Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறவோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது 'அகழ்' இணைய இதழில் செல்வேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை.


மறவோம்: செல்வேந்திரன்

செல்வேந்திரன்

21.jpg?resize=344%2C463&ssl=1

திரு.வி.க

முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள், திரு.வி. கல்யாணசுந்தரம் அவர்களை அவருடைய இறுதிக்காலத்தில் சந்திப்பதற்காகச் செல்கிறார். அப்போது திரு.வி.க மிகச்சிறிய இல்லமொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரை கவனித்துக்கொள்வதற்கு ஆட்கள் யாருமில்லை. திரு.வி.க-வை தன்னுடைய ஆசிரியராகக் கருதியதால், டாக்டர் மு. வரதராசனார் தினந்தோறும் அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருக்கிறார். ஒருநாள் கி.ஆ.பெ. அவரைப் பார்ப்பதற்காகச் செல்லும்போது, கட்டிலில் இருந்து கீழே விழுந்து, கூனிக் குறுகிச் சுருங்கிய நிலையில் கிடக்கிறார் திரு.வி.க. இவர் எங்கே இந்த வீட்டில் அனாதையாக இறந்து போய்விடுவாரோ என்று அஞ்சிய அந்த வீட்டின் உரிமையாளர், ‘நீங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும்’ என்று திரு.வி.க.விற்கு வழக்கறிஞர் மூலம் அறிக்கை கொடுத்து அவரை துன்புறுத்தத் துவங்குகிறார்.

இதைப் பார்த்து கி.ஆ.பெ மனம் கொந்தளித்து, “வாழ்நாளெல்லாம் தமிழைத் தூக்கிச் சுமந்த இந்தத் தமிழ் அறிஞருக்கு ஒதுங்குவதற்கு ஒரு கூரை கிடையாதா? இவருக்கு நாம் நிதி திரட்ட வேண்டும்” என்று தமிழ்நாட்டினுடைய முக்கியமான புரவலர்களுக்கு, அவரும் மு.வ.வும் இணைந்து கடிதங்கள் எழுதுகிறார்கள். அதற்கு, உடனடியாக மதுரையில் உள்ள தொழிலதிபரான கருமுத்து தியாகராஜன் செட்டியாரிடமிருந்து ஒரு பதில் கடிதம் வருகிறது. அந்தக் கடிதத்துடன் மற்றொரு உறையும் உள்ளது. அந்த உறையைத் திறந்தால், ஒரு பெரிய தொகைக்குக் கருமுத்து தியாகராஜன் அவர்கள், திரு.வி.க அவர்களுக்கு அனுப்பிய காசோலை. அனுப்பிய சில நாட்களிலேயே மீண்டும் தியாகராஜன் அவர்களுக்கு ஒரு கடிதம் வருகிறது, கூடவே ஒரு குறிப்பும் உள்ளது. அதில், “நான் வாழ்நாளெல்லாம் கௌரவமாக வாழ்ந்திருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் நான் எதைச் செய்யவில்லையோ, அந்த ஒரு காரியத்தை என்னுடைய மரணத் தருவாயில் செய்யும்படி என்னைப் பணித்துவிடாதீர்கள்” என்கின்ற குறிப்போடு, தியாகராஜன் செட்டியார் அனுப்பிய அந்தக் காசோலையை அவருக்கே திரு.வி.க. திருப்பி அனுப்பிவிட்டார். இது ஒரு நிகழ்வு.

மற்றொன்று, பாரதியாருடைய நண்பரும், அதே எட்டயபுரத்தில் பிறந்தவருமான நாவலர் சோமசுந்தர பாரதியார், கந்தசாமிக் கவிராயரைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக்குச் செல்கிறார். அவர் வீட்டுத் திண்ணையில், அழுக்கடைந்த வேட்டி ஒன்றை உடுத்திக்கொண்டு, பரட்டைத் தலையோடு, சட்டை இல்லாமல் பார்ப்பதற்குப் பிச்சைக்காரரைப் போல ஒருவர் படுத்திருக்கிறார். சோமசுந்தர பாரதியாரும் கந்தசாமிக் கவிராயரும் தொல்காப்பியத்தின் மிகச் சிக்கலான ஒரு பகுதியைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, திண்ணையில் பிச்சைக்காரரைப் போல படுத்திருந்த அந்த நபர் எழுந்து அமர்ந்து, தர்க்க ரீதியாக ஒரு விளக்கத்தைச் சொல்கிறார். உயர்தரமானதொரு ஆய்வாளர் மட்டுமே சொல்லக்கூடிய விளக்கம் அது.

அதைக் கேட்கும்போது அதிர்ந்துபோன நாவலர், “யார் இவர்?” என்று கேட்கிறார். இவர்தாம் தொல்காப்பியப் பேரறிஞர் என்றும், இலக்கணக் கடல் என்றும் போற்றப்படக்கூடிய ‘அரசன் சண்முகனார்’ என்று அறிமுகப்படுத்துகிறார்கள். அரசன் சண்முகனாரை ஒருமுறை தூத்துக்குடி சைவ சித்தாந்தக் கழகம் சிறப்புரையாற்றுவதற்காக அழைக்கிறது. அவரைத் தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்று அழைத்து வருவதற்காக விழா ஏற்பாட்டாளர்கள் செல்கிறார்கள். அவர்களால் அவரை அடையாளம் காண முடியவில்லை. “யாரோ ஒரு பிச்சைக்காரன் இறங்கிப் போகிறான்” என்று அவரைப் பார்க்கிறார்கள். தன்னுடைய வாழ்நாளில், தமிழ் அறிஞர்களால் மிக மிக இழிவு செய்யப்பட்ட, மிக மிக அவமானப்படுத்தப்பட்ட ஒரு தமிழ் அறிஞர் இந்த மண்ணிலே வாழ்ந்திருந்தார் என்றால், அவர் சோழவந்தானில் வாழ்ந்த அரசன் சண்முகனார்தான். அப்படி அவர் என்ன குற்றம் செய்தார்?

அவருடைய தொல்காப்பியப் பாயிர விருத்தி, திருக்குறள் ஆராய்ச்சி போன்ற நூல்களை எல்லாம் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் அன்று வாழ்ந்த புலவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். அவர் செய்த குற்றம் என்னவென்றால், நமக்கு முந்தைய உரையாசிரியர்கள் செய்த உரைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், தன்னுடைய சொந்த அறிவை, தன்னுடைய சொந்த வாசிப்பை, தன்னுடைய சொந்த ஆய்வுகளின் வழியாக அதற்கான மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தார் என்கிற ஒரே காரணத்துக்காக, தமிழ்நாட்டின் புலவர் கூட்டம் அவரை வேட்டையாடியது. பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு 46 வயதில் அரசன் சண்முகனார் இறந்து போனார்.

சி.வை. தாமோதரம் பிள்ளையைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழ்ப் பதிப்புத்துறையினுடைய தந்தை என்று அறியப்படக்கூடியவர். கலித்தொகையிலிருந்து, சூளாமணியிலிருந்து, நீதிநெறி விளக்கத்திலிருந்து, வீரசோழியம் வரை எண்ணற்ற நூல்களைப் பதிப்பித்தவர். உ.வே.சா.விற்குப் பல விதங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அவருக்குப் பத்து புதல்வர்கள். எட்டுப் பிள்ளைகள் இறந்துவிட்டார்கள். எஞ்சி இருந்த இரண்டு பிள்ளைகளில் ஒரு மகன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு ஒரே மகள்தான். சி.வை தாமோதரம் அவர்கள் தன்னுடைய மரணப் படுக்கையில், “என்னுடைய சொந்த சேகரிப்பிலுள்ள புத்தகங்களையும், என்னுடைய தனிப்பட்ட சேகரிப்புகளையும் விற்று என் மகளுடைய கல்விக்கு உதவுங்கள்” என்று உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து போனார்.

si.vai_.damodara-pillai.jpg?resize=628%2

சி.வை தாமோதரப்பிள்ளை

இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் கலைக்களஞ்சியம் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அப்படி ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தபோதே, ஒவ்வொரு புத்தகமும் 750 பக்கங்கள் என பத்து புத்தகங்களைக் கொண்டுவர வேண்டும் என்று அவிநாசிலிங்கம் செட்டியார் ஒரு குழுவை அமைக்கிறார். அந்தக் குழுவிற்குத் தலைமை ஏற்றவர் ‘பெரியசாமித் தூரன்’. அந்த கலைக்களஞ்சியத்திற்காகப் பங்களிப்பாற்றிய ஒவ்வொரு அறிஞருக்குமே அரைச் சம்பளம் என்று நிர்ணயிக்கப்படுகிறது. உலக சாதனை என்று கருதத்தக்க அளவுக்கு அந்த கலைக்களஞ்சியத்தைத் தனி மனிதராகப் பெரியசாமித் தூரன் உருவாக்குகிறார். தன்னுடைய சம்பளத்தை கொஞ்சம் ஏற்றிக் கேட்பதற்குக்கூட முடியவில்லையே என்று, அன்றைக்குத் தமிழில் வந்து கொண்டிருந்த ஒவ்வொரு ஆய்விதழ்களிலும் அவர் வருமானத்துக்காகக் கட்டுரைகள் எழுதுகிறார். அவருடைய நாட்குறிப்பில், “சற்று கூடுதல் சம்பளம் கொடுத்தால் இன்னும் நன்றாக வேலை பார்த்திருப்போமே” என்கிற ஆதங்கம் காணக்கிடைக்கிறது. பெரும்பாலான துறை சார்ந்த அறிஞர்கள் நம்முடைய தமிழ் கலைக்களஞ்சியத்துக்கு எழுதிய கட்டுரைகளுக்கு எந்தச் சன்மானமும் பெற்றுக்கொள்ளவில்லை.

அப்படிப்பட்ட பெரியசாமித் தூரனுக்கு, அவருடைய குடும்பத்தார் சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு விழா ஏற்பாடு செய்தார்கள். குறைந்தபட்சம் ஐநூறு பேர் வருவார்கள் என்று இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிகழ்வுக்கு வந்தவர்கள் வெறும் முப்பத்திரண்டு பேர். மீதமான அந்த உணவை என்ன செய்வது என்று தெரியாமல் தூரன் குடும்பத்தார் திகைத்து நின்றார்கள். அவரை இந்தப் பொதுச்சமூகத்தில் மீண்டும் நினைவுறுத்தும் பொருட்டு, எழுத்தாளர் ஜெயமோகனும் அவருடைய நண்பர்களும் ‘தமிழ் விக்கி தூரன் விருது’ என்றொரு விருதைத் தோற்றுவித்து, பண்பாட்டு ஆய்வுகளில் முன்னோடியாகத் திகழக்கூடிய ஆய்வாளர்களுக்கு ஈரோட்டில் வைத்து விருது வழங்குகிறார்கள்.

image-14.png?resize=249%2C320&ssl=1

பெரியசாமித் தூரன்

இதுவரை ஐந்து ஆய்வாளர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்குகிற நிகழ்வுகளுக்கு நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று வற்புறுத்தி, வலியுறுத்தி அழைத்தும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஒரு பத்திரிக்கையாளர் கூட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில்லை. ஒரு பத்திரிக்கைகூட தூரன் விருதைப் பற்றியோ, அந்த விருது பெறும் ஆய்வாளர்களைப் பற்றியோ ஒரு வரிகூட எழுதியதில்லை.

இன்னொரு ஆளுமையை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் ஜி.யு. போப்; இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் இந்திய மொழிகளுக்கான, அதிலும் குறிப்பாகத் தமிழ், தெலுங்குக்கான துறைத் தலைவராக இருக்கும்போது ஜி.யு. போப் அவர்களுக்கும், உ.வே. சாமிநாத ஐயர் அவர்களுக்கும் இடையே நட்பு உருவாகிறது. இத்தனைக்கும் உ.வே. சாமிநாத ஐயரை விட 35 ஆண்டுகள் வயதில் மூத்தவர் ஜி.யு. போப். உ.வே.சா எழுதிய கடிதங்களும், அவருக்கு வந்த கடிதங்களும் தொகுக்கப்பட்டுத் தனி நூலாக வந்துள்ளது. தமிழ் இணைய நூலகத்தில் (Tamil Digital Library) இலவசமாகவே அதை நீங்கள் வாசிக்கலாம். அதில் ஜி.யு. போப் அவர்கள் உ.வே.சா.விற்கு எழுதிய முதல் கடிதத்தில் “மதிப்பிற்குரிய ஐயா” என்று தொடங்குகிறார். மூன்றாவது கடிதத்திலேயே “என் அன்பிற்கினிய நண்பா” என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் இருவருக்குள்ளான உறவு மிகவும் வலுப்படுகிறது. ஜி.யு. போப் லண்டனில் இருந்து தன்னுடைய புகைப்படத்தை அவருக்கு அனுப்புகிறார். “என் புகைப்படம் அனுப்பினேனே உங்களுக்குக் கிடைத்ததா?” என்று கேட்கிறார். இருவரும் கடிதங்களில் அன்பைப் பரிமாறிக் கொள்கிறார்கள். முழுக்க முழுக்கத் தமிழ் சார்ந்த எண்ணற்ற விஷயங்கள் அந்தக் கடிதங்களில் உரையாடப்படுகின்றன.

அதில் ஒரு கடிதத்தில், “அருமையும் பெருமையும் உடைய நம் தமிழ் மொழிக்கு, ஒரு முறையான தொல்காப்பிய ஆய்வுப் பதிப்பை உருவாக்க வேண்டும்” என்று உ.வே. சாமிநாத ஐயருக்கு ஜி.யு. போப் ஒரு கோரிக்கை வைக்கிறார். அடுத்த கடிதத்தில், “உலகத் தாய்மொழிகளின் வரலாற்றில் நம்முடைய தமிழ் மொழிக்குத் தகுதி வாய்ந்த ஒரு இடத்தை உருவாக்குவதற்கு நான் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்” என்று எழுதுகிறார் ஜி.யு. போப். இதைச் சொல்லக்கூடிய ஜி.யு. போப் கனடாவில் பிறந்தவர், ஆக்ஸ்போர்டில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் எந்தத் தமிழச்சியின் முலைப்பாலும் குடித்து வளரவில்லை. ஆனால் நிச்சயம் ஜி.யு. போப் மறைந்த அன்று இரவு அந்தக் கல்லறையில், தமிழ்த்தாய் விழுந்து புரண்டு, அழுதிருப்பார் என்று நான் நம்புகிறேன்.

images-1.jpg?resize=201%2C250&ssl=1

ஜி.யு.போப்

அவர் இன்னோர் கடிதத்தில், “திருவாசகத்தில் 28 இடத்தில் தளை தட்டுகிறது” என்கிறார். மற்றொரு கடிதத்தில், “குறள் வெண்பா என்கின்ற இந்த இரண்டடி வெண்பா வடிவத்தை உருவாக்கியது வள்ளுவர்தான். வள்ளுவருடைய காலத்திற்கு முன்பு யாருமே அதைச் செய்திருக்க வாய்ப்பில்லை. இப்போது சந்தையில் கிடைக்கிற இந்த இரண்டடி வெண்பாக்கள் எல்லாமே போலி. ஏனென்றால், திருக்குறளின் வைர வரிகளுக்கு இந்த போலி வரிகளை இணை வைக்கவே முடியாது” என்று சொல்கிறார். வைணவ இலக்கியங்களைப் படித்துவிட்டு “திருவாய்மொழியை வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு அது ஒரு பெருங்கடலைப் போன்றிருக்கிறது” என்று தன்னுடைய பிரமிப்பைச் சொல்கிறார்.

இந்தக் கடிதங்களைப் பார்க்கும்போது மிக நெகிழ்ச்சியான ஒரு விஷயம் என்னவென்றால், 85 வயதில் ஜி.யு. போப் இந்த மொழி சார்ந்து கொண்டிருந்த கனவுகள் இருக்கிறதே, ஒவ்வொரு கடிதத்திலும் அவருடைய கனவுகள் அனைத்தும் இமாலயப் பணிகள். அவர் பழந்தமிழ் இலக்கியத்துக்கான ஒரு அகரவரிசையை உருவாக்க வேண்டும், அத்தனையும் ஆக்ஸ்போர்டில் சேகரிக்க வேண்டும், அத்தனையும் மீண்டும் மறுபதிப்பு செய்ய வேண்டும், அத்தனையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று அவர் தன்னுடைய ஒவ்வொரு கனவையும் சொல்கிறார். கண்ணில் நீர் வராமல் அந்தக் கடிதங்களைப் படிக்க முடியாது.

ஆனால், மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு ஆளுநர், மரியாதைக்குரிய ஆர்.என். ரவி என்ன சொல்கிறார்? கால்டுவெல்லும், ஜி.யு. போப்பும் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட்டவர்கள். பள்ளிப் படிப்பைத் தாண்டாத அறிவிலிகளாம், அரைகுறைகளாம். மதம் மாற்றுகிற ஒரு நோக்கம் மட்டும்தான் அவர்களுக்கு இருந்தது என்கிறார். இதற்கெல்லாம் மேலே சென்று, திருக்குறளை ஜி.யு. போப் ஆன்மீக நீக்கம் செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறார். ஆனால் “நம் தாய்மொழி” என்று ஜி.யு. போப் எழுதுகிறார். ஒவ்வொன்றிலும் வைர வரிகள் என்கிறார், கம்பனைக் கொண்டாடுகிறார், திருவாசகத்தை மொழிபெயர்க்கிறார், திருக்குறளை மொழிபெயர்க்கிறார். இன்று உலக அறிஞர்களால் திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவதற்கு ஒரே காரணம் ஜி.யு. போப்.

சரி, அவரைப் பள்ளிப் படிப்பைக் கைவிட்டவர் என்று சொல்லக்கூடிய ஆளுநர் மாளிகை எப்படி இருக்கிறது என்று நாம் பார்க்க வேண்டும் அல்லவா? ஆளுநர் மாளிகையில் நடந்த, மருத்துவர்களுக்குப் பரிசளிக்கப்பட்ட கேடயத்தில் போலியான திருக்குறள் பதிப்பிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (ChatGPT) கொடுத்த, அதுவரை இல்லாத ஒரு திருக்குறளைப் பதிப்பித்துக் கையில் நினைவுப் பரிசாகக் கொடுக்கிறார்கள். இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், மற்றொரு அறிஞர், ‘எஸ்.டி.சாமிக்கண்ணு’. அவர் வானியல் சாஸ்திரத்தினுடைய அடிப்படையில், ஜோதிட நூல்களினுடைய அடிப்படையில் தமிழ் இலக்கியங்களின் காலங்களைக் கணிப்பு செய்தவர். நம்மிடம் இருக்கக்கூடிய எல்லா கல்வெட்டுகளையும் படித்து, இந்தக் கல்வெட்டில் இருக்கக்கூடிய செய்திகள் நடந்ததாகச் சொல்லப்பட்ட ஆண்டுகளை மிக மிகத் துல்லியமாக வகுத்துக் கொடுத்தவர். ஆங்கில அரசால் ‘ராவ் பகதூர்’ பட்டமும், ‘திவான் பகதூர்’ பட்டமும் பெற்றவர். தமிழ்நாடு சட்டப்பேரவையினுடைய செயலராக இருந்தவர். அவருடைய ஆய்வுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விவாதம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், “இந்த எஸ்.டி. சாமிக்கண்ணு, பஞ்சாங்கத்தைத் தொகுக்கத்தான் லாயக்கு” என்று விமர்சிக்கிறார் தீரர் சத்தியமூர்த்தி. அதாவது ஆக்ஸ்போர்டு அவரைப் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, உள்ளூரில் இருக்கக்கூடிய தலைவர்கள் அவரை அவ்வளவு இழிவாக நடத்தினார்கள்.

image-15.png?resize=191%2C263&ssl=1

அரசன் சண்முகனார்

‘வ.உ.சிதம்பரம் பிள்ளை’ மற்றும் ‘நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்’ பற்றி நாம் நன்று அறிவோம். அவர்கள் சிறைப்பட்டிருந்தபோது, சிறையில் அவர்களுக்கான சரியான உணவுக்காக தமிழ்நாட்டுப் புரவலர்கள் அவர்களுக்கு அனுப்பிய அந்தப் பணத்தைக் கொண்டு காகிதமும், புத்தகமும், பேனாவும் வாங்கி, சிறையில் பட்டினி கிடந்து இலக்கியங்கள் படைத்தவர்கள். திருக்குறள் நாமக்கல்லாருடைய உரை சிறைச்சாலையில் எழுதப்பட்டது.

நம்முடைய தமிழ்நாட்டில் உருவான மூன்று அறிவு இயக்கங்களில் ஒன்று தனித்தமிழ் இயக்கம், இன்னொன்று திராவிட இயக்கம், மூன்றாவது தலித் சிந்தனை இயக்கம். இந்த திராவிட இயக்கத்திற்கும் தலித் சிந்தனை இயக்கத்திற்கும் இன்று வலுவான அரசியல் பின்புலம் இருக்கிற காரணத்தால், அதற்குப் பங்களிப்பாற்றிய அறிஞர்கள் அவர்களுக்கு உரிய கௌரவத்தையும் அடையாளத்தையும் பெறுகிறார்கள். ஆனால் இந்த 19-ஆம் நூற்றாண்டு, 20-ஆம் நூற்றாண்டு தமிழ் அறிஞர்கள் ஒரு சாபக்கேடான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அதற்கு முந்தைய தமிழ் அறிஞர்களை ஆதரிப்பதற்கு மன்னர்கள் இருந்தார்கள், நிலவுடைமைச் சமூகம் இருந்தது. ஆனால், இவர்கள் முழுக்க முழுக்கக் கைக்காசைப் போட்டு ஆய்வு செய்ய வேண்டும், அல்லது மடங்களினுடைய உதவி தேவை. அப்படி இல்லையென்றால் கல்வி நிறுவனங்களுடைய உதவி வேண்டும். அன்றைய சூழல் அப்படித்தான் இருந்தது.

ஆகவே, தமிழுக்கு அரும்பணியாற்றிய 19-ஆம் நூற்றாண்டு, 20-ஆம் நூற்றாண்டு தமிழ் அறிஞர்களில் 99 சதவிகிதம் பேர் ரத்தம் கக்கிச் செத்திருக்கிறார்கள். வாழ்ந்தபோது அவர்களுக்கு எந்த மரியாதையும் கிடையாது, எந்த அங்கீகாரமும் கிடையாது. வாழ்ந்து மறைந்த பிறகும் அவர்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடையாது.

ஓர் ஆய்வுக்காக ‘அ.கா. பெருமாள்’ ஐயா அவர்கள் தோவாளைக்குப் பக்கத்தில் இருக்கிற பீமநகரி என்கிற ஊருக்குச் செல்கிறார். அங்கே ஒரு முப்பது வீடுகளே உள்ள சின்ன கிராமம் இருக்கிறது என்பதை கண்டறிகிறார். அந்த ஊர், நாடகக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய ‘ஆண்டி சுப்பிரமணியம்’, மகா வித்வான் ‘கே.என். சிவராஜப் பிள்ளை’, பண்டிதர் ‘சண்முகம் பிள்ளை’ ஆகிய மூன்று தமிழ் அறிஞர்கள் அந்த முப்பது வீடுகளிலிருந்து உருவாகி வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது தோவாளை சென்றபோது பார்க்கிறேன், அந்த பீமநகரியில் எல்லாத் திசையிலும், ‘ஒரு சென்ட் நிலம் விலை  இவ்வளவுதான்’ என்று வீட்டுமனை விற்பனைப் பலகைகள் இருக்கின்றன.  அந்த ஊர் முழுக்க அலைந்து திரிந்தாலும், மூன்று மகத்தான தமிழ் அறிஞர்கள் வாழ்ந்த ஊர் என்பதற்கான எந்த ஒரு சிறிய அடையாளமும் அங்கே கிடையாது.

%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%A9%E0

கே.என்.சிவராஜ பிள்ளை

‘வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார்’, தென்காசியில் பிறந்தவர், கால்நடை மருத்துவர். அவரை ஆங்கில அரசாங்கம் வெளிநாட்டுக்கு அனுப்பி கல்வி பயில வைத்தார்கள். கால்நடை மருத்துவம் குறித்து ஏராளமான நூல்கள் எழுதியிருக்கிறார். அவருக்கு ராவ் பகதூர் பட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவருடைய அகலிகை வெண்பா, அவருடைய கம்பராமாயண சாரம்… அதை, “அவருடைய கம்பராமாயண சாரத்தைப் படிக்காத யாருமே கம்பன் கழகத்தில் உரையாற்றியதில்லை” என்று வேடிக்கையாகக் கூடச் சொல்வார்கள், தமிழ்நாட்டு அறிஞர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்களாக இருந்தால் கண்டிப்பாக வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாருடைய புத்தகங்களை வாசித்திருப்பார்கள். மில்ட்டனைத் தமிழில் மொழிபெயர்த்தவர், கம்பனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். எண்ணற்ற நூல்கள் எழுதியிருக்கிறார். நான் இந்த மேடையில் குறிப்பிட்ட தமிழ் அறிஞர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் முப்பது நாற்பது புத்தகங்களை எழுதியவர்கள்.

தொண்ணூறு வயது வரை பாளையங்கோட்டையில் வாழ்ந்தவர். இந்த நகரத்தின் வளர்ச்சிக்குப் பல விதங்களில் பங்களித்தவர். பல்வேறு அமைப்புகளின் வழியே ஈடுபட்டிருக்கிறார். நம் ஊரில் எங்கேயாவது இந்த வெள்ளக்கால் முதலியாருக்கு ஒரு பெயர் இருக்குமா? நம் ஊர் நூலகத்தில் இந்த வெள்ளக்கால் முதலியாருடைய ஒரு படம் வைக்கப்பட்டிருக்குமா?

மற்றொன்று, என்னுடைய ஊர் சாத்தான்குளம். ‘சாத்தான்குளம் அருணாசலக் கவிராயர்’ என்று அழைக்கப்பட்ட அ. ராகவன். சாத்தான்குளத்தில் பிறந்தவர், பாளையங்கோட்டையில் வளர்ந்தவர். தன் வாழ்வின் கடைசி மூச்சு வரை தமிழ் பேசிக்கொண்டிருந்தவர். ஒரு மேடையில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு வந்து மரணமடைந்தவர். ஆதிச்சநல்லூரைப் பற்றியும், பொருநை நாகரிகத்தைப் பற்றியும் புத்தகம் எழுதியிருக்கிறார். ‘கோநகர் கொற்கை’, ‘தமிழ்நாட்டுத் திருவிளக்குகள்’, ‘தமிழர் பண்பாட்டில் தாமரை’, தமிழர்களுடைய ஆடைகள், தமிழர்களுடைய வாழ்க்கை முறை பற்றி எண்ணற்ற பண்பாட்டு நூல்களை எழுதியவர். எங்கள் ஊரில் அவருக்கு ஒரு பெயர்ப்பலகை கூட கிடையாது. அவர் வாழ்ந்து மறைந்த இந்தப் பாளையங்கோட்டையிலும் ஒரு பெயர்ப்பலகை கிடையாது. அவருடைய புகைப்படத்தைக்கூட இன்றைக்கு நீங்கள் எங்கேயும் பார்க்க முடியாது.

இதில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில், புதுமைப்பித்தன் வாழ்ந்த தெருவிற்கு, அவருடைய பெயர் வைப்பதற்கே நமக்கு அறுபத்தெட்டு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அவர் வாழ்ந்த வீதிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை எழுப்பப்பட்டு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் அங்கே ‘புதுமைப்பித்தன் தெரு’ பெயர் வைக்கப்படுகிறது.

1900-இல் ‘பரிதிமாற் கலைஞர்’, நச்சினார்க்கினியருக்கு மதுரையிலே ஒரு வெண்கலச் சிலை வைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை வைக்கிறார். நூற்றி இருபத்தாறு ஆண்டுகள் ஆகிவிட்டன நண்பர்களே, இன்னமும் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இங்கே திருநெல்வேலி மாநகராட்சியில் புதுமைப்பித்தனுக்குச் சிலை வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி எவ்வளவு ஆண்டுகள் ஆயிற்று?

இது எல்லாவற்றையும் அரசுதான் செய்ய வேண்டுமா? ஒரு ஊரில் எத்தனை அரிமா சங்கங்கள் உள்ளது? ஒவ்வொரு ஊரிலும் எத்தனை ரோட்டரி சங்கங்கள் உள்ளது? ஒவ்வொரு ஊரிலும் எத்தனை தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன? ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு இலக்கிய அமைப்புகள் இருக்கின்றன? அவர்கள் நினைத்தால் அந்த ஊருடைய எல்லையில் ஒரு பலகை வைக்க முடியாதா?சமீபத்தில் நெல்லைக்கு வரும்போது காருக்குறிச்சி வழியாக வந்தேன். அப்போது, என் மகளிடம், “காருகுறிச்சி அருணாசலம் என்கின்ற ஒரு மேதை இருந்தார். திருவாவடுதுறை ‘ராஜரத்தினம் பிள்ளை’ திருநெல்வேலிக்குக் கச்சேரி செய்ய வரும்போது, ஒத்து ஊதுவதற்கு ஆள் இல்லாமல் காருகுறிச்சியைக் கொண்டு வந்து விட்டார்கள். இருபத்திரண்டு வருடம் அந்த ஆசிரியரைப் பின்தொடர்ந்தார். உலகம் போற்றுகின்ற ஒப்பற்ற மாமேதையான காருக்குறிச்சியின் ஊரை நாம் தாண்டிப் போகிறோம்” என்று சொன்னேன். அந்த ஊர் எல்லையில் ஓர் ஐநூறு ரூபாய் செலவில் ஒரு பலகை வைக்க முடியாதா? நம்ம ஊர் நூலகங்களில் இந்த அறிஞர்களுக்கு, அவர்கள் பிறந்த ஊரில் இருக்கக்கூடிய நூலகங்களில் ஒரு புகைப்படத்தை மாட்டி வைக்க முடியாதா நம்மால்? அந்த அறிஞர்கள் பெயரில் ஒரு சிறிய போட்டியை நடத்தி இந்தப் பிள்ளைகளுக்கு நான்கு திருக்குறள் புத்தகம் கூட நம்மால் வாங்கிக் கொடுக்க முடியாதா? இதை எது செய்யவிடாமல் தடுக்கிறது?

புத்தகக் கண்காட்சிக்கு ஈரோடு மகேஷ் வந்தால் நூறு பேர் அவரோடு செல்ஃபி எடுப்பார்கள். அது தவறு கிடையாது. ஏனென்றால் ஒரு பிரபலத்தைப் பார்த்தால் அவரோடு போய்ப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று பொதுச்சமூகம் விரும்புவது இயல்பு. ஆனால், 80 நூல்களுக்கு மேல் எழுதிய அ.கா. பெருமாள் அதே சபைக்கு வந்தால், முப்பது நூல்களுக்கு மேல் எழுதிய, ‘ஆலயக் கலையின் ரகசியங்கள்’ அனைத்தையும் தமிழ்ச்சமூகத்துக்கு வகுப்பெடுத்த ‘குடவாயில் பாலசுப்பிரமணியம்’ அதே அவைக்கு வந்தால், முப்பது நூல்களுக்கு மேல் எழுதிய பண்பாட்டு ஆய்வாளர் ‘பக்தவத்சல பாரதி’ வந்தால், தமிழ் இலக்கியத்தினுடைய இருள் மண்டிய பக்கங்களில் தன்னுடைய ஆய்வுகளால் ஒளிப்பாய்ச்சிய ‘ஆ.இரா. வேங்கடாசலபதி’ இந்தச் சபைக்கு வந்தால், ஒருவருக்குக்கூட அவர்களை யாரென்றே நமக்குத் தெரியாது. அவர்களைப் பார்த்துப் புன்னகைப்பதுகூட இல்லை. ‘ஐயா நலமாக இருக்கீங்களா?’ என்று நாம் கேட்கக்கூட மாட்டோம்.

ஏன் இப்படி நிகழ்கிறது என்றால், நம்முடைய அறியாமை. நமக்கு அவர்களைத் தெரியாது. நாம் இங்கே வந்தால் கதைப் புத்தகம் வாங்குவோம், கவிதைப் புத்தகம் வாங்குவோம். புனைவிலக்கிய எழுத்தாளர்களுக்கு, குறைந்தபட்சம் அவர்களின் வாசகர்களாவது கொஞ்சம் நன்றியோடு இருப்பார்கள். ஆனால் இந்தத் தமிழ் அறிஞர்களுக்கு? அவர்கள் யாரென்று நமக்குத் தெரியாது, அவர்கள் செய்த ஆய்வு நூல்களை நாம் வாங்க மாட்டோம், அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை நாம் வாங்க மாட்டோம், அவர்களைப் பற்றி நமக்குத் தெரியவும் தெரியாது. இது ஒரு காரணம்தான். ஆனால் இது முழுக் காரணம் அல்ல. இன்னொரு முக்கியமான காரணம் இருக்கிறது.

அது என்னவென்றால், அந்த அமைப்பிடம் போய் “இவர் நம் ஊரில் பிறந்து வளர்ந்தவர், நம் ஊருக்குப் பெருமை சேர்த்தவர், தமிழ்ப் பண்பாட்டில் தமிழ் என்னும் தேரின் வடம் பிடித்து இழுத்தவர், ரத்தம் கக்கிச் செத்தவர், இவருக்கு நம் ஊரில் ஒரு பலகை வைக்க வேண்டும், அல்லது இவருடைய படத்தை நம் ஊர் நூலகத்தில் திறக்க வேண்டும்” என்று சொன்னீர்களென்றால், “அவர் என்ன ஆளு?” என்ற கேள்விதான் முதலில் எழும். அவர் ஜாதி தெரியாமல் அவருக்கு அங்கீகாரம் கிடைக்காது. அது ஓர் உண்மையான காரணம், இல்லையா?

முன்னோர்கள் மரணிக்கையில் அவர்களுடைய வாழ்க்கையின் செய்தியாக ஒன்றைக் கேட்போம் அல்லவா? அதுபோல், திரு.வி.க மரணப் படுக்கையில் இருக்கும்போது அவரிடம், “ஐயா! நம் மொழிக்கு, நம் நாட்டுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கி.ஆ.பெ. விசுவநாதம் கேட்கிறார். அதற்கு கி.ஆ.பெ.வின் கையைப் பிடித்து, தன்னுடைய முகத்துக்கு அருகில் கொண்டு வந்து, தனது இறுதி மூச்சின் எஞ்சிய ஆற்றலைத் திரட்டி திரு.வி.க சொல்கிறார்: 

“நாடு இருக்கிறது, மக்கள் இருக்கிறார்கள், மொழி இருக்கிறது, நீங்கள் இருக்கிறீர்கள், பார்த்துக்கொள்வீர்கள்”.

இதுதான் திரு.வி.க.வுடைய இறுதி வாசகம். 

“நாம் பார்த்துக்கொண்டோமா?”

https://akazhonline.com/?p=11664

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் மூலவர் கற்பகிரகத்துக்குள்தான் இருப்பார் வெளியே வருவதில்லை . .......உற்சவ மூர்த்திகள்தான் உலா வருவார்கள் .......!

அப்படியே எமக்கு முன் எவ்வளவு அறிஞர்கள் வாழ்ந்து மறைந்து விட்டார்கள்......... நீங்கள் குறிப்பிட்ட இந்த எட்டு , பத்து அறிஞர்களைப் பற்றிய செய்திகளே இதயத்தை என்னவோ செய்கிறது என்றால் ........ ஏனையவர்களிடம் நாம் அறிந்து கொள்வதற்கு எவ்வளவு விடயங்கள் இருந்திருக்கும் . ........ தொகுத்திருந்தால் எல்லாமே ஒரு பொக்கிஷம் அல்லவா .......ம் . ... நெஞ்சம் கனக்கின்றது .........!

மறவோம் என்பதில் மறந்ததுதான் அதிகம் ..........நன்றி ரசோதரன் . .......!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

நாடு இருக்கிறது, மக்கள் இருக்கிறார்கள், மொழி இருக்கிறது, நீங்கள் இருக்கிறீர்கள், பார்த்துக்கொள்வீர்கள்”.

இதுதான் திரு.வி.க.வுடைய இறுதி வாசகம். 

நாங்கள் இருக்கிறோம். பணம் பார்க்கிறோம். புகழ் சேர்க்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் எங்களால் தான் வாழ்கிறது என்றும் சொல்லிக்கொள்கிறோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.