Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய - ஈழப் போரின் முதற் புள்ளி என்ன ?

Featured Replies

http://blog.sajeek.com/?p=444

எல்லோரும் சேர்ந்து கொள்ளியெடுத்து நெருப்பு மூட்டி பற்றியெரிய வைத்து விட்டு - இப்போ எரியூட்டிய கைகள் கூட தங்கள் கொள்ளிக் கட்டைகளை மறைத்து வைத்து விட்டு தனியே ஒரு கையை மட்டும் சுட்டிக் காட்டி அதோ அதோ அந்தக் கைதான் எரித்தது எனச் சொல்வதிலுள்ள நியாயம் என்ன ?

அன்டன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் நூலில் இருந்து ….

தமிழீழ அரசியல் போராட்ட வரலாற்றில் ஒரு இருள் படர்ந்த காலப் பகுதியாக கட்டவிழ்ந்தது 1987 அக்டோபர் மாதம். அக்டோபர் 2ம் நாள் பருத்தித்துறை கடற்பரப்பில் நிகழ்ந்த ஒரு சிறிய சம்பவம் இந்திய அரசின் கையாலாகாத் தனத்தாலும் சிங்கள அரசின் இனவெறிப் போக்கினாலும் பேரவலமாக மாறியது. புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் ஆகியோருடன் பதினைந்து உயர்மட்ட புலி வீரர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பலாலி விமானத் தளத்தில் தடுத்து வைக்கப் பட்டனர்.

இந்திய தூதர் திரு டிக்சிட் அவ்வேளையில் புது டில்லியில் இருந்தார். நிலைமை பாரதூரமானது என அறிவிக்கப் பட்டதும் அவர் தனது விடுமுறையை ரத்துச் செய்துவிட்டு அவசர அவசரமாக கொழும்பு வந்து சேர்ந்தார். பலாலியிலுள்ள இந்திய இராணுவ தலைமையகத்திலிருந்து திரு டிக்சிட்டுடன் தொலைபெசியில் கதைத்த போது அவர் என்னை பதட்டப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினார். இந்தப் பிரச்சனையை உடனே தீர்த்து வைக்கலாம் என்றும் கைதாகி தடுத்து வைக்கப்பட்ட தளபதிகளும் போராளிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என்றும் அவர் உறுதியளித்தார். நிலைமை மோசமடையுமென நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

அந்த நேரத்தில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. சிங்கள ஆயுதப்படைகள் முகாம்களுக்குள் முடங்கியிருந்தன. தமிழர் தாயகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு இந்திய அமைதி படைகளிடம் கையளிக்கப் பட்டிருந்தது. அத்துடன் மாவட்ட தளபதிகள் என்ற ரீதியில் குமரப்பாவும் புலேந்திரனும் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு பழக்கமானவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் விதிகளுக்கு அமைய தமிழ் போராளிகளுக்கு அரச அதிபரால் பொது மன்னிப்பு வழங்கப் பட்டிருந்தது.

இந்த அமைதிச் சூழலில் எதுவித குற்றமும் புரியாத போர் நிறுத்த விதிகளையும் மீறாத கைது செய்து தடுத்து வைத்திருப்பது நியாயமற்றது. இதன் அடிப்படையில்த்தான் எமது போராளிகளுக்கு எவ்வித ஆபத்தும் நேர்ந்துவிடாது எனக் கருதினேன்.

இந்திய அமைதிப் படைகளின் தளபதி ஜெனரல் ஹக்கிரட் சிங் என்னை தனது செயலகத்திற்கு அழைத்தார். அவர் எனக்கு ஏற்கனவே பழக்கமானவர். வழமையாக கலகலப்பாகவிருக்கும் ஹக்கிரட்சி ங் அன்று முகத்தைத் தொங்கப் போட்டபடி இருந்தார். அவரது பார்வையில் ஒரு இனம் தெரியாத சோகமும் கவலையும் தொனித்தது. எமது போராளிகளின் நிலைகுறித்து தனது தனிப்பட்ட வேதனையை தெரிவித்த அவர், இவ்விடயத்தில் ஜெயவர்த்தனா கடும்போக்கை எடுப்பதாகவும் ஒரு சிறிய பிரச்சனையை பெரும் அரசியல் நெருக்கடியாக அவர் மாற்ற முனைவதாகவும் அரச அதிபர் மீது குற்றம் சாட்டினார். ஹக்கிரட் சிங் கூறிய இன்னொரு விடயம் எனக்கு ஏக்கத்தை கொடுத்தது. எமது போராளிகளை விசாரணைக்காக கொழும்புக்கு விமானத்தில் கொண்டு செல்லும் இரகசியத் திட்டம் ஒன்று இருப்பதாக சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரி தன்னிடம் கூறியதாகவும் அவர் சொன்ன போது எனக்கு இதயம் கனத்தது. எனது முகம் திடீரென்று இருண்டு போனதை அவதானித்த இந்திய இராணுவ தளபதி எல்லாமே ஜெயவர்த்தனாவினதும் இந்திய தூதுவரதும் கைகளில் தங்கியிருப்பதாகக் கூறினார்.

000

மறுநாள் காலை ஆகஸ்ட் 4ம் நாள் நான் பலாலிக்கு வருகை தந்து திரு டிக்சிட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரது குரல் தொனியில் மாற்றம் தெரிந்தது. நம்பிக்கை இடிந்து போன குரலில் பேசினார். ஜெயவர்த்தனாவும் அவரது அமைச்சர்களும் தீவிரப் போக்கை கடைப்பிடிப்பதாகச் சொன்னார். புலித் தளபதிகளையும் போராளிகளையும் கொழும்புக்கு கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி அடாப்பிடியாக நிற்பதாகவும் தனது அமைச்சர்களின் நிலைப்பாட்டிற்கு மாறாக செயற்பட முடியாதென அரச அதிபர் கூறுவதாகவும் இந்தியத் தூதர் சொன்னார்.

எமது மாவட்டத் தளபதிகளையும் மூத்த உறுப்பினர்களையும் கொழும்புக்கு கொண்டு சென்று விசாரணை என்ற பெயரில் அவர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப் படுவதை நாம் அனுமதிக்க முடியாது. ஆயுதக் கையளிப்பை அடுத்து எமது போராளிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதாக ஏற்கனவே ஜெயவர்த்தனா பிரகடனம் செய்துள்ளார். அதன் பிறகு நம் போராளிகளை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முயல்வது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அத்துமீறும் பாரதூரமான நடவடிக்கையாகும். என்று டிக்சிட்டிடம் விளக்கினேன். எமது போராளிகளுக்கு தீங்கு எதுவும் நேரிடாமல் அவர்களை மீட்டெடுத்துத் தருவது இந்திய அரசின் பொறுப்பு என்றும் அவருக்கு சுட்டிக் காட்டினேன்.

பலாலி விமானத் தளம் இந்திய அமைதிப் படைகளின் தலைமைச் செயலகமாக மாற்றப்பட்டு இந்திய இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு சிறை வைக்கப் பட்டிருக்கும் போராளிகளை விடுவிப்பது இந்தியாவின் தவிர்க்க முடியாத கடமை என்றும் வலியுறுத்தினேன்.

இந்தியத் தூதர் எவ்வளவோ முயற்சித்தும் ஜெயவர்த்தனாவும் அத்துலத்முதலியும் தமது நிலைப்பாட்டில் இறுக்கமாகவே நின்றனர். போராளிகளை கொழும்பு கொண்டு செல்வதற்கான சில ஒழுங்குகளை அத்துலத் முதலி செய்து வருவதாகவும் டிக்சிட்டிற்கு தகவல் கிடைத்தது. நிலைமை மோசமாகி வருவதை அறிந்த அவர் இந்திய அமைதிப்படைத் தளபதி ஹக்கிரட் சிங்குடன் தொடர்பு கொண்டார். பலாலி விமானத் தளத்தை இந்திய இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து புலிகளை கொழும்புக்கு கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தி பிரச்சனை தீர்க்கப் படும் வரை அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்குமாறு இந்தியத் தூதர் ஹக்கிரட் சிங்கை கேட்டுக் கொண்டார்.

நான் ஏற்கனவே இந்திய அமைதிப்படைத் தளபதியுடன் உரையாடியதிலிருந்து அவருக்கும் இந்தியத் தூதருக்கும் மத்தியில் நல்லுறவு நிலவவில்லை என்பதை அறிந்து கொண்டேன். ஏதோ காரணத்தினால் இருவருக்கும் மத்தியில் பகையுறவு நிலவியது. ஆகவே டிக்சிட்டின் வேண்டுகோளை இந்தியத் தளபதி நிராகரித்து விட்டார். தான் ஒரு இராணுவ கட்டமைப்பில் பணிபுரிவதால் இந்திய இராணுவ உயர் பீடத்திலிருந்தே தனக்குக் கட்டளைகள் வழங்கப் பட வேண்டும் என்பது ஹக்கிரட் சிங்கின் விவாதம்.

அன்று நான் அவரைச் சந்தித்த போது அவர் கோபாவேசத்துடன் காணப்பட்டார். எனக்கு உத்தரவிடுவதற்கு யார் இவர் (டிக்சிட்) இவர் எனக்கு மேலுள்ள உயர் அதிகாரியுமில்லை. இவரது உத்தரவை செயற்படுத்த நான் நடவடிக்கை எடுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும். சிறிலங்கா இராணுவத்திற்கும் எனது படையினருக்கும் நிச்சயமாக மோதல் வெடிக்கும் என்று கதறினார் ஜெனரல் ஹக்கிரட் சிங். இந்த அமைதிச் சூழ்நிலையில் புலிகள் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தையிட்டு தான் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர் இதுவொரு அரசியல் விவகாரம் என்றும் இது கொழும்புக்கும் டில்லிக்குமிடையே மிக உயர் மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டியது என்றும் என்னிடம் கூறினார்.

எதிரியால் கொடூரமாக வதைபட்டுச் சாவதை எமது போராளிகள் விரும்பவில்லை. இனி என்ன செய்வது என்பது பற்றி அவர்கள் கலந்தாலோசனை நடத்தினார்கள். இறுதியில் எல்லோரும் ஏகமனதாக ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தார்கள். அந்தத் தீர்மானத்தை எழுத்தில் வரைந்து அதில் எல்லோரும் கையொப்பமிட்டு அந்த கடிதத்தை பிரபாகரனிடம் சேர்க்குமாறு என்னிடம் ஒப்படைத்தார்கள். எதிரியால் கொடூரச் சித்திரவதைக்கு ஆளாகி அவமானப்பட்டு உயிர் நீப்பதை விட இயக்கத்தின் போரியல் மரபுக்கு அமைவாக தமது உயிரைத் தாமே அழித்து கௌரவமாக சாவைத் தழுவிக் கொள்ளத் தாம் உறுதி பூண்டுள்ளதாக அவர்கள் பிரபாகரனுக்கு எழுதியுள்ளார்கள். சயனைட் விசக் குப்பிகளை அனுப்பி வைக்குமாறு கடித முடிவில் உருக்கமாக கேட்டிருக்கிறார்கள்.

அன்றிரவு பிரபாகரனைச் சந்தித்த போது ஜெயவர்த்தனாவின் கடும்போக்கு அத்துலத் முதலியின் வஞ்சகம் டிக்சிட்டின் கையாலாகத்தனம் அமைதிப்படைத் தளபதியின் அகம்பாவம் எமது போராளிகளின் அவல நிலை ஆகியவற்றை விளக்கினேன். எமது போராளிகளை மீட்டெடுப்பது இந்திய அரசின் பொறுப்பு. ரஜீவ் காந்தியின் வாக்குறுதிகளை நம்பி இந்தியாவுக்கு நாம் ஒத்துழைத்த காரணத்தினால்த்தான் இந்த இக்கட்டான நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம் என்றார் பிரபாகரன். போராளிகளுக்கு ஏதாவது தீங்கு நடந்தால் ஏற்படும் பாரதூரமான விளைவை இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் நாளை காலை இந்தியத் தூதுவரிடம் கூறி போராளிகள் விவகாரத்தில் இறுதியான முடிவை தனக்கு அறிவிக்குமாறு என்னைப் பணித்தார் பிரபாகரன்.

மறுநாட் காலை அக்டோபர் 5 பலாலி விமானத் தளத்திற்கு சென்று இந்தியத் தூதுவருடன் தொடர்பு கொண்டு பிரபாகரனின் செய்தியைத் தெரிவித்தேன். டிக்சிட் பதட்டமடைந்தார். இறுதி தடவையாக முயன்று பார்க்கின்றேன் என்றார். சரியாக ஒரு மணி நேரத்தின் பின்பு மீண்டும் என்னுடன் தொடர்பு கொண்டார். தன்னால் ஒன்றும் செய்ய முடியாத அளவுக்கு நிலைமை ஆபத்தான திருப்பத்தை அடைந்து விட்டதாகச் சொன்னார் டிக்சிட். அன்று மாலை ஐந்து மணிக்கு எமது போராளிகள் வலுவந்தமாக விமானத்தில் ஏற்றப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட இருப்பதாகவும் அவர் சொன்னார்.

அன்று மதியம் உணவுப் பொருட்களுடன் பலாலித் தளம் சென்று எமது போராளிகளுடன் நிகழ்த்திய இறுதிச் சந்திப்பின் போது அவர்களின் வேண்டுகோளை நான் நிறைவு செய்தேன். புலிகளின் போராட்ட இலட்சியத்திற்காக நான் ஆற்றிய செயற்பாடுகளில் இதுவே எனது ஆன்மாவை உலுப்பிய மிக வேதனையான பணியாகும்.

அன்று மாலை அளவில் சிறிலங்கா விமானத் தளத்தளபதி பிரிகேடியர் ஜெயரெத்தினா போராளிகளை வலுவந்தமாக விமானத்தில் ஏற்ற தனது படையணிகளுக்கு உத்தரவிட்டார். சிங்கள இராணுவத்தினர் போராளிகளை நெருங்கிய போது அவர்கள் அனைவரும் சயனைட் குப்பிகளை விழுங்கிக் கொண்டனர். மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரெண்டு போராளிகள் அவ்விடத்திலேயே வீரசாவை தழுவிக் கொள்ள மிகுதியான ஐந்து போராளிகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்கள்.

இந்திய அமைதிப் படையின் தலைமையகத்தில் இக்கொடுமை நிகழ்ந்ததால் இந்திய இராணுவத்தினர் மீது மக்களின் ஆவேசம் திரும்பியது. இந்திய இராணுவத்திற்கு எதிராக கோசங்கள் எழுப்பினார்கள். காவல் சாவடிகள் மீது கல் வீசினார்கள். இராணுவ வாகனங்கள் முன்பாக வீதிமறியல் செய்தார்கள். தமிழ்பிரதேசங்களில் வன்முறை கோரத் தாண்டவமாடியது. சிங்களப் பொதுமக்களும் தாக்கப்பட்டனர். கிழக்கு மாகாணத்தில் வன்முறை தீவிரமடைந்து தமிழ் சிங்கள இனக்கலவரங்கள் வெடித்தன. கலவரங்களில் சிங்கள மக்கள் தாக்கப்படுவதை அறிந்து ஜெயவர்த்தனா ஆவேசமடைந்தார். புலிபோராளிகளுக்கு வழங்கிய பொது மன்னிப்பை ரத்துச் செய்வதாக அறிவித்த அவர் தமிழ் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவசர நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசுக்கு வேண்டு கோள் விடுத்தார்.

87 அக்டோபர் 7ம் நாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே சி பாண்ட் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் சுந்தர் ஜி ஆகியோர் கொழும்பிற்கு வருகை தந்து ஜெயவர்த்தனாவுடன் மந்திராலோசனை நடத்தினார். இராணுவ பலத்தைப் பிரயோகித்து புலிகளின் ஆயுதங்களை வலுவந்தமாக களைவு செய்வதென இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவருக்கு அறியத் தரப்பட்டது. ஜெயவர்த்தனாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி. இந்திய அரசை புலிகளுக்கு எதிராகத் திருப்பி விட வேண்டுமென்ற தனது தந்திரோபாயம் இறுதியில் பலித்து விட்டது என்பதில் அவருக்கு அலாதியான திருப்தி. யாழ்ப்பாண குடாநாடு மீது படையெடுத்து அப் பிரதேசத்தை இந்திய இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து புலிகளை நிராயுதபாணிகளாக்கும் பவான் நடவடிக்கையை அக்டோபர் 10ம் நாள் ஆரம்பிப்பதென முடிவாயிற்று.

1987 அக்டோபர் 10ம் நாள் இந்திய அமைதி காக்கும் படைகள் போரில் குதித்தன. அன்றைய நாள் அதிகாலை ஈழமுரசு முரசொலி ஆகிய நாளிதழ்களின் செயலகங்களிற்குள் புகுந்து சூறையாடிய இந்திய இராணுவத்தினர் பத்திரிகை கட்டடங்களையும் குண்டு வைத்து தகர்த்துடன் பத்திரிகையாளர்களையும் கைது செய்தனர். புலிகளின் தொலைக் காட்சி நிறுவனமான நிதர்சனம் தீவை த்து கொழுத்தப்பட்டது.

இந்திய புலிகள் யுத்தம் இரண்டு வருடங்களும் ஏழு மாதங்களும் நீடித்தது.

இணைப்புக்கள்

1. இலங்கையிலிருந்த இந்தியப் படையணிகள் அனைத்துக்கும் பொறுப்பதிகாரியான ஜெனரல் திபேந்தர் சிங், யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்த அமைதிப் படைகளின் தளபதி ஜெனரல் ஹக்கிரட் சிங் ஆகியோர் விடுதலைப் புலிகளுடன் இந்திய அமைதிப் படைகள் இராணுவ ரீதியாக மோதுவதை விரும்பவில்லை. அப்படியான மோதல் நீண்ட காலப் போராக முடிவின்றி இழுபடும் என்பது இவர்களது மதிப்பீடு. இந்திய இலங்கை ஒப்பந்தந்தின் கடப்பாடுகளுக்கு அமைய தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கி தமிழர் தாயகத்தில் அமைதியைப் பேணும் பெரும் பொறுப்பைச் சுமந்து நிற்கும் இராணுவம் அந்த மக்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தை நடத்துவது அதர்மமானது என்பது இந்திய தளபதிகளின் கருத்தாகும். 1992 இல் தான் எழுதி வெளியிட்ட The IPKF in Sri Lanka என்ற நூலில் இந்திய இராணுவ தளகர்த்தா ஜெனரல் சுந்தர்ஜியுடன் நடத்திய உரையாடலின் போது வெளியிட்ட கருத்துப் பற்றி ஜெனரல் திபேந்தர் சிங் பின்வருமாறு எழுதுகிறார்.

புலிகளுக்கு எதிராக படைப் பலத்தை பிரயோகிக்க வேண்டுமென்ற அரசியல் தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தது. நாம் கடும் போக்கான முடிவை எடுக்கக் கூடாது என்று ஜெனரல் சுந்தர்ஜிக்கு நான் ஆலோசனை வழங்கினேன். நாம் அப்படி ஒரு முடிவு எடுத்தால் அடுத்த இருபது ஆண்டு காலம் வரை ஒரு எதிர்க் கிளர்ச்சி சூழ்நிலைக்கு நாம் முகம் கொடுத்தாக வேண்டும் எனக் கூறினேன். எனது நிலைப்பாது தோல்வி மனப்பான்மையை பிரதிபலிப்பதாக என்னைக் கண்டித்தார்கள். நான் யதார்த்தத்தை கூறுவதாகச் சொன்னேன். அதற்கப்புறம் ஜெனரல் சுந்தர்ஜி கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றார். புலிளுக்கு எதிராக இராணுவ பலத்தைப் பிரயோகிக்குமாறு மறுநாள் அவரிடமிருந்து நேரடி உத்தரவு இந்திய அமைதிப் படைச் செயலகத்திற்கு வந்தது.

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையைத் தவிர்ப்பதற்கு ஜெனரல் திபேந்தர் சிங் கடும் முயற்சிகள் எடுத்தார். தமிழக முதல்வர் எம் ஜி ஆர் அவர்களையும் தொடர்பு கொள்ள முயற்சித்தார். துரதிஸ்டவசமாக அவ்வேளை அவர் கடும் சுகவீனமுற்று அமெரிகாவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். சென்னையில் பண்டுருட்டி இராமச் சந்திரனை சந்தித்த திபேந்தர் சிங் ரஜீவ் காந்தியுடன் பேசி போர் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் படி சொன்னார். ஆனால் அமைச்சர் பண்டுருட்டியாரின் முயற்சி பலன் அளிக்கவில்லை.

தனது ஆலோசனைகளுக்கும் ஆட்சேபனைகளுக்கும் மாறாக புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு அரசியல் உயர் மட்டத்திலேயே மேற்கொள்ளப் பட்டது என்கிறார் ஜெனரல் திபேந்தர் சிங். இதுவொரு அரசியல் முடிவென்றே கருதினார் அவர்.

2.

இந்திய -புலிகள் யுத்தம் ஆரம்பமான பின்னர் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்ட அறிக்கையில்,

அகால மரணத்தை எய்திய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தித் தமிழீழ மக்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கிப் போய் இருக்கும் இந்தச் சோகமான சூழ்நிலையில் இந்திய அரசானது தனது அமைதி காக்கும் படைகளை அணிதிரட்டி தமிழர்களுக்கு எதிரான கொடிய யுத்தத்தை ஏவி விட்டிருக்கிறது. இந்தியாவுடன் ஒரு போர் நிகழும் எனத் தமிழ் மக்களோ அன்றி எமது போராளிகளோ கனவில் கூட கற்பனை செய்திருக்க மாட்டார்கள். இந்தியாவையே தமது பாதுகாவலராகவும் இரட்சகராகவும் எமது மக்கள் பூசித்தனது. அன்மையும் அமைதியையும் நிலைநாட்டும் கருவிகளாகவே இந்தியப் படைகளை அவர்கள் கருதினார்கள். இந்தியாவை ஒரு நட்பு சக்தியாகவும் தமக்கு ஆயுத உதவியும் புகலிடமும் தந்து தமிழீழ விடுதலைப் போரில் முக்கிய பங்கினையும் அரசியல் முக்கியத்துவத்தையும் வழங்கிய ஒரு நேச நாடாகவுமே விடுதலைப் புலிகள் இயக்கம் கருதியது. புலிகள் அமைப்புக்கு எதிராக போர் தொடுக்க இந்தியா முடிவெடுத்தது தமிழர் தேசத்தை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த கவலையிலும் ஆழ்த்தியது.

3.

இந்தியா புலிகளுக்கு எதிராக யுத்தத்தினை ஆரம்பித்த மூன்றாவது நாள் பிரபாகரன் சமாதானமும் நல்லெண்ணமும் பேணப்படும் பொருட்டு இந்திய இராணுவ நடவடிக்கைகளை கைவிடும் படியும் பிரதமர் ரஜீவ் காந்திக்கு கடிதம் எழுதினார். கண்டு கொள்ளப் படாதா அக் கடிதங்களை இங்கே வாசிக்கலாம்.

சரியான நேரத்தில் தகுந்த இணைப்பு, நன்றி.

இப்போது தேவை இப்படியான பதிவுகளல்ல.

தமிழகத்தில் மக்கள் தமிழ் ஈழ போராட்டத்துக்கு ஆதரவு நல்கி வரும் வேளையில்

தேவையற்ற பதிவுகள் அதற்கு குந்தகம் விளைவிக்கவே வழிசெய்யும்.

முடிந்து போனவற்றை மறந்துவிட்டு தொடர்ந்து செல்ல ஆக்கமான இணைப்புகள் - பதிவுகள் - நட்புக்கான வழிகள் போன்றவற்றை கொண்டு வாருங்கள்.

தொல். திருமா - தா.பாண்டியன் - கவியரசு வைரமுத்து - இயக்குனர்கள் சீமான் & அமீர் - நடிகர் சத்யராஜ் - சரத்குமார் போன்றவர்களது பேச்சுகள், இலங்கை பிரச்சனை என்ன என்று தெரியாத இந்திய தமிழருக்கு மட்டுமல்ல பல இலங்கை தமிழருக்கும் கூட போராட்டத்தின் உண்மைகளையும் , ஈழத்தமிழர் யார் என்ற, தெளிவையும் கொடுத்துள்ளது.

பிழைக்கப் போனவனுக்கு நாடு என்ன வேண்டிக்கிடக்கு என்பவர்களுக்கு அது தமிழனது பூர்வீக பூமி என தெரியவைத்துள்ளது.

மாறிவரும் மனநிலையை மாறவிடாமல் தடுக்கும் பதிவுகள் தவிக்கப்பட்டால் கோடி புணியம் கிடைக்கும்.

நான் நினைக்கிறன் புலிகள் 2 ஆவது இந்திய ஈழப்போருக்கு தயாராகிறார்கள் என்று. தமிழ்மகனின் கைய்யெழுத்துகள் அவத்தாருகளை பாத்தா அவர் தொடர்புள்ள ஆள் போல கிடக்கு. அவருக்கு புலம்பெயர்ந்த ஈழத்தவர்களை இந்திய ஈழப்போர் 2 இற்கு தயார்படுத்தும் வேலைத்திட்டம் ஒதுக்கப்பட்டிருக்கு போல கிடக்கு.

அப்பவே அந்த அடி இப்ப முப்படைகள் விசேட படைகள் என்று இருக்கேக் சொல்லவா வேணும்.

தொடங்கேக்க எல்லாரையும் ஒரே அடியா அடிச்சு முடிச்சுவிட்டா பிரச்சனையிருக்காது பிறகு. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னமும் அமைதி காக்கப் போன படைகளை புலிகள் பின்னாலிருந்து தாக்கினார்கள் என வலைப் பதிவுகளில் எழுதும் சில இந்திய நண்பர்களுக்காக கொடுக்கப் பட்டது இது. அதிலும் - தனியே அனைத்துக்கும் புலிகள் மட்டும் காரணமல்ல - எல்லோரும்தான் என்பதை சொல்ல -

மற்றும்படி தலைவன் சொல்வது போல் ஈழத் தமிழர்களுக்கு இது இப்போதைக்குத் தேவையான பதிவு அல்ல.

தமிழ்மகனுக்கு எதை எங்கை எப்ப இணைப்பது என யாரும் வகுப்பெடுக்கலாம். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.