Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகு - கேது பெயர்ச்சி: ஒவ்வொரு ராசிக்கும் எப்படி? (2008, ஏப்ரல் 09)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராகு - கேது பெயர்ச்சி: ஒவ்வொரு ராசிக்கும் எப்படி?

ஜோதிட ரத்னா முனைவர் க. ப. வித்யாதரன்

நிகழும் சர்வஜித்து வருடம் பங்குனி மாதம் 27ஆம் நாள் புதன் கிழமை (2008, ஏப்ரல் 09) சுக்ல பட்சம், சதுர்த்தி திதி, கார்த்திகை நட்சத்திரம், ஆயுஷ்மான் நாம யோகம், வணிசை நாம கரணம், ஜீவன் நிறைந்த அமிர்தயோக கீழ்நோக்கு நாளில் சனி ஓரையும், பஞ்ச பட்சியில் வல்லூறு காலத்திலும் சூரிய உதயம் காலை மணி 8. 15க்கு ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் இடம் பெயர்கின்றனர்.

இந்த பெயர்ச்சியை அடுத்த இவ்விரு கிரகங்களின் நிலை ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடிக்கு‌ம். அதாவது 27. 10. 2009 வரையிலான கால கட்டமாகும். அதுநாள்வரை இவ்விரு கிரகங்களும் இதே நிலையிலிருந்து கதிர் வீச்சுகளை செலுத்துவர். இதனால் ஒவ்வொரு ராசிதாரருக்கும் ஏற்படும் தாக்கங்கள் :

மேஷம்:

ஐந்தில் உழைக்கும் வாழ்க்கைதான் ஐம்பதில் மகிழ்ச்சி தருமென நம்பும் நீங்கள், கடினமாக உழைத்து கரையேறுவதுடன், மற்றவர்களின் சொத்துக்கு ஒருபோதும் ஆசைப்பட மாட்டீர்கள்.

உங்களுக்கு இதுவரை ஓரளவு நல்ல பலன்களை அளித்து வந்த ராகுவும், கேதுவும் 9.4.2008 முதல் 27.10.2009 முடிய உள்ள காலகட்டங்களில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதனைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீட்டில் அமர்ந்து பொருள் வரவு, திடீர் லாபம், வாகன வசதி, பங்கு வர்த்தகத்தில் லாபம் தந்து வந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்தமருகிறார். 9.4.2008 முதல் 10.6.2008 முடிய உங்கள் ராசிநாதனின் நட்சத்திரத்திலும், 11.6.2008 முதல் 21.4.2009 வரை சுகாதிபதியின் சாரத்திலும், 22.4.2009 முதல் 27.10.2009 முடிய உள்ள காலக் கட்டத்தில் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் சாரத்திலும் செல்வதால் இனி நல்லதே நடக்கும்.

6.12.2008 முதல் 27.10.2009 முடிய உள்ள காலங்களில் ராகுவுடன் குரு சேர்வதால் எதையும் சாதித்துக் காட்டுவீர்கள். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். இந்த ராகு சுயமாக தொழில் செய்யும் சக்தியை கொடுப்பார். பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி வேற்று மதத்தவர்களின் உதவியும் தக்க சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்கும் அளவிற்கு பணம் வரும்.

மூத்த சகோதர, சகோதரிகள் உங்களைப் புரிந்துக் கொள்ளவில்லை என வருந்தினீர்களே, இனி அவர்கள் உங்களின் தியாக உணர்வை புரிந்து கொள்வார்கள். பழைய நண்பர்களிடம் கருத்துவேறுபாடுகள் இருந்ததே, இனி அவர்கள் வீட்டு கல்யாணக் காரியங்களை எடுத்து நடத்தும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். அரசாங்கத்துடன் இருந்து வந்த மோதல் போக்கு நீங்கும்.

ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. வீட்டிற்குத் தேவையான பொரு‌ட்க‌ள் வாங்குவீர்கள். மகளின் திருமணப் பேச்சு வார்த்தையில் இருந்த சிக்கல் நீங்கி சுமுகமாக முடியும். பல இடங்களில் விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லையே என வெறுப்புடன் இருந்தவர்களுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் நல்ல வேலைக் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

வியாபாரத்தில் தராதரம் அறிந்து செயல்படுவீர்கள். பழைய பாக்கிகளை நயமான பேச்சால் வசூலிப்பீர்கள். கடையை விரிவுபடுத்தி நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். வேலையாட்களின் ஆதரவும் பெருகும். பங்குதாரர்களை கலந்து ஆலோசித்து புரட்சிகரமாக முடிவு எடுப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இடமாற்றம் உண்டு. கலைஞர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். பொது சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கௌரவப் பட்டம் கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து பல அனுபவங்களையும், உறவினர்களிடையே கருத்து மோதல்களையும், முன் கோபத்தையும் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்கிறார். பகைவரைப் போல் பார்த்தப் பிள்ளைகள் இனி உங்களின் விருப்பங்களுக்கு கட்டுப்பட்டு பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள்.கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.அதிக மதிப்பெண் பெறுவார்கள். உயர்கல்வி மற்றும் உத்யோகம் சம்பந்தமாக வேற்று மாநிலம், வெளிநாட்டிற்கு பிள்ளைகளை அனுப்பி வைப்பீர்கள். எதையோ இழந்ததுபோல மன வருத்தத்துடன் வாடி வதங்கி நின்றீர்களே! இனி உற்சாகம் பிறக்கும். இனி கணவன் - மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும்.

வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும், என்றாலும் முக்கிய படிவங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து கையெழுத்திடுவது நல்லது. வீடு கட்ட தேவைப்படும் தொகையை முன்னரே சேமித்துக் கொண்டு வீடு கட்ட தொடங்குவது நல்லது. வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வாகனச் செலவு, திடீர் பயணச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். மின்னணு, மின்சார, சமையலறை சாதனங்கள் பழுதாகும்.

15.12.2008 வரை புதனின் நட்சத்திரத்தில் கேது செல்வதால் ஆன்மீகவாதிகளின் நட்பு கிடைக்கும். 16.12.2008 முதல் 25.8.2009 வரை சனியின் சாரத்தில் செல்வதால் அக்காலக் கட்டத்தில் தர்ம கர்ம பலன்கள் நடைபெறும். 26.8.2009 முதல் 27.10.2009 முடிய உங்களின் யோகாதிபதியின் நட்சத்திரத்தில் கேது செல்வதால் எதிர்பாராத பண வரவு, திடீர்யோகம் உண்டாகும்.

பரிகாரம்:

திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரையில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீவக்ர காளியம்மனையும், ஸ்ரீதேனாம்பிகை அம்மை உடனுறை ஸ்ரீசந்திர சேகரேஸ்வரரையும் அரளிப் பூ மாலை சாற்றி வணங்குங்கள்.

ரிஷபம்:

எதார்த்தமாக பேசி அனைவரையும் வசிகரிக்கும் நீங்கள், நீதி, நேர்மையை கடைப்பிடிப்பவர்கள், எதிரிக்கும் நல்லதே நினைக்கும் குணமுடையவர்கள்.

தன்னலமின்றி பொதுநலத்துடன் செயல்படுவீர்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்களை புரட்டியெடுத்த ராகுவும் கேதுவும் 9.4.2008 முதல் 27.10.2009 வரை யோகப் பலன்களை தரப்போகின்றார்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்து பாடாய்படுத்திய ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் வந்தமர்கிறார். அப்படி இப்படியுமாக பாதியிலேயே நின்றுபோன பல காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் நீங்கும். காதிற்கு இனிமையான செய்திகள் வந்துச் சேரும்.

6.10.2008 முதல் 27.10.2009 வரை ராகுவுடன் குருவும் சேர்வதால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும். இழப்புகள், ஏமாற்றங்கள், தாழ்வு மனப்பான்மைகள் நீங்கும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை கம்பெனி மாறினீர்களே! அடிக்கடி வேலை தேடி அலைந்தீர்களே! இனி நிரந்தர வேலை கிடைக்கும். சோம்பல், அசதி விலகும்.

விரும்பிய கோயில்களுக்குக்கூட செல்ல முடியாமல் இருந்தீர்களே! இனி பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி, உத்யோகம், திருமண முயற்சிகள் வெற்றியடையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைகளில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். ஆத்திரத்தால் சிலரின் நட்பை இழந்தீர்களே! இனி நட்பு வட்டம் விரியும். தகப்பனாரின் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். தந்தையாருடன் மனக்கசப்புகள் வந்து நீங்கும். சம்யோசித புத்தியால் அப்பாவின் கோபத்தை ஆற்றுவீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தமாக பெரியவர்களை கலந்துப் பேசி முடிவெடுப்பது நல்லது. விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து உறவாடுவார்கள். வழக்குகள் சாதகமாகும்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். லாபத்தை அதிகமாக்க புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். வேலையாட்களின் சம்பளத்தை உயர்த்துவீர்கள். மருந்து, பெட்ரோகெமிக்கல்ஸ், மூலிகை, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கட்டடப் பொருட்களால் ஆதாயம் அடைவீர்கள். உத்யோகத்தில் பந்தாடப்பட்டீர்களே! அதிகாரிகளின் பாரா முகம் மாறும். வேலைபளு குறையும். சக ஊழியர்கள் உங்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பார்கள். சம்பள கூடும், பதவியும் உயரும்.22.4.2009 முதல் 27.10.2009 முடிய உள்ள காலகட்டத்தில் உங்கள் சுகாதிபதி சூரியனின் சாரத்தில் ராகு செல்வதால் விபரீத ராஜயோகம் உண்டாகும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதத்திலும் அவஸ்தைப்படுத்திய கேது பகவான் இப்போது மூன்றாவது வீட்டிலே முகமலர்ந்து அமர்கிறார்.

கணவன்- மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் வெறுப்பு மாறும் பாசமும், ஒத்துழைப்பும் அதிகரிக்கும். தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும்.அம்மாவின் உடல்நலம் சீராகும். அரைகுறையாக பாதியில் நின்ற கட்டட வேலையை வங்கிகட‌ன் உதவியுடன் முழுமையாக கட்டி முடித்து புது வீட்டில் கம்பீரமாக நுழைவீர்கள்.இளைய சகோதரருடன் பனிப்போர் வந்து நீங்கும்.

16.12.2008 முதல் 25.8.2009 முடிய உள்ள காலகட்டங்களில் கௌரவப் பதவிகள் தேடி வரும். சொத்து சேரும். பிள்ளைகளும் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சுருங்கிய முகம் மலரும். இளமை கூடும். 26.8.2009 முதல் 27.10.2009 வரை உள்ள காலகட்டத்தில் வெளியூர் பயணங்கள், திடீர் பணவரவு, போட்டிகளில் வெற்றியும் உண்டாகும்.

பரிகாரம்:

கும்பகோணத்தில் ஸ்ரீ மங்களநாயகி அம்மை உடனுறை ஸ்ரீ கும்பேஸ்வரரை நெய் விளக்கு ஏற்றி வணங்குங்கள்.

மிதுனம்:

எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று வரைமுறைப்படுத்தி வாழும் நீங்கள், வெள்ளையுள்ளமும், வெளிப்படையாக பேசும் குணமும் கொண்டவர்கள்.

9. 4. 2008 முதல் 27. 10. 2009 வரை உள்ள காலத்தில் சாயாக் கிரகங்களான ராகுவும் கேதுவும் உங்களை என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து கொண்டு ஒரு காசும் கையில் தங்கவிடாமல் துடைத்தெடுத்த ராகு பகவான், இப்பொழுது எட்டில் சென்று மறைகிறார். படமெடுத்தாடும் பாம்பு எட்டில் மறைவதால் அலைபாய்ந்து அல்லல் பட்ட உங்கள் மனம் இனி பக்குவப்படும். கால் வலி, தலை வலி, நெஞ்சு வலி என்று சொல்லிக் கொண்டிருந்த உங்கள் தந்தையின் உடல் நலம் சீராகும். தந்தை வழி சொத்தில் இருந்த சிக்கல் தீரும். உங்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியவர்கள் இனி திருப்பித் தருவார்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அசைவ, கார உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது. 6. 12. 2008 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டத்தில் ராகுவுடன் குரு சேர்வதால் விபரீத ராஜயோகம் உண்டாகும்.

குழப்பங்கள், அலட்சியப்போக்கு மாறும். கணவன் - மனைவிக்குள் சின்ன சின்ன விவாதங்கள் வந்து நீங்கும். ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீண் சந்தேகங்களை தவிர்க்கப்பாருங்கள். மனைவி வழி உறவினர்களால் அலைச்சலும், செலவுகளும் அதிகரிக்கும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பையில் கட்டி வந்து நீங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். குடும்ப சூழ்நிலையைப் புரிந்து நடந்து கொள்வார்கள். கடினமான பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள்.

நல்ல காற்றோட்டம், வெளிச்சம், தண்ணீர் வசதி உள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். ஷேர், புரோக்கரேஜ், கமிசன் வகைகளால் லாபம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களை சிலர் விமர்சனம் செய்வார்கள். அதனால் உங்கள் புகழ் கூடும். அக்கம்பக்கம் வீட்டாரிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.

வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் அவற்றை எல்லாம் உங்களின் திறமையால் வெல்வீர்கள். வேலையாட்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். புது ஏஜென்சி எடுத்து நடத்துவீர்கள். உத்யோகத்தில் கடினமாக உழைத்து அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அயல்நாட்டு தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். 15. 9. 2008 முதல் 21. 4. 2009க்குள் நவீன மின்னணு சாதனங்கள், ஆபரணங்கள் வந்துசேரும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு தைரியத்தையும், விடாமுயற்சியையும் தந்த கேது பகவான் இப்போது இரண்டாவது வீட்டில் நுழைகிறார். முன்னுக்குப் பின் முரணாக பேசி வந்த சகோதர, சகோதரிகள் இனி உங்களை அனுசரித்துப் போவார்கள். சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். உங்களை குறை கூறியவர்களுக்கு பதிலடி கொடுப்பீர்கள். தரக்குறைவாக பேசியவர்கள் மனம் திருந்தி வந்து மன்னிப்புக் கேட்பார்கள். பல் வலி, கண் எரிச்சல்கள் வந்து நீங்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். மகளின் திருமணப் பேச்சு வார்த்தையிலிருந்த சிக்கல்கள் நீங்கி திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களின் உதவியால் மகனுக்கு நல்ல உத்யோகம் கிடைக்கும்.

விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளப் பாருங்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 16. 12. 2008 முதல் 25. 8. 2009 முடிய உள்ள காலத்தில் திடீர் பணவரவு, செல்வாக்கு பெருகும். மாணவ, மாணவிகளே! அதிகாலையில் எழுந்துப் படியுங்கள். விடைகளை எழுதி பாருங்கள். 26. 8. 2009 முதல் 27. 10. 2009க்குள் அரசால் அனுகூலம் உண்டாகும்.

பரிகாரம்:

மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மனையும் உடனுறை ஸ்ரீ சொக்கநாதரரையும் நேரில் சென்று வணங்குங்கள்.

கடகம்:

நல்லது, கெட்டது நான்கையும் தெரிந்து செயல்படக்கூடிய நீங்கள், நல்ல சிந்தனையாளர்கள், கடினமாக உழைக்கும் குணமும், நல்லதே நினைக்கும் மனசும் கொண்டவர்கள்.

செய்நன்றி மறவாத நீங்கள் காலம் வரும்போது திருப்பிச் செய்வதற்கு ஒருபோது தயங்கமா‌ட்டீர்கள். இதுவரையில் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருந்த ராகுவும், இரண்டாம் வீட்டில் நின்ற கேதுவும் சொல்லும் அளவிற்கு நல்லதை செய்தார்கள் அல்லவா? இப்பொழுது 9. 4. 2008 முதல் 27. 10. 2009 வரை கீழ்கண்ட பலன்களைத் தருவார்கள்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து கொண்டு எதிர்பாராத வகையில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தி வந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமர்கிறார். வீண் விவாதங்கள், அலைச்சல்கள், கோபங்கள் குறையும். உங்களை ஏமாற்றுபவர்களின் குணமறிந்து ஒதுங்குவீர்கள். கணவன்- மனைவிக்குள் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகள் பெரிதாகும். எந்த விஷயமாக இருந்தாலும் சுயமாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. உறவினர்களால் அலைச்சல் உண்டாகும். நண்பர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். மனைவியின் உடல் நலத்தில் கவனம் தேவை. மருத்துவர்களின் ஆலோசனைக் கேட்பது நல்லது. வருமான அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும்.

பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். 22. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி முடிப்பீர்கள். பிரபலங்களின் நட்புக் கிடைக்கும். பால்ய நண்பர்களின் உதவிக் கிட்டும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலம் பணம் பெறுவீர்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியான வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். ரியல் எஸ்டேட், கட்டிட வகைகளால் லாபம் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவது நல்லது.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி நம்பிக்கைக்குரியவர்களிடம் ஆலோசனைக் கேட்டு தொழில் தொடங்குவீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பழைய பாக்கிகள் கைக்கு வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் காரசாரமான விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் மேலதிகாரியின் போக்கை அறிந்து நடந்துக் கொள்வீர்கள். கடின உழைப்பால் பதவி உயர்வு பெறுவீர்கள். சக ஊழியர்களால் சிறு சிறு பிரச்சனைகள் உருவாகும். கணிணி துறையில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனங்களில் நல்ல வேலைக் கிடைக்கும். நெருங்கியவரானாலும் மற்றவர்களுக்காக ஜாமின் மனுக்களில் கையெழுத்திட வேண்டாம்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்று கொண்டு பக்குவமில்லாமல் பேச வைத்த கேது பகவான், இப்போது உங்கள் ராசியிலேயே வந்தமருகிறார். சமயோஜித புத்தியுடன் இனி பேசுவீர்கள். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாக சிந்தித்த நீங்கள் இனி ஆக்கப்பூர்வமாக செயல்படுவீர்கள். 9. 4. 2008 முதல் 15. 12. 2008 முடிய உள்ள காலகட்டங்களில் ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கும். பண இழப்பு, வீண் பகை வந்துபோகும். வழக்குகளில் கவனம் தேவை. பூர்வீக சொத்தினால் சிறு சிறு பிரச்சனைகள் வந்து நீங்கும்.

16. 12. 2008 முதல் 25. 8. 2009 முடிய உள்ள காலக்கட்டங்களில் பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு மன உளைச்சல், விரையச் செலவுகள் வந்துபோகும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாருடன் குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். திடீர் பயணங்கள் உண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த குழப்பங்கள் வந்து விலகும். தியானம், யோகாவில் ஈடுபடுவது நல்லது. ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

26. 8. 2009 முதல் 27. 10. 2009 வரை உள்ள காலக்கட்டங்களில் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கப் பாருங்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளாமல் சட்டென்று பேசுவதை தவிர்க்கப் பாருங்கள். மாணவ-மாணவிகள் பாடங்களை சேகரித்து வைத்து ஒன்றாக படிக்காமல் அன்றைய பாடங்களை உடனே முடிப்பது நல்லது. கன்னிப் பெண்களுக்கு வயிற்று வலி, உயர் கல்வித் தடை வந்து விலகும். 2008 முற்பகுதியில் எதிர்பாராத பண வரவு, சொத்து சேர்க்கை, பிள்ளைகளின் திருமணம் யாவும் நிகழும்.

பரிகாரம்:

தஞ்சாவூருக்கு அருகில் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மனை வணங்குங்கள்.

சிம்மம்:

ஒரு அடி அடித்தாலும் பட்டுக்கொள்ளலாம். ஆனால் தரக்குறைவாக ஒரே ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் தாங்கிக்கொள்ளாத நீங்கள், தன்மானச் சிங்கங்கள்.

இதுவரை உங்களுக்குத் தடுமாற்றங்களையும், அவமானங்களையும் கொடுத்துவந்த ராகு, கேது இப்பொழுது 9. 4. 2008 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்ககளில் உங்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதனை பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்று கொண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினரிடையே ஏகப்பட்ட குழப்பங்களையும், வீண் வாக்குவாதங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருந்த ராகு இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார்.

9. 4. 2008 முதல் 10. 6. 2008 முடிய உள்ள காலகட்டத்தில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு உண்டு. சில பிரச்சனைகளால் எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர்கள் இனி பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள். கணவன் வழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். சந்தேகத்தினால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். வழக்குகள் சாதகமாகும். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்ற நினைத்தவர்கள் கடனை வட்டியுடன் திருப்பித் தருவார்கள். பால்ய நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பழைய கடனை அடைப்பீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த நினைப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். பழைய நகைகளை மாற்றி புதிய ஆபரணங்களை வாங்குவீர்கள்.

புதிய வீடு, மனை வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அனுசரித்துப் போவீர்கள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் வலிய வந்துப் பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வி. ஐ. பி.க்களுக்கு நெருக்கமாவீர்கள். வாகன வசதிப் பெருகும். 11. 6. 2008 முதல் 21. 4. 2009 உள்ள காலக்கட்டங்களில் கொஞ்சம் கவனமாக இருக்கப்பாருங்கள். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுங்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வுத் தேடி வரும். உத்யோகம் இல்லாமல் அலைந்துத் திரிந்தவர்களுக்கு அவர்களின் படிப்பிற்கு தகுந்த வேலைக் கிடைக்கும். வேற்று மதத்தவரின் நட்புக் கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை நீங்கும். நாக தோஷத்தை ஏற்படுத்திய ராகு மாங்கல்ய ஸ்தானத்தை விட்டு விலகுவதால் திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு உடனே திருமணம் கைக்கூடும்.

22. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலக் கட்டங்களில் வியாபாரத்தில் அதிரடியான திருப்பங்கள் நிகழும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். வேலையாட்களின் வருமானத்தை உயர்த்துவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பார்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்யோகத்தில் அதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். தூக்கி எரிந்துப் பேசிய சக ஊழியர்கள் இனி உங்களைப் பாராட்டுவார்கள். அதிகாரிகளின் ஒத்துழைப்புக் கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து தலைச் சுற்றல், நெஞ்சு வலி, மனக் குழப்பங்களை தந்த ராகு இப்போது பன்னிரெண்டில் சென்று அமர்கிறார்.

9. 4. 2008 முதல் 15. 12. 2008 முடிய உள்ள காலக்கட்டங்களில் தடைபட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். இதுவரை வேடிக்கையாகப் பேசி வந்த நீங்கள் இனி விவேகமாகவும் நடந்துக் கொள்வீர்கள். பேச்சில் முதிர்ச்சித் தெரியும். சின்ன சின்ன வலிகளை எல்லாம் ஏதேனும் பெரிய நோய்களின் தாக்கம் இருக்குமோ என அச்சப்பட்டீர்களே! இனி அந்த பயம் விலகும். இனி ஆரோக்கியம், இளமை, அழகு கூடும். மகிழ்ச்சியில் திகைப்பீர்கள்.

16. 12. 2008 முதல் 25. 8. 2009 உள்ள காலகட்டங்களில் அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். முன்கோபம், வீண் பகை வரக்கூடும். வாகனப் பழுது நீங்கும். முக்கிய புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். 26. 8. 2009 முதல் 27. 10. 2009 வரை புது முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். மகனுக்கு திருமணப் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். பால்ய நண்பர்களின் சந்திப்பினால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களின் படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசையும், பாராட்டையும் பெருவீர்கள். கன்னிப் பெண்களுக்கு கற்பனைத்திறன் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றிக் கிட்டும்.

பரிகாரம்:

விருத்தாசலத்திற்கு தெற்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் நாகேந்திரப்பட்டினம் எனும் ஊரில் எழுந்தருளியுள்ள நீலமலர்க்கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேச்சுரரை வணங்குங்கள்.

கன்னி:

ஆறாவது அறிவை அடிக்கடி பயன்படுத்தி அருகிலிருப்பவர்களை ஆச்சர்யப்படுத்தும் நீங்கள், நடுநிலையுடன் எல்லாப் பிரச்சனைகளையும் அலசி ஆராய்வதில் வல்லவர்கள் நீங்கள்தான்.

இதுவரையில் ராசிக்கு ஆறாவது வீட்டில் ராகுவும், பனிரெண்டாவது வீட்டில் கேதுவும் இருந்துகொண்டு உங்களுக்கு ஓரளவு உதவினார்கள் அல்லவா, இப்பொழுது 9. 4. 2008 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் உங்களுக்கு எவ்வாறு மாற்றங்களை கொடுக்கப்போகிறார்கள் என்பதனை பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஆறில் நின்று ஒரு பக்கம் நல்லதே செய்தாலும் மற்றொரு பக்கம் வீண் குழப்பங்கள், மறைமுக எதிரிகள், கடன் பிரச்சனைகள் என்று பல விதங்களில் அல்லல்படுத்திய ராகு, உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால், உங்களின் யோகாதிபதியான சனியின் வீட்டில் நிற்பதால் பணப் பற்றாக்குறையை நீக்குவார். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். குடும்ப வருமானம் உயரும். தாழ்வு மனப்பான்மை விலகும். உற்றார் உறவினர்களின் குணத்தைப் புரிந்துக் கொள்வீர்கள்.

கணவன் - மனைவிக்குள் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தாரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் யார் நல்லவர்கள் கெட்டவர்கள் என்பதை உணர்ந்து நடப்பீர்கள். வீண் டென்சன், அலைச்சல், முன் கோபம் குறையும். மனைவி உங்களை அனுசரித்து நடப்பார்கள். உறவினர்களிடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கணவன் வழி உறவினர்கள் உதவுவார்கள்.

9. 4. 2008 முதல் 10. 6. 2008 முடிய கொஞ்சம் நிதானமாக செயல்படப்பாருங்கள். வீண் செலவுகள் கையைக் கடிக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது நல்லது. மறதி வந்து நீங்கும். கெட்டவர்களை விட்டு விலகுவது நல்லது. உங்களின் மனக்கஷ்டங்களை அவர்களிடம் வெளிப்படுத்த வேண்டாம். எந்த ஒரு முடிவையும் தீரயோசித்து முடிவெடுங்கள். 11. 6. 2008 முதல் 21. 4. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் உங்களின் ஆசைகள் பூர்த்தியாகும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள். வெகு நாட்களாக போக நினைத்த குல தெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள்.

பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் ஆழமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. தாய்வழி உறவினர்களின் குணமறிந்து நடப்பீர்கள். மகனுக்கு நல்ல உத்யோகம் அமையும். வாகனம் வாங்குவீர்கள். கன்னிப் பெண்களுக்கு திருமணத் தடை நீங்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவ- மாணவிகளுக்கு கவிதை, கலை, கற்பனைகள் அதிகரிக்கும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல வேண்டி வரும். 22. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு பெருகும். வேலையாட்களின் அன்புத் தொல்லைகள் விலகும். சொந்தமாக வீடு ஒன்றை கட்டுவீர்கள். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்களை பழித்துப் பேசியவர்கள் இனி பாராட்டுவார்கள். வெளிநாட்டுப் பயணம் சென்று வருவீர்கள்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்து வீண் செலவுகளையும், வீண் அலைச்சலையும் தந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமருகிறார். எதிர்பாரா லாபம் உண்டாகும். என்றாலும் 9. 4. 2008 முதல் 15. 12. 2008 வரை உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். நெஞ்சு வலி, வாயுக் கோளாறு வந்து போகும். அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தேடி வரும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை வந்துபோகும். 16. 12. 2008 முதல் 25. 8. 2009 வரை திடீர் திருப்பங்கள் ஏற்படும். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு கட்டும் பணியிலிருந்த சிக்கல்கள் விலகும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மின் சாதனக் கருவிகளை வாங்குவீர்கள்.

26. 8. 2009 முதல் 27. 10. 2009 வரை எதிலும் வெற்றியே கிட்டும். மறைமுக எதிரிகளை வெல்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழும். புதிய முதலீடு செய்வீர்கள். இரும்பு, ரசாயன வகைகளால் லாபம் உண்டு. அரசாங்க தொந்தரவு நீங்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்யோகத்தில் அலுவலக வேலைகளை உடனே முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். உயரதிகாரிகள் உங்களை கருத்துக்களை கேட்டு நடப்பார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.

பரிகாரம்:

தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திட்டை எனும் தென்குடித்திட்டையில் ஸ்ரீஉலகநாயகியம்மை உடனுறை அருள்மிகு பசுபதீஸ்வரரை தீபம் ஏற்றி வணங்குங்கள்.

துலாம்:

உச்சி மீது வான் இடிந்து விழுந்தாலும் அஞ்ச மாட்டீர்கள். நெற்றிக் கண்ணையே திறந்தாலும் நிமிர்ந்து நின்று நினைத்ததை சொல்லிவிடும் ஆற்றலுடையவர்களும் நீங்கள்தான்.

இதுவரை உங்களின் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் ராகுவும், ராசிக்கு பதினோராவது வீட்டில் கேதுவும் அமர்ந்துகொண்டு மனநிறைவை கொடுத்தவர்கள் இப்பொழுது 9. 4. 2008 முதல் 27. 10. 2009 வரை உங்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து நிம்மதியாக தூங்க முடியாமல் செய்தார். இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டிலே வந்தமர்கிறார். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள்.

11. 6. 2008 முதல் 21. 4. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் தடைபட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். பிள்ளைகள் உங்களின் குணத்தைப் புரிந்துக் கொண்டு நடப்பார்கள். அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சில காரியங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். நண்பர்கள் வீட்டின் சுபகாரியங்களில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்திலிருந்த சிக்கல்கள் நீங்கி கைக்கு வந்து சேரும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சிலர் நீதிமன்றத்திற்குச் செல்லாமலேயே பிரச்சனைகளை பேசி முடிப்பீர்கள். கன்னிப் பெண்கள் பெற்றோரின் ஆலோசனைக் கேட்டு நடப்பது நல்லது. தூக்கமின்மை, கனவுத் தொல்லைகள் நீங்கும்.

தாயாரின் உடல் நலத்தில் சிறு சிறு கோளாறுகள் வந்து நீங்கும். தாய்வழி உறவினர்கள் அனுசரித்து போவார்கள்.

பழைய கடனை தீர்ப்பதற்குப் புதிய வழிப் பிறக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனத்தை சிதறவிடாமல் செல்வது நல்லது. 22. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் பணவரவு அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு நவீன ரக வாகனத்தை வாங்குவீர்கள். எனினும் கொஞ்சம் கவனமாக இயக்குங்கள்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். வேலையாட்களின் கடின உழைப்பால் லாபம் அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் கறாராகப் பேசி வேலையை விரைந்து முடிப்பீர்கள். மருந்து, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களால் அதிக லாபம் பெறுவீர்கள். உடலுக்கு ஏற்ற உணவுகளை உண்பது நல்லது. யோகா, தியானம் செய்யுங்கள். உத்யோகத்தில் யாராலும் செய்ய முடியாத கஷ்டமான வேலைகளையும் செய்து முடித்து சக ஊழியர்களை ஆச்சர்யப்படுத்துவீர்கள்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்து நல்ல பலன்களைத் தன்னால் முடிந்த வரை கொடுத்து வந்த கேது பகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்கிறார். தன்னம்பிக்கை போக்கு அதிகரிக்கும். எடுத்த வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். வேலையில்லாமல் திண்டாடியவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். வேற்று மதத்தினரால் புதிய அனுபவங்களை காண்பீர்கள். தந்தை வழி உறவினர்களால் கொஞ்சம் செலவுகளும், அலைச்சலும் வந்து நீங்கும்.

26. 8. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள கால கட்டங்களில் தடைபட்ட பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். கணவன்- மனைவிக்குள் நிலவிய வீண் வாக்குவாத போக்கு மாறும். பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். சொத்து சம்பந்தமான முக்கிய படிவங்களில் கையெழுத்திடும் போது ஒரு முறைக்கு பல முறை படித்துப் பார்த்து கவனமுடன் கையாளுங்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். வி. ஐ. பி.க்களின் சந்திப்பு நிகழும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். அக்கம்- பக்கம் வீட்டாருடன் அனுசரித்துப் போவீர்கள்.

உத்யோகத்தில் வேலை பளு அதிகரித்தாலும் தெரியாத சில வேலைகளையும் கற்றுக் கொள்ளும் புதிய அனுபவம் உண்டாகும். உயர் அதிகாரியின் ஆதரவால் பதவி உயர்வு, சம்பள உயர்வுக் கிடைக்கும். புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். சக ஊழியர்களும் உங்களை எதிர்ப்பார்கள். மேலதிகாரியைப் பற்றி சக ஊழியர்களின் மத்தியில் விமர்சனம் செய்ய வேண்டாம். பதவி உயர்வால் ஊர் விட்டு ஊர் மாற்றம் அடைவீர்கள். மாணவர்கள் வகுப்பறையில் கவனம் செலுத்த வேண்டும்.

பரிகாரம்:

நாகப்பட்டினத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு நீலாயத்தாட்சியம்மை உடனுறை ஸ்ரீ ஆதிபுராணேஸ்வரர், ஸ்ரீ காயாரோகணேஸ்வரரை பூமாலை அணிவித்து வணங்குங்கள்.

விருச்சிகம்:

மற்றவர்களை சிரிக்க வைப்பதிலும், சிந்திக்க வைப்பதிலும் வல்லவர்கள். மனிதாபிமானமும், மனசுக்குப் பிடித்தவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் தாராளமும், நெருக்கடியான நேரத்திலும் நேர்மை தவறாத பண்பும், தொடர்‌ந்து முயன்று இலக்கை எட்டிப்பிடிக்கும் குணமும் கொண்டவர்களே!

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் வீட்டில் ராகுவும், பத்தாமிடத்தில் கேதுவும் இருந்துகொண்டு உங்களுக்கு மனநிறைவைத் தந்தார்கள் அல்லவா, இப்பொழுது 9. 4. 2008 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் உங்களுக்கு என்ன தரப்போகிறார் என்பதை அறிவோம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் இடத்தில் அமர்ந்துக் கொண்டு உங்கள் நிம்மதியை குலைத்தார். தாயாருடன் வாக்குவாதங்களையும், உடல்நலத்தில் அதிக தொந்தரவுகளையும் தந்து மனக்கவலையை ஏற்படுத்திய அம்மாவின் முகம் மலரும். மகிழ்ச்சியில் திகைப்பார்கள். சுப நிகழ்ச்சிகளை இனி சிறப்பாக நடத்துவீர்கள். இதுவரை சோகச் செய்திகளை கேட்ட நீங்கள் இனி காதிற்கு இனிமையான செய்திகளை கேட்பீர்கள். தடைப்பட்ட காரியங்களை எல்லாம் விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உங்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்படுவார்கள். கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். வீண் வாக்குவாதங்கள் நீங்கும்.

9. 4. 2008 முதல் 10. 6. 2008 முடிய உள்ள காலகட்டங்களில் எதிலும் வெற்றியை தருவார். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். அவர்களின் படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். வீட்டிற்கு தேவையான சாதனங்களை வாங்குவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்த படி நல்ல வரன் வந்தமையும். இதுவரை சுடுசுடு என்றே இருந்திருப்பீர்கள். இனி பிரியமானவர்களிடம் சந்தோஷமாக பேசி மகிழ்வீர்கள். அடிக்கடி தொந்தரவுக் கொடுத்து வந்த பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களால் இருந்து வந்த அலைச்சல்களும், செலவுகளும் நீங்கும். வங்கிக் கடன் பெற்று அழகான காற்றோட்டமான வீட்டை கட்டி முடிப்பீர்கள். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். நண்பர்களின் உதவிக் கிடைக்கும். கன்னிப் பெண்கள் நல்லது எது? கெட்டது எது? என தெரிந்து புத்தி சாதுர்யத்துடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.

22. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் சவால்களில் வெற்றிப் பெறுவீர்கள். ஷேர், புரோக்ரேஜ் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் மறைமுகமாக எதிர்ப்பவர்களை வெல்வீர்கள். கறாராகப் பேசி பாக்கிகளை வசூலிப்பீர்கள். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். பழைய வேலையாட்களை நீக்கி விட்டு புதிய வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். புதிய ஏஜென்சிகளுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் நம்பிக்கைக்குரியவராக நடந்துக் கொள்வீர்கள். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். மாணவர்களுக்கு அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. ஆசிரியர்களின் அன்பை பெறுவீர்கள்.

கேதுவின் பலன்கள்:

இதுவரையில் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்து ஒரு வேலையையும் முழுமையாக செய்ய விடாமல் அலைகழித்த கேது இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்கிறார்.

உங்களை ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களைப் பாராட்டுவார்கள். முன்பெல்லாம் குடும்பத்தில் கவனம் செலுத்தாது பொறுப்பின்றி அலைந்து திரிந்த நீங்கள். இனி குடும்பத்திற்காகவே உழைப்பீர்கள். 26. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக அமையும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் உங்களின் நிலைமையை புரிந்துக் கொள்வார்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தந்தை வழி சொத்துக்களால் அலைச்சல்களும், செலவுகளும் ஏற்படும். பத்திரங்களை கவனமாக கையாளப்பாருங்கள். வேலையின்றி திரிந்தவர்களுக்கு நல்ல வேலைக் கிடைக்கும்.

உத்யோகத்தில் அதிகாரிகளால் ஏற்பட்ட சில மனக்கசப்புகள் விலகும். திறமைகள் வெளிப்படும். நீங்கள் விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள உங்களை அவமானப்படுத்தி பேசினார்களே, அந்த நிலை மாறும். உங்களின் ஆலோசனையைக் கேட்பார்கள். புதிய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சிக்கனமாக செலவு செய்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

பரிகாரம்:

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில் வீற்றிருக்கும் குன்றமுலைநாயகி உடனுறை சண்பகாரணியேசுரரை அங்குள்ள நாகத்தீர்த்தம் சூரிய புஷ்கரணியில் நீராடி, நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.

தனுசு:

நிலத்திற்கு தகுந்தாற்போல்தான் கனியின் சுவை அமையும், குலத்திற்கு தகுந்தாற்போல் தான் குணமும் இருக்கும், என்பதை அறிந்த நீங்கள் தராதரம் அறிந்து பழகுவீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகுவும், ஒன்பதாம் வீட்டில் கேதுவும் அமர்ந்து கொண்டு பணப் புழக்கத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தார்கள். இப்பொழுது 9. 4. 2008 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் உங்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு நல்ல பலன்களையும், ராஜ தந்திரங்களையும், தைரியத்தையும் தந்த ராக இப்போது உங்கள் ராசிக்கு இரண்டில் அமர்கிறார். வருமானம் அதிகரித்தாலும் அதற்குத்தகுந்தாற்போல் கொஞ்சம் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். கணவன் - மனைவிக்குள் வாக்குவாதங்கள் வந்தாலும் ஒற்றுமை ஓங்கும். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் இனி திருப்பித் தருவார்கள். பிரபலங்களின் நட்பினால் செல்வாக்கு உயரும். உங்களுக்கு நெருங்கியவர்களாக இருந்தாலும், அவர்களுக்காக வாதாடி நீங்களே பிரச்சனையை விலைக் கொடுத்து வாங்க வேண்டாம். முடிந்தவரையில் பத்திரங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்கப்பாருங்கள்.

9. 4. 2008 முதல் 10. 6. 2008 முடிய உள்ள காலகட்டங்களில் சொத்துச் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த வீண் விவாதங்கள் விலகும். பாசம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் தனி நபர் விமர்சனத்தை தவிர்க்கப்பாருங்கள். படிப்பிற்கு தகுந்த உத்யோகம் கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உருவாகும். அவர்களின் உயர் கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் சேர்த்து படிக்கச் செய்வீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். திடீர் பயணங்களால் கொஞ்சம் அலைச்சலும், செலவுகளும் ஏற்படலாம். வழக்குகளில் இழுபறியான நிலை மாறும். வீடு, மனை வாங்குவதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வீட்டை புதுமைப்படுத்துவீர்கள். அரசாங்கத்தாலும் அரசியல்வாதிகளாலும் இருந்து வந்த நெருக்கடிகள் தீரும்.

22. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் தன்னம்பிக்கை துளிர்விடும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் அதிரடியான மாற்றங்களை செய்து லாபத்தை உயர்த்துவீர்கள். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி பணிகளை விரைந்து முடிக்கச் செய்வீர்கள். புதிய சரக்குகளை உடனுக்குடன் விற்றுத் தீர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கடையை மாற்றியமைப்பீர்கள். சம்பளத்தை உயர்த்துவீர்கள். உத்யோகத்தில் இருந்து வந்த மோதல்கள் விலகும். தேங்கிக் கிடந்தப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். முழு கவனத்தையும் செலுத்துவது நல்லது. மேலதிகாரி கொடுத்த வேலைகளை உடனே முடிப்பது நல்லது. அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் லாபம் அடைவீர்கள்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து தந்தையின் உடல்நலக் குறைவையும், தூக்கமின்மை, அலைச்சலையும் தந்த கேது இப்போது உங்களின் ராசிக்கு எட்டில் வந்தமர்கிறார். 9. 4. 2008 முதல் 15. 12. 2008 முடிய வீண் செலவுகளும், திடீர் பயணங்களும் அதிகரிக்கும். முன் கோபம் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் நிதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது.

மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை. முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். புண்ணிய ஸ்தலங்களுச்சென்று வருவீர்கள். சில கால கட்டத்தில் எதிலும் முன் எச்சரிக்கையுடன் நடப்பது நல்லது. வாகனத்தை இயக்கும் போது கவனமுடன் செயல்படப்பாருங்கள். உடல்நலத்தில் வயிற்று வலி, தலைச்சுற்றல் வந்துப் போகும். வீண் பழி உண்டாகும். மற்றவர்களின் பிரச்சனைக் கண்டு விலகி இருப்பது நல்லது.

26. 8. 2009 முதல் 27. 10. 2009 முடிய எதிலும் மகிழ்ச்சி தங்கும். அவசரப்பட்டு முடிவெடுக்காமல் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பீர்கள். மனைவியின் உடல்நிலை சீராகும். மனைவி வழி உறவினர்களை அனுசரித்துப் போவீர்கள்.

எட்டில் நிற்கும் கேது மேலும் படிப்பினையும், ஆன்மீக அறிவையும், யோகா, தியானம் இவற்றில் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவார். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைக்கும். உத்யோகத்தில் அதிக வேலைச்சுமையால் குடும்பத்திரிடம் சிறு சிறு கருத்து மோதல்கள் உண்டாகும். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு நிகழும். கல்வியாளர்களின் நட்புக் கிடைக்கும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

பரிகாரம்:

காளஹஸ்தியில் வீற்றிருக்கும் ஞானப்பூங்கோதையம்மை உடனுறை காளத்தீஸ்வரரை சென்று வணங்குங்கள்.

மகரம்:

எளியாரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வம் அடிக்கும் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்த நீங்கள், வசதி வாய்ப்புகளுடன் வளர்ந்து வந்தாலும் ஏழை எளியோரை அனுசரித்துப் போவீர்கள்.

இதுவரை உங்களின் ராசிக்கு இரண்டாம் வீட்டில் ராகுவும், எட்டாவது வீட்டில் கேதுவும் உட்கார்ந்து கொண்டு கொஞ்சம் அலைக்கழித்தாலும் திடீர்த் திருப்பங்களையும் தந்தனர். இப்போது 9. 4. 2008 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் தங்களின் கதிர் வீச்சால் எப்படி உங்களை மாற்றப்போகிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் உட்கார்ந்து கொஞ்சம் அலைச்சலையும், காரியத்தடைகளையும் கொடுத்துவந்த ராகு, இப்பொழுது ராசியிலேயே வந்து அமர்வதால் இனி பேச்சில் முதிர்ச்சி தெரியும். சிலர் உங்களை அவமதித்து பேசினாலும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.

குடும்பத்தில் சின்ன சின்ன சச்சரவுகள் வந்துப் போகும். கணவன் -மனைவிக்குள் வாக்குவாதங்கள் நீடிக்கும். பிள்ளைகளின் திருமணப் பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள். 9. 4. 2008 முதல் 10. 6. 2008 முடிய உள்ள காலகட்டங்களில் ஆவிட்டம் நட்சத்திக்காரர்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. செலவுகள் துரத்தும். வீண் பகை, உறவினர்களில் சிலர் உங்களின் நிலைமையை புரிந்துகொள்ளாமல் உதவிக் கேட்டு நச்சரிப்பார்கள். நண்பர்களின் உதவிக் கிட்டும். வழக்கில் தீர்ப்புச் சற்று தாமதமாகும். ஷேர், ஸ்பெகுலேஷன் வகையில் பணம் வரும். 11. 6. 2008 முதல் 21. 4. 2009 முடிய உள்ள காலகட்டத்தில் திருவோணம் நட்சத்திரக்காரர்கள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். இராசியில் நிற்கும் ராகு யோகா, தியானம், மூலிகை வகைகளில் ஆர்வம் காட்டச் செய்வார். வேற்று மதத்தவர், மாநிலத்தவர்கள் மூலமாக ஆதாயம் அடைவீர்கள்.

கன்னிப் பெண்கள் பெற்றோரின் ஆலோசனையின்றி செயல்படவேண்டாம். 22. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலங்களில் உத்திரம் நட்சத்திரக்காரர்கள் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வழக்கு விவகாரங்களில் நிதானம் தேவை.

வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். பண வரவு திருப்திகரமாக இருந்தாலும் வரவுக்கேற்ப செலவும் இருக்கும். வேலையாட்கள் சம்பளப் பாக்கியால் சிறு சிறு பிரச்சனைகள் வந்து நீங்கும். உங்களிடம் ஒப்படைத்த வேலையை மற்றவர்களை நம்பாமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களையும் பாதுக்காப்பது நல்லது. புது ஆர்டர்கள், ஏஜென்சிகளை போராடி பெறுவீர்கள். அரசு விடயங்களில் அலட்சியப்போக்கு வேண்டாம். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். தடைபட்ட உரிமைகளும், சலுகைகளும் உடனே கிடைக்கும். அயல்நாட்டில் பணி புரிவீர்கள். மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கேதுவின் பலன்கள் :

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு உங்களை ஏகத்துக்கும் கஷ்டப்பட வைத்த கேது, இப்பொழுது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். உங்களின் தோற்றப்பொலிவு கூடும். மன உளைச்சல், வீண் டென்ஷன் குறையும். 9. 4. 2008 முதல் 15. 12. 2008 முடிய உள்ள காலகட்டங்களில் புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வி.ஐ.பி.கள் உதவுவார்கள். தடைபட்ட காரியங்கள் முடியும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அவ்வப்போது சிந்திப்பீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொஞ்சம் குடும்பத்தில் காரசாரமான விவாதங்கள் வந்துபோகும், என்றாலும் கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவீர்கள்.

16. 12. 2008 முதல் 25. 8. 2009 வரை எதிலும் மகிழ்ச்சி கிட்டும். பால்ய நண்பர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். வியாபாரத்தில் லாபம் உண்டு. போட்டிகளுக்கு பதிலடி கொடுப்பீர்கள். பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனையை ஏற்பார்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். வேலையாட்களிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். கணினி துறையினர்களுக்கு பதவி உயர்வுடன் சலுகைகளும் கிடைக்கும்.

பரிகாரம்:

திருச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ மட்டுவார்குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவரை வணங்குங்கள்.

கும்பம்:

கர்மத்தால் வந்தவற்றைத் தருமத்தால் தொலைக்க வேண்டும் என்ற பழமொழியை அறிந்த நீங்கள், முற்பிறவி சூட்சுமத்தை உணர்ந்து, இப்பிறவியில் எந்த பழிபாவமும் வராதபடி தர்மத்தின் வழியில் செல்லுவீர்கள்.

இதுவரை உங்கள் ராசியில் நின்ற ராகுவும், ராசிக்கு ஏழாம் வீட்டில் நின்ற கேதுவும் உங்களை பல வழிகளில் வாட்டி வதைத்தனர். இப்பொழுது 9. 4. 2008 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் உங்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு எப்போது பார்த்தாலும் கால் வலி, காது வலி, தலை வலி, தலை சுற்றல் என புலம்பித் தவிக்க வைத்த ராகு பகவான் இப்பொழுது பனிரெண்டாம் வீட்டிற்கு வந்தமர்வதால் நோய் நீங்கும், உற்சாகம் ததும்பும். இளமை, அழகு கூடும். இனி எப்போதுமே முகத்தில் மகிழ்ச்சி பொங்கும். விலகிச் சென்றவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். சிலருக்கு பரிதாபப்பட்டு நீங்களே சிக்கலில் மாட்டிக் கொண்டீர்களே! அந்த பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். 9. 4. 2008 முதல் 10. 6. 2008 வரை அவிட்டம் 3, 4ம் பாதத்தினர் கொஞ்சம் கவனமாக செயல்படுவது நல்லது. மன உளைச்சல், வீண் சந்தேகம் வரக்கூடும்.

11. 6. 2008 முதல் 21. 4. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிப் பொங்கும். கணவன் - மனைவியிடையே பாசப்பிணைப்பு அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்கள் விலகும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். கோவிலுக்குச் சென்று வருவீர்கள். வெளியூர் பயணங்களால் மன நிம்மதி அடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பிரபலங்களின் நட்புக் கிட்டும். பிள்ளைகளின் நீண்ட நாள் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். தூரத்து உறவினர்களின் வருகை உண்டு. வீட்டில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். கடன் கொடுத்தவர்களிடம் இருந்து வட்டியுடன் பணம் கைக்கு வந்து சேரும். வழக்குகளில் வெற்றிக் கிட்டும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். அரசால் ஆதாயம் உண்டு. அரசாங்க அதிகாரிகள் பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள். 22. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. அலைச்சலும், செலவுகளும் நீங்கும். செலவுகளை குறைத்து சிக்கனத்தைக் கையாளுவீர்கள்.

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை உங்களின் திறமையால் வெல்வீர்கள். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை மாற்றம் செய்வீர்கள். விலகிச் சென்ற வேலையாட்கள் மீண்டும் உங்களிடமே வந்து சேர்வார்கள். கூட்டுத் தொழிலில் புது முதலீடுகளை செய்வீர்கள். ஏற்றுமதி - இறக்குமதியால் அதிக லாபம் வரும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் அவர்களின் தவறை உணர்ந்து மீண்டும் வருவார்கள்.

உத்யோகத்தில் புதிய கண்டுபிடிப்புகளால் மேலதிகாரியின் பரிசையும் பாராட்டையும் பெறுவீர்கள். உயரதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். பதவி உயர்வுக் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். கணிணி துறையில் இருப்பவர்களுக்கு அயல்நாட்டு நிறுவனத்தின் வாய்ப்புக் கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்துக் கொண்டு பிரச்சனைகளின் உச்சிக்கே கேது அழைத்துச் சென்றாரே! மனைவியைப் பிரிந்து வாடினீர்களே! ஆத்திரத்தால் நிம்மதியை இழந்தீர்களே!

9. 4. 2008 முதல் 15. 12. 2008 முடிய உள்ள காலகட்டங்களில் உங்களின் தோற்றப்பொலிவு கூடும். கையில் காசு, பணம் புரளும். பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். குடும்பத்தில் மதிக்கப்படுவீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும். ஆறில் வந்திருக்கும் கேது அத்தனைக் கடனையும் தீர்த்துவிடும் அளவிற்கு வருமானத்தை அதிகம் தருவார். வீடு, மனை வாங்குவதற்கு புதிய வங்கிக் கடன் வாங்குவீர்கள். ஆரோக்கியம் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை நீங்கும். எத்தனையோ கோவில்கள் ஏறி இறங்கியும் திருமணத் தடை நீங்க வில்லையே என கவலைப்பட்டவர்களுக்கு தடை நீங்கி திருமணம் நடைபெறும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைக்கும்.

16. 12. 2008 முதல் 25. 8. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் எதிலும் வெற்றியே கிட்டும். பணப் பிரச்சனை அகலும். வழக்குகளில் புத்தி சாதுர்யத்துடன் பேசி வெற்றியடைவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எப்போதுமே டென்ஷனாக பேசிய நீங்கள் இனி பாசத்துடன் பேசுவீர்கள். உயர் ரக ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். கௌரவ பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் வி. ஐ. பி.க்களின் தொடர்பு அதிகரிக்கும்.

பரிகாரம்:

திருவண்ணாமலை, செஞ்சி அருகிலுள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியை வணங்குங்கள்.

மீனம்:

புதுமையாக சிந்திக்கும் மனமும், பூப்போல புன்னகை பூக்கும் முகபாவங்களும், எடுத்த காரியத்தை எப்படியாவது முடித்துவிடும் அபார சக்தியும், ஊரே ஒரு குடையின் கீழ் எதிர்த்து நின்றாலும் அஞ்சாமல் போராடி வெற்றிபெறும் வேங்கைகளே!

இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டில் ராகுவும், ஆறாம் வீட்டில் கேதுவும் அமர்ந்து கொண்டு கொஞ்சம் அலைக்கழித்தாலும் ஓரளவு நன்மை செய்தார்கள். இப்பொழுது 9. 4. 2008 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் உங்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு பன்னிரெண்டில் அமர்ந்து கொண்டு உங்களை ஆட்டிப்படைத்த ராகு இப்பொழுது 9. 4. 2008 முதல் 29. 10. 2009 முடிய உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்கு வருவதால் வாழ்வில் திடீர் திருப்பங்களையும், பணப்புழக்கத்தையும் கொடுப்பதுடன் விரையச் செலவுகளையும் குறைப்பார். குடும்பத்தில் இனி மகிழ்ச்சி தங்கும். உங்கள் வார்த்தையை அனைவரும் மதிப்பார்கள். சாப்பிடக்கூட முடியாமல் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருந்தீர்களே! அந்த நிலை மாறும். கணவன் - மனைவிக்குள் நிலவிய சண்டை சச்சரவுகள், சந்தேகங்கள் தீரும். அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். கடன்காரர்களைக் கண்டு அஞ்சி ஒதுங்கினீர்களே! பெரிய கடனில் ஒரு பகுதியை இனி பைசல் செய்வீர்கள்.

9. 4. 2008 முதல் 10. 6. 2008 முடிய உள்ள காலகட்டங்களில் எதிலும் வெற்றியே கிட்டும். பிள்ளைகளின் பிடிவாத குணம் இனி மாறும். உயர் கல்வியில் வெற்றி பெறுவார்கள். உங்கள் மகளுக்கு பலவரன்கள் வந்தும் கல்யாணம் முடியவில்லையே என அவ்வப்போது வருந்தினீர்களே, இனி நல்ல இடத்தில் திருமணம் முடியும். மகனின் அடிமனதில் இருக்கும் தனித் திறமைகளைக் கண்டுபிடித்து உற்சாகப்படுத்துவீர்கள். பெற்றோருடன், உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள், மனக் கசப்புகள் நீங்கும். நண்பர்கள், உறவினர்களில் சிலர் எதிரியாக மாறி, ஏகப்பட்ட தொல்லைகள் தந்தார்களே! அவர்களெல்லாம் இனி பணிந்து வருவார்கள். வெளிநாட்டுப் பயணம் நல்ல விதத்தில் அமையும். உங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தராமல் ஏமாற்றியவர்களிடமிருந்து பணம் கைக்கு வரும்.

11. 6. 2008 முதல் 21. 4. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வருங்காலத் திட்டம் ஒன்று நிறைவேறும். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள். அவர்களின் நட்பை பயன்படுத்தி பல காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். கன்னிப் பெண்களுக்குத் தடைப்பட்ட திருமணம் கூடி வரும். உயர் கல்வியில் நாட்டமில்லாமல் இருந்தீர்களே, இனி வெற்றி பெற்று, நல்ல வேலையில் சென்று அமர்வீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல், சமயோஜித புத்தியுடன் இனி செயல்படுவீர்கள். மாணவ, மாணவிகளின் நெடுநாள் கனவுகள் நனவாக உற்சாகத்துடன் படிப்பார்கள். மந்தம், மறதி விலகும். கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள்.

வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு பொருளாதார வசதியின்றி தவித்தீர்களே, இனி கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். அனுபவம் மிகுந்த நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் மோதல் போக்கு, சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் எல்லாம் மாறும். உங்களின் திறமைகள் வெளிப்படும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்த கேது பகவா‌ன், இப்பொழுது உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணியாதிபதி வீடான ஐந்தாம் வீட்டிற்கு வந்து அமர்கிறார். ஆன்மீகத்தில் நாட்டத்தை அதிகப்படுத்துவார். 16. 12. 2008 முதல் 25. 8. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் எதிலும் வெற்றியே கிட்டும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவார்கள். குடும்பத்திலும் அமைதியும், மகிழ்ச்சியும் தங்கும். அரசாங்கத்தாலும், அரசியல்வாதிகளாலும் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும். சேமித்து வைத்த பணத்தில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீண் அலைச்சலாலும், திடீர்ப் பயணங்களாலும் தூக்கமின்றி தவித்தீர்களே, உடல் உஷ்ணம் அதிகமாகி அடிவயிற்றில் வலி வந்து அவஸ்தைப்பட்டீர்களே, இனி வாடிய முகம் மலரும். கலைத்துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.

26. 8. 2009 முதல் 27. 10. 2009 வரை தடைபட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த தொடர் யுத்தமெல்லாம் மாறும். உங்கள் வார்த்தையை, ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் இருந்த நெருக்கடி நீங்கும். கம்ப்யூட்டர், செல்போன் வகைகளால் லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி வகைகளாலும் ஆதாயம் வரும். உத்யோகத்தில் வெகு நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள் உயர்வு எல்லாம் இனி உங்கள் சீட்டைத் தேடி வரும். கணினி துறையிலிருப்பவர்களுக்கு புது சலுகைகள் கிடைக்கும்.

பரிகாரம்:

திருத்தணிக்கு அருகிலுள்ள திருவலங்காட்டில் வீற்றிருக்கும் வண்டார் குழவியம்மை உடனுறை வடரண்யேஸ்வரரை தரிசித்து வணங்குங்கள்.

http://tamil.webdunia.com/religion/astrolo...080402060_1.htm

அட..இப்படியும் ஒரு மாட்டர் நடக்கிறதோ..(சரி ஜம்மு பேபிக்கு எப்படி என்று பார்போம் :icon_mrgreen: )...ம்ம் ஜம்மு பேபிக்கு நன்னா தான் போட்டிருக்கு..(அது தான் பயமா இருக்கு :wub: )...

6. 12. 2008 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டத்தில் ராகுவுடன் குரு சேர்வதால் விபரீத ராஜயோகம் உண்டாகும்.

அச்சோ..உப்படி போட்டிருக்கு..(முடியல என்னால முடியல :( )..என்ன நடக்கும் அப்ப பேபிக்கு கேள் பிரண்ட் கிடைக்குமோ அச்சோ..அட கெதியில செருங்கோ குருவும் ராகும் அப்ப தான் நம்மளிற்கு என்னவோ ஜோகமாம் :wub: ..(சில நேரம் நான் அவுஸ் பிரைம் மினிஸ்டர் ஆகிறனோ)...என்னத்தை எல்லாம் நினைக்க வேண்டி கிடக்கு :wub: ..அது எல்லாம் சரி அது என்ன விபரீத ராஜ ஜோகம் அது தான் விளங்கள்ள...எனிவே நன்னா இருந்தா சரி கூடமா இருந்தாலும் ஜம்மு பேபி பீல் பண்ணாது பாருங்கோ.. :(

உதில என்ன காமேடி என்றா ஜம்மு பேபி வெள்ளை உள்ளம் கொண்டதாம்..(உது ஒன்னும் காமேடி பண்ணல்ல தானே :wub: )..எனிவே நல்ல நன்னா நடகட்டும்...கறுப்பி அக்கா உங்களுக்கு எப்படி சொல்லவே இல்ல..தாங்ஸ் கறுப்பி அக்கா இணைத்ததிற்கு.. :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில எத்தனை பெயர்ச்சி வந்தாலும் நீ பெயர்ந்திடாதே" :wub:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.