Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செயற்திட்டம் இல்லாமல் வெறுமனே  கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல் பாரம்பரியம் (நூல் விமர்சனத்தின் வழியாக ஒரு அரசியல் பார்வை) — ஷோபாசக்தி —

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செயற்திட்டம் இல்லாமல் வெறுமனே  கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல் பாரம்பரியம் (நூல் விமர்சனத்தின் வழியாக ஒரு அரசியல் பார்வை)

January 14, 2026

செயற்திட்டம் இல்லாமல் வெறுமனே  கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல் பாரம்பரியம்                     (நூல் விமர்சனத்தின் வழியாக ஒரு அரசியல் பார்வை)

— ஷோபாசக்தி —

மகாகவி பாரதியின் ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்ற கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்டு, மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் பல வருடங்களுக்கு முன்பு தனது ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டார்.  அந்த  கவிதையின் அடுத்த வரி ‘எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்’. இந்த வரிக்குப் பொருத்தமாகத் அவர்  எழுதி அண்மையில்  வெளிவந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பே ‘தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்’. 

இலங்கையிலுள்ள ‘மார்க்ஸியக் கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையத்தின்’  வெளியீடாக வந்திருக்கும் 

இந்த நூலில் எட்டுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  இவை இன்றைய இலங்கையில்  வலுவாக நிலைகொண்டிருக்கும் பவுத்த சிங்களப் பேரினவாத அரசியலையும் சிதறிச் சீரழிந்து கிடக்கும் தமிழ்த் தேசியவாத அரசியலையும் விசாரணை செய்கின்றன. இந்த விசாரணைகளுக்கு ஊடாக, இன்றைய தமிழ்த் தேசியவாதத்தின் நிலை குறித்துத் தன்னுடைய கருத்துகளையும் கணிப்புகளையும் தனபாலசிங்கம்  முன்வைத்திருக்கிறார். 

நாற்பது வருடங்களுக்கும் அதிகமான காலமாக பத்திரிகைத்துறையில் தீவிரமாகப் பணியாற்றிய ஊடக அறிவையும் களத்திலேயே இருந்து அரசியல் நிலவரங்களை நேரடியாக எதிர்கொண்டதால் ஏற்பட்ட பட்டறிவையும் ஒருங்கே திரட்டி இந்தக் கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார்.

செயற்திட்டம் இல்லாத தமிழர் அரசியல்:

இலங்கையில் தமிழ்த் தேசியவாத அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான ஜி.ஜி. பொன்னம்பலத்தின் புகழ்பெற்ற ‘ஐம்பதுக்கு ஐம்பது’  மற்றும் தமிழரசுக் கட்சியின் ‘சமஷ்டி’ ஆகிய இரு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு முக்கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டையில் முன்வைத்த தமிழீழத் தீர்மானத்திற்கு வயது அரை நூற்றாண்டு. தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்து பதினாறு வருடங்கள். 

மேற்சொன்னவற்றின் தொடர்ச்சியில், தமிழர்களுக்குத் தனிநாடு, தனிநாட்டுக்கான பொது வாக்கெடுப்பு, போர்க் குற்ற விசாரணை, இனப்படுகொலை விசாரணை, சுயாட்சி, கூட்டாட்சி, முழுமையான அதிகாரமுள்ள மாகாண சபைகள் என்றெல்லாம் தருணத்திற்கும் தமது விருப்புக்கும் ஏற்றவாறு தமிழ்த் தேசியவாதக் கட்சிகளாலும் குழுக்களாலும் புலம்பெயர்ந்த அமைப்புகளாலும் விதம்விதமான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றில் ஏதாவதொன்றை அடைவதற்கான ஆக்கபூர்வமான, சாத்தியமான அரசியல் செயற்திட்டம் என எதையுமே இவர்கள் ஒருபோதும் மக்கள் முன்பு வைத்ததில்லை.

1974-இல் இருந்தே தனிநாடு என்ற கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கிய இலங்கை தமிழரசுக் கட்சியுடைய நாடாளுமன்ற உறுப்பினரான வி.தர்மலிங்கத்திற்கும் கம்யூனிஸ்ட் தலைவர்  நா. சண்முகதாசனுக்கும் இடையே 1975 ஆம் ஆண்டு  சுன்னாகத்தில் ஒரு பகிரங்க அரசியல் விவாதக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விவாதத்தில் ‘தனிநாட்டை அடைவதற்கான தமிழசுரக் கட்சியின் செயற்திட்டம் என்ன?’ என்று சண்முகதாசன் கேள்வி எழுப்பியபோது, தர்மலிங்கம் ‘அது கட்சியின் உயர்மட்ட இரகசியம்’ என்று பதிலளித்து நழுவிக் கொண்டார். தனிநாட்டை அடைவதற்கான அந்த ‘உயர்மட்ட இரகசியம்’ என்னவென்று இன்று வரை  யாருக்குமே தெரியாது. 

இப்போது பலவிதமான அரசியல் கோரிக்கைகளை எழுப்பிக்கொண்டிருக்கும்  தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகளும்  அவற்றை அடைவதற்கான செயற்திட்டம் எதுவென மக்களுக்குத் தெளிவுபடுத்தாமலேயே தேர்தல்களில் வாக்குகளைச் சேகரித்து நாடாளுமன்றம் சென்று, ஒற்றையாட்சிக்கு விசுவாசமாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டு சுகமாகக் காலத்தைக் கழித்து வருகின்றனர். இந்த நாற்காலிச் சுகவாசமும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியாது. 

தமிழ் மக்களின் சலிப்பு:

தமிழ்த் தேசியவாதக் கட்சிகளின் வெற்று முழக்கங்களாலும் செயலின்மையாலும் தமிழ் மக்கள் சலிப்படைந்துவிட்டார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ப் பகுதிகளில் அவர்களின் கணிசமான வாக்குகள் தமிழ்த்  தேசியவாதத்திற்கு முற்றிலும் எதிர்த் திசையில் நிற்கும் ‘தேசிய மக்கள் சக்தி’ வேட்பாளர்களுக்குக் கிடைத்தன. தனித் 

தமிழீழத்திற்கான தங்களுடைய செயற்திட்டத்தை உறுதியோடு மக்கள் முன்பு வைத்ததுடன் அதற்காக முனைப்போடும் அர்ப்பணிப்போடும் செயற்பட்டவர்கள் தமிழீழ ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மட்டுமே. 

தனிநாட்டை அடைவதற்கான வழி ஆயுதப் போராட்டமே என அறிவித்து 1970-களின் நடுப்பகுதியிலிருந்து அவர்கள் இயங்கத் தொடங்கினார்கள். ஏறத்தாழ முப்பது வருடங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் 2009-இல் விடுதலைப் புலிகளின் தோல்வியோடு முடிவுக்கு வந்தது. 

புலிகளுக்குப் பின்னான காலத்தில், சீமான் போன்ற தமிழகத்து நண்டுசிண்டுகளைத் தவிர வேறு யாருமே ஆயுதப் போராட்டம் குறித்துப் பேசுவதில்லை. முக்கியமாக, இலங்கைத் தமிழ்த் தேசியவாத அரசியல் பரப்பில் எந்தக் கட்சியோ, எந்தக் குழுவோ ஆயுதப் போராட்டம் குறித்துப் பேசுவதில்லை. இதுவொரு நல்ல விஷயமும்தான். இனி ஒரு போர் வேண்டாம்.

போருக்குப் பின்னரான காலத்தில், தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சிக்காரர்கள் தேர்தல் அரசியலில் பதவி நாற்காலிகளைக் கைப்பற்றத் தங்களுக்கிடையே மோதியவாறும் குழி பறித்தவாறும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். தருணத்திற்குத் தக்கவாறு ‘ஒரு நாடு இரு தேசங்கள்’ என்றோ ‘பதின்மூன்றாவது திருத்தச் சட்ட அமலாக்கம்’ என்றோ ஆளுக்கொரு இலட்சியத்தை முழங்குகிறார்கள்.  ஆனால், இவர்கள் முழங்கும் இந்த இலட்சியங்களை அடைய இவர்களிடம் எந்தச்  செயற்திட்டமும் கிடையாது என்பது மட்டுமின்றி இவர்கள் முழங்கும் இலட்சியங்களை அடைவதற்கு இவர்கள் உழைப்பதும் கிடையாது. 

விடுதலை இயக்கங்களின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் செய்யப்பட்ட தியாகங்களில் கோடியில் ஒரு பங்கையாவது இன்றைய தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகள் செய்யப் போவதில்லை. மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களிலும் பொது நிகழ்வுகளிலும் இவர்களில் பலர் தமக்குள்ளேயே கெட்ட வார்த்தைகளில் திட்டிச் சண்டை போடுகிறார்கள். எதிராளியைத் திட்டும்போது சாதிய வசவுகளை வீசுகிறார்கள். எதிராளியின் குடும்பத்துப் பெண்களைக் கொச்சையாகப் பேசித் தூசணங்களைத் துப்புகிறார்கள். இவற்றுக்காக இவர்கள் ஒருபோதும் மன்னிப்புக் கேட்டதில்லை. இவர்கள் மீது கட்சிசார் ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதில்லை. தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று இத்தகைய அநாகரிகமானவர்களிடமும் அறிவிலிகளிடமும் சிக்கி மானபங்கப்படுகிறது. 

கேடுகெட்ட நிலை:

இலங்கை அரசியலில் தமிழ்த் தேசியவாதத்தை முன்னிறுத்திய முதலாவது அமைப்பான  ‘தமிழ் மகாஜன சபை’ 1921-இல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கடந்துவந்த நூறாண்டு தமிழ்த் தேசியவாதக் கட்சி அரசியலில் இத்தகையை கேடுகெட்ட நிலை இதுவரை இருந்ததில்லை. 

இந்தக் கையறு நிலையில்தான்  தனபாலசிங்கம் தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம் குறித்துத் தனது நூலில் கேள்விகளை எழுப்புகிறார்.  இந்தக் கேள்விகளை வலிந்து தமிழ்த் தேசியத்திற்கு எதிர்நிலையில் நின்று அவர்  எழுப்பவில்லை. இடதுசாரி அரசியலின் வழியே தனபாலசிங்கம் உருவாகிவந்தவர். அவரது ஆதர்சமான  சண்முகதாசன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தவர். 1989-இல் சண்முகதாசன் எழுதி வெளியிட்ட ‘ஒரு கம்யூனிஸ்டின் அரசியல் நினைவுகள்’ என்ற நூலில் ‘தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பது ஶ்ரீலங்காவின் ஜனநாயகப் புரட்சியின் ஓர் அங்கமாகும்’ என்று சண்முகதாசன் எழுதினார். 

தேசம், தேசியவாதம் குறித்தெல்லாம் இன்றைய பின்நவீனத்துவ அறிதல் காலத்தின் எடுத்துரைப்புகள் தேசியவாதிகளின் கோட்பாடுகளிலிருந்து மட்டுமல்லாமல்  இடதுசாரிகளின் தேசியம் குறித்த கோட்பாடுகளிலிருந்தும் முற்றிலும் வேறானவை. முற்போக்குத் தேசியவாதம் என்றெல்லாம் ஏதும் கிடையாது .மாறாக, தேசியவாதமானது மற்றவைகளை விலக்கி வைக்கும் அல்லது எதிராக நிறுத்தும் கருத்தாக்கம் என்பது பின்நவீனத்துவ அணுகுமுறை. இவற்றையெல்லாம் மனதில் இருத்திக் கொண்டு நாங்கள்  தனபாலசிங்கத்தின் நூலுக்குள் நுழையலாம்.

 தமிழர்களின் தற்காப்பு  போராட்டங்கள்:

சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில், சிங்களப் பேரினவாதத்தை முன்னிறுத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தமிழ் மக்கள்  நடத்திய போராட்டங்கள் 1970-களின் நடுப்பகுதி வரை நாட்டுப் பிரிவினைக்கான போராட்டங்கள்  அல்ல. அவை சிறுபான்மை இனங்களின் உரிமைகளைத் தற்காத்துக் கொள்வதற்கான போராட்டங்கள் மட்டுமேயாகும்.

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது, தனிச் சிங்களச் சட்டம், சிறுபான்மையினர் மீதான தொடர் இன வன்செயல்கள்  மற்றும்  1947 சோல்பரி அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த 29 (2) சரத்து 1972-இல் இலங்கையின்  குடியரசு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது அகற்றப்பட்டுச் சிங்கள மொழிக்கும் பவுத்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது போன்ற பல்வேறு சிங்களப் பேரினவாதத் தாக்குதல்களிலிருந்து தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தங்களைப் பாதுகாக்கத் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. 

தொடர் தோல்விகள்:

உண்மையில் இந்தத் தொடர் போராட்டங்கள் தொடர் தோல்விகளாகவே சிறுபான்மை இனங்களுக்கு அமைந்தன. சிங்களப் பவுத்தப் பேரினவாதத்தின்  இருப்பையும் காட்டுத்தனமான வளர்ச்சியையும் சிறுபான்மை இனங்களாலோ அற்ப சொற்பமாயிருந்த சிங்கள முற்போக்கு இடதுசாரிகளாலோ தடுக்க முடியவில்லை. இன்றுவரை இதுவே நிலை. இவ்வாறு கெட்டி தட்டிப் போயிருக்கும் சிங்களப் பேரினவாத நிலையைத் தோலுரித்துக் காட்டும் கட்டுரையாகத் தொகுப்பு நூலின் முதலாவது கட்டுரையான ‘கறுப்பு ஜூலைக்கு பிறகு கடந்துவிட்ட 42 வருடங்கள் ‘ அமைந்துள்ளது.

1983 ஜூலையில், விடுதலைப் புலிகள் திருநெல்வேலியில் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவத்தின் உடனடி எதிர்வினையே தமிழர்களுக்கு எதிரான ஜூலை வன்செயல்கள் என்ற கதையாடலைத் தனபாலசிங்கம் மறுக்கிறார்.  “13 இராணுவத்தினர் பலியான சம்பவம் அன்றைய அரசாங்கத்திற்குள் ஆதிக்கம் செலுத்திய சிங்கள இனவாதச் சக்திகள் நாடு பூராவும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்வதற்கு ஏற்கனவே திட்டமிட்டு  வைத்திருந்த வன்செயல்களைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு வாய்ப்பாக அமைந்தது” என்கிறார்  அவர். இதற்கான சான்றாதாரங்களையும், ஜூலை வன்செயல்களை நியாயப்படுத்தியது மட்டுமல்லாமால் அதை ஊக்குவிப்பது போலவும் அன்றைய அரசு செயற்பட்டதையும் எடுத்துக்காட்டுகளோடு தனபாலசிங்கம்  விவரிக்கிறார்.

ஜே.வி.பி.யும் இனப்பிரச்சினையும்:

1983-க்குப் பிறகு இலங்கையில் சிங்கள இனவாதம் மேலும் எவ்வாறெல்லாம் வளர்ந்து சென்றது என்பதைப் பேசும் தனபாலசிங்கம் கட்டுரையின் இறுதிப் பகுதியில், இன்றைய ‘தேசிய மக்கள் சக்தி’ அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினையைப் பற்றிப் பேசத் தயங்குவதை போலி முற்போக்காளர்கள் போன்று மவுனமாகக் கடக்காமல் உடைத்துப் பேசிவிடுகிறார். 

அவர் எழுதுகிறார் : “ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்குத் தயங்குகிறது. சகல சமூகங்களையும் இலங்கையர்களாக, சமத்துவமானவர்களாக நோக்கும் ஒரு அணுகுமுறையைப் பற்றி ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவும் அவரது அரசாங்கத் தலைவர்களும் பேசுகிறார்களே தவிர, உண்மையான பிரச்சினைக்கு முகங்கொடுக்கவோ அல்லது அதிகாரப் பரவலாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வைக் காண்பதில் நாட்டம் காட்டவோ அவர்கள் தயாராயில்லை. அவர்களும் இனவாதத்தின் கைதிகளாகவே இருக்கிறார்கள். புதிய அரசியலமைப்புக் கொண்டுவரப்படும் வரை தற்போதைய மாகாண சபைகள் முறை நடைமுறையில் இருக்கும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறுகின்றதே தவிர, அத்தகைய ஒரு புதிய அரசியலமைப்பபைக் கொண்டு வருவதற்கு முன்னதாக  13-வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளையாவது உருப்படியாகச் செயற்படவைக்கும் எண்ணம் அவர்களிடம் இல்லை. புதிய கலாசாரம், முறைமை மாற்றம் எல்லாமே வெற்றுச் சுலோகங்கள்தான்.”

நூறாண்டுகளாக விஷ விருட்சமாக வளர்ந்து நிற்கும் சிங்கள இனவாதத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் வீழ்த்த முடியாவிட்டாலும், இந்த அரசாங்கம் இனவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளாது என்று கணிசமான தமிழ் மக்களிடம் நம்பிக்கையுள்ளது. அந்த நம்பிக்கையைக் குறித்தும் தனபாலசிங்கம் கேள்வி எழுப்புகிறார். 

“வடக்கு, கிழக்கில் போரின் விளைவான அவலங்களிலிருந்து இன்னமும் விடுபட முடியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடர்பாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. போரின் முடிவுக்குப் பின்னரும் தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவமயத்தை வலுப்படுத்துவதிலேயே அரசாங்கங்கள் அக்கறை காட்டுகின்றன. தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகத்தில் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசாங்க அனுசரணையுடன் திட்டமிட்ட குடியேற்றங்கள் மதவாதச் சக்திகளின் துணையுடன் தீவிரப்படுத்தப்படுவதையே காணக்கூடியதாக இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சி, வனப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்புத் தேவைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் இன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பாரதூரமான உடனடிப் பிரச்சினையாக இருக்கிறது” என்கிறார் தனபாலசிங்கம்.

இந்தக் கட்டுரையை அவர் இவ்வாறு முடிக்கிறார் : “கறுப்பு ஜூலைக்கும் உள்நாட்டுப் போருக்கும் வழிவகுத்த இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண வேண்டிய அவசியம் இருப்பதாகத் தென்னிலங்கை அரசியல் சமுதாயம் உணருவதாக இல்லை. தீர்வு முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாடு, இன்று மூன்றரை தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக அரசியலமைப்பில் இருந்துவரும் ஒரு  திருத்தத்தைக் கூட (13-ஆவது திருத்தச் சட்டம்) கைவிட வேண்டும் என்று தென்னிலங்கையில் போர்க்கொடி தூக்குகின்ற அளவுக்கு வலுவடைந்திருக்கிறது.”

13  வது திருத்தம்:

நூலின்  ஐந்தாவது கட்டுரையில், பதின்மூன்றாவது சட்டத் திருத்தம் குறித்து ஜே.வி.பி-யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருப்பதைத் தனபாலசிங்கம் சுட்டிக் காட்டுகிறார் : “13-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தமிழ் மக்களுக்கு அவசியமில்லை. அவர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாகிறது. தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமே தங்களது அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக 13-ஆவது திருத்தத்தையும் அதிகாரப் பரவலாக்கத்தையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் ரில்வின் சில்வா. அவரின்  கருத்துத்தான் தென்னிலங்கை அரசியலாளர்களின் பெரும்பான்மையான கருத்தாக இருக்கிறது. தென்னிலங்கையின் முற்போக்குகளும் கலைஞர்களும் கூட விதிவிலக்கில்லை. 

நான் ஜே.வி.பி. உறுப்பினர்களுடனும் ஆதரவாளர்களுடனும் தனிப்பட விவாதித்த பல்வேறு தருணங்களிலும் அவர்கள் இதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பொருளாதாரப் பிரச்சினையே முதன்மைப் பிரச்சினை என்கிறார்கள். இனங்களுக்கு இடையேயான அதிகாரப் பரவலாக்கத்தை மூர்க்கமாக மறுக்கிறார்கள்.

பொருளாதாரப் பிரச்சினை இலங்கையில் எப்போதும்தான் இருந்தது. இனியும் இருக்கத்தான் போகிறது. 

குறிப்பாக, இன்றைய உலகமயமாக்கல் பொருளியல் சூழலில் இலங்கையைப் போன்ற அனைத்து மூன்றாம் உலக நாடுகளும் கடுமையான பொருளாதாரப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாட்டின் தேசிய வருவாயையும் பொதுத் துறைகளையும்  பன்னாட்டு நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் கையேந்தித்தான் நிற்க வேண்டும். அவற்றின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு மக்கள்மீது வரிச் சுமையை ஏற்ற வேண்டியிருக்கிறது. மானியங்களையும் சமூக நலத் திட்டங்களையும் இலவசங்களையும் இல்லாமல் செய்ய வேண்டியிருக்கிறது. 

இந்த உலகமயமாக்கல் பொருளாதாரச் சுழலிலிருந்து இலங்கையைப் போன்ற மூன்றாம் உலக நாடுகள் மீள்வது எப்போது என்ற கேள்விக்கு யாருக்குமே விடை தெரியாது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் தெரியாது. இந்தப் பொருளாதாரப் பிரச்சினையைக் காரணமாகக் காட்டி, சிறுபான்மை இனங்களின் உரிமைப் பிரச்சினைகளைப் பேச மறுப்பதும் தட்டிக் கழிப்பதும் சிங்கள இனவாதத்தின் இன்னொரு பரிமாணமேயாகும். நீண்ட காலமாகச் சிறுபான்மை மக்கள் எழுப்பிவரும் நீதியான சமவுரிமைக் கோரிக்கைகளை பேரினவாத நிலைப்பாட்டோடு நிராகரிப்பதாகும்.

நூலின் இரண்டாவது கட்டுரையின் தலைப்பு ‘பதின்மூன்றாவது திருத்தத்தைத் தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?’ என்பதாகும். 1987-இல் உருவாக்கப்பட்ட இலங்கை – இந்திய சமாதான  ஒப்பந்தத்தை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டு, இலங்கை அரசியலமைப்பில் செய்யப்பட்ட திருத்தமே 13-ஆவது திருத்தச் சட்டமாகும். இது அரசியல் அதிகாரங்களை இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளுக்கும் பகிர்ந்தளிக்கும் அரசியலமைப்புச் சட்டமாகும். இந்தச் சட்டம் காணி – காவல்துறை அதிகாரம் இன்றி அரைகுறையாகவே இலங்கை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. முழுமையான அதிகாரங்கள் இன்றியே மாகாண சபைகள் இயங்கின. 

13-வது திருத்தச் சட்டத்தில் உள்ளபடி மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களைத் தமிழ் தேசியவாத அரசியலாளர்களில் ஒரு பகுதியினர் கோருகிறார்கள்.  நூலாசிரியர் தனபாலசிங்கத்தின் கோரிக்கையும் இதுவாகவே இருக்கிறது. அவர் எழுதுகிறார்: “13-ஆவது திருத்தம் போதுமானது என்று யாருமே வாதிடவில்லை. தமிழர் அரசியல் சமுதாயம் அதன் வரலாற்றில் மிகவும் மோசமாகப் பலவீனமடைந்து சிதறுப்பட்டிருக்கும் நிலையில் அதுவும் இல்லாமல் போனால் நிலைமை என்ன? அந்தத் திருத்தத்தைக் காப்பாற்றாமல் மேலும் கூடுதலான அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகளைப் பற்றியோ அல்லது சமஷ்டித் தீர்வு பற்றியோ பேசுவதில் உண்மையில் அர்த்தமில்லை.”

மாகாண சபை முறைமையை விடுதலைப் புலிகள் மூர்க்கமாக நிராகரித்தார்கள் என்பது உண்மை. அதற்குப் பதிலாக அவர்கள் தனிநாடு என்ற இலக்கை முன்வைத்தார்கள். அந்த இலக்கை அடைவதற்கு அவர்கள் ஆயுதப் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால், இன்று மாகாண சபை முறைமையை நிராகரிக்கும் ஒருசில தமிழ்த் தேசியவாதத் தரப்புகள் அதற்கு மாற்றாக முன்வைக்கும் தீர்வுகளை அடைவதற்கான செயற்திட்டமாகவும் போராட்ட வழியாகவும் எவற்றைத்தான் முன்னிறுத்துகிறார்கள்? எதுவுமே இல்லை. 

ஐக்கிய நாடுகள் சபை  அல்லது சர்வதேசச் சமூகம் இலங்கையில் தலையீடு செய்து தமிழர்களுக்குத் தீர்வைப் பெற்றுத்தரும் என்பது போன்ற பேச்சுகள்  அப்பாவித்தனமான கற்பனாவாதம் மட்டுமே.ஐ.நா. சபையோ  அல்லது சர்வதேசச் சமூகமோ  ‘மனிதவுரிமைகள் கண்காணிப்பு’ என்பதைத் தாண்டி இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கான அரசியல் உரிமைகள் குறித்த பிரச்சினைகளில் தலையீடு செய்யப் போவதில்லை. அதற்கான எந்தச் சிறு அறிகுறியும் கடந்த 16 வருடங்களில் தெரியவில்லை.

இந்தியாவின் நிலை:

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முன்னின்று உருவாக்கிய இந்திய அரசு 13-ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கடந்த காலங்களில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தது உண்மைதான். எனினும், கடந்த முப்பத்தெட்டு வருடங்களாக அந்த அழுத்தம் வெற்றியளிக்கவில்லை. இன்று இந்தியா 13-ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு   இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதில்லை என்பதைத் தனபாலசிங்கம் நூலில் விரிவாகவே விளக்குகிறார். “இலங்கையில் தனது பொருளாதார மற்றும் மூலேபாய நலன்களைப் பேணிக் காப்பதற்கு பயன்படுத்தக் கூடிய ஒன்றாக தமிழர் பிரச்சினையைக் கருதும் நிலையில் இந்தியா இனிமேலும் இல்லை” என்கிறார் அவர். 

முழுமையான அதிகாரங்களை உள்ளடக்கிய மாகாண சபைகள் முறைமை  வேண்டும், அதுவே இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சாத்தியமான முதற்படி என்பதை நூலின் பல இடங்களிலும் தனபாலசிங்கம் அழுத்தமாக எழுதிச் செல்கிறார். “அரசாங்கம் கொண்டு வரவிருப்பதாகக் கூறுகின்ற புதிய அரசியலமைப்பில் 13-ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களும் உள்ளடக்கப்பட வேண்டுமானால் முதலில் தமிழர் அவை தங்களுக்கு வேண்டுமென்று உறுதியாக நிற்க வேண்டும். தற்போதைய நிலவரம் வேண்டி நிற்பதற்கு இணங்க நிதானமாகச் சிந்தித்துச் செயற்படுவதற்கு இனிமேலும் தவறினால், இறுதியில் இலங்கைத் தமிழ் மக்கள் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாத இழப்புகள், தியாகங்களுக்குப் பின்னரும் கூட எதையுமே பெற முடியாத ஒரு மக்கள் கூட்டமாக விடப்படும் ஆபத்து இருக்கிறது” என்கிறார்.

மாகாண சபைகளை விடுதலைப் புலிகள் மட்டும் நிராகரிக்கவில்லை. இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய சக்தியான ஜே.வி.பியும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையும் மகாண சபைகளையும் கடுமையாக எதிர்த்தது. இவற்றை எதிர்த்துத்தான் ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி  1987-இல் தொடங்கி இரத்த ஆறு ஓடியது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையும் மாகாண சபைகளையும் ஏற்றுக்கொண்ட பல சிங்கள அரசியல்வாதிகளை ஜே.வி.பி. படுகொலை செய்தது. படுகொலை அரசியலிலிருந்து பின்பு ஜே.வி.பி. மீண்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினாலும் 13-ஆவது திருத்தச் சட்டம் குறித்த அவர்களது எதிர்ப் பார்வைகள் இன்றுவரை மாறவில்லை. 

எனவே, முழுமையாக அதிகாரமளிக்கப்பட்ட மாகாண சபைகளை இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்றே நான் கருதுகிறேன்.  அரசாங்கம் சொல்வது போன்று புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும், இனங்களுக்கிடையே அதிகாரப் பரவலாக்கல் சாத்தியமில்லை என்பதற்கான அறிகுறியே ரில்வின் சில்வாவின் பேச்சிலிருந்து தெரிகிறது. 

இனவாதமும் மதவாதமும்:

நூலின் மூன்றாவது கட்டுரையில் தனபாலசிங்கம் “இலங்கையில் இனவாத அரசியலும் மதத் தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று இடையறாது சூளுரைத்துவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத் தலைவர்கள் அதே இனவாதமும் மதவாதமும் தோற்றுவித்த நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணாமல் ஒருபோதும் அந்த இலட்சியத்தை அடைய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார். 

அரசாங்கத் தலைவர்கள் மட்டுமல்லாமல் முழு இலங்கை மக்களும் இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். 13-வது திருத்தச் சட்டம் என்பது இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அதை முழுமையாக  நடைமுறைப்படுத்துவது   நீண்டகால இனப் பிரச்சினையைத்  தீர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் என்பதை இன்றைய அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். உருவாக்கப் போவதாகச் சொல்லப்படும் புதிய அரசியலமைப்பில் இதைவிடச் சிறப்பான தீர்வு ஒன்றிருந்தால் நல்லதே. ஆனால், அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

நூலின் கடைசிக் கட்டுரையில் தனபாலசிங்கம் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜே.வி.பி.யின் முன்னாள் பொதுச் செயலாளர்  லயனல் போபகேயை மேற்கோள்காட்டி  இவ்வாறு எழுதுகிறார் : “அதிகாரப் பரவலாக்கம், ஆட்சிமுறையில் சகல சமூகங்களின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறையே தவிர, தேசிய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தல் அல்ல. அதிகாரப் பரவலாக்கத்தைப் பிரிவினைவாத நோக்கம் கொண்டதாகச் சிங்களப் பகுதிகளில் பலர் கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் அது கல்வி, சுகாதாரம், நிலம், மற்றும் நிருவாகம் போன்ற துறைகளில் மக்கள் தாங்களாகவே தீர்மானங்களை எடுக்க வழிவகுக்கும் ஒரு ஏற்பாடாகும்.”

அதிகாரப் பரவலாக்கமானது பிரிவினைவாத நோக்கம் கொண்டது எனச் சிங்களப் பகுதிகளில் மட்டுமல்ல, தமிழ்ப் பகுதிகளிலும் கருதும் சிந்தனைச் சிற்பிகள் உண்டு. மையத்திலிருக்கும் அதிகாரம் விளிம்புகளுக்குப் பகிரப்பட வேண்டும் என்றெல்லாம் நுண் அரசியல் பேசிக் கிழிக்கும் இவர்கள் சிறுபான்மை இனங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்றால் மட்டும் முகத்தைச் சுழிக்கிறார்கள். காஸாவுக்காகக் கண்ணீரும் முள்ளிவாய்க்காலுக்காக ராஜபக்சக்களுக்கு நன்றியும் தெரிவிக்கும் இரட்டை நாக்குப் பேர்வழிகள் இவர்கள்.

நூலில் தமிழ்த் தேசியவாதக் கட்சிகளைப் பல்வேறு இடங்களிலும் தயவு தாட்சணியமின்றித் தனபாலசிங்கம் கண்டித்திருக்கிறார். அவர்களது தவறான அரசியல் நோக்குகளையும் செயலின்மையையும் கடுமையாகச் சாடுகிறார். “தமிழ் அரசியல்வாதிகளில் பலர் மக்களிடமிருந்து தாங்கள் தனிமைப்பட்டதைப் பற்றிச் சிந்திக்காமல் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள குறிப்பிட்ட சில சக்திகளைத் திருப்திப்படுத்தும் அரசியல் வழிமுறைகளில் அக்கறை காட்டுகிறார்கள்” என மிகச் சரியாகவே அவர்  குறிப்பிடுகிறார்.

புலம்பெயர் தமிழர்களின் அரசியல்: 

தமிழ்த் தேசியவாத அரசியல் என்னும்போது, புலம்பெயர் தமிழ்த் தேசியவாத அரசியலைக் குறித்தும் பேசாமல் இருக்க முடியாது. ஏனெனில், அந்த அரசியல் அவ்வளவுக்கு அநியாயங்களையும் நகைச்சுவைகளையும் செய்திருக்கிறது. ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ போன்ற பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியுள்ளது. கள நிலவரம் அறியாது தங்களது விருப்புகளை இலங்கையிலுள்ள தமிழ் மக்கள்மீது சுமத்த அது  முயற்சிக்கிறது. மேற்கு நாடுகள் முன்வந்து ஈழத் தமிழர்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்ற கற்பனை அரசியலைச் செய்கிறது. 

இந்த மேற்குசார் அரசியலில் அதிருப்தி அடைந்த ஒருபகுதிப் புலம்பெயர் தமிழ்த் தேசியவாதிகள் கிழக்கு நோக்கி நகர்ந்து ‘நாம் தமிழர்’ கட்சி தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றி விட்டால் ஈழம் மலர்ந்துவிடும் என்றெண்ணித் திரள்நிதி அளித்துக்கொண்டிருக்கிறார்கள். 

நூலில் தனபாலசிங்கம் முத்தாய்ப்பாக எழுதுகிறார்:

“உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னான இன்றைய காலப்பகுதியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலவரங்களுக்கு இசைவான முறையில் நடைமுறைச் சாத்தியமான கொள்கைகளுடனும் அணுகுமுறைகளுடனும் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை விவேகமான முறையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக் கூடிய அரசியல் தலைமைத்துவம் தமிழர்கள் மத்தியில் இன்று இல்லை என்பது பெரும் கலைக்குரியது.”

நீண்டகாலப் பத்திரிகை அனுபவத்தினூடே தனபாலசிங்கம் வசப்படுத்திக்கொண்ட எளிமையும்  துல்லியமும் இயைந்த மொழி இத்தொகுப்பைத் தங்குதடையின்றி வாசிக்க வைக்கின்றது. தேவையற்ற ஒரு சொல் கூட இல்லாமல் மிகக் கச்சிதமாகக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் நூலாசிரியர்  தனபாலசிங்கம் பேசும்போது “நான் இந்த நூலில் சித்தாந்தம் எதுவும் பேசவில்லை. எனது ஆதங்கத்தையும் துயரையும் தெரிவிக்கவே இதை எழுதினேன்” என்றார். இலங்கைத் தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் எதிர்காலத்தைக் குறித்து நேர்மையான அக்கறையுள்ள எவரையும் நூலின் வழியே தனபாலசிங்கத்தின் ஆதங்கமும் துயரும் தொற்றவே செய்யும்.

https://arangamnews.com/?p=12592

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.