Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

Published By: Digital Desk 1

28 Feb, 2026 | 01:43 PM

image

அமெரிக்க இராணுவமும் ஈரான் மீது “பாரிய போர் நடவடிக்கைகளை” ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ‘Truth Social’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவின் மூலம் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், அமெரிக்க இராணுவம் ஈரானின் ஏவுகணைத் திட்டங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் வலுப்படுத்த முயற்சிப்பதாகவும், அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் அச்சுறுத்தும் வகையில் நீண்ட தூர ஏவுகணைகளை உருவாக்கி வருவதாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

“ஈரானின் ஏவுகணை கட்டமைப்புகளை முற்றாக அழித்து, அதன் இராணுவ தொழில்துறையை முடக்கப் போகிறோம்” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், ஈரானிய இராணுவத்தினர் தங்களது ஆயுதங்களை கைவிட வேண்டும், இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரான் – இஸ்ரேல் இடையே நீடித்து வந்த பதற்றம் இன்று (28) திறந்த மோதலாக வெடித்துள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, இந்த நடவடிக்கை “The Shield of Judah” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்த கூட்டு ராணுவ நடவடிக்கை (Joint Military Operation) என விவரிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரானில் உள்ள முக்கிய இராணுவ தளங்கள் மற்றும் அரசியல் மையங்கள் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று வரை ஈரானில் 30 முக்கிய இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அவற்றில், ஈரான் ஜனாதிபதியின் வாசஸ்தலம், புலனாய்வுத்துறை அமைச்சகம், முக்கிய அரசியல் தலைவர்களின் இருப்பிடங்கள், உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி அலுவலகத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் உள்ளடங்குகின்றன. ஈரானின் ஆன்மீகத் தலைவர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் தங்களது வான்வெளியை மூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனிக்கிழமை (28) அதிகாலை ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது வான்வெளியை பொதுமக்கள் விமானப் போக்குவரத்துக்காக மூடியுள்ளது. அதேவேளை, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம், ஈரானும் தனது வான்வெளியை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது.

வான்வெளி மூடப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கு வழியாகச் செல்லும் சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல சர்வதேச விமானங்கள் திசை மாற்றப்பட்டுள்ளதுடன், சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் - கத்தார், பஹ்ரைனுக்கும் மோதல் பரவுகிறதா? நேரலை

இரானை தாக்கிய அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,Getty Images

28 பிப்ரவரி 2026, 06:41 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன, 'பெரிய அளவிலான போர் நடவடிக்கைகள்' நடைபெற்று வருவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இரான் மீது தங்களது நாடு முன்னெச்சரிக்கை தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகிறார்.

தலைநகர் தெஹ்ரான் உட்பட இரானின் இஸ்ஃபஹான், கோம், கரஜ் மற்றும் கெர்மான்ஷா ஆகிய ஐந்து நகரங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன - அங்கிருந்து புகை மூட்டம் எழுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இரான் ஏவுகணைகளை வீசியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவிக்கிறது.

இரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் - என்ன நடக்கிறது?

படக்குறிப்பு,தெஹ்ரானின் ஜோம்ஹோரி சதுக்கம்

தங்கள் மீதான ஏவுகணை தாக்குதலை முறியடித்ததாக கத்தார் தகவல்

டேவிட் கிரிட்டன்

பிபிசி நியூஸ் மத்திய கிழக்கு

கத்தார் தலைநகர் தோஹாவில் வெடிப்புச் சத்தங்கள் மற்றும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் கேட்டன.

"நாட்டின் எல்லையை குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாக"

கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, எதிரி ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் பேட்ரியாட் அமைப்பு, இரானிய ஏவுகணையை இடைமறித்ததாக கத்தார் அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படை தளமான அல் உதெய்த் விமான தளம் கத்தாரில் உள்ளது.

பஹ்ரைனுக்கும் மோதல் பரவுகிறதா?

டேவிட் கிரிட்டன்

பிபிசி நியூஸ் மத்திய கிழக்கு

அமெரிக்க கடற்படையின் 5வது பிரிவின் தாயகமான பஹ்ரைன் தலைநகரில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன

அவசர கால எச்சரிக்கை ஒலி அடுத்தடுத்து எழுந்ததைத் தொடர்ந்து, பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து தொடர்ச்சியாக பதிவிட்டுளள்து. மக்கள் அமைதி காப்பதுடன் அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் அது கேட்டுக் கொண்டுள்ளது.

இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

படக்குறிப்பு,பஹ்ரைனில் எழும் புகை

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை சேவை மையம் 'ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானது' என்று பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பஹ்ரைனின் தேசிய தொடர்பு மையத்தை மேற்கோள் காட்டி அந்த ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தாக்குதலுக்கு எந்த நாட்டையும் காரணம் கூறாமல், "கூடுதல் விவரங்கள் சரியான நேரத்தில் வழங்கப்படும்," என்று அந்த செய்தி மேலும் கூறுகிறது.

"சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும், அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகளில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்றும் அது கூறுகிறது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படை பிரிவின் தலைமையகத்தின் பொறுப்பில் வளைகுடா, செங்கடல், அரபி கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகள் உள்ளன.

பஹ்ரைனுக்கு ஏவுகணை மற்றும் டிரோன் அச்சுறுத்தல்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அமெரிக்க தூதரகம் தங்களது குடிமக்களை பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடையுமாறு ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனாலும், இந்த தாக்குதல் செய்தி குறித்து அமெரிக்க இராணுவத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை.

டிரம்ப் கூறியது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட காணொளியில், அமெரிக்கா இரானில் 'பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளை' தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.

"நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க பலமுறை முயன்றோம். நாங்கள் அவர்களின் ஏவுகணைகளை அழித்து, அவர்களின் ஏவுகணைத் துறையை தரைமட்டமாக்கப் போகிறோம். அது முற்றிலுமாக…அழிக்கப்படும்" என்று டிரம்ப் கூறுகிறார்.

பெஞ்சமின் நெதன்யாகு கூறியது என்ன?

பெஞ்சமின் நெதன்யாகு கூறியது என்ன?

பட மூலாதாரம்,EPA/Shutterstock

இரான் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இஸ்ரேல் குடிமக்களே, சிறிது நேரத்திற்கு முன்பு, இரானில் உள்ள பயங்கரவாத ஆட்சியால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை அகற்றுவதற்கான நடவடிக்கையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இறங்கியுள்ளன" என கூறியுள்ளார்.

மேலும், "எமது சிறந்த நண்பர் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு, அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்காக நான் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 47 ஆண்டுகளாக, ஆயத்துல்லா ஆட்சி 'இஸ்ரேலுக்கு அழிவு', 'அமெரிக்காவிற்கு அழிவு' என்று கூச்சலிட்டு வருகிறது."

"அது எங்களது ரத்தத்தைச் சிந்த வைத்துள்ளது, பல அமெரிக்கர்களைக் கொலை செய்துள்ளது மற்றும் தனது சொந்த மக்களையே படுகொலை செய்துள்ளது. இந்த பயங்கரவாத ஆட்சி, ஒட்டுமொத்த மனிதகுலத்தையே அச்சுறுத்த அனுமதிக்கும் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கக் கூடாது. எங்களது கூட்டு நடவடிக்கை, தைரியமான இரானிய மக்கள் தங்கள் விதியைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கான சூழலை உருவாக்கும்."

"இஸ்ரேல் குடிமக்களாகிய உங்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், ஹோம் ஃபிரண்ட் கமாண்டின் (Home Front Command) உத்தரவுகளைக் கவனமாகக் கேளுங்கள். வரும் நாட்களில், 'சிங்கத்தின் கர்ஜனை' (The Roar of the Lion) என்ற இந்த நடவடிக்கையில், நாம் அனைவரும் சகிப்புத்தன்மையுடனும் மன உறுதியுடனும் இருக்க வேண்டியது அவசியமாகும்." என அவர் தெரிவித்துள்ளார்.

இரான்

படக்குறிப்பு,இரானின் இஸ்ஃபஹான், கோம், கராஜ் மற்றும் கெர்மன்ஷா நகரங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஃபார்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

'இரானின் பதிலடி தாக்குதல்'

"சிறிது நேரத்திற்கு முன்பு, இரானில் இருந்து இஸ்ரேல் நாட்டின் எல்லையை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் அடையாளம் கண்டுள்ளது" என்று இஸ்ரேல் ராணுவம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவ அறிக்கையில், "இரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல பகுதிகளில் சைரன்கள் ஒலிக்கப்பட்டன. ஹோம் ஃப்ரண்ட் கமாண்டின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

"இந்த நேரத்தில், இஸ்ரேலிய விமானப்படை அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்தவும், தேவையான இடங்களில் தாக்குதல் நடத்தவும் செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு என்பது காற்று புகாத அமைப்பு அல்ல, எனவே பொதுமக்கள் ஹோம் ஃப்ரண்ட் கமாண்டின் வழிகாட்டுதல்களை தொடர்ந்து கடைப்பிடிப்பது அவசியம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரானில் இதுவரை மூன்று வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக இரானிய செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம்,Fars

படக்குறிப்பு,தெஹ்ரானில் இரண்டு இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக இஸ்லாமிய குடியரசு செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் முழுவதும் ஒலித்த சைரன்

ஹ்யூகோ பச்சேகா

பிபிசி செய்தியாளர், மத்திய கிழக்கு

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இன்று (பிப்ரவரி 28) காலை வெளியிட்ட அறிக்கையில், "இஸ்ரேல் முழுவதும் ஒரு சிறப்பு மற்றும் நிரந்தர அவசரநிலையை" அறிவித்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி சுமார் 08:15 மணிக்கு இஸ்ரேல் முழுவதும் சைரன் ஒலிகள் கேட்டன, இது சாத்தியமான ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தவும், போரைத் தவிர்க்கவும் அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தத்திற்கான ராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில் இந்த இஸ்ரேலியத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பேச்சுவார்த்தையில் இரான் சில சலுகைகளை அளித்திருந்தது, இருப்பினும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்குமாறு அதன் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முன்னதாக இரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "பேச்சுவார்த்தைகள் நடக்கும் விதம் குறித்து நேற்று தான் 'மகிழ்ச்சியடைவில்லை'" என்று கூறினார்.

2003-இல் அமெரிக்கா தலைமையிலான இராக் மீதான படையெடுப்பிற்குப் பிறகு மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க ராணுவக் குவிப்பிற்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார், ஆனால் இப்போது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்படக்கூடும் என்பதை விளக்க அவர் அதிகம் எதையும் செய்யவில்லை. இதற்கிடையில், அத்தகைய தாக்குதலுக்கு முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம் என இரான் கூறியுள்ளது.

வெடிப்புச் சத்தங்கள் கேட்டதால், தெஹ்ரானில் பதற்றம் நிலவுகிறது.

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,வெடிப்புச் சத்தங்கள் கேட்டதால், தெஹ்ரானில் பதற்றம் நிலவுகிறது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "இந்த 'முன்னெச்சரிக்கை தாக்குதல்' (pre-emptive strike) இஸ்ரேல் நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக" என்று கூறினார்.

கடந்த ஜூன் மாதம், இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தியது, இது 12 நாள் போருக்கு வழிவகுத்தது. அமெரிக்காவும் இறுதியில் மோதலில் இஸ்ரேலுடன் இணைந்து கொண்டு, இரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்தது.

சமீபத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தனது நாட்டிற்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து எச்சரித்திருந்தார், மேலும் இரானின் அணுசக்தித் திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் ஒப்பந்தத்திற்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

இரான் தனது ஏவுகணைத் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிப்பதையும், காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்பொலா, இராக்கின் போராளிகள் மற்றும் ஏமனில் ஹூத்திகள் உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள அமைப்புகளுக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவதையும் நிராகரித்தது, அந்தக் கோரிக்கைகள் அதன் இறையாண்மையை மீறுவதாகக் கூறியது.

இரானின் தலைநகர் தெஹ்ரான்

பட மூலாதாரம்,Ehsan / Middle East Images / AFP via Getty

படக்குறிப்பு,இரானின் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை

இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறும், தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

டெல் அவிவ் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் இது தொடர்பான ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

"இப்பகுதியில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்," எனத் தெரிவித்தது.

இத்துடன், இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் ஹோம் ஃபிரண்ட் கமாண்ட் (Home Front Command) மூலம் வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றுமாறு குடிமக்களைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அனைத்துக் குடிமக்களும் பாதுகாப்புப் புகலிடங்களுக்கு அருகிலேயே இருக்குமாறும், தங்களது வீடுகள் அல்லது அலுவலகங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பான இடங்கள் குறித்துத் தெரிந்து வைத்திருக்குமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

"மறு அறிவிப்பு வரும் வரை இஸ்ரேலுக்குள் அவசியமற்ற அனைத்துப் பயணங்களையும் தவிர்க்குமாறு இந்தியக் குடிமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்," என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இத்துடன், இந்தியத் தூதரகம் குடிமக்களுக்காக 24x7 உதவி எண் மற்றும் மின்னஞ்சலை வெளியிட்டுள்ளதுடன், அவசர காலங்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

உதவி எண்: +972-54-7520711

மின்னஞ்சல்: cons1.telaviv@mea.gov.in

இரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் - என்ன நடக்கிறது?

படக்குறிப்பு,இரானின் ஹசன் அபாத் சதுக்கம்

வான் பரப்பை மூடிய இரான், இஸ்ரேல்

சனிக்கிழமை காலை இரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் தனது வான்வெளியை பொதுமக்களுக்கான விமானங்களுக்கு மூடியுள்ளது என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி முகமை, இரானின் வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் - கத்தார், பஹ்ரைனுக்கும் மோதல் பரவுகிறதா? நேரலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தான தருணம் என்றாலும் நழுவவிடக் கூடாத வாய்ப்பாக இதை அமெரிக்கா, இஸ்ரேல் கருதுவது ஏன்?

கட்டுரை தகவல்

  • ஜெர்மி போவென்

  • சர்வதேச ஆசிரியர்

  • 15 நிமிடங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானுடன் ஒரு புதிய போரில் குதிக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் எடுத்துள்ள முடிவு, கணிக்க முடியாத விளைவுகளுடன் கூடிய மிகவும் அபாயகரமான தருணத்தை உருவாக்கியுள்ளது. தனது தாக்குதலை நியாயப்படுத்த இஸ்ரேல் "தற்காப்பு" (pre-emptive) என்ற சொல்லைப் பயன்படுத்தியது.

"தற்காப்பு நடவடிக்கை" என்ற சொல் குறிப்பது போல, இது ஒரு உடனடி அச்சுறுத்தலுக்கு அளிக்கப்பட்ட பதில் அல்ல என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. மாறாக, இது ஒரு "விருப்பத்தின் பேரில் தொடுக்கப்பட்ட போர்".

இரானின் இஸ்லாமிய ஆட்சி பலவீனமாக உள்ளதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் கணித்துள்ளன; அதாவது அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடி, ஆண்டின் தொடக்கத்தில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான ஒடுக்குமுறையின் விளைவுகள் மற்றும் கடந்த கோடை காலப் போரினால் மோசமாக சேதமடைந்துள்ள பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு வருவதாகக் கருதுகின்றன. இது நழுவவிடக்கூடாத ஒரு வாய்ப்பு என்பதே அவர்களின் முடிவாகத் தெரிகிறது.

இது தடுமாறிக் கொண்டிருக்கும் சர்வதேச சட்ட அமைப்பிற்கு விழுந்த மற்றுமொரு அடியாகும்.

தங்களது அறிக்கைகளில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் இரான் தங்கள் நாடுகளுக்கு ஆபத்தானது என்று கூறினர். டிரம்ப் இதுவொரு உலகளாவிய ஆபத்து என்றும் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய ஆட்சி நிச்சயமாக அவர்களின் பரம எதிரிதான். ஆனால், ஒருபுறம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், மறுபுறம் இரானுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய அதிகார ஏற்றத்தாழ்வைக் கருத்தில் கொள்ளும் போது, தற்காப்பு என்பதற்கான சட்டரீதியான நியாயம் எவ்வாறு பொருந்தும் என்பதைப் பார்ப்பது கடினம்.

அமெரிக்கா, இஸ்ரேலின் எதிர்பார்ப்பு இரானில் ஈடேறுமா?

தாக்குதல் என்பது ஒரு அரசியல் நடவடிக்கை. ஆயுத மோதல் தொடங்கிவிட்டால், அதை கட்டுப்படுத்துவது இயல்பாகவே மிகவும் கடினமானது. தலைவர்களுக்கு தெளிவான இலக்குகள் இருக்க வேண்டும்.

பெஞ்சமின் நெதன்யாகு பல தசாப்தங்களாக இரானை இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரியாகக் கருதி வருகிறார். டெஹ்ரானில் உள்ள ஆட்சிக்கும், இரானின் ராணுவத் திறனுக்கும் தங்களால் முடிந்த அளவு சேதத்தை ஏற்படுத்த இது ஒரு வாய்ப்பு என்று அவர் கருதுகிறார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் நெதன்யாகு தனது நாட்டில் பொதுத் தேர்தலை எதிர்கொள்கிறார். ஹமாஸுடனான இரண்டு ஆண்டுகாலப் போர் உணர்த்தும் உண்மை என்னவென்றால், இஸ்ரேல் போரில் இருக்கும் போது தனது அரசியல் நிலை வலுப்பெறுவதாக அவர் நம்புகிறார்.

தன் இயல்பிற்கேற்ப, டொனால்ட் டிரம்பின் குறிக்கோள்கள் அவ்வப்போது மாறி வந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம், இரானில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி விரைவில் வரும் என்று அவர் கூறியிருந்தார். அந்த சமயத்தில் அமெரிக்க கடற்படையின் பெரும்பகுதி வெனிசுவேலா தலைவரை பதவியிலிருந்து அகற்றும் பணியில் தீவிரமாக இருந்ததால், அவரிடம் ராணுவ ரீதியான தெரிவுகள் குறைவாகவே இருந்தன.

அமெரிக்கா அந்தப் பிராந்தியத்திற்கு இரண்டு விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுக்களையும், கணிசமான தரைவழித் தாக்குதல் படைகளையும் அனுப்பி வைத்திருந்த நிலையில், இரானின் அணுசக்தி லட்சியங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து டிரம்ப் அதிகம் பேசினார். இருப்பினும், கடந்த கோடை காலப் போருக்குப் பிறகு, இரானின் அணுசக்தித் திட்டம் "அழிக்கப்பட்டுவிட்டது" என்று டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இரான் தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை எப்போதும் மறுத்து வந்துள்ளது. ஆனால் அணுசக்தித் திட்டத்தில் சிவில் பயன்பாட்டிற்கான தேவையைக் காட்டிலும் அதிகமாக யுரேனியத்தை அது செறிவூட்டியுள்ளது. குறைந்தபட்சம், ஒரு அணுகுண்டை உருவாக்குவதற்கான வாய்ப்பையாவது அது தன்வசம் வைத்திருக்க விரும்புவதாகத் தெரிகிறது. இதுவரை அது நிகழப்போகிறது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் இஸ்ரேலும் அமெரிக்காவும் வெளியிடவில்லை.

தனது வீடியோவில், இரான் மக்களுக்கு "சுதந்திரத்திற்கான நேரம்" நெருங்கிவிட்டது என்று டிரம்ப் கூறினார். நெதன்யாகுவும் இதேபோன்ற செய்தியையே அளித்தார். அதாவது இந்தப் போர் இரானிய மக்களுக்கு அந்த ஆட்சியை வீழ்த்துவதற்கான வாய்ப்பை வழங்கும் என்றார். ஆனால் அது நடக்குமா என்பது முற்றிலும் நிச்சயமற்றது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விமானப்படை தாக்குதல் போதுமா?

விமானத் தாக்குதல்களால் மட்டுமே ஒரு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக எந்த முன்னுதாரணமும் இல்லை. 2003-ஆம் ஆண்டில் இராக்கின் சதாம் உசேன், அமெரிக்கா தலைமையிலான பிரமாண்டமான படையால் பதவியிறக்கப்பட்டார். 2011-இல் லிபியாவின் மும்மர் கடாஃபி, நேட்டோ மற்றும் சில அரபு நாடுகளால் வான்வழி பாதுகாப்பு வழங்கப்பட்ட கிளர்ச்சிப் படைகளால் வீழ்த்தப்பட்டார்.

இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே அதன் முடிவு அரசு இயந்திரத்தின் வீழ்ச்சி, உள்நாட்டுப் போர் மற்றும் பல்லாயிரக்கணக்கான கொலைகளாகவே அமைந்தது. லிபியா இப்போதும் ஒரு சிதைந்த நாடாகவே உள்ளது. இராக் இன்னும் அந்த ஊடுருவலின் விளைவுகளையும், அதைத் தொடர்ந்து நடந்த ரத்தக் களரியையும் எதிர்கொண்டு வருகிறது.

ஒருவேளை, வான்வழித் தாக்குதலால் மட்டுமே ஓர் ஆட்சி வீழ்ந்த முதல் நிகழ்வாக இது அமைந்தாலும் கூட, இந்த இஸ்லாமிய ஆட்சிக்குப் பதிலாக மனித உரிமைகளைப் போற்றும் ஒரு தாராளவாத ஜனநாயகம் அங்கே அமைந்துவிடாது. தற்காலிகமாகப் பொறுப்பேற்கக் கூடிய நம்பகமான மாற்று அரசாங்கம் எதுவும் காத்திருக்கவில்லை.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் முக்கியத்துவம்

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக, இரான் அரசு ஒரு சிக்கலான அரசியல் அமைப்பை உருவாக்கியுள்ளது; இது சித்தாந்தம், ஊழல் மற்றும் தேவைப்படும் போது இரக்கமற்ற முறையில் பலத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றின் கலவையால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில், போராட்டக்காரர்களைக் கொல்ல தான் தயாராக இருப்பதை டெஹ்ரான் அரசு தனது நடவடிக்கைகளால் நிரூபித்தது. வீதியில் இறங்கி இந்த முறைமைக்கு சவால் விடுத்த ஆயிரக்கணக்கான சக குடிமக்களை, சுட்டுக் கொல்லுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியும் பாதுகாப்புப் படைகளை அது கொண்டுள்ளது.

ஒருவேளை அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்நாட்டின் உயர்மட்டத் தலைவரான ஆயதுல்லா அலி காமனெயியை கொல்ல முயற்சிக்கலாம். படுகொலைகளை ஒரு முக்கிய உத்தியாக இஸ்ரேல் நம்புகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், காசாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களையும், லெபனானில் உள்ள ஹெஸ்புலா தலைவர்களையும், அவர்களின் கீழ் இருந்த பல தளபதிகளையும் இஸ்ரேல் கொன்றுள்ளது.

இரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு விஷயமாகும். இது ஒரு ஆயுதமேந்திய அமைப்பை அல்ல, மாறாக ஒரு முழுமையான அரசை வழிநடத்துகிறது. இது ஒரு தனி மனிதனின் அதிகாரம் மட்டும் அல்ல. ஒருவேளை உயர்மட்டத் தலைவர் கொல்லப்பட்டால், அவருக்குப் பதிலாக மற்றொருவர் நியமிக்கப்படுவார்; பெரும்பாலும் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐஆர்ஜிசி) ஆதரவு பெற்ற மற்றொரு மதகுருவே அந்த இடத்திற்கு வருவார். இந்தப் புரட்சிகர காவல்படை, நாட்டின் வழக்கமான ராணுவத்துடன் இணைந்து செயல்படுவதுடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆட்சிக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அதைப் பாதுகாப்பதையே தனது முதன்மையான பணியாகக் கொண்டுள்ளது.

தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டால் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகவும், இல்லையெனில் நிச்சயம் மரணம் நேரிடும் என்றும் டிரம்ப் அவர்களுக்கு ஒரு வாய்ப்பளித்தார். ஆனால் டிரம்பின் இந்த சலுகையால் ஐஆர்ஜிசி ஈர்க்கப்பட வாய்ப்பில்லை. ஏனெனில், இஸ்லாமியக் குடியரசின் சித்தாந்தத்திலும் ஷியா இஸ்லாம் பிரிவின் கொள்கைகளிலும் "தியாக மரணம்" என்பது ஒரு மாறாத மற்றும் முதன்மையான அங்கமாகும்.

இரானைப் பொருத்தவரை டிரம்பின் நம்பிக்கை சரியாகுமா?

அரசியலிலும் வாழ்க்கையிலும் முதன்மையான உந்துசக்தி கொடுக்கல்-வாங்கல் (transactional) சார்ந்தது என்று டிரம்ப் நம்புகிறார். அவருடைய புத்தகம் குறிப்பிடுவது போல, அது "தி ஆர்ட் ஆஃப் தி டீல்" (ஒப்பந்தத்தின் கலை). ஆனால் இரானைக் கையாளும்போது சித்தாந்தம் மற்றும் நம்பிக்கையின் வலிமையைக் கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியம். அதை அளவிடுவது மிகவும் கடினம்.

ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்த நெருக்கடி அதிகரித்ததாலும், அமெரிக்கா தனது போர்க்கப்பல் படைகளைத் திரட்டியதாலும், போர் தவிர்க்க முடியாதது என்று டெஹ்ரான் தலைமை கருதுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கடந்த கோடை காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தியதை உணர்ந்தே இரானும் இம்முறை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.

இரான் அமெரிக்காவையோ அல்லது இஸ்ரேலியர்களையோ நம்பவில்லை. டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்திய ஜே.சி.பி.ஓ.ஏ (JCPOA) ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது. இது ஒபாமா நிர்வாகத்தின் மிக முக்கியமான வெளியுறவுக் கொள்கை சாதனையாகக் கருதப்பட்டது.

'மத்திய கிழக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகின் ஸ்திரத்தன்மையும் மோசமாகும்'

இரான் குறைந்தது அவகாசம் பெறுவதற்காகவாவது, ஜே.சி.பி.ஓ.ஏ-வின் இரண்டாவது கட்ட ஒப்பந்தத்தை ஏற்கத் தயாராக இருந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் இரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்காவை எதிர்க்கும் பிராந்திய நட்பு நாடுகளுக்கு இரான் அளிக்கும் ஆதரவு ஆகியவற்றின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா வலியுறுத்தியதாக தெரிகிறது.

இது இரானியத் தலைமைக்கு ஏற்க முடியாத ஒன்றாக இருந்தது. ஏனெனில் இது முற்றிலும் சரணடைவதற்குச் சமமானது. ஏவுகணைகளையும் நட்பு நாடுகளையும் விட்டுக்கொடுப்பது, தற்போது எதிர்கொண்டுள்ள தாக்குதலை விட, ஆட்சி மாற்றத்திற்குத் தங்களை இன்னும் எளிதாகப் பலியாக்கிவிடும் என்ற எண்ணம் அந்நாட்டுத் தலைமையின் மனதில் இருந்திருக்கலாம்.

இரானியத் தலைவர்கள் இப்போது இந்தப் போரை எப்படி எதிர்கொள்வது, எவ்வாறு உயிர் பிழைப்பது மற்றும் அதன் விளைவுகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்துக் கணக்கிட்டுக் கொண்டிருப்பார்கள். இன்றைய நிகழ்வுகளால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மையையும் அதன் சாத்தியமான விளைவுகளையும் கண்டு சௌதி அரேபியா தலைமையிலான அண்டை நாடுகள் திகைப்படைந்து போயிருக்கும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்திற்குப் பிரச்னைகளை ஏற்றுமதி செய்யும் திறன் அதிகம் என்பதால், மீண்டும் வெடித்துள்ள தீவிரமான இந்தப் போர் ஏற்கனவே கொந்தளிப்பாகவும் வன்முறை நிறைந்ததாகவும் இருக்கும் இப்பிராந்தியத்தின் மற்றும் ஒட்டுமொத்த உலகின் ஸ்திரத்தன்மையற்ற சூழலை மேலும் மோசமாக்குகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

ஆபத்தான தருணம் என்றாலும் நழுவவிடக் கூடாத வாய்ப்பாக இதை அமெரிக்கா, இஸ்ரேல் கருதுவது ஏன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரான் உச்ச தலைவர் காமனெயி வளாகம் வரை எட்டிய அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் - இதுவரை நடந்தது என்ன?

இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல், மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,இரானிய உச்ச தலைவர் காமனெயியின் வளாகத்தை செயற்கைக்கோள் படம் காட்டுகிறது.

28 பிப்ரவரி 2026, 16:58 GMT

புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

தற்போது நடைபெற்று வரும் "முக்கிய போர் நடவடிக்கைகள்" குறித்து விவரித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் அரசுப் படைகள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, இரான் மீது இஸ்ரேல் "தற்காப்புத் தாக்குதலை" நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இரானின் அணுசக்தி திட்டம் குறித்து பல வாரங்களாக நீடித்து வந்த அச்சுறுத்தல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை நமக்குத் தெரிந்த தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இரானில் என்ன நடந்தது?

இரான் நேரப்படி காலை 09:30 மணிக்குச் சற்று முன்னதாக (06:00 GMT), தலைநகரில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக இரானிய ஊடகங்கள் தெரிவித்தன.

பிபிசி பார்த்த புகைப்படங்கள் நகரத்தின் ஜம்ஹூரி சதுக்கம் மற்றும் ஹசன் அபாத் சதுக்கத்திற்கு மேல் புகை மூட்டம் இருப்பதைக் காட்டுகின்றன.

இஸ்பஹான், கோம், கரஜ் மற்றும் கெர்மான்ஷா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல நகரங்களிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகள் குண்டுவெடிப்பு நடந்த இடங்களுக்கு அருகில் இருந்தவர்கள் பீதியில் ஓடுவதைக் காட்டுகின்றன. அலறல் சத்தங்களும் அழுகை சத்தங்களும் பின்னணியில் கேட்கின்றன. உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தோர் குறித்த விவரங்கள் எதுவும் தற்போது தெரியவில்லை.

உள்ளூர் அதிகாரி ஒருவர் அரசு ஊடகத்திடம் கூறுகையில், இரானின் தெற்கு மாகாணமான மினாப்பில் உள்ள ஒரு பெண்கள் தொடக்கப்பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதை பிபிசியால் தனிப்பட்ட முறையில் சரிபார்க்க முடியவில்லை.

தாக்குதல்களுக்குப் பிறகு இரானின் வான்வெளி மூடப்பட்டுள்ளது என்று தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல், மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,இந்த நடவடிக்கை 'மிகப்பெரியது மற்றும் தொடர்ச்சியானது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

"பெரிய அளவிலான மற்றும் தொடர்ச்சியான" நடவடிக்கை என்று இதனை டிரம்ப் விவரித்துள்ளார்.

பல சரிபார்க்கப்பட்ட வீடியோக்கள் டெஹ்ரான் முழுவதும் புகை மூட்டங்கள் எழுவதைக் காட்டுகின்றன.

இரானின் உச்ச தலைவர் காமனெயியின் அலுவலகமான லீடர்ஷிப் ஹவுஸிலிருந்து ஒரு கிலோமீட்டர் (0.6 மைல்) தொலைவில் பதிவான ஒரு காணொளியை பிபிசி வெரிஃபை கண்டுபிடித்துள்ளது. கட்டடம் நேரடியாகத் தாக்குதலுககு இலக்கானதா என்பது வீடியோ கோணத்தில் தெளிவாகத் தெரியவில்லை.

இரான் அதிபர் அலுவலகமும் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதே பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மற்றொரு சரிபார்க்கப்பட்ட புகைப்படம், குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் சிறிய மளிகைக் கடைகளுக்கு மேலே அடர்த்தியான, இருண்ட புகை மண்டலம் எழுவதைக் காட்டுகிறது. நாட்டின் பிற இடங்களிலும் தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூட்டுத் தாக்குதல்களை "முற்றிலும் தூண்டப்படாத, சட்டவிரோதமான தாக்குதல்" என்று விவரித்தார்.

முன்னதாக, இரான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள "தனது அனைத்து தற்காப்பு மற்றும் இராணுவத் திறன்களையும் சட்டப்பூர்வமான சுய பாதுகாப்பு உரிமையின் கீழ்" பயன்படுத்தும் என்று அவர் கூறினார்.

அருகிலுள்ள நாடுகளைச் சேர்ந்த சகாக்களுடன் தொலைபேசி அழைப்புகளில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் "அந்த நாடுகளின் வசதிகள் மற்றும் நிலப்பரப்புகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறுப்பு உண்டு" என்பதை நினைவூட்டினார் என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.

இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல், மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,Getty Images

அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறியது என்ன?

அமெரிக்காவின் தலையீட்டை உறுதிப்படுத்தும் வீடியோ ஒன்றை டொனால்ட் டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டார்.

"சிறிது நேரத்திற்கு முன்பு, அமெரிக்க ராணுவம் இரான் மீது பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளைத் தொடங்கியது" என்று அவர் கூறினார்.

"இரானிய ஆட்சியிடமிருந்து வரவிருக்கும் அச்சுறுத்தல்களை ஒழிப்பதன் மூலம் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதே எங்களது நோக்கம்" என்று கூறிய அவர், "இரான் அணு ஆயுதத்தைப் பெறுவதை உறுதி செய்வதே" அமெரிக்காவின் குறிக்கோள் என்றும் அவர் கூறினார்.

மேலும், இரானிய மக்கள் தங்குமிடங்களிலேயே இருக்குமாறும், வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

"நாங்கள் முடித்ததும், உங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்," என்று கூறிய அவர், "அதைப் பெற்றுக்கொள்வது உங்கள் கையில் இருக்கும். தலைமுறை தலைமுறையாக உங்களுக்குக் கிடைக்கப்போகும் ஒரே வாய்ப்பு இதுவாகத்தான் இருக்கும்"என்றார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அனைத்து இரானிய மக்களும் "அடக்குமுறையின் சங்கிலியை கழற்றி, சுதந்திரமான மற்றும் அமைதியான இரானைக் கொண்டு வர வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார்.

டிரம்புக்கு நன்றி தெரிவித்த அவர், இரான் " மனிதகுலம் முழுவதையும் அச்சுறுத்தும் அணு ஆயுதங்களை ஏந்தியிருக்கக் கூடாது" என்ற தனது செய்தியை மீண்டும் வலியுறுத்தினார்.

"எங்கள் கூட்டு நடவடிக்கை, துணிச்சலான இரானிய மக்கள் தங்கள் தலைவிதியைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்கும்."

மேலும், இஸ்ரேலிய குடிமக்கள் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் முழுவதும் "சிறப்பு மற்றும் நிரந்தர அவசரகால நிலையை" அறிவித்தார்.

இரான் எவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது?

இரான் சார்பில் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது, மேலும் "தேவைப்படும் இடங்களில் அச்சுறுத்தல்களை இடைமறித்து தாக்க" தாங்கள் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளது.

இஸ்ரேலின் ஹைஃபா நகரம் மற்றும் பிற இடங்களிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன, ஆனால் அவை ஏவுகணைகள் விழுந்ததால் ஏற்பட்டதா அல்லது அவை தடுத்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்டதா என்பது குறித்துத் தற்போது தெளிவாகத் தெரியவில்லை.

பிராந்தியத்தின் மற்ற பகுதிகளில், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது கடற்படைப் பிரிவின் சேவை மையம் "ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக" பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவசரகால எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும், மக்கள் அமைதியாக இருக்குமாறும், அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இந்தச் செய்தி வந்துள்ளது.

அத்தியாவசியத் தேவையின்றி இஸ்ரேலியர்கள் கூட்டமாகச் சேர வேண்டாம் என்றும் பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த வழிகாட்டுதல் திங்கள்கிழமை இரவு 20:00 மணி வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய ஊடகங்களின்படி, இஸ்ரேலின் வான்வெளியும் மூடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gqpgkwwlko

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.