்தர்களும், அவர்களின் உரையாடல்களும் தரும் உணர்வு நிலை வாசகர்கர்களை உள்ளிழுத்துச் செல்லும் வகையில் சிறப்பாக அமைந்திருக்கின்றது. உட்துறைமுகத்தின் வலுவான உயிர் என்பது கதை மாந்தர்களின் ‘கதைதான்’. திருகோணமலையின் கடந்த அறுபது ஆண்டுகளின் காலத்துயரை, தனிமையை, சிதைவை, தன் உயிரான மக்களின் வாழ்வை அவர்களின் சந்தோசத்தை, இழப்பை, கைவிடாத பழக்க-வழக்க நம்பிக்களை, மக்களின் பன்முகத்தன்மையை அக மன உணர்வு நிலையில் கொடுக்கும் படைப்புதான் ‘உட்துறைமுகம்’.

பெண்களின் மீதான இந்திய இராணுவப் பாலியல் வன்முறைகளை ஆவணப்படுத்திய டாக்டர் ஞானி அவர்களின் அலுவலக எரிப்பும் அவரின் கொலையும், ‘தனு’வை நினைவுகொள்வது போல் மூதூர் வில்லுக்குளத்தை சேர்ந்த நித்திலா சுமந்து வரும் கைக்குண்டும் நேர்த்தியான பதிவுகளாகி (பக்க எண்: 274 -275), மொழிவழி தரும் பகிர்வு ஒரு நாவலின் ஊடாக எவ்வளவு வலிமையாகக் கடந்த காலத்தை சொல்லமுடியும் என்பதற்கு ‘உட்துறைமுகம்’ ஒரு நல்ல சான்று.

பிரதான நகர்வு பாத்திரமான முன்னாள் போராளி அரியம் மலக்குழிக்குள் இறந்து போகும் முடிவு என்பது ஒரு குறியீடாக வந்து விழுகின்றது. தமிழ் மக்களின் போராட்டம் குறிப்பாக ஆயுத இயக்கங்களின் ஒட்டுமொத்த வகிபாகம் மீதான ஓர் இலக்கியப் படைப்பு வழி வெளிவரும் ஒரு காத்திரமான சமூக விமர்சனமாக, மலக்குழியினுள் விழும் காட்சிப் படிம நிலை சிந்திக்க வைக்கிறது.

ஈழத்து இன்றைய சூழ்நிலையில், நாவல் வெளிவந்து பல ஆண்டுகள் கடந்தும் ‘கிணற்றில் போட்ட கல்லாக’ ‘உட்துறைமுகம்’ இருப்பதானது கடந்த கால காலத் துயரங்களை உட்புதையல்களாக்கி சமூகம் மௌனமாக கடந்து போகும் நிலையை உணர்த்துகிறது. ஆனால், வரலாறு ஒரு பின்தொடரும் நிழலாக காலங்கள் கடந்தும் நிழலாடும் என்பதற்கு ‘உட்துறைமுகம்’ நாவல் ஓர் உதாரணம்.

மனிதர்களால் கண்டடைந்த சொல்லும் எழுத்தும் அதை கொண்ட மொழி வனையும் ஆற்றல்மிகு வனைஞன் இருக்கும் வரை காலம் கடக்கும் பகிர்வுகள் படைப்புகளாகத் தொடர்ந்த வண்ணமே இருக்கும். கௌரிபாலனின் ‘உட்துறைமுகம்’ காலம் காவும் ஒரு படைப்பு.

– வை. ஜெயமுருகன்

பிற்குறிப்பு :

எழுத்தாளர் கௌரிபாலன் அவர்களின் பூர்வீகம் உப்புவெளி, திருகோணமலை. இவரது மொழி வலிமை, பொலிவு, செறிவு என முப்பரிமாண தனித்துவ அழகியலானது இவர் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் வலி உமிழ்பவை; சொல்லடுக்குப் படலம் ஒரு காலத்துயர் வதைகளின் அதிர்வைச் சித்தரிப்பவை.

‘உட்துறைமுகம்’, திரு. கௌரிபாலன் அவர்களின் முதல் நாவல்(2022). இதுவென அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அதேவேளை சொல்லொணாத் துயர் சுமந்த ஈழச் சமூகத்தில் வெளிப்படும் ஒரு நம்பிக்கை தரும் வரலாற்றுப் புதின எழுத்தாளராக இவரை இனம் காண வைக்கிறது. இவரின் முதல் சிறுகதை “தாயம்மா’ வெளிவந்தது 1994-களில். ‘ஒப்பனை நிழல்’ என்னும் சிறுகதை நூலும் ‘வானுறையும் தெய்வத்தினுள்’ 2003-களில் வெளிவந்தன. 2010-களில் ‘நதிப்பாதையின் மேலே’ என்னும் கட்டுரை தொகுப்பு நூல் வெளியானது. பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் பாண்டிச்சேரி மற்றும் பென்குயின் இந்தியா வெளியிட்ட “Time will write a song for you ‘ (Contemporary Tamil writing from Sri Lanka) தொகுப்பில் இவரின் மூன்று சிறுகதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கௌரிபாலனின் முழுச் சிறுகதைகளின் தொகுப்பு ‘காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல்’ (2016) விடியல் பதிப்பக வெளியீடாக வந்தது.

https://globaltamilnews.net/2026/226579/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.