Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோஜர் ஓட்டிய விமானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரோஜர் ஓட்டிய விமானம்!

50 ஆண்டுகள்  தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கும் Gen-X நண்பர்களுக்காக, ஒரு நனவிடை தோய்தல் பதிவு!

தற்போது இளம் தலைமுறை ஒரு இசையைக் கேட்க வேண்டுமானால், எத்தனையோ வழிகள்: போனில் இருந்து நேராக செவி பன்னிக்கு, அல்லது புளூ ரூத் ஒலி பெருக்கிக்கு, காரின் ஸ்பீக்கர்களுக்கு என்று ஏராளமான வழிகள். இதெல்லாம், வராத 80 களில் எங்களுக்கு இசை என்றால் வானொலிப் பெட்டி தான். நான் நினைக்கிறேன் யாழ்ப்பாணத்தில் 1986 இல் மின்சாரம் முற்றாக நின்று போனது, பின்னர் 1987 - 89 இல் இந்திய இராணுவம் வந்த பின்னர் பகுதி நேரமாக வந்த மின்சாரம், மீண்டும் 91 இல் இல்லாமல் போய் விட தொலைக்காட்சிப் பெட்டிகள் வீடுகளில் தூசி படிந்து தூங்க ஆரம்பித்தன. மின்கலத்தில் இயங்கக் கூடியவை என்பதால், வானொலிப் பெட்டிகள் வீடுகளில் முக்கியமான ஒலியெழுப்பும் உபகரணங்களாக இடம் பிடித்தன

large.Oldtuberadio.jpg

ஒரு பழைய கால பக்கிஸ் பெட்டி றேடியோ.

இந்த வானொலிப் பெட்டிகளில் தான் எத்தனை வகைகள்? சில வீடுகளில், பாட்டன் காலத்து சுவர் மணிக்கூடு போலவே பெரிய பெட்டி ரேடியோக்களும் பாவனையில் இருந்தன. வானொலிப் பெட்டி கண்டு பிடிக்கப் பட்ட காலத்தில் உருவாக்கப் பட்டவையான வால்வு ரேடியோக்கள் (ரியூப் ரேடியோ என்றும் அழைப்பார்கள்) தான் இந்த பெரிய பெட்டி ரேடியோக்கள். இவை வால்வு (Valve) ரேடியோக்கள் என்று அழைக்கப் படக் காரணம், இந்த ரேடியோவின் முக்கியமான பாகம் கண்ணாடியினால் ஆன ஒரு குழாய் தான். இந்தக் குழாய் ஒரு திசையில் மட்டும் இலத்திரன்களைப் பாய அனுமதிக்கும், வெற்றிடம் நிரம்பிய குழாய் என்பதால் இதனை வால்வு என்றும் அழைப்பார்கள்இந்த வெற்றிடம் நிரம்பிய கண்ணாடிக் குழாயின் வழியே பாயும் மின்சாரத்தைக் கூட்டிக் குறைப்பதன் மூலம், வானொலிப் பெட்டி சிறைப்பிடிக்கும் சில ஆயிரம் வானலைகளில் (Radio waves) இருந்து சில அலைகளை மட்டும் ஒலியாக மாற்றும் விந்தை நிகழ்கிறது. வானலைகள் அடிப்படையில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் மின்காந்த அலைகள் தான். நாம் கண்ணால் காணும் வர்ணங்களைத் தாங்கி வரும் ஒளிக்கும், வானொலி அலைகளுக்கும் அவற்றின் அலை நீளம் (wave length), அதிர்வெண் (frequency), அவை தாங்கி வரும் சக்தி (energy) என்பவற்றில் தான் வேறு பாடுகள். குறைந்த சக்தி, நீண்ட அலை நீளம், குறைந்த அதிர்வெண் என்பன காரணமாக, வானொலி அலைகள் கட்டிடடங்கள் போன்ற தடைகளைத் தாண்டிப் பயணிக்க, ஒளி அலைகள் தெறித்தும், உறிஞ்சப் பட்டும் சிறு தூரத்திலேயே பயணத்தை முடித்துக் கொள்கின்றன. இப்படியாக தடைகளைத் தாண்டி வரும் வானொலி அலைகளை வாங்கிக் கொள்ளும் (receiver) வேலையைத் தான் வானொலிப் பெட்டி செய்கிறது.

சில சமயங்களில், வாழ்க்கையில் எதையாவது விட்டு விலகி ஓடும் போது தான் நாம் நல்ல இடத்திற்குச் சென்று சேர்கிறோம். இதைப் போன்ற ஒரு நிலை தான் என்னுடைய பதின்ம வயதில் என்னை வானொலித் தொழில் நுட்பம்  பற்றிக் கற்க வைத்தது. அந்தக் காலத்தில் தொழிற்கல்வி என்று ஒரு பாடம் 6 ஆம் வகுப்பிற்குப் பின்னர் எல்லோரும் எடுக்க வேண்டும். இரும்பு வேலை, மர (தச்சு) வேலை, விவசாயம், கணக்கியல் என்பவற்றோடு, வானொலி திருத்தவேலை (Radio mechanics) என்ற தெரிவும் எங்கள் கல்லூரியில் இருந்தது. தச்சு வேலை, இரும்பு வேலை, தானே வளரும் வாழை மரத்திற்கு வாய்க்கால் கட்டும் விவசாய வேலை என்பன குறித்து ஒரு ஆர்வம் வராமையாலும், பல்வேறு காரணங்களால் அக்கவுன்ரிங்கையும் தள்ளி விட்டு, வானொலி திருத்தும் வேலையில் நான் சரணடைந்தேன். “கரன்ட் இல்லாத ஊரில் வானொலித் தொழில் நுட்பம் கற்று என்ன செய்வது?” என்ற யோசனையால் போலும் வகுப்பும் ஒரு ஐந்து பேர்களுடன் சிறிதாகவே இருந்தது. றேடியோ, ரிவி, டெக் எல்லாம் திருத்தப் பழகலாம் என்று நாம் கனவில் இருக்க லிங்கன் மாஸ்ரர் (பாசையூரைச் சேர்ந்த ஒரு மாவீரரின் தந்தையார் இவர்) "உந்த உடைஞ்சதைத் திருத்துற வேலையெல்லாம் சரி வராது. நீங்கள் எல்லாம் றேடியோ தயாரித்துக் காட்ட வேணும், அது வேலை செய்ய வேணும்" என்று தன் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தார்.

எப்படி றேடியோ தயாரிப்பது? தற்காலத்தில் அமெச்சூர் வானொலி கிளப்புகள் என அழைக்கப் படும் ஆர்வலர் அமைப்புகள் ஏராளம் மேற்கு நாடுகளில் இருக்கின்றன. அவர்களுடைய இணையத் தளங்கள், சமூக ஊடகக் கணக்குகளில் போய்ப் பார்த்தீர்களானால் வானொலி தயாரிப்பது மிகவும் இலகு என்று புரிந்து கொள்வீர்கள். இதற்குரிய உதிரிப் பாகங்களைக் கூட இலகுவாக இணையச் சந்தைகளில் வாங்கி விடலாம். ஆனால், 80 களின் இலங்கையில், அதுவும் பொருளாதாரத் தடை காரணமாக மின்கலங்கள் கூட கிடைக்காத வடக்கில் வானொலி தயாரிப்பது சவாலான முயற்சி தான். ஆனால் ஒரு வானொலியின் அமைப்பு அடிப்படையில் 3 பகுதிகள் தான்: வானலைகளை உள்வாங்கிக் கொள்ளும் உணரி (அன்ரெனா), உள்வாங்கிய வானலைகளை தரம் பிரித்து, தரம் பிரித்ததைப் பெருப்பிக்கும் பகுதி, அந்த பெருப்பித்த வானலையை ஒலியாக வெளிவிடும் ஒலிப்பான் (ஸ்பீக்கர்). (இதை விட, வானொலி இயங்குவதற்கான மின்சக்தியை மின்கலம் கொடுக்கும் அல்லது .சி மின்சாரத்தில் இருந்து டி.சி மின்சாரமாக மாற்றும் மின்மாற்றி (ட்ரான்ஸ்போமர்) அந்த வேலையைச் செய்யும்).   அன்ரெனா ஒரு பழைய செப்பு அல்லது அலுமினியக்  கம்பி தான். ஸ்பீக்கரை, யாராவது கைவிட்ட பழைய வானொலிப் பெட்டியில் இருந்து கழட்டி எடுத்துப் பாவிக்கலாம். எனவே, வானொலிப் பெட்டி செய்வதானால் வானலைகளை சுத்தம் செய்து, பெருப்பிக்கும் அதன் மையப் பகுதி தான் மிக முக்கியமான பகுதி.

large.Thevalveinaction.jpg

ரியூப் அல்லது வால்வு தான் பழைய றேடியோக்களின் உயிர்நாடி.

இந்த வானொலியின் உயிர் மையத்தை உருவாக்கும் முக்கியமான உதிரிப் பாகமாக 80 களில் ட்ரான்சிஸ்ரர் (transistor) இருந்தது. “ட்ரான்சிஸ்ரர் றேடியோ” என்ற சொல்லாடல் மூலம் தான் நாம் அனேகர் ட்ரான்சிஸ்ரர் பற்றி முதலில் அறிந்திருப்போம். ஆனால், இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த 1948 இல் மூன்று விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ட்ரான்சிஸ்ரர், அதன் பின்னர் நிகழ்ந்த சகல விதமான இலத்திரனியல் சாதனைகளுக்குமான மூலைக்கல் என்று சொல்லலாம். குறை கடத்திகள் (semi-conductors) என்று அழைக்கப் படும் "பகுதியளவில்” மின்சாரத்தைக் கடத்தும் திண்மப் பொருட்கள் இருக்கின்றன. இவை பற்றிய ஆராய்ச்சியின் முக்கியமான விளைவாக ட்ரான்சிஸ்ரர் உருவானது. அது வரை றேடியோவின் முக்கிய பாகமாக இருந்த வால்வு செய்து வந்த வேலையை ட்ரான்சிஸ்ரர்க்ள் எடுத்துக் கொண்டன. ஒரு ட்ரான்சிஸ்ரர் என்பது அடிப்படையில் ஒரு சுவிட்ச் தான். எந்த விதமான அசையும் பாகங்களும் இல்லாமல், தன்னுள்ளே இருக்கும் அணுக்களின் முனைவுத் தன்மையை (polarity) மாற்றுவது மூலம், செக்கனுக்கு ஆயிரம்,பல்லாயிரம், இலட்சம் தடவைகள் “ON-OFF” ஆகும் ஒரு சுவிட்ச் தான் ட்ரான்சிஸ்ரர்.  ட்ரான்சிஸ்ரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, வானொலிப் பெட்டியின் தரமும் அதிகரிக்கும். அந்தக் காலப்பகுதியில் 8 ட்ரான்சிஸ்ரர் றேடியோ தயாரிப்பது தான் உச்ச இலக்காக இருந்தது. ஆனால், 4 அல்லது 5 ட்ரான்சிஸ்ரர்களோடு, ஒரு சாதாரண றேடியோவைத் தயாரிக்கலாம். இத்தகைய சாதாரண  றேடியோவைத் தான் நாம் வகுப்பில் படிப் படியாகத் தயாரித்தோம்.

ட்ரான்சிஸ்ரர், செப்புக் கம்பிகள், இன்ன பிற லொட்டு லொடுக்குச் சாமான்களையெல்லாம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்திருந்த ஓரிரு மின்சாரப் பொருட்கள் விற்கும் கடைகளில் வாங்கக் கூடியதாக இருந்தது. ஆனால், வாங்கிய பொருட்களை ஈயம் மூலம் ஒட்டி ஒரு வானொலிப் பெட்டியின் சுற்றுப் போல செய்வதற்கு ஒட்டுக் கருவி தேவை. மின்சாரத்தில் இயங்கும் சூடாக்கி ஒட்டும் கருவி (soldering iron) மின்சாரம் இல்லாத ஊரில் பயனற்றது. எனவே, சிரட்டையை எரித்து அதன் வெப்பத்தில் இயங்கும் ஒட்டும் கருவி தான் எங்கள் வானொலி தயாரிப்பிற்கு உதவியாக இருந்தது (சிரட்டை அயன் பெட்டி போல). தற்கால இலத்திரனியல் உபகரணங்களைக் கழட்டிப் பிரித்துப் பார்த்தீர்களானால் printed circuit board (PCB) எனப்படும் நேர்த்தியாக அமைக்கப் பட்ட பச்சை நிற அட்டைகள் இருப்பதைக் காணலாம். இதே போன்ற சுற்று அட்டைகளை போமிகா ஷீற் (Formica laminate) எனப்படும் தளவாடங்களில் பயன்படுத்தும் வழு வழுப்பான பூச்சுப் பலகையில் துளைகள் இட்டு, அதனூடாக ட்ரான்சிஸ்ரர், ஏனைய பாகங்கள், செப்புக் கம்பி என்பவற்றை இணைத்து, ஈயத்தை உருக்கி ஊற்றி எங்கள் அமெச்சூர் றேடியோக்களை நாம் தயாரித்தோம். கையுறை எதுவும் அணியாமல், ஈயத்தையும் அழைந்து, அது உருகும் போது உருவாகும் ஈய ஆவியையும் கொஞ்சம் சுவாசித்து  தாராளமாக  ஈயத்தில் புரண்டெழும்பிய பின்னர் வெளிநாடுகளுக்கு வந்த போது தான், ஈயம் (lead) எவ்வளவு ஆரோக்கியக் கேடானது என்று புரிந்து கொண்டோம்.

large.transistorradio.jpg

ட்ரான்சிஸ்ரரின் வருகை றேடியோக்களின் திறனை அதிகரித்து பருமனைக் குறைக்க உதவியது. சில ஆயிரம் - இலட்சம் ட்ரான்சிஸ்ரர்களும் ஏனைய உதிரிப் பாகங்களும் ஒருங்கே அமைந்த “ஒருங்கிணைந்த சுற்று-Integrated circuits (IC)” நவீன கால "சிப்-chip/microchip" களுக்கு முன்னோடி.

சரி, வானொலிப் பெட்டியைத் தயாரிக்கலாம், ஆனால் எந்த வானொலி நிலையத்தின் ஒலி பரப்பை இந்த அமெச்சூர் வானொலிப் பெட்டியில் கேட்க கேட்க முடியும்? பொதுவாக வானொலி ஒலிபரப்பு (broadcasters) நிலையங்கள் AM, FM எனப்படும் இரு வகையான அலைவரிசைகளில் ஒலி பரப்புவார்கள். இவற்றுள் AM (Amplitude Modulation) அலை வரிசை சக்தி வாய்ந்த, தொலை தூரம் செல்லக் கூடிய அலை வரிசை. இந்தியாவின் ஆகாஷவாணி (All India Radio-AIR) திருச்சிராப்பள்ளி (திருச்சி) ஒலி பரப்பு நிலையம் யாழ்ப்பாணத்திலிருந்து 200 கிலோ மீற்றர்கள் தொலைவில் இருந்தாலும், AM அலைவரிசை மூலம் வட இலங்கை வரை தன் நிகழ்ச்சிகளை பெருமளவு துல்லியமாக ஒலி பரப்பியது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் (SLBC) கொழும்பு நிலையமும் AM அலைவரிசைகளில் (மத்திய அலை வரிசை (MW), சிற்றலை வரிசை-SW) இலங்கை முழுவதும் ஒலி பரப்பியது. ஆனால், எங்கள் எளிமையான வானொலிப் பெட்டிகளால் இந்த AM அலைவரிசைகளைத் தெளிவாகத் தரம் பிரிக்க இயலாது. என் நினைவு இப்போது தெளிவாக இல்லை, ஆனால் பலாலி அல்லது மண்டைதீவில் அமைந்திருந்த உப நிலையம் (relay station) மூலம் இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத் தாபனத்தின் நிகழ்ச்சிகளை பண்பலை (FM-Frequency Modulation) வழியாக யாழ் நகரப் பகுதி நோக்கியும் ஒலி பரப்பினார்கள் என நினைக்கிறேன். குறுகிய தூரம் மட்டும் செல்லும் இந்தப் பண்பலை ஒலி பரப்பை, இரவு 8 மணிக்குப் பின்னர் எங்கள் அமெச்சூர் வானொலியில் மிக மெலிதாகக் கேட்கக் கூடியதாக இருந்தது. பலவீனமாக வந்து சேரும் வானலைகளைத் தெளிவாக்க Intermediate Frequency (IF) transformer என்ற இன்னொரு உதிரிப் பாகத்தைச் சேர்க்கலாமா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்த இடை வெளியில், அந்தப் பண்பலை ஒலி பரப்பும் நாட்டுச் சூழ் நிலை காரணமாக நின்று போனதுஇப்போது எங்கள் வகுப்பின் 5 பேர்களில் இருவர் முழுவதுமாகத் தயாரித்து முடித்திருந்த அமெச்சூர் வானொலிப் பெட்டிகளும், ஒரு சிறு பிள்ளை வேளாண்மை போல தூசி படிந்து மூலையில் முடங்கி விட்டது.

இந்தக் காலப் பகுதியில் ஊரின் நிலைமையும் சமாந்தரமாக மாறிக் கொண்டிருந்தது. இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தின் தரைக் கட்டுப் பாட்டை தமிழ் விடுதலைப் போராட்ட அமைப்புகளிடம் இழந்து விட்டதால், வான் தாக்குதல்கள் ஆரம்பித்தன. ஆரம்பகால வான் தாக்குதல்களை இத்தாலிய தயாரிப்பான சியா மார்செற்றி (SIAI-Marchetti) என்ற சிறிய ப்றொபெல்லர் விமானங்கள் தான் பத்தாயிரம் அடிகளுக்கு கீழான உயரத்தில் பறந்து நிகழ்த்தின. இந்த SIAI-Marchetti-SF260TP குண்டு வீச்சு விமானங்களை இத்தாலிய விமானிகள் தான் முதலில் ஓட்டினார்கள் என்று ஊரில் பேசிக் கொண்டார்கள்.

இந்த விமானங்கள் திடீரென வானில் தோன்றி (சோடியாகத் தான் வரும்) வட்டமடித்து, இலக்கை நோக்கித் தாழ்ந்து வந்து றொக்கற் தாக்குதலை நடத்தும். ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் விமானத்திற்கு இரண்டு குண்டுகளை வீசிய பின்னர் வவுனியா/அனுராதபுரம் நோக்கிப் பறந்து விடும். இந்த விமானங்கள் எங்கள் வான் பரப்பில் இருக்கும் போது, விமானிகளின் உரையாடலை தரையில் வீடுகளில் இருக்கும் வானொலிப் பெட்டிகளில் குறிப்பிட்ட ஒரு பண்பலை வரிசையில் கேட்கக் கூடியதாக இருக்கும் (பிற்காலத்தில் பதுங்கு குழிகள் வீடுகளில் உருவான போது அதற்குள் ஒரு றேடியோவைத் தூக்கிக் கொண்டு போய் மக்கள் பதுங்கும் பழக்கமும் உருவானது). தரமான ஒரு பனாசொனிக் வானொலிப் பெட்டியில் சில சமயங்களில் இந்த விமானிகளின் உரையாடல்களை செவி மடுத்த நினைவிருக்கிறது. நீளமாக வசனங்கள் எதுவும் அவர்கள் பேசுவதில்லை. இரைச்சல்..பின்னர் ஏதோ ஒரு சொல் மீண்டும் இரைச்சல் என்றவாறு இருக்கும். அடிக்கடி "றோஜர்" என்ற சொல் வந்து போகும். அந்தக் காலப் பகுதியில், எங்கள் வயது மட்டத்தினருக்கு "றோஜர்" என்று விமானிகள் சொல்வதன் அர்த்தம் புரிந்திருக்கவில்லை. எனவே, கற்பனா சக்தி கூடிய பள்ளித் தோழர்கள் சிலர் "இந்த விமானத்தை ஓட்டிய பைலற்றின் பெயர் றோஜரடா!" என்று ஒரு றொக்கற்றை ஏவி விட்டார்கள்.

"றோஜர் தற்-Roger that" என்பது "தகவல் கிடைத்தது-Received" என்பதன் சுருக்கிய சமிக்ஞை என்பது பின்னர் தான் தெரிய வந்தது. அது புரியும் வரை, எங்கள் மீது குண்டு வீசிய சியாமா செற்றியை ஓட்டிய எல்லா விமானிகளின் பெயரும் றோஜர் தான்

பட உதவிகள்:

வால்வு றேடியோவின் படம், ஒரு அமெச்சூர் வானொலி ஆர்வலரின் வலைப்பூவில் இருந்து நன்றியுடன் எடுக்கப் பட்டது.

ஏனைய படங்கள்: நன்றியுடன் pixabay தளத்தில் இருந்து எடுக்கப் பட்டன

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.