Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை அரசின் சீன நெருக்கமும் இந்தியாவின் காய் நகர்த்தல்களும்--தாரகா

Featured Replies

இந்தியா பல்வேறு சந்தர்ப்பங்களிலும், சிறிலங்கா அரசு சீனாவுடன் நெருங்கிச் செல்வது குறித்து தனது அதிருப்திகளை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. இதன் உச்சக்கட்டமாகத்தான் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணன் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் வெளிப்படையான ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

அதில், இந்தியா ஒரு பிராந்திய சக்தி (Regional power)என்பதை வலியுறுத்திய நாராயணன், எமது வெளியுறவு கொள்கையின் வரம்புக்குள் அவர்களை இணைத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கின்ற நிலையில், இலங்கை தனது இராணுவ தேவைகளுக்காக பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு போவதை நிறுத்திக்கொள்ள வேண்டிய உச்சக்கட்டம் இதுவாகும் என்றும் அழுத்தமாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதன் பின்னரும் மகிந்த நிர்வாகம் தமது சீனாவுடனான நெருக்கத்தை குறைத்துக் கொள்ள முயற்சிக்கவில்லை. இதனை உணர்ந்த இந்தியா வழமைபோல் சிங்களத்தை அரவணைத்து வழிக்கு கொண்டுவரும் காய் நகர்த்தல்களில் ஈடுபட்டது.

நீண்டகாலமாக இலங்கை விவகாரத்தில் இந்தியா ஒரு விதமான திரைமறைவு செயற்பாடுகளையே மேற்கொண்டுவந்தது. இந்த திரைமறைவு அணுகுமுறையை(Underground intervention) நாம் தலையிடாக் கொள்கை என அழைத்துக் கொண்டாலும் அடிப்படையில் இதனை நேரடி தலையீடுகளற்ற காலமென்றே நாம் குறித்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக நோர்வேயின் மத்தியஸ்த காலத்தில்

http://cache.daylife.com/imageserve/00xTd6...்தியா ஒரு அவதானிப்பாளராகவே தன்னைச் சுருக்கிக் கொண்டது. அமைதிப் பேச்சுக்கான சூழல் யுத்தத்தை நோக்கி நகரத் தொடங்கிய வேளையிலேயே, இலங்கை விவகாரம் குறித்த தனது அவதானத்தை விரிவுபடுத்திக் கொள்ள முயன்றது. குறிப்பாக மகிந்த நிர்வாகம் ஒரு தலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை முறித்துக் கொண்ட பின்னர் இலங்கையின் களநிலைமைகளை அவதானிப்பதில் இந்தியா கூடிய கவனத்தைச் செலுத்தியது.

இந்தியாவின் முக்கியமான இராணுவ, அரசியல் ஆய்வுத்தளங்கள் மீளவும் இலங்கை அரசியல் குறித்து கூடுதல் கவனம் கொண்ட ஆய்வுகளை வெளிப்படுத்தத் தொடங்கின. இவ்வாறான ஆய்வுகள் பெரும்பாலும் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலான சக்திகள் குறிப்பாக சீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கையின் உள்ளக அரசியலை பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே இது விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் மௌனமாக இருக்க முடியாது என்றவகையிலேயே அமைந்திருந்தன. இது ஒரு வகையில் இந்தியா மீளவும் இலங்கை விவகாரத்தில் வலுவான தலையீட்டைச் செய்வதற்கான முன் தயாரிப்புக்களாகவே இருந்தன எனலாம்.

மகிந்த நிர்வாகம் விடுதலைப்புலிகளின் ஆட்சிப்பரப்பு எல்லைகளை கைப்பற்றுதல் என்ற தெளிவான நிகழ்ச்சி நிரலுடன் களமிறங்கிய காலமே, மகிந்த தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கம் சீனாவுடன் நெருக்கமான தொடர்புகளை பேண முற்பட்ட காலமாகவும் இருந்தது. மீளவும் ஒரு இராணுவ நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கையின் இனப்பிரச்சினையை மகிந்த அணுக முற்படுவதை விமர்சித்த மேற்கு அரசுகள், ஆரம்பத்தில் சில ராஜதந்திர அழுத்தங்களையும் பின்னர் பொருளாதார ரீதியான அழுத்தங்களையும் பிரயோகித்துப் பார்த்தது. http://cache.daylife.com/imageserve/02QXbl18Vk4oO/610x.jpg

இதில் மேற்கு அரசுகளைப் பொறுத்தவரையில் முடிந்தவரை நோர்வேயின் தலைமையிலான சமாதான முன்னெடுப்புகளை பாதுகாப்பது என்ற நோக்கிலேயே தமது அழுத்தங்களை பிரயோகித்தன. ஆனால் யுத்தவாதத்தில் தீவிர நாட்டம் கொண்டிருந்த மகிந்த நிர்வாகம் மேற்கின் அழுத்தங்களால் ஏற்பட்ட நெருக்கடிகளை, மேற்குடன் முரண்படும் சக்திகளைக் கொண்டு கையாள முற்பட்டது. இந்தியாவிடமிருந்து உடனடியான இராணுவ தேவைகளை பெற்றுக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்து கொண்ட மகிந்த நிர்வாகத்தினர் ஆசியப்பிராந்தியத்தில் பலமான நிலையில் உருப்பெற்றுவரும் சீனாவை பொருத்தமான மாற்றாக தழுவிக் கொண்டனர்.

இது விடயத்தில் மகிந்த நிர்வாகத்திடம் இரண்டு கணிப்புகள் இருந்திருக்க வேண்டும் என்பது எனது துணிபு. ஓன்று மேற்கின் அழுத்தங்களை புறந்தள்ளுவதற்கான பலத்தைப் பெறுவது.

இரண்டு இந்தியாவை தமது வழிக்கு கொண்டுவருவது. எனது அவதானத்தில் கிட்டத்தட்ட மேற்படி இரண்டு கணிப்பிலும் சிங்களம் வெற்றிபெற்றிருக்கிறது. சீனா சமீபகாலங்களில் சிறிலங்கா அரசிற்கு அதிகமான ஆயுத உதவிகளை வழங்கியுள்ளதுடன் இலங்கையில் தனது இருப்பை வலுப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருவது வெள்ளிடைமலை. ஜயன் 7 விமானங்கள் ஜே.வை - 11 அடி ஆகாயக் கண்காணிப்பு ராடார்கள், துருப்புக்காவி கவச வாகனங்கள் மேலும் பல ஆயுதங்களையும் சீனா, வழங்கியிருக்கின்றது.

மேலும் சீனா சிறிலங்காவுடன் துப்பாக்கி, குண்டுகள், மோட்டார்கள் மற்றும் வெடிகுண்டுகளை பெறுவதற்காக, 37.6 மில்லியன் டொலர்களுக்கு பொலி டெக்னொலொஜி உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டுள்ளது.

மேலும் சமீபகாலங்களில் சீனா சிறிலங்காவிற்கான பிரதான நிதி வழங்குநராகவும் மாறியுள்ளது. சமீபத்தில் கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அளவான கடனுதவிகளை சிங்களம் சீனாவிடமிருந்து பெற்றுள்ளது.

இந்த கடனுதவி இதுவரை காலமும் சிறிலங்காவின் பிரதான நிதிவழங்குநராக தொழிற்பட்டுவந்த ஜப்பானை பிரதியீடு செய்யும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் ஹம்பாந்தோட்டையில் புதிய துறைமுகமொன்றை நிர்மாணிப்பதற்காக, சீனாவின் எக்ம் வங்கி 1 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்கியிருப்பதுடன், இரு மின் உற்பத்தி நிலையங்களையும் ஒரு அதிவேக சாலையை நிர்மாணிக்கும் பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றது.

சீனாவின் மேற்படி சிங்கள நெருக்கத்தை, சீனா தனது கடற்படையை விரிவாக்க முயலும் மூலோபாய நகர்வுகளின் பின்புலத்தில் சில அரசியல் அவதானிகள் விளக்குகின்றனர். பர்மா மற்றும் பாகிஸ்தான் உட்பட்ட நாடுகளை பயன்படுத்தி வரும் பரந்தளவிலான மூலோபாய நகர்விற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறிப்பான முக்கியத்துவம் கொண்டதாக கருதப்படுகிறது.

சீனாவின் இந்த மூலோபாய நகர்வுகள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது கடற்படை மேலாதிக்கத்தை நிலைப்படுத்தும் இந்தியாவின் குறிக்கோளுடன் நேரடியாக மோதுவதற்கான வாய்ப்புண்டு என்பதே இந்திய ஆய்வாளர்களின் கணிப்பு. இலங்கையில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்தியா தனக்கான காய்நகர்த்தல்களில் ஈடுபட்டுவருகிறது. அது சமீபகாலங்களில் சிங்களத்துடனான நெருக்கத்தை அதிகரித்திருப்பதுடன் கிழக்கில் தனது இருப்பை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் பொருளாதார ரீதியான தலையீடுகளையும் மேற்கொண்டுவருகிறது.

தமிழர்களின் பாரம்பரிய இடமான சம்பூரை இராணுவம் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து அங்கு ஒரு அனல் மின்நிலையம் கட்டும் திட்டத்தில் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கூட்டுத்தாபனம் ONGC) ஈடுபட்டுள்ளது. இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேலும் விஸ்தரிக்கும் வகையிலான உடன்படிக்கையொன்றிற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுவருகிறது. Comprehensive Economic Partnership Agreement - CEPA) அத்துடன் இலங்கையின் மன்னார் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அகழ்வு ஆராய்ச்சிக்கான அனுமதிப்பத்திரத்தையும் இந்தியக் கம்பனியொன்று பெற்றுள்ளது.

மேலும் பிறிதொரு இந்திய கம்பனியான RITES - IRCON கொழும்புக்கும் மாத்தறைக்கும் இடையில் ரயில் பாதையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சின் இணையத்தை மேற்கோள் காட்டும் செய்தியொன்று இந்திய கூட்டு வணிகத்தில் 50 வீதமும், தெற்காசியாவில் இந்தியாவின் சொத்து முதலீட்டின் 54 வீதமும் இலங்கையில் இருப்பதாக குறிப்பிடுகிறது. ஒரு புறம் சீனாவால் தனது தேவைகளை ஈடு செய்துகொண்ட சிங்களம், சீனாவை காரணம் காட்டி தற்போது சிங்களத்தை அரவணைப்பதில் ஆர்வம் காட்டும் இந்தியாவிடமிருந்தும் நன்மையைப் பெற்றுவருகிறது.

சீனா தனது மூலோபாய நகர்வுகளுக்காக சிங்களத்திற்கு முண்டு கொடுக்கலாம், சீனாவின் மூலேபாய நகர்வுகள் தனது பிராந்திய நலனக்கு குறுக்காக வருவதை தடுக்க இந்தியா சிங்களத்தை அரவணைக்கலாம்.

ஆனால் இரண்டுமே மகிந்த நிர்வாகத்தினரால் தமிழர் தேசத்திற்கு எதிராக புதுப்பிக்கப்பட்டுள்ள போர் வெறிக்கு தீனிபோடுகிறது என்பதே உண்மை. சீனா தமிழர்களின் நலன்களுக்கு எதிராக செயற்படவில்லை என்று வாதிடும் அரசியல் ஆய்வாளர்கள் உண்டு.

அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் இங்கு நாம் கவனம் கொள்ள வேண்டிய புள்ளி, சீனாவின் இராணுவ மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகள் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றதா இல்லையா என்பதுதான். ஆனால் இந்தியாவின் அணுகுமுறை இதில் சிக்கலானது.

இந்தியா தமிழர் போராட்டம் தொடர்பாக தெளிவான நிகழ்ச்சிநிரலைக் கொண்ட நாடு என்பதை இந்த இடத்தில் மீண்டும் அழுத்திச் சொல்ல வேண்டிய தேவையில்லை என்றே நினைக்கின்றேன்.

இந்தியா எப்போதுமே இலங்கையை தனது செல்வாக்கிற்குட்பட்ட ஒரு பகுதியாகவே கருதிவருகிறது. இலங்கையில் தனது பார்வைக்கு அப்பால் எதுவும் நடக்க முடியாது என்ற கணிப்பே அதற்குண்டு. ஆனால் இலங்கை தொடர்பான அதற்குள்ள கடந்தகால அனுபவங்களை இந்தியாவால் இலகுவில் தட்டிக் கழிக்கவும் முடியாதுள்ளது. அதிலும் குறிப்பாக விரைவில் ஒரு தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் இந்திய மத்திய அரசு, தமக்கான ஆதரவுத் தளங்களில் ஒன்றான தமிழகத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பையும் உணர்ந்தே காய்களை நகர்த்திவருகிறது.

இங்கு நமது நிலையில் குறித்துக் கொள்ள வேண்டிய விடயம் என்வென்றால் இந்தியா தனது பிராந்திய நலனுக்காக செயற்படுவதல்ல பிரச்சினை. ஆனால் இந்தியா எப்போதுமே தனது பிராந்திய நலனுக்காக தமிழர் நலன்களை பலிகொடுத்து சிங்களத்தை அரவணைத்து நிற்பதுதான் பிரச்சினை. இது விடயத்தில் இலங்கை அரசியலில் தலையீடு செய்யும் வேறு எந்தவொரு அந்நிய சக்திகளுக்கும் இல்லாத பாத்திரம் இந்தியாவிற்கு மட்டும் இருக்கிறது.

இந்தியா எத்தனையோ தடவைகள் பிராந்தியத்தை காட்டி அச்சுறுத்தியபோதும் இன்றுவரை சிங்களத்தை தனது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் அதனால் வெற்றிபெற முடியவில்லை. இந்தியாவின் இவ்வாறான அணுகுமுறைத் தோல்விக்கு முக்கிய காரணம், இந்தியா தொடர்ந்தும் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் அதனை முன்னெடுக்கும் புலிகளையும் எதிர்நிலையில் மதிப்பிடுவதுதான்.

அவ்வாறனதொரு பழைமையான மதிப்பீட்டில் இந்திய கொள்கை வகுப்பு வேர்கொண்டிருக்கும் வரையில் இந்தியா இலங்கை அரசியல் குறித்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஈழத் தமிழர் தேசத்தின் நலன்களுக்கு எதிராகவே இருக்கும்.

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.