Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள முஸ்லிம் கலவரம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வரலாற்றில் முதல் இனக்கலவரம்,

சிங்கள முஸ்லிம் கலவரம்.

இலங்கையில் முஸ்லிம் மக்களின் மறுக்கப்பட்ட வாழ்வு

சபேசன்.

கனடா

இலங்கையில் வடக்கு தெற்கு எங்கும் அரசினாலும் புலிகளாலும் காட்டுத்தர்பார் நடாத்தப்படுகின்றது. புலிகளால் நடத்தப்படும் கொலைகளையும் காணாமல் போதல்களையும் பெரிதாக கூறும் அரசும, அதே போன்று அரசும் அரசு சார்பு குழுக்களும் செய்யும் கொலைகளையும் காணாமற்போதல்களையும் புலிகளும் பெரிதாக்கும் பிரச்சாரங்களும் ஒன்றை மட்டும் தெளிவாக புரியவைக்கின்றன. அதாவது எத்தனை மனித உரிமை அமைப்புகள் கண்டித்தாலும் நாங்கள் இவற்றை (கொலைகளையும், காணாமல் போதல்களையும்) நிறுத்தப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்போம் என்பதையே.

இரண்டு பகுதிகளும் ஒன்றை ஒன்று விட்டுக்கொடாமல் இனவாத அரசின் இருத்தலிற்காக பௌத்த சிங்கள இனவாதமும, தனது சொந்த அதிகாரத்தை வழிசமைப்பதற்காக புலிகளும் தொடர்கின்ற சதுரங்கம். இந்த நிலையில் அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பாக முஸ்லிம் மக்களின் நிலையென்பது மிகவும் சிக்கலான வடிவத்தை அடைந்த பொழுதிலும் தொடரப் போகின்ற(?) சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் கட்சிகள் தனித்துவமாக கலந்து கொள்வதாக இருப்பது முன்னேற்றமான ஒரு விடையமாக பார்க்க முடியும்.

இலங்கை பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மேல் இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆரம்பத்தில் வர்த்தகம், தொழில் முன்னுரிமைக்கான போட்டியாகவும் பின்னர் காலப்போக்கில் சிங்களப் பெரும்பான்மையினரின் வாக்குச்சீட்டிற்காகவும் திட்டமிட்டு இனவாதம் தூபமிடப்பட்டது. இந்தப்பிழைப்பு வாதம் U N P , S L F P , J V P போன்ற கட்சிகளினால் சிங்கள மக்கள் மத்தியில் இனவாத உருவேற்றியது. இலங்கையின் வறுமை, வேலையின்மை, பற்றாக்குறை போன்றவற்றின் பிரதான காரணங்கள் நவகாலனித்துவம், காலனித்துவம், ஒவ்வொரு கட்சிகளினதும் தனிநபர்களினதும் சுயநலம் போன்றவற்றை அம்பலப்படுத்தி போராடவேண்டிய சிங்கள அரசியல் கட்சிகள் இதற்குப் பதிலாக குறுகிய அரசியல் இலாப நோக்குடன் தமிழ், முஸ்லிம், மலையக மக்களை இப்பற்றாக்குறைகளுக்கு காரணகர்த்தாக்களாக்கின. வாக்குச்சீட்டிற்காக இனவாதத்தை பயன்படுத்தியது.

இவற்றின் எதிர் மறையான விளைவுகளை தமிழ் தலமைகளின் வரலாற்றிலும் காணலாம. தமிழ் மக்களின் மேல் அழுத்தப்பட்ட இனவாதத்திற்கு சரியான காரணங்களi கண்டுகொள்ள முடியாத தமிழ்த்தலைமைகள் தமது தோல்விகளிற்கான காரணத்தை முஸலிம் மக்களின் மேல் கொட்டியதை இலங்கையின் இனக்கலவர வரலாற்றினை கூர்ந்து நோக்கினால் புரிந்து கொள்ளமுடியும்.

சிங்கள இனவாத கட்சிகள் திட்டமிட்ட முறையில் இனவாதத்தை தமிழ் மக்களின் மேல் கொட்டியது போலவே முஸ்லிம் மக்களின் மேலும் செலுத்தியது. 78ம் ஆண்டு வரையிலும் சிங்களத்தேர்தல் தொகுதிகளில் அரை அரைவாசியாக U N P யும்S L F P யும் இருக்கும் போது மூன்றாவதாக தேர்தல் வெற்றியை நிர்ணயம் செய்யும் சிறு சிறு சமூகப் பகுதிகளாக முஸ்லிம்கள் பல தொகுதிகளில் அமைந்திருந்தனர். இந்த காரணத்தினால் இரண்டு பெரிய சிங்களக் கட்சிகளாலும் இவர்கள் விலைபேசப்படும் நிலமை உருவாகியது. இவற்றுக்கெல்வாம் காரணம் இலங்கையின் அரசியலை நிர்ணயிக்கக்கூடிய முஸ்லிம்களின் அரசியல் தலமையானது துர்ப்பாக்கிய வசமாக முஸ்லிம் பணக்காரர்களின் கைவசம் இருந்தததே ஆகும். ஆனால் இந்த நிலமை பிற்காலங்களில் மாறிவிட்டது.

1978ல் சிறு தொகுதிகள் மூலம் தேர்தலில் தெரிவு செய்யும் முறை கைவிடப்பட்டு விகிதாசார தெரிவு முறை நாடாளுமன்றத்தில் அமுல்படுத்தப்பட்டது. இது முஸ்லீம்களின் முக்கியத்துவமான தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் பலத்தை இழக்கவைத்தது.

இந்தப் புதியநிலமையானது இரத்தினக்கல் வியாபாரம் போன்ற வர்த்தகம்களை முஸ்லீம் பணக்காரர்களிடமிருந்து சிங்கள வர்த்தகர்களின் கைகளிற்கு இனவாதக்கட்சிகளால் இடம்மாற்ற உதவியது. தொடர்ச்சியாக முஸ்லீம் ஏழை மக்களின் வாழ்வில் இனரீதியாகவும், சமூக பொருளாதார ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்பட்டன. இவை முஸ்லீம் மக்களின் அரசியல் கொழும்புசார் பணக்கார முஸ்லீம் தலமைகளிடமிருந்து விடுபட்டு இவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலிலுள்ள முஸ்லீம்களிடமும், நடுத்தர விவசாய முஸ்லீம்களிடமும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பாராளுமன்ற உயர் பதவிகளிலிருந்து கூட முஸ்லீம்கள் தூக்கியெறியப்பட்டனர். இக்காலங்களிற்கு முன்னரே முஸ்லீம் எதிர்ப்புணர்வு, வன்முறை வடிவத்தில் சிங்கள இனவாதக்கட்சிகளால் ஏவிவிடப்பட்டன. எழுபதுகளில் நடைபெற்ற முஸ்லீம் விரோத நடவடிக்கைகளில் சிங்கள அரசுதான் பின்னின்றது.

76ம் ஆண்டு புத்தளம் பள்ளிவாசலும் அதன் அண்டைகிராமங்களும் தாக்கப் பட்டும் எரிக்கப்பட்டும் பல முஸ்லீம்கள் கொலலப்பட்டதிற்கும் S.L. F. P அரசு பின்னின்றது.

82ல் காலி நகரிலும் அரசபயங்கரவாதம் முஸ்லீம் மக்கள் மேல் ஏவப்பட்டது. இதற்கு U.N.P அரசாங்கம் பின்னின்றது.

இந்த நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் கொழும்பில் உருவாகிய யாழ்ப்பாண பணக்காரர்களின் கூட்டம் அங்கே வர்த்தகம், தொழில் முன்னுரிமை போன்றவற்றிற்கு போட்டி போட வேண்டி ஏற்பட்டது. இதற்காக முஸ்லீம்களையும், இந்திய வம்சாவழிகளையும் காட்டிக்கொடுத்தேனும் தமது அபிலாசைகளை நிறைவேற்றியது. ஊதாரணமாக சேர் பொன் இராமநாதன் போன்றோர் முஸ்லிம்களிற்கு எதிரான உரைகளை நிகழ்த்தியிருந்தனர். 48ல் தமிழ்க்காங்கிரஸ் கட்சி தங்கள் சொந்த நலன்களுக்காக, மலையக தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அவர்களுக்கு பச்கைத் துரோகமிழைத்ததும் குறிப்பிடப்பட வேண்டும்.

1915 ம் ஆண்டு கலவரம் சிங்கள தமிழ் கலவரமாக இல்லாமல், சிங்கள முஸ்லீம் கலவரமாக நடந்து முடிந்ததும் இந்த வரலாற்றுத் துரோகப்பின்னணிகளே ஆகும்.

இலங்கையின் வரலாற்றில் முதல் இனக்கலவரம், சிங்கள முஸ்லிம் கலவரம் ஆகும்.

தமிழரசுக் கட்சியின் தோற்றத்தின் போது கிழக்கு மாகாண முஸ்லிம்களுடன் மேலோட்டமான ஒற்றுமைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் சரிவர வெற்றிபெறவில்லை. அதன் காரணத்தினால் நூற்றுக்கணக்கான சதுரமைல் பரப்புள்ள நிலங்கள் முஸ்லிம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டதிற்கு எதிரான போராட்டம் வலுப்பெறவில்லை.

தமிழ்க்கட்சிகளுடன் பாராளுமன்றம் சென்ற பல முஸ்லிம்கள் பின்னர் சிங்கள இனவாதக்கடசிகளுடன் இணைந்து கொண்டனர். (இதனை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் செய்திருந்தார்கள்) ஆனால் அக்காலங்களில் முஸ்லிம்கள் மட்டும்தான் அரசியலில் நம்பத்தகாதவர்கள் என்ற அபிப்பிராயம் தமிழர்களிடம் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. அதேசமயம் அறுபதுகளிலிருந்தே முஸ்லிம்கள் பலர் தமிழ் தேசிய விடுதலைப்போராட்டங்களிலும், சத்தியாக்கிரகமங்களிலும் பங்கு கொண்டு சிறை சென்ற வரலாறுகள் பலவுண்டு.

ஆனால் தமிழ் பிரதிநிதிகள் தங்களுடன் சேர்ந்து போராடிய முஸ்லிம் இளைஞர்களையோ ஏழை மக்களையோ முதன்மைப்படுத்தாமல் கொழும்புசார் பணக்கார முஸ்லிம்களின் தலமைத்துவத்தின் அரசியல் சூதாட்டங்களையே பெரிதுபடுத்தினார்கள்.

இதன் காரணத்தினால் முஸ்லிம்களை அரசியலில் நம்பமுடியாது என்று தமிழர்களிடையேயும் தமிழர்களை அரசியலில் நம்பமுடியாது என்று முஸலிம்களிடையேயும் கருத்துப் பரவியது. தமிழர் கூட்டணியின் வழியில் தோன்றிய இயக்கங்களும் இக்கருத்தோட்டத்தை மாற்ற பெரிய அளவில் முயற்சிக்கவில்லை.

கிழக்கு மாகாணத்தில் 33 சதவீதமும் மற்றும் அம்பாறை, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற மாவட்டங்களில் குறிப்படத்தக்க அளவு கணிசமான தொகையினரும் வாழ்ந்தனர். ஆனால் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் சிங்களப் பிரதேசங்களில் உள்ள தொகுதிகளிலேயே சிதறி வாழ்ந்தனர்.

எது எப்படியிருந்த போதும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் கிழக்கு மாகாணம் "தமிழர்கள் மாகாணம்" என்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். இது யாழ்ப்பாண நோக்கில் எடுத்த மிகவும் பிழையான மனோபாவமாகும். அன்று புலிகளின் மூத்த உறுப்பினரான யோகியிலிருந்து இன்றைய தமிழ் தேசியகூட்டமைப்பானானாலும் சரி இன்றைய சு.ப தமிழ்ச்செல்வனானாலும் சரி வெளிப்படையாக வெட்கமில்லாமல் "முஸ்லிம்கள் தமிழர்களின் நலன் சார்ந்தே அரசியல் முடிவுகள் எடுக்கவேண்டும்" என்று அவர்களின் ஊடகங்களில் கூறுகிறார்கள்.

இன்று மட்டுமல்ல பழைய தமிழ் கட்சிகளான தமிழரசுக்கட்சி, கூட்டணி போன்றவற்றின் பிரதிநிதிகள் சிங்கள அரசுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளில் கூட முஸ்லிம்களின் அபிலாசைகளிற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இப்படியாக இலங்கையின் அரசியல் வரலாற்றில் இனங்களிடையே காட்டிக் கொடுப்பிற்காகவும் குறுகிய இலாபத்திற்காக சோரம் போவதும் இனங்களிடையே பரஸ்பர நம்பிக்கையின்மையையே வளர்த்துள்ளது.

தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக புறப்பட்ட பிரதான இயக்கங்கள் எல்லாம் முஸ்லிம் மக்களை ஒரே இனத்தவர்களாகவோ அல்லது சகோதர மக்களாகவோ நடத்தவில்லை. இது இவர்களின் கடந்தகால அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்தப்பபட்டுள்ளது. முக்கியமாக புலிகளின் அராஜகம் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை இரத்தப்பலி எடுத்தது. இதன் விளைவாலும், இனவாத சிங்கள அரசினால் தூண்டப்பட்டும் முஸ்லிம்கள் சிலரும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் பல அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தனர். இவற்றால் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே குரோத உணர்வு உக்கிர நிலமையடைந்தது.

பழைய தமிழ்த் தலைமைகள் கூட இன ஒடுக்குமுறையை "தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையாக" பேசினார்கள். ஆனால் இன்று குறிப்பாக புலிகளால் "தமிழர்களின் பிரச்சனையாகவே" பார்க்கப்படுகின்றது.

அன்று தொட்டு பிரச்சனைகளை பேசும் போதும், போராடும் போதும் "தமிழ் பேசும் மக்களின் பொதுப் பிரச்சனையாகவே" பேசப்பட்டும் போராடப்பட்டும் வந்துள்ளது. இப்போராட்டங்களில் முஸ்லிம்களும் இணைந்தே போராடிவந்துள்ளனர். ஆனால் பிரச்சனைகளுக்கான தீர்வினைத் தேடும்போது மாத்திரம் தீர்வானது "தமிழர்களுக்கு மாத்திரம்" என்று பார்க்கப்படுகின்றது.

இன்று ஏற்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் குரோதத்திற்கு புலிகளின் பங்கு என்பது பிரதான பாத்திரம் வகிக்கின்றது. சிங்கள அரசாங்கமும் இக்குரோத உணர்வினையே பாவிக்கின்றது. அன்றைய இந்திய இலங்கை அரசுகளின் ஒப்பந்தம் கூட உருப்படியான ஒரு தீர்வினை முஸ்லிம்களுக்கென முன்வைக்கவில்லை. இக்குறைபாட்டினை சில முஸ்லிம்கள் தவிர இலங்கை அரசியலில் எப்பகுதியாலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை. இந்திய அரசின் உதவியுடன் வட கிழக்கு மாகாணசபை உருவாகிய போது முஸ்லிம்களால் தெரிவு செய்யப்படாத, முஸ்லிம்களின் அபிலாசைகளை பிரதிபலிக்காத ஒரு முஸ்லிம், "அபுயூசுவ்" தெரிவுசெய்யப்பட்டார்.

இது முஸ்லிம்களின் உரிமக்கான உத்தரவாதம் உடைக்கப்பட்ட செயலாகும். அதைவிட முஸ்லிகளின் அபிலாசைகளை நிறைவேற்றியதாக போலியாக காட்டமுனைந்த செயலாகும்.

மாகாண சபையில் உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அலியது உகுமானை மாகாணசபையில் அங்கம் வகித்த E.N.D.L.F இனர் சுட்டுக்கொன்றனர்.

கிழக்கிலும் திருகோணமலையிலும் புட்டும், தேங்காய்பூவையும் போன்று அடுத்தடுத்த கிராமங்களில் வாழ்ந்த தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் தமக்கிடையே உருவாகிய சிறு பிரச்சனைகளை தம் ஊர்ப்பெரியவர்கள் மூலம் தீர்த்து முடித்தவர்களே. ஆனால் இவை அரசியலுக்காக தமிழ் சிங்கள கட்சிகளால் உருவேற்றப்பட்ட பின்னர் நிரந்தர நம்பிக்கையின்மையையே பரஸ்பரம் உருவாக்கியது. குறிப்பாக இப்பகுதி முஸ்லிம்களின் பாதுகாப்பு உத்தரவாதம் என்பது சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பை விடவும் பாதகமான நிலையிலேயே உள்ளது.

சாத்வீக போராட்ட காலங்களிலும் சரி ஆயுதப் போராட்ட காலங்களிலும் சரி முஸ்லிம்கள் இணைந்தே போராடியுள்ளனர். இருந்த போதிலும் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர்களது ஆயுதம் திரும்பியது வெட்கக்கேடான விடையமாகும். அதுவும் அரசியல் துரோகிகளாக,

'தொப்பி பிரட்டி" களாக தமிழ் மக்கள் மத்தியில் உருவேற்றப்பட்டு நடாத்தப்படுகின்றது.

பிற்காலங்களில் முஸ்லிம்களுக்கான ஒரு அரசியல் ஸ்திரநிலமையை உருவாக்க உணர்சிமயமாக பேசிவந்த அஸ்ரப, ஒரு தீவிரமான முஸ்லிம் தோற்றப்பாட்டை உருவாக்கினாh. ஆனாலும் தமிழ்த்தேசியத்தின் மிகைப்படுத்தப்பட்ட தீவிரமான பாசிச தோற்றத்தினை "ஜிகாத்" அடைவதற்கு முன்னர் எல்லைப்படுத்தப்பட்டது. இவர்களின் செயற்பாடுகள் அரசசார்பாகவும், தமிழ்மக்கள் விரோத செயற்பாடுகளாகவும் இருந்தன.

தமிழ் ஈழ்ப் பிரிவினை வாதம் என்பது ஒரு கனவுதான் என்பதை தன்னகத்தே கொண்டிருக்கும் "ஒடுக்கமான யாழ்ப்பாண சுயநல நோக்கத்தை" பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். இது கடைசிவரைக்கும் மத, பிரதேச ஒற்றுமைகளை வென்றெடுக்காது. ஆனால் அஸ்ரப்பினது நோக்கத்தை உற்றுப்பார்த்தால் சிறிலங்காவின் முழு முஸ்லிம்களை இணைக்க எடுத்த முயற்சியானது முற்று முழுதான பிரிவினையை நோக்காது ஒரு ஜனநாயக கோரிக்கையாக அமையவே முற்பட்டது எனலாம்.

முஸ்லிம்களுக்கான தனிமாகாணக் கோரிக்கை, முஸ்லிம்கள் மிக அதிகமாக வாழும் அம்பாறை மாவட்டத்தை அடிப்படையாக கொண்ட தென்கிழக்கு மாகாணக் கோரிக்கை போன்றவை ஒருவகையில் யாழ்ப்பாண முஸ்லிம்களை கருத்தில் கொள்ளவில்லை என்பதால் பரந்த வட கிழக்குக்குள் முஸ்லிம்களுக்கான சுயாட்சி அலகுகள் என்பதாகவும், அதுபோன்று பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றன.

2003 தை மாதத்தில் "ஒலுவில பிரகடனம்" தென்கிழக்கு பல்கலைகழகத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் பலலாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தினார்கள்.

தமிழர்களுக்கு 'வட்டுக்கோட்டை தீர்மானம்" எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் கொண்டதே அதேயளவிற்கு "ஒலுவில பிரகடனம்" முஸ்லிம்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

"முஸ்லிகள் அரசியல் துரோகிகள்" என்பது வெறும் புனையப்பட்ட மாயை என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இனறைய நிலையில் இலங்கை முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமாக அடையாளம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.