ஹோமுஸ் நீரிணையைப் பாதுகாக்க பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் போர்க்கப்பல்கள் அனுப்ப வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்து
Published By: Digital Desk 3
15 Mar, 2026 | 10:46 AM
மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி விநியோக வழித்தடமான ஹோமுஸ் நீரிணையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கப்பல் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவரவும் போர்க்கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இந்தப் பணியில் அமெரிக்காவுடன் இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் மீதான போர் ஆரம்பித்து இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஹோமுஸ் நீரிணையில் தொடர்ச்சியாகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பில் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,
"ஈரானின் இராணுவ பலம் 100 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்ட போதிலும், அவர்கள் இன்னும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடும். பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் உடனடியாகப் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும். அமெரிக்கா தொடர்ந்து ஈரானியக் கடற்பரப்பில் தாக்குதல்களை முன்னெடுத்து, நீரிணையை பாதுகாப்பானதாக மாற்றும்."
உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹோமுஸ் நீரிணையைத் தொடர்ந்து முடக்கி வைக்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் முக்கிய எண்ணெய் மையமான கார்க் தீவு மீது அமெரிக்கா மிகக்கடுமையான குண்டுவீச்சை நடத்தியுள்ளது.
இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் நிறுவனங்களின் எண்ணெய் உட்கட்டமைப்புகளை அழிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளதுடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்கள் "நியாயமான இலக்குகள்" என்றும் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் கோரிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு,
பிராந்தியத்தில் கப்பல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நேச நாடுகளுடன் பல்வேறு விருப்பத்தேர்வுகள் தொடர்பில் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
யுத்தம் ஆரம்பித்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இதுவரை 16 கப்பல்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக UKMTO தரவுகள் தெரிவிக்கின்றன. தற்போது எந்தவொரு நாட்டு கடற்படையும் கப்பல்களுக்குப் பாதுகாப்பாகச் செல்லாத நிலையில், சர்வதேச கூட்டுப் படையை உருவாக்குவதே ட்ரம்ப்பின் திட்டமாக உள்ளது.
https://www.virakesari.lk/article/241001
By
ஏராளன் ·