Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் எமது சினிமா சாகிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எமது சினிமா சாகிறது?

சுதேசமித்திரன்

தன்னிகரில்லாத தமிழ் சினிமாவின் தொன்று தொட்ட வரலாற்றில் ஆகச்சிறந்த அம்சக்கூறுகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள் என்று யாராவது என்னிடம் கேட்க விரும்பினால் நான் நல்க விரும்பும் பட்டியல் இதுதான். ஜெயமாலினியின் இடுப்பு, ஜோதிலட்சுமியின் அலட்சிய ஆட்டம், சில்க் ஸ்மிதாவின் கண்கள், அனுராதாவின் தொடைகள், ராதாவின் காது, ஸ்ரீதேவியின் ஸ்கின்டோன் மர்மம், ஸ்ரீப்ரியாவின் க்ளிவேஜ், கமலஹாசன் நெளியும் நளினம், சுருளிராஜனின் குரல் வளம், டி. ராஜேந்தரின் தைரியம், கவுண்டமணியின் செந்தில், மோகனின் ஒலிவாங்கி, ராமநாராயணனின் சாதனை, ஏவியெம்மின் வெற்றிப் படங்கள், சிவக்குமாரின் தெய்வீகத் திருவுருவம், பாலச்சந்தரின் குடும்பக் கட்டுப்பாடில்லாத கதைகள், சுமனின் சொந்தப்படம், கர்ணனின் கேமரா கோணம், ஜெய்சங்கரின் ஜேம்ஸ்பாண்ட் அவதாரம், கலைஞர் இன்னும் எழுதும் வசனம்...

இவ்விதமான வர்ணனை உங்களுக்கும் எனக்கும் மாறுபடும். வேறொருவருக்கும் எனக்கும் ஒருமைப்படும். நான் பிறந்த காலத்தில் தியாகராஜபாகவதர், பியூசின்னப்பா, எம்கே ராதா, கேயார் ராமசாமி, பீயெஸ் கோவிந்தன், ஹொன்னப்பா பாகவதர் ஆகியவர்கள் அரசாண்டு கொண்டிருக்கவில்லை. என் தகப்பனார் காலத்தில் கலையரசு அவர்களின் கைகளில்தான் இருந்தது. என் தகப்பனாரே தன் அரசாங்க உத்தியோகத்திற்கு முன்னால் என்னெஸ் கிருஷ்ணனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் என்பதனால் அவர்கள் காலத்து அம்சக்கூறுகள் என்பதாக ஒரு பட்டியல் போடச் சொன்னால் அதில் டீயார் ராஜகுமாரி முதலாக ராஜகாந்தம், கண்ணாம்பா, பானுமதி, பத்மினி, சாவித்ரி, ஈவி சரோஜா, சரோஜாதேவி, கேயார் விஜயா, ராஜசுலோசனா, சிஐடி சகுந்தலா என்று நீண்டு ஒருவேளை ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா வரைக்கும் எம்ஜியார், சிவாஜி, கமலஹாசன், ரஜினிகாந்த் வரைக்கும் ஒரு அசத்தலான வரிசை காணப்பெறும்.

என் கண்கள் சினிமாத் திரைக்கு முன்னால் வியக்க ஆரம்பித்தது சிவாஜியும் எம்ஜியாரும் தங்கள் கடைசிக் கட்ட ஆர்ப்பாட்டத்தில் லுக்குடி லுக்குடி என்று ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த பொழுதுகளில்தான். ரஜினிகாந்த், கமலஹாசன், மகேந்திரன், பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்கியராஜ் என்று ஒரு புதிய அலை தொடங்கிவிட்டிருந்த காலம் அது.

என்னெஸ்கேயும் பகவதியும் எம்மார் ராதாவும் ரங்காராவும் பாலையாவும் டீயார் ராமச்சந்திரனும் தங்கவேலுவும் நாகேஷும் சுமந்து திரிந்த வேடங்கள் பிற்பாடு வந்த தலைமுறையிலும் அதற்கடுத்த தலைமுறையிலும்கூட யாராலும் சாதிக்க முடியாதவை என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும் பின்வந்தவர்களில் அவர்களினளவு திறமை வாய்ந்தவர்கள் என்பதாக எனக்குத் தோன்றுபவர்கள் செந்தாமரை, ஜி சீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன், விஜயன் ஆகியவர்கள். இவர்களின் முழு வல்லமையை உபயோகித்துக்கொள்ளக்கூடிய சூழலில் அன்றைய சினிமாத்துறை இருக்கவில்லை. அது வெறும் கேலிக்கூத்தாக அப்போது மாறிக்கொண்டிருந்தது.

இன்றைக்கு உலக நாயகன் கமலஹாசன் சினிமாவை முன்னே கொண்டு செல்வேன் என்று குருதிப்புனல், தேவர்மகன், ஹே ராம், மஹாநதி, அன்பே சிவம் என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்கெல்லாம் யார் காரணம் என்று கேட்டால் அவரேதான் காரணம் என்றுதான் பதில் சொல்ல முடிகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகராக இருந்தும் அவரால் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்துவது இனியும் சாத்தியமேயில்லை என்கிற நிலை ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணம் என்று கேட்டால் அவரேதான் காரணம் என்றுதான் பதில் சொல்ல முடிகிறது. அவர்கள் தங்களுக்குத் தாங்களே தோண்டிக்கொண்ட குழிகள்தான் அவை. ஏவியெம் முதலான முதலாளிகள் எஸ்பி முத்துராமன், ராஜசேகர் என்று இயக்குனர்கள், முழுமையான மசாலா சினிமாவை - கிட்டத்தட்ட திரும்பவும் எம்ஜியார் சினிமாவைக் கொண்டுவந்து சேர்த்தது அவர்கள் அறிந்தே செய்த அயோக்கியத்தனம்தான். ஒரே நேரத்தில் வெளிவந்த ஏவியெம்மின் இரண்டு படங்களான ரஜினி நடித்த முரட்டுக்காளையும் கமல் நடித்த சகலகலாவல்லவனும் சம்பவிக்காமல் இருந்திருந்தால் தமிழ் சினிமாவைப் பார்த்து மலையாளிகள் கேலி செய்யுமளவுக்கு நிலைமை விபரீதமாகப் போயிருக்காது.

ஒரு பேட்டியில் மலையாள யதார்த்த இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. தமிழ்ப்படங்கள் கேரளாவில் பரவலாக வெளிவருகின்றனவே, அவற்றைப் பார்த்து மலையாள ரசிகர்களின் மனம் corrupt ஆகிவிடாதா? இதற்கு அவர் சொன்ன பதில், மலையாளிகள் தங்கள் மசாலா பட தாகத்தை, தமிழ்ப் படங்களைப் பார்ப்பதன் வாயிலாகத் தணித்துக்கொள்கிறார்கள். மலையாளப் படங்களை அவர்கள் மிகவும் மதிக்கிறார்கள். இதனால் அவை கெட்டுப்போவதை அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்

அவர் இப்படிச் சொன்னபோது மலையாளத்தில் ஷாஜி கைலாஷ் போன்ற இயக்குனர்களும் சுரேஷ்கோபி போன்ற நடிகர்களும் வந்திருக்கவில்லை. தற்போது அவரது அனுமானம் முழுக்க முழுக்கப் பொய்த்துவிட்டது. மலையாளப் படங்களும் கெட்டு சீரழிந்துபோய்விட்டன. பாட்டு கூத்து கொட்டு ஆட்டம் ஆர்ப்பாட்டம் என்று அங்கேயும் ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் தமிழ் விஷம்தான் என்பதை இப்போது அவரேகூட ஒப்புக்கொள்வார் என்று நினைக்கிறேன்.

இவ்விதமாகத் தமிழ் சினிமா தான் கெட்டதுமில்லாமல் தன் சகோதர மாநிலத்தையும்கூடக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டிருக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எமது சினிமா சாகிறது? -2

சுதேசமித்திரன்

கடந்த வாரம், கலைஞனே வியாபாரியாகவும் மாற நேர்ந்த தமிழ் அவலத்தை சினிமா சாவதற்கான ஒரு காரணமாக முன்வைத்தேன். அதற்கு இன்னும் ஆயிரம் உதாரணங்கள் சொல்ல முடியும். ஆனாலும் அவை உங்களுக்குத் தெரியாதவை ஒன்றுமல்ல என்பதனால் அடுத்ததற்குப் போய்விடலாம்.

நீங்கள் ஒரு கிராமத்திலோ, புறநகர்ப் பகுதியிலோ, நகர மத்தியிலோ, ஸ்லம்மிலோ, ஹைடெக் அப்பார்ட்மென்ட்டிலோ, லைன் வீட்டிலோ, ஐந்து ஏக்கர் மாளிகையிலோ, பிளாட்ஃபாரத்திலோ,கோவில் திண்ணையிலோ, போலீஸ் லாக்அப்பிலோ குடியிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். தலமல்ல பிரதானம். ஆனால் உங்களுக்குள் தலைமைப் பண்பு பொங்கிப் பொங்கி வழிகிறது என்கிற நம்பிக்கை மாத்திரம் இருக்கிறது. இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் பகுதியில் நடக்கும் அக்கிரமங்கள், சாக்கடை அடைப்புகள், கொசுத் தொல்லைகள், ப்ளாஸ்டிக் கழிவுகள், சாலைக் குழிகள், குழாய்த் தண்ணீர் வரத்து, குளத்தின் அழுக்கு, லஞ்சலாவண்யம், கள்ள மார்க்கெட், ரேஷன் கடை, ரௌடித் தொல்லை, போலீஸ் பெருந்தொல்லை, விபசார அழைப்புகள், பாலியல் மீறல்கள், கொலைகள், கொள்ளைகள், பிக் பாக்கெட்கள், நீதிபதிகள், நிறுத்தாமல் செல்லும் பேருந்துகள், வண்டியிழுக்கும் மாடுகளைக் கொல்லும் ஆளில்லாத ரயில்வே க்ராஸிங்குகள், குடிகார வரம்பு மீறல்கள், டாஸ்மாக் மூடி போடல்கள் என்று கண்டதிலும் தலையை நுழைத்து ஒரு ஐந்திலிருந்து பத்து வருடங்கள் ஒரே கட்சியின் தொண்டனாகச் செயல்பட்டு வார்டு பிரதிநிதி அல்லது செயலாளர் அளவுக்கு உயர்ந்து அந்த ஏரியாவின் ஓர் அசைக்க முடியாத ஹீரோவாக உருவாகிவிடுகிறீர்கள். உங்கள் தலைமைப் பண்போ அதோடு முடிந்து போய்விடுவதாக இல்லை. உங்கள் எனர்ஜியைப் பார்த்து உங்களுக்கே ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ஒன்றியம், வட்டம், மாவட்டம் என்று நியாயமாக உயர்ந்து அடுத்த பத்து வருடத்தில் உங்கள் உழைப்பின் கூலியாக ஓர் எம்மெல்லே பதவி உங்களை நாடி வந்துவிட்டது. தங்கத் தலைவன் எங்கள் எம்மெல்லே வாழ்கவென்று உங்களைப் பார்த்தும் நாலுபேர் கூவ ஆரம்பித்ததும் உங்களுக்கு அடுத்த ஆசை முளைத்துவிட்டது, எப்படி மந்திரி ஆகலாம் என்பதாக! அடுத்த பத்து அல்லது பதினைந்து வருடத்தில் அதுவும் சம்பவித்துவிடுகிறது.

இங்கே பாராவைப் புதிதாகத் தொடங்கிக்கொள்ளலாம். ஒரே பாராவில் இவ்வளவு சாதனைகளைச் செய்து முடித்த முதல் ஆசாமி நீங்களாகத்தான் இருக்க முடியும். அதோடு பாரா மாறியதற்கு வேறு காரணம் இருக்கிறது. உங்களது அதிர்ஷ்ட தேவராஜன் தன் உச்சபட்ச வரத்தை உங்களுக்கு வழங்கிவிட்டான். அதற்குமேல் எதுவும் கொடுக்க அவனுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், உங்கள் எனர்ஜியோ இன்னும் வடிந்தபாடில்லை. மக்களுக்கு சேவை செய்தே ஆகவேண்டும் என்பதில் இன்னும் உங்களுக்கு எவ்விதமான சோர்வும் வந்துவிட்டதாகத் தெரியவில்லை. அடுத்த இலக்கு என்ன என்று பார்க்கிறீர்கள். அதுவோ முதல்வர் பதவி. ஆனால் இப்போது யோசித்துப் பாருங்கள், உங்களால் அது முடியுமா? நீங்கள் என்ன அமெரிக்காவிலோ அய்ரோப்பாவிலோ ஆஸ்திரேலியாவிலோவா இருக்கிறீர்கள்? இந்தியா அண்ணாச்சி! எமது இனிய இந்தியா! இங்கே முதல்வர் ஆகவேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்பது உங்களுக்கு ஆரம்பத்திலேயே தெரியாமல் போனதற்கு யாரை நொந்து என்ன ஆகப்போகிறது? இதற்குள் ஒரு பத்து, பதினைந்து வருடம் ஆகியிருக்காது? As good as it gets என்று அப்போதுதான் சுடச்சுட முதல்வர் பதவியில் உட்கார்ந்த இளையதளபதி விஜய்யின் புத்தம்புதிய கட்சியில் போய் ஒட்டிக்கொள்கிற வழியைப் பாருங்கள். சரி, நீங்கள் விஜய் ரசிகர் இல்லை என்றே வைத்துக்கொள்வோம். தமிழ்நாட்டில் எம்ஜியார் சிவாஜி காலத்துக்குப் பிறகு கறுப்புத்தோல் ரசிகர்கள், வெள்ளைத்தோல் ரசிகர்கள் என்று இரண்டு category உண்டல்லவா! அதனால் குறைந்தபட்சம் அதற்கடுத்த முதல்வராகப்போகிற பெருந்தல அஜீத்திடமாவது அடைக்கலம் ஆகுங்கள். இல்லாவிட்டால் உங்களைப் பிழைக்கத் தெரியாதவர் என்று பழி சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். நீங்கள் அதுகாறும் உழைத்த உழைப்பெல்லாம் வீணாய்ப் போயிருக்கும். ஆமாம்! ஜாக்கிரதை!

தமிழ்நாட்டில் முதல்வராவதற்குத் திரைப்படங்களோடு தொடர்பு வைத்திருந்தேயாக வேண்டும் என்கிற நிலைப்பாடு காணப்படுவது சரியானதுதானா என்று யோசிக்கிறேன். முதல்வராவதற்கு தாதாக்களுடன் தொடர்பு வைத்திருக்கவேண்டும் என்கிற நிலைப்பாட்டைவிட இது மேலானதுதானே என்றுகூட ஒரு குறுக்குபுத்தி ஓடுகிறது. ஆனால் இந்நிலை, பழக்கத்தின் காரணமாக வழிவழியாக வந்த அரசகுல வழக்கம்போல உயர்ந்து உயர்ந்து, தற்போது தவிர்க்க இயலாத அம்சமாகவே மாறிப்போனதுதானே கொடுமை! இதுவோர் அரசியல் தொடரல்ல என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நாட்டுக்கு என்ன கொடுமை நிகழ்ந்தால் என்ன? சினிமாக்காரன் ஆண்டாலும் சிறையில் இருப்பவன் ஆண்டாலும் அரசியல் கெடுவதை உங்களால் தவிர்க்க இயலுமா? நான் சினிமாவைப் பற்றியல்லவா பேசிக்கொண்டிருக்கிறேன்.

சாதாரணமாகவே பணம் புகழ் பதவி ஆகியவை ஒவ்வொன்றாக வர வர, மனிதன் ஆசையின் உயர் எல்லையைத் தொட்டுவிட விரும்புவதில் ஆச்சரியம் ஏதும் இல்லைதான். அவன் சும்மாயிருந்தாலும், கூட இருப்பவர்கள் விட்டால்தானே! இந்த மாதிரியெல்லாம் கட்டுரை எழுதுகிறானே என்று என்னிடம் பணத்தை அள்ளியள்ளிக் கொடுத்துப் பாருங்கள், நானும் அத்தனைக்கும் ஆசைப்படத்தான் செய்வேன். இந்த விஷயத்தில் நானானாலும் சரி, நீங்களானாலும் சரி, நியாயம் அதுதான்! என்ன, நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள், நான் ஒப்புக்கொள்வேன், அதுதான் உங்களுக்கும் எனக்கும் ஊடாக உள்ள ஒரே வித்தியாசம்!

எம்ஜியார், என்டீயார் தொடங்கி இன்றைக்கு விஜய்காந்த், சிரஞ்சீவி வரைக்கும் வந்துவிட்டோம். இவர்களின் நோக்கம் என்ன? தேசிய சேவை செய்யவேண்டும் என்பதா? இல்லை! முதல்வராகவேண்டும் என்பது மட்டும்தான்! முதல்வராகத் தேவையான செல்வாக்கை இவர்களுக்குக் கொடுத்த உயரிய ஊடகம் சினிமா! கலைஞராகட்டும், - கவனியுங்கள் இவர் முதல்வராக இருக்கிறாரோ இல்லையோ, கலைஞர்! - எம்ஜியாராகட்டும், ஜெயலலிதாவாகட்டும், என்டீயாராகட்டும் தாங்கள் ஏறி வந்த ஏணியை மறவாமல், சினிமாவுக்குத் தேவையான சகல சம்பத்துகளையும் ஏற்படுத்தித் தரத் தயங்கவேயில்லை. ஏனென்றால் அவர்கள் அடிப்படையில் கலைஞர்கள். ஆனால் சினிமாவில் இயக்குனர் ஷங்கர் காட்டிய ஒருநாள் முதல்வர் ஒருநாளில் செய்த எந்த சாதனையையும் இவர்களில் ஒருவரும் மோந்துபார்க்கக்கூடத் துணியவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? சினிமாக்காரன் முதல்வரானால் சினிமாவுக்கு நன்மை, தொழிலதிபன் முதல்வரானால் தொழில் துறைக்கு நன்மை, விவசாயி முதல்வரானால் வேளாண்மைக்கு நன்மை, ஆன்மீகவாதி முதல்வரானால் தெய்வத்துக்கு நன்மை! மக்களுக்கு நன்மை வேண்டுமானால் யார் முதல்வராகவேண்டும் என்பதுதான் தெரியவில்லை!

நல்ல காலமாக மேலே சொன்ன பட்டியலில் உள்ளவர்களெல்லாம் முதல்வராகவேண்டும் என்கிற ஆசையில் நடிக்க வந்தவர்களல்லர். நடிக்க வந்ததால் முதல்வரானவர்கள். அல்லது ஆக ஆசைப்படுபவர்கள். ஆனால் இன்றைய தலைமுறையோ, முதல் படத்தில் முகத்தையோ புட்டத்தையோ காட்டும்போதே முதல்வராக முடியுமா என்கிற ஆசையோடுதான் அலைகிறது என்பதுதானே வேதனையான உண்மை! அடுத்த ரஜினி என்றும் இளைய தளபதி என்றும் அறியப்படுவதால் விஜய் முதல்வராகலாம் என்றால், தன் தந்தை எம்மெல்லே என்பதனால் சிலம்பரசன் முதல்வராகலாம், தன் மாமனார் ஒருவேளை முதல்வராகலாம் என்பதனால் தனுஷ் முதல்வராகலாம். இவர்களோடு கிசுகிசுக்கப்பட்டதனால் நயன்தாராகூட முதல்வராகலாம். இவையெல்லாம் நிகழாது என்பதாக உங்களால் உத்திரவாதம் தர இயலுமா?

ஆரம்பமே இப்படி இருந்தால் சினிமாவுக்கான சிறந்த கதைகள் எங்கிருந்து உருவாக முடியும்? சிறந்த படங்களை யாரால் உருவாக்கிவிட முடியும்? நடிகர் சிவகுமாரின் இரண்டாவது புதல்வரான கார்த்தி பருத்தி வீரன் படத்தில் அறிமுகமாகும்போதே முதல்வர் ஆசையோடு அறிமுகமாகாதவர் என்பதாக என்னால் நம்ப முடிகிறது. அவரது தகப்பனார் அரசியல் தொடர்புகள் அற்றவர் என்பதனால் இவ்வாறு நான் கூறவில்லை. உன்னதமான ஒரு படத்தின் அருமை தெரிந்து அதற்காகத் தன் தோற்றத்தை எவ்விதமாகவும் மாற்றிக்கொண்டு நடிக்கத் தயாராக ஓர் இளைஞன் புறப்படும்போதுதான் அமீர் மாதிரியானதோர் இயக்குனருக்கு உலகத் தரத்தில் ஒரு படத்தைத் தர முடிகிறது. அமீர் இதே கதையை விஜய், அஜீத், சிம்பு என்று போய்ச் சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

அதேபோல், என்னதான் தயாரிப்பாளரின் மைந்தன் என்றாலும் நமக்குக் கிடைத்திருக்கிற இன்னொரு jewel ஜீவா! ஈ, கற்றது தமிழ் ஆகிய படங்களில் ஜீவாவின் ஈடுபாடு பிரம்மிக்க வைக்கிறது. அமீர், ராம் போன்ற இயக்குனர்கள் ஹீரோக்களை அல்லது மறைமுகமாக முதலமைச்சர்களை உருவாக்க வந்தவர்களல்லர். இதனாலேயே இவர்கள் மற்ற இயக்குனர்களிடமிருந்து பளிச்சென்று வித்தியாசமாகத் தெரிகிறார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களேயல்ல. நான் சொல்ல வருகிற அர்த்தத்தை சரியாகப் புரிந்துகொள்ளுங்கள், சத்யஜித்ரேயின் பிராபல்யம் ரித்விக் கட்டக்கை மட்டுப்படுத்தியதைப்போல உண்மையிலேயே இவர்களுக்கு முன்னால் இயக்குனர்கள் என்று வந்தவர்கள் உண்மையான இயக்குனர்களாக இருந்திருந்தால் இவர்களைப் பற்றி நாம் பெரிதாக என்ன பேசிக்கொண்டிருக்கப் போகிறோம்? எல்லாமே தங்கங்கள்தான், புதிதாக இன்னுமொரு தங்கம் புறப்பட்டு வந்திருக்கிறது என்று மேலோட்டமாக நகர்ந்துபோய்விட மாட்டோமா? உண்மையில் இவ்விதமாக நிகழ்ந்து, கலைஞன் பார்வையாளனால் தொழப்படாத நிலை எழும்போதுதான் கலைஞன் தன் அதிகபட்ச வேகத்தில் பயணிக்க இயலும் என்பதே என் ஒருபோதும் நிறைவேறாக் கனவு!

சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் ஒன்றேதான் என்கிற நிலைப்பாட்டைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டு, வாரேன் வாரேன் என்றும் வழி பார்த்திரு கண்ணா என்றும் என் வழி தனீஈஈ வழி என்றும் இந்த நாட்டை ஆண்டவனால் காப்பாற்ற முடியாது ஆனால்... என்றும் தொடர்ந்து பக்கம் பக்கமாகக் கமா போட்டுக்கொண்டே போகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் முடித்துவிட்டால் அவரின் ரசிகர்கள் என் கட்அவுட்டுக்கு பெட்ரோல் அபிஷேகம் செய்துவிட மாட்டார்களா, பின்னே?

ரஜினிகாந்த்தைப் பொருத்தவரைக்கும் நான் ஏற்கனவே சொன்னபடி முதல்வராகவேண்டும் என்கிற ஆசையில் நடிக்க வந்தவர் அல்லர். கடந்த அத்தியாயத்தில் சொன்னபடி அவரது சூழல் அவரை எப்படித் தன் திறமையை வெளிக்காட்ட இயலாத நிலைக்குத் தள்ளிவிட்டதோ அதேபோல்தான் அவர் வலுக்கட்டாயமாக அரசியலை நோக்கித் தள்ளப்பட்டார். மற்றபடி எம்ஜியாரைப் போல அவர் தீவிர அரசியல் ஈடுபாடு எதையும் ஒருபோதும் வெளிப்படுத்திக்கொண்டதேயில்

இப்படி சினிமாவை பற்றி மேதாவித்தனமா எழுதுவது இப்ப பரவலாகி இருக்கு.. இதைப்பற்றியும் நீண்ண்ண்ண்ட கட்டுரை யாராவது எழுதவேணும்.

இப்படி சினிமாவை பற்றி மேதாவித்தனமா எழுதுவது இப்ப பரவலாகி இருக்கு.. இதைப்பற்றியும் நீண்ண்ண்ண்ட கட்டுரை யாராவது எழுதவேணும்.

:rolleyes:ஒருவர் சீரியல் எடுத்தால், அடுத்தவர் மெகா சீரியல் எடுக்க வேணும் என்கிறீங்க :huh:

Edited by Vasampu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சினிமாவை பற்றி மேதாவித்தனமா எழுதுவது இப்ப பரவலாகி இருக்கு.. இதைப்பற்றியும் நீண்ண்ண்ண்ட கட்டுரை யாராவது எழுதவேணும்.

சுதேசமித்திரன் ஒரு மேதாவி என்று தெரியாமல் இருக்கிறீர்களே வசி! :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹீரோ என்பவன் யார்?

சுதேசமித்திரன்

இந்த உலகத்தில் எங்கே தேடினாலும் ஹீரோக்களாகத்தான் கிடைக்கிறார்கள். வில்லன்களைத்தான் காணவே முடிவதில்லை என்று எனது ஆஸ்பத்திரி நாவலில் ஒரு வரி உண்டு. அந்த நாவலில் அது வேறு அர்த்தத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இங்கே வேறு சோலிக்கு அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வில்லனாக அறிமுகமானாலும் உச்சபட்ச ஹீரோவாக மாறலாம் என்பதை நம்மவர்கள்தான் உலக சினிமாவுக்கே காட்டிக்கொடுத்தார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. பீகாரியான சத்ருக்கன் சின்ஹா ஹிந்தியில் வில்லனாகத்தான் அறிமுகமாகிறார், மராட்டியரான ரஜினிகாந்த் தமிழிலும் மோகன்லால் தைவத்தின்டெ ஸ்வந்தம் பாஷையான மலையாளத்திலும் அவ்விதமாகத்தான் நுழைந்தார்கள். மோகன்லால் அறிமுகமான மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் (பனியில் மலர்ந்த மலர்கள்) படத்தின் ஹீரோ நம் ஒருதலைராகம் சங்கர்.

மலையாளத்திலும் சரி, தமிழிலும் சரி, ஹீரோவாக ஒரு பெரிய வட்டம் வந்தவர் சங்கர்.

நான் தொலைக்காட்சி சீரியல்களில் உதவி இயக்குனராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியபோது நானே சன் டீவியில் ஒரு சொந்த சீரியல் டைரக்ட் செய்வதாக ஓர் ஏற்பாடு நிகழ்ந்தது. அப்போது நான் நேரில் போய் கதை சொன்னது மூன்று பேரிடம். அதில் ஒருவர் சங்கர். எனது நண்பனும் ஒரு மலையாளியுமான ஷேக்தீன், மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய காலத்தில் நடிகர் சங்கரோடு ஏற்பட்ட தொடர்பு, சங்கரை எனது சீரியலுக்கு ஹீரோவாக்கலாம் என்பதாக ஒரு முடிவை எடுக்க வைத்தது. வளசரவாக்கத்தில் அவரது வீட்டில் போய்ப் பார்த்துக் கதை சொன்னேன். முழுவதும் கேட்டு அவர் மிகவும் லயித்துப் போயிருந்தார். கடைசியாக அவர் என்னிடம் சொன்னார். அந்த ஹீரோ பாத்திரத்தை விட வில்லன் பாத்திரம்தான் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நான் அந்த ரோலை செய்கிறேன். எப்படி இருக்கிறது பாருங்கள் கதை. இதை ஆரம்பத்திலேயே செய்திருந்தால் அவர் இன்னும் சினிமாவில் இருந்திருப்பாரோ என்னவோ யாருக்குத் தெரியும்?

நான் சீரியலுக்கு பயந்து பெட்டி படுக்கையைத் தூக்கிக்கொண்டு விட்டால் போதும் என்று ஓடியே வரும்படி நேர்ந்துவிட்டதனால் ஒரு ஹீரோவால் பாவம் வில்லனாக நடிக்க முடியாமலே போய்விட்டது. அந்தக் கதையை இங்கே எழுத முடியாது. மனுஷ்ய புத்திரன் இன்னொரு பத்தி வழங்கினால் 'அசத்திய சோதனை' என்று வேண்டுமானால் எழுதப் பார்க்கலாம்.

'ஹீரோ என்பதாகவெல்லாம் எதுவும் கிடையாது. லீட் ரோல் என்பதாகத்தான் அதைச் சொல்லவேண்டும்? என்று நம் ஹீரோக்களில் ஒருவர் சமீபத்தில் சொன்னார். இப்படிச் சொன்னது நடிகர் தனுஷ். ஒரு பேட்டியில் அவர் இப்படிக் குறிப்பிட்டார். அவர் சொன்னது மிகச் சாதாரண விஷயம்தான் என்றாலும் அதை ஒரு ஹீரோவாக நடிப்பவர் இதுவரைக்கும் சொன்னதேயில்லை என்பதுதான் விசேஷம். திரும்பத் திரும்ப கத்துகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டாலும் மிகுந்த ஆற்றல் உள்ள கலைஞன் இந்த தனுஷ்.

சரி, ஹீரோ என்பவன் யார்?

ஹீரோ என்பவன் பாகவதர் காலத்தில் எப்படி இருந்தான், எம்ஜியார் காலத்தில் எப்படி இருந்தான், ரஜினி காலத்தில், மோகன் காலத்தில், விஜய் காலத்தில், பரத் காலத்தில், சாந்தனு காலத்தில் எப்படியிருந்தான் என்பதைப்பற்றியெல்லாம் நான் எதுவும் எழுத விரும்பவில்லை.

ஹீரோ என்பவன் கதையின் மையமாக இருப்பவன். அவனே கதையை நகர்த்தும் ஊக்கியாக; தன் தோள்களில் சுமந்து திரிபவனாக இருப்பவன். அவனுக்கு வயசு, அழகு, திடகாத்திரம், ஆண்மை, புஜபலம் என்பதாக எவையுமே தேவையில்லை. அவன் ஓர் ஆணாகத்தான் இருக்கவேண்டும் என்பதுகூட அவசியமேயில்லை.

அவனது வாழ்வை ஒரு ஜன்னலின் வழியாகப் பார்ப்பதைப் போலப் பார்வையாளன் பார்க்கிறான். அவனது சுக துக்கங்களில் பங்கெடுக்க முடியாத விதமாக ஒரு கண்ணாடித் திரைக்குப் பின்னால் அவனது அவலங்களும் சந்தோஷங்களும் பெருமிதங்களும் காமமும் காதலும் பட்டினியும் பார்வையாளனுக்குப் பார்க்கக் கிடைக்கின்றன. பார்வையாளன் தானே அவனாக மாறிப் போகிறான். ஆனாலும் ஹீரோவுக்கு கடைசியில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொண்டதும் பார்வையாளன் நகர்ந்து போய்விடுகிறான்.

இந்தப் பார்வையை பிற்பாடு வந்த சினிமாவில் பொருத்திப் பார்க்கும்போது நடுவில் உள்ள கண்ணாடித் திரை உடைந்து விழுந்துவிட்டதுபோலவே தோற்றங்காண்கிறது. பிந்தைய மசாலா திரைப்படங்கள் வாழ்வின் இனிய அல்லது கொடிய அல்லது பெருமித, காமுகப் பக்கங்கள் எதையும் காட்டவில்லை. ஹீரோ என்று ஒருவனை அவை உருவாக்குகின்றன. அவன் புயலைப் போன்றவன், அவன் உள்ளே நுழைந்ததும் திரையில் மட்டுமல்ல, தியேட்டரிலும் புழுதி பறக்கிறது. பார்வையாளன் ஹீரோவைப் பார்த்ததும் சாமி வந்ததுபோல ஆட ஆரம்பித்துவிடுகிறான். ஏனென்றால் அவனால் செய்ய முடியாத அற்புதங்களை இப்போது ஒருவன் திரையில் நிகழ்த்திக் காட்டப்போகிறான். எம்ஜியார் காலத்தில் துவங்கிய இந்தக் கொடுமை மிக நைச்சியமாக சப்பைக்கட்டு கட்டப்பட்டிருக்கிறது. பார்வையாளன் தன் சொந்த வாழ்வின் துயரங்களை மறக்கவே சினிமாவுக்கு வருகிறான் அப்படியானால் அவனால் செய்ய முடியாத சாகசங்களைத் திரையில் பார்ப்பதே அவனுக்கு உவப்பளிக்க முடியும். இம்மாதிரியான சாகசங்களை அவன் திரையில் பார்த்துவிட்டால் அது ஒரு நல்ல வடிகாலாக மாறி அவனை அவ்விதமான சாகசங்களில் இறங்காமல் காப்பாற்றியருளுகிறது. அவன் அப்போது நினைக்கிறான். இதெல்லாம் நம்மாலாகுமா? ஹீரோக்களாலல்லவா ஆகும் என்பதாக.

இப்படி ஆரம்பித்த இந்த விளையாட்டு இன்றைக்கு ஆனந்த விகடனில் நாஞ்சில் நாடன் குறிப்பிட்டதுபோல ஹீரோ என்கிற பெயரில் பகற்கொள்ளையர்களையே உற்பத்தி செய்து தந்திருக்கிறது. ஒரு சினிமா எடுக்க ஆகிற செலவு எத்தனை கோடியோ அதைவிட பல மடங்கு அதிகமான தொகை ஹீரோவுக்கு மட்டும் போகிறது. அப்படியானால் உங்கள் மைந்தன் கஷ்டப்பட்டுப் படித்து டாக்டராகவோ இன்ஜினீயராகவோ போவதைவிட பள்ளிப்பக்கமே ஒதுங்காமல் ஒரு ஹீரோவாக ஆக முடிந்துவிட்டால் போதும், பணம் உங்கள் வீட்டில் பொத்து பொத்தென்று வந்து கொட்டிக்கொண்டே இருக்கவாரம்பித்துவிடும். இதனால் எல்லோரும் பள்ளிக்குச் செல்கிற குழந்தைகளை அதற்கு பதிலாக திரையரங்கங்களுக்கே அனுப்பி வைக்கலாம். யூனிஃபார்ம் தொல்லை கூட காணாது பாருங்கள்.

வெளியிலிருந்து யோசிப்பவர்களுக்கே இப்படி இருந்தால், சினிமாவிலேயே இருப்பவர்களுக்கு எப்படியிருக்கும்? தங்கள் வாரிசுகளை எப்பாடு பட்டாவது நாலெழுத்து படிக்க வைத்து நாற்பது குதிரையேற்றி, ஸ்விம்மிங் ஃபூலில் முக்கியெடுத்து, ஜிம்மில் திரட்டி, தாதுபுஷ்டி கொடுத்து, ஏரோபிக்ஸ் - நாட்டிய மாஸ்டர் - ஸ்டன்ட் மாஸ்டர் என்றேவி, தோற்கூச்சம் போக நாலு பெண்டுகளோடு பழகவிட்டு நன்றாகத் தயாரித்துவைத்துக்கொண்டு தயாரிப்பாளர்களைப் பார்க்க அலைய ஆரம்பிக்க வேண்டியதுதானே

இதுதான் வாரிசு சினிமாவின் மைய அரசியல். பிரபு, கார்த்திக், சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்றவர்கள் வாரிசு நடிகர்கள்தான் என்றபோதும் சோடை போகாதவர்கள். உண்மையிலேயே திறமையோடு செயல்பட்டவர்கள். ஒரு காலகட்டத்தில் திறமை இல்லாதவர்கள் வாரிசு நடிகர்களாக இருந்தாலும் தோற்றுப் போகிற நிலை கூட இருந்தது. அதற்கு உதாரணமாக ஒருவரைச் சொல்லலாம். அவர் ஆனந்த் பாபு. இவர் நான் வசனம் எழுதி உதவி இயக்குனராகவும் பணியாற்றிய ஒரு சீரியலில் ஹீரோவாக நடித்தார். ஹீரோக்கள் கொடுக்கிற டார்ச்சர் என்று சொல்வார்கள் பாருங்கள் அது பன்முகங்கொண்டது. அதில் இவர் எந்த ரகம் என்று பார்த்தால், ஏற்கனவே இவர் தாமதமாகத்தான் ஸ்பாட்டுக்கு வருவார். ஒருதரம் எம்.ஜி.எம். வாசலில் இவருக்காக நான் காலை ஏழு மணிக்கு வைக்க வேண்டிய ஷாட்டுக்காக ஒன்பது மணி வரைக்கும் காத்திருந்திருக்கிறேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததும் அவர் கேட்கிற முதல் கேள்வி இதுதான்: என்னை எத்தனை மணிக்கு விடுவீர்கள்? இது பரத்தையர் கேட்கும் கேள்வியல்லவா தோழனே

இவ்விதமாக வருகிற வாரிசு நடிகர்களுக்கு சுத்தமாக தொழில் மீது எவ்விதமான அக்கறையும் இருப்பதேயில்லை. அவர்களுக்கு அது தேவையுமில்லை. ஆனந்த் பாபு நாம் மிகவும் மதிக்கும் நாகேஷ் எனும் உன்னதமான கலைஞனின் புதல்வர். ஆனால் அவர் தோற்றுப் போனார். அதற்குக் காரணம் அவருடைய சொந்தப் பழக்க வழக்கங்கள் அல்ல. அவருக்கு இது சுலபமாகக் கிடைத்துவிட்டது என்பதுதான்.

அதே சீரியலில் தலைவாசல் விஜய் ஒரு பாத்திரத்தில் நடித்தார். அவரிடம் சினிமாக்காரர்களின் பாஷையில் சொன்னால் ஒரு ஃபயர் இருந்தது. அதை அருகிலிருந்து பார்த்தவன் நான். சீரியல்தானே என்கிற எவ்விதமான அலட்சியத்தையும் நான் அவரிடம் பார்க்கவில்லை.

ஒருமுறை கோட்டூர்புரத்தில் அன்றைய ஷூட்டிங் ஸ்பாட்டான அபெக்ஸ் லாபரட்டரி அலுவலகத்திற்கு வரும்போதே அவர் சற்று கோபமாக இருந்தார். என்னிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அப்போது அவர் ஒரு மாருதி ஆம்னி வைத்திருந்தார். அவரே அதை ஓட்டி வருவார். அன்றைக்கு ஒரு சிக்னலில் நிறுத்தியபோது அருகில் சைக்கிள் ஒன்று வந்து நின்றது. அதன் கேரியரில் தச்சு உபகரணங்கள் அடங்கிய பை காணப்பட்டது. அந்தத் தச்சர் விஜயை அடையளம் கண்டுகொண்டபின் அவரிடம், சார் எனக்கும் சினிமால நடிக்க ஒரு சான்ஸ் வாங்கித் தர முடியுமா என்று கேட்டார் என்று விஜய் என்னிடம் சொன்னார். வந்த கோபத்தில் அந்த நபரிடம் நடிப்புன்னா என்ன உனக்கு சாதாரணமா போச்சா? நான் உன் வேலையை செய்ய முடியுமா? அதுமாதிரிதான் நீயும் என் வேலையை செய்ய முடியாது என்று நான் கோபத்தோடு சொன்னேன், நல்ல காலமாக சிக்னல் விழுந்துவிட்டது, அவன் தப்பித்தான் என்று விஜய் என்னிடம் சொன்னார். இந்தமாதிரி தான் சார்ந்த கலையை பெருமிதமாகவும் மரியாதைக்குரியதாகவும் போற்றக்கூடிய ஒருவர் so called ஹீரோவாக ஆகவே முடியவில்லை. அவர் இப்போதும் ஃப்ரேமின் கன்னி மூலையிலோ, அக்னி மூலையிலோ தலையைக் காட்டும் வித்தையை வெதும்பிச் செய்துகொண்டிருக்கிறார்.

ஹீரோவாக ஆகியிருந்தால் இவரும் இப்படியிருந்திருக்க மாட்டார் என்று என்னால் சொல்ல முடியவில்லை. அந்த வார்த்தையின் அபத்தத்தை உணர்ந்தவோர் கலைஞராகவே அவர் என் கண்களில் தெரிகிறார். அப்படியே நாசர் மாதிரி.

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=239

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்சார் எனும் சவரக்கத்தி

சுதேசமித்திரன்

இந்தச் செய்தியைக் கடந்த வாரமே எழுதியிருக்கவேண்டும். நீண்ட கட்டுரைகளை இணைய வாசகர்கள் விரும்புவதில்லை என்கிற பரவலான கருத்தே இதைக் காக்க வைத்தது. கடந்த வாரம் 'அப்படியே நாசர் மாதிரி' என்பதாக முடிந்தது. அது என்னவென்றால்,

ஆரண்யம் இதழின் வெளியீட்டு விழாவிற்கு யாரை அழைக்கலாம் என்று நானும் ஸ்ரீபதி பத்மநாபாவும் யோசித்தபோது ஆரண்யம் கலை, இலக்கியம் என்பதோடு சினிமாவையும் அக்கறையோடு அணுக விரும்பிய இதழ் என்பதால் சினிமாவிலிருந்தும் ஒருவர் கண்டிப்பாக மேடையில் இருக்கவேண்டும் என்பதாகத் தீர்மானித்தோம். பெயர்களின் பட்டியல் தொடங்கியது. மகேந்திரன், பாலுமகேந்திரா, முடிந்தால் கமலஹாசன், முடியாவிட்டால்... என்று ஆரம்பித்துப் போய்க்கொண்டிருந்தது.

நான் பணியாற்றிய சீரியல் ஒன்றில் பாலாசிங் நடித்தார். அவதாரம் பார்த்த மயக்கத்தில் அவர் உண்மையிலேயே கூத்துக் கலையை அறிந்தவர்; கிராம மேடை நாடகங்களில் நடித்தவர் என்பதாக பலரைப் போலவே நானும் நம்பிக்கொண்டிருந்த வகையில் கூத்துக்கலை பற்றி ஆரண்யத்துக்கு ஒரு கட்டுரை கொடுக்க இயலுமா என்று கேட்டு வைத்தேன். அவர் பதறிவிட்டார். அது நாசருக்குத்தான் தெரியும், நீங்கள் அவரையே கேளுங்கள் என்று விலகிக்கொண்டார்.

பேச்சு இந்தப் பக்கமாகத் திரும்பியதும் அழைக்கப்பட வேண்டியது நாசர்தான் என்று ஏகமனதாகத் தீர்மானித்துவிட்டோம். சென்னையில் நேரில் சந்தித்தபோது அவர் உடனே சம்மதித்து குறிப்பிட்ட நாளில் வந்தும் விட்டார். அவர் வந்த அதே ரயிலில்தான் சாருநிவேதிதாவும் விழாவுக்காக வந்தார் என்பதால் யார் எங்கே இறங்கப்போகிறார்கள் என்பதில் ஒரு சிறு குழப்பம் ஏற்படவே, வடகோவை ரயில் நிலையத்திற்கு ஒரு காரும் கோயமுத்தூர் சந்திப்புக்கு ஒரு காரும் அனுப்புவது என்று தீர்மானித்தோம். சந்திப்புக்கு நானும் ஸ்ரீபதியும் போயிருந்தோம். ஆனால் நாசரும் சாருநிவேதிதாவும் வடகோவையிலேயே இறங்கிவிட்டார்கள். நாங்கள் அனுப்பியிருந்த நபர் அவர்களை அவரவருக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த அறைகளில் கொண்டு விட்டுவிட்டார்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்குப் பிறகே நான் நாசரை அவர் தங்கியிருந்த சூர்யா இன்டர்நேஷனல் ஹோட்டலில் போய்ச் சந்தித்தேன். காலிங் பெல் ஒலித்ததும் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டிருந்த நாசர் கதவைத் திறந்தார். அவர் சொட்டச் சொட்ட நனைந்திருந்தார். குளித்துக்கொண்டிருந்தீர்கள

  • கருத்துக்கள உறவுகள்

Written by: JBR

'காளிதாஸி'ல் (1931) பேசத் தொடங்கிய தமிழ் சினிமாவுக்கு வயது 75. இந்த நெடிய பயணம் ஆயிரமாயிரம் திரை ஆக்கங்களை உள்ளடக்கிய வற்றாத விஷூவல் நதி. இதன் கரை ஒதுங்கிய மேதைகளும், இசை வாணர்களும், அறிவு ஜீவிகளும்தான் எத்தனை பேர்! தமிழ் கலாச்சாரத்துடன் இன்னொரு தண்டவாளமாக இணைந்து வரும் தமிழ் சினிமா தமிழ் வரலாற்றின் கண்ணாடி.

டி.பி. ராஜலட்ஷ்மி, இன்றைய அசின், த்ரிஷாவுக்கெல்லாம் மூத்தார். 'காளிதாஸி'ன் நாயகி. 'மிஸ் கமலா'வை (1936) இயக்கியதால் பெண் இயக்குனர்களுக்கும் இவரே முதல்வர்.

ஸ்டுடியோ தொடங்கிய முதல் தமிழர் நாராயணனின் ஸ்ரீனிவாசா சினிடோன் ஸ்டுடியோவின் (தோற்றம் 1934) ஒலிப்பதிவாளர் திருமதி நாராயணனான மீனாட்சி. வாழ்க்கையுடன் வேலையையும் பகிர்ந்து கொண்ட சம்சார சோஷலிஸ்ட்.

பாட்டாலே பார்வையாளர்களை சம்பாதித்த தியாகராஜ பாகவதருக்கு பக்தர்களைவிட பக்தைகள் அதிகம். இசைக்கு வசப்படார் பாகவதரின் தோளில் புரளும் சிகைக்கு வசப்பட்டார். மூன்று தீபாவளி கண்ட 'ஹாரிதாஸ்' இவரது மகுடம். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தின் பிள்ளையார் சுழி. பத்திரிகையாளர் லட்சுமிகாந்தின் கொலை வழக்கில் சிறை சென்று புகழ், பொருளுடன் முகமும் இழந்த ராசியில்லா ராஜா. பாகவதரை மறந்த உலகம் அவரது 'மன்மதலீலையை வென்றார் உண்டோ...' வை மறக்கவில்லை.

பாகவதரை சொல்லும்போது பாரதி பாடலை திரையில் முதலில் பயன்படுத்திய பி.யு. சின்னப்பாவை சொல்லாமல் விட முடியுமா? அழகுக்காக திரையில் தோன்றியவர்கள் மத்தியில் குரலுக்காக கொண்டாடப்பட்டவர் கே.பி. சுந்தராம்பாள். 'நந்தனாரி'ல் லட்சம் பார்த்த முதல் லட்சாதிபதி.

படத்துக்கு நாற்பது பாடல்களுடன் புராண சாலையில் மயங்கிக் கிடந்த சினிமாவை, வசன வடம் கொண்டு சமூக வீதிக்கு இழுத்து வந்த அண்ணாவின் 'வேலைக்காரி'யும் கருணாநிதியின் 'பராசக்தி'யும் தமிழ் சினிமா வரலாற்றில் திருப்புமுனைகள். சாதித்தது அவர்தம் பேனா முனைகள். 'பராசக்தி' தந்த இன்னொரு வரம், சிவாஜி கணேசன். தமிழ் கடவுளுக்கு ஆறு முகம். திரையில் இந்த தமிழ் நடிகனுக்கு நூறு முகம்.

சிரிப்பும் சிந்தனையும் தந்த என்.எஸ். கே. நகைச்சுவையில் ஒரு மைல் கல் என்றால் வைரகல் சந்திரபாபு. நாகேசுக்கும் உண்டு நல்லதொரு இடம். பாலையா போலிங்கு யாரையா?

மதுரகவி பாஸ்கரதாஸ், உடுமலை நாராயணகவி, பாபநாசம் சிவன் என தொடங்கி கோப்பையில் குடியிருந்த கண்ணதாசன், திருடராய் பார்த்து திருந்தச் சொன்ன கல்யாண சுந்தரம் என பெரு வெள்ளம் நம் சினிமா கவி வெள்ளம்.

நம்பியார் இல்லாமல் நல்லவராக இயலாத நடிகர்கள் நடுவில், கெட்டவனாக வந்தே ஹீரோவான 'ரத்தக் கண்ணீர்' ராதா, சிந்தனையில் தீ மூட்டிய நடிகவேள். விலங்குகளை மனிதர்கள் போல் நடிக்க வைத்த சாண்டோ சின்னப்ப தேவர்., ஜகன் மோகினிகளை திரையில் உலவவிட்ட, இன்றைய கிராபிக்ஸ் ஜாம்பவான்கள் வெங்கிகளுக்கெல்லாம் முன்னோடி விட்டாலாச்சாரியார் என எத்திசை நோக்கிலும் நம்மிடம் உண்டு ஒரு வல்லவர். தென்னாட்டு ஜேம்ஸ் பாண்டாக 'வல்லவன் ஒருவன்' ஜெய்சங்கரும் உண்டு.

இந்தி பாடலில் அடகு வைத்த காதுகளை, தமிழ் இசைக்கு திருப்பிய 'அன்னக்கிளி' திரையிசையில் போட்டது புது அத்தியாயம். இன்றும் தொடர்கிறது இளையராஜாவின் ராஜாங்கம். ஸ்டுடியோ சுவருக்குள் இருந்த சினிமாவை கிராமத்து புழுதிக்கு கொண்டு வந்த இனிய தமிழ் மக்களின் இயக்குனர் பாரதிராஜாவின் 'பதினாறு வயதினிலே' மயிலும், சப்பாணியும், பரட்டையும் தமிழ் சினிமாவின் பதியன்கள்.

கே.பி.யின் 'அரங்கேற்றம்', பீம்சிங்கின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்', ஜான் ஆபிரஹாமின் 'அக்ரஹாரத்தில் கழுதை', ருத்ராய்யாவின் 'அவள் அப்படிதான்' காமிரா கவிஞரின் 'அழியாத கோலங்கள்' என்றும் அழியா காவியங்கள். இத்தனையும் ஜரோப்பிய அலையில் விளைந்த நல்மணிகள்.

கலை வழி சென்ற சினிமாவை கமர்ஷியல் விழலுக்கு திருப்பிய பெருமை (?) ஏ.வி.எம். முக்கு உண்டு. இவர்களது 'முரட்டு காளை'யும், 'சகலகலா வல்லவனும்' சினிமா கலையின் முட்டுச் சந்து. திராவிட விழுமியங்களை விழுங்கி தேசியத்தை சினிமாவில் பூசியதில் மனிரத்னத்தின் 'ரோஜா'வுக்கும் 'பாம்பே'க்கும் பெரும் பங்கு உண்டு. வியாபார எல்லைகளை விஸ்தரித்தவையும் இவையே!

எடுத்து இயம்ப இன்னும் பல பேர் உண்டு. எனினும் உலகத் தரத்தில் எடுத்துச் சொல்ல இங்கு என்ன உண்டு? கேன்ஸ் சென்றதில்லை, ஆஸ்கார் வென்றதில்லை, 'லகான்', 'சக் தே' போலொரு முயற்சியில்லை.

இனிவரும் ஆண்டுகளில் குறைகளை நிறைகளாக்கி தனது முகத்தை புதுப்பித்துக் கொள்ளுமா தமிழ் சினிமா?

http://tamil.cinesouth.com/specials/specia...nema75tam.shtml

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் இல்லாத சினிமா!

சுதேசமித்திரன்

படகோட்டி படத்தில் தென்னை மரத் தண்டு மாதிரி இரண்டு பங்கு இடுப்புடைய சரோஜாதேவியும் உண்மையான படகோட்டி போலவே கரணை கரணையான புஜங்களும் நெய்தற் புறங்களில் எங்கும் காணாத சிவப்புத் தோலுமாக எம்ஜியாரும் கடற்கரைத் தென்னை மரங்களைச் சுற்றிச் சுற்றி வந்து, 'பட்' தொட்டால் பூ மலரும், 'பட்' தொடாமல் நான் மலர்ந்தேன் என்று காதலித்த காட்சி, பலராலும் வியந்து பாராட்டவும் நயந்து பகடி செய்யவும் ஏதுவாக இருந்தது.

உண்மையில் காதலை இதைவிட மோசமாக நையாண்டி செய்ய முடியாது. செல்லுலாய்ட் யுக ஆரம்பங்களில் வேண்டுமானால் நடிகைகளுக்குப் பஞ்சமேற்பட்டிருக்கலாம், ஆனால் படகோட்டி வண்ணப்படம் வேறு. அதன்பிறகோ என்னமோ தன் வயதைக் குறைத்துக்கொள்ள முடியாது என்றாலும் நாயகியின் வயதையாவது குறைக்க முயலலாமே என்கிற உந்துதலில்தான் லதா, மஞ்சுளா ஆகிய அற்புதங்களை எம்ஜியார் களம் இறக்கியிருக்கவேண்டும்.

இவர் இப்படியென்றால், தில்லானா மோகனாம்பாள் ரகளை இருக்கிறதே, முதிர்ந்த இஞ்சி போலக் கொழுத்த சிவாஜி கணேசன் தூணோரமாக வந்து நிற்கிறார். குதிர் போல வந்து நின்று சதிர் ஆடும் பத்மினி அவர் மறைந்திருந்து பார்க்கும் மருமத்தை வியக்கிறார். அதிலே ஒரு இடத்தில் ஷண்முகா என்று அவர் பேரை வேறு உச்சரித்துவிடுகிறார். டைட்டஸ்ட் க்ளோஸப்பில் சிவாஜியின் முகத்தில் அவள் எடுத்துக்கொண்ட உரிமையை மனம் விரும்பினாலும் ஆணின் பெயரைப் பெண் உச்சரிப்பதா என்கிற அழுத்தமான காதல் பாவம் பொங்குகிறது. ஒருகணம்தான். சிவாஜிக்கு அதுவே எதேஷ்டம்! பார்ப்பவர்களுக்குத்தானே கஷ்டம்!

இப்படி ஆரம்பித்த காதல் எதனால் ஒருகோணம் இருகோணம் முக்கோணம் என்று ஒரே குழப்பமாய்த் திரிந்துபோயிற்றோ எம் மொழியில்! அதிலும் படத்தில் நாயகி இருக்கிறாளோ இல்லையோ, காதல் கண்டிப்பாக இடம்பெற்றாகவேண்டும் என்கிற எழுதப்படாத நியதி வேறு! காதல் இல்லாத படங்கள் என்று தேடினால் என் ஞாபகத்தின் மேற்பரப்பில் குருதிப்புனல் ஒன்று மட்டும்தான் தென்படுகிறது. காதல் இல்லாத காரணத்தாலேயே அப்படத்தில் பாடல்களுக்கும் அவசியம் இல்லாது போகிறது. அதுவும்கூட தமிழ் மண்டையொன்றில் உருவானதல்ல, கோவிந்த் நிஹ்லானி கொடுத்த த்ரோகாலின் மறுபதிப்புதான்.

சினிமாவைப் பொறுத்தவரை காதல் என்கிற பேரமைப்பு பல்வேறு அழகியல் கூறுகளை அதற்கு வழங்குகிறது என்பதே சினிமா காதலின் ஜடையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பதற்கான காரணம். காதல் பெண்ணை முன்வைக்கக்கூடிய வாய்ப்பை நல்குகிறது. அதைவிட வேறு என்ன வேண்டும்? காதலிக்கப்படாத பெண்ணைத் திரையில் எவ்விதமாக அவிழ்த்துக் காட்ட முடியும்? வெறும் குளியல் காட்சியொன்றில் கிடைக்கும் கிளுகிளுப்பு மட்டுமே பார்வையாளனுக்குப் போதுமானதா? அதைவிடவும் நாயகனின் கரம் நாயகியின் செழுமையான உடலின் மீது படரும்போது எழுகிற கிளர்ச்சி இருக்கிறதே, அது பார்வையாளன் தானே சரோஜாதேவியைத் தீண்டிய இன்பத்தையே அல்லவா அவனுக்கு வழங்குகிறது.

நாளை நமதே படத்தில் என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கையணைக்க என்று எம்ஜியார் அடிக்கிற லூட்டி இருக்கிறதே, அதைக் கவனித்துப் பாருங்கள். ஒரு பெண்ணை எப்படியெல்லாம் செட்யூஸ் செய்யவேண்டும் என்பதற்கான ஆகச்சிறந்த பால பாடம் அது. சினிமா காதலைக் காதலிக்க ஆரம்பித்ததற்கு இதுவொரு காரணம் என்று சொன்னால், காதல்தான் சினிமாவுக்கு நல்ல பாடல்களையும், கவிஞர்களுக்கு நல்ல வரிகளையும் எழுத வாய்ப்பளிக்கிறது என்பது இன்னொரு காரணம். பாடல்கள் படங்களுக்கான நல்ல விளம்பரத் தூதர்கள் என்பதை ஆலிந்தியாரேடியோ காலத்திலேயே தமிழர்கள் கண்டுகொண்டுவிட்டார்கள். இப்போதோ அனைத்திந்தியாவும் வீட்டுக்குள்ளேயே ஒளிர்கிற யுகமாகிப் போய்விட்டது. சின்னத்திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாகப் பாடல்களுக்கென்றே ஒரு தனி சேனல் என்று ஆரம்பித்தது இப்போது எந்தச் சேனலைத் திருப்பினாலும் அப்போதுதான் முலை மதர்த்த இளஞ்சிறுமிகளும் மயிர் முளைத்த இளஞ்சிறார்களும் சங்கிலியிட்ட கோயில் யானை மாதிரி அங்கும் இங்குமாக அசைந்துகொண்டு நீங்கள் இஷ்டப்படும் பாடல்களை உடனுக்குடன் டெலிவரி செய்கிற புண்ணியத்தைக் கட்டிக்கொள்கிறார்கள்.

இந்த டெலிவரிகளால் சினிமாவுக்குக் கிடைப்பது இலவச விளம்பரமாக அமைந்துவிடுவதால், பத்தே பத்து வருடம் முன்பு சினிமாக் காட்சிகளையே அனுமதியில்லாமல் காட்டிக்கொண்டு அலைகிறார்கள் என்று பழிக்கப்பட்ட சின்னத்திரையாளர்கள் இப்போது ரத்தினக் கம்பளம் வைத்து வரவேற்கப்படுகிறார்கள். சமீபத்தில் ஆறொன்றை நடந்தே கடந்து ஆதிவாசி கிராமமொன்றுக்குப் போயிருந்தோம். அவர்கள் அந்த ஆற்றைக் கடந்து போகலாம் அல்லது யானைகள் மலிந்த அடர்ந்த வனத்தினுள் துணிந்து பல காதம் நடந்து வெளியுலகை எட்டலாம் என்கிற நிலையில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். ஆனால் டிடீயெச் வைத்து சின்னஞ்சிறு வீடுகளில் நமது நாயக நாயகியரின் காதல் கூத்துகளை ரசிக்க மட்டும் அவர்களுக்கு நல்வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அவர்களிடம் போய்ப் பேச்சுக் கொடுத்ததும் அவர்கள் கேட்ட கேள்வி இதுதான், நீங்கள் எந்த டீவி?

விகடனோ குமுதமோ எட்ட முடியாத வனம் அது. வாசிக்கத் தேவையே இல்லாத டீவி மீடியா அவர்களையும் சுலபத்தில் எட்டிவிட்டது. இப்படியொன்று கையில் இருக்கும்போது அதை விட்டுவிடலாமா? கதைக்குத் தேவைப்படுகிறதோ இல்லையோ இரண்டு அன்புள்ளங்களை இணைய வைத்து, காதலைப் பற்றவைத்தால் வந்து விழுகிறது பாடல் கொத்தொன்று. அதன் வாயிலாக இன்னவிதமான சினிமாவொன்று வெளியாகியிருக்கிறது என்பது அவர்களுக்கும் தெரிந்துவிடுகிறது. நேனோ கார் சிங்கூரில் தயாரானால் என்ன சரோதியில் தயாரானால் அவர்களுக்கு என்ன? கோடம்பாக்கத்தில் ஒரு சினிமா தயாராகியிருப்பது அவர்களுக்கும் சேர்த்துத்தானே!

காதல் தேவையே இல்லாத கதை என்பதாக ஒன்றைத் தமிழ் சந்தித்ததேயில்லை என்பதுபோல ஆகிவிட்டது. பாலு மகேந்திராவின் நல்லதோர் யதார்த்தப் படமான வீடுகூட காதலின் யதார்த்தமொன்றை முன்வைக்கவே செய்தது. பாரதிராஜாவின் முதல் மரியாதையை எடுத்துக்கொள்வோம், அவரது பல்வேறு படங்களைப் போலவே கதையே காதலை மையமாகக் கொண்டதுதான், முதிர்ந்த கதாநாயகன் இளம் நாயகியைக் காதலிக்கிறான். இதுதான் கதையின் காதற்சாரம். இளம் நாயகியான ராதா ரவிக்கை அணியாத ஓடக்காரப் பேரழகி. இது போதாதா? நாயகன் எத்தனை வயதானவனாக இருந்தாலும் நாயகியின் இளமைதானே வெல்லமாக இருக்கிறது. கல்யாணம் ஆகிவிட்ட ஒரே காரணத்தால் சிம்ரன் சின்னத்திரைக்கு ஒதுக்கப்படவில்லையா? ராதாவின் உடலமைப்போ பார்வையாளனை நோக்கி சவால் விடுவது, இருந்தாலும் பாரதிராஜா இன்னொரு உபாயத்தை மேற்கொள்கிறார். இந்த முதிர்ந்த கதை ஒரு பக்கமாக ஓடிக்கொண்டிருந்தாலும் நின்று நிதானமாக எசப்பாட்டு பாடிக்கொண்டிருந்தால் பார்வையாளன் எழுந்து ஓடிவிடுவானோ என்கிற அச்சம் அவரை உந்தித் தள்ளுகிறது, இதனால்தான் ரஞ்சனியையும் ரவிக்கையை அவிழ்த்துக் களத்தில் இறக்கி, சின்னப் பையன் ஒருவனை நெலாவ கையில பிடிக்க வைக்கிறார்.. டபுள் அட்டாக். முதிர் நாயகன் செய்ய இயலாத; செய்யத் துணியாத வேலைகளை இளம் ஜோடியொன்றை உருவாக்குவதன் மூலம் சாதித்துவிட முடிகிறது அவரால். ஒரு முந்தானையே விலகாதா விலகாதா என்று ஆசையாகப் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளனுக்கு சோதனை மேல் சோதனையாக இன்னொரு இளம் முந்தானை கிடைத்துவிடுகிறது. இப்படித்தான் காதல் என்பதே பிரதானமாக அமைந்துவிட்ட கதையிலும்கூட வலுக்கட்டாயமாகக் காதல் திணிக்கப்படவேண்டிய அவலம் அலைகிறது.

இயக்குனர் ஸ்ரீதர் காதல் படங்களின் பிதாமகன் என்பதாகத் தமிழர்களால் அறியப்படுபவர். காதல் என்பது சினிமாக் கதைக்கான பிரதானக் களம் என்பதை இந்தியில் ராஜ்கபூர், குருதத் முதலான முன்னோடிகளைக் கண்டறிந்து தன் படங்களில் காதலை மட்டுமே மையப்படுத்தும் யுக்தியைக் கையாண்டவர் அவர். நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற அழுத்தமான கதையாகட்டும், காதலிக்க நேரமில்லை போன்ற நகைச்சுவைப் பொழுதுபோக்குமாகட்டும், காதல் இல்லாமல் அவருக்குக் கைகால்கள் ஓடா. ராஜ்கபூர் காதல் படங்களை எடுத்தார் என்றால் அது அவருக்குச் சுலபமாக வருகிறது, அதனால் அவர் செய்தார் என்பதாக எடுத்துக்கொள்ள நமக்குத் தெரிவதில்லை. ஓஹோ இப்படி ஒன்று இருக்கிறதா? பார்வையாளனை உருக வைக்கக்கூடிய உபாயமொன்று காதல் என்கிற பெயரில் உலவிக்கொண்டிருக்கிறதா? அப்படியானால் இனி எம் படங்கள் யாவற்றிலும் இது கண்டிப்பாக இடம் பெற்றேதான் தீரும். எந்தவிதமான கண்ணோட்டம் இது?

பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ் என்று ஒரு ஹாலிவுட் படம். ஆங்கிலப்பட அதிரடி நாயகன் வில் ஸ்மித் நாயகன். தயாரிப்பாளர்களில் ஒருவரும் அவர்தான். ஆனால் படத்தில் ஒரு அதிருதலும் கிடையாது, ஒரு அடியும் கிடையாது. பைசைக்கிள் தீவ்ஸ், லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல் போல தந்தைக்கும் மகனுக்கும் ஊடான உறவைச் சொல்லும் கதை. உண்மைச் சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டது என்று டைட்டில் கார்டு தெரிவிக்கிறது. சம்பாத்தியமில்லாத தன் வேலையை விட்டு வேறொரு துறைக்குப் போக நாயகன் விரும்புகிறான். இந்தப் போராட்டத்தின் இடையே அவனது குடும்பம் என்ன ஆகிறது என்பதைக் கதை சொல்கிறது. உணர்ச்சிகரமான ஒரு க்ளைமாக்ஸோடு நிறைவு பெறுகிறது. காதல் என்பது மருந்துக்கும் கிடையாது. இந்த மாதிரி சம்பவங்கள் உங்கள் வீட்டிலும் எங்கள் வீட்டிலும் நடப்பதில்லையா? அவை ஏன் சினிமாவாக எடுக்கப்படாமல் தவிர்க்கப்படுகின்றன?

ஃபாசிலின் பூவே பூச்சூடவா, பாட்டிக்கும் பேத்திக்கும் இடையே உள்ள பாசத்தைச் சொல்கிற படம். அதிலும்கூட ஒரிஜினல் மலையாளத்தில் மோகன்லால் பாத்திரம் வாயிலாக காதல் எட்டிப் பார்க்கிறது. அதே உருவம் தமிழில் எஸ்விசேகருக்குத்தான் பொருந்துகிறது என்று நம்பி அவரைத் தமிழில் உபயோகித்திருப்பார் ஃபாசில். அதனாலேயே காதல் எனும் சீரியஸ்னஸ் தமிழ்ப் பதிப்பில் புரியாமல் போனது. ஆனால் உண்மையிலேயே அது காதல் எனும் ஏரியாவே அல்ல. பக்கத்து வீட்டுச் சிறுவன் ஒருவனின் குறும்புத்தனம் என்பதே அந்தக் கதைக்குத் தேவைப்பட்டது. ஆனால் அதைக்கூடத் தமிழனுக்குப் புரியும்விதமாகச் சொல்ல வேண்டும் என்றால் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுவிட்டது என்பதாகவே சொல்லவேண்டியதிருக்கிறது.

தொன்றுதொட்டு இருந்துவரும் காப்பியடிக்கும் மனோபாவம் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறதே தவிர, முற்றிலும் இல்லாமல் போவதேயில்லை. அமீரின் பருத்தி வீரனுமாகட்டும், ராமின் கற்றது தமிழுமாகட்டும், சசிகுமாரின் சுப்ரமணியபுரமுமாகட்டும், காதல் எனும் உரத்தில் வளர்ந்த மாமரங்கள்தான். இந்த நண்பர்கள் காதல் இல்லாமல் படம் தர முயலட்டும். எத்தனையோ ட்ரெண்ட் செட்டர்கள் வந்தபோதும் காதல் எனும் அம்சம் மட்டும் விடுவிக்கப்பட இயலாத அவஸ்தையாக ஆகிப்போனதை இவர்களால் மாற்ற முடியாவிட்டாலும் வேறு விதமான படங்கள் உண்டு என்பதை மற்றவர்களுக்கு இவர்களால் உணர்த்த முடியும்.

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=308

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சினிமா பூதம்

சுதேசமித்திரன்

என்னையும் சேர்த்து மொத்தம் ஐந்து உதவி இயக்குனர்கள். ஆனால் யாரும் அந்தக் காரியத்தைச் செய்யத் துணிந்திருக்கவில்லை. இந்த மாதிரி வேலைகளுக்காகவே அவதரித்தவன் என்பதாக எனக்குள்ளே ஏதாவது தேவகணங்கள் வந்து அறிக்கை விடுகின்றனவா என்பதும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் பெரும்பாலும் இந்த மாதிரி வம்புகளில் நான்தான் வலியப்போய் சிக்கிக்கொள்கிறேன். விஷயம் வேறொன்றுமில்லை. வாரம் ஒரு கதை என்பதாக சன் டீவிக்கு ஒரு தொடர் தயாரித்துக்கொண்டிருந்தோம். அதில் ஒரு கதையில் கிராமப்புறத்து விபச்சாரி வேடம் ஒன்று தேவைப்பட்டது. கைவசம் இருந்த நடிகையை கண்டாங்கியையே கொஞ்சம் லோ ஹிப்பாகக் கட்டி முந்தானையை முலைகளுக்கு இடையே முறுக்கிப்போட்டு, கொண்டு வந்து ஷாட்டில் நிறுத்துமாறு ஏற்பாடு. எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் அந்தத் தோழிக்கு மார்புகள் அத்துணைப் பெரியவை அல்ல. இயக்குனரின் கண்களில் இது பட்டுவிட்டது. காமிராமேனும் லென்சுக்கு எடுப்பாக இல்லை என்று அபிப்பிராயப்பட்டதால் அவளது மார்புகளைப் பெரிதாக்குகிற வேலை காஸ்ட்யூமருக்கு வழங்கப்பட்டது.

அவளது ப்ளௌசொன்றை எடுத்துக்கொண்டு மேக்கப் செய்துகொண்டிருந்த வீட்டின் படுக்கையறைக்குள் நுழைந்தார் எங்கள் காஸ்ட்யூமர். கூடவே நானும். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்க்க விளைகிற சிறுபிள்ளைத்தனமான ஆவல் சுற்றுமுற்றும்கூடப் பார்க்காமல் மெத்தையை ஒரு ஓரமாகக் கிழித்து உள்ளேயிருந்து பஞ்சை எடுத்தார் அந்தப் பரோபகாரி அப்புறம் ஒரு கைக்குட்டையை இரண்டாகக் கிழித்து, ப்ளௌசின் முலைப்பகுதிக்குள் பஞ்சைத் திணித்து கைக்குட்டைத் துண்டால் ஹெமிங் செய்து வெறும் ப்ளௌசுக்கே முலைகளை வழங்கினார் அவர். இதை அவளிடம் யார் வழங்குவது என்பதுதான் எங்களுக்குள் விளைந்த பிரச்சினை.

அதை அவளிடம் யார் வழங்கினார்கள், எப்படி அதை அணிந்துகொண்டாள், எப்போது அதை அவிழ்த்தாள் என்பதெல்லாம் இங்கே தேவையில்லாத விஷயங்கள். இந்த உதாரணத்தை நான் சொன்னது, இப்படித்தான் எமது சினிமாவில் மிகச் சிறிய விஷயங்கள்கூட பூதாகரமாக்கப்படுகின்றன என்பதை விளக்கத்தான்.

சாதாரணமாகவே மிகச்சில நடிகைகளைத் தவிர, பெரும்பாலும் முலை சிறுத்த அழகிகளே தமிழுக்குக் கிடைத்து வந்திருக்கிறார்கள். சினிமாவுக்கு முக்கியம் முகத்தின் வசீகரம்தான். complexion, உயரம் முதலானவற்றையெல்லாம் எளிதாக இட்டு நிரப்ப சினிமாவால் முடியும். இதனால்தான் எமது சினிமாக்களில் டாக்கி போர்ஷன்களில் அசலான சிறுத்த மார்பகங்கள் மற்றும் புட்டங்களோடு காணப்படும் எமது தாரகைகள் பாடல் காட்சிகளில் மட்டும் அவை பூதாகரமாகப் பெருத்துக் காணப்படுகிறார்கள். இந்த முரணைப்பற்றி யாரும் கவலைப்படுவதேயில்லை. கதைக்கு, பெருத்த ஸ்தனங்களுள்ள பெண்ணொருத்தி தேவைப்பட்டால் அப்படியொருத்தியைத் தேர்ந்தெடுப்பது அல்லது படத்தின் அத்தனை காட்சிகளிலும் அவ்விதமாக பஞ்சு தந்திரம் செய்துவிடுவது என்பதாக ஏதாவதொன்றை முயல்வதில் தவறேதும் இல்லை. ஆனால் பாடல் காட்சிகளில் மாத்திரம் எதற்காக இந்தத் தாராள மனோபாவம்? ஏனென்றால் பாடல் காட்சிகள் பார்வையாளனின் வக்கிரத்தைத் தூண்டும் நோக்கத்தில் மாத்திரமே எமது சினிமாவில் இடம் பெறுகின்றன.

ஒரு நாவல் படிக்கும் வாசகனின் வக்கிரம் அவனது கற்பனையினளவுதான் தூண்டப்பட முடியும். வெறும் வார்த்தைகள் அதிகபட்சம் இருபது சதவீத வக்கிரத்தை அவனது மனத்தில் விதைக்கலாம் என்பதாக வைத்துக்கொண்டால், சினிமா பார்வையாளனுக்கோ அது நூறு சதவீதம் தூவப்படவேண்டிய அவசியம் உள்ளதாக எமது இயக்குனன் அல்லது தயாரிப்பாளன் அல்லது வினியோகஸ்தன் நினைக்கிறான். உள்ளதை பூதாகரமாக்குவதன் வாயிலாகவே அது சாத்தியப்படும் என்பதாகவே அவன் கற்றுவந்திருக்கிறான்.

இன்னமும் எமது தேசத்தில் குரு பாரம்பர்யம் அழியாமல் காக்கப்படுவது சினிமாவில் மாத்திரம்தான் என்பதே இதற்குக் காரணம். விஷுவல் கம்யூனிகேஷன், திரைப்படக்கல்லூரி என்று எதைப் படித்துவிட்டு வந்தாலும் ஓர் இயக்குனரிடம் சிஷ்யனாக இருந்தாக வேண்டிய அவசியம் தற்போதும் நிலவியே வருகிறது. முன்னவரிடம் கற்றுக்கொள்வதைப் பின்னவர் முயலும்போது கூட்டு ஆராதனைபோல ஒரே வகைப்பட்ட சினிமாக்களே திரும்பத் திரும்ப உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் காரணமாகவே கிருட்டிணன், முருகன், சங்கரன், ஆஞ்சநேயன், ஆலம்பனா பூதம் போன்றவர்கள் ஏதோ காரணங்களுக்காக சினிமாவில் எடுத்த ஆப்டிகல் விஸ்வரூபங்கள் அனைத்து விஷயங்களுக்குமாகத் தங்கிவிட்டன. சினிமா என்பதே பூதாகரம் என்பதாக ஆகிவிட்டது.

ஓரங்குல முகம், முப்பதடியாகக் காட்டப்படும் விந்தையொன்றே சினிமாவின் பூதாகரத்தின் துவக்கமாக இருந்திருக்கலாம். இந்த ஆரம்பம் இப்போது நடிகையரின் முலைகளில் மாத்திரமல்ல, எங்கெங்கும் நிரம்பி வழியவே செய்கின்றது.

சினிமாவில் காட்டப்படும் அரசு அலுவலகங்களை எடுத்துக்கொள்வோம். அரசு அலுவலகம் என்றாலே லஞ்ச அலுவலகம் என்பதாகவே எமது சினிமா காட்டிவந்திருக்கிறது. உண்மையில் அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் தோழர்கள் அத்தனை பேரும் லஞ்சம் வாங்குபவர்களாகத்தான் இருக்கிறார்களா? மொத்தம் ஐந்து சதவீதம் பேர் அப்படி இருக்கலாம் என்பதே எனது அனுமானம். ஆனால் மற்றத் தொண்ணூற்றைந்து சதவீதத்தினரும் அவ்விதமாகவே செயல்படுவதாகவே ஒரு சாதாரணப் பார்வையாளன் நம்பிக்கொண்டிருக்கிறான் என்பதே உண்மை. இதற்குக் காரணம் சினிமாவை அவன் சொந்தத் தாயாரின் முலைப்பால் போல நம்புவதுதான்.

பாலுமகேந்திரா தன் வீடு படத்தில் ஒரு காட்சி வைத்திருப்பார். கதையின் மையமே அதுதான். ரிசர்வ் சைட் ஒன்றை ஹௌசிங் யூனிட் க்ளர்க் ஒருவர் நைச்சியமாக அப்பாவிப் பெண்ணொருத்திக்கு விற்றுவிடுவதுதான் அந்தக் கதையின் மையம். அந்தக் கதையில் இயக்குனர் ஷங்கர் படங்களில் வருவதைப்போல லஞ்சலாவண்யம் தலைவிரித்தாடும் அரசு அலுவலகமொன்றை அவர் நினைத்தால் நிர்மாணித்துக் காட்டியிருக்க முடியும். அதில் உள்ள குறையை ஒருபோதும் எமது பார்வையாளனால் கண்டுகொள்ளவே இயலாது. இருப்பினும் பாலுமகேந்திரா யதார்த்தமான ஒரு பாத்திரத்தை அந்த இடத்தில் சித்தரித்துக் காட்டியிருப்பார். விஷயம் வெளியே வந்து, அதிகாரி விசாரணை செய்யும்போது நடுங்கியபடி ஒரு நடுத்தர வர்க்க மனிதனின் தவிர்க்க இயலாத கையாலாகாத்தனத்தோடு க்ளர்க் தன் குற்றத்தை ஒப்புக்கொள்வார். அவரது நியாயத்தைக் கேட்டால் யார் அதிகாரியாக இருந்தாலும் மறுவார்த்தை பேச இயலாது. தி.ஜானகிராமனின் சிறுகதைகளில் வார்க்கப்பட்ட பாத்திரங்களுக்கு எவ்விதத்திலும் மாற்றுக் குறையாத பாத்திரப் படைப்பு அது.

இந்த யதார்த்தம் ஏன் சினிமாவில் பேணப்படாமலே போனது? போலீஸ்காரன் என்றால் அரசியல்வாதிகளுக்கும் முதலாளிகளுக்கும் துணை நின்று அப்பாவிகளைத் துன்புறுத்துபவன் என்பதாகவே எமது சினிமா சொல்கிறது. வில்லன் போலீஸ்காரனாக இருந்தால் இந்த நியதி. ஹீரோ போலீஸ்காரனாக இருந்தால் அவன் மட்டும் நல்ல போலீஸ்காரனாக இருப்பதுதான் கதையின் பிரச்சினையே. அப்படியானால் போலீஸ்காரன் என்பவன் நல்லவனாக இருக்க இந்தச் சமூக, அரசியல் அமைப்பு விடவே விடாது என்பதே சினிமா தொன்றுதொட்டு முன்வைக்கும் செய்தி. உண்மை இதுதானா?

நகர மத்தியில் டிராஃபிக்கில் நிற்கும் போலீஸ்காரர் ஒருவர் அந்த நேரத்தில் நகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட லாரியொன்றை நிறுத்துகிறார். உண்மையில் லாரி நிற்பதில்லை. சற்று வேகம் குறைகிறது. க்ளீனரின் கை கதவுக்கு வெளியே தொங்குகிறது. அதோடு போலீஸ்காரரின் கைக்கு ஒரு பரிமாற்றம் நடக்கிறது. லாரி தொடர்ந்து நகருக்குள் போகிறது. இது அன்றாடம் நாம் வீதியில் காணும் காட்சி. இதில் வசனங்களோ பாடல்களோ எதுவும் கிடையாது. இதே காட்சி சினிமாவில் இடம் பெற்றால் எப்படி இடம் பெறும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இதில் உண்மையான அவலம் என்னவென்றால், சினிமா பார்த்துப் பார்த்து நாம் கற்பனை செய்துவைத்திருக்கும் பூதாகரம் வேறு, உண்மையில் நடப்பது வேறு என்பதுதான். உண்மையில் இவ்விதமாக ஒரு லாரி நகருக்குள் தொடர்ந்து செல்ல ஒரு போலீஸ்காரர் பெறும் தொகையை தைரியமிருந்தால் அவரது கையிலிருந்து பிடுங்கிப் பாருங்கள். அதிர்ந்துபோய்விடுவீர்கள் அது வெறும் ஐந்து ரூபாய்தான்.

இப்படி எத்தனை லாரிகள் எத்தனை ஐந்து ரூபாய்கள் என்று கணக்கிடுவதை விட்டுவிட்டு இந்த அவலத்தை மட்டும் ஆராயுங்கள். இந்தக் காட்சியில் அவலப்பட்டும் சிறுமைப்பட்டும் போகும் ஒரு சாமான்ய அரச உத்தியோகத்தில் தவிக்கும் ஒரு நடுத்தர வர்க்க மனிதனை உங்களால் இனங்கண்டுகொள்ள முடிந்தால்தான் யதார்த்தம் என்பது என்ன என்பது உங்களுக்கு விளங்கும். இதுகாறும் சினிமா பார்த்துப் பார்த்து விஷமேறிக் கிடக்கும் மூளை கொஞ்சமேனும் தெம்புறும்.

இதனால்தான் சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சாதேயில் சித்தரிக்கப்பட்ட போலீஸ் பிரச்சினைகள் ஒருவித திடீர் கவனத்தைப் பார்வையாளனின் நெஞ்சில் விதைத்தன. ஓரளவுக்கு போலீஸ்காரர்களின் உண்மையான அவலத்தை முன்வைக்க முயன்ற திரைப்படம் அது. ரா.பார்த்திபன் இயக்கிய உள்ளே வெளியே திரைப்படத்தையும் இந்தப் படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள், ரா.பார்த்திபனின் பூதாகரம் எளிதில் விளங்கும். ஆனால் அந்தப் படத்தின் அசிங்கத்தைப் பார்வையாளனுக்குப் புரிய வைக்க இன்னொரு படம் வெளிவர இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறது.

தமிழ் சினிமா தற்போது எதிர்கொள்ளும் புத்துயிர்ப்பு மிகவும் நம்பிக்கை தருவதாயிருக்கிறது. ஆனாலும் இப்போதும் பார்த்திபனோ வேறு ஒருவரோ உள்ளே வெளியே மாதிரி ஒரு படம் கொடுத்தால் அது மற்றப் படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஓடோ ஓடென்று ஓடி, தெலுங்கிலும் ஹிந்தியிலும் நிரம்பி வழிந்துதான் அடங்கும் என்பதே அவலமான செய்தி.

இதே மாதிரியான ஒரு பூதாகரம்தான் ஆல்ஃப்ஸ் மலையிலும் தேம்ஸ் நதித் தீரத்திலும் திடீரென்று போய்க் குதித்து பாடல்கள் பாடுவதும் வீதிகளில் ஆடுவதும்கூட. இவ்வாறு செய்வதால் அதிக செலவு ஆவதில்லை என்பதாகவே எனது திரையுலக நண்பர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் எவ்விதமான அர்த்தமும் இல்லாமல் திடீரென்று போஸ்ட் மாடர்ன் புனைகதை போல இந்தமாதிரி வெளிதேசக் காட்சிகள் வந்து விழும்போது அவற்றை எவ்விதமாகத்தான் எதிர்கொள்வது?

ராஜ்கபூரின் கடைசித் திரைக்கதையான ஹென்னாவை அவரது மறைவுக்குப் பிறகு ரந்தீர் கபூர் இயக்கினார். இந்தியா - பாகிஸ்தான் இடையே ஓடும் சிந்து நதியை மையமாக வைத்து அழகாகப் பின்னப்பட்ட கதை. அந்தப் படத்தில் இந்தியா என்பதாக ஆஸ்திரியாவைக் கொஞ்சம் கலந்து காட்டியிருப்பார். பாடல் காட்சிக்கென்றல்ல, வசனக்காட்சிகளும் அங்கே இடம்பெறும். இந்தியாவில் இவ்வளவு அழகான இடம் இருக்கிறதா என்று பார்வையாளன் பிரம்மித்துப்போகவேண்டும் என்பதாக அவர் எண்ணியிருக்கலாம். இதே யுக்தியை வெகுநாட்கள் கழித்து மலையாளத்தில் இயக்குனர் கமால் தனது ஸ்வப்னக்கூடு திரைப்படத்தில் செய்திருப்பார். பாண்டிச்சேரி என்று பரதேச வெளியொன்றைக் கலந்து காட்டியிருப்பார். இதுவும்கூட ஒருவிதமான அழகியல் சார்ந்த பூதாகரம் என்பதாகவே நாம் எடுத்துக்கொள்ள முடியும். இதையே இப்படிச் சொல்வதானால் நம்மாட்கள் செய்கிற ரகளையை எந்த அடிப்படையில்தான் நாம் ஏற்றுக்கொள்ள முடியும்?

ஹீரோ காலைச் சுழற்றினால் twister வருவது, தலையைச் சிலுப்பினால் இடி இறங்குவது என்று இந்த பூதாகரம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டேதான் போகிறது. எமது உதவி இயக்குனர்களின் ஆகச்சிறந்த பிரச்சினைகளில் ஒன்று இதுதான்,'ஹீரோவை எப்படி introduce செய்வது?' கொடூரமான மூளைச் செலவு இது. சென்னை நகரத்தில் எந்த எந்த இடத்தில் எப்படி எப்படியெல்லாம் வெடிகுண்டு வைக்கலாம் என்று தீவிரவாதிகள் உட்கார்ந்து ஆலோசனை செய்வதற்கும் இதற்கும் எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. இதைச் செய்கிற நேரத்தை வேறு விஷயங்களுக்கென அவர்களிடம் நம்மால் வழங்க முடியுமானால் ஒருவேளை யதார்த்த நோக்கில் ஏதாவது செய்ய இயலுமா என்று அவர்கள் யோசிக்க ஆரம்பிக்க வாய்ப்பாக அமையும்.

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=365

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விருது பொருதுதல்

சுதேசமித்திரன்

சாதாரணமாகத் தமிழ் எழுத்தாளர் மத்தியில் மீளாத் துயரொன்று கவிந்தே வந்திருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் எப்போதும் உம்மணாமூஞ்சிகளாகவே இருந்து வருபவர்கள். அவர்களின் முகத்தில் ஒளி என்பதாகவோ, களை என்பதாகவோ ஒன்று ஒருபோதும் தென்பட்டதேயில்லை. இதற்கெல்லாம் அந்த மீளாத் துயர்தான் காரணம்.

'அங்கீகாரம்' என்பதே அந்தத் துயரத்தின் திருநாமம். அவர்கள் என்னதான் உலகத் தரத்தில் எழுதிக் குவித்தாலும் அவர்களைச் சீந்த ஒரு நாதியும் இராது என்பதே பெருந்துயராய் இருந்து வருகையில், அங்கீகாரத்திற்கு எவ்விதத்திலும் தகுதியே இல்லாத பலருக்கும் விருதுகள் சென்று குவிந்துகொண்டிருக்கும் என்பதே மாபெருந்துயரம். இதனை வேடிக்கை பார்த்துப் பார்த்துத் தமிழ் எழுத்தாளனுக்கு அடித்தால்கூட வலிக்காத அளவுக்கு மரத்தே போய்விட்டது. இதனால்தான் அவர்களைக் குடிகாரர்கள் என்பதாகவும் ஒயின்ஷாப்பில் புத்தகம் ரிலீஸ் செய்பவர்கள் என்றும் ஓடும் ரயிலிலிருந்து புத்தகத்தை வெளியே இடுபவர்கள் என்றும் வணிக இதழ்கள் கேலிசெய்து பிழைப்பு நடத்துகின்றன. அங்கீகரிக்கப்படாதவன் சமுதாயத்திற்கு எதிராகச் செய்யக்கூடிய ஆகச் சிறிய வன்முறை இது என்பதை தமிழ்ச் சமுதாயம் உணர்வதேயில்லை.

இது ஒருபுறமிருக்க, இந்த நிலை தமிழில் எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா என்று கவனித்தால் அது இந்த திவ்யத்திருமாநிலத்தில் கலைஞர் யாவருக்கும் பொதுவானதாகவே காணப்படுவதை மறுக்க முடியாது. இதில் சினிமா கலைஞர்களும் விதிவிலக்கல்ல.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் தகுதியுள்ளவர்களுக்கு விருது கிடைத்ததேயில்லை. இருப்பினும் உண்மையான கலைஞர்கள் தங்கள் உள்ளப் பொருமல்களை எழுத்தாளர்கள் போல வெளிப்படுத்தாமல் புன்னகையுடனே வலம் வருகிறார்கள் என்பதனால் இதனை சாமான்யர்கள் உணரவே முடியாமல் போய்விடுகிறது. அவர்களின் இவ்விதமான செயல்பாட்டுக்கு அவர்கள் மீது குவியும் வெளிச்சமே காரணம். மீடியா எனும் ஓநாய்க்கூட்டம் அவர்களை இருட்டுக்குள்ளிருந்து பார்வையிட்டுக்கொண்டே இருக்கிறது. அவற்றைத் தங்கள் படுக்கையறையில்கூட எதிர்கொள்ள வேண்டிய சூழலிலேயே திரைக் கலைஞர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.