Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்

சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • ஓம்கார் கரம்பேல்கர்

  • பிபிசி மராத்தி

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

சிறுநீர் கழித்த பின் சொட்டுதல் (PMD) என்பது, ஒருவர் சிறுநீர் கழித்து முடித்த சில விநாடிகள் கழித்தோ அல்லது கழிவறையை விட்டு வெளியேறிய பிறகோ, திடீரென சில துளி சிறுநீர் வெளியேறுவதைக் குறிக்கிறது. இதுவொரு சிறிய பிரச்னை என்று பலர் கருதினாலும், இது ஓர் ஆணின் அன்றாட வாழ்க்கை, தன்னம்பிக்கை மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியது.

மக்கள் பெரும்பாலும், இது வயதாகும்போது மட்டுமே ஏற்படும் பிரச்னை என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையில், இது இளம் வயதினர் மத்தியிலும் மிகச் சாதாரணமாகக் காணப்படுகிறது.

சிறுநீர் கழித்த பிறகு, சில துளிகள் வெளியேறித் தங்கள் உள்ளாடைகளை நனைப்பதையோ அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்துவதையோ பல ஆண்கள் கவனிக்கின்றனர். இது சாதாரணமாக நிகழும் ஒன்றாக இருந்தாலும், பெரும்பாலான ஆண்கள் இதைப் பற்றிப் பேச கூச்சப்படுகிறார்கள்.

"சிறுநீர் கழித்த பின் சொட்டுதல்" என்ற பிரச்னை பெரும்பாலும் விவாதிக்கப்படுவதில்லை. பொதுவாக, கூச்சம், மற்றவர்கள் கேலி செய்து விடுவார்களோ என்ற அச்சம், "இது வயதாகும்போது மட்டுமே ஏற்படும்" என்ற தவறான நம்பிக்கை அல்லது "இதுவொரு தீவிரமான பிரச்னை இல்லை" என்ற எண்ணம் ஆகியவை அதற்குக் காரணமாக அமைகின்றன.

உண்மையில், பி.எம்.டி என்பது வயதானவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் எதிர்கொள்ளும் பிரச்னையாக உள்ளது. பகல் நேரங்களில் சிறு துளி சிறுநீர் வெளியேறுவது, குறிப்பாகப் பணியிடத்திலோ அல்லது பயணம் செய்யும்போதோ, அதை அனுபவிப்பவருக்கு உள்ளாடை நனைந்த உணர்வையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தக்கூடும். அவர்கள் அடிக்கடி தங்கள் ஆடைகளைச் சரிபார்த்துக் கொண்டே இருக்க நேரிடலாம். இது மன அழுத்தத்தை அதிகரிக்கவும், தன்னம்பிக்கையைப் பாதிக்கவும் கூடும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, பி.எம்.டி என்பது ஒரு தீவிரமான நோய் அல்ல. முறையான உடற்பயிற்சிகள், எளிய நுட்பங்கள், சிறுநீர் கழிப்பதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவது ஆகியவற்றின் மூலம் பி.எம்.டி-யை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.

இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய, பி.எம்.டி ஏன் ஏற்படுகிறது, எத்தகைய அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும், எத்தகைய தீர்வுகள் உண்மையில் பலனளிக்கும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்

பட மூலாதாரம்,Getty Images

பி.எம்.டி என்றால் என்ன?

சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் (PMD) என்பது ஒரு நபர் சிறுநீர் கழித்து முடித்த பிறகும் சிறுநீர் கசிவதைக் குறிக்கிறது.

இந்தப் பிரச்னையின் முக்கிய அறிகுறி, கழிவறையைவிட்டு வெளியேறிய சில விநாடிகள் அல்லது சில நிமிடங்களுக்குப் பிறகு, சில துளிகள் சிறுநீர் திடீரென வெளியேறுவதாகும்.

பொதுவாக, சிறுநீர் வெளியேறும் குழாயின் (urethra) கீழ் பகுதியில், சிறிதளவு சிறுநீர் தேங்கி நிற்பதாலேயே இது நிகழ்கிறது. கிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் அகில் கான், இது குறித்து பிபிசி மராத்திக்கு விரிவாக விளக்கினார்.

"சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் என்பது 'சிறுநீர் அடங்காமை' என்ற வழக்கமான வகைப்பாட்டின் கீழ் வருவதில்லை. மாறாக, இது 'சிறுநீர் வெளியேற்றச் செயல்பாட்டுக் குறைபாடு' (voiding dysfunction) என்ற தனி வகையின் கீழ் வருகிறது. இதில் சிறுநீர் கழித்த பிறகும் சிறிதளவு சிறுநீர் சிறுநீர்ப் புறக்குழாயிலேயே தங்கிவிட்டுப் பின்னர் கசிந்து வெளியேறுகிறது," என்று அவர் விவரித்தார்.

இந்தப் பிரச்னை சங்கடப்படுத்தக் கூடியதாகவோ அல்லது கூச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவோ தோன்றினாலும், இதுவொரு தீவிரமான பாதிப்பு இல்லை எனவும், சரியான உடற்பயிற்சிகள் மற்றும் எளிய வழிமுறைகளின் மூலம் இதை எளிதில் கட்டுப்படுத்த முடியும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்

பட மூலாதாரம்,Getty Images

இடுப்புத் தளம் என்றால் என்ன?

இடுப்புத் தளம் (Pelvic floor) என்பது, வயிற்றின் அடிப்பகுதியில் (கீழ் வயிறு) அமைந்துள்ள, வலிமையான அதேநேரம் நெகிழ்வுத்தன்மை கொண்ட தசைகள், திசுக்கள், தசைநார்கள் ஆகியவற்றின் ஒரு தொகுப்பாகும்.

இந்த அமைப்பானது, ஒரு தொட்டிலைப் போல அல்லது எடையைத் தாங்கும் பொருளைப் போலச் செயல்படுகிறது. இது இடுப்புப் பகுதியில் உள்ள முக்கியமான உறுப்புகளான சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய், குடல், ஆண்களில் பிராஸ்டேட் சுரப்பி போன்றவற்றைத் தாங்கிப் பிடித்து, அவற்றுக்கு ஆதரவளிக்கிறது.

ஒருவர் நிற்கும்போதோ, நடக்கும்போதோ அல்லது அசைந்து இயங்கும்போதோ, இந்த உறுப்புகளின் எடையைச் சுமப்பதற்கும் அவற்றை அவற்றுக்குரிய சரியான இடத்தில் நிலைநிறுத்துவதற்கும் இந்தத் தசைகள் உதவுகின்றன.

சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்

படக்குறிப்பு,உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக பிபிசியுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும்

சிறுநீர் மற்றும் மலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் உறுப்புகளுக்கு ஆதரவளிப்பது இடுப்புத் தளத்தின் மற்றுமொரு முக்கியமான பணி. வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும்போது, உதாரணமாக, ஆழமான மூச்சுவிடும்போது, இருமும்போது, தும்மும்போது, கனமான பொருட்களைத் தூக்கும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது, இடுப்புத் தளத் தசைகள் அந்த அழுத்தத்தைத் தாங்கிக்கொண்டு உறுப்புகள் நிலையாக இருக்க உதவுகின்றன.

சுருக்கமாகக் கூறுவதெனில், உடல் சமநிலை, உடலின் மையப்பகுதியுடைய வலிமை, சிறுநீர், மலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இடுப்புத் தளம் மிகவும் இன்றியமையாதது. அன்றாட ஆரோக்கியத்தில் இது மிக முக்கியப் பங்காற்றினாலும், பலரும் இந்த அமைப்பின் மீது போதிய கவனம் செலுத்துவதில்லை.

பி.எம்.டி யாருக்கு ஏற்படுகிறது? இது பிராஸ்டேட் சுரப்பியுடன் தொடர்புடையதா?

பி.எம்.டி ஏற்படுவதற்கான மிகவும் பொதுவான காரணம், இடுப்புத் தளத் தசைகள் பலவீனமாக இருப்பது அல்லது சரியாகச் செயல்படாமல் இருப்பதாகும். இந்தத் தசைகள் சிறுநீரின் கடைசி சில துளிகளை வெளியே தள்ள உதவுகின்றன. அவை பலவீனமாக இருந்தால், சிறிதளவு சிறுநீர் சிறுநீர்ப் பாதையில் தங்கி, பின்னர் வெளியே கசியும்.

இந்தப் பிரச்னை வயது முதிர்ச்சியால் மட்டுமே ஏற்படுவதாகப் பலர் நினைக்கின்றனர். ஆனால் அது இளம் ஆண்களுக்கும் ஏற்படலாம். அதிக நேரம் உட்கார்ந்திருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அதிக எடையுடன் இருப்பது, தவறான சிறுநீர் கழிக்கும் பழக்கங்களைக் கொண்டிருப்பது போன்றவை இந்த அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்

பட மூலாதாரம்,Getty Images

பி.எம்.டி எப்போதும் பிராஸ்டேட் சுரப்பியுடன் தொடர்புடையது என்ற பொதுவானதொரு தவறான புரிதலும் உள்ளது. சில நேரங்களில் பிராஸ்டேட் சுரப்பி வீக்கமடைவது இந்தப் பிரச்னைக்குக் காரணமாக அமையலாம். ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, பிராஸ்டேட் நோய் இருப்பதில்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில், பி.எம்.டி உடலில் ஏற்படும் எந்தவொரு சேதம் அல்லது கட்டமைப்புப் பிரச்னையாலும் ஏற்படுவதில்லை. இதுவொரு "செயல்பாட்டு" பிரச்னையாகும். அதாவது, இது தசைகள் செயல்படும் விதத்துடன் தொடர்புடையது.

பி.எம்.டி-யுடன் வேறு அறிகுறிகளும் இருந்தால், அதை முறையாகப் பரிசோதிக்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றில் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு, பலவீனமான சிறுநீர் ஓட்டம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி கழிவறைக்குச் செல்லுதல், சிறுநீரில் ரத்தம், அடிவயிற்றில் அதாவது இடுப்புப் பகுதியில் வலி ஏற்படுவது ஆகியவை அடங்கும்.

இந்த அறிகுறிகள் இருந்தால், மருத்துவர்கள் சிறுநீர்ப் பாதை தொற்று, சிறுநீர்க் குழாய் சுருக்கம், அல்லது பிராஸ்டேட் அழற்சி போன்ற பிற நிலைகள் குறித்தும் பரிசோதிக்கலாம்.

சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்

பட மூலாதாரம்,Getty Images

கண்டறியும் வழிமுறையும் எளிய தீர்வும்

ஒருவருக்கு சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் பிரச்னை உள்ளதா என்பதைக் கண்டறிய, மருத்துவர்கள் பொதுவாக முதலில் அந்த நபரின் அறிகுறிகளைப் பற்றிக் கேட்டு, ஓர் எளிய உடல் பரிசோதனையைச் செய்வார்கள்.

சில நேரங்களில், அவர்கள் யூரோஃப்ளோமெட்ரி (சிறுநீர் எவ்வாறு பாய்கிறது என்பதைச் சரிபார்க்க) அல்லது சிறுநீர் பகுப்பாய்வு (சிறுநீரில் ஏதேனும் பிரச்னை உள்ளதா எனச் சரிபார்க்க) போன்ற சோதனைகளைப் பரிந்துரைக்கலாம். சிகிச்சையின் மிக முக்கியமான பகுதி, இடுப்புத் தளப் பயிற்சிகளைச் சரியாகச் செய்வதாகும்.

"இந்த நோயறிதல் மருத்துவரீதியாக, அறிகுறிகளின் வரலாறு மற்றும் உடல் பரிசோதனையின் அடிப்படையில் செய்யப்படுகிறது. சில நேரங்களில், சிறுநீர் பகுப்பாய்வு அல்லது யூரோஃப்ளோமெட்ரி போன்ற சோதனைகள் அறிவுறுத்தப்படலாம். சிறுநீர் கழிப்பதை நிறுத்திய பிறகும் தொடர்ந்து சிறுநீர் வடிதல் போன்ற சில விஷயங்களை அந்த நபரே கவனிக்கக்கூடும். இருப்பினும், தீவிரமான காரணம் எதுவுமில்லை என்பதை உறுதி செய்ய ஒரு முறையான மருத்துவப் பரிசோதனை அவசியம்," என்று தெரிவித்தார் மருத்துவர் அகில் கான்.

மேலும் அவர், "பி.எம்.டி-ஐ நிர்வகிப்பதில் இடுப்புத் தளத்திற்கான உடற்பயிற்சிகள் மிக முக்கியமானவை. 'சிறுநீர்க் குழாய் மில்கிங்' என்பது சிறுநீர் கழித்த பிறகு விதைப்பையின் பின்புறத்தில் மென்மையான அழுத்தத்தைக் கொடுப்பதாகும். இது மீதமுள்ள சிறுநீரை வெளியேற்ற உதவுகிறது. கெகல் பயிற்சிகளைத் தவறாகவோ அல்லது ஒழுங்கற்ற முறையிலோ செய்வது பொதுவாக நடக்கும் ஒரு தவறு. அதற்குச் சரியான வழிகாட்டுதல் அவசியம். தொற்று அல்லது பிராஸ்டேட் வீக்கம் போன்ற தொடர்புடைய பிரச்னை இல்லாவிட்டால், இதற்கு மருந்து தேவையில்லை," என்றும் அவர் விளக்கினார்.

சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்

பட மூலாதாரம்,Getty Images

பி.எம்.டி-யுடன் காணப்படும் தீவிர பிரச்னைகளின் அறிகுறிகள்

ஒருவருக்கு பி.எம்.டி-யுடன் மற்ற அறிகுறிகளும் இருந்தால், அதுவொரு தீவிரமான உடல்நலப் பிரச்னையாக இருக்கலாம். சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், காய்ச்சல், அடிவயிற்றில் அல்லது கால்களுக்கு இடையில் வலி, பலவீனமான சிறுநீர் ஓட்டம் அல்லது அடிக்கடி ஏற்படும் தொற்றுகள் ஆகியவை எச்சரிக்கைக்கான அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அவை சிறுநீர் பாதையில் அடைப்பு, தொற்று அல்லது சுருக்கம் போன்ற பிரச்னைகளைச் சுட்டிக்காட்டலாம்.

கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஷ்யாம் வர்மா இதுகுறித்து விரிவாக விளக்கினார்.

"பி.எம்.டி-யுடன் சிறுநீரில் ரத்தம், வலி, பலவீனமான சிறுநீர் ஓட்டம் போன்ற அறிகுறிகள் இருந்தால், அது வெறும் பி.எம்.டி பிரச்னையாக மட்டுமே இருக்காது. வேறு சிக்கலாக இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே அது கவனிக்கப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

பி.எம்.டி மற்ற சிறுநீர் பிரச்னைகளுடன் சேர்ந்து ஏற்படலாம். உதாரணமாக, அதீத சிறுநீர்ப்பை செயல்பாட்டில், ஒருவருக்கு ஏற்கெனவே அடிக்கடி மற்றும் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு இருக்கும். அதனால் சிறுநீர் கழித்த பிறகு சொட்டு சொட்டாக வெளியேறுவது இன்னும் மோசமாக உணரப்படும்.

சிறுநீர்க்குழாய் குறுகினால் (சிறுநீர்க்குழாய் சுருக்கம் என்று அழைக்கப்படுகிறது), சிறுநீரின் கடைசிப் பகுதி சரியாக வெளியேறாமல் போகலாம். பிராஸ்டேட்டிடிஸ் நோயில், இடுப்புத் தசைகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி சிறுநீர் சொட்டுசொட்டாக வெளியேறுவதை அதிகரிக்கலாம்.

"சிறுநீர்க் குழாய் முழுமையாகக் காலியாகாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதால், சிறுநீர்ப் பையின் அதிக உணர்திறன், சுருக்கங்கள், பிராஸ்டேடிடிஸ் நோயால் ஏற்படும் அழற்சி ஆகிய அனைத்தும் சொட்டுசொட்டாக சிறுநீர் வெளியேறுவதற்கு காரணமாகலாம்," என்று கூறுகிறார் மருத்துவர் வர்மா.

சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்

பட மூலாதாரம்,Getty Images

பி.எம்.டி பிரச்னை எவ்வாறு கண்டறியப்படுகிறது?

மருத்துவர்கள் முதலில் இதுகுறித்து விரிவான கேள்விகளைக் கேட்பதன் மூலம் பரிசோதனையைத் தொடங்குகின்றனர். சிறுநீர் வடிதல் எப்போது நிகழ்கிறது, எவ்வளவு சிறுநீர் கசிகிறது, சிறுநீர் கழிக்கும்போது ஏதேனும் எரிச்சல் அல்லது வலி உள்ளதா, இது அன்றாட வாழ்க்கையை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பன போன்ற கேள்விகளை அவர்கள் கேட்கின்றனர்.

இதற்குப் பிறகு, உடல் பரிசோதனை மேற்கொள்கின்றனர். தேவைப்பட்டால், பிரோஸ்டேட் சுரப்பியையும் பரிசோதிக்கலாம். சிறுநீர் பரிசோதனை (சிறுநீரைச் சோதிக்க), யூரோஃப்ளோமெட்ரி (சிறுநீர் வெளியேறும் வேகத்தை அறிய), சிறுநீர் கழித்த பின் சிறுநீர்ப்பையில் எஞ்சியிருக்கும் சிறுநீரின் அளவை அளவிடுதல் (post-void residual measurement) போன்ற சில எளிய பரிசோதனைகளும் செய்யப்படலாம். ஏதேனும் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவர்கள் சிஸ்டோஸ்கோபி (Cystoscopy) அல்லது இமேஜிங் ஸ்கேன்கள் போன்ற இன்னும் விரிவான பரிசோதனைகளை மேற்கொள்ளப் பரிந்துரைக்கலாம்.

பி.எம்.டி நிலையாகத் தொடர்ந்தாலோ, தீவிரமடைந்தாலோ, அசௌகரியத்தை ஏற்படுத்தினாலோ, அல்லது எரிச்சல், வலி, சிறுநீரில் ரத்தம், அல்லது பலவீனமான சிறுநீர் ஓட்டம் போன்ற பிற அறிகுறிகளுடன் சேர்ந்து ஏற்பட்டாலோ, அதை முறையாகப் பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக இளம் ஆண்கள் இந்த அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது.

பெரும்பாலான நேரங்களில், லேசான அளவிலான பி.எம்.டி ஆபத்தானது அல்ல. ஆனால் இதுவொரு பெரிய உடல்நலப் பிரச்னையின் அறிகுறியாக இருக்குமாயின், நோயைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதம் மேலும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும்.

பெரும்பாலும், பி.எம்.டி-யின் மிகப்பெரிய தாக்கம் மனநலத்தின் மீதே ஏற்படுகிறது. இது மன அழுத்தம் மற்றும் கூச்ச உணர்வை ஏற்படுத்தக்கூடும்.

சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்

பட மூலாதாரம்,Getty Images

வீட்டிலேயே அவதானிப்பது எப்படி?

சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் பிரச்னை உள்ளவர்கள், வீட்டில் ஓர் எளிய "சிறுநீர்ப்பை நாட்குறிப்பை" வைத்திருக்கலாம். அதில், எப்போது சொட்டுசொட்டாக சிறுநீர் வடிதல் ஏற்படுகிறது, அது எவ்வளவு அதிகமாக நிகழ்கிறது, எவ்வளவு தண்ணீர் குடிக்கிறார்கள், சிறுநீர் கழித்த பிறகு சிறிது நேரம் காத்திருப்பது ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா என்பனவற்றைக் குறித்து வைக்கலாம்.

ஆனால், இந்தக் குறிப்புகளை வைத்திருப்பதால் மருத்துவரை நாடுவதைத் தவிர்க்கலாம் என்று அர்த்தமல்ல. இந்தப் பிரச்னை மோசமடைந்தால், மருத்துவ உதவி நிச்சயமாக அவசியம். "இந்த நாட்குறிப்பு பயனுள்ளது. இந்தப் பிரச்னையின் போக்கு குறித்துத் தெளிவான புரிதலை ஏற்படுத்த இது உதவுகிறது. ஆனால் அறிகுறிகள் தொடர்ந்தால், சுய கவனிப்பு மட்டுமே போதாது, பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்," என்று மருத்துவர் ஷ்யாம் வர்மா விளக்குகிறார்.

மேலும் அவர், "சில சொட்டுகள் மட்டும் வடிந்தால், அதற்குப் பெரிய காரணம் இருந்தால் மட்டுமே மருந்து தேவைப்படும். தனிப்பட்ட அளவில் பி.எம்.டி மட்டும் இருந்தால் மருந்துகள் அரிதாகவே பரிந்துரைக்கப்படுகின்றன. இடுப்புத் தளப் பயிற்சி மற்றும் சிறுநீர்க் குழாய் மில்கிங் போன்ற பயிற்சிகள் பி.எம்.டி-க்கான மிகவும் பயனுள்ள, ஆதாரங்கள் அடிப்படையிலான பலனளிக்கும் நுட்பங்களாகும்," என்று கூறினார்.

மருத்துவர் வர்மா கெகல் பயிற்சிகள் பற்றிய சில முக்கியக் குறிப்புகளையும் விளக்கினார். "தவறான தசைகளை இறுக்குவது, வயிற்று, பிட்ட அல்லது தொடைத் தசைகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது, மூச்சை அடக்கி வைப்பது, ஒழுங்கற்ற முறையில் உடற்பயிற்சி செய்வது, சில நாட்களில் உடனடிப் பலன்களை எதிர்பார்ப்பது போன்றவை மிகப்பெரிய தவறுகளாகும். பல ஆண்கள் 'இறுக்குதல்' பயிற்சிகளைச் செய்கிறார்கள். ஆனால் இடுப்புத் தளத்தை எவ்வாறு சரியாகச் சுருக்குவது என்று அவர்களுக்குக் கற்பிக்கப்படுவதில்லை. உடற்பயிற்சியின் தீவிரத்தைவிட, அவர்கள் செய்யும் பயிற்சியின் நுட்பமே மிகவும் முக்கியமானது."

பி.எம்.டி-யால் ஏற்படும் மனநல சிக்கல்கள்

சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் பிரச்னை ஒரு தீவிரமான மருத்துவ நோயல்ல என்றாலும், அது ஒருவரை உளவியல் ரீதியாகப் பாதிக்கக்கூடும். இதன் காரணமாகப் பல ஆண்கள் கூச்சம், பதற்றம், தன்னம்பிக்கை இழப்பு ஆகியவற்றை உணர்கின்றனர்.

தங்கள் ஆடை ஈரமாகிவிடுமோ அல்லது கறைபட்டுவிடுமோ என்ற கவலையில் சிலர் வெளியே செல்வதையோ அல்லது பிறரைச் சந்திப்பதையோகூட தவிர்க்கக்கூடும்.

இதுகுறித்துப் பேசிய மருத்துவர் ஷ்யாம் வர்மா, "பல நோயாளிகள், பி.எம்.டி பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். ஆனால் இதுவொரு பொதுவான, சிகிச்சை அளிக்கக்கூடிய குறைபாடு என்பதால், இதற்காக கூச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை" என்று கூறுகிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...   https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

ஒருவர் தனது அன்றாட வாழ்வில் உணவுமுறையை மாற்றுவது அல்லது உடற்பயிற்சிகளைச் செய்வது போன்ற பெரிய மாற்றங்களைச் செய்ய விரும்பினால், ஒரு மருத்துவர் மற்றும் தகுந்த பயிற்சி பெற்ற நிபுணரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.

முதலில் ஒரு மருத்துவரிடம் சென்று முறையான பரிசோதனைகளைச் செய்துகொள்வதே இதற்கான மிகச் சிறந்த வழிமுறை. அதன் மூலம் பிரச்னையைத் தெளிவாகப் புரிந்துகொள்வது, பின்னர் அவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதற்கு உதவும்.

சுருக்கமாகக் கூறினால், பி.எம்.டி என்பது உயிருக்கோ உடலுக்கோ ஆபத்தான பிரச்னையல்ல என்றாலும், அது ஒருவரின் தன்னம்பிக்கையையும் மன அமைதியையும் பாதிக்கக்கூடியது. இதற்கு சரியான மருத்துவ உதவியைப் பெறுவதன் மூலம், இந்த நிலையை வெகுவாக மேம்படுத்திக்கொள்ள முடியும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c20344lrly6o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.