Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசித்த சில சிலேடைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரசித்த சில சிலேடைகள்

திருமுருக கிருபானந்த வாரியாரின் உபன்யாசங்களில் அவ்வப்போது அழகான சிலேடைகள் வெளிப்படும்.

அவர் ஒரு சொற்பொழிவில் அந்த நாளைய சில பெரியவர்களுக்கும் இந்தக்காலத்து பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிட்டார்.

“அந்தக் காலத்தில் பழங்கள் என்றால் விரும்பி உண்பார்கள். இப்போதெல்லாம் பழங் “கள்" என்றால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்."

அவரது கந்தபுராணச் சொற்பொழிவில் காமதகனப் படலத்தில் காமனை(மன்மதன்)ப் பற்றிக் கூறுகையில் (இந்துக்களுக்கு ஒரு காமன், கிறித்துவர்கள், இஸ்லாமியர் ஆகிய மற்ற மதத்தினர் என்று பல காமன்கள் கிடையாது. அனைவருக்கும் ஒரே காமன்தான். அவன் அனைவருக்கும் common(காமன்)" என்றார்

விமர்சகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும்.

ஒரு முறை ஒரு பெரிய வித்வானுடைய சங்கீதத்தை விமரிசனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது.

“அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் சாரீரத்திலும் கம்மல்"

தமிழறிஞர் கி. ஆ.பெ. விசுவநாதன் அவர்கள் தன் நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்த போது “இவர் பல்துறை வித்தகர்" என்று குறிப்பிட்டார். ஆனால் அவருடன் உரையாடிய நண்பர்களுக்கு அவர் அவ்வளவு பெரிய ஞானம் படைத்தவராகத் தெரியவில்லை. பிறகு கி.ஆ.பெ. அவர்கள் விளக்கினார்: ‘இவர் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். அதனால்தான் அவ்வாறு கூறினேன்'

தமிழறிஞர் கி.வா.ஜவின் சிலேடைகள் பிரபலமானவை.

கி.வா.ஜகன்னாதன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது “உங்களுக்குப் பூரி பிடிக்குமா?" என்று கேட்டார்கள்.

“ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்று உடன் பதிலளித்தார். கி.வா.ஜ

கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ உடனே“இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.

ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் ரசிகமணி டி.கே.சி அவர்களை மாதம் ஒரு கட்டுரை எழுதித்தரும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு அன்பளிப்பாக மாதம் பத்து ரூபாய் தருவதாகவும் அதை அன்புடன் ஏற்றுக் கொள்ளும்படியும் வேண்டிக் கொண்டனர் அந்தப் பத்திரிகை நிறுவனத்தினர். “உங்களுக்கு மாதம் பத்து ரூபாய் என்பதில் சம்மதம்தானே" என்று அவர்கள் கேட்டதற்கு,

டி.கே.சி. அவர்கள், “உங்கள் பத்திரிக்கையின் தரம் மிகவும் உயர்ந்தது. நீங்கள் கொடுக்கும் மாசம் பத்து எனக்கு மா சம்பத்து" என்றார்.

அதிவீரராம பாண்டியனும் வரதுங்கப் பாண்டியனும் சகோதரர்கள். இருவரும் புலவர்கள். புரவலர்கள். அவர்களைப் பற்றிப் பாடிய ஒரு புலவர் அவர்களை “அண்டம் காக்கைக்கு ஜனித்தவர்கள்“ என்று பாடினார். வரதுங்கப் பாண்டியனுக்கு ஒரே கோபம். அவர் சற்றே கருநிறம் படைத்தவர். அதனால் தான் அப்படிப் பாடினார் என எண்ணி கோபம் அடைந்தார்.

புலவர் சொன்னார், “ நீங்கள் இருவரும் உலகத்தைக் காக்கவே பிறந்தவர்கள்" அதனால் தான் “அண்டம் காக்க ஜனித்தவர்கள் எனப் பாடினேன்" என்று.

‘பாரதி இளம் வயதிலேயே புலமையில் உயர்ந்து இருப்பதைக் கண்டு பொறாமை கொண்ட காந்திமதி நாதன் என்பவர் அவரை பாரதி சின்னப்பயல் என்று இறுதி அடி வரும்படி பாடச்சொன்னார். பாரதி தயங்கவில்லை.

காரது போல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்

பார் அதி சின்னப் பயல்

என்று பாடினார்.

பாரதி என்பதை பார் அதி என்று பதம்பிரித்து காந்திமதிநாதனை வெட்கும்படிச்

செய்தார் பாரதி

நன்றி: கி.வா.ஜ சிலேடைகள்., வாரியார் சொற்பொழிவுகள், சிந்தனைக்கு விருந்தாகும் சிலேடைகள்

  • கருத்துக்கள உறவுகள்

சிலேடைகள் தமிழிற்கு சிறப்பானவை. தொடருங்கள் நுணாவிலான்.

  • கருத்துக்கள உறவுகள்

அறிஞர் அண்ணாவின் சொல்நயம் ஒன்று.

அவர் ஒரு மேடையில் அடுக்கு மொழியுடன் சொற்பொழிவாற்றிக் கொண்டு இருக்கும் பொழுது, கூட்டத்தில் ஒருவர் எழுந்துநின்று அண்ணாவிடம்: இதுபோல் ஆங்கிலத்தில் அடுக்கு மொழியில் உங்களால் பேசமுடியுமா எனக் கேட்டார்.

அதற்கு அண்ணாத்துரையவர்கள் கோபமாக யாரது இப்படிக் கேட்டது எனக் கேட்டார்.

கேள்வி கேட்டவர் பயத்துடன் எழுந்து நின்று 'சொறி" என்றார்.

உடனே அண்ணாவும்: ஐ யாம் நாட் எ லொறி ரூ கரி யுவர் சொறி என்றார். I am not a lorry to carry your sorry.

கேட்டவர் உட்பட எல்லோரும் இதை நன்கு ரசித்தனர். 'படித்ததில் பிடித்தது". :lol::)

அறிஞர் அண்ணாவின் சொல்நயம் ஒன்று.

அவர் ஒரு மேடையில் அடுக்கு மொழியுடன் சொற்பொழிவாற்றிக் கொண்டு இருக்கும் பொழுது, கூட்டத்தில் ஒருவர் எழுந்துநின்று அண்ணாவிடம்: இதுபோல் ஆங்கிலத்தில் அடுக்கு மொழியில் உங்களால் பேசமுடியுமா எனக் கேட்டார்.

அதற்கு அண்ணாத்துரையவர்கள் கோபமாக யாரது இப்படிக் கேட்டது எனக் கேட்டார்.

கேள்வி கேட்டவர் பயத்துடன் எழுந்து நின்று 'சொறி" என்றார்.

உடனே அண்ணாவும்: ஐ யாம் நாட் எ லொறி ரூ கரி யுவர் சொறி என்றார். I am not a lorry to carry your sorry.

கேட்டவர் உட்பட எல்லோரும் இதை நன்கு ரசித்தனர். 'படித்ததில் பிடித்தது". :):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாகைப்பட்டினத்தில் காத்தான்வருணகுலாதித்தன் என்பவர் தர்ம சிந்தையோடு அன்னசத்திரம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த வழியாய் வந்த காளமேகம் பசி தீர்க்க, மாலை இருட்டும் நேரத்துக்கு அதனுள் ஆர்வத்தோடு நுழைந்தான். சத்திரத்து நிர்வாகி அவனை வரவேற்று உட்கார வைத்தார். "கொஞ்சம் பொறுங்கள், சாப்பாடு தயாரானதும் அழைக்கிறேன்" என்று வாசல் திண்ணையில் அமர வைத்தார். காளமேகமும் தன்னைப் போல் சாப்பாட்டுக்கு வந்திருந்தோருடன் அமர்ந்தான்.

ஆனால் வெகு நேரம் காத்திருந்தும் கூப்பிடுவதாய் இல்லை. காளமேகத்துக்கோ அகோரப்பசி. பொறுமை இழந்து சத்தம் போட்டவனை நிர்வாகி "இதோ ஆயிற்று; கொஞ்சம் பொறுங்கள்" என்று அமைதிப் படுத்தினார். அவருக்கு வந்திருப்பவன் காளமேகம் என்று தெரியாது. நடுநிசியும் ஆயிற்று. சாப்பாடு தாயாராகவில்லை. நாழியாகஆகப் பசி அதிகமாகி கவிஞனுக்குக் கோபம் சீறிக் கொண்டு வந்தது. நிர்வாகியைக் கூப்பிட்டான். அதற்குள் அவரே அவனைச் சாப்பிட அழைத்தார். காளமேகம் "என்னய்யா சத்திரம் நடத்துகிறீர்கள்? சாப்பிட வந்தவன் என்றால் அவ்வளவு இளக்காரமா?" என்று கத்தினான். நிர்வாகி "கொஞ்சம் தாமதம் தான் ஆகிவிட்டது. மன்னிக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். "கொஞ்சமா? பொழுது விடிந்து விடும் போல இருக்கிறதே!" என்று கோபப் பட்டு ஒரு பாடல் பாடினான்.

கத்துக்கடல் நாகைக்

.....காத்தான் தன் சத்திரத்தில்

அத்தமிக்கும்போதில்

.....அரிசி வரும் - குத்தி

உலையில் இட ஊர் அடங்கும்;

.....ஓரகப்பை அன்னம்

இலையில் இட வெள்ளி எழும்.

ஒலிக்கும் கடல்சூழ்ந்த நாகைப் பட்டினத்துக் 'காத்தான்' என்பவனது சத்திரத்தில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில்தான் சமைப்பதற்கு அரிசி வந்திறங்கும்; அரிசியைக் களைந்து உலையிலே இடும்போதோ ஊர் அரவம் அடங்கி நள்ளிரவு ஆகிவிடும். சோறு தயாராகி, வந்தவர்க்கு ஒரு அகப்பைச் சோற்றை இலையில் இடும்போது வெள்ளி நட்சத்திரம் தோன்றுகிற விடியற்காலம் தோன்றிவிடும்.

இந்தப் பாடலலைக் கேட்ட நிர்வாகி பயந்துபோய் சத்திரத்து முதலாளி காத்தானிடம் ஓடி அழைத்து வந்தார். காத்தானுக்கு வந்திருப்பது கவி காளமேகம் என்று தெரிந்து விட்டது. காளமேகத்திம் தன்னைப் பொறுத்தருளுமாறு வேண்டினார். "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும்; தயவுசெய்து மாற்றிப் பாட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அதற்குள் சாப்பிட்டுப் பசி தணிந்த நிலையில் காளமேகம் காத்தானின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்தான். "மாற்றிப் பாட வேண்டியதில்லை; இதையே பாராட்டாகக் கொள்ளலாம்" என்று சொல்லி அவனே அந்தப் பாடலை மறுபடியும் பாடி வேறு பொருள் சொன்னான்.

'காத்தானது சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் - அதாவது பஞ்ச காலத்தில் அரிசி மூட்டை மூட்டையாய் வந்திறங்கும். ஊரே அங்கு இடும் உணவை உண்டு பசி அடங்கும். இலையில் விழும் ஒரு அகப்பை அன்னம் வெள்ளி நட்சத்திரம் போலப் பளீரென்று வெண்மையாக இருக்கும்'.

காத்தான் போன்ற சாதாரண மனிதரிடம் என்று இல்லை - கடவுளிடமே இந்தக் கவிதை விளையாட்டை நிகழ்த்தியவன் அவன். ஒருமுறை அவன் திருக்கண்ணபுரம் வழியே போய்க் கொண்டிருந்தான். திடீரென்று கனமழை பிடித்துக் கொண்டது. ஒதுங்க இடம் பார்த்தான். அருகில் பெருமாள் கோயில் தென்பட்டது. மழைக்கு ஒதுங்க அங்கே ஓடியபோது அங்கிருந்த வைணவர்கள் உள்ளே வரக் கூடாது என்று தடுத்தனர். ஏனென்றால் அவன் தீவிர சிவபக்தன். அதோடு வைணவர்களின் எதிரியும் கூட. சிவனைப் பற்றி ஏராளமாகப் பாடி உள்ளானே தவிர பெருமாளைப் பற்றிப் பாட மறுப்பவன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைணவர்கள், "எங்கள் பெருமாளை உன் சிவனை விட உயர்த்திப் பாடினால் உள்ளே விடுவோம்" என்றனர்.

காளமேகம் பார்த்தான். "சரி, உங்கள் பெருமாளைத்தானே உயர்த்திப் பாட வேண்டும்? இதோ..." என்று சொல்லி "கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்" என்று முதலடியைப் பாடினான். தடுத்த வைணவர்கள் வெற்றிப் பூரிப்புடன் அவனை உள்ளே விட்டார்கள். மண்டபத்துக்குள் நுழைந்து துணியைப் பிழிந்து துடைத்துக் கொண்டு, "என்ன சொன்னேன்.? என் கடவு¨ளை விட உங்கள் கடவுள் அதிகம் என்றா சொன்னேன்? அடுத்துக் கேளுங்கள்: "கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்; உன்னை விட நான் அதிகம்" என்று சொல்லி நிறுத்தினான். வைணவர்கள் திகைத்து "அதெப்படி?" என்றார்கள். "ஓன்று கேள்- உன் பிறப்போ பத்தாம், உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை, என் பிறப்போ எண்ணத் தொளலையாதே" என்று புதிரை விடுவித்தான்.

'சிவன் தன் பக்தர்களை ரட்சிக்க பிறவி ஏதும் எடுத்ததில்லை. ஆனல் பெருமாளோ பத்து அவதாரம் எடுத்தார். அந்த வகையில் சிவனை விடப் பெருமாள் அதிகம். ஆனால் மானிடனான எனக்கு எண்ண முடியாத பிறவிகள். இதில் நான் பெருமாளை விட அதிகம். இல்லையா?' என்று விளக்கம் சொன்னான்.

கன்னபுர மாலே

.....கடவுளிலும் நீ அதிகம்

உன்னை விட நான்

.....அதிகம்- ஒன்று கேள்

உன் பிறப்போ பத்தாம்

.....உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை

என் பிறப்போ

.....எண்ணத் தொலயாதே.

காலத்தால் முற்பட்ட நந்திக் கலம்பம் என்ற நூலில் இதைவிடவும் ரசமான ஒரு பாடல் இரு பொருளுடன் அமைந்துள்ளதைக் காணலாம்.

நந்திக் கலம்பத்தின் நாயகன் நந்தி வர்மனின் வீரத்தைப் புகழ்ந்து பாடும் பாடல் அது. நந்திவர்மன் கோபத்தோடு படையெடுத்துக் கிளம்பாத போது, பகைவேந்தர்க ளின் செழிப்பான நாடுகளில் அழகான ஊர்கள் இருக்கும். அங்கே மகிழ்ச்சி ஆரவாரங்களும், பாட்டும் கூத்தும் ஏக அமர்க்களமாக இருக்கும். எங்கே பார்த்தாலும் தாமரைகள் பூத்து வனங்களும் சோலைகளுமாய் நீர்வளத்தையும் நாட்டு வளத்தையும் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும். பகை மன்னர்களிடம் தேர்களும் கூட இருக்கும்.

'ஊரும், அரவமும்,

....தாமரைக் காடும்,

உயர் வனமும்,

.....தேரும் உடைத்தென்பர்

சீறாத நாள்;'

ஆனால், பகை மன்னர்களின் அடங்காத்தனத்தையும், அக்கிரமங்களையும் கண்டு கோபமடைந்து நந்திவர்மன் படைகளோடு அந்நாடுகளுக்குள் புகுந்தால், அப்புறம் அவர்களது நிலை என்னவாகும் தெரியுமா? 'ஒன்றும் ஆகி விடாது; அப்படியதான் இருக்கும்' என்று கூறுவதுபோலச் சொல்லுகிறார் கவிஞர். சிலேடையும் ஹாஸ்யமும் கலந்த பேச்சு அது. நந்திவர்மனின் படைகள் புகுந்த பிறகும் அங்கே 'ஊரும் அரவமும், தாமரைக் காடும், உயர்வனமும், தேரும்' இருக்கத்தான் செய்யுமாம். ஆனால் இந்த 'ஊரும் அரவமும்' முதலியவை வேறு! தேசம் முழுதும் பாழாகிவிடும் என்பதைத்தான் கவிஞர் இங்கே சொல்ல வருகிறார்.

ஊரும் , அரவமும்,

.....தாமரைக் காடும்,

உயர்வனமும்,

தேரும் உடைத்தென்பர்

.....சீறாத நாள்; நந்தி

சீறியபின்,

ஊரும் அரவமும்,

தாமரைக் காடும்,

உயர்வனமும்,

தேரும் உடைத்தென்பரே

தெவ்வர் வாழும்

செழும்பதியே.

(ஊரும் அரவமும் - ஊர்ந்து செல்லும் பாம்புகளும்; தாமரைக் காடும் - தாவித்திரியும் மிருகங்களும் நிறைந்த காடுகளும் ; உயர்வனமும் - பெரிது பெரிதாக மரங்கள் நிறைந்த காடுகளும்; தேரும் - பேய்த்தேர் எனப்படும் கானல்நீரும்; தெவ்வர்-பகைவர்; செழும்பதி - செழிப்பான நாடு.)

நந்திவர்மனின் கோபத்துக்கு ஆளாகிவிட்டால் எதிரியின் நாடு காடாகிவிடும் என்ற விஷயத்தை இப்படி இரண்டு விதமாகப் பொருள்படும் படி ரசமாகப் பாடி விட்டார் நந்திக் கலம்பக ஆசிரியர். இவ்வளவு அற்புதமாகப் பாடிய கவிஞர் பெயர் தான் தெரியவில்லை.

  • 11 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலேடைச் சிதறல்கள்

வேறெந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் நம் தாய்மொழியாகிய தமிழ் மொழிக்கு உண்டு. அதில் ஒன்று- இரண்டு பொருள் தரும்படியான வார்த்தைகள் மற்ற மொழிகளைவிட தமிழில்தான் அதிகம் உள்ளன. ஒரு வார்த்தை இருபொருள் தரும்படி அழகாகப் பேசுவதை ‘சிலேடை’ என்று அழைப்பார்கள். இந்த சிலேடைத் தமிழில் வல்லவர் திரு.கி.வா.ஜ. அவர்கள். இங்கே நான் படித்து ரசித்த சில சிலேடைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு மடாதிபதி தமிழ்ப் புலவர்களை எல்லாம் அழைத்து விருந்து ஒன்று வைத்தாராம். எல்லா ஊர்களில் இருந்தும் புலவர்கள் வந்து விருந்தில் அமர்ந்தனர். ஸ்ரீவைகுண்டம் என்ற ஊருக்குப் பக்கத்தில் கடைமடை என்ற ஊர் இன்றைக்கும் இருக்கிறது. அவ்வூரைச் சேர்ந்த புலவர் ஒருவர் விருந்திற்கு மிகத் தாமதமாக வந்து சேர்ந்தார்.

மடாதிபதி அவரை வரவேற்கும் விதமாக, “வாரும் கடைமடையரே!’ என இருபொருள்பட அழைத்தாராம். கடைமடை என்ற ஊரைச் சேர்ந்தவரே என்பது ஒரு பொருள். கடைசியாக வந்த மடையரே என்பது மற்றொரு பொருள். வந்த புலவர் லேசுப்பட்டவரல்ல... அவரும் பதிலுக்கு, “வந்தேன் மடத்தலைவரே...” என்றாராம். இதற்கு மடத்திற்குத் தலைவரே என்பது ஒரு பொருள். மடையர்களுக்கெல்லாம் தலைவரே என்பது மற்றொரு பொருள்.

==================================================

பெரும் புலமை பெற்ற ஒருவர் பாட்டுப் பாடுவதிலும் வல்லமை பெற்றிருந்தார். அவர் தன் ஊரில் கடைத்தெருவுக்கு ஒருநாள் வந்தபோது, அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த கிராமத்து ஆசாமி ஒருவன் அவரை நெருங்கி, “ஐயா, நான் உங்களைப் பாடையில பார்க்கணும்” என்றானாம். ’பாடும்போது பார்க்க வேண்டும்’ என்பதை அப்படிச் சொல்லியிருக்கிறான். அவரும் அசராமல், ”அப்ப சாகையில வந்து பார்” என்றாராம். ’சாகை’ (ஜாகை) என்பது இருப்பிடத்தைக் குறிக்கும். வீட்டில் வந்து பார் என்பதை இப்படி அழகாக சிலேடையில் கூறிச் சென்றுள்ளார் புலவர்.

==================================================

வயதான புலவர் ஒருவர் கம்பு ஒன்றினை ஊன்றிக் கொண்டு தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்ட கஞ்சப்பிரபு ஒருவர் கேலியாக, ”வாரும் கம்பரே...” என்றாராம். கம்பரைப் போன்ற புலவர் என்றும் கம்பை ஊன்றியவரே என்றும் பொருள் கொள்ளும்படி அவர் பேச, இவரும் உடனே தயங்காது கம்பைச் சற்று ஓங்கி, ”அடியேன் வணக்கம்” என்றாராம்.

==================================================

ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் சபையில் ஒருநாள் தமிழ்ப் புலவர் சபை கூடியிருந்தது. எல்லாப் பகுதிகளில் இருந்தும் புலவர்கள் வந்திருந்தனர். மன்னரும் சபைக்கு வந்து அமர்ந்தார். சபை தொடங்குவதற்குமுன் தாமதமாக வேம்பத்தூரைச் சேர்ந்த ‘வெண்பா பாடுவதில் புலி’ என்று அழைக்கப்பட்ட பிச்சுவையர் வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்த மன்னர் சிலேடையாக, “வேம்புக்கு இங்கு இடமில்லை” என்றாராம். ’வேம்பு’ என்றால் கசப்பு. இந்த இனிய சபையில் கசப்புக்கு இடமில்லை என்றும், வேம்பத்தூரைச் சேர்ந்த உமக்கு இடமில்லை என்றும் இருபொருள் கொள்ளலாம்.

புலவர் விடுகிற ரகமா என்ன..? சட்டென்று சற்றும் தயங்காது வெகுவேகமாக வந்து மன்னரின் சிம்மாசனத்தின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, “வேம்பு அரசோடுதான் இருக்கும்” என்றாராம். அதாவது வேம்பு என்று தன்னை மன்னன் சொன்னதும், அரசனும், வேம்பாகிய தானும் சேர்ந்தே இருப்போம் என்றும், வேப்ப மரமும், அரச மரமும் சேர்ந்து இருந்தால் அது கோவிலாகும் என்றும் இருபொருள்படக் கூறினாராம். சபையே வியந்து சிரிக்க, மன்னரும் சிரித்து மகிழ்ந்தாராம்.

==================================================

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு அடுத்த கூட்டத்தில் பேசுவதற்கு அவசரமாகக் கிளம்பினார். அவரோடு சில நண்பர்களும் காரில் ஏறிக் கொண்டனர். அண்ணா, டிரைவரிடம், “தம்பி, விரைவாக வண்டியை ஓட்டுவாயா?” என்று கேட்டார்.

டிரைவரும் உடனே, “கவலைப்படாதீங்கய்யா... ஒரு நொடியில கொண்டு போய் விட்டுடறேன் பாருங்க...” என்றிருக்கிறார். அவர் காரை மிக வேகமாக ஓட்டிச் சென்றதில் சாலையில் ஒரு பள்ளம் இருப்பதைக் கவனிக்காமல் போக, கார் பள்ளத்தில் இறங்கி உருண்டது. அனைவரும் காரைவிட்டு வெளியே வர, நல்லவேளையாக யாருக்கும் அதிகமாகக் காயம் இல்லை.

அனைவரும் கோபமாக டிரைவரை திட்டத் தொடங்க, அண்ணா அவர்களை கையமர்த்தி விட்டு இப்படிக் கூறினாராம்: ”நாம கிளம்பறப்பவே அவர்தான் சொன்னார்ல... ஒரு ‘நொடி’யில விடறேன்னு. சொன்னபடி விட்டுட்டார். விடுங்க...” நொடி என்பதற்கு வினாடி, பள்ளம் என்று இரு பொருள் உண்டு. இப்படி அண்ணா சொன்னதும் அனைவரும் கவலை மறந்து சிரித்து விட்டார்களாம்.

==================================================

கவியரசு வைரமுத்து ஒருமுறை தன் சொந்த ஊரான வடுகபட்டிக்கு வந்திருந்தார். அவர் என் இனிய நண்பர் ஆதலால் நான் அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவது வழக்கம். அவருக்கு கவிதையைப் போலவே நகைச்சுவை உணர்வும் அதிகமுண்டு. நானும் அவரும் நண்பர்களும் காரில் வரும்போது மதுரையில் ஓரிடத்தில் பொங்கல் வைத்து விழாக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

“மதுரை இன்றைக்கும் கிராமம்தான்” என்று கவிஞர் ஆச்சரியத்தோடு சொல்ல, “அந்த போஸ்டரைப் பாருங்கள். இன்றிரவு கரகாட்டமும், பட்டிமன்றமும் நடைபெறும் என்று போட்டிருக்கிறார்கள்” என்று நான் சுட்டிக் காட்டினேன்.
“இப்போதெல்லாம் இரண்டும் ஏறத்தாழ ஒன்றுதான்” என்று ஒரு நண்பர் சொன்னார்.
உடனே வைரமுத்து, “இரண்டுக்குமே தலையில் ஏதாவது இருந்தால்தான் நல்லது” என்றார் சிரிப்போடு.
கார் ஓட்டிய டிரைவர் உட்பட அனைவரும் சிரித்து விட்டோம். அவர் சிலேடையாகக் கூறிய செய்தியை நினைத்து வியந்தோம்.

-முனைவர் கு.ஞானசம்பந்தன் எழுதிய ’பரபரப்பு, சிரிசிரிப்பு’ என்ற நூலிலிருந்து.

https://eluthu.com/kavithai/269016.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.