Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பு முயற்சி வெற்றி பெறுமா? நிலாந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

question-man-scaled.webp?resize=750%2C37

தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின்  ஒருங்கிணைப்பு முயற்சி  வெற்றி பெறுமா? நிலாந்தன்!

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தமிழ்ச் சட்டத்தரணிகளின் பேரவை ஈடுபட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்களின்படி ஒரு புதிய யாப்பை அரசாங்கம் உருவாக்குமாக இருந்தால் அந்த யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக எப்படிப்பட்ட ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் தமிழ் கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று கூறப்படுகிறது.குறிப்பாக சமஸ்டி தீர்வு ஒன்றை நோக்கி கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கம் இதில் உண்டு என்பதனை அந்த உத்தியோகபூர்வ அறிக்கை காட்டுகிறது.

இந்த ஒருங்கிணைப்பு முயற்சிக்குள் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை என்று ஈபிடிபி கூறியுள்ளது.தங்களைப் போலவே மட்டக்களப்பில் உள்ள பிள்ளையானின் கட்சியின் உட்பட தமிழ் தேசிய நிலைப்பாட்டுக்கு வெளியில் காணப்படும் கட்சிகள் இங்கே அழைக்கப்படவில்லை என்று அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. இதுதொடர்பான கேள்விகளுக்கு தமிழ்ச் சட்டத்தரணிகளின் பேரவைதான் பதில் கூறவேண்டும்.

கடந்த 16 ஆண்டுகளிலும் தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை பெருமளவுக்கு சிவில் சமூகங்களும் கருத்துருவாக்கிகளும் இணைந்து முன்னெடுத்தனர்.சிலசமயங்களில் இந்த முயற்சிகளில் பின்னணியில் சில அரசு சார்பற்ற நிறுவனங்கள் அல்லது தூதரகங்கள் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டது. அண்மையில்கூட சுவிஸ்  தூதரகம் அவ்வாறான சந்திப்பு ஒன்றுக்கு அனுசரணை புரிய முன்வந்தது. எனினும் அந்தச் சந்திப்பு பின்னர் இடம்பெறவில்லை.

இவ்வாறு சிவில் சமூகங்களும் கருத்துருவாக்கிகளும் இணைந்து முன்னெடுத்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் பெரும்பாலானவை தோல்வியுற்ற ஒரு பின்னணிக்குள்,அல்லது தற்காலிகமான சில வெற்றிகளை பெற்றபின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாத ஒரு பின்னணிக்குள், இப்பொழுது தமிழ் சட்டத்தரணிகள் பேரவை  இந்த முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறது.

குறிப்பாக கடந்த ஆண்டு நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பகுதி சிவில் சமூகங்களும் கருத்துருவாக்கிகளும் இணைந்து பொது வேட்பாளரை முன் நிறுத்தும் அமைப்பாகச் செயல்பட்டார்கள். அந்தத் தேர்தல் முடிந்தபின் சிவில் சமூகங்கள் தொடர்ந்து ஓர் அமைப்பாக இயங்க முடியாத ஒரு நிலைமை தோன்றியது. இப்பொழுது சிவில் சமூகங்களுக்கு இடையே வினைத்திறன் மிக்க ஒருங்கிணைப்பு இல்லை. தவிர,ஒரு சிவில் அமைப்பைத் தவிர ஏனைய சிவில் சமூகங்கள், கட்சிகளை ஒருங்கிணைத்தல் போன்ற முயற்சிகளில் பெரியளவு ஆர்வத்தோடு காணப்படவில்லை. அதாவது கடந்த ஒராண்டுக்கு மேலாக பெரும்பாலான சிவில் சமூகங்கள் கருத்துருவாக்கிகள் போன்றோர் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதில் இருந்து விலகியிருப்பது தெரிகிறது.இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்தான் மேற்படி தமிழ் சட்டத்தரணிகள் பேரவை  இந்த முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறது.

இந்த அடிப்படையில் மேற்படி முயற்சி தொடர்பில் மிக அடிப்படையான ஒரு கேள்விக்கு விடை முக்கியம். கடந்த 16 ஆண்டுகளிலும் சிவில் சமூகங்களும் கருத்துருவாக்கிகளும் முன்னெடுத்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் ஏன் பொருத்தமான வெற்றிகளை அல்லது தொடர்ச்சியான வெற்றிகளைப் பெறத் தவறின?

இக்கேள்விக்குப் பதில் காண்பதென்றால்,பேச்சுவார்த்தைகள்,சமரச முயற்சிகள் தொடர்பில்  உலகில் உள்ள மூன்று முக்கிய பொறி முறைகள் தொடர்பாக இங்கு பார்க்க வேண்டும். முதலாவது பொறிமுறை, அழுத்தங்களை, நிர்பந்தங்களைப் பிரயோகிப்பது.ஒருங்கிணைப்பு முயற்சிகளில் ஈடுபடும் தரப்பு பலப் பிரயோகத்தை மேற்கொள்வது அல்லது ஏதோ ஒருவகை அழுத்தத்தைப் பிரயோகிப்பது.

இரண்டாவது பொறிமுறை,பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தரப்புகளுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளை நீக்கும் நோக்கத்தோடும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி மேற்படி தரப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும் தந்திரமான, நிர்ணயகரமான தலையீட்டை செய்வது.இது அனுசரணைப் பொறிமுறை.

மூன்றாவது, சம்பந்தப்பட்ட தரப்புகள் சந்திப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்பது. அதற்குரிய போக்குவரத்து வசதிகளை,இட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுப்பது.

கடந்த 16 ஆண்டுகளாக சிவில் சமூகங்கள், முரண்படும் கட்சிகளுக்கு இடையே அனுசரணையாளர்களாகத்தான் செயல்பட்டன.எந்த ஒர் ஒருங்கிணைப்பு முயற்சியிலும் சிவில் சமூகங்கள் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஒரு தரப்பாகச் செயல்படவில்லை.அவ்வாறு செயல்படுவதற்கு சிவில் சமூகங்களால் முடியாது. ஏனென்றால் அதற்கு ஏதோ ஒரு பலம் இருக்க வேண்டும்.ஏதோ ஒரு அங்கீகாரம் இருக்கவேண்டும். ஒருங்கிணைக்கப்பட வேண்டிய தரப்புகள் அதாவது கட்சிகள் சிவில் சமூகங்களை மதிக்க வேண்டும். அது பிரயோகிக்கும் அழுத்தங்களுக்குப் பணிய வேண்டும்.ஆனால் அப்படிப்பட்ட பலத்தோடு காணப்படும் சிவில் அமைப்புகள் எதனையும் அரங்கில் கடந்த 16 ஆண்டுகளாகக் காண முடியவில்லை.

குறிப்பாக முன்னாள் மன்னார் மறை மாவட்ட ஆயர் அவ்வாறான அழுத்தங்களைப் பிரயோகிக்கவல்ல துணிச்சலான,ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் ஆளுமையாகக் கருதப்பட்டார்.ஆனால் 2014ஆம் ஆண்டு அவருடைய தலைமையில் மன்னாரில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு முயற்சி ஒன்றின் போது சம்பந்தர் ஆயரைப் பார்த்து என்ன சொன்னார்? “பிஷப் நீங்கள் சொல்றதச் சொல்லுங்கோ.ஆனால் நாங்கள்தான் கடைசி முடிவு எடுப்பம்” என்று.

சம்பந்தர் ஏன் அப்படிச் சொன்னார் ? ஏனென்றால், அப்பொழுது உள்ளதில் பெரிய கட்சியாக கூட்டமைப்பு காணப்பட்டது. அதன் தலைவராக இருந்த சம்மந்தர் பிஷப்பைப் பார்த்து அவ்வாறு அழுத்தமாக திமிரோடு கூறக் கூடியதாக இருந்தது.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை அது. இப்பொழுது சம்பந்தர் இல்லை.பிஷப்பும் இல்லை. கூட்டமைப்பும் இல்லை. ஆனாலும் தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் இருப்பவற்றில் பெரிய கட்சியாகக் காணப்படுகிறது. அதன் தலைமைக்கான போட்டி கட்சியை உருக்குலைத்து விட்டது. எனினும் அதுதான் உள்ளதில் பெரிய கட்சி. தனக்குத்தான் மக்கள் ஆணை அதிகம் என்று அது கூறும்.

அதுமட்டுமல்ல சம்பந்தர் முன்னாள் மன்னார் பிஷப் தலைமையிலான ஒருங்கிணைப்பு முயற்சிகளை ஒருவித ஒவ்வாமையோடு பார்த்ததற்குக் காரணம், அந்த முயற்சிகளின் பின்னணியில் கஜேந்திரக்குமாருக்கு ஆதரவான சிவில் சமூகப் பிரதிநிதிகள் இருந்தார்கள் என்று நம்பியதுதான்.இதை மறுவளமாகச் சொன்னால்,கூட்டமைப்பில் இருந்து விலகி தேர்தலில் தோல்வியுற்ற கஜேந்திரக்குமாரைப் பலப்படுத்துவதற்கு சிவில் சமூகங்கள் முயற்சிக்கின்றன என்று சம்பந்தர் கருதினார்.

இப்பொழுதும் தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணி அப்படித்தான் நம்புகிறது. இப்பொழுதும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி  சிவில் சமூகங்களை ஒவ்வாமையோடுதான் பார்க்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சுமந்திரன் சிவில் சமூகங்களுக்கு எதிராக வன்மத்தோடு கருத்துக்களைத் தெரிவித்தார்.தமிழ்த் தேசிய அரசியல்வாதி ஒருவர் அவ்வாறு சிவில் சமூகங்களை முன்னரும் தாக்கியிருக்கவில்லை.பின்னரும் தாக்கியிருக்கவில்லை.அந்த தேர்தலில் சிவில் சமூகங்களின் முயற்சியை எதிர்த்த சுமந்திரன் சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டார். சஜித் இப்பொழுது சிங்கள பௌத்த தீவிர நிலைப்பாட்டை எடுக்கும் பிக்குகளுக்குச் சாமரம் வீசுகிறார்.

இப்படிப்பட்டதோர் பின்னணியில், மேற்கண்ட இறந்தகால அனுபவத்தின் பின்னணியில்,தொகுத்துக் கேட்டால்,இப்பொழுது ஒருங்கிணைப்பு முயற்சிகளை முன்னெடுக்கும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையானது கட்சிகளின்மீது நிர்ப்பந்தங்களைப் பிரயோகிக்கக்கூடிய பலத்தோடு இருக்கிறதா? அல்லது அனுசரனை மட்டும்தான் செய்கின்றதா?

இந்தக் கேள்வியை அதன் பிரயோக நிலையில் கேட்டால், தமிழரசுக் கட்சியின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கத்தக்க சக்தி அல்லது பலம் மேற்படி சட்டத்தரணிகள் அமைப்புக்கு உண்டா?ஏனென்றால் கடந்த ஆண்டு முழுவதிலும் இவ்வாறான ஒருங்கிணைப்பு முயற்சிகளை கஜேந்திரக்குமார் முன்னெடுத்த பொழுது, அதனைக் குழப்பியது தமிழரசுக் கட்சிதான். குறிப்பாக சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முன்னெடுப்பையும் குழப்பியதில் அந்தக் கட்சிக்கு பங்கு உண்டு.

எனவே ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு இப்பொழுது தடையாக இருப்பது தமிழரசுக்கட்சி. அதன் மீது அழுத்தங்களைப் பிரயோகித்தால் மட்டும்தான் எந்த ஒருங்கிணைப்பு முயற்சியும் வெற்றிபெறும். அப்படிப்பட்ட அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தேவையான பலம் சட்டத்தரணிகள் அமைப்புக்கு உண்டா?

அந்த அமைப்புக்குள் பிரதானியாகக் காணப்படும் சட்டத்தரணி ரட்ணவேல் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரே பலமான சட்டச் செயற்பாட்டு அமைப்பாகிய “மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின்” பணிப்பாளராக இருக்கிறார்.வடக்குக் கிழக்கில் காணப்படும் சட்டச் செயற்பாட்டு ஆளுமைகளுக்குள் அவர் முக்கியமானவர், மதிப்புக்குரியவர்.

ஆனால் தனது துறையைச் சேர்ந்த ஒரு மூத்த செயற்பாட்டாளரை சுமந்திரன் மதிப்பாரா? அப்படி மதிக்கத்தக்க உறவு இருவருக்கும் இடையில் உண்டா? இந்தக் கேள்விக்கான விடை மிக முக்கியம்.ஏனென்றால் சட்டத்தரணிகள் அமைப்பின் முயற்சிகளின் பின்னணியிலும் கஜேந்திரக்குமாருக்கு ஆதரவான சிவில் சமூகத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் இருக்கலாம் என்று தமிழரசுக் கட்சி சந்தேகிக்க இடமுண்டு.

தமிழரசுக் கட்சியை குறிப்பாக சுமந்திரன் அணியை ஒருவழிக்குக் கொண்டு வந்தால் மட்டுமே ஒருங்கிணைப்பு முயற்சிகள் வெற்றிபெறும். இதுதான் கடந்த 16 ஆண்டு கால அனுபவம்.எனவே சுமந்திரனை இந்த விடயத்தில் சம்மதிக்கச் செய்வதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையால்  முடியுமா?

https://athavannews.com/2026/1467602

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனை இந்த விடயத்தில் சம்மதிக்கச் செய்வதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையால்  முடியுமா?

மக்களால் மட்டுந்தான் முடியும்.வரும் மாகாணசபைத் தேர்தலில் சுமத்திரனை மக்கள் தோற்கடித்து விட்டால் எல்லாம் சுபம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.