Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வரலாற்று நாயகன் சு.ப.தமிழ்ச்செல்வன் -கவிஞர் யுகபாரதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று நாயகன் சு.ப.தமிழ்ச்செல்வன்

-கவிஞர் யுகபாரதி

வரலாற்று நாயகர்கள் எப்படி உருவாகிறார்கள்? காலமே அவர்களை வரலாற்று நாயகர்களாக உருவாக்குகிறதா இல்லை காலத்தின் தேவை கருதி வரலாறாக நாயகர்கள் தங்களை உருவாக்கிக் கொள்கிறார்களா என்பது எளிதாக கணித்து விடை காண முடியாப் பெரும் புதிர்.

நாமறிந்த வரலாற்று நாயகர்கள் எல்லோரும் புனிதர்களாக பூசைக்கு உரியவர்களாக மதிக்கப்படும் அதே நேரத்தில், அவர்களுடைய மறைக்கப்பட்ட வரலாறாக கூறப்படும் மிக மோசமான பகுதியும் நம்மால் விவாதிக்கப்பட்டு வருகிறது. உண்மையில், அவர்கள் நாயகர்களாக அறியப்படுவதே இவ்வாதங்களினால்தான் என்பது வேறு விஷயம்.

சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்து வீர சாகசம் புரிந்ததாக ஒருவரை சுட்டுகிற அதே ஏடு, அவரது கோழைத்தனத்தையும், சந்தர்ப்பவாதத்தையும் எழுதுகையில், சந்தர்ப்பவாதத்தை சாணக்கியத்தனம் என்றும் கோழைத்தனத்தை சமயோசிதம் என்றும் வார்த்தைகளால் வர்ணமடித்து உண்மையை உண்மையில்லாதது போலவும் பொய்யை பொய் போலவும் தோன்றச் செய்கிறது. அதுயென்ன உண்மை, உண்மை போல; பொய்யை பொய் போல என்று குழப்புகிறேன் என குழம்புகிறார்களா? அதுதான் வரலாறு. வரலாறு எப்பவும் நேர்க்கோட்டில் பயணிப்பதில்லை. அங்கும் இங்கும் சிறகு விரிந்து பறக்கும் பறவைபோல குவி மையத்தை தேடித் தேடி அலைவதே வரலாற்றின் வேலை அல்லது வசதி.

நாயகர்கள் எல்லோரும் வரலாற்றோடு மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதில்லை. அதே போல, வரலாற்றோடு சம்பந்தப்பட்டிருந்தால் மட்டுமே ஒருவர் நாயகராக அறியப்படுவதில்லை. தன் சக்தியை மக்களுக்காக விரயம் செய்தவனும் மக்களின் சக்தியை தேசத்துக்காக ஒருங்கினைத்தவனும் நாயகனாக அறியப்படுவான். எளிய முறையில் சொல்வதென்றால் சேகுவேரா, காஸ்ட்ரோ, பெரியார், அம்பேத்கார், புத்தர் எனப் பட்டியலை நீட்டித்துக் கொண்டே போகலாம்.

மக்களின் ஒருவராக வாழ்ந்து மக்களுக்காகவே சிந்தித்து மக்களின் மேம்பாடுக்காக விடுதலைக்காக யாரெல்லாம் மரணம் வரை முட்டுகிறார்களோ அவர்கள் எல்லோருமே வரலாற்று நாயகர்கள்தான். இன்னும் சொல்வதெனில் பொறுப்பில் இருந்து மரித்துப் போகிறவர்கள் மட்டுமல்ல. பொறுப்போடு யாரெல்லாம் மக்களுக்காக இரத்தம் சிந்துகிறார்களோ யாவருமே வரலாற்றை உருவாக்கிக் தருபவர்களே.

கண்ணுக்குத் தெரிய இப்போது ஈழம்... பொழுதொன்று போக புலர்கின்ற வரலாற்று நாயகர்கள் உலகிலேயே அதிகம் தோன்றும் பிரதேசமாக மாறிவிட்டது. நொடிக்கொரு சேதம். நிமிடத்திற்கு ஆயிரம் துயரம். என்றாலும், அன்பும் வீரமும் கண்ணீரால் பயிரிடப்படுகிறது. அவர்கள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள் என்பது பழைய வார்த்தைக் கோப்பாக இருந்தாலும் அதுவே நிஜம் என்பதால் அவ்விதம் உரைப்பதே சரி.

கடந்த வெள்ளிக்கிழமை முதல், உலக ஊடகம் முழுக்க உச்சரிக்கப்பட்ட பெயர் சு.ப.தமிழ்ச்செல்வன். சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு போராட்டத்தின் தீவிரத்தையும் பாசிசத்தின் பற்குறி பதிந்த கோரத்தையும் உலகுக்கு உணர்த்த தன்னை ஈந்த தமிழ்ப்பெயர். யாரந்த தமிழ்ச்செல்வன்? சொந்த லாபத்துக்காக வாழ்ந்து மடிந்தவனா? சோற்றுக்காக சுக போகத்திற்காக சூதும் வாதும் புரிந்தவனா? பதவி கிடைத்தால் போதும் என்று பாசாங்கு செய்தவனா?

இக்கட்டு நேரும் என்பதறிந்தும் இன்னுயிர் போகும் என்பதறிந்தும், புன்னகை மாறாத முகத்தோடு போர்க்களத்தை எதிர்கொண்ட தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளன். ஒரு போராளி என்னவிதமாக தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தமிழ்ச்செல்வனின் புகைப்படத்தைப் பார்த்தாலே போதும். எழுத்தாளர் வாஸந்தி 'தீரா நதி'யில் தனது இலங்கை பயணம் குறித்து எழுதுகையில் தமிழ்ச்செல்வனை சந்தித்தது குறித்து எழுதியது மங்கலாக நினைவுக்கு வருகிறது. போர்க்களத்திலும் தமிழ்ச்செல்வன் புன்னகையோடு இருப்பாரோ என்று தமிழ்ச்செல்வனை வியப்பது போல எழுதி அடுத்த வரி இப்படி முடிப்பார். ''யாரையாவது சுடும்போதும் சிரித்துக்கொண்டேதான் சுடுவாரா?'' என்று தனக்கே உரிய எழுத்துக் குரூரத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

தமிழ்ச்செல்வனின் புன்னகை வாஸந்தி எழுதியது போல வன்மம் நிறைந்த புன்னகையல்ல. வரலாறு தன் மீது வைக்கப் போகும் மலருக்கான புன்னகை. வாழ்ந்த கணக்கை மிகச்சரியாக எழுதி, விடையும் கண்டடைந்த புன்னகை. உலகத் தமிழர்களே ஒப்பாரி வைக்கும் இவ்வேளையிலும் தன் பணியை செவ்வனே செய்துவிட்டோமென நிறைவு பூக்கும் அமைதியின் புன்னகை. அமைதிக்கான புன்னகை.

தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளராக தம் பணியை நேர்த்தியாகவும், ஊடகவியலாளனின் சமூக நேசத்தோடும் ஆற்றிய தமிழ்ச்செல்வனின் மரணத்துக்கு என்பதை விடவும் வீரச்சாவுக்கு உலகமெங்கும் உள்ள தலைவர்கள், நேயமுடையோர்கள் வீர வணக்கம் செலுத்தியிருக்கிறார்கள்.

அனுராதாபுரம் வெற்றிகளை

கண்ணிமைக்காது பார்த்தவர்களின்

கண்ணடி பட்டதாலோ - நீ

குண்டடி பட்டுப் போனாய்

என்றொரு நெஞ்சை அறுக்கும் கவிதையை நாக.இளங்கோவன் எழுதியிருந்தார். மரணம் எந்த ரூபத்தில் வந்தாலும் அது ஏற்க முடியாத உண்மையல்லவா?

கடந்த வாரம் வரை சிங்கள பேரினவாதத்தை முறியடிக்கும் ஆகப்பெரும் சக்தியாக வலம் வந்த தமிழ்ச்செல்வன் இன்று அதே சிங்கள பேரினவாதத்தால் தாக்கி கொல்லப்பட்டிருக்கிறார். ஒட்டுமொத்த தமிழர்களின் இதயத்திலும் ஒரே சமயத்தில் இடி விழுந்ததுபோல் இச்செய்தி இறங்கியிருக்கிறது.

கனவும் சாவும் போராளிகளுக்கு பொருட்டில்லை. ஈன்றெடுத்த தாயின் பிரசவ வலி போல ஊன்று கோலாய் அவர்கள் ஊனியெழும் சக்தியைக் கூட துயரங்களே தருவிக்கின்றன. அவரது ஆத்மா சாந்தியடையும் சாதாரண ஆத்மா அல்ல. விடுதலையைக் கேட்கும் வரலாற்று நாயகர்களின் ஆத்மா.

போராட்டத்தின் திசையை சிரித்த முகத்தோடு நமக்கெல்லாம் சொல்லிக்காட்டிய அவருடைய தலைப்பெழுத்து 'சு.ப.' இணைத்து வாசித்தால் 'சுப.' என வருகிறது. மக்களுக்கான சுபத்திற்காக தன் வாழ்நாள் முழுக்கப் போரடிய தமிழ்ச்செல்வனின் பயணமும் தேடலும் ஒற்றைப் பனைமரத்தின் நிழல், மண்ணில் விழும் வரை தொடரும். தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதை கூட இங்கே சில அரசியல் கட்சித் தலைவர் (?)கள் விமர்சிக்கிறார்கள். பிணத்தை நடுவிலே போட்டுக்கொண்டு பிள்ளைக்கு பவுடர் பூச அலைபர்களின் கட்சி அரசியலை விடுங்கள், கொஞ்சமாவது மானுட நேயமுடையவராக இருக்கக் கூடாதா என்பதே என் ஏக்கம்.

தமிழ் நாட்டில் மட்டும்தான் சாதி ஓட்டை குறி வைத்து தொடங்கப்படும் கட்சிக்கு சமத்துவக்கட்சி என்று பெயர். போராளிகளை பற்றி எதுவும் தெரியாத அல்லது ஏற்கும் மனமில்லாதவர்க்கு புரட்சி தலைவி என்று பெயர். தமிழக முதல்வர், தமிழ்ச்செல்வனின் வீரமரணத்தை பற்றி எழுதிய இரங்கல் கவிதையை எப்படி எழுதலாம் என அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா கேட்டிருக்கிறார். தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த, ஒருவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பதால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும், எனவே ஆட்சியைக் கலைத்து விடுங்கள் என்கிறார்.

ஒரு எதிர்க்கட்சி தலைவராக ஜெயலலிதா உச்சரித்த இரண்டு நீள வார்த்தைகளில் ஒன்று 'மைனாரிட்டி', மற்றொன்று 'ஆட்சியைக் கலைத்து விடுங்கள்'. காக்காய் வலிப்பு வந்த ஒருவரின் கையில் இரும்பு துண்டை தருவது போல ஜெ.ஜெயலலிதாவின் கையில் உடனடியாக ஆட்சியை தந்தால் அன்றி இவ்வலிப்பு நிற்காது.

எல்லா விஷயத்திற்கும் ஆட்சியைக் கலைப்பதே சரியென்று அறிக்கைவிடுவது ஆரோக்கிய கேட்டால் உருவான அசீரண கோளாறு என்பதேயாகும். இரங்கல் தெரிவிப்பதற்கு ஒருவர் மீது அவதூறு பேசுகிற ஒரே தலைவர் அண்டத்திலேயே இவர் ஒருவராகத்தான் இருக்கக்கூடும்.

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவும் மருந்தும் கொடுப்பதற்காக உண்ணாவிரம் இருந்த அய்யா. பழ.நெடுமாறனுடன் மேடையில் இருந்ததற்காக வைகோ மீது சந்தேகச் சுவரொட்டியை ஒட்டும் கருத்தியலாளர்கள் ஒருபுறம் என்றால், ஜெயலலிதாவின் மனித நேயமற்ற அறிக்கை இன்னொருபுறம். சொந்த அரசியல் காழ்ப்பை எந்தெந்த விஷயத்தில் கைகொள்வது என்னும் அரசியல் பாலபாடமே அறியாதவர்களிடம் சிக்கி சீரழிவதே இன்றைய தமிழகமாகிவிட்டது.

திலீபனின் வீரச்சாவு எப்படியான மன அதிர்வுகளை உலகத் தமிழர்களின் மத்தியிலே உருவாக்கியதோ அதே அதிர்வை தமிழ்ச்செல்வனின் வீரச் சாவும் ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் துரோகிகளின் சுய முகம் அம்பலப்படுவதைப் போல இந்த அரசியல் குப்பைகளின் துர்நாற்றம் அடிக்கத் தொடங்கியிருக்கிறது. நாற்றத்தில் இருந்து நாம் வெளியேற மீட்சிபெற குப்பைகளை அப்புறப்படுத்தியே ஆக வேண்டும்.

தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த ஒருவருக்காக கண்ணீர் சிந்தவும் கூடாது என்றால் சுதந்திர இந்தியாவுக்காக அன்று போராடிய அத்தனை இயக்கங்களும், வெள்ளை ஏகாதிபத்தியத்தால் தடை செய்யப் பட்டவையே என்கிற உண்மையை... அவர்களுக்காக சிந்திய கண்ணீரை... மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் இல்லையா? தடை செய்யப்படுவது எதற்காக? யாருடைய திருப்திக்காக ஒரு இயக்கம் தடை செய்யப்படுகிறது என்பதை வரலாறு நெடுக நாம் பார்த்து வருகிறோம்.

மக்களுக்கு விரோதமான காரியங்களைச் செய்யும் பயங்கர வாதிகளைக் கொண்ட இயக்கத்தையும் மக்களின் விடுதலைக்காக போராடும் தீவிரவாத இயக்கத்திற்கும் வித்தியாசமிருக்கிறது. ஆயுத போராட்டத்தின் அவசியத்தை உணர்ந்து சிங்கள பேரினவாதத்தை வேரறுக்க முனையும் ஒரு இயக்கத்திற்கு தடை விதித்திருக்கும் நாமும் நம்முடைய அரசும் வரலாற்றின் கேள்விக்கு பதிலளித்தே ஆக வேண்டும்.

நம்மூரில் தடை செய்யப்பட்டிருக்கும் ஒரு மருந்தின் பயனை வெளியூரில் விற்கிறார்கள் என்றால் மருந்தின் பயன்பாடும் மருத்துவத்தின் ஆற்றலும் பரிசீலனைக்கு உகந்ததுதானே? இது மருந்தின் கோளாறல்ல. நோயின் தன்மை குறித்த தெளிவின்மையே.

தமிழ்ச்செல்வனின் குரல் இருந்தபோது எதை முன்மொழிந்ததோ... அதையே அவர் குரல் அடங்கிய பிறகும் வழி மொழிகிறது. ஈழ மக்களின் மீள்வு எதை நோக்கியதாக மாறும் என்பதே நம் சலனமும். போர் முறைகளாலும் இயக்க நெறியான்மைகளாலும் இன்று உலகமே வியக்கும் ஓர் இயக்கமாக விடுதலைப்புலிகள் தங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதேபோல சிங்கள பேரினவாதமும் தன் அடக்கு முறையை நீக்கிக்கொள்ளாமல் நீட்டித்துக் கொண்டே வருகிறது. இந்த சங்கிலித் தொடரின் நுனி அல்லது முடிவு தன்மையை எப்படி கண்டடைவது?

அமைதிக்கான போரும் போருக்காகவே அமைதியும் என்பதுபோல மாறி மாறி நிலவும் பிரதேசத்தில் மக்களின் மூச்சு முழுக்க வெடிகுண்டு மருத்துகளால் வீச்சமெடுக்கத் தொடங்கிவிட்டது. பிணங்கள் அரசு கட்டிலில் வீற்றிருக்கும் நாட்டில் மக்கள் நடை பிணமாகவே வாழ நேரும் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் நிலையே இலங்கையின் சில ஆண்டுகால தோற்றம்.

போராட்டத்தின் சூழலை நெருங்கிவிட்டோம். வீரச்சாவுகளால் உருவான வரலாற்று நாயகர்களின் கல்லறையில் மெழுகேற்றி உருகிக்கொண்டிருக்கும் ஒரு தேசத்தை, மறு உருவாக்கம் செய்யப்போகும் தருணமிது. மாசற்ற அன்போடும் மாறாத போர்க்குணத்தோடும் இதுவரை தன்னை ஈந்த மாவீரர்களின் பாதையில் உலகத்தின் வேறு ஏதோ ஒரு மூலையில் இன்னொரு விடுதலைக் குரல் எழும்பும்.

எழும் குரல்களையெல்லாம் ஏக்கத்தின் வெளிப்பாடு; உருக்கும் சாம்பலில் இருந்து மேலும் மேலும் நூறு, ஆயிரம், லட்சம் தமிழ்ச் செல்வன்கள் உருவாவார்கள். தமிழ்ச்செல்வன்களின் பெயர்கள் மாறியிருக்கும். ஆனால் போராட்டத்தின் நோக்கம் ஒன்றாகவே மலரும். பிறத்தியாரின் இரங்கலை எதிர்பார்க்காதவர்கள் வரலாற்று நாயகர்கள். பிறத்தியாரின் இரங்கலையும் விமர்சிக்கிறவர்கள் வரலாற்று துரோகிகள். நாம் யார் பின்னால்?

- நக்கீரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.