Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேலுக்கு பயணிக்கும் பிரதமர் மோதி - டிரோன்கள் குறித்த விவாதம் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலுக்கு பயணிக்கும் பிரதமர் மோதி - டிரோன்கள் குறித்த விவாதம் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

பிரதமர் நரேந்திர மோதி இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு பயணம் செய்தார்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பிரதமர் நரேந்திர மோதி இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு பயணம் செய்தார்

கட்டுரை தகவல்

  • சந்தன் குமார் ஜஜ்வாரே

  • பிபிசி செய்தியாளர்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பிரதமர் நரேந்திர மோதி இன்று தொடங்கி இரண்டு நாட்கள் (பிப்ரவரி 25-26) இஸ்ரேல் பயணம் மேற்கொள்கிறார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், பிரதமர் மோதியின் இஸ்ரேல் பயணம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்ததாகத் தெரிவித்தார்.

பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்தப் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர் மோதி, "இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவு குறித்த விஷயத்தில் நான் உங்களுடன் முழுமையாக உடன்படுகிறேன். நம்பிக்கை, புத்தாக்கம், அமைதி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஒரே மாதிரியான அர்ப்பணிப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலுடனான உறுதியான நட்புக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது," என்று கூறினார்.

ஃபோர்ப்ஸ் இந்தியா செய்தியின்படி, 2026-ஆம் ஆண்டில் இந்தியா இஸ்ரேலுடன் 8.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போகிறது. இதில், ஸ்பைஸ்-1000 துல்லியமாக வழிநடத்தப்படும் குண்டுகள், ராம்பேஜ் (Rampage) வானிலிருந்து தரையை குறிவைக்கும் ஏவுகணை, வான்வழி ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஐஸ் பிரேக்கர் ஏவுகணை அமைப்பு ஆகியவை அடங்கும்.

பாதுகாப்பு நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவாவும், பிரதமர் மோதியின் பயணத்தின் போது இஸ்ரேலுடன் பல முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று கூறுகிறார், இதில் நவீன டிரோன்களும் அடங்கும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், இதில் 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம், அதாவது இஸ்ரேல் தொழில்நுட்பத்தை வழங்கும் டிரோன்களின் உற்பத்தி இந்தியாவில் நடைபெறக்கூடும்.

'தி இந்து' நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, இந்தியா இஸ்ரேலிடமிருந்து கூடுதல் எண்ணிக்கையிலான ஹெரான் எம்கே-2 என்கிற நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் டிரோன்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.

'ஏர்ஃபோர்ஸ் டெக்னாலஜி டாட் காம்'படி, இந்த டிரோன் ஒரே நேரத்தில் தொடர்ந்து 45 மணி நேரம் பறக்கக்கூடியது.

இது சுமார் 470 கிலோ எடையைச் சுமந்து செல்லக்கூடியது. இது சுமார் 35 ஆயிரம் அடி உயரம் வரை செல்லக்கூடியது என்பதுடன் அனைத்து வகையான வானிலையிலும் பறக்கும் திறன் கொண்டது.

தற்போதைய காலகட்டத்தில் பாதுகாப்பு மற்றும் போர் துறையில் 'டிரோன்' ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவருகிறது என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

பிரதமர் மோதியின் இஸ்ரேல் பயணம் குறித்து பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில், "இஸ்ரேல் மற்றும் இந்தியா இடையிலான உறவு இரண்டு உலகளாவிய தலைவர்களுக்கு இடையிலான ஒரு வலுவான கூட்டணியாகும்." என்று பதிவிட்டுள்ளார்.

"நாங்கள் புத்தாக்கம், பாதுகாப்பு மற்றும் ஒரே மாதிரியான மூலோபாய பார்வையில் கூட்டாளிகளாக இருக்கிறோம். நாம் அனைவரும் இணைந்து நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாடுகளின் ஒரு குழுவை உருவாக்கி வருகிறோம்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

என்ன ஒப்பந்தங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன?

மோதலின் போது பாலத்தீன பிரதேசத்தில் ஒரு இஸ்ரேலிய டிரோன் பறக்கிறது

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பாலத்தீன பிரதேசத்தில் ஒரு இஸ்ரேலிய டிரோன் பறக்கிறது (கோப்புப் படம்)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் , அமெரிக்கா மற்றும் இரான் இடையே நிலவி வரும் பதற்றத்துக்கு மத்தியில் வந்துள்ளது. இதற்கு முன்பு அவர் ஜூலை 2017-இல் இஸ்ரேல் பயணம் மேற்கொண்டார்.

இதற்கு முன்னதாக இரு நாடுகளின் அமைச்சர்களும் பரஸ்பரம் பல பயணங்களை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு இஸ்ரேலின் பல அமைச்சர்கள் இந்தியா வந்திருந்தனர் மற்றும் டிசம்பர் மாதம் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார்.

பிரதமர் மோதியின் இரண்டாவது இஸ்ரேல் பயணத்தில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே பாதுகாப்புத் துறையில் பல பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும், இந்த ஒப்பந்தங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் பகிரப்படவில்லை.

ஆனால், கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானுடன் நடந்த மோதலின் அனுபவங்களின் அடிப்படையில், இஸ்ரேலின் நவீன டிரோன்களை வாங்குவதற்கும் இந்தியா ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.

உண்மையில், மாறிவரும் காலத்திற்கேற்ப உலகின் பல நாடுகள் பாதுகாப்பு, எதிரிகளின் நிலைகளை அறிதல் மற்றும் தாக்குதல் ஆகியவற்றுக்கு டிரோன்களைப் பயன்படுத்தி வருகின்றன, இந்த டிரோன் ஒரு முக்கிய ஆயுதமாக உருவெடுத்துள்ளது.

ரகசியத் தகவல்களைச் சேகரித்தல், கண்காணிப்பு, வேவு பார்த்தல், மறைவிடங்களைக் கண்டறிதல், துல்லியமாக இலக்கு வைத்துத் தாக்குதல், கடினமான பகுதிகளில் உதவி வழங்குதல், ராணுவம் அல்லது பிற பணிகளுக்கான விநியோகம், எதிரியின் சிக்னல்களைப் பாதித்தல், மீட்புப் பணிகளை நடத்துதல் போன்ற பணிகளில் டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், டிரோன்கள் ஆளில்லா வான்வழி வாகனங்கள் என்பதால், இதன் செயல்பாட்டில் மனித உயிரிழப்புக்கான வாய்ப்பு இல்லை. எதிரிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதில் இது போர் விமானங்களை விடப் பின்தங்கியிருக்கவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

2020 ஜனவரி 3 அன்று பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா டிரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி இரானின் அல்-குத்ஸ் படையின் தலைவர் காசிம் சுலைமானியைக் கொன்றது, அந்த அளவு துல்லியமாக இலக்கு வைக்க முடியும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து யாருக்கும் துளிகூடத் தெரியவில்லை.

டிரோன்கள் ஏன் ஒரு முக்கியமான ஆயுதமாக மாறின?

காசிம் சுலைமானியைக் கொல்ல அமெரிக்கா ஒரு டிரோனைப் பயன்படுத்தியது

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,காசிம் சுலைமானியைக் கொல்ல அமெரிக்கா ஒரு டிரோனைப் பயன்படுத்தியது (கோப்புப் படம்)

கடந்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் போர் மற்றும் அதன் முறைகள் மிக வேகமாக மாறியுள்ளன. இதில், டிரோன் மிகவும் முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது.

தற்போது நடந்து வரும் ரஷ்யா-யுக்ரேன் போராக இருக்கட்டும் அல்லது அதற்கு முன்பு ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே நடந்த போராக இருக்கட்டும், இவற்றில் டிரோன்களின் பயன்பாடு பெருமளவில் காணப்பட்டது.

கடந்த ஆண்டு 'ஆபரேஷன் சிந்தூர்'-ன் போதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் டிரோன்களைப் பயன்படுத்தின.

முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலும், ஆர்மி ஏர் டிஃபென்ஸின் முன்னாள் இயக்குநர் ஜெனரலுமான வி.கே. சக்சேனா கூறுகையில், "தற்போதைய காலகட்டத்தில் டிரோன் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. டிரோனின் இரண்டு பெரிய நன்மைகள் என்னவென்றால், இதை பாரம்பரிய ரேடார் அமைப்புகளால் கண்டுபிடிக்க முடியாது, இரண்டாவதாக இதன் மூலம் துல்லியமாக இலக்கு வைக்க முடியும்."

அவர் கூறுகையில், "இது நிகழ்நேர நுண்ணறிவு (Real Time Intelligence), கண்காணிப்பு (Surveillance), இலக்கைக் கண்டறிதல் (Target Acquisition) மற்றும் - வேவு பார்த்தல் (Reconnaissance) ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது பாரம்பரிய விமானப்படையை மாற்றீடு செய்ய முடியாது என்றாலும் இதன் மூலம் தரையிலுள்ள எதிரிப் படைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியும்."

டிரோன்களை நாடுகள் மட்டும் பயன்படுத்துவதில்லை, பல ஆயுதமேந்திய குழுக்களும் இதைப் பயன்படுத்துகின்றன, ஏனெனில் அவர்களிடம் ஒரு நாட்டைப் போலப் பெரிய நிதி இருப்பதில்லை.

விமானப்படை பாதுகாப்பு நிபுணரும் முன்னாள் மேஜர் ஜெனரலுமான அசோக் குமார் கூறுகையில், "இவை போர் விமானங்களை விட மிகவும் மலிவானவை என்பதால் பெரிய நாடுகள் தவிர சிறிய நாடுகளும் டிரோன்களை வாங்க முடியும். டிரோன் போர்க்களத்தை ஜனநாயகப்படுத்தியுள்ளது. வலிமையான நாடுகளிடம் அதிக டிரோன்கள் இருக்கும் என்பது உண்மைதான், ஆனால் பலவீனமான நாடுகளும் இதன் உதவியுடன் போரிட முடியும்" என்றார்.

டிரோன்கள் போர்ச்சூழலை எவ்வாறு மாற்றியுள்ளன?

ரஷ்யாவை எதிர்கொள்ளும் யுக்ரேனின் திறனில் டிரோன்கள் நீண்ட காலமாக முக்கிய காரணியாக இருப்பதாக நம்பப்படுகிறது

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ரஷ்யாவை எதிர்கொள்ளும் யுக்ரேனின் திறனில் டிரோன்கள் நீண்ட காலமாக முக்கிய காரணியாக இருப்பதாக நம்பப்படுகிறது (கோப்புப்படம்)

ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே 2022 பிப்ரவரி மாதம் முழு வீச்சில் போர் தொடங்கியது. ரஷ்யாவுடன் ஒப்பிடும்போது யுக்ரேன் மிகச் சிறிய நாடு மற்றும் அதன் ராணுவ வலிமையும் ரஷ்யாவை விடக் குறைவு.

ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும், இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் இந்தப் போரில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இதற்குப் பின்னால் இந்தப் போரில் இரு நாடுகளும் டிரோன்களைப் பயன்படுத்துவது பெரிய காரணமாகக் கருதப்படுகிறது. டிரோன்களின் தாக்குதல் திறன் அல்லது எதிரிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் மிக அதிகம், ஆனால் டிரோன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது ஒரு நாட்டுக்குப் பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தாது.

மேஜர் ஜெனரல் அசோக் குமார் கூறுகையில், "இந்தப் போரில் டிரோன்கள் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் இதில் டிரோன்களைப் பயன்படுத்தியுள்ளன. யுக்ரேனிடம் நேட்டோ (NATO) நாடுகளின் டிரோன்கள் உள்ளன, அதன் திறனைக் கண்டு யுக்ரேனே இப்போது டிரோன்களில் அதிக முதலீடு செய்து வருகிறது."

ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரைப் பற்றி மேஜர் ஜெனரல் அசோக் குமார் குறிப்பிடுகிறார்.

"டிரோன்கள் போர்க்களத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டிருக்கின்றன, எதிர்காலத்தில் இது இன்னும் முன்னேறும். அஜர்பைஜான் ஆர்மீனியாவிடம் இரண்டு முறை தோற்றது, ஆனால் பின்னர் துருக்கி அதற்கு டிரோன்களை வழங்கியது, அதன் பிறகு, அது முழு வெற்றியைப் பெற்றது," என அவர் கூறுகிறார்.

மேஜர் ஜெனரல் அசோக் குமாரின் கூற்றுப்படி, "சமீபத்திய மோதலில் பாகிஸ்தானும் நமக்கு எதிராக டிரோன்களைப் பயன்படுத்தியது, ஆனால், இந்தியாவின் மேற்கு முனை மிகவும் வலுவாக இருப்பதால் அதன் தாக்கம் பெரிதாக இல்லை."

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மே 6 மற்றும் 7-ஆம் தேதி நள்ளிரவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் "ஆபரேஷன் சிந்துரை" நடத்தியது.

இதற்குப் பிறகு போர்நிறுத்தம் ஏற்படுவதற்கு முன்னதாக நான்கு நாட்கள் இரு நாடுகளின் படைகளும் நேருக்கு நேர் நின்றன. இந்தத் தருணத்தில் இரு நாடுகளும் பரஸ்பரம் பெரிய இழப்பை ஏற்படுத்தியதாகக கூறின.

பாதுகாப்பு நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவாவின் கூற்றுப்படி, "டிரோன்கள் மற்றும் போர் விமானங்கள் அல்லது ஏவுகணைகளுக்கு இடையே ஒப்பீடு செய்ய முடியாது, ஆனால் டிரோன்களிலும் நடுத்தர தூர, குறுகிய தூர, நீண்ட தூர ரகங்கள் உள்ளன. ரஷ்யா-யுக்ரேன் போரில் இரு நாடுகளும் அவற்றைப் பயன்படுத்தி மிக உட்புற இடங்களுக்குச் சென்று தாக்குதல் நடத்தி எதிரி நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன."

எந்த நாட்டிடம் அதிக டிரோன்கள் உள்ளன?

அமெரிக்காவின் MQ9 டிரோன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அமெரிக்காவின் MQ9 டிரோன்

டிரோன் ஒரு குறைந்த செலவிலான ஆயுதம் மற்றும் அதன் உற்பத்தியும் எளிதானது. எனவே, இந்தத் துறையில் முதலீட்டு வாய்ப்புகளும் மிக அதிகம்.

"இந்தியாவிடம் 2009-ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலிடமிருந்து கிடைத்த 'ஹாரோப்' டிரோன் உள்ளது, இதை 'தற்கொலை டிரோன்' என்றும் அழைக்கிறார்கள். இது இலக்கை அடைந்ததும் தன்னைத்தானே வெடிக்கச் செய்துகொள்ளும். இது தவிர 2002-ஆம் ஆண்டு முதல் இந்தியாவிடம் இஸ்ரேலின் 'ஹெரான்' டிரோன் உள்ளது. இந்தியாவில் டிஆர்டிஓ-வும் டிரோன்களை உருவாக்கி வருகிறது," என சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

"இது தவிர இந்தியாவுக்கு அமெரிக்காவிலிருந்து சண்டையில் ஈடுபடும் போர் டிரோன்களான 30 'ரிப்பர்' (MQ9) டிரோன்கள் கிடைக்கப் போகின்றன."

சிறந்த டிரோன் தொழில்நுட்பங்களைக் கொண்ட முன்னணி நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று என்று மேஜர் ஜெனரல் அசோக் குமார் கூறுகிறார்.

இந்த நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, சீனா, யுக்ரேன் மற்றும் துருக்கி ஆகியவை அடங்கும். இருப்பினும், டிரோன்களின் வெவ்வேறு பாகங்கள் மற்றும் கூறுகளின் அடிப்படையில் வெவ்வேறு நாடுகள் முன்னணியில் உள்ளன, எனவே இந்தத் தொழில்நுட்பத்தில் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது என்பதைத் திட்டவட்டமாகக் கூறுவது எளிதல்ல.

"டிரோன்கள் போர் விமானங்களுக்கு இணையாகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை மற்றும் இது மிகவும் மலிவானது என்பதால் அதிக எண்ணிக்கையில் வைத்திருக்க முடியும்," என மேஜர் ஜெனரல் அசோக் குமார் கூறுகிறார்.

எதிரிகளின் வெகுதூரத்திலுள்ள மறைவிடங்கள் மீது தாக்குதல் நடத்த டிரோன்களைப் பயன்படுத்த முடியாது என்பது ஒரு குறையாக உள்ளது. இருப்பினும், உலகம் முழுவதும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மோதல்கள் அல்லது போர்கள் அண்டை நாடுகளுக்கு இடையேதான் காணப்படுகின்றன, அந்த வகையில் எதிர்காலத்தில் டிரோன்களின் முக்கியத்துவம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crm848jlrmzo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.