Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐயா சொன்னதில் ஒரு பொய் ஒரு உண்மை! -ஆனந்த விகடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சொன்னதில் ஒரு பொய் ஒரு உண்மை!

நாங்கள் அப்போது இலங்கையில் மவுண் லவினியா என்னும் இடத்தில் குடியிருந் தோம்.

அது தலைநகரத்திலிருந்து சிறிதுதூரத் தில் இருந்ததால், அங்கே கொழும்பில் இருந்த வசதிகள் கிடையாது. உதாரணம், குழாய் தண்ணீர் இல்லை, கிணற்று நீர்தான். அவரவர் வீடுகளில் கோழிகளும் ஆடுகளும் வளர்த்தார்கள். பின்னால் வாழைத் தோட்டம் போட்டார்கள். முன்னால், ஈரப்பிலா மரத்தையும் கறிவேப்பிலை மரத்தையும் ஒருவரும் நட வில்லை, அவை தானாகவே வளர்ந்தன.

நாங்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டுச் சொந்தக்காரர் ஒரு சிங்களவர், பெயர் பீரிஸ். அவர் எப்போதும் தலையிலே ஆமை ஓட்டினால் செய்த வளைந்த சீப்பு ஒன்றை அணிந்திருப்பார். ஏதோ தலையைச் சீவும்போது பாதியிலேயே அவசர வேலை ஒன்று வந்துவிட்டது போல அதை உச்சியிலேயே குத்திவைத்திருப்பார். தலையைச் சீவி முடித் ததும் அவர் சீப்பைக் கழற்றியதே இல்லை. மிகவும் நல்ல மனுஷர். நாங்கள் அவ்வப்போது சந்திப்பது கிணற்றடியிலேதான். வீட்டின் சொந்தக்காரரும் நாங்களும் அதைப் பொது வாகப் பாவித்தோம். போமஸ்துதி என்பார், தொடர்ந்து புன்சிரிப்பு. அவருக்கு தமிழ் தெரியாது. எனக்கு சிங்களம் தெரியாது. அது வசதியாகப் போனது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய நேரம். இது நடந்து இப்போது சரியாக 50 வருடமாகிறது என்றாலும், எனக்கு நாள் ஞாபகம் இருக்கிறது. அது பின்னாளில் பிரபலமாகப்போகும் ஒரு ஞாயிற்றுக்கிழமை. நான் கிணற்றடியில்நின்ற போது, சுனிதா வந்தாள். வீட்டுக்காரரின் மகள். வயது பதினாலு இருக்கும். அவள் இடை எந்த நேரமும் பூவரசங்கம்பு போல ஆடிக்கொண்டு இருக்கும். கண்கள் நேராகப் பார்க்காமல் ஓரமாகப் பார்க்கும். அன்று அவள் ஓரமாகக்கூட பார்க்கவில்லை. யாரோ முன்பின் தெரியாத ஆளைப் பார்ப்பது போல வாளியைத் தூக்கிக்கொண்டு தன் முறைக்காகக் காத்து நின்றாள். வழக்கமாக நல்ல ஒரு புன்சிரிப்பை வெளியே விடுவாள். அன்று அதுவும் இல்லை. நான் கிணற்றுக்கயிற்றையும் வாளியையும் கொடுத்தபோது வெடுக்கென்று பற்றிக்கொண்டு தலையைத் திருப்பினாள்.

அப்போதே எனக்கு விசயம் புரிந்திருக்க வேண்டும். என்னுடைய மூளை அந்த நாட்களில் மிகவும் மந்தமாகவே வேலை செய்தது.

பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்தபோது தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்தார். தமிழ்க் கட்சிகள் இதை எதிர்த்து வவுனியாவில் மாநாடு நடத்தியது சிங்களர்களுக்குப் பிடிக்கவில்லை. பொலநறுவ ரயில் நிலையத்தில் சிங்களவர்கள் ரயில் வண்டிக்குள் புகுந்து தமிழர்களைத் தாக்கினார்கள். அதைத் தொடர்ந்து, ஹிங்குராகொட என்னும் ஊரில் சிங்களக் காடையர்கள் எட்டு மாதக் கர்ப்பிணியான ஒரு தமிழ்ப் பெண்ணை வெட்டிக் கொன்றார்கள். 1958-ம் ஆண்டு மே மாதம் அந்த ஞாயிறு இரவு கலவரம் மெள்ள மெள்ள ஊர்ந்து கொழும்புவுக்கு வந்தது. அது சுனிதாவுக்குத் தெரிந்திருந்தது. எனக்குத் தெரியவில்லை.

இரவு பத்து மணி இருக்கும். பலவிதமான செய்தி கள் வரத் தொடங்கின. வீதிகளில் சனங்கள் உரத்துக் கூவிக்கொண்டு கூட்டம் கூட்டமாக ஆர்ப்பாட்டம் செய்த வாறு சென்றார்கள். ஆட்களின் ஓலமும் தூரத்திலிருந்தே கேட்டது. நாங்கள் இருந்த பகுதியில் எல்லாம் சிங்களத்தவர்கள்தான். மூன்றே மூன்று தமிழ்க் குடும்பங்கள். அவையும் தூரத் தூர இருந்தன. ஏதோ ஒரு வீட்டை உடைக்கும் சத்தம் காற்றிலே வந்தது. கூக்குரல்கூடப் பக்கத்திலே போலத் துல்லியமாகக் கேட்டது.

அண்ணர் என்னைப் பார்த்து பக்கத்து வீட்டில் போய் பீரிஸை அழைத்து வரச் சொன்னார். நான் அவர்கள் வீட்டுக்குப் போய் கதவைத் தட்டினேன். அந்த நேரத்தில் எனக்குக் கொஞ்சம் கை நடுங்கியது உண்மை. உள்ளே பெரிய சிரிப்பும் ஆரவாரமுமாக ஒரே சத்தம். அவர்கள் உள்ளே போட்ட கும்மாளத்தில் நான் கதவு தட்டிய சத்தம் எனக்கே கேட்கவில்லை. மறுபடியும் கதவைத் தட்டப் போனபோது, சுனிதா படீரென்று கதவைத் திறந்தாள். ஏதோ அடக்க முடியாத நகைச்சுவைக்கு விழுந்து விழுந்து சிரித்தவள், அப்படியே எதிர்பாராமல் என்னைக் கண்டு சிரிப்பை அடக்க முடியாமல் பாதியில் நிறுத்தினாள். பெரிய ஆரவாரமும் கும்மாளமும் திடீரென்று நின்று நிசப்தம் உண்டாகியது செயற்கையாகப்பட்டது. நான் வந்த காரியத்தை பீரிஸிடம் சொன்னேன். அப்போதுதான் அவருக்கு நாங்களும் அங்கே இருக்கிறோம் என்பது ஞாபகம் வந்தது போலத் திடுக்கிட்டார். உடனே தன் வளைந்த சீப்பை எடுத்து ஒரு கிரீடத்தை அணிவது போல நிதானமாகத் தலையிலே சூட்டிக்கொண்டு என் அண்ணரைப் பார்ப்பதற்காக வந்தார்.

அண்ணர், பீரிசுக்கு நிலைமையை விளக்கப் படுத்தினார். எந்த நேரமும் எங்கள் வீடு தாக்கு தலுக்கு உள்ளாகலாம். எங்கள் உயிரையும் உடமைகளையும் அவர்தான் பாதுகாக்க வேண்டும் என்றார். பீரிஸ் அப்போதுதான் தன் நினைவுக்கு வந்தவர் போல ஒரு புது மனிதராக மாறினார். எஙகள் பாதுகாப்புக்குத் தான் உத்தரவாதம் என்றார். அவர் திரும்ப வீட்டுக்குப் போகவில்லை. ஒரு நாற்காலியை எடுத்து வீட்டுக்கு வெளியே போட்டு அன்றிரவு முழுக்க அங்கேயே தங்கினார். தூங்கவே இல்லை. உள்ளே நாங்களும் தூங்காமல் விடிவதற்காகக் காத்திருந்தோம்.

அடுத்த நாள் காலை, அந்த மூன்று தமிழ்க் குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் வீடு உடைந்து சிதிலமாகிவிட்டதுஎன்றார்கள். ஒரு குடும்பத்து ஆட்கள் இரவோடு இரவாக மறைந்துவிட்டார் கள். எஞ்சியது நாங்கள் மட்டும்தான்.

ஒரு போலீஸ் வாகனத்தில் எங்களையும் இன்னும் சில தமிழ்க் குடும்பங்களையும் அகதி முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரேயரு பெட்டிதான் எடுத்து வரலாம் என்று கட்டளை. அந்த வீட்டில் நான், அண்ணர், மச்சாள், தங்கச்சி, தம்பி என்று பலரும் இருந்தோம். எங்கள் உடைமைகளில் எதைப் பெட்டியில் அடைப்பது, எதை விடுவது என்பது தெரியவில்லை. நான் உடுத்த உடுப்போடு புறப்பட்டேன். என் பங்குக்கு ஒரேயரு புத்தகத் தைக் கையில் எடுத்துக்கொண்டேன்.

அந்த வீட்டுக்குத் திரும்பி வருவோம் என்பது நிச்சயமில்லை. அடுத்த வேளை உணவு எப்போது, எங்கேயிருந்து வரும் என்பது தெரியாது.

அகதி முகாமில் 2,000 பேர் வரை இருந்தார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் பல முகாம்கள் இருந்தன என்று பின்னர் கேள்விப்பட்டேன். இப்போது சரியாக 50 வருடங்கள் கழித்து நினைத்துப் பார்க்கும்போது, அந்த முகாமில் நடந்தது ஒன்றும் எனக்குச் சரியாக ஞாபகம் இல்லை. ஆனால், ஒரெயரு காட்சி நினைவுக்கு வருகிறது. இத்தனை வருடங்கள் கழித்தும் நினைவில் நின்றதால், அது முக்கியமானதாக இருக்க வேண்டும்.

ஒரு கறுத்த பெண்மணி, பெரிய உடம்பு, வயது 40 இருக்கலாம். கால்களை அகட்டி நீட்டி, முழங்கால் மட்டும் சேலையைச் சிரைத்து உட்கார்ந்திருப்பார். அவருக்குப் பக்கத்திலேயே முழு போத்தல் நிறைய நல்லெண்ணெய் இருக்கும். அதை அவர் தலையிலேயே தேய்த்து ஆற அமர முடியைச் சீவி வாரி இழுப்பார். அகதி முகாமில் இருந்த அத்தனை நாட்களும் அவர் அதைச் செய்யத் தவறவில்லை. ஒரு போத்தல் நல்லெண்ணெய் மிகவும் முக்கியமானதாகப்பட்டிருக்க வேண்டும். தலைவாரி முடித்ததும், நிரைக்கு ஆட்கள் வந்து கையை நீட்டிப் பிச்சை எடுப்பது போல அவரிடம் நல்லெண்ணெய் வாங்கிக்கொண்டு போய் உச்சியில் தேய்ப்பார்கள்.

அன்று ஒரு தொண்டு நிறுவனம் அகதிகளுக்கு இலவசமாக உடைகள் வழங்கியது. ஏதோவொரு வெளிநாட்டில் யாரோ போட்டு முடித்த உடைகள்தான். அதற்காக ஆட்கள்சண்டை போட்டு, ஒருவர் மேல் இன்னொருவர் ஏறி நின்று பெற்றுக் கொண்டார்கள். உடுத்த சேலையுடன் வெளிக்கிட்ட அக்கா வுக்கு, ஒரு கம்பளிப் போர்வை கிடைத்தது. எனக்கு நாலு சைஸ் பெரிசான இரவு ஆடையின் மேல்சட்டை மட்டுமே அகப்பட்டது. கீழ்க் கால்சட்டை யாருக்குப் போனதோ தெரியாது. அந்த மேல்சட்டையின் கடைசி பட்டன் என் கைகளுக்கு எட்டாது. அவ்வளவு தூரத்தில் கிடந்தது.

மிகச் சந்தோஷமாக அதை நான் பகலிலும் இரவிலும் அணிந்துகொண்டேன். ஒரு வாரம் கழித்து, எங்களைக் கப்பலில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினார்கள். அரசாங்கத்தால் ரயில் பயணப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க முடியவில்லை என்று பின்னர் அறிந்தோம்.

நாலு நாள் கப்பல் பயணம். எங்கே போகிறோம் என்று யாராவது கேட்டால், எங்கள் தேசத்துக்கு என்று பதில் சொன்னோம். அது ஒரு எண்ணெய் கப்பல். நடக்கும்போது ஆட்கள் அடிக்கடி வழுக்கி விழுந்தார்கள். மணமோ சொல்ல முடியாது. ஆட்களின் வேர்வை மணம், கடல் மணம், எண்ணெய் மணம். அத்துடன் பலர் தலை சுற்றி வாந்தி எடுத்ததால், அந்த மணமும் சேர்ந்துகொண்டது. வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத ஒரு கலவையான மணம்.

சனங்கள் ஆடு மாடுகளைப்போலக் கிடைத்த இடங்களில் படுத்துக்கொண்டார் கள். ஒருவர் படுத்து எழும்பியதும்வேறு ஒருவர் அந்த இடத்தைப் பாய்ந்து பிடித்துக் கொண்டனர். இவ்வளவும் நடக்கும்போது, நான் பாட்டுக்கு இன்ஜின் சத்தம் காதைச் செவிடாக்கும் ஓர் ஒதுக்குப்புறமானஇடத் தில் அமர்ந்து, கொண்டுவந்த புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தேன். அந்தப்புத்தகம் டேனியல் டெஃபோ என்பவர் எழுதிய ராபின்சன் க்ரூஸோ. அது ஞாபகத்தில் இருப்பதற்குக் காரணம் என்னுடையஅந்தச் சூழலுக்கு அது அப்போது மிகவும் பொருந்தி இருந்தது. இந்த நாவலை ராபர்ட் க்னாக்ஸ் எழுதிய இலங்கை வரலாற்றுக் குறிப்பில் இருந்து திருடி எழுதியதாக பின்னாளில் படித்ததுண்டு. அப்போது அது எனக்குத் தெரியாது. ராபர்ட் க்னாக்ஸ், வெள்ளைக்காரன். கண்டி அரசனிடம் பிடிபட்டு 19 வருட காலம் சிறைத் தண்டனை அனுபவித்தவன். பின்பு எப்படியோ தப்பித்து ஓடிப் போய் தன் அனுபவங்களைப் புத்தகமாக எழுதினான்.

இந்த நாவலில் வரும் ஒரு சம்பவம், அப்போது நான் அனுபவித்த தனிமைக்குப் பொருத்தமானதாக அமைந்தது. க்ரூசோ ஓர் ஆளில்லாத தீவில் பல ஆண்டுகள் தனியாக சீவிக்கிறான். அவனுக்கு விலங்குகள், பாம்புகள், பறவைகள், பூச்சிகள் என்று எதற்கும் பயமில்லை. ஒரு நாள் கடற்கரையில் மனிதக் காலடியைக் கண்டு மிரண்டுபோகிறான்.

பீதி பிடித்து என்ன செய்யலாம் என்று தெரியாது நடுங்குகிறான். அப்போது எனக்கு ஓர் உண்மை துலங்கியது. மனிதனுடைய உண்மையான எதிரி இன்னொரு மனிதன்தான். நாங்கள் 2,000 பேர் ரயிலில் போக முடியாமல் கப்பலில் போவதற்குக் காரணம் இன்னொரு மனிதனிடம் எங்களுக்கு இருந்த அச்சம்தான்.

மத்தியான நேரத்தின்போது ஒரு தட்டை ஏந்திக்கொண்டு மறியல் கைதி போல வரிசையில் நிற்க வேண்டும். என் முறை வந்தது. இரண்டு கரண்டி எண்ணி அள்ளி என் தட்டில் போட்டான் வெள்ளைச் சீருடையில் இருந்த அந்தச் சிவப்பு இளைஞன். அது மஞ்சள் நிறத்தில் சோறு போலவே இருந்தது. சரியாக அந்த நேரம் பார்த்து பருப்பு அண்டாவில், பருப்பு முடிந்துவிட்டது. கொஞ்சம் பொறு என்று சைகை காட்டிவிட்டு அவன் உள்ளே போனான். நான் நீட்டிய கையோடு யாரோ ஒருவர் போட்டு முடித்த நீளமான இரவுச் சட் டையை அணிந்துகொண்டு நெடுநேரம் அங்கே நின்றேன். அப்போது நான் எனக்குச் சொல்லிக்கொண்டேன். 'இந்த நாளை நன்றாக ஞாபகம் வை. உன் வாழ்நாளில் இதுவே ஆகக் கீழேயான தருணம். இனிமேல் இப்படி ஒரு கணம் உன் வாழ்க்கையில் வராமல் பார்த்துக்கொள்!'

நாங்கள் யாழ்ப்பாணத்து ஆதித் துறைமுகமான பருத்தித் துறையில் போய் இறங்கியபோது, எங்களை வரவேற்கப் பெரிய கூட்டம் கூடியிருந்தது. ஏதோ போரிலே வென்று எங்கள் நாட்டுக்கு நாங்கள் திரும்புகிறோம் என்பது போல வீரத் திலகமிட்டு மரியாதை செய்தார்கள். யாழ்ப்பாணத்தில் ஒரு மாத காலம் தங்கியிருந்தோம். நிலைமை சீரானபோது, திரும்பவும் கொழும்புவுக்குப் புறப்பட்டோம். என்னுடைய படிப்பை முடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு. ஐயா அதை விரும்பவில்லை. 'எதற்காக திரும்பவும் போகிறீர்கள்? ஒருமுறை அடித்து ருசி கண்டவன் நிப்பாட்ட மாட்டான். மீண்டும் அடிப்பான். நீங்கள் திரும்பவும் இந்த நாட்டுக்கு வர வேண்டும். இது பாதுகாப்பான நாடு. இதை ஒருவரும் எங்களிடமிருந்து பறிக்க முடியாது!'

32 வருடங்களுக்குப் பிறகு 1990-ம் ஆண்டு கேர்னல் கிட்டு, சுவிட்சர்லாந்தில் என்ன பேசுவார் என்பது எனக்கு அப்போது தெரியாது. ஒரு கூட்டத்தின் முடிவில்வெள்ளைக் கார நிருபர் ஒருவர் எதிர்க் கேள்வி போட்டு கிட்டுவை மடக்கினார். 'நீங்கள் தமிழ் ஈழம், தமிழ் ஈழம் என்று சொல்லிப் பேசுகிறீர்கள். இந்தத் தமிழ் ஈழம் எங்கே இருக்கிறது. இதன் எல்லைகள் என்ன?'

கிட்டு ஒரு கணம் திகைத்து நின்றார். சிறிது அவகாசம் எடுத்து, தன்னை மீட்டுக்கொண்டு அவர் இப்படிப் பதில்அளித்தார். 'இலங்கைத் தீவின் வரைபடத்தையும் சிறிது வண்ணக் கலவையையும் ஒரு தூரிகையையும் கையிலே எடுத்துக்கொள்ளுங்கள். இலங்கையில் எந்தெந்தப் பகுதிகளில் குண்டுகள் விழுகின்றனவோ, எந்தெந்தப் பகுதியில் பீரங்கி வெடித்து அழிவுகள் நடக்கின்றனவோ, எந்தெந்த இடங்களில் தமிழ்ப் பெண்கள் சிங்கள ராணுவத்தினரின் வன்முறைக்கு ஆளாகி அவலப்படுகிறார்களோ, அந்தந்த இடங்களை எல்லாம் வரைபடத்தில் வண்ணம் தீட்டுங்கள். முடிவில் வண்ணம் பூசப்பட்ட அந்தப் பகுதிதான் தமிழ் ஈழம். அதுதான் எங்கள் எல்லைகள்!'

கிட்டு சொன்னதையும், ஐயா 50 வருடங்களுக்கு முன்னர் சொன்னதையும் ஒன்றாகச் சேர்த்து இப்போது யோசித்துப் பார்க்கிறேன். ஐயா கூறியதில் ஒன்று பொய்த்தது. ஒன்று உண்மையானது. சிங்களவர்கள் தொடர்ந்து அடிப்பார்கள் என்பது உண்மையானது. 'ஆனால், எங்கள் நாடு பாதுகாப்பானது!' என்பது பொய்த்தது. உலகிலேயே மிகவும் அபாதுகாப்பான பிரதேசமாக அது மாறிவிட்டது.

யாரோ போட்டு முடித்து தானமாகக் கிடைத்த இரவுச் சட்டையை நான் பல வருடங்களாக பல தேசங்களுக்கும் ஒரு ஞாபகத்துக்காகக் காவித் திரிந்தேன். ஒரு காலத்தில் நான் வளர்ந்து பெரியவனாகி அந்த உடையை நிரப்புவேன் என்று நினைத்தேன். அது நடக்கவே இல்லை. அந்த உடையும் ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்கு மாறும் இடைவெளியில், எங்கோ... எப்போதோ... ஏதோ ஒரு தருணத்தில் என்னை விட்டுத் தப்பியது!

- ஆனந்த விகடன்,

எழுதியவர் போரை போட்டு இருக்காலாம் கந்தப்பு.

83 கலவரத்தின் பின்னவர் இப்படியாக நம்மவர்கள் காங்கேசன் துறையில் வந்து இறங்கினார்கள். போமேரியன் நாய்க்குட்டியுடன் கப்பலில் வந்த அம்முக்குட்டி இப்பவும் என் வீட்டில் நின்று குலைக்கிறாள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.