Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோள்கள் எப்படி உருவாகின்றன? விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்திய ஆய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோள்கள் எப்படி உருவாகின்றன? விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்திய ஆய்வு

கோள்கள் எப்படி உருவாகின்றன? விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்திய ஆய்வு

பட மூலாதாரம்,ESA

படக்குறிப்பு,LHS 1903 நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள அசாதாரண கோள்களின் அமைப்பைப் பற்றிய சித்தரிப்புப் படம் (நட்சத்திரத்தில் இருந்து அவை இருக்கும் தொலைவுகளும் அவற்றின் அளவுகளும் புரிதலுக்காக மட்டுமே)

கட்டுரை தகவல்

  • டெய்ஸி ஸ்டீஃபன்ஸ்

  • பிபிசி உலக சேவை

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கோள்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது நம் பிரபஞ்சத்தைப் பற்றிய மிக அடிப்படையான கேள்விகளில் ஒன்று.

நமது சூரிய குடும்பத்திலும், பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் பிற பகுதிகளிலும் நாம் காணக்கூடிய விஷயங்களுடன் ஒத்துப்போகும் ஒரு கோட்பாடு விஞ்ஞானிகளிடம் இருக்கிறது.

ஆனால் இப்போது, தொலைதூரத்தில் உள்ள ஒரு கோள்களின் அமைப்பு அந்தக் கோட்பாட்டிற்கு முரணாக இருப்பதாகத் தெரிகிறது என்று சமீபத்தில் சயின்ஸ் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.

புதிய நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசி வட்டுகளில் இருந்து கோள்கள் உருவாகின்றன என்று தற்போதைய கோட்பாடு கூறுகிறது.

"இந்தத் தூசுகளை ஒன்றிணைப்பதன் மூலம் கோள்கள் உருவெடுப்பதாக நாங்கள் நினைக்கிறோம்," என்று பிரிட்டனின் வார்விக் பல்கலைக்கழகத்தில் வானியல் உதவிப் பேராசிரியராக இருப்பவரும், இந்தப் புதிய ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான முனைவர் தாமஸ் வில்சன் கூறினார்.

"அவையனைத்தும் கூழாங்கற்களைப் போல ஒன்றாகச் சேகரிக்கப்படத் தொடங்குகின்றன. பின்னர் அவை ஒன்றோடொன்று மோதி கோள்கள் எனப்படும் ஒற்றைப் பெரிய வான்பொருளை உருவாக்குகின்றன."

இது பூமியின் பாறை போன்ற அமைப்புகள், வியாழன் கோளைப் போன்ற ராட்சத வாயுக்களால் ஆன கோளின் அமைப்புகள் உருவாக வழிவகுக்கிறது.

ஒரு கோள் அதன் நட்சத்திரத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைப் பொறுத்து வெப்பநிலை மற்றும் கிடைக்கும் பொருட்கள் மாறுபடும். மேலும், இந்தத் தொலைவுதான், அந்தக் கோள், முக்கியமாக அதன் வெளிப்புறம் எதனால் ஆனது என்பதைத் தீர்மானிக்கிறது.

"சூரிய குடும்பத்தின் தொலைதூரப் பகுதிகளில், குளிர் அதீதமாக இருக்கும். அந்தப் பகுதி பனிக்கட்டிக் கோடு என்று அழைக்கப்படுகிறது. அதைத் தாண்டி, அதிகமான குளிர் நிலவுவதால், வாயுக்கள், பனிக்கட்டிகள் தோன்றி, உறைந்திருக்க முடியும்," என்று வில்சன் விளக்கினார்.

கோள்கள் எப்படி உருவாகின்றன? விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்திய ஆய்வு

பட மூலாதாரம்,Kevin M. Gill/NASA/JPL-Caltech/SwRI/MSSS

படக்குறிப்பு,வியாழன் ஒரு ராட்சத வாயு கோளாக இருந்தாலும், அதன் மையப் பகுதி பாறைகளால் ஆனது.

இந்தக் குளிரான பகுதிகளில், கோள்களால் அதிக வாயுவை சேகரித்து அடர்த்தியான வளிமண்டலங்களை உருவாக்க முடியும். நட்சத்திரத்தின் வலுவான வெப்பம், கதிர்வீச்சு ஆகியவற்றால் இந்த அடர்த்தியான வாயுவை எளிதில் அகற்ற முடியாது. வியாழன் போன்ற பெரிய வாயு கோள்கள், இந்தத் தொலைதூர, குளிரான பகுதிகளில் இப்படித்தான் உருவாகின்றன.

இதற்கு மாறாக, நட்சத்திரத்திற்கு அருகில் வெப்பமாக, வாயுவைவிட அதிகமாக தூசி நிறைந்து காணப்படும். இதன் விளைவாக, நமது சூரிய மண்டலத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் போன்ற பாறை அமைப்புகளைக் கொண்ட கோள்கள் உருவாகின்றன.

ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெவ்வேறு தூரங்களில் நிலவும் வெப்பநிலையும் வான்பொருட்களும் மாறுவதால், ஒரு நட்சத்திர குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களும் ஒரே நேரத்தில் உருவாவதாக விஞ்ஞானிகள் நம்புவதால், இதில் ஒரு சீரான வடிவம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

பொதுவாக, சிறிய பாறைக் கோள்கள் நட்சத்திரத்திற்கு அருகில் காணப்படுகின்றன. பெரிய வாயு கோள்கள் வெகு தொலைவில் காணப்படுகின்றன.

ஆனால், புதிய ஆய்விலுள்ள கோள்களின் அமைப்பு இந்த வழக்கமான வடிவத்தைப் பின்பற்றுவதில்லை.

கோள்கள் எப்படி உருவாகின்றன? விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்திய ஆய்வு

பட மூலாதாரம்,NASA-JPL

படக்குறிப்பு,புதிய நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசி வட்டுகளில் இருந்து கோள்கள் உருவாவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அசாதாரணமான கோள் வரிசை

எல்.எச்.எஸ் 1903 என்பது நமது சூரிய குடும்பத்தில் இருந்து சுமார் 117 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு சிறிய சிவப்பு எம்-ட்வார்ஃப் நட்சத்திரம். இது நமது சூரியனைவிட குளிரானது, குறைவான பிரகாசம் கொண்டது. மேலும் அதை நான்கு கோள்கள் சுற்றி வருகின்றன.

புதிய ஆய்வில், கிட்டத்தட்ட ஒவ்வொரு கண்டத்தையும் சேர்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு சர்வதேச குழுவுடன் சேர்ந்து, வில்சன், அந்த நட்சத்திர குடும்பத்தை உன்னிப்பாகக் கவனித்து, அதைச் சுற்றி வரும் முதல் மூன்று கோள்கள் விஞ்ஞானிகள் எதிர்பார்த்த வடிவத்தைப் பின்பற்றி உருவாகியிருப்பதைக் கண்டறிந்தார். அவற்றில், நட்சத்திரத்திற்கு மிக அருகிலுள்ள கோள் பாறை அமைப்புடனும், அதைத் தொடர்ந்து வரும் இரண்டு கோள்கள் வாயு அமைப்புடனும் இருந்தன.

ஆனால், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் சியாப்ஸ் செயற்கைக்கோளின் அவதானிப்புகளைப் பயன்படுத்தி, நான்காவது கோள் நட்சத்திரத்தில் இருந்து தொலைதூரத்தில் அமைந்திருந்த போதிலும் பாறை அமைப்பைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர்.

"நாங்கள் அது வாயு நிறைந்த கோளாக இருக்குமென்று எதிர்பார்த்தோம். ஆனால் அது ஏன் பாறை அமைப்பைக் கொண்டிருக்கிறது? இதுதான் பெரிய கேள்வி" என்று வில்சன் கூறினார்.

இப்படிப்பட்ட கோள்களின் வரிசை அமைப்புக்கான சாத்தியமான விளக்கங்களை ஆய்வுக்குழு ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.

அந்தச் சாத்தியமான விளக்கங்களில், நட்சத்திரத்தின் கதிர்வீச்சு வாயுவை அகற்றியிருக்கலாம் அல்லது வெளிப்புறக் கோள் வேறொரு வான்பொருளால் தாக்கப்பட்டு, அதன் வளிமண்டத்தில் இருந்த வாயுவை நீக்கியிருக்கலாம் என்ற கருதுகோள்களும் அடக்கம்.

ஆனால், இரண்டாவது மற்றும் மூன்றாவது கோள்களில் அதைச் செய்யாமல் நட்சத்திரத்தால் நான்காவது கோளில் இருந்து மட்டும் வாயுக்களை அகற்ற முடியாது. மேலும் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களை நீக்கும் அளவுக்குப் பெரிய வான்பொருள் தாக்கம் நடந்திருந்தால் அது கோளையே அழித்திருக்கும் என்று ஆய்வு மாதிரிகள் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது.

கோள்கள் எப்படி உருவாகின்றன? விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்திய ஆய்வு

பட மூலாதாரம்,ESA/Silicon Worlds

கோளின் உருவாக்கம்

இந்தக் கருதுகோள்களை நிராகரித்த பிறகு, விஞ்ஞானிகள் இந்த "விசித்திரமான" அமைப்புக்கான காரணம், கோள்கள் ஒரே நேரத்தில் உருவாகாமல், ஒன்றன் பின் ஒன்றாக உருவானதாக இருக்கலாமா என்று பரிசீலித்தனர்.

"இந்த வெளிப்புற கோளை நாம் ஒரு குறைபாடுள்ள சூழலில் உருவாக்கினால், அதாவது வளங்கள் குறைவாக இருக்கும் நிலையில் உருவாக்கினால், இந்தக் கோளின் பண்புகளை எளிதாக உருவாக்க முடியும்" என்று வில்சன் கூறினார்.

வெளிப்புற கோள் உருவாகும் நேரத்தில் நட்சத்திர அமைப்பில் ஏற்கெனவே வாயுக்கள் தீர்ந்து போயிருக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.

"எனவே கோள்கள் வேறுவிதமாக உருவாகக்கூடும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம். நட்சத்திரத்திற்கு மிக அருகிலுள்ள கோள் முதலில் உருவாகலாம். அதன் பிறகு அடுத்த கோள் உருவாகிறது. பின்னர் இன்னொன்று உருவாகிறது. படிப்படியாக, கோள்கள் நட்சத்திரத்திற்கு அருகிலிருந்து தொலைவு வரை உருவாகின்றன."

கோள்கள் நட்சத்திரத்திற்கு அருகில் இருந்து தொடங்கி, வெகு தொலைவு வரை, வளங்கள் குறைந்துகொண்டே வரக்கூடிய சூழலில், படிப்படியாக உருவாகின்றன என்ற கருத்து, 'உள்ளிருந்து வெளியே நடக்கும் கோள் உருவாக்கம்' என்று அழைக்கப்படுகிறது. இது 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோட்பாடாக முன்மொழியப்பட்டது.

ஆனால், இந்தக் கோட்பாடு உண்மையில் நடப்பதற்கான மிகவும் உறுதியான ஆதாரமாக இது விளங்குவதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறுகிறது.

'அனைத்து வடிவங்களும் அளவுகளும்'

ஒரு நட்சத்திர குடும்பத்திலுள்ள அனைத்து கோள்களும் ஒரே நேரத்தில் உருவாகத் தொடங்குகின்றன என்ற அனுமானத்தை, குறிப்பாக, பிரபஞ்சத்தின் பிற பகுதிகளில் நாம் காணும் அமைப்புகளில், நாம் திருத்திக்கொள்ள வேண்டியிருக்கலாம் எனக் கருதுகிறார் வில்சன்.

மேலும், இதுபோன்ற திருத்தம் நமது சொந்த சூரிய குடும்பத்தைப் புரிந்துகொள்வதிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

"முதலில் புதன் உருவானதா, பின்னர் வெள்ளி, பின்னர் பூமி, அடுத்து செவ்வாய் என வரிசையாக உருவானதா? இது நமது சொந்த சூரிய குடும்பத்தின் காலம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது."

சூரிய குடும்பத்தில் என்ன நடந்தாலும் அதுவே பொதுவான விதிமுறை என்று நாம் கருதக்கூடாது என்பதையும் இது எடுத்துக் காட்டுவதாக அவர் கூறினார்.

"சூப்பர்-எர்த்ஸ், துணை-நெப்டியூன்கள் என்று அழைக்கப்படும் ஒரு வகையான கோள்கள் உள்ளன. மேலும் சூரிய குடும்பத்தில் நம்மிடம் இல்லாத அயலக வகைகளும் விண்வெளியில் உள்ளன" என்று அவர் விளக்கினார்.

"இந்தப் புறக்கோள்கள் அனைத்தும் எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் வரலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும்."

"நாம் இன்னும் சிந்திக்காத, உயிர்கள் வாழ ஏதுவான அமைப்பைக் கொண்ட வான்பொருட்கள் இருக்கலாம். நாம் சூரிய குடும்பத்தின் மீதே அதீதமாக கவனம் செலுத்துகிறோம்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwy8ddxxdkro

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.