Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோபோடிக்ஸ்: அமெரிக்கா, சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரோபோடிக்ஸ்: அமெரிக்கா, சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை என்ன?

ரோபோடிக்ஸ், டெல்லி ஏஐ மாநாடு, சீனா, அமெரிக்கா, இந்தியா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பிப்ரவரி 18 அன்று டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏஐ மாநாட்டில் ஜியோ ரோபோ காட்சிப்படுத்தப்பட்டது

கட்டுரை தகவல்

  • தில்நவாஸ் பாஷா

  • பிபிசி செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகமான கல்கோடியாஸ் பல்கலைக்கழகம், செயற்கை நுண்ணறிவு மாநாட்டின்போது சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு ரோபோவை காட்டி, அது தனது சொந்த உருவாக்கம் எனக் கூறியது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இருப்பினும், பின்னர் அந்த ரோபோவை தாங்கள் உருவாக்கியதாகக் கூறவில்லை என்று அந்தப் பல்கலைக்கழகம் கூறியது.

இதற்கிடையே, ஏஐ மற்றும் ரோபோடிக்ஸ் துறையில் இந்தியா எந்த நிலையில் உள்ளது, இந்தத் துறையில் முன்னேறப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்பன குறித்தும் விவாதம் நடக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகள் துறையில் உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் அமெரிக்கா மற்றும் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் தற்போது முன்னணியில் உள்ளன. இப்போது விவசாயம் முதல் மருத்துவம் மற்றும் உற்பத்தி வரை ஒவ்வொரு துறையிலும் ஏஐ மற்றும் ரோபோடிக்ஸ் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவிலும், இந்தத் துறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் இந்தியா இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளதாகவும் நிபுணர்கள் நம்புகின்றனர்.

ரோபோடிக்ஸ் இந்தியாவில் இன்னும் வளர்ந்து வரும் ஒன்றாகவே கருதப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக ரோபோடிக்ஸ் துறையில் பணியாற்றி வரும் ஐஐடி மண்டியைச் சேர்ந்த ரோபோடிக்ஸ் பேராசிரியர் அமித் சுக்லாவின் கூற்றுப்படி, இந்தியா தொழில்நுட்பத் திறனையும் திறமையையும் கொண்டிருந்தாலும், உள்கட்டமைப்பு தொடர்பான சவால்கள் இந்தத் துறையின் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றன.

"ரோபோடிக்ஸ் என்பது 'ஒரு ரோபோ உடலுடன் இருக்கும் செயற்கை நுண்ணறிவு ஆன்மா' என்பதைத் தவிர வேறில்லை. இதுவொரு கடினமான துறை. ஏனெனில் இதற்கு பொறியியலின் ஒவ்வொரு கிளையுடைய ஒருங்கிணைப்பும் தேவைப்படுகிறது," என்கிறார் பேராசிரியர் அமித் சுக்லா.

ரோபோடிக்ஸ், டெல்லி ஏஐ மாநாடு, சீனா, அமெரிக்கா, இந்தியா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி சீனாவின் தியான்ஜினில் நடந்த எஸ்.சி.ஓ உச்சிமாநாட்டின்போது பத்திரிகை மையத்தில் மக்கள் ஒரு ஏஐ ரோபோவின் படங்களை எடுத்துக்கொண்ட காட்சி

இந்தியா தற்போது எந்த நிலையில் உள்ளது?

1980களில் ரோபோடிக்ஸை நோக்கி இந்தியா தனது முதல் நடவடிக்கைகளை எடுத்தது. இன்று, இந்தியாவின் ஐஐடி நிறுவனங்கள் பிரத்யேக ரோபோடிக் ஆய்வகங்களைக் கொண்டுள்ளன. ஆனால் இந்தியாவில் ரோபோடிக்ஸ் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகவும் சிதறிக் கிடப்பதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

"அமெரிக்கா 1950களில் ரோபோடிக்ஸில் ஈடுபடத் தொடங்கியது. இந்தியாவின் முதல் ஆய்வகம் 1980களில் ஐஐடி கான்பூரில் நிறுவப்பட்டது. இந்தப் போட்டியில் நாம் சுமார் 20, 30 ஆண்டுகள் பின்தங்கியுள்ளோம். ஆனால், இப்போது இந்த இடைவெளி விரைவாகக் குறைந்து வருகிறது," என்று கூறினார் அமித் சுக்லா.

உற்பத்தி மற்றும் பிற துறைகளில் ரோபோக்களின் பயன்பாட்டில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

சர்வதேச ரோபோடிக்ஸ் கூட்டமைப்பின் தரவுகள்படி, இந்தியா இப்போது தொழில்துறை ரோபோ நிறுவல்களுக்கான உலகின் முன்னணி சந்தைகளில் ஒன்றாக இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 9,000 புதிய ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன.

இந்த வளர்ச்சி முக்கியமாக ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், தானியங்கிக் கிடங்குகள் போன்ற துறைகளில் காணப்படுகிறது.

அரிதான மண் மறுசுழற்சி போன்ற துறைகளிலும் இந்தியாவில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் முன்னணி அரிய மண் மறுசுழற்சி நிறுவனங்களில் ஒன்றான ஏடிரோவின் நிறுவனர் நிதின் குப்தா இதுகுறித்துப் பேசியபோது, "இந்தியா இப்போது தொழில்துறை ரோபோ நிறுவல்களுக்கான சந்தைகளில் உலகளவில் முதல் ஆறு சந்தைகளில் ஒன்றாக உள்ளது. ஆண்டுதோறும், 9,000க்கும் மேற்பட்ட யூனிட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன," என்றார்.

"ஏடிரோ இந்த உந்துதலை உயர் துல்லியமான மறுசுழற்சியில் மேம்படுத்துகிறது. அங்கு ரோபோடிக் பேட்டரி வெட்டுதல், தானியங்கி பிரித்தகற்றுதல், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட செயல்முறை கட்டுப்பாடு ஆகியவை இப்போது மனித செயல்பாடுகளுக்கு மாற்றாக உள்ளன," என்றும் அவர் கூறினார்.

ரோபோடிக்ஸ், டெல்லி ஏஐ மாநாடு, சீனா, அமெரிக்கா, இந்தியா

பட மூலாதாரம்,Getty Images

நிதின் குப்தாவின் கூற்றுப்படி, இந்த மாற்றம் உற்பத்தி செயல்திறனை 50 முதல் 60% வரை மேம்படுத்தியுள்ளது. உயர் மின்னழுத்த லித்தியம்-அயன் பேட்டரிகளை கையாள்வதில் பாதுகாப்பையும் கணிசமாக வலுப்படுத்தியுள்ளது.

"ரூர்க்கியில் உள்ள எங்கள் கட்டமைப்பில், மெக்கட்ரானிக் வெட்டு அமைப்புகள் மற்றும் சாமர்த்தியமான பொருள் கையாளுதல், சிக்கலான கழிவு நீரோடைகளுக்கு நிலைத்தன்மையைக் கண்டறியும் தன்மையைக் கொண்டு வருகின்றன. எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி விரிவடையும்போது, தொழில்துறை அளவில் முக்கியமான பொருட்களின் நம்பகமான மற்றும் அதிக திறன் மீட்டெடுப்பை அடைவதில் ரோபோடிக்ஸ் முக்கியப் பங்கு வகிக்கும்," என்று நிதின் குப்தா கூறுகிறார்.

இருப்பினும், ரோபோடிக்ஸ் தன்னிறைவை அடைய இந்தியா இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதை நிபுணர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். தற்போது ஒவ்வொரு 10,000 தொழிலாளர்களுக்கும் எத்தனை ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஒப்பிடும்போது, சீனா, தென் கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளைவிட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.

இந்தியா செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் மேம்பாடு, ரோபோக்களின் பயிற்சி ஆகியவற்றில் முன்னேறி வருகிறது. ஆனால் ரோபோக்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உபகரணங்களுக்கு இன்னும் வெளிநாடுகளைச் சார்ந்துள்ளது.

"இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் உற்பத்தி அமைப்பு இல்லாததுதான். மோட்டார்கள், கட்டுப்படுத்திகள், சிப்கள், சென்சார்களுக்கு நாம் இன்னும் சீனாவைச் சார்ந்துள்ளோம்," என்கிறார் பேராசிரியர் அமித் சுக்லா.

இந்தியாவில் ரோபோ உற்பத்திக்கான சூழல் அமைப்பை உருவாக்குவதில் மிகப்பெரிய சவால் வளங்கள் பற்றாக்குறைதான் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

"சீனாவிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் பட்ஜெட் இந்தியாவிலுள்ள அனைத்து ஐஐடி-களின் ஒருங்கிணைந்த பட்ஜெட்டைவிட ஐந்து மடங்கு அதிகமாக இருக்கலாம். இது வளங்களில் மிகப்பெரிய இடைவெளியைக் காட்டுகிறது" என்று பேராசிரியர் சுக்லா கூறுகிறார்.

இதற்கு ஒரு முக்கியக் காரணம், தனியார் முதலீடு இல்லாததுதான். "நமது 'வறுமை மனநிலை' மற்றும் அதிகாரத்துவத்தில் இருந்து நாம் வெளியேற வேண்டும்" என்கிறார் பேராசிரியர் சுக்லா. அமெரிக்காவில் ரிஸ்க் எடுக்கும் மூலதனம் மிக அதிகமாக உள்ளது, 10% வெற்றி வாய்ப்பு இருந்தால்கூட அதற்கு நிதி கிடைக்கிறது. அதுவே இந்தியாவில் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் 200% உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறார்கள்."

பேராசிரியர் சுக்லா ஒரு ரோபோடிக்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். அவர் அரசின் ஆதரவைப் பெற்றாலும், தனியார் முதலீடு குறைவு.

"இந்தியாவில் ஐடி, செயற்கை நுண்ணறிவு அல்லது மென்பொருள் துறையில் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கினால், முதலீட்டிற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஏனெனில், இந்தப் பகுதிகளில் ரிஸ்க் குறைவாக உள்ளது. ஆனால், ரோபோடிக்ஸ் துறையில் ரிஸ்க் மிக அதிகமாக உள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் பெரியளவில் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள்," என்று விளக்கினார் பேராசிரியர் சுக்லா.

ரோபோடிக்ஸ், டெல்லி ஏஐ மாநாடு, சீனா, அமெரிக்கா, இந்தியா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்தியாவைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழகம் ஏஐ மாநாட்டில் ஒரு ரோபோ நாயை தன்னுடையது எனக் காட்சிப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. அது தங்களுடையது என பல்கலைக்கழகம் கூறியது, ஆனால் அது உண்மையில் சீனாவில் இருந்து வந்தது.

ரோபோடிக்ஸ் துறையில் இந்தியாவின் ஈடுபாடு

இந்தியாவில் ரோபோடிக்ஸ் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பு பெரும்பாலும் ஐஐடி நிறுவனங்கள் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் போன்ற சிறந்த தொழில்நுட்ப அமைப்புகளால் வழிநடத்தப்படுகின்றன.

ஐஐடி மெட்ராஸ், ஐஐடி டெல்லி, ஐஐடி கான்பூர் போன்ற நிறுவனங்கள் ரோபோடிக்ஸில் பிரத்யேக ஆய்வகங்கள் மற்றும் சிறந்த மையங்களைக் கொண்டுள்ளன. அங்கு நீருக்கடியில் ரோபோடிக்ஸ், டிரோன்கள், மொபைல் ரோபோக்கள், தொழில்துறை தானியங்கி அமைப்பு ஆகியவற்றில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, ஐஐடி மெட்ராஸில் உள்ள ரோபோடிக்ஸ் ஆய்வகம் மொபைல் மற்றும் மருத்துவ ரோபோடிக்ஸ் போன்ற துறைகளில் ஆய்வு செய்து வருகிறது. அதே நேரத்தில், ஐஐடி டெல்லியில் உள்ள உயிரியல் ரீதியாக ஈர்க்கப்பட்ட ரோபோக்கள் மற்றும் டிரோன்களுக்கான மையம் பலதரப்பட்ட ரோபோடிக்ஸ் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது.

மறுபுறம், அட்வெர்ப், கிரேயோரெஞ்ச், அட்டி மோட்டார்ஸ், ஜென்ரோபோடிக்ஸ், சிஸ்டமிக்ஸ் போன்ற இந்திய ஸ்டார்ட்அப்கள் தானியங்கி கிடங்குகள், தன்னாட்சி மொபைல் ரோபோக்கள், தொழில்துறை ரோபோடிக்ஸ் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளன. மேலும், உலக சந்தையிலும் தங்கள் முத்திரையைப் பதித்து வருகின்றன.

இருப்பினும், இந்தத் துறையிலுள்ள இந்திய நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடு இல்லாமை, வரம்புக்கு உட்பட்ட வன்பொருள் உற்பத்தி அமைப்பு, வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டி, திறமையான வன்பொருள் பொறியாளர்களின் பற்றாக்குறை போன்ற சவால்களை எதிர்கொள்கின்றன. இதன் காரணமாக, இந்தியா இன்னும் சீனா, அமெரிக்கா போன்ற ரோபோடிக்ஸ் வல்லரசுகளுடன் ஒப்பிடும்போது பின்தங்கியே உள்ளது.

உலகளவில், ரோபோடிக்ஸ் துறையில் ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இப்போது வேகமாக வளர்ந்து வரும் சீனாவின் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ரோபோடிக்ஸ், டெல்லி ஏஐ மாநாடு, சீனா, அமெரிக்கா, இந்தியா

பட மூலாதாரம்,Getty Images

ஏபிபி(சுவிட்சர்லாந்து), ஃபானுக் மற்றும் யஸ்காவா (ஜப்பான்), குகா (ஜெர்மனி), பாஸ்டன் டைனமிக்ஸ் மற்றும் இன்ட்யூட்டிவ் சர்ஜிக்கல் (அமெரிக்கா) ஆகிய நிறுவனங்கள் தொழில்துறை தானியங்கி அமைப்பு, மருத்துவ ரோபோடிக்ஸ், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இயந்திரங்களில் தொழிலுநுட்ப பயணத்தை வழிநடத்துகின்றன.

இந்த நிறுவனங்களின் வலிமை அவற்றின் வலுவான உற்பத்தி அமைப்பு, கனரக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீடுகள் மற்றும் பல தசாப்த கால பொறியியல் நிபுணத்துவத்தில் இருக்கிறது.

இதற்கு நேர்மாறாக, இந்திய ரோபோடிக்ஸ் நிறுவனங்கள் இன்னும் வளர்ச்சியின் ஆரம்பக் கட்டங்களிலேயே உள்ளன. அட்வெர்வ், கிரேயோரென்ட், ஏடி மோட்டார்ஸ், சிஸ்டமிக்ஸ் போன்ற நிறுவனங்கள் தானியங்கி கிடங்கு, மொபைல் ரோபோக்கள், இண்டஸ்ட்ரி 4.0 தீர்வுகள் ஆகியவற்றில் வேலை செய்கின்றன. ஆனால் அவற்றின் அளவு மற்றும் முதலீடு, உலகளாவிய ஜாம்பவான்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே உள்ளன.

நிபுணர்களின் கூற்றுப்படி, இந்திய நிறுவனங்கள் பெரும்பாலும் வன்பொருள் உற்பத்திக்கு இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பத்தை சார்ந்துள்ளன. அதேநேரத்தில், அவற்றின் உண்மையான சாதகம், மென்பொருள், செயற்கை நுண்ணறிவு வழிமுறைகள், அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் உள்ளது. எனவே, உலக சந்தையுடன் ஒப்பிடும்போது, இந்தியா இன்னும் முன்னணி ரோபோடிக்ஸ் உற்பத்தியாளராகக் கருதப்படவில்லை. அதோடு, சரியான முதலீடு மற்றும் கொள்கை ஆதரவுடன் வரும் ஆண்டுகளில் அதன் நிலையை வலுப்படுத்தக்கூடிய வேகமாக வளர்ந்து வரும் துறையாகக் கருதப்படவில்லை.

"நாம் நமது திறன்களை நேர்மையாக மதிப்பிட வேண்டும். இந்தியா அதன் பெரும்பாலான வன்பொருளை வெளிநாட்டிலிருந்து வாங்குகிறது என்பது உண்மைதான். நம் உண்மையான பலம் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள், மென்பொருள் மற்றும் நுண்ணறிவை உருவாக்குவதில் உள்ளது. நாம் உருவாக்காத விஷயங்களுக்கு பெருமை கொள்வதைவிட இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்," என்கிறார் பேராசிரியர் அமித் சுக்லா.

ரோபோடிக்ஸ், டெல்லி ஏஐ மாநாடு, சீனா, அமெரிக்கா, இந்தியா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஏஐ மாநாட்டின்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ரோபோ

இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?

செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் துறையில் உலக வல்லரசுகளைவிட இந்தியா இன்னும் பின்தங்கியே இருந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் இந்திய அரசும் இந்தத் திசையில் முன்னேற ஏதுவாகப் பல கொள்கை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை மூலோபாய தொழில்நுட்பங்களாகக் கருதி, உலகளாவிய தொழில்நுட்ப போட்டியில் இந்தியாவை முன்னணியில் நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல கொள்கை முயற்சிகளை இந்திய அரசு எடுத்துள்ளது.

நிதி ஆயோக் வெளியிட்ட செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய உத்தி (அனைவருக்கும் ஏஐ) ஆவணம், சுகாதாரம், விவசாயம், கல்வி, ஸ்மார்ட் நகரங்கள் ஆகிய முன்னுரிமை துறைகளை அடையாளம் கண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கான ஒரு முக்கியக் கருவி என்று செயற்கை நுண்ணறிவை குறிப்பிட்டுள்ளது.

"ஏஐ இறையாண்மை" மற்றும் தொழில்நுட்ப சுயச்சார்பை அடைவதற்கு நாட்டில் கணினி உள்கட்டமைப்பு, தரவுத் தளங்கள், திறன் மேம்பாடு, உள்நாட்டு ஏஐ மாதிரி மேம்பாடு போன்றவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தியா ஏஐ திட்டத்தை அரசு தொடங்கியது.

ரோபோடிக்ஸ் துறையில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தேசிய ரோபோடிக்ஸ் உத்தி, 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகளாவிய ரோபோடிக்ஸ் மையமாக மாற்றுவதற்காக உற்பத்தி, விவசாயம், சுகாதாரம், தேசிய பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில் ரோபோடிக்ஸை ஏற்றுக்கொள்வதை வலியுறுத்துகிறது.

மதிப்பு வாய்ந்த உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சியை துரிதப்படுத்தும் தேசிய பணிகளுக்கு ரோபோடிக்ஸ் ஒரு "திறன் பெருக்கி"யாக கருதப்படுவதாகவும் அரசின் அதிகாரபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கூடுதலாக, டிஜிட்டல் இந்தியா, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், ஏஐ ஆளுகை வழிகாட்டுதல்கள் மூலம், கண்டுபிடிப்புகளுக்கும் ஒழுங்குமுறைக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் ஒரு பொறுப்பான, மனிதர்களை மையமாகக் கொண்ட ஏஐ சூழல் அமைப்பை உருவாக்க அரசாங்கம் முயல்கிறது.

பி.ஐ.பி வழங்கிய தகவலின்படி, மத்திய அரசு இந்தியா ஏஐ திட்டம் 2024-க்கு சுமார் 10,372 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது நாட்டின் ஏஐ கணினி உள்கட்டமைப்பு, தரவுத் தளங்கள், ஆய்வு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான மிகப்பெரிய முயற்சி. இந்த நிதி ஐந்து ஆண்டுகளுக்கானது.

இது தவிர, ஏஐ சிறப்பு மையம், சூப்பர் கம்ப்யூட்டிங் திட்டம், செமிகண்டக்டர் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் தொழில்நுட்ப தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும், ஒப்பீட்டளவில் அமெரிக்காவில் கூட்டாட்சி மட்டத்தில் பாதுகாப்பு சாராத ஏஐ ஆராய்ச்சியில் ஆண்டுதோறும் சுமார் 3.3 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படுகிறது. தனியார் துறை முதலீடு இதைவிடப் பல மடங்கு அதிகம்.

இதற்கிடையில், அரசு சார்ந்த தொழில்துறை கொள்கையின் கீழ் சீனா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதலீட்டைப் பெருமளவு அதிகரித்துள்ளது. பல அறிக்கைகள், அதன் மொத்த ஆராய்ச்சி செலவினம் அமெரிக்காவுக்கு நிகராகவோ அல்லது அதை விஞ்சிவிடும் வகையிலோ இருப்பதாகக் கூறுகின்றன. இது ஏஐ மற்றும் ரோபோடிக்ஸ் துறையில் விரைவான முன்னேற்றத்தைச் சாத்தியமாக்குகிறது.

இந்தச் சூழ்நிலையில், இந்தியாவின் உத்தி, வரையறுக்கப்பட்ட நிதி மற்றும் வளங்களைக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரோபோக்கள், இயந்திரங்கள் போன்ற பெரிய அளவிலான வன்பொருட்களை தயாரிப்பதில் போட்டியிட முயல்வதற்குப் பதிலாக, இந்தியா முக்கியமாக செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள், டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆதரிப்பதில் கவனம் செலுத்துகிறது.

"இந்தியாவில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்து நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஸ்டார்ட்அப் இந்தியா போன்ற முயற்சிகளின் மூலம் அரசு சூழலை மாற்றியுள்ளது. இதனால், ஆராய்ச்சி வெளியீடுகளுடன் மட்டுப்படுத்தப்படாமல், தயாரிப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. இப்போது நாம் சீனா, அமெரிக்காவை போலத் திறமையாகச் செயல்பட வேண்டும்," என்கிறார் பேராசிரியர் அமித் சுக்லா.

இருப்பினும், இந்தியாவும் பெரிய அளவில் மக்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டுமென்று பேராசிரியர் சுக்லா வலியுறுத்துகிறார்.

"பெரிய அளவில் மனித வளத்தைப் பயிற்றுவிக்காவிட்டால், சீனா, அமெரிக்காவின் நிலையை நாம் அடைய முடியாது. பட்டங்களை வழங்குவது மட்டும் போதாது, நமக்கு உண்மையான ஆய்வகங்களும் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களும் தேவை," என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3rzp8v12z4o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.