Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டிமுறை தொடர்பான ஒரு நூற்றாண்டு விவாதமும் அதிகாரப்பகிர்வு அலகாக மாகாணங்கள் வந்த கதையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டிமுறை தொடர்பான ஒரு நூற்றாண்டு விவாதமும் அதிகாரப்பகிர்வு அலகாக மாகாணங்கள் வந்த கதையும்

March 16, 2026

சமஷ்டிமுறை தொடர்பான ஒரு நூற்றாண்டு விவாதமும் அதிகாரப்பகிர்வு அலகாக மாகாணங்கள் வந்த கதையும் 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் அரசாங்கத் தூதுக் குழுவுக்கு தலைமை வகித்த பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அண்மையில் ‘இலங்கையின் சமாதான செயன்முறை; ஒரு உட்பக்க நோக்கு’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார். 

சமாதானச் செயன்முறையை அந்த நேரத்தில் அரசாங்கம் எந்தளவுக்கு நேர்மையுடன் முன்னெடுத்தது என்பதைப் பற்றி எங்களுக்கு தனியான அபிப்பிராயம் இருக்கிறது என்ற போதிலும், அரசாங்கத்தின் தலைமைப் பேச்சாளராக பேராசிரியர் பீரிஸ் பங்கேற்றவர் என்பதால் அவரது நூல் பரவலான கவனத்துக்கு உரியதாக இருக்கிறது. 

நூலின் முதல் அத்தியாயத்தின் முதற் பந்தியிலேயே அவர் இலங்கையில் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பிலான யோசனையின்  தோற்றுவாய் குறித்து தெரிவித்த கருத்து இன்று சகல தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சிகளும் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையின் அடிப்படையில் நிலையான தீர்வொன்று காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நிற்கும் பின்புலத்தில் சகல சமூகங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. 

தனது நூலின் ஊடாக  ஆராயப்படும் அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கம் மற்றும் சமஷ்டிமுறை என்ற  தொனிப்பொருட்கள் அவற்றின் தோற்றுவாயை இனத்துவத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளில் கொண்டிருக்கவில்லை என்று எழுதியிருக்கும் பேராசிரியர், இலங்கைக்கு பொருத்தமான ஒரு ஆட்சிமுறைக் கட்டமைப்பாக சமஷ்டிமுறை  என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு பின்புலத்திலேயே முன்மொழியப்பட்டது என்பதை நினைவூட்டுகிறார். 

தொடக்கத்தில் சமஷ்டி முறை யோசனை தமிழர்களின் அபிலாசைகளுடன் அல்ல, கண்டிச் சிங்களவர்களின் அபிலாசைகளுடனேயே தொடர்புபட்டதாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க இலங்கையில் சமஷ்டி ஆட்சிமுறைக்காக குரலெழுப்பி இந்த வருடத்துடன் சரியாக ஒரு நூற்றாண்டு நிறைவடையும் நிலையில்  பேராசிரியர் இதைக் குறிப்பிட்டிருப்பது தற்செயலானதாக இருந்தாலும் கூட, அதில் ஒரு பொருத்தப்பாடு இருக்கிறது. 

 கனடாவில் வாழும் மூத்த இலங்கைப் பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் ‘100 வருடங்களுக்கு முன்னர் பண்டா ரநாயக்க விடுத்த சமஷ்டி ஆட்சி முறைக்கான அறைகூவல்’ என்ற தலைப்பில் அண்மையில் ஒரு கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். 

தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி ஆட்சிமுறைக்காக குரலெழுப்புவதற்கு நீண்டகாலத்துக்கு முன்னதாகவே 1920 களின் முற்பகுதியில் இளம் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவும் அந்த தசாப்தத்தின் பிற்பகுதியில் டொனமூர் ஆணைக்குழுவின் முன்னிலையில் கண்டிச் சிங்களப் பிரதிநிதிகளும் சமஷ்டி முறைக்காக குரல் கொடுத்தனர் என்றும் வடக்கு — கிழக்கு மாகாணம் ஒன்று உட்பட மூன்று மாகாணங்களுடனான சமஷ்டி இலங்கை யோசனையை கண்டிச் சிங்களவர்கள் முன்வைத்தனர் என்றும்  அரசியலமைப்புச் சட்ட  நிபுணரான கலாநிதி றொஹான் எதிரிசிங்க ‘சமஷ்டி முறை; மாயைகளும் யதார்த்தங்களும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டியே ஜெயராஜ் தனது கட்டுரையை தொடங்கினார்.

“அந்த யுகத்தின் அரசியல் தலைவர்கள் மத்தியில் தலைசிறந்த அறிவுஜீவியான பண்டாரநாயக்க  ஒரு வகையான சமஷ்டிமுறை மாத்திரமே இலங்கையின் ஆட்சிமுறைப் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கமுடியும் என்று முன்கூட்டியே 1926 ஆம் ஆண்டளவில் வாதாடினார். 

“கரையோரச் சிங்களவர்களுக்கும் மலைநாட்டுச் சிங்களவர்களுக்குமாக இரு அலகுகளையும் தமிழர்களுக்காக வடக்கு — கிழக்கில் ஒரு அலகையும் கொண்ட ஒரு சமஷ்டி ஏற்பாட்டை 1927 ஆம் ஆண்டில் கண்டிச் சிங்களவர்கள் முன்மொழிந்தனர்.

“சிங்களவர்களினால் முன்மொழியப்பட்டபோது சமஷ்டிமுறையை இலங்கைத் தமிழர்கள் நிராகரித்தார்கள்.  தங்களுக்கு கிடைத்த அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் வடக்கு — கிழக்கு தமிழர்களுக்காக சமஷ்டிமுறையை வழங்குமாறு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கோரிக்கையை முன்வைத்திருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கக்கூடிய சகல சாத்தியப்பாடுகளும் அன்று இருந்தன.

“பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலத்தில் இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி முறையையோ அல்லது தனிநாட்டையோ கூட  கோரவில்லை. பதிலாக அந்தக் கோரிக்கைகளை தமிழ்த் தலைவர்கள் பிரிட்டிஷார் இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் மாத்திரமே முன்வைத்தனர்” என்று அவர் எழுதியிருந்தார்.

நூறு வருடங்களுக்கு முன்னர் ‘மோர்ணிங் லீடர்’ பத்திரிகைக்கு ஆறு கடிதங்களை எழுதிய பண்டாரநாயக்க இலங்கைக்கு சமஷ்டி ஆட்சிமுறையே பொருத்தமானது என்று தமிழர்களை நம்பவைப்பதற்கு ‘யாழ்ப்பாண விரிவுரையை’ நிகழ்த்த 1926 ஜூலை 26 ஆம் திகதி  யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். அன்றைய தினம் ‘எமது அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு சமஷ்டி முறையே’ என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் இனவேறுபாடுகளைக் கையாளுவதற்கும் பிராந்திய சுயாட்சியே சீரான வழி என்று வாதிட்டார்.

 சமஷ்டி முறைக்காக குரல்கொடுக்க தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு அவர் விடுத்த வேண்டுகோளை தமிழர்கள் நிராகரித்தார்கள். யாழ்ப்பாண மாணவர்  காங்கிரஸ் (பிறகு அது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது) சமஷ்டிமுறை யோசனையை எதிர்த்தது. 

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரகாசமான கல்வியைப் பெற்றதன் பின்னர் 1925 ஆம் ஆண்டில் நாடுதிரும்பிய பண்டாரநாயக்க இலங்கை தேசிய காங்கிரஸின் உறுப்பினராக இருந்த அதேவேளை, அரசியல் சுயாட்சி இலக்கை அடைவதற்காக முற்போக்கு தேசியக் கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சியின் யாப்பு பண்டாரநாயக்கவின் மனதில் இருந்த சமஷ்டி ஆட்சிமுறை பற்றிய திட்டவரைவு ஒன்றை உள்ளடக்கியதாக இருந்தது.

கரையோரச் சிங்களவர்களையும் மலைநாட்டுச் சிங்களவரையும் தமிழர்களையும் நாட்டின் பிரதான குழுக்களாகக் குறிப்பிட்ட அந்த யாப்பு ஒவ்வொன்றும் முற்றுமுழுதான சுயாட்சியைக் கொண்ட ஒன்பது மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

பண்டாரநாயக்கவின் யோசனையை அவரின் நெருங்கிய நண்பரான கல்விமான் ஜேம்ஸ் ரி. இரத்தினத்தை தவிர,  முற்போக்கு தேசிய கட்சியின் சகல உறுப்பினர்களும் ஆதரித்தனர். சமஷ்டிமுறை தொடர்பிலான யோசனை அந்த காலகட்டத்தில் இனவாத உணர்வுகளையோ அல்லது சிங்களவர்களிடமிருந்து எதிர்ப்பையோ கிளப்பவில்லை. அந்த யோசனைக்கு கடுமையான எதிர்ப்பு ஒரு சிங்களவரிடமிருந்து அல்ல, தமிழரிடமிருந்தே வந்தது என்று ஜெயராஜ் எழுதினார்.

இது இவ்வாறிருக்க, காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கையில் பிரபல்யமான பிரிட்டிஷ் சிவில்சேவை அதிகாரியாக இருந்த லெனார்ட் வூல்வ் 1930 களின் பிற்பகுதியில் இலங்கைக்கு சுவிட்சர்லாந்தின் கன்ரோன் முறையே அதிபொருத்தமானது என்ற கருத்தை முன்வைத்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. 

1938 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பிய அறிக்கை ஒன்றில் லெனார்ட் வூல்வ் கரையோரச் சிங்கள மாகாணம், கண்டியச் சிங்கள மாகாணம், தமிழ் வடக்கு மாகாணம், தமிழ் கிழக்கு மாகாணம் என்று நான்கு கன்ரோன்களையும் மலைநாட்டில்  இந்திய வம்சாவளி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தேயிலைத் தோட்டப்பகுதிகளை உள்ளடக்கி ஐந்தாவது கன்ரோன் ஒன்றையும் உருவாக்கலாம் என்று யோசனையை முன்வைத்தார். 

மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் தேசிய நலன்களைப் பேணுவதற்காக அவர்களுக்கென்று தனியொரு கன்ரோனை  பரிந்துரைத்த ஒருவர் என்றால் நாமறிந்தவரை அது லெனார்ட் வூல்வ் மாத்திரமேயாவார்.

கன்ரோன் முறையை அறிமுகப்படுத்தக்கூடிய அளவுக்கு இலங்கை பெரிய நாடு அல்ல என்ற வாதம் முன்வைக்கப்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த அவர் இலங்கையின் பரப்பளவு சுவிட்சர்லாந்தின் பரப்பளவை விடவும் 10 ஆயிரம் சதுரமைல்கள் அதிகம் என்று சுட்டிக் காட்டியதுடன் இனத்துவ அடிப்படையிலான சனத்தொகையைப் பொறுத்தவரை சுவிட்சர்லாந்தில் ஜேர்மன் மொழி பேசுபவர்களை இலங்கையில் சிங்களவர்களுடனும் பிரெஞ்சு மொழி பேசுபவர்களை தமிழர்களுடனும் இத்தாலி மொழி பேசுபவர்களை முஸ்லிம்களுடனும் ஒப்பிட்டார். 

 இவை ஒரு காலனித்துவ நிருவாகியாக இருந்த முற்போக்குவாதியான ஆங்கிலேயர் ஒருவர் ஏழு ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்து அதன் மக்களை நெருக்கமாக அறிந்து  பெற்றுக்கொண்ட அனுபவங்களின் விளைவாக முன்வைத்த யோசனைகளாகும்.

பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து அன்றைய தமிழ்த் தலைவர்கள் சமஷ்டிமுறைக்காக குரல்கொடுத்துப் போராடியிருந்தால் இலங்கையின் அரசியல் வரலாறு நிச்சயமாக வேறுபட்டதாக இருந்திருக்கும். 

1931 ஆம் ஆண்டில் டொனமூர் அரசியலமைப்பின் மூலமாக சர்வஜன வாக்குரிமையும் பிராந்திய அடிப்படையிலான பிரதிநிதித்துவமும் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பண்டாரநாயக்கவின் அரசியல் நோக்கில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கு பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளை அடுத்தவாரம் பார்ப்போம்.(தொடரும்)

https://arangamnews.com/?p=12739

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்ததுக்கு  கோட்பாட்டு  அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த ஜி. பார்த்தசாரதி

March 25, 2026

இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்ததுக்கு  கோட்பாட்டு  அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த        ஜி. பார்த்தசாரதி 

— வீரகத்தி தனபாலசிங்கம் —

(கடந்த வாரத்தைய தொடர்ச்சி ) 

1931 — 1947 காலப்பகுதியில் நடைமுறையில் இருந்த டொனமூர் அரசியலமைப்பு ஐக்கியப்பட்ட தேசிய அடையாளம் ஒன்றை உருவாக்கும் குறிக்கோளுடன் கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டபோதிலும், அது உண்மையில் இலங்கையில் இனவாத அரசியலை தீவிரப்படுத்தியதன் மூலமாக எதிர்மறையான ஒரு திருப்புமுனையாக மாறியது.

இனரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழித்து சர்வஜன வாக்குரிமையுடன் பிராந்தியப் பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலமாக அந்த அரசியலமைப்பு சிங்களப் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை நகர்த்தியது. இதன் விளைவாக சிறுபான்மைச் சமூகங்கள் பாகுபாட்டுக்குள்ளாகின.

பெரிய அரசியல் அபிலாசைகளைக் கொண்டிருந்த பண்டாரநாயக்கவும் முற்போக்கு தேசிய கட்சியை கைவிட்டு சிங்கள மகாசபையை ஆரம்பித்தார். சமஷ்டி முறைக்காக குரல் கொடுப்பதை நிறுத்திய அவர் அதற்கு பதிலாக பன்முகப்படுத்தலை ஆதரிக்கத் தொடங்கினார். உள்ளூராட்சி முறையை மேம்படுத்தி பன்முகப்படுத்தலின் மூலமாக பெருமளவில் சுயாட்சியை வழங்குவதை பண்டாரநாயக்க ஆதரித்தார்.

பெரிய உள்ளூராட்சி அதிகார அலகாக மாகாணங்களை நோக்கத்தொடங்கிய பண்டாரநாயக்க மாகாணசபைகளை அமைக்க விரும்பினார்.  இரண்டாவது அரசாங்க சபையில் உள்ளூராட்சி அமைச்சராக அவர் பதிவி வகித்தபோது அந்த அமைச்சின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக இருந்த ஆர்.எஸ். எஸ். குணவர்தன மாகாணசபைகளை அமைப்பதற்காக கொண்டுவந்த பிரேரணையை அரசாங்க சபை அங்கீகரித்தது.

ஆனால், விளங்கிக்கொள்ள முடியாத காரணங்களுக்காக பண்ட ரநாயக்க மாகாணசபைகளை அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்கவில்லை என்று ஜெயராஜ் எழுதியிருக்கிறார்.

பிறகு தனது சிங்கள மகாசபையுடன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து சுதந்திர இலங்கையில் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் முதலாவது அமைச்சரவையில் உள்ளூராட்சி அமைச்சராக பதவியேற்ற பண்டாரநாயக்க மக்களுக்கு நெருக்கமாக அரசாங்கத்தைக் கொண்டு செல்வதற்கான ஒரு வழிமுறையாக மாகாணசபை திட்டத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க முயற்சித்த போதிலும், அமைச்சர்களாக முழுமையாக தாங்கள் அனுபவித்த அதிகாரங்களை இழக்க அவரது சகாக்கள் விரும்பவில்லை. அதனால் பண்டாரநாயக்காவினால் மீண்டும் மாகாணசபை திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. 

பண்டாரநாயக்க மாகாணசபைகளை அமைப்பது குறித்து சிந்தித்த காலப்பகுதியில் அவற்றுக்கு இன்று இருப்பதைப் போன்று இனத்துவ அரசியல் பரிமாணம் ஒன்று இருக்கவில்லை என்பதால் பெருமளவுக்கு பிரச்சினைகள் இல்லாமல்  அவற்றை அன்று அமைத்திருக்க முடியும் என்பது ஜெயராஜின் அவதானிப்பாக இருக்கிறது.

1951 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறிய பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அமைத்து ஐந்து வருடங்களில் பிரதமராக பதவிக்கு வந்த பிறகு அவரது அரசாங்கம் முன்னெடுத்த கொள்கைகள்  இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது எதிர்கால  இருப்புக் குறித்து அச்சம் கொள்கிற அளவுக்கு இனவாத அரசியலை முனைப்படையச் செய்தன. தனிச்சிங்களச் சட்டம் அதில் முக்கியமானது. 

இலங்கையில் முதன்முதலாக சமஷ்டி ஆட்சிமுறைக்காக குரல்கொடுத்த ஒரு அறிவார்ந்த தலைவர், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் எஸ். ஜே வி. செல்வநாயகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது சமஷ்டி பற்றி பேசுவதை தவிர்ப்பதில் கடுமையான கவனம் செலுத்திய அளவுக்கு அவரின் கொள்கைகளில் தலைகீழான மாற்றம் ஏற்பட்டது என்பது கவலைக்குரியது.

இன்று நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபைகள் முறை 39 வருடங்களுக்கு முன்னர் இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையை தொடர்ந்து ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அது. அடிப்படையில் பல தசாப்தங்களுக்கு முன்னர்  பண்டாரநாயக்கவின் சிந்தனையில் உதித்ததே என்பது கவனிக்கத் தக்கது. 

பிராந்திய சபைகளை அமைப்பதற்காக செல்வநாயகத்துடன் பண்டாரநாயக்க செய்துகொண்ட 1957 ஒப்பந்தத்துக்கு எதிராக தென்னிலங்கையில் எதிர்ப்பைக் கிளப்புவதில் முன்னரங்கத்தில் நின்ற ஜெயவர்தன, மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மாகாணசபைகளை அமைப்பதற்கு வழிவகுத்த நிகழ்வுப் போக்குகளை இனிமேல் பார்ப்போம்.

சமாதான உடன்படிக்கை:

பிராந்தியங்களுக்கு அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடு எதையும் ஒருபோதும் கொண்டிராத இலங்கையில் இந்தியாவின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் மாகாணசபைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்காது என்பதில் சந்தேகமில்லை. 

தேசிய இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய சகல விவகாரங்களிலும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவரான ஜனாதிபதி ஜெயவர்தனவை அந்த பிரச்சினைக்கு முடிவைக் கொண்டுவர வேண்டும் என்றால் அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடு ஒன்று அவசியம் என்று நம்பவைப்பதில் அல்லது வழிக்குக் கொண்டுவருவதில் இந்தியா அந்த நேரத்தில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியது. 

1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு இலங்கையில் முரண்பட்டு நின்ற  இரு தரப்பினருக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதற்கு நல்லெண்ண உதவிகளை வழங்க முன்வந்த அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, தனது விசேட தூதுவராக நியமித்த கோபாலசுவாமி பார்த்தசாரதிக்கு  ஜெயவர்தனவை இணங்க வைப்பதில் முக்கிய பங்கு இருந்தது. 

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தலைசிறந்த அரசியலமைப்புச்சட்ட நிபுணருமான காலஞ்சென்ற கலாநிதி நீலன் திருச்செல்வம் பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரை ஒன்றில், ஜனாதிபதி ஜெயவர்தன ஒரு அரசியலமைப்பு நிபுணராக இருந்த போதிலும் கூட, அதிகாரப் பரவலாக்கல் கோட்பாட்டின் பயனுடைத்தன்மை மீது அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பெரும் கஷ்டப்பட வேண்டியிருந்தது என்று தன்னிடம் பார்த்தசாரதி ஒரு தடவை கூறியதாக குறிப்பிட்டிருந்தார். 

அதேவேளை, முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜெயதிலக எழுதிய கட்டுரையொன்றில் கறுப்பு ஜூலைக்கு பின்னரான காலப் பகுதியில் இலஙகையில் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது எதிர்நோக்க வேண்டியிருந்த கஷ்டங்கள் குறித்து பார்த்தசாரதி  புதுடில்லி சந்திப்பொன்றில் தன்னிடம் கூறியதாக தெரிவித்திருந்தார். 

1984 பேச்சுவார்த்தைகளின் போது ஒரு கட்டத்தில் ஜனாதிபதி ஜெயவர்தனவின் வேண்டுகோளின் பேரில் கண்டியில் உள்ள பௌத்தபீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்ததாகவும் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக்  காண்பது சாத்தியமில்லாத அளவுக்கு கடுமையானது என்பதை தெரிந்து கொண்டதாகவும் பார்த்தசாரதி தன்னிடம் கூறியதாகவும் கலாநிதி ஜெயதிலக எழுதியிருந்தார்.

சிக்கல் மிகுந்த மத்தியஸ்த முயற்சிகளை பொறுமையுடன் முன்னெடுப்பதற்கு எமது பிராந்தியத்தின் பூகோள அரசியலை முறையாகப் புரிந்து கொண்டவராகவும் இலங்கையின் அரசியலமைப்பின் சிக்கலான தன்மைகளைப் புரிந்து கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வல்லவராகவும் இருக்கக்கூடிய இராஜதந்திரி ஒருவரே அவசியம் என்று கருதியதனால்தான் இந்திரா காந்தி தனது நம்பிக்கைக்கு பெரிதும் பாத்திரமானவரான பார்த்தசாரதியை விசேட தூதுவராக அனுப்பினார். அவர் வெளியுறவுச் செயலாளர் உட்பட பல இராஜந்திர பதவிகளை வகித்தவர்.

தனது பணிக்கு முன்னதாக இருந்த சிக்கல்களும்  இடறுகுழிகளும் பாரதூரமானவை என்பதை தெளிவாகப் புரிந்து கொண்ட பார்த்தசாரதியின் முதற்பணி அன்றைய அரசாங்கத் தலைவர்களினதும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களினதும் அச்சங்கள், ஏக்கங்கள், பிரமைகள் மற்றும் எண்ணப் போக்குகளை மிகுந்த நிதானத்துடன் கிரகிக்க வேண்டியதாகவே இருந்தது. இலங்கையின் பழைய இடதுசாரித் தலைவர்களுடன் அவரால் எளிதாகப் பழகிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. 

தமிழ்த் தலைவர்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய அரசியல் தெரிவுகளின் மட்டுப்பாடுகளை புரிந்துகொள்ள வேண்டும் என்பதும் பேச்சுவார்த்தை செயன்முறைகள் தொடர்பில் அடிப்படைவாத நிலைப்பாடுகளில் பிடிவாதமாக இருப்பவர்கள் போராடிக்கொண்டே  பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட வேண்டும் என்பதே அவர்களுக்கான பார்த்தசாரதியின் ஆலோசனையாக இருந்ததாக கலாநிதி திருச்செல்வம் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

பிராந்திய சபைகளுக்கு (Regiinal Councils) அதிகாரங்களைப் பகிர்வதற்கான ஒரு தொகுதி யோசனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியதே பார்த்தசாரதியின் தனித்துவமான பங்களிப்பாகும். அந்த யோசனைகளே ‘இணைப்பு — சி’ ( Annexure — C ) என்று பிரபல்யமாக அழைக்கப்பட்டவையாகும். 1983 ஆகஸ்ட் தொடக்கம் டிசம்பர் வரை கொழும்பிலும் புதுடில்லியிலும் ஜனாதிபதி ஜெயவர்தனவுடன் நடத்திய சந்திப்புக்களில் இந்த இணைப்பு -. சி யைப் பூரணப்படுத்தும் செயற்பாடுகளை பார்த்தசாரதி நிறைவு செய்தார் என்று கூறப்பட்டது.

தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் ஜெயவர்தன அரசாங்கத்துக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிப்பதில் ஒரு முழுநிறைவான சமரசப் பேச்சுவார்த்தையாளருக்குரிய சகல திறமைகளையும் மதிநுட்பத்தையும். வெளிக்கொணர்ந்தாகக் கூறப்பட்ட பார்த்தசாரதியினால் முன்வைக்கப்பட்ட திட்டத்தின் அம்சங்களை. ஜெயவர்தன உடனடியாகவே இணங்கிக் கொண்டார். 

ஆனால், அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படை அலகு (Unit of Devolution) தொடர்பில் இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவதென்பது தொடர்ந்தும் கஷ்டமானதாகவே இருந்தது. ஒரு மாகாணத்திற்குள் இருக்கும் மாவட்டங்களை இணைத்த  பெரியதொரு அதிகாரப்பகிர்வு  அலகு தமிழர்களுக்கு வழங்கப்படக்கூடாத ஒரு சலுகையாக நோக்கப்பட்டது.

பிறகு 1983 டிசம்பரில் ஜெயவர்தன புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது தனியொரு மொழிரீதியான பிராந்தியத்தை (Single Linguistic Region) அமைப்பதற்கான யோசனையை முன்வைப்பதற்கு இந்திரா காந்தியின் ஆதரவை பார்த்தசாரதி பெற்றிருந்தார். அத்தகைய யோசனைக்கு இணங்குவதன் மூலம் தென்னிலங்கையில் தனது ஆதரவுத்தளத்தை இழப்பதற்கு ஜெயவர்தன விரும்பவில்லை. ஆனால், அவர் விட்டுக்கொடுப்பு ஒன்றைச் செய்வதற்கு இணங்கினார். 

இணைப்பு — சி யில் பிராந்திய சபைகள். என்று இருந்ததை மாகாண மட்டத்துக்கு மட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.  புதுடில்லி அஷோக் ஹோட்டலில் நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தையின்போது  இந்தியத் தரப்பின் நெருக்குதலினால் ஒரு கட்டத்தில்  பொறுமையிழந்த ஜெயவர்தன, பார்த்தசாரதியை நோக்கி “நான் எங்கே கையெழுத்திட வேண்டும்” என்று கேட்டதாகவும் அதற்கு பதிலளித்த பார்த்தசாரதி “இது ஒரு உடன்படிக்கை அல்ல. கையெழுத்து ஒன்றும் தேவையில்லை” என்று கூறியதாக அந்த நேரத்தில் இந்திய ஊடகங்களில் செய்தி வௌயாகியது. 

1984 ஜனவரியில் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாட்டில் இணைப்பு — சி சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், சிங்கள அமைப்புக்கள், பௌத்த குழுக்கள் மற்றும் சில எதிர்க்கட்சிகளிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பைத் தொடர்ந்து ஜெயவர்தன அதிலிருந்து தன்னைத் தூரவிலக்கிக் கொண்டார். இணைப்பு — சி யின் உள்ளடக்கங்களுக்கு தான் எந்த வகையிலும் பொறுப்பு இல்லை என்று அவர் கைகழுவிவிட்டார். அதனால் சர்வகட்சி மகாநாடு தோல்வியில் முடிவடைந்தது.

இந்திரா காந்தியின் மறைவுக்கு பிறகு அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்றதை தொடர்ந்து 1985 முற்பகுதியில் புதுடில்லியில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், தாயாரின் நம்பிக்கைக்குரியவராக விளங்கிய பார்த்தசாரதியை பேச்சுவார்த்தை செயன்முறைகளில் ஈடுபடுத்துவதை மகன் தவிர்த்தார்.

தமிழ் அரசியல் தலைவர்கள் வழிகாட்டலுக்காகவும் ஆலோசனைக்காகவும் பெருமளவுக்கு பார்த்தசாரதியில் தங்கியிருந்த காரணத்தால் அவரின் வகிபாகத்தில் இலங்கை அரசாங்கத்தரப்புக்கு சந்தேகம் ஏற்படத் தொடங்கியமை அவரை ஓரங்கட்டுவதற்கு ராஜீவ் காந்தி தீர்மானித்தற்கான ஒரு காரணி என்று கூறப்பட்டது. 

வெளியுறவு செயலாளர் ரொமேஷ் பண்டாரி, அமைச்சர்கள் பி. சிதம்பரம் மற்றும் நட்வர்சிங் ஆகியோரையே இலங்கை இனப்பிரச்சினையைக் கையாளுவதற்கு ராஜீவ் காந்தி பயன்படுத்தினார். 

1987 ஜூலை 29 சமாதான உடன்படிக்கையில் கொழும்புக்கு வருகைதந்த ராஜீவ் காந்தியுடன் செல்வாக்குமிக்க அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய பெரிய தூதுக்குழுவொன்று வந்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் ஆரம்பக்கட்டங்களில் தீர்க்கமான பாத்திரத்தை வகித்து சமாதான உடன்படிக்கைக்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த பார்த்தசாரதி அந்த தூதுக்குழுவில் இல்லாதது ஒரு பிரகாசமான வெற்றிடமாக இருந்ததாக அந்த நேரத்தில் அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் வர்ணிக்கப்பட்டது.

எது எவ்வாறிருந்தாலும், இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்துக்கான கோட்பாட்டு அடிப்படையையும் பல்லின சமுதாயமொன்றுக்கான அரசியலமைப்பு அத்திபாரத்தையும் (Constitutional foundation for a multi – ethnic polity) அமைத்த பெருமையில் பெரும்பகுதி பார்த்தசாரதிக்கே உரியது என்று என்பதில் சந்தேகமில்லை என்று நீலன் திருச்செல்வம் எழுதினார்.

மாகாணசபைகளை அமைப்பதற்காக இலங்கை அரசியலமைப்புக்கு 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டு 38 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அது இதுவரையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவுமில்லை, மாகாணசபைகள் ஒழுங்காக இயங்கவுமில்லை. கடந்த எட்டு வருடங்களாக மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படவில்லை. 

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் ஒரு வருட காலத்திற்குள் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதாக உறுதியளித்த போதிலும், சாத்தியமானளவுக்கு அந்த தேர்தல்களை மேலும் பின்போடுவதற்கான வியூகங்களே முன்னெடுக்கப்படுகின்றன போன்று தெரிகிறது. 

தமிழ் அரசியல் கட்சிகள் இனப்பிரச்சினைக்கு  சமஷ்டிமுறையின்  அடிப்படையிலான தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகின்றன. வேறு காரணத்துக்காக என்றாலும் சிங்களவர்கள் தரப்பில் சமஷ்டி ஆட்சிமுறை யோசனை முன்வைக்கப்பட்டு ஒரு நூற்றாண்டும் தமிழர் தரப்பினால் அந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு முக்கால் நூற்றாண்டும் கடந்துவிட்ட நிலையில், அரைகுறையான அதிகாரங்களுடன்  கூடிய மாகாண சபைகளைக் கூட  ஒழுங்காக செயற்பட வைப்பதில் அக்கறையில்லாமல்  சிங்கள அரசியல் சமுதாயம் இருக்கிறது.

தமிழர் அரசியல் சமுதாயம் சமஷ்டி முறைத் தீர்வொன்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும், புதிய அரசியலமைப்பை அரசாங்கம் கொண்டுவரும் பட்சத்தில் முதலில்  மாகாணசபைகளைக் காப்பாற்றப் போராடவேண்டியிருக்கும்.

https://arangamnews.com/?p=12770

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.