Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீதியோரம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                                வீதியோரம் 



                                                  ( சாம்பலில் பூத்த மலர்கள் )

arial-view-of-a-road-with-in-jungle-ranc



                                அந்தத் தார் வீதியில் மிக வேகமாய் வந்த ஜீப் வண்டி வீதியோரத்தில் இருந்த வாகன தரிப்பிட தார் பொட்டலில் அரை வட்டமடித்து நிக்கிறது. அதில் இருந்து ஒரு இளைஞனைத் தள்ளி விட்டுவிட்டு தொடர்ந்து ஒரு பெண்ணையும் இரண்டு பிள்ளைகளையும் சப்பாத்து காலால் உதைத்து தள்ளி விழுத்தி விட்டு நிக்காமல் வந்தவழியே செல்கின்றது.அப்போது அதிகாலை நான்கு மணி இருக்கும் கருக்கல்  கலைந்து  பறவைகளின் ஒலியோடு விடியல் தொடங்குகின்றது. அந்த இளைஞன் எழும்பத் திராணியின்றி வீதியில் கிடக்கிறான். பகல்பொழுதில் காய்ந்த தார் வீதியின் வெப்பம் அவனது வெற்றுடலுக்கு ஒத்தடம் கொடுப்பது போல் தேகத்தின் வலிகளைக் குறைக்கின்றது. அது அவனது உடம்புக்கு தேவையாய் இருப்பதால் அப்படியே கிடக்கிறான்.


                                                                         சற்று தூரத்தில் அந்தப் பெண்ணும் சுயநினைவின்றிக் கிடக்கிறாள். தோசைக்கல்லில் இருந்து வராமல் அடம்பிடிக்கும் தோசை தோசைக் கரண்டியால் நிறைய குத்து வாங்கி உருண்டு பிரண்டு வந்து சட்டியில் விழுந்ததுபோல் கிடக்கிறாள் . கால்கள்வழியே ஒழுகிய ரத்தம் ஆடைகளில் சிந்தி உறைந்துபோய் இருக்கு. சிறுவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாய் இருக்கு. இருந்தும் அவர்கள் பசிமயக்கத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிக்கின்றனர் . அப்போது தூரத்தே ஒரு வண்டி வருவதை அதன் வெளிச்சம் தெரிவிக்கின்றது.அது மிக நெருங்கி  அவர்களின் அருகில் வந்து நிக்கின்றது. அது ஒரு பாரவூர்தி.அதிலிருந்து இறங்கிய சாரதியும் உதவியாளரும் கிட்ட வந்து இவர்களின் நிலமையைக் கண்டு நடந்திருக்கும் சம்பவத்தை ஒருவாறு ஊகித்துக் கொள்கிறார்கள்.பின் இருவரும் சேர்ந்து இவர்களைக் கரையோரமாய் தூக்கி வந்து பெரிய கல்லுகளின் அருகில் சாய்த்து இருத்திவிட்டு தண்ணீரால் முகத்தில் அடித்து முதலுதவிகள் செய்து அவர்களின் மயக்க நிலைமையைப் போக்கி விடுகின்றனர்.


                                          அண்ணை இப்ப எங்களைக் கடந்துபோன ஜீப்பில் இருந்தவங்கள்தான் இந்த அநியாயத்தை செய்திட்டுப் போறாங்கள் போலக் கிடக்கு என்று கிளீனர் ரமேஷ் சொல்கிறான்.அதை சாரதி அண்ணாத்துரையும் ஆமோதித்தபடி இரண்டு பிள்ளைகளுக்கும் தங்களிடம் இருந்த சாப்பாட்டில் பாதியை பகிர்ந்து குடுத்துவிட்டு மீதியை அவனுக்கும் அவளுக்கும் பிரித்துத் தருகிறார்.அவள் சிறிது தண்ணீரைக் குடித்து ஒருவாய் உணவை சாப்பிடுகிறாள். அவன் அதுவும் சாப்பிடவில்லை. இப்ப இருக்கும் நாட்டு நிலைமையில் யாரையும் மட்டுக்கட்ட முடியவில்லை. இயக்கங்களா , இராணுவமா என்று தெரியாது.

ஓமண்ணை அவர்கள் எல்லோரும் ஒரேமாதிரியான உடுப்புகள் போடுகினம் அப்படியே ஜீப்புகள், ட்ரக்குகளில் வருகினம்.

சரி விடு ரமேஷ் , விடியுது நேரத்துக்கு மார்கெட்டுக்கு போகாவிடில் மீன் நாறிடும்.இனி நிறைய வாகனங்கள் வந்து விடும் அவர்களும்கூட இவர்களுக்கு உதவிசெய்யலாம் என்று சொல்லி தம்மிடம் இருந்த சில உடுப்புகள் மற்றும் கையில் கொஞ்சம் பணம் எல்லாம் எடுத்து குடுத்துவிட்டு வரும்போது பார்க்கலாம் என்று சொல்லிப்  போகிறார்கள். விடியலின் பனிப்புகை மூட்டத்தில் தூரத்தே ஒரு பௌத்த விகாரையின் விமானமும் கோபுரமும் தெரிகின்றன.......!

மலர் .......1.🌻


  • கருத்துக்கள உறவுகள்

வெயிட்டிங் மலர் 2.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீதியோரம்.

stupa-buddhist-temple-sri-lanka-260nw-26

மலர் ...........2.

அந்தப் பெண் கொஞ்சம் தெம்பு வந்து எழுந்து தன் நிலையைப் பார்க்கிறாள். நேற்று மாலை நடந்ததெல்லாம் மனதில் நிழலாடுகின்றது. கிழிந்த ஆடைகளோடு உடலெல்லாம் இரத்தம் வழிந்து உறைந்து இருக்கு. திரும்பி அந்த இளைஞனைப் பார்க்க அவனுக்கு நினைவுகள் வருவதும் போவதுமாய் புசத்திக் கொண்டு இருக்கிறான். அந்நேரம் ஏதோ ஸ்லோகங்கள் சொல்லியபடி  காவியுடை தரித்து  தலை மழித்த சாதுக்களும்  சிறுவர்களும் அவ்வழியே நடந்து வருகின்றனர். அவர்கள் இவர்களின் நிலையைக் கண்டு விசாரித்து விட்டு இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தேவை என்பதை உணர்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு வாகனத்தை மறித்து அவர்களை பன்சாலையில் சேர்க்கும்படி சொல்லி கொஞ்சம் பெரிய சிறுவர்களை அவர்களுடன் அனுப்பிவிட்டு தாங்களும் விகாரையை நோக்கி விரைந்து நடக்கின்றனர்.


                                                              பௌத்த விகாரையில் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பிக்குமாரும் ஓரிரு வயதான பிக்குணிகளுமாய் சிரத்தையுடன் செய்கிறார்கள்.அவர்களின் காயங்களைக் கழுவி நீராட்டி மூலிகை தைலங்களால் வலிகுறையும் பொருட்டு நன்றாகத் தேய்த்து அமைதியாகத் தூங்க வைத்து விடுகிறார்கள். அப்படி மாலை ஐந்து மணிவரை நன்றாக உறங்கியவர்கள் பின் ஒவ்வொருவராய் எழுந்து வெளியே வருகிறார்கள்.அவர்களை வராந்தாவில் இருந்த பிக்குமார் அங்கன வந்து அமரும்படி கூறுகிறார்கள். அப்போது அங்கு வந்த தலைமைப் பிட்சுவானவர் பொதுவாய் அவர்களின் நலன்களை விசாரித்துக் கொண்டே பெயர் விபரங்களையும் கேட்டுக் கொள்கிறார். அதில்  அந்த வாலிபனின் பெயர் விநோதன் என்றும், பெண்ணின் பெயர் மணிமேகலை என்றும், சிறுவன் யுகேந்திரன்,மற்றும் சிறுமி சுஜிதா என்றும் தெரிந்து கொள்கிறார்கள். அதிலும் அவர்கள் முன்பின் ஒருத்தரை ஒருத்தர் சந்தித்திருக்கவில்லை.நேற்று அந்த ஜீப்பில் கிடந்து வந்து வீதியில் விழுந்ததுவரை எதுவும் தெரியாது.


                                                 நால்வரும் வெவ்வேறு இடங்களில் இருந்து பிடித்து வரப்பட்டு வாரங்கள் மாதங்களாய் எங்கெங்கோ காம்புகளில் ஆளாளாய் கைமாறி சொல்லொனா  சித்திரவதைகள் அனுபவித்துக் கொண்டு வந்த நிலையில் ஏதோ அவங்களுக்கு ஏற்பட்ட தவிர்க்கமுடியாத காரணத்தால் எல்லோரையும் கொண்டுவந்து வீதியில் வீசி விட்டுப் போய் விட்டார்கள்.இவர்களின் கதையைக் கேட்ட பிக்கு பிக்குணிகள் எல்லோரும் மிகவும் பச்சாதாபப்பட்டு வார்த்தைகளால் இவர்களை ஆறுதல் படுத்துகிறார்கள்.சிலநாளில் அவர்கள் அந்த வளாகங்களில் நடக்கவும் மடத்துக்கு தேவையான சில சில வேலைகள் செய்யவும் தயாராகி விடடார்கள்.

 

                                                                      சில வாரங்களின்பின் சாதுக்களின் முறையான சிகிச்சையாலும் கவனிப்பாலும் உடல் தேறி நன்றாகக் குணமடைந்து விட்டனர். அன்று நல்ல பௌர்ணமி நாள். காலை நேரம் தலைமைப் பிக்குவானவரும் மற்றும் சிலரும் அவர்களைக் கூட்டிக் கொண்டு நடந்து வந்து அன்று  எந்த வீதியோரத்தில் அவர்கள் விழுந்து கிடந்தார்களோ அங்கே வந்து சேர்ந்தார்கள். அங்கு கிடுகுகளால் ஒரு நீண்ட கொட்டில் போடப்பட்டு தரையில் பலதரப்பட்ட காய்கறிகள்,பழவகைகள், வாழைக்குலைகள் எல்லாம் ஓலைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. பின்னால் ஒரு மூலையில் களிமண்ணால் பிடித்த அடுப்பும்,சில சமையல் பாத்திரங்களும், ரெண்டு வாளிகளும் இருக்கின்றன. அடுத்த மூலையில் சில பாய்கள், தலையணைகள், போர்வைகளுடன் அவரவர்களுக்கேற்ற ஆடைகள் துவாய்கள் என்று எல்லாம் இருக்கின்றன. 

                                             பிக்குவானவர் அவர்களிடம் இப்போதைக்கு நாங்கள் உங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு தேவையான சில பொருட்கள் தந்திருக்கின்றோம். பின்னாலே ஒரு பெரிய குளமும் இருக்கின்றது. அங்கு முதலைகளும் கபரகொய்யாக்களும் பெரிய பெரிய மீன்கள் பாம்புகள்  இருப்பதால் பிள்ளைகளுடன் நீங்களும் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் எடுக்கும் போதும், இரவுகளில் அவ்வழியே செல்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இங்கு யானைகளும் வந்து போகும். முக்கியமாய் பிள்ளைகள் கவனம். ஒருநாளும் தனியே விடவேண்டாம். நரி, ஓநாய்,பாம்புகள் போன்றவையும் நிறைய இருக்கின்றன. இந்த பொருட்கள் யாவும் உங்களுக்காக நாங்கள் மக்களிடம் யாசகம் பெற்றுக் கொண்டு வந்தவையே. நீங்கள் விகாரையில் தங்கியிருந்த நாட்களில் உங்களுக்குத் தெரிந்திருக்கும் நாங்களும் எங்களுக்குத் தேவையான அளவு மட்டுமான சொற்ப சாமான்களே  வைத்திருக்கிறோம். நாளைக்கு என்று எதையும் நாங்கள் சேர்த்து சேமித்தோ  வைத்திருப்பதில்லை.நாம் அணியும் ஆடைகள் கூட சனங்களிடம் யாசகமாய் பெற்று ஊசி நூல் கொண்டு கைகளால் தைத்து அணிகிறோம்.கூடியவரை பகவான் புத்தமுனி போதித்த நெறிகளில் இருந்து சிறிதும் வழுவாமல் வாழ்ந்து வருகின்றோம்.இனி நீங்கள் இவைகளைக் கொண்டு வீண் ஆடம்பரங்களை நாடாமல் உங்களின் தேவைகளை சுருக்கி வாழ்ந்து வரவும்.


                                           பிள்ளைகளைப் பார்த்து  நீங்கள் இருவரும் தினமும் காலையில் சிலமணி நேரம் பன்சாலைக்கு வந்து பாடங்கள், பாஷைகள், உடற்பயிற்சிகள், கலைகள், கைவினை வேலைகள் என்று  கற்றுக் கொள்ள வேண்டும். இவற்றுக்காக அங்கு பாடசாலையும் ஆசிரியர்களும்  இருக்கிறார்கள்.பின் மாலையில் நீங்கள் இங்கு வந்து இவர்களுக்கு உதவியாய் இருக்கலாம் என்று சொல்ல அவர்களும் அவர் பாதத்தில் விழுந்து வணங்கி அப்படியே செய்கிறோம் சாமி என்கிறார்கள். பின் சாதுக்களும் அவர்களை ஆசீர்வதித்து விட்டு தம் வழியே செல்கின்றார்கள்.....!

மலர் . ........ 2. 🌼🌼

2022-01-31_03-41-515404007656390331444.j


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

santa-rita-ma-brazil-august-260nw-250322

மலர் ......... 3.

                                                        விநோதன், மணிமேகலை  சிறுவர்கள் சுஜிதா மற்றும் யுகேந்திரன் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக தத்தமது துன்பங்களை மறந்து சாதுக்கள் அமைத்துக் கொடுத்த கடை சாமான்களை விற்று வாழ ஆரம்பிக்கின்றனர்…….. அவ்வழியே செல்லும் வாகனங்கள் அங்கே தரித்து நின்று செல்ல ஆரம்பிக்கின்றன . அப்போது அங்கு அண்ணாதுரையின் லொறி வந்து கடையின் முன்னால் நிற்கின்றது.  அண்ணாதுரையை கண்டதும் எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிள்ளைகள் ஓடிச்சென்று அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள விநோதனும் மணிமேகலையும் அவருக்கும் ரமேஷ்சுக்கும் முகமன் கூறி கடைக்குள் அழைத்து செல்கின்றனர்…… அவரும் அங்கிருந்த வாங்கில் அமர்ந்து அவர்களது சுகதுக்கங்களை விசாரித்து அறிந்து கொள்கின்றார்…… அப்போது அங்கு பல வாகனங்களும் வந்து நின்று கடையில் பலவிதமான பழங்கள் மரக்கறி வகைகளை வாங்கி செல்கின்றனர். அவை எல்லாவற்றையும் கவனித்த அண்ணாத்துரையும் அவர்களிடம் இங்கு நிறைய வாகனங்கள் வந்து தரித்து நின்று செல்வதால், நீங்கள் ஏன் தேநீர் வியாபாரம் செய்யக்கூடாது என்று சொல்கிறார்…..!


                                              அதுக்கு மணிமேகலையும் எங்கை அண்ணை இப்ப இந்தப் பிள்ளைகளும் வினோத்தும் ஊருக்குள் நடந்து போய்த்தான் பழங்கள், மரக்கறிகள் என்று வாங்கி கைகளிலும் தோளிலும் சுமந்து வருகின்றார்கள் என்று சொல்கிறாள். அவரும் சரி நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ, நாங்கள் இந்த வழியால் போகும் போதும் வரும் போதும் உங்களுக்குத் தேவையான சாமான்களை வாங்கி வந்து தருகிறோம். இப்போதைக்கு நீங்கள் காசு ஒன்றும் தரவேண்டாம். இந்தப்  பிக்குகள் மிகவும் நல்லவர்கள் போல் இருக்கிறார்கள். கையில் இருக்கிறதையும் பிடுங்கி தூசண வார்த்தைகள் பேசி அடாவடி செய்யும் காவி உடையில் இருக்கும் போலிப் பிக்குகளையும் நான் பத்திரிகைகளிலும் செய்திகளிலும்  பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்கள் போன்ற தூய்மையான சாதுக்களால்தான் இந்த நாட்டில் கொஞ்சமாவது காருண்யமும் அன்பும் நிலைத்திருக்கின்றது என்று சொல்லி அவரும் ரமேசும் சிற்சில பழங்களை வாங்கிக் கொண்டு அவர்களின் மறுப்பையும் பொருட்படுத்தாது அதிகமாகவே பணத்தைக் கொடுத்து விட்டு செல்கின்றனர். 


                                          நாளடைவில் அவர்கள் கடையையும் பெருப்பித்து தேநீர், பலகாரங்கள், சாப்பாடு என்று விற்கத் தொடங்கி விட்டனர். அதற்கான பாய்லர்,பாத்திரங்களை அண்ணாத்துரையே கொண்டுவந்து குடுத்ததுடன் தன்னிடமிருந்த பெரிய கேரியர் கொண்ட சைக்கிளையும் வினோதனிடம் குடுத்திருந்தார். அது ஊருக்குள்ளும் பக்கத்து நகரங்களுக்குள்ளும் சென்று சாமான்கள் வாங்கிவர ரொம்ப உதவியாய் இருக்குது. கடை வேலை முடிந்ததும் அவர்கள் பின்னால் உள்ள குளத்தை அண்மித்த இடத்தில் வருபவர்கள் இயற்கை உபாதையை கழிக்கக் கூடியதாக கழிவறையும் கட்டி விட்டு அதற்கு அப்பாலும் காடழித்து  தமக்காக ஒரு சிறிய வீடும் கட்டி பயிர்செய்கைக்கு ஏற்றவாறு காணியும் வைத்திருந்தனர். 


                                               இரவில் மணிமேகலையும் சுஜிதாவும் வீட்டில் தங்கிக் கொள்வார்கள். வியாபாரத்தை விநோதனும் யுகேந்திரனும் பார்த்துக் கொள்வார்கள். கால ஒட்டத்தில் சுஜிதாவும் பெரியவளாக வளர்ந்து நிக்கிறாள்.யுகேந்திரனுக்கும் பூனை மீசை அரும்பியிருக்கு. சாதுக்களும் அவ்வழியே வரும்போது இவர்களின் வளர்ச்சியைப் பார்த்து மனநிறைவுடன் இவர்களிடமும் பிக்ஷை ஏற்று ஆசி வழங்கிச் செல்கின்றனர். யுகேந்திரனும் சுஜிதாவும் இப்பவும் தொடர்ந்து விகாரைக்கு சென்று கழுவுதல், துடைத்தல் போன்ற உதவிகளை செய்வதுடன் அங்குள்ள பாடசாலையில்  பெரிய வகுப்பில் படிக்கின்றனர் கூடவே பிக்குகளுடன் சேர்ந்து தியானப்பயிற்சி, யோகா, சிலம்பம் போன்ற பல கலைகள் கற்பதும் சிறுவர்களுக்கு கற்பிப்பதுமாக இருக்கின்றனர். 


                                                     இவர்களது கடையும் விளம்பரம் இல்லாமலே “வீதியோரக்கடை” என்று பிரபலமாகி இருந்தது. அதற்கு மணிமேகலையின் கைப்பக்குவத்தில் செய்யப்படும் சுவையான சுத்தமான உணவு வகைகளும் மலிவான விலைகளுமே காரணம். வருபவர்கள் தாங்களும் சாப்பிட்டுவிட்டு பார்சலும் கட்டிக்கொண்டு போகிறார்கள். முன்பு ஐந்தாறு லாந்தர் விளக்குகள் இருந்த இடத்தில் இப்பொழுது சில பெற்றோல்மாக்ஸ் விளக்குகள் வெளிச்சம் தருகின்றன.

அடர்ந்த காட்டின் நடுவே வீதியோரத்தில் இப்படியொரு பிரபலமான கடை இருந்தால் கூடவே சில தவறான வியாபாரங்களும் அங்கு உருவாகி விடுவது இயல்புதானே. முதலில் சில சாரதிகளும் கிளீனர்களும் சாராயம் போன்ற குடிவகைகளை தெரிந்தும் தெரியாமலும் கடைக்கு அருகில் வைத்து குடிக்க ஆரம்பித்தனர். பின் சில நாளில் கஞ்சா போன்ற போதைவஸ்துகள் சிலரால் சில்லறை வியாபாரமாகவும் புழக்கத்துக்கு வந்தன. அவர்களின் தேவைக்காக இவர்களும் உறைப்பான மாமிச கறிவகைகள், முட்டை பரோட்டாக்கள், கொத்து ரொட்டி போன்றவையும் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர். தொடர்ந்து எங்கோ தூரத்தில் இரவுகளில் தொழில் செய்யும் சில பெண்கள் இப்பொழுது கடைக்கு அண்மையில் தமது வாடிக்கையாளர்களுடன் காட்டுக்குள் செல்வதும் வருவதுமாய் தொழில் செய்து வருகின்றனர். தாங்கள் தங்குவதற்கு முன்பு யாரோ பழுதாகி விட்டுப் போன ஒரு லொறியை பாவிக்கின்றார்கள். சாராயம் மற்றும் போதைவஸ்துகள் விற்பவன் லொறியின் முன்பக்கத்தில் தனது சாமான்களுடன் தங்கிக் கொள்கிறான். அவர்களும் கடை வாடிக்கையாளர்களாய் இருப்பதாலும் அதனாலும் கடைக்கு வருமானம் பெருகி வருவதாலும் எல்லாமே ஒரு தொடர் சங்கிலியாய் மாறிவிட்டிருந்தன. ஒரு கட்டத்தில் இவர்களால் கூட இங்கு நடக்கும் தப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது......!

vibrant-local-bus-covered-graphic-street

மலர் ..............🌸 🌸 🌸


  • கருத்துக்கள உறவுகள்
On 10/3/2026 at 21:51, suvy said:

தோசைக்கல்லில் இருந்து வராமல் அடம்பிடிக்கும் தோசை தோசைக் கரண்டியால் நிறைய குத்து வாங்கி உருண்டு பிரண்டு வந்து சட்டியில் விழுந்ததுபோல் கிடக்கிறாள்

அண்ணைதான் வீட்டிலே சமையலோ?😉

தொடருங்கள். வாசிக்க காத்திருக்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3c6eb90bd2a19fd7aa005bdcfb576ace.jpg

மலர் . ........... 4.

                            இப்பொழுதெல்லாம் இந்தப் பிரச்சினைகளால் விநோத்துக்கும் மணிமேகலைக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு வந்தபடி இருக்கு. இதெல்லாம் மணிமேகலைக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை……அதனால் என்ன செய்வது என்று அவள் யோசிக்கிறாள் …….ஒருநாள் ஒரு ஓய்வான நேரத்தில் விநோத்திடம் விநோ நீ ஒன்றைக் கவனித்தாயா …..!

என்ன சொல்லுங்கோ…..!

— இப்பொழுதெல்லாம் சாதுக்கள் இவ்வழியே போனாலும் இங்கு பிக்ஷை ஏற்க வருவதில்லை தெரியுமா…..!

— ஓமக்கா நானும் அதைக் கவனித்திருக்கிறேன்….. ஆனால் எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை…….!

— எனக்கும் விளங்குது விநோ ….. நீயும் நானும் வீணாக சண்டை பிடிப்பதில் அர்த்தமில்லை. “ குதித்தோடிவரும் ஆமைக்குஞ்சுகளை தாய்போல் தாவியோடி வந்து தன் அலைக்கரங்களால் அரவணைத்து அழைத்து செல்லும் கடல்போல்” நாங்கள் நினைத்ததை விட எம்மையும் மீறி இந்த “வீதியோரக்கடை” மக்களிடையே பிரபலமாகி விட்டது . அது தானாகவே பலதரப்பட்ட மனிதர்களையும் தனக்குள் ஈர்த்துக் கொண்டிருக்கு அதுதான்……. என்றாலும் விநோ, நாங்கள் இங்கு நடக்கும் தப்பான காரியங்களைத் தடுக்க ஏதாவது முயற்சி செய்ய வேண்டும்.புரியுதா……

— ஓம் மேகலை, இனிமேல் நானும் முயற்சி செய்கிறேன் …… நீங்களும் கணக்க யோசிக்காதையுங்கோ…….!


                                                      அன்று மதியம் வரை கடையில் நல்ல வியாபாரம் நடந்து முடிந்து விநோதன் ,மணிமேகலை, சுஜிதா, யுகேந்திரன் மற்றும் அங்கு தொழில் செய்யும் விலைமாதர் இருவரும் ஓய்வாக வாங்குகளில் அமர்ந்திருக்கிறார்கள். மணிமேகலை எழுந்துபோய் எல்லோருக்கும் தேநீரும் வடையும் கொண்டுவந்து மேசையில் வைத்து விட்டு அந்த இரு பெண்களையும் பார்த்து நீங்களும் எடுத்து சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு தானும் தனது தேநீரை எடுத்துக் கொண்டு சென்று வானொலியின் சத்தத்தை கொஞ்சம் அதிகரித்து விட்டு வந்து அவர்களுடன் அமர்ந்து கொள்கிறாள். வெளியே ஓரிரு லொறிகள், பேரூந்துகள் நிக்கின்றன. வானொலியில் எஸ்.பி.பி “என்காதலே என்காதலே என்னை என்ன செய்யப் போகிறாய்” என்று உருகி உருகிப் பாடுகின்றார். எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் என்று மேகலை சொல்ல மற்றவர்களும் அதை ஆமோதிக்கின்றனர். இது இளையராஜா என்று நினைக்கிறேன் என்று அவள் சொல்ல, இல்லையக்கா என்று  அந்த இரு பெண்களில் ஒருத்தி சொல்லி விட்டு இது ஏ .ஆர். ஆர் என்று சொல்கிறாள். எனக்கும் மிகவும் பிடித்த பாடல். வைரமுத்து அப்படி எழுதியிருப்பார்.


                  “காதலே நீ பூவெறிந்தால் 

                       எந்த மலையும் கொஞ்சம் குழையும் 

                   காதலே நீ கல்லெறிந்தால் 

                        எந்த கடலும் கொஞ்சம் கலங்கும் 

                   இனி மீள்வதா, இல்லை வீழ்வதா 

                           உயிர் வாழ்வதா இல்லை போவதா 

                   அமுதென்பதா, விஷமென்பதா 

                           உன்னை அமுத விஷமென்பதா”

                                இந்த வரிகளின் செறிவினில் யுகேந்திரனையும் சுஜிதாவையும் தவிர ஏனையோரின் கண்களில் கண்ணீர் தளும்புகிறது. அங்கு ஒரு கனத்த மௌனம்……யாரு யாரையும் ஆற்றுப்படுத்தவில்லை. அவரவர்களுக்குள்ளும் ஏதேதோ நினைவுகள், வலிகள். பின் சற்று தெளிந்து சிரிப்பை வரவழைத்துக்  கொண்டு சிற்றூண்டியுடன் சினேகமாக உரையாடுகின்றார்கள். இவர்கள் நால்வரின் கடந்த காலங்களும் நால்வருக்கும் ஓரளவேனும் தெரிந்தே இருக்கின்றது. பின்னேர சமையலுக்கு மேகலை ஆயத்தம் செய்ய, யுகேந்திரனும் சுஜிதாவும் விறகு சேகரிக்க காட்டுக்குள் செல்கின்றனர்.


                                           எல்லோரும் கலைந்து போக  மேகலையும் எதோ யோசனையில் நாடியில் கை வைத்தபடி இருக்கிறாள்.விநோதன் தான் இருந்த வாங்கில் அப்படியே கால் நீட்டிப் படுத்திருக்கிறான். அவன் ஒரு காலுடன் மற்றகாலை உரசுவதைப் பார்த்த மேகலை என்னடா கால் வலிக்குதா …..

— ஓம் மேகலை, மலை ஏற்றத்தில் சைக்கிளை உழக்கிக் கொண்டு போனது. அதுதான்.

— சொன்னால் நீ கேட்பதில்லை. ஸ்கூட்டரை அல்லது வானை எடுத்துக் கொண்டு போயிருக்கலாம் தானே.

— ஸ்கூட்டரை சுஜியும் வானை யுகேந்திரனும் கொண்டு போய் விட்டார்கள் மேகலை.

— ஓ …. அதுக்காகவா அப்போது யுகேந்திரனை நீ கண்டிச்சனி.

— ஓம் மேகலை, அவன் வானை கொண்டு போனதுக்காக அல்ல. அவனிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை, இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் எடுத்திடலாம். அதற்கிடையில் விபத்து நடந்தாலோ அல்லது போலீசில் பிடிபட்டாலோ பிரச்சினைதானே. அதுதான் கொஞ்சம் பொறுமையாய் இருடா என்று சொன்னனான்.

— சரி சரி விடு அவன் சின்னப்பொடியன்தானே …..

— மேகலை நீங்கள் அவனுக்கு நிறைய செல்லம் குடுக்கிறீங்கள் …..!

— உனக்கென்ன தெரியும், இந்நேரம் இவன் வயதில எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கு எண்டு . (அவள் தனக்குள் நினைப்பதை வெளியில் சொல்லவில்லை). சரி இரு வாறன் என்று சொல்லி எழுந்து சென்று ஒரு சிறிய “நோ எண்ணெய்” போத்தலுடன் வந்து அவனது இரு கால்களிலும் தொடையில் இருந்து பாதம் வரை நன்றாகத் தேய்த்து விட்டு விரல்களையும் ஒவ்வொன்றாய் இழுத்து இழுத்து நெட்டி முறித்து விடுகிறாள். அது அவனுக்கு சுகமாக இதமாக இருக்கின்றது. அவன் பரிவுடன் அவளைப் பார்க்க நினைவுகள் சில வருடங்கள் பின்னே போகின்றது.......!

அன்று அவனை இரண்டுபேர் அவன் கை கால்களைக் கட்டி வைத்து அடித்து அந்த ஹாலில் போட்டு விட்டுப் போகிறார்கள். அங்கு சுவரில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் ஏதோ சமையல் நிகழ்ச்சி போய்கொண்டு இருக்கு. ஒருவர் விதம் விதமாய் உணவுகள் செய்து குடுக்க சிலர் ஒரு வட்ட மேசையை சுற்றி இருந்து சுவை பார்த்து உண்கின்றனர். சற்று நேரத்தில் இவர்களுடன் இன்னும் இருவர் ஒரு பெண்ணை தர தரவென்று தரையோடு இழுத்து கொண்டு வருகிறார்கள்.அவள் ஆடைகள் அலங்கோலமாய் இருக்க அவள் ஈனஸ்வரத்தில் என்னை விடுங்கோடா என்னால் முடியல்லையடா என்று அரற்றுவது இவனுக்கு கேட்கிறது.அவர்கள் இவன் இருப்பதை பற்றி கவலைப்படாமல் அந்தப் பெண்ணை இம்சை செய்கிறார்கள். அவளும் இடைக்கிடை கைகால் கட்டுடன் தரையில் இரத்தம் ஒழுகக் கிடக்கும் இவனையும் பரிதாபத்துடன் பார்க்கிறாள். அவன் அந்தக் காட்சியைப் பார்க்க விரும்பாமல் மேலே டீ .வீ யைப் பார்க்க அதில் அவர்கள் கோப்பை நீருக்குள் கிடக்கும் சிகப்பு வைனில் வெந்த  சிப்பியை எடுத்து முள்ளுக்கரண்டியால்  பிளந்து சதையை குத்தி சாப்பிடுகிறார்கள்..........!

83aa046d7a84751089c743d5d692b6bb.gif

மலர் .........🪷 4.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

jeep_4speed_concept_5_015f01780932062b-3
வீதியோரம்.

     மலர் . ........ 5.                                           

  அப்போது ஒரு ஜீப் வண்டி வேகமாய் வந்து பிரேக் அடித்து நிக்கிறது. அதை கண்டு இவர்கள் அவளை விட்டுட்டு வெளியே ஓடி வருகிறார்கள். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி இவன் தன் காலடியில் கிடந்த தண்ணிபோத்தலை கால்களால் அவளருகில் தள்ளிவிட அவளும் அதை எடுத்து மட மடவென்று குடிக்கிறாள். ஜீப்பில் இருந்து இறங்கியவன் இவர்களிடம் சத்தம் போட்டு எதோ சொல்லி  தூசணங்களால் பேசுகிறான். உடனே இவர்கள் அறைக்குள் வேகமாய் ஓடிவந்து இவனது கட்டுகளையும் அறுத்து விட்டு இவனோடு அவளையும் தூக்கிவந்து ஜீப்புக்குள் எறிந்து விட்டு அவர்களும் ஏறிக்கொள்ள ஜீப்பும் வீதியில் ஏறி வேகமாய் செல்கிறது. அப்பொழுதுதான் அவனும் அவளும் ஜீப்பினுள் பார்த்த பொழுது அதற்குள் ஏற்கனவே இரு சிறுவர்கள் குற்றுயிராய் அங்கே கிடக்கிறார்கள்.


மேகலை : என்னடா அப்படிப் பார்க்கிறாய், அவளது கேள்வியில் அவன் சுயநினைவுக்கு வருகிறான்.

— ஒன்றுமில்லை மேகலை.

— இல்லை இன்று உன் பார்வை ஒரு மாதிரியாய் எனக்குத் தெரிகிறது. ஆனால் அதில் தப்பாக ஏதும் இல்லை என்றும் புரிகிறது. என்ன சொல்லு.

— ஏன் மேகலை நீ உன் குடும்பத்தை எங்கு என்று தேடிப்பார்த்து சேர்ந்து கொள்ளக் கூடாது.

— இதுவா இவ்வளவு நேரமாய் யோசிச்சனி.  அன்று என்னை அந்த நிலைமையில் நீ பாத்தனிதானே. அதற்கு முன் எத்தனை மிருகங்கள். ம் …. குடும்பமாய் வாழ்ந்த  அந்த வாழ்க்கை இனி எங்கையடா கிடைக்கப் போகுது. இனி அங்கு போவதற்கும் நான் தயாரில்லை. அதெல்லாம் கனவாகிப் போய் நெடுங்காலமாச்சுது. இனி இப்படியே மிச்ச காலத்தைப் போக்க வேண்டியதுதான்.

— உன்னைப் போன்ற நிலைமையில்தான் நானும் அவங்களிடம் பிடிபட்டு இருந்தேன் மேகலை. என்னையும் எத்தனை மிருகங்கள் அசிங்கப்படுத்தினதுகள் என்று கணக்கே இல்லை. அது கிடக்கட்டும் விடு….. இனிமேலும் நாங்கள் இப்படியே இருந்திடுவோமா…..

— நீ இப்ப என்ன சொல்ல வருகிறாய்……

— ம்…. வந்து …. தயங்குகிறான் 

— எதுவென்றாலும் பயப்படாமல் சொல்லு….நானும் எதிர்காலம் பற்றி நிறைய யோசிக்கிறதுண்டு. இந்தப் பிள்ளைகளும் இப்ப வளர்ந்து விட்டார்கள்…… 

— ஏன் மேகலை நாங்கள் சேர்ந்து வாழக் கூடாது. இனி நாங்கள் யாருக்காக எங்களுடைய மிச்ச வாழ்க்கையை வீணாக்க வேண்டும்…….. பின்னடிக் காலத்தில் ஒரு பேச்சுத்துணைக்காகவாவது உரிமையுள்ள ஒரு துணை வேண்டாமா……

— ம்….. எதோ ஒரு காரணத்தோடுதான் நாங்கள் இப்ப வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் விநோ….இல்லையென்றால் அன்றே அவங்கள் எங்கள் நாலுபேரையும் சுட்டு காட்டுக்குள் வீசிவிட்டுப் போயிருக்கலாம். அல்லது நாங்கள் கூட தற்கொலை செய்திருக்கலாம். இல்லையே இப்ப நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதுதானே நிஜம். பொதுவாய் பார்த்தால் இனி நாங்கள் குடும்பத்துடன் போய் சேர்ந்து வாழப் போவதில்லை. இந்தப் பிள்ளைகளுக்காவது நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். 

— மேகலை,  நீ சொல்வதையும் நான் யோசிப்பதுண்டு.

— அதுமட்டுமில்லை விநோ இப்பவே இங்கிருக்கும் தொழில் செய்யும் பெண்களும் சரி வேறு சிலரும் சரி எங்களைப் பற்றி தப்பாகத்தான் நினைக்கிறார்கள்…..முகத்துக்கு முன் சிரிப்பதும் அங்காலை போய் கேலி செய்வதையும் நான் கவனித்துக் கொண்டுதான் வாறன். “உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூடேலாது தானே”

— விநோ கோபத்துடன் யார் யாரெல்லாம் அப்படி தப்பு தப்பாய் பேசுவது…..சொல்லு இப்பவே போய் அவர்களை இங்கிருந்து விரட்டி விட்டு வருகிறேன். என்று வேகமாக எழும்புகின்றான் .

அப்படி எழுந்தவனை கொஞ்சம் பொறு விநோ அவசரப்படாதை என்று அவள் இழுக்க அவனும் எதிர்பாராமல் அப்படியே அவள்மீது சரிகிறான். “எதிர்பாராது வந்த துணையே வந்து என்னை அணையே” என்று அவள் உடலும் அவனை அலுங்காமல் ஏற்றுக் கொள்கிறது “ஆலங்கட்டி மழை அல்லிப்பூவில் விழும்போது அதன் மகரந்தம் சிலிர்த்து சிதறுகின்றது போல்” அந்த அணைப்பினில் அன்பும் பரிவும் மேலோங்க இதுவரை அவர்கள் மனதினில் இருந்த சஞ்சலங்கள் நீங்கி இனி ஒரு புது வாழ்வு துவங்க இன்பம் மலர்கின்றது. அன்று கயவர்களால் ஏற்பட்ட காயங்களும் தழும்புகளும் கூட இன்று இந்த இஷ்டப்பட்ட இவன் தொடும் ஸ்பரிசத்தில் வீணையின் தந்திகளாகி நாடிநரம்புகளுக்குள் ஊடுருவி ஹிந்தோளராகத்தில் “ஆனந்த தேன் காற்றாய்” தாலாட்டுகின்றது. நவதுவாரங்களையும் விரல்கள் மீட்டி வருகையில் முகத்தில் நவரசங்களும் கொப்பளிக்கின்றன. சந்தத்தின் மீது தவழ்ந்து செல்லும் சங்கீதம் போல் சந்தமாய் அவன் இருக்க சங்கீதமாய் தாவித் தழுவிக்கொள்கிறாள் . “முழுதாய் ஒரு நுங்கு எடுத்து மூழ் விலக்கி  முன்னால் அரிந்து முக்கண்ணை மோந்து ஒரு விரலால் அழுத்தி அடுத்தொரு விரலால் அள்ளியெடுத்து அருந்தியபடி மூச்சுவாங்க  ……..”இருவரும் பரவச நிலையினின்றும் மீள்கின்றனர். அவர்களின் கைகள் அனிச்சையாக ஆங்காங்கே கிடக்கும் ஆடைகளை துழாவி எடுத்து அணிந்து கொள்கின்றன. சற்று நேரம் அமைதி ……… அவள் இனம் புரியாத மகிழ்ச்சியில் அவனிடம் சொல்கிறாள் , வாழ்நாள் எல்லாம் விரக்தியிலேயே போய்விடும் என்றுதான் எண்ணியிருந்தேன் இதுவரை, இந்நாள் முதல் உன்னால்தான் இனியெல்லாம் திருநாளாய் ஆகும் என்னும் நம்பிக்கையைத் தருகின்றது . ....... அப்புறம் அவன் சொல்கிறான் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவாவது நாம் திருமணம் செய்தாக வேண்டும் மேகலை.

— ஓம் …… ஆனால் எனக்கு இன்னொரு தாலி கட்டுவதில் இஷ்டமில்லை விநோ .

— சரி, அப்படியென்றால் இங்கொரு பாதிரியார் வருவாரே அவர் முன்னிலையில் மோதிரம் மாற்றலாமா …..

— மணிமேகலை கொஞ்சம் யோசித்து விட்டு சொல்கிறாள்….தற்போது எங்களுக்கு மறுவாழ்வும் வாழ்க்கைக்கு வழி காட்டியதும் இந்த சாதுக்கள்தான் அதனால் அவர்களின் முன்னிலையில் இங்கிருக்கும் நண்பர்களுடன் மாலை மாற்றினால் போதும். ஆடம்பரம் எல்லாம் அவசியமில்லை. அவனுக்கும் அதுவே சரியென்று படுகின்றது. அவளிடம் அப்படியே செய்யலாம் , நீயும் நேரமிருக்கும்போது தலைமை பிக்குவானவரிடம் கேட்டுப்பார் என்கிறான். ம்…..என்று மெதுவாக எழுந்தவள் மென்மையாய் அவனது நெற்றியில் முத்தமிட்டு விட்டு கடைக்குப் பின்னால் இருந்த வீட்டுக்குப் போகிறாள். நிலவின் ஒளியில் தேவதைபோல் நடந்து செல்லும் அவளழகை இவள் என்னவள் என்னும் நினைப்பில் எதுவித லஜ்ஜையுமின்றி  ரசிக்கிறான்……..! 

67a7fe900ad8707dcbe42a301a949b27.jpg

மலர் . ........... 🌺 5.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

video_preview_0000.jpg?w=500&cf_fit=cove

வீதியோரம்.

மலர் .......... 6.

                                                             மாலைப்பொழுதில் இருள் கூடிவரும் நேரம், வீதியின் எதிர்பக்கத்தில் சொகுசுக் கார் ஒன்று வந்து நிக்கின்றது. அதில் இருந்து தம்பதிகள் இருவர் வீதியைக் கடந்து கடைக்கு வருகின்றனர். அப்போது அந்தக் காரின்  முன்னால் பேரூந்து ஒன்றும் வந்து நிக்க அதில் இருந்து பிரயாணிகளும்  தட தடவென்று இறங்கி வருகின்றனர். முன்னாள் வந்த பெண் கடைக்குள் வந்து மலசல கூடத்தை விசாரித்துக் கொண்டு அங்கு செல்கிறாள். அவளைத் தொடர்ந்து அவனும் போகிறான். சிறிது நேரத்தில் தமது கடமைகளை முடித்துக் கொண்டு இருவரும் கடைக்குள் வருகிறார்கள்.கடை ஆட்களால் நிறைந்து இருக்க இரவு வியாபாரம் களைகட்டுகிறது.  அவர்கள் இருவரும் தேவையானதை வாங்கி சாவகாசமாய் சாப்பிடுகிறார்கள். பஸ்ஸில் வந்தவர்களும் உணவருந்திவிட்டுப் போக அதுவும் புறப்பட்டுப் போகின்றது. அந்த இடத்தில் வேறொரு மினிவான் வந்து நிக்கின்றது. அந்தப் பெண்ணும் கணவனிடம் நீங்கள் இங்கு இருங்கள், நான் காருக்கு சென்று பிள்ளையை தூக்கிக் கொண்டு வருகிறேன். அவன் இன்னும் எழும்பி இருக்க மாட்டான் என்று சொல்லிவிட்டுப் போகிறாள். சற்று நேரத்தில் எதிர்ப் பக்கத்தில் ஒரே பரபரப்பு.அந்தப் பெண் குழறிக் கொண்டு கடைக்கு ஓடி வருகிறாள். “கடவுளே நான் இனி என்ன செய்வேன் காருக்குள் இருந்த என்ர பிள்ளையைக் காணவில்லையே. தன் மனைவியின் குரல் கேட்டு எழுந்தவன் வெளியே வந்து பார்க்க அவள் காலில் பாட்டா தடுக்க தோளில் துப்பட்டா பறக்க தடுமாறி ஓடி வருகிறாள். 

— என்னடி என்ன ஆச்சு .

— என்னங்க, நம்ம குழந்தையை காரில் காணவில்லை. கதவெல்லாம் திறந்திருக்கு. நீங்கள் காரை சரியாகப் பூட்டினீர்களா என்று கேட்க, அவனும் தான் அவசரத்தில் பூட்டவில்லையோ என யோசித்துக் கொண்டு காருக்கு ஓடுகின்றான். காரின் பின் கதவு திறந்திருக்க பிள்ளை படுத்திருந்த கூடை கீழே கிடக்கு. அதனுடன் இருந்த பையும் அதில் இருந்த மா, பிஸ்கட் எல்லாம் நிலத்தில் சிதறிக் கிடக்கு. சில பொருட்கள் காட்டினுள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பரந்துபோய் கிடக்கு. இருட்டாகி விட்டதால் சிலர் டோர்ச் லைட் அடித்துப் பார்க்க சிலர் வண்டியின் லைட்டை காட்டுப்பக்கமாய் திருப்புகிறார்கள்.ஆங்காங்க்கே விலங்குகளின் காலடித் தடங்கள் தென்படுகின்றன. அவர்கள் எல்லோரும் நரியோ ஓநாயோதான் பிள்ளையை இழுத்துக் கொண்டு ஓடியிருக்கும் என்று கதைத்து கொள்கிறார்கள்.அதற்குள் யாரோ போலீசுக்கு அறிவித்து அவர்களும் வந்திருந்தார்கள். அவனும் அருகில் இருந்த இராணுவத்துக்கு தன்னை அறிமுகப்படுத்தி கடிதம் ஒன்று ஒரு வண்டியில் குடுத்து விட சற்று நேரத்தில்  அவர்களும் தகுந்த ஆயத்தங்களுடனும், மோப்ப நாய்களுடனும் இரு  ட்ரக்குகளில்  வந்து இறங்குகிறார்கள்.எல்லோருமாய்  டார்ச் லைட்டுகளுடன் காட்டுக்குள் பல பக்கங்களுக்கும் தடம் பார்த்து பிரிந்து தேடித் போகிறார்கள். அவள் அந்த வீதியோரத்தில் தன் தலையில் அடித்துப் புலம்பிக் கொண்டிருக்கிறாள். கடவுளே ஏழு வருடங்களின் பின் தவமிருந்து பெற்ற பிள்ளை. இன்னும் இருமாதங்களில் அவனுக்கு இரண்டாவது பிறந்தநாள் வருகிறது.நான் இனி என்ன செய்வேன். “கடவுள் இன்பத்தை தரும்போது ஒன்றுக்குப் பத்தாகத் தருவார் . துன்பத்தைத் தரும்போது பத்துக்கு பதினொன்றாய் தருவதுதான் வாடிக்கை போலும்” கதறி அழுகிறாள்.


                                 சில மணி நேரங்களின் பின் காட்டுக்குள் சென்றவர்கள் எல்லாம் வெறுங்கையுடன் திரும்பி வருகின்றார்கள்.ஒரு போலீஸ்காரர் அவர்கள் இருவரிடமும் நடந்த சம்பவங்களையும், அவர்கள் பெயர் விலாசங்களையும் விசாரித்து பதிவு செய்து கொண்டிருக்கிறார். அவன் மனைவி குழந்தையுடன் நாட்டுக்குள் சுற்றுலா போய்விட்டு வரும் வழியில் சிரமபரிகாரம் செய்ய இங்கு வண்டியை நிறுத்தியிருக்கிறான். காரில் வேறு ஏதாவது பொருட்கள் காணாமல் போயிருக்கின்றதா என்று சோதித்துப் பார்க்கின்றார்கள். கார் டாஸ்போர்ட்டில் இருக்கும் பணம் முதலான பொருட்கள் எல்லாம் இருக்கின்றன, அவளது கைப்பையில் இருக்கும் பணம், சிறு நகைகள்,அவசியமான மேக்கப் பொருட்கள் மற்றும் காண்டம் எல்லாம் அப்படியே இருக்கின்றன. 

— என்னடி இது, இது எப்படி இங்கே என்று காண்டத்தைக் காட்டி அவன் கேட்க …..

— போதும் நீ முடிட்டு போய் பிள்ளையைத் தேடு…. பிறகு இருக்கு உனக்கு  என்று அவள் சொல்ல …..

— என்ன சொல்கிறாய் நீ …..

— உன் வண்டவாளமெல்லாம் எனக்குத் தெரியும்…… பாக்கிறவளோடெல்லாம் படுக்கிற உனக்குதான் இதுகள் தேவை ……எனக்கு இல்லை……என்று சொல்ல இவள் என்ன சொல்ல வருகிறாள்…… யோசிச்சவன் அட …… ஒருவேளை நான் கழுவப் போட்ட களுசான் பொக்கட்டுக்குள் இருந்து எடுத்திருப்பாளோ என்று நினைக்கும் போது  ……. நாய்களின் இரைச்சல்களுடன் மற்றவர்களும் அங்கு வந்துவிடுகிறார்கள் …..

                                 

                         அதனால் அவர்கள் அங்கிருந்த தடயங்களை வைத்து பிள்ளையை ஏதோ விலங்குகள்தான் இழுத்துக் கொண்டு போயிருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வருகின்றார்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு மேலாகி விட்டது.இரவின் நிசப்பத்தில் காட்டு விலங்குகள் ஊளையிடுவதும் ஆந்தைகள், வௌவால்கள்,சில்வண்டுகள் போன்ற இரவாடிகளின் அலறல்களும் பயங்கரமாய் இருக்கின்றது.இதுவரை இது போன்ற ஒரு இரவு இங்கு இருந்ததில்லை. கடையிலும் கூட்டங்கள் எல்லாம் குறைந்து போய் ஓரிருவர் மட்டும் ஆங்காங்கே இருக்கின்றனர். இவ்வளவு களேபரத்திலும் அந்த விலைமாதுக்களின் தொழில் மட்டும் காட்டுக்குள் ஜோராய் போய் வந்து கொண்டிருக்கு. பின்பு பிள்ளையைத் தொலைத்த தம்பதிகளும் கூட போலீசுக்குப் பின்னால் போய் விட்டார்கள். விநோதனுக்கும் மணிமேகலைக்கும் கூட அந்தசம்பவம் மனசைப் பாதித்த படியால் இருந்தவர்களுக்கு தேவையான உணவுகளைப் பரிமாறிவிட்டு விளக்குகளை அணைத்து கடையை சாத்தி விட்டு வீட்டுக்கு போகிறார்கள். …………………………. 6.

shepherd-looking-bomb-training-boxes-260

மலர் .......... 🌼 6.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.