Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை குடிநீருக்காக மாமல்லன் நீர்த்தேக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"சென்னை குடிநீருக்காக வாழ்வாதாரத்தை பறிப்பதா?" - மாமல்லன் நீர்த்தேக்கத்தை எதிர்க்கும் மீனவர்கள்

சென்னை, கோவளம், மாமல்லன் நீர்த்தேக்கம், குடிநீர், மீனவர் வாழ்வாதாரம்

படக்குறிப்பு, சென்னைக்கு அருகே அமையுள்ள புதிய மாமல்லன் நீர்த்தேக்கத்தால் தங்களுக்கு பாதிப்பு என மீனவர்கள் கூறுகின்றனர்.

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

"டேமை எங்க வேணும்னாலும் கட்டலாம். 5,000 குடும்பங்கள் பாதிக்கற மாதிரி இங்க தான் கட்டணுமா?"

"கடல் தொழில் எனக்குத் தெரியும், போனாலும் அதுல அதிகமாக வருமானம் கிடைக்காது. 10 ஆயிரம் கிடைத்தாலும் அதை வைச்சு குடும்பத்தை நடத்த முடியுமா?"

சென்னைக்கு அருகே அமையுள்ள புதிய மாமல்லன் நீர்த்தேக்கத்தால் தங்களுக்கு பாதிப்பு வரும் என்று அஞ்சும் மீனவர்கள் எழுப்பும் கேள்விகள் இவை.

சென்னை மாநகரின் அதிகரித்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த நீர்த்தேக்கம் கட்டப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது.

ஆனால், இந்த நீர்த்தேக்கம் அமைந்தால் மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடி இடங்கள் அழிந்து மீன்வளமும், 5000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என பிபிசி தமிழிடம் பேசிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

நகரமயமாக்கலின் விளைவாக அனைத்து திசைகளிலும் வளர்ந்து வரும் சென்னை பெருநகரத்தின் குடிநீர் தேவை ஒருபக்கம் இருக்க சூழலியல் பார்வையில் இயற்கையான நீர்நிலைகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்புவது ஏன்? சென்னை அருகே புதிய நீர்த்தேக்கத்திற்கான தேவை என்ன? மீனவர்கள் எழுப்பும் கவலைகள் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காண பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

மாமல்லன் நீர்த்தேக்கம் எங்கு அமைகிறது?

சென்னை, கோவளம், மாமல்லன் நீர்த்தேக்கம், குடிநீர், மீனவர் வாழ்வாதாரம்

படக்குறிப்பு,கடந்த ஜனவரி 19-ஆம் தேதி மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கான அடிக்கல்நாட்டு விழா நடத்தப்பட்டது.

சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலை (ஈசிஆர்) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்) இடையே 'மாமல்லன் நீர்த்தேக்கம்' அமைகிறது.

5,161 ஏக்கர் பரப்பளவில் இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ளது. முதல் கட்டமாக சுமார் 342 கோடி ரூபாய் மதிப்பில் 4,375 ஏக்கரில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி 19-ஆம் தேதி இதற்கான அடிக்கல்நாட்டு விழா நடத்தப்பட்டது.

சில அரசியல் கட்சிகளும் சூழலியல் அமைப்புகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சென்னை, கோவளம், மாமல்லன் நீர்த்தேக்கம், குடிநீர், மீனவர் வாழ்வாதாரம்

படக்குறிப்பு,முதல்கட்டமாக சுமார் 342 கோடி ரூபாய் மதிப்பில் 4,375 ஏக்கரில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

"சென்னையின் குடிநீர் தேவை அதிகரிப்பு"

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் துறையின் தரவுகளின்படி, 2020-ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் தினசரி குடிநீர் தேவை நாள் ஒன்றுக்கு 1,720 மில்லியன் லிட்டராக உள்ளது. இது 2035-இல் 2,523 மில்லியன் லிட்டராகவும், 2050-இல் 3,746 மில்லியன் லிட்டராகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மாமல்லன் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 1.66 டிஎம்சி ஆகும். இதன் மூலம் தினமும் 170 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும், அதன் மூலம் சென்னையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 13 லட்சம் பேரும் மற்றும் கோவளத்தைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்களும் பயனடைவார்கள் என, தமிழ்நாடு அரசின் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவளம், மாமல்லன் நீர்த்தேக்கம், குடிநீர், மீனவர் வாழ்வாதாரம்

"பயனடையும் பகுதிகள்":

  • சோழிங்கநல்லூர்

  • மேடவாக்கம்

  • பள்ளிக்கரணை

  • சிறுசேரி

  • கேளம்பாக்கம்

  • மாமல்லபுரம்

இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ள இடம் தனித்துவமான சூழலியல் அமைப்பு கொண்டதாக உள்ளது.

வடக்கே முட்டுக்காடு முகத்துவாரம் வழியாகவும் தெற்கே கொக்கிலமேடு முகத்துவாரம் வழியாகவும் கடல்நீர் உள்ளே வந்து செல்கிறது. பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து வரும் உபரிநீரும் இங்கு வந்து கலக்கிறது.

சென்னை, கோவளம், மாமல்லன் நீர்த்தேக்கம், குடிநீர், மீனவர் வாழ்வாதாரம்

படக்குறிப்பு,இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ள இடம் தனித்துவமான சூழலியல் அமைப்பு கொண்டதாக உள்ளது.

நன்னீரும் கடல்நீரும் கலக்கும் இடம்

இந்த கழுவெளி பகுதிக்கென பிரத்யேகமான உயிரினங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

"அங்கு வரும் வலசைப் பறவைகளும் உள்ளன. நன்னீரும் உப்புநீரும் கலக்கும் இடம் என்பதால் அங்கு மட்டுமே சில உயிரினங்கள் வாழும். அதனை வாழ்வாதாரமாக கொண்ட ஒரு மீனவ சமூகம் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் சில அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தது. ஆனால், இந்த அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்," என்றும் தெரிவித்தார்.

சென்னை, கோவளம், மாமல்லன் நீர்த்தேக்கம், குடிநீர், மீனவர் வாழ்வாதாரம்

பட மூலாதாரம்,TNWRB

படக்குறிப்பு,இந்த நீர்த்தேக்கத்தைச் சுற்றி 34 கிலோமீட்டர் தூரத்திற்கு கரை அமைக்கப்பட உள்ளது.

புதிய நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வரும்?

  • இந்த நீர்த்தேக்கத்தைச் சுற்றி 34 கிலோமீட்டர் தூரத்திற்கு கரை அமைக்கப்பட உள்ளது.

  • கோவளம் வடிநிலப் பகுதிகளில் உள்ள 69 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீர் புதிய கால்வாய்கள் மூலம் இதில் தேக்கி வைக்கப்பட உள்ளன.

  • இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ள இடத்தில் பக்கிங்காம் கால்வாய் செல்வதால் அது சீரமைக்கப்பட்டு, நீரோட்டத்திற்காக அணையின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் புதிய கால்வாய் அமைக்கப்பட உள்ளது.

  • தெற்குப் பகுதியில் தண்ணீர் திறந்துவிடுவதற்கான மதகுகள் அமைக்கப்பட உள்ளன.

"பாதிக்கப்படும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்"

சென்னை, கோவளம், மாமல்லன் நீர்த்தேக்கம், குடிநீர், மீனவர் வாழ்வாதாரம்

படக்குறிப்பு,மீனவ கிராமங்களின் மீன்பிடி பகுதிகளை காண்பிக்கும் புகைப்படம்

கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் தொடங்கி கடற்கரையை ஒட்டி பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் கடலுக்கு சென்றாலும் அவர்களின் பெரும்பாலான வாழ்வாதாரம் இந்த நீர்நிலையை நம்பியே உள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல, பழைய மகாபலிபுரம் சாலையிலும் பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன. இவர்களின் வாழ்வாதாரம் இதை நம்பி மட்டுமே இருப்பதாகவும் கூறுகின்றனர்.

பிபிசி தமிழ் குழு இவர்கள் மீன்பிடிக்கும் பகுதிக்குச் சென்றபோது மீனவர்கள் வலை பின்னும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கோவளம் தொடங்கி கொக்கிலமேடு வரை இதேபோல் பல்வேறு மீன்பிடி நிலைகள் உள்ளன. ஒவ்வொரு ஊர்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கான பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் வழக்கம் இங்கு இருந்து வருகிறது.

சென்னை, கோவளம், மாமல்லன் நீர்த்தேக்கம், குடிநீர், மீனவர் வாழ்வாதாரம்

பல தலைமுறைகளாக இந்தத் தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறும் கோவளம் குப்பத்தைச் சேர்ந்த மகேந்திரன், கடந்த 25 வருடங்களாக மீன்பிடித் தொழிலில் இருந்து வருகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இங்கு இறால், நண்டு மற்றும் சிலவகை மீன்களை இங்கு பிடிக்கிறோம். இது தான் எங்களின் வாழ்வாதாரம். தண்ணீர் கொண்டு வருவதற்கு நீர்த்தேக்கம் அமைப்பது என்றால் வேறு எங்கு வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாமே, 5,000 பேரை பாதித்து இந்த இடத்தில் நீர்த்தேக்கம் வர வேண்டுமா? இங்கு சேறும் உப்பும் தான் இருக்கிறது." எனத் தெரிவித்தார்.

சென்னை, கோவளம், மாமல்லன் நீர்த்தேக்கம், குடிநீர், மீனவர் வாழ்வாதாரம்

படக்குறிப்பு,கோவளம் குப்பத்தைச் சேர்ந்த மகேந்திரன்

ஆனால், இந்தப் பகுதியில் நீர்த்தேக்கம் அமைய வேறு மாற்று இடம் இல்லை என திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு இந்தத் தொழிலில் தான் நிலையான வருமானம் கிடைப்பதாகக் கூறுகிறார் கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ்.

"எனக்கு ஃபைபர் தொழில் தெரியும், ஆனால் வாழ்வாதாரம் குறைவு தான், அதில் கிடைக்கும் 300, 400 ரூபாயை வைத்து குடும்பத்தை நடத்த முடியாது. என் இரண்டு குழந்தைகள் படிக்கிறார்கள். இதை வைத்து தான் நான் குடும்பத்தை நடத்த முடியும்." என்றார்.

சென்னை, கோவளம், மாமல்லன் நீர்த்தேக்கம், குடிநீர், மீனவர் வாழ்வாதாரம்

படக்குறிப்பு,கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ்

அரசு கூறும் 3 முதன்மை தேவைகள், முதலமைச்சரின் உத்தரவாதம்

இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அந்த நிகழ்வில் பேசிய அவர், "இந்தப் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயை 15 கிலோமீட்டர் நீளம், 311 ஏக்கர் பரப்பளவில் சீரமைப்பதால் உவர்நீர் மீன்வளத்தை நம்பி இருக்கக்கூடிய மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும் அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய மீனவர்களுக்கு மீன்பிடி உரிமம் வழங்கப்படும்," எனத் தெரிவித்தார்.

குடிநீர் தேவை, வெள்ள தடுப்பு, கடல் நீர் உட்புகுவதைத் தடுத்து நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்குவது ஆகிய மூன்றும் தான் இந்தத் திட்டத்துக்கான முதன்மையான தேவைகள் என அரசு கூறுகிறது.

கடல் மீன்வளத்திற்கு பாதிப்பு உள்ளதா?

சென்னை, கோவளம், மாமல்லன் நீர்த்தேக்கம், குடிநீர், மீனவர் வாழ்வாதாரம்

இந்தத் திட்டத்திற்காக வழங்கப்பட கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் சி.ஆர்.இசட் (CRZ) அனுமதியில் 36 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

அதில் இந்தப் பகுதியின் பாரம்பரிய மீன்பிடி முறைகளில் எந்த தாக்கமும் இருக்காது என்பதை உறுதி செய்யும் விதத்தில் மீன்வளத் துறையிடம் ஆட்சேபனை இல்லா சான்று பெற வேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளின் முக்கியமான ஒன்று.

கழுவெளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்க மதிப்பீட்டு ஆய்வின்படி அந்தப் பகுதியில் இயற்கை நீரியல் முறை மீட்டெடுக்கப்படும் வரை இறால் மற்றும் மீன்வளம் மற்றும் வலசைப் பறவைகளின் வாழ்விடம் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவளம், மாமல்லன் நீர்த்தேக்கம், குடிநீர், மீனவர் வாழ்வாதாரம்

படக்குறிப்பு,இந்தத் திட்டத்தால் கடல் மீன்வளமும் பாதிக்கப்படும் என்கிறார், சூழலியல் செயற்பாட்டாளரான நித்யானந்த் ஜெயராமன்.

ஆனால், இந்த நீர்த்தேக்கம் அமைந்தால் கழிமுக மீன் வளம் மட்டுமல்லாமல் கடல் மீன் வளமும் பாதிக்கப்படும் என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளரான நித்யானந்த் ஜெயராமன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "உப்பங்கழியும், முகத்துவாரமும், இந்தப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களும் தான் கடலில் உள்ள மீன்களுக்கு தாய். இங்கு குஞ்சு பொறித்து பெரிதாகி கடலுக்குச் செல்லும் மீன்கள் தான் கடல் மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன. இறால், நண்டு போன்ற பல உயிரினங்கள் அப்படித்தான் உள்ளன. இந்தச் சூழலில் இதனால் ஏற்படும் பின் விளைவுகள் கடலிலும் தெரியும்," எனத் தெரிவித்தார்.

அரசு கூறுவது என்ன?

சென்னை, கோவளம், மாமல்லன் நீர்த்தேக்கம், குடிநீர், மீனவர் வாழ்வாதாரம்

இந்தச் சூழலில் மீன்வளத்தைப் பாதுகாக்கவும் வலசைப் பறவைகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கவும் அரசு சில திட்டங்களை முன்வைத்துள்ளது.

இதற்கு ஈடாக ஏற்கெனவே கொக்கிலமேடு பகுதியில் உள்ள ஈர நிலங்கள் மேம்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட உப்பங்கழி அமைந்துள்ள இடங்கள் புதிய ஈர நிலங்களாக மாற்றப்படும் என்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 6 செயற்கை தீவுகளும் உருவாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என அரசாங்கத்திடம் பலமுறை தெரிவித்ததாக மீனவர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி மீன்வளத் துறையிடம் இந்தத் திட்டத்திற்கு ஆட்சேபனை இல்லா சான்று வழங்கக்கூடாது என மீனவர்களின் சார்பில் கோரிக்கை கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் முன்மொழிந்திருப்பதாகவும் சட்ட வழிகளைப் பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கிறார் கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சௌந்தர பாண்டியன்.

சென்னை, கோவளம், மாமல்லன் நீர்த்தேக்கம், குடிநீர், மீனவர் வாழ்வாதாரம்

படக்குறிப்பு,கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சௌந்தர பாண்டியன்

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நாங்கள் சந்தித்தபோது எங்களுக்கு திட்டத்தை வரைபடம் போட்டுக் காண்பித்தார்கள். பக்கிங்ஹாம் கால்வாயை நாங்கள் விட்டுவிடுகிறோம். ஆனால், மற்ற இடங்கள் எங்களுக்குத் தேவை என்றார்கள். உங்களுக்கு தண்ணீர் போக்குவரத்துக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்றார்கள்."

"ஆனால், அவர்கள் அமைக்கின்ற கால்வாயால் எங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் கிடையாது. கிளைக் கால்வாய்களில் தண்ணீர் பரவுவதால் தான் இரால், நண்டு, மீன் போன்றவை குஞ்சு பொரிக்கின்றன. அதை அவர்கள் ஆக்கிரமித்துவிட்டு எங்களுக்கு கால்வாய் கொடுத்தால் நாங்கள் அதில் படகு ஓட்டச் செல்வதா? படகு சவாரி வேண்டுமானால் செய்யலாம், அது மீன்பிடிப்பதற்கான இடம் கிடையாது." என்றார்.

இந்தத் திட்டம் வருவதால் தங்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறும் சௌந்தர பாண்டியன், "காட்டுக் குப்பத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வந்தது. அதிலிருந்து கோவளத்திற்கு குடிநீர் கிடைக்கவில்லை. நெம்மேலி குப்பத்தில் இரண்டாவது திட்டம் உருவாகி வருகிறது. அதிலிருந்தும் எங்களுக்கு குடிநீர் வரப்போவதில்லை. இந்த மூன்றாவது திட்டமும் சென்னைக்குத் தான் போகப் போகிறது. எங்கள் இடத்தில் தண்ணீர் எடுத்து, வாழ்வாதாரத்தை கெடுத்து அதனால் எங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை." என்று தெரிவித்தார்.

சென்னை, கோவளம், மாமல்லன் நீர்த்தேக்கம், குடிநீர், மீனவர் வாழ்வாதாரம்

நீர்வளத் துறை கூறுவது என்ன?

இந்த நிலையில் நீர்த்தேக்கத் திட்டம் மற்றும் மீனவர்கள் எழுப்பும் கவலைகள் தொடர்பாக விளக்கம் பெற தமிழ்நாடு நீர்வளத் துறையை பிபிசி தமிழ் பலமுறை தொடர்புகொண்டது. ஆனால் அவர்களின் விளக்கத்தைப் பெற முடியவில்லை.

இந்தத் திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவின்போதே பதிலளிக்கப்பட்டு விட்டதாக நீர்வளத் துறையின் சார்பில் பிபிசி தமிழிடம் தெரிவிக்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy05j19l040o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.