Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறு கதை - 203 / காயமுற்ற தோளும் குணமடையாத நிலமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 203 / காயமுற்ற தோளும் குணமடையாத நிலமும்

யாழின்பன் ஓய்வு பெற்ற நாளில், அவனது வீட்டில் எந்தக் கொண்டாட்டமும் நடைபெறவில்லை. வடக்கில் ஓய்வு என்பது ஓர் முடிவல்ல; அது எதோ ஒரு வழியில் தொடர்ந்து கொண்டு இருப்பதுடன், அது மெதுவாக அவரை அங்கு அமைதிக்குள் கரைத்துவிடும். காலை எழும் பழக்கம் அவனை விட்டு விலகவில்லை. கடிகாரம் இனி கட்டளையிடவில்லை; ஆனாலும் உடல் பழைய கட்டளைகளை மறக்கத் தயாராக இன்னும் இல்லை. அது அதைப் பழக்க சில பல மாதங்கள் எடுக்கலாம். யாழின்பன் எழுந்தபோது வலது தோள் முதலில் விழித்தது. பிறகு அவன். வலி ஒரு தாக்குதல் போல வரவில்லை; அது நீண்ட நாட்களாகப் பழகிய ஒருவனைப் போல அருகில் வந்து உட்கார்ந்தது.

பக்கத்தில் படுத்து இருந்த அகல்விழி அவன் முகத்தைப் பார்த்தவுடனே புரிந்துகொண்டாள். அவள் கேட்கவில்லை; கேட்க வேண்டியதில்லை. சில உண்மைகள் வார்த்தைகள் இல்லாமல் வெளிப்படும் என்பதை அவள் நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக்கொண்டாள். வேம்படி மகளிர் பள்ளியில் படித்த காலத்திலிருந்து அவள் கற்றிருந்தது — சத்தமில்லாமல் புரிந்து கொள்வது. அவன் வாழ்க்கையில் வலி புதிதல்ல; ஆனால் இப்போது அது நிரந்தரமாக உடனிருந்தது.

சர்க்கரை நோய் அவனிடம் எந்த அனுமதியும் கேட்காமல், அறிவிப்பு இல்லாமல் வந்த சட்டம் போல, குடியேறியிருந்தது. காலை மாத்திரை, அளவான உணவு, நேரம் பார்த்து நடப்பது—அவை எல்லாம் அவன் நாளின் பகுதிகளாகிவிட்டன. வடக்கில் மக்கள் இப்படித்தான் வாழப் பழகியிருந்தார்கள். முழு சுதந்திரமில்லை; அதே நேரத்தில் வாழ்வை கைவிடவும் இல்லை. தடைப்பட்ட சூழலில் கூட உயிர் வாழ்வதற்கான ஒழுங்கை அவர்கள் கற்றிருந்தார்கள். ஒருகாலத்தில் மாணவர்களை நேரத்திற்கு வகுப்புக்குள் அனுப்பியவன், இப்போது தன் உடலை ஒழுங்குக்குள் வைத்திருக்க வேண்டிய நிலையில் இருந்தான்.

நாற்பது வயது தொப்பை விழுகுது
கருத்த முடி நரை விழுகுது
ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது
குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது
சோர்வான உடல் எதோ கேட்குது
ஐம்பதில் எறியதில் மகிழ்ச்சி அடையுது!

ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது
வேலையில் இருந்து ஒய்வைக் கேட்குது
அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது
மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது
தலைமுதல் கால் விரல்கள் வரை
படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!

கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது
தோள்மூட்டு வலி குந்தி இருக்குது
பச்சைக் காய்கறி பழக் கலவையுடன் [சாலட்]
விரலை குத்தி சீனி பார்க்குது
நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது
கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!

யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரியில் படித்த காலத்தில், கல்வி என்பது ஒரு நம்பிக்கை. வளைந்த வரலாற்றை நேராக்கும் கருவி. சிதைந்த சமூகத்தை மீண்டும் நிமிர்த்தும் சக்தி என்று முழுமையாக உணர்ந்தான் . வரலாறு கூட புத்தகங்களில் சீராக எழுதப்பட்டால், இனப்பிரச்சனை கூட மாறிவிடும் என்று நினைத்தான்.

அவனுக்கு அங்கே அமைதியைப் பயிற்றுவித்த கல்வி, அவனுக்கு ஒழுக்கமும் கற்றுக் கொடுத்தது. அதுமட்டும் அல்ல, ஒழுக்கமும் அறிவும் போதுமானால் அநீதிக்கு ஒரு முடிவு உண்டு என்று அவனை நம்ப வைத்தது யாழ் மத்திய கல்லூரி.

அப்போது அவன் நம்பினான்— படித்தால் போதும். அறிந்தால் மாற்றம் வரும். வரலாறு கூட தன் பிழைகளைச் சீர்செய்து கொள்ளும் என்று. ஆனால் பேராதனையில் பல்கலைக்கழகத்தில் அந்த நம்பிக்கை மெதுவாக உரசியெடுக்கப்பட்டது. அவன் வேறு ஒன்றைக் அங்கு கற்றான்— அறிவு மனதை கூர்மையாக்குகிறது. ஆனால் அதிகாரத்தை மென்மையாக்குவதில்லை. அறிவு கேள்வி எழுப்பச் சொல்லுகிறது. ஆனால் பதில் கிடைக்குமா என்பது அதிகாரத்தின் விருப்பம். அங்கே தான் அவன் உணர்ந்தான்— கல்வி ஒடுக்குமுறையை விளக்கக் கற்றுத் தருகிறது. அதை நிறுத்துவதில்லை. உண்மை சொல்லப்படலாம். ஆனால் அது கேட்கப்பட வேண்டியதில்லை

அந்த வளாகத்தில்தான் அகல்விழி அவன் வாழ்க்கைக்குள் முழுமையாக நுழைந்தாள். பாடசாலை காலத்தில், அவர்களின் பாடசாலை அருகருகே இருந்ததாலும், அவள் அழகு யாரையும் திரும்பி பார்க்க வைத்ததாலும், அவன் ஒரு சிறப்பு வாய்ந்த கிரிக்கெட் மற்றும் கால்பந்து வீரர் என்பதாலும், ஒருவரை ஒருவர் தூரத்தில் ரசித்துள்ளார்கள். அந்த அறிமுகம் தான் அவர்களை பல்கலைக்கழகத்தில் ஒன்று சேர்த்தது. அவள் யாழ்ப்பாணத்தின் ஒரு அமைதியான மாலை போல அழகாக அமைதியாக இருந்தாள். அவளிடம் சத்தம் இல்லை. ஆனால் உள்ளே உறுதி இருந்தது. அவர்கள் இருவரும் கூடுதலான கவனம், படிப்பில் செலுத்தியதால், அவர்கள் காதல் தீவிரமாக இல்லை; அது அவசரமாகவும் இல்லை. அவன் பேசினான். அவள் கேட்டாள். அவன் கனவுகளைச் சொன்னான். அவள் அவற்றை நிலத்தில் பதிய வைத்தாள். அவர்களுடைய காதல் இன்றைய பாடல் போலவும் இல்லை. அன்றைய கவிதை போலவும் இல்லை. ஒரு நீண்ட நடைபாதை உரையாடல்கள் போல இருந்தது. மெதுவான சம்மதங்கள், ஒரே கனவின் இரு குரல்கள் மட்டுமே.

பேராதனையில் தான் அவன் உடல் முதன்முறையாக அரசியலைச் சந்தித்தது. கூட்டங்கள், முழக்கங்கள், காவலர்கள், ஓட்டம், தடியடி —அந்த நாட்களில் அவன் தோள்கள் வலிக்கவில்லை.

இருவரும் தங்கள் தங்கள் பட்டப்படிப்பு முடிந்ததும், இலங்கையின் மாற்றப்பகுதிகளில் வேலைக்குப் போகாமல், வடக்கிற்கு திரும்பியது நிலம் குணமடைந்ததால் அல்ல. அது இன்னும் காயமுற்றிருந்தது; மண் நிம்மதி அற்று உறங்க முடியாமல் இருந்தது. பல உத்தியோகத்தர்கள் வடக்கு மண்ணை விட்டு வெளியே போய்க்கொண்டு இருந்தார்கள். அங்கே அவர்களின் பணி [சேவை] தேவையாக இருந்தது; அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு, அழிந்த வீடுகள். மாறாத முகாம்கள். சாதாரணமாக்கப்பட்ட அநீதிகள் எல்லாம் ஒன்றாக காணப்படும் அந்த நிலத்தில் அவர்கள் வேலை பார்த்தார்கள். ஆனால் நிம்மதி இல்லை. அடிக்கடி ஊரடங்கு, சோதனைகள், சந்தேகப் பார்வைகள்— அவை நாளாந்த வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்தன. அவன் உடல் அதையெல்லாம் தாங்கியது. அப்போது தோள் வலிக்கவில்லை.

அவர்களுக்கு ஒரு மகன். ஒரு மகள். அவர்கள் படித்தார்கள். திருமணம் ஆனது. பிள்ளைகள் பிறந்தார்கள். இப்போது பேரக்குழந்தைகள் அவனை “தாத்தா” என்று அழைக்கிறார்கள். அந்தச் சொல் அவனை வயதானவனாக்கவில்லை. மாறாக முழுமையாக்கியது. அவன் அவர்களை தூக்கினான். தோளில் அமர வைத்தான். அப்போது கூட அவன் தோள் சத்தமில்லாமல் அதை சகித்துக் கொண்டிருந்தது.

வலது தோள்பட்டை வலி அவன் ஓய்வு பெற்ற பிறகுதான் தெளிவாகத் தோன்றியது. இப்போது மட்டும் ஏன் என்று அவன் கேட்டபோது, மருத்துவர் சிரித்தபடி சொன்னார்: “இதெல்லாம் இப்போ ஆரம்பிச்சது இல்லை. பல வருடங்களின் தேக்கம்.” - அவன் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திய பக்கம் தான் வலது பக்கம். கணினியில் தட்டச்சு செய்ய , தூக்க, சுமக்க, பந்து வீச, பந்து அடிக்க ....

யாழின்பன் சிரித்தான். வடக்கில் இப்போது நடப்பவை எல்லாம் இப்போது ஆரம்பித்தது இல்லை. எல்லாமே பல தசாப்தங்களின் தேக்கம் தான். 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கை அரசியல் சுதந்திரம் பெற்றதுடன், நாட்டின் அதிகார அமைப்புகள் புதிய வடிவம் பெற்றன. ஆனால் அந்த மாற்றம், தமிழர்களுக்குச் சம உரிமையும் பாதுகாப்பையும் வழங்கவில்லை. மாறாக, சிங்கள–பௌத்த ஆதிக்க அரசியல் கோட்பாடுகள் வலுப்பெற்று, மொழி, கல்வி, வேலைவாய்ப்பு, குடியுரிமை, மண் உரிமை, சமய உரிமை, சம உரிமை ...... ஆகிய தளங்களில் எல்லாமே சேர்ந்து சேர்ந்துதான், தமிழர்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட அடக்குமுறை உருவாகத் தொடங்கியது.

அவரது எக்ஸ்-ரே “கிழிவும் தேய்வும்” உண்டு என்றது. ஆனால் “இடைவெளி இன்னும் உள்ளது.” மருத்துவர் சொன்னார்: “முழுமையான குணம் இல்லை. ஆனால் கையாளலாம்.”

ஆனால், யாழின்பன் மருத்துவத் தீர்ப்பைத் தாண்டி ஒரு அர்த்தம் கண்டான். மண்ணுக்கும் கிழிவும் தேய்வும் உண்டு. பல தசாப்தங்களின் அழுத்தம். கண்காணிப்பு. சுரண்டல். ஆனால் அங்கேயும் இடைவெளி உண்டு— பயத்துக்கும் மரியாதைக்கும் இடையில், இழப்புக்கும் நினைவுக்கும் இடையில்.

“பின்னாளில் மூட்டு வாதம் வரலாம்,” மருத்துவர் எச்சரித்தார். அரசியல் சிதைவுபோல்— தவிர்க்க முடியாதது அல்ல; அலட்சியம் செய்தால் நிச்சயம். “வழக்கமான உடற்பயிற்சி அவசியம்,” மருத்துவர் சொன்னார். “இயக்கம் முக்கியம்.” யாழின்பன் உள்ளுக்குள் சிரித்தான். இயக்கம் எப்போதும் முக்கியம் தான். வேலி போட்டபோது மனம் நகர்ந்தது. வாய் மூடப்பட்டபோது உண்மை பாடல்களிலும் சடங்குகளிலும் மௌனங்களிலும் நகர்ந்தது. வலி அதிகமானால் ஊசி போடவேண்டும். இல்லாட்டி வலி நிவாரணி எடுக்கவேண்டும்.” யாழின்பன் மீண்டும் சிரித்தான். அவன் மனதில் ஒரே எண்ணம் ஓடியது— உடலுக்கும் நிலத்துக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை.

குணமடையாதது. கட்டுப்படுத்துவது. வலியை பழக்குவது.

வலி அவனை முன்கூட்டியே ஓய்வுக்கு தள்ளியது. வேலைக்கு செல்லும் திறன் இருந்தாலும், உடல் ஒத்துழைக்கவில்லை. நாள் முழுவதும் கணினி முன் உட்கார முடியவில்லை; தோள் எரிந்தது. சில நாட்கள் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை மீறியது. மருந்துகள் உதவின; ஆனால் முழுமையாகக் குணப்படுத்தவில்லை. அவன் மெதுவாக வாழ கற்றுக்கொண்டான். வேகமாக நடக்கவில்லை. கனமான பொருட்களைத் தூக்கவில்லை. ஆனால் வாழ்க்கையின் பாரத்தையும் தனது மனக்குமுறலையும் சேர்த்து அகல்விழியோடு சுமந்தான்.

விழியற்ற தராசு நீதி தராது
அழிவுற்ற சமூகத்துக்கு விடை கொடுக்காது!
வலியற்ற வாழ்க்கை உண்மை அறியாது
நலிவுற்ற மக்கள் கவலை புரியாது!

ஈரமுள்ள மனையாள் கருணை காட்டிட
பாரமான வலியும் மறைந்து போகுமே!
நிறைவுள்ள நட்பு அன்பைக் கொட்டிட
கறைபிடித்த அரசியலிலும் நிமிர்ந்து நிற்கலாமே!

அவள் அவனை ஒருபோதும் பலவீனன் என்று நினைக்கவில்லை. “நீ எல்லாவற்றையும் ஒரே தோளில் சுமக்கிறாய்,” என்று ஒருநாள் மெதுவாகச் சொன்னாள். அது உடலைப் பற்றியதல்ல. குடும்பம், குழந்தைகள், நினைவுகள், ஒரு நிலத்தின் வலி—அவை எல்லாம் அவன் வலது தோளில் கூடிவிட்டதுபோல் இருந்தது. அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் இளமை இருந்தது; வலியும் இருந்தது.

பேரக்குழந்தைகள் வந்தபோது வீடு உயிர் பெற்றது. அவர்கள் ஓடினார்கள், சிரித்தார்கள், அவன் மடியில் ஏறினார்கள். அவன் அவர்களைத் தூக்கினான்—இரு கைகளாலும், மெதுவாக. வலி வந்தது; ஆனால் அவன் முகத்தில் அது தெரியவில்லை. அவன் நினைத்தான்: இவர்களுக்கு நான் என்ன கொடுக்கிறேன்? ஒரு காயமுற்ற நிலத்தின் கதையா, அல்லது அதையும் தாண்டி நிற்கும் பாசத்தின் உதாரணமா?

அகல்விழி அலுவலகத்திலிருந்து ஒரு மாலை தாமதமாக வந்தாள். யாழின்பன் வீட்டின் முன் தோட்டம் சுத்தம் செய்துகொண்டிருந்தான். “இன்னும் முன்போல் வேலை செய்யாதே,” என்று சொன்னாள். அவன் நின்று அவளை பார்த்தான். அந்த பார்வையில் இளம் வயது காதலும் முப்பத்தி மூன்று ஆண்டுகளின் உடன்பாடும் ஒன்றாக இருந்தது. “நம்ம வாழ்க்கையும் இந்த நிலம் மாதிரி தான்,” என்று அவன் சொன்னான். “காயமிருக்கு. ஆனா இன்னும் வாழுது.” அகல்விழி சிரித்தாள்.அவள் கை அவனது வலது தோளில் மெதுவாக அமர்ந்தது.

ஒரு இரவு பேரக்குழந்தைகள் அவனிடம் கதை கேட்டார்கள். அவன் போரைக் கூறவில்லை. வலியைச் சொல்லவில்லை. அவன் சொன்னது— ஒரு பள்ளி. ஒரு பல்கலைக்கழகம். ஒரு பெண். ஒரு வாழ்க்கை. அவன் முடித்தபோது அவனது தோள் வலித்தது. ஆனால் அவனது மனம் அமைதியாக இருந்தது.

அந்த இரவு யாழின்பன் அகல்விழியின் அருகில் அமைதியாக படுத்துக்கொண்டான். ஆனால் அவன் தோள் இன்னும் வலித்துக் கொண்டே இருந்தது. சில நேரம் மனமும் கூட. அகல்விழியின் கை அவன் வலது தோளில் மெதுவாக அமர்ந்தபோதும், அவன் வலி குறையவில்லை; ஆனால் அர்த்தம் மாறியது. அது இனி தனிப்பட்ட வலி அல்ல; பகிரப்பட்ட வாழ்க்கையின் ஒரு பகுதி.

யாழின்பன் புரிந்துகொண்டான்—சில காயங்கள் குணமடையாது. உடலில். நிலத்தில். ஆனால் காதல் இருந்தால் அவை மனிதனை முறிக்காது. மெதுவாக வாழவும், வலியோடு கூட நேசிக்கவும் கற்றுத்தரும்.

காயமுற்ற தோளோடும், குணமடையாத நிலத்தோடும், அவன் இன்னும் வாழ்ந்துகொண்டிருந்தான்— அகல்விழியுடன்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

துளி/DROP: 2093 [சிறு கதை - 203 / காயமுற்ற தோளும் குணமடையாத நிலமும்

https://www.facebook.com/groups/978753388866632/posts/34309069208741621/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.