Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை

Featured Replies

ஈழத்திலே நான்காவது ஈழப் போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போதைய சூழலில் புலிகள் பலவீனமாக உள்ளனர் என்பதாக சிறீலங்கா அரசு கூறி வருகிறது. புலிகள் தங்கள் வசம் இருந்த பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை இழந்துள்ள சூழலில் இந்தக் கருத்தை பல போர் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழர்கள், புலிகள் பலவீனமாக இல்லை, இது அவர்களின் தந்திரோபாய பின்நகர்வு மட்டுமே என கூறி வருகின்றனர். புலிகள், தங்கள் வசம் இருந்த பெரும்பாலான இடங்களை இழந்துள்ள சூழ்நிலையில் தமிழர்களின் இந்த வாதம் வெறும் நம்பிக்கையாகவே பலருக்கும் தெரிகிறது. கடந்த காலங்களில் இருந்த சூழ்நிலைக்கும், தற்போதைய சூழ்நிலைக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளதாக சிறீலங்கா கூறுகிறது. எனவே போரின் போக்கினை கடந்த காலங்களில் மாற்றியது போல தற்பொழுது புலிகளால் மாற்றி விட முடியாது என சிறீலங்கா அரசு நம்புகிறது. இதற்கு சிறீலங்கா முன்வைக்கும் காரணங்களும் வலுவாகவே உள்ளது.

புலிகள் வசம் இருந்த பெரும்பாலான இடங்கள் கைப்பற்றப்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக கிளிநொச்சியை கைப்பற்ற நடக்கும் இந்தப் போரில் கடுமையான சேதங்களை சிறீலங்கா இராணுவம் இந்த வாரம் அடைந்திருக்கிறது. இந்த வாரம் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட படையினரை சிறீலங்கா இராணுவம் இழந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட படையினர் பலத்த காயங்கள் அடைந்துள்ளனர்.

இத்தகைய சூழலில் கிளிநொச்சிக்காக நடக்கும் இந்தப்போரினை இரண்டாம் உலகப்போரில் நடந்த ஸ்டாலின்க்ரேட் போருடன் (The Battle of Stalingrad) இந்திய உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரியான பி.ராமன்ஒப்பிடுகிறார் .

பி.ராமன் இவ்வாறு கூறுவதற்கு முன்பாகவே ஈழத்தமிழர்கள் கிளிநொச்சியை ஸ்டாலின்க்ரேடுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதம் கிளிநொச்சி ஸ்டாலின்க்ரேட் ஆகும் வாய்ப்பு குறைவு எனக்கூறிய பி.ராமன் டிசம்பரில் அதனை ஒப்புக்கொண்டுள்ளார் போலும்.

The Battle of Stalingrad என்பது இரண்டாம் உலகப்போரில் சோவியத்யூனியனில்இருந்த ஸ்டாலின்க்ரேட் நகருக்காக நடந்த சண்டை.

சோவியத்யூனியன் படையினருக்கும், ஜெர்மனியின் நாஸிப் படையினருக்கும் இடையே இந்தப் போர் நடைபெற்றது. இந்தப் போரினை இரண்டாம் உலகப்போரின் முக்கிய திருப்புமுனையாக கூறுவார்கள். சுமார் 6 மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த சண்டையில் ஸ்டாலின்க்ரேட் நகரத்தை இன்று கைப்பற்றுவோம், நாளை கைப்பற்றுவோம் எனக்கூறிக்கொண்டே இருந்த நாஸிப் படையினர், இறுதியில் தோற்றுப் போயினர். இந்தப் போர் இரண்டாம் உலகப்போரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

கிளிநொச்சி மற்றொரு ஸ்டாலின்க்ரேட் ஆக முடியுமா ? தெரியவில்லை. ஆனால் சிறீலங்கா இராணுவம் நினைத்தது போல கிளிநொச்சி வெற்றி அவ்வளவு சுலபமானது அல்ல என்பதை கிளிநொச்சி போர் தெளிவுபடுத்தி வருகிறது.

நான்காவது ஈழப் போர் சார்ந்த போரியல் ஆய்வாகவே இந்தக் கட்டுரை தொடரை எழுத இருக்கிறேன். என்றாலும் ஒரு விடயத்தை இங்கே தெளிவுபடுத்த வேண்டும். எனக்கு இராணுவம் குறித்து அதிகம் தெரியாது. ஈழத்திலே நடக்கும் போர் குறித்த ஒரு சக தமிழனின் அச்சம்/கவலை இவற்றுடனே இந்தப் போரினை கவனித்து வருகிறேன். அது சார்ந்த விடயங்களை தேடி படிக்கிறேன். அவ்வாறு கிடைத்த தகவல்களை என்னுடைய கருத்துகளுடன் முன்வைப்பது தான் இந்தக் கட்டுரை தொடரின் நோக்கம்.

*********

கிளிநொச்சி போர் குறித்து பார்ப்பதற்கு முன்பு இந்தப் போர் ஆரம்பத்தில் தொடங்கிய சூழலை கவனிக்க வேண்டும்.

Attrition warfare என்பது எதிரியின் பலத்தை படிப்படியாக குறைத்து, பிறகு எதிரியை நிர்மூலமாக்கும் ஒரு போர் நுட்பம். எதிரியின் பலத்தை படிப்படியாக குறைக்கும் பொழுது போரிடும் பலத்தை எதிரி இழக்கும் பொழுது வெற்றி கிடைக்கும். இந்த நுட்பத்தை தான் சிறீலங்கா இராணுவம் மேற்கொண்டது.

புலிகளின் பலத்தை படிப்படியாக குறைப்பது சிறீலங்கா இராணுவத்தின் நோக்கமாக இருந்தது. புலிகளின் பலம் என்பது அவர்களின் போர் வீரர்கள், ஆயுதங்கள் போன்றவை. எனவே முதலில் புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் வழியை சிறீலங்கா இராணுவம் தடுக்க முனைந்தது. புலிகளுக்கு முல்லைத்தீவு கடல்வழியாகவே ஆயுதங்கள் வரும். இந்த வழியை அடைப்பது தான் சிறீலங்கா அரசின் முதல் நோக்கமாக இருந்தது. இந்தியா/அமெரிக்கா போன்ற நாடுகள் அளித்த அதிநவீன உளவு நுட்பங்கள் மூலம் புலிகளுக்கு ஆயுதங்களை கொண்டு வந்த பல கப்பல்களை சிறீலங்கா கப்பற்படை அழித்தது. இதனால் புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் முக்கிய வழி அடைக்கப்பட்டது. இது புலிகள் தொடர்ந்து போரிடும் வலுவை குறைத்தது.

அடுத்த இலக்காக புலிகளின் முக்கிய முகாம்கள், ஆயுதக்கிடங்குகள் போன்றவற்றை விமானங்கள் மூலம் குறிவைத்து தாக்கியது. இந்த தாக்குதலில் புலிகளின் பல முகாம்களும், ஆயுதக்கிடங்குகளும் அழிக்கப்பட்டதாக சிறீலங்கா இராணுவம் கூறுகிறது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட பல இடங்கள் பொதுமக்கள் உள்ள இடங்களே என புலிகள் கூறுகின்றனர். புலிகளின் மறைவிடம் என்று கூறி ஆதரவற்ற குழந்தைகள் இருந்த செஞ்சோலை இல்லத்தை சிறீலங்கா இராணுவம் தாக்கியது போன்ற துயரமான சம்பவங்கள் பல நிகழ்ந்தன என்பதை மறுக்க முடியாது.

இதையெடுத்து புலிகளின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியை இராணுவம் மேற்கொண்டது. சுமார் 10,000 புலிகளை தாங்கள் கொன்று விட்டதாக இராணுவம் கூறுகிறது. எப்படி இந்த எண்ணிக்கை முன்னிறுத்தப்படுகிறது என்று பார்க்கும் பொழுது சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர் வியூகம் நமக்கு புரியும். கடந்த காலங்களில் புலிகள் வசம் இருந்த இடங்களை கைப்பற்றுவதற்காக மிகப் பெரிய அளவிலான தாக்குதலை இராணுவம் தொடுத்து உள்ளது. இதனால் இராணுவத்தின் முன்னேற்றத்தை தங்களின் வியூக அமைப்பினால் புலிகள் முறியடித்து உள்ளனர். இராணுவத்திற்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

ஆனால் தற்போதைய போரில் பொன்சேகா சிறீலங்கா இராணுவத்தின் வியூகங்களை மாற்றி அமைத்தார். பெரும் அளவிலான படையெடுப்புகள் எதையும் அவர் முன்னெடுக்கவில்லை. மாறாக சிறு குழுக்களை கொண்ட படைகளை தான் தாக்குதலில் பயன்படுத்தினார். ஆனால் தாக்குதல் தொடர்ச்சியாக இருக்கும். ஒரு சிறு குழு புலிகளின் முன்னரங்கப்பகுதிகள், பதுங்கு குழிகளை தாக்கும். தாக்கும் படைக்கு புலிகள் வசம் இருக்கும் பகுதிகளை பிடிக்கும் நோக்கம் இருக்காது. ஆனால் அவர்களின் இலக்கு புலிகளின் பலத்தை குறைப்பது. அதனால் புலிகளின் இலக்குகளை தாக்கி விட்டு பின்வாங்கி விடுவார்கள். இதனை தினமும் செய்யும் பொழுது புலிகளின் எண்ணிக்கை குறையும். ஆயுதங்களும் குறையும். இவ்வாறு படிப்படியாக குறைக்கப்பட்டு பின் ஒரு மிகப்பெரிய தாக்குதலை தொடுப்பது பொன்சேகாவின் வியூகமாக இருந்தது. புலிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைக்கப்பட்டு ஆயுதங்கள் வரும் வழிகளும் தடைப்பட்டு விட்ட நிலையில் புலிகள் பலம் இழப்பார்கள் என்பது தான் பொன்சேகாவின் வியூக அமைப்பு.

இதன் மூலமே தினமும் பல புலிகள் கொல்லப்பட்ட நிலையில் புலிகளின் பலத்தில் பெரும்பகுதியை தாங்கள் குறைத்து விட்டதாக சிறீலங்கா இராணுவம் கூறுகிறது.

பொன்சேகாவின் வியூக அமைப்பு இவ்வாறு இருந்தது என்றால் புலிகளின் வியூகம் இதனை எதிர்கொள்ளவே செய்தது. பொன்சேகாவின் வியூகத்திற்கு ஏற்ப தங்களுடைய வியூகங்களையும் புலிகள் அமைத்திருந்தனர்.

*********

புலிகள் போன்ற சிறு கொரில்லா அமைப்பு ஒரு மரபு சார்ந்த இராணுவத்தை எதிர்கொண்டு வருகிறது என்று சொன்னால் அதற்கு காரணம் புலிகள் மேற்கொள்ளும் "பலமான"வியூகங்கள் தான். இதனை சிறீலங்கா இராணுவத்தினரும், இந்திய இராணுவத்தினருமே ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கு முன்பாக நடந்த மூன்றாவது ஈழப் போரில் புலிகள் அடைந்த வெற்றிகளே இதற்கு சாட்சிகளாக விளங்குகின்றன.

ஆனையிறவு படைத்தளம் மீது புலிகள் கொண்ட வெற்றியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. ஆனையிறவு யாழ்ப்பாண தீபகற்பத்தை வன்னி பெருநிலத்துடன் இணைக்கும் சிறு நிலப்பகுதி. யாழ் தீபகற்பத்திற்கான வாயில் என்று இதனைச் சொல்லலாம். இந்த நிலப்பகுதிக்காக பலப் போர்கள் நடந்துள்ளன. கேந்திர முக்கியத்துவம் உள்ள இடம் இது.

இங்கு தான் ஆனையிறவு படைத்தளம் என்ற சீறிலங்கா இராணுவத்தின் மிகப் பெரிய முகாம் இருந்தது. பலத்த பாதுகாப்பான முகாம். பலத்த என்பதை "பலப் பல" மடங்கு என்று சொல்லலாம். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்டது இந்த முகாம். இந்த முகாமின் பாதுகாப்பு வளையங்களை பார்வையிட்ட அமெரிக்க, பிரிட்டன் (UK) இராணுவ வல்லுனர்கள் இதனை கைப்பற்ற வேண்டுமானால் விமானப் படை வேண்டும். மரபுச் சார்ந்த படையாக இருந்து முப்படைகளையும் பெற்றிருக்க வேண்டும். முப்படைகளின் கூட்டு படைத்திறன் மூலமே இந்த முகாமை கைப்பற்ற முடியும் என தெரிவித்திருந்தனர்.

புலிகள் போன்ற கொரில்லா இயக்கங்களால் இந்த முகாமை எப்பொழுதும் கைப்பற்ற முடியாது என்று கூறினர்.

இந்த முகாமில் சுமார் 25,000 படை வீரர்கள் இருந்தனர். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்ட இந்த முகாமை புலிகளின் 5000 பேர்களை மட்டுமே கொண்ட படை கைப்பற்றியது,

உலக இராணுவ வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு. மரபுச் சார்ந்த போர் குறித்த இராணுவ நோக்கர்களின் கருத்துகளை மாற்றி எழுதிய நிகழ்வு இது.

இந்தப் போரினை திட்டமிட்டு நடத்தி வெற்றி பெற வைத்தவர் புலிகளின் தலைவர் பிரபாகரன். விமானப் படை இல்லாமலேயே ஒரு பெரிய பாதுகாப்பு அரணை உடைத்து புலிகள் இந்த வெற்றியை கடந்தப் போரில் பெற்றனர்.

ஆனையிறவை இழந்தது சிறீலங்கா இராணுவத்திற்கு மிகப் பெரிய உறுத்தலாகவே இருந்து வந்துள்ளது. இம் முறை நான்காவது ஈழப் போர் தொடங்கிய பொழுது சிறீலங்கா இராணுவத்தின் நோக்கம் ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றுவது என்பதாகவே இருந்தது. ஆனையிறவுக்கும், சிறீலங்கா இராணுவத்தின் முதல் முன்னரங்கப்பகுதியான முகமாலைக்கும் இடையேயான தூரம் வெறும் 14 கி.மீ தான். இந்தப் பகுதி மிகவும் குறுகலான ஒரு நிலப்பகுதி. கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலான இந்தப் பகுதியின் அகலம் வெறும் 7கி.மீ தான். கிளாலி முதல் முகமாலை வரை ஒரு பகுதியும், நாகர்கோவில் அடுத்தும் உள்ளது (படத்தில் பார்க்கலாம்)

முகமாலையில் இருந்து ஆனையிறவை கைப்பற்றுவது இராணுவத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறை இராணுவம் முன்னேற முனைந்த பொழுதும் புலிகள் மிக பலமான ஒரு பதில் தாக்குதலை தொடுத்தனர். இதனால் தங்கள் நிலைகளில் இருந்து இராணுவத்தால் முன்னேற முடியாத சூழல் தான் நிலவி வந்தது. இன்றைக்கும் நிலவி வருகிறது. கடந்த வாரம் கூட இராணுவம் முன்னேற முனைந்த பொழுது மிகவும் கடுமையான சேதங்களை அடைந்தது.

சிறீலங்கா இராணுவ நிலைகளில் இருந்து 14 கி.மீ. தூரம் கொண்ட ஆனையிறவை நெருங்க முனைந்த சிறீலங்கா இராணுவம், முகமாலையில் சில மீட்டர் தூரங்களே கொண்ட புலிகளின் முதல் முன்னரங்கப்பகுதிகளையே நெருங்க முடியவில்லை.

ஆரம்பகாலங்களில் இருந்தே இராணுவத்தின் நோக்கம் ஆனையிறவு தான். கிளிநொச்சி புலிகளின் தலைநகரம் என்பதாக கூறப்பட்டாலும், கிளிநொச்சிக்கு பெரிய இராணுவ முக்கியத்துவம் இல்லை. ஆனையிறவுக்கே அதிக முக்கியத்துவம் உள்ளது. தற்பொழுது நடந்து வரும் போர் கூட கிளிநொச்சிக்கானது என்பதை விட ஆனையிறவு நோக்கியே என கூற முடியும்.

ஆனையிறவை முகமாலையில் இருந்து கைப்பற்ற முடியாத இராணுவம் இப்பொழுது தென்பகுதிகளில் இருந்து பிடிக்க முனைகிறது. பரந்தன், கிளிநொச்சி, பூநகரி போன்ற பகுதிகள் கைப்பற்றபட்டால் இராணுவத்திற்கு ஆனையிறவை கைப்பற்றுவது சுலபமாக இருக்கும். பூநகரி கைப்பற்ற பட்ட நிலையில் A9 நெடுஞ்சாலையில் இருக்கும் பரந்தன், கிளிநொச்சி போன்றவையும் இராணுவம் வசம் வந்தால் ஆனையிறவு இலக்கு சுலபமாகி விடும். அவ்வாறு நேர்ந்தால் புலிகள் பின்வாங்கி முல்லைத்தீவு பகுதிக்கு செல்ல நேரிடும்.

இது தான் இராணுவத்தின் நோக்கம்.

ஆனையிறவு புலிகள் வசம் இருக்கும் வரை இந்தப் போர் முடிவுக்கு வராது.

புலிகள் வசம் இருந்த இடங்களில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய இராணுவம், ஏன் முகமாலை தொடக்கம், ஆனையிறவு வரையிலான 14 கி.மீ கொண்ட இடத்தை கைப்பற்ற முடியவில்லை ? முகமாலையில் நடந்த பல சண்டைகளில் இராணுவம் சுமார் 1000பேரை இழந்திருக்க கூடும். பலர் காயம் அடைந்துள்ளனர். இங்கு தான் நாம் புலிகளின் தற்காப்பு வியூகங்களை கவனிக்க வேண்டியுள்ளது.

புலிகளின் முகமாலை தற்காப்பு வியூகத்தை இரண்டாம் உலகப்போரில் நடந்த ஐஆலமெய்ன்(El Alamein) போரில் அமைக்கப்பட்டிருந்த தற்காப்பு வியூகங்களுடன்ஒப்பிடுகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சசியின் வலைப்பதில் இருந்த சில பின்னூட்டங்கள்..

-----

கொழுவி சொன்னது...

புலிகளின் ஆட்பலம் ஆயுதபலம் இவற்றை முதன்மை நோக்காகக் கொண்டு படையினர் செயல்பட்டால் மட்டுமே புலிகள் தோற்கிறார்கள் என நம் அறப்படித்த கூழ் முட்டைகள் சரியாக இருக்கும்.

ஆயிரக்கணக்கில் வீரர்களை இழந்து நிலங்களைத் தக்கவைப்பதை விட - பின்பொருநாளில் மூலோபாயங்கள் சரியாகும் போது சில நூறு பேருடன் அவற்றை மீளக் கைப்பற்றலாம் என்பதே புலிகளின் உத்தி( ஆனால் நிலங்களைக் கைவிடும் போதேற்படும் அப்பாவி மக்கள் மேற்சூழும் அவலம் இலகுவாக கடந்து போகக் கூடியது அல்ல)

இதற்கிடையில் கிளிநொச்சி போன்ற ஒரு இடத்தில் பலமான இராணுவ அடிகளை புலிகளால் இராணுவத்திற்கு வழங்க முடிகிறது என்பதுவும் சில புரிதல்களை ஏற்படுத்துகிறது.

அதாவது புலிகள் தாம்கொண்டுள்ள ஏதோ ஒரு திட்டத்திற்கு கிளிநொச்சி வீழ்வது பாதகமானது எனக் கருதுகிறார்கள்.

-------

சசியின் பதில்..

அதாவது புலிகள் தாம்கொண்டுள்ள ஏதோ ஒரு திட்டத்திற்கு கிளிநொச்சி வீழ்வது பாதகமானது எனக் கருதுகிறார்கள்.

***********

கிளிநொச்சியை கைப்பற்றுவது இராணுவத்திற்கு கொளரவப் பிரச்சனையாக உள்ளது. சிறீலங்கா இராணுவம் எப்பொழுதுமே அரசியல் காரணங்களுக்காக போர் வெற்றிகளை பெற முனைகிறது. போர் தொடர்ந்து நீடிக்கும் பொழுது அரசியல் ஆதாயங்கள் பாதிப்படையும் பொழுது எதைச் செய்தாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற அரசியல்வாதிகளின் துடிப்பிற்கு சிறீலங்கா இராணுவத்தின் போர் வியூகங்கள் பலியாகின்றன.

தற்பொழுது கிளிநொச்சியில் நடந்து கொண்டிருப்பதும் அது தான். கிளிநொச்சியை பிடிக்க வேண்டும் என்ற கெடு நெருங்கிக் கொண்டே இருக்க, எதை செய்தாவது என்ற நோக்கம் ஏற்படுகிறது. புலிகளுக்கு அப்படியான எந்த நெருக்கடியும் இல்லை.

இது தவிர தற்காப்பு போரினை மட்டுமே தற்பொழுது புலிகள் மேற்கொண்டு வரும் நிலையில் எந்த இடத்தை தற்காப்பு செய்ய வேண்டும் என்பதை புலிகளே முடிவு செய்கின்றனர். தங்களுக்கு சாதகமாக உள்ள நில அமைப்பில் தற்காப்பு வியூகங்களை புலிகளால் அமைத்துக் கொள்ள முடியும்.

போரில் வலிந்த தாக்குதல் தொடுப்பவர்களை விட மிக வலுவான தற்காப்பு அரண்களை வைத்திருப்பவர்கள் தான் வெற்றி பெற முடியும். தற்காப்பு அரணுக்கு அனுபவம் மிக்க போர் வீரர்கள் அதிகம் தேவையில்லை. ஆனால் வலிந்த தாக்குதல் தொடுப்பவர்களுக்கு அதிகளவில் அனுபவம் மிக்கவர்கள் தேவைப்படுவார்கள்.

இதனை கொண்டு பார்க்கும் பொழுது கூட போர் வியூகங்கள் நமக்கு புரியும்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி போர் : ஒரு முடிவின் துவக்கம் ?

மூன்றாவது பகுதி

1996ம் ஆண்டு கிளிநொச்சியை சிறீலங்கா இராணுவம் கைபற்றியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1998ம் ஆண்டு கிளிநொச்சியை மறுபடியும் புலிகள் கைப்பற்றினர். கிளிநொச்சி மற்றும் பரந்தனை புலிகள் கைப்பற்றியது அவர்களை ஆனையிறவு வரை கொண்டு சென்றது. தற்பொழுது வரலாறு திரும்பி இருக்கிறது. பரந்தன், கிளிநொச்சி ஆகிய இரண்டு இடங்களையும் சிறீலங்கா இராணுவம் கைப்பற்றியுள்ளது. இனி ஆனையிறவு நோக்கி சிறீலங்கா இராணுவம் முன்னேறும். பரந்தன், பூநகரி போன்ற இடங்களை புலிகள் இழந்துள்ள நிலையில் இனி ஆனையிறவை புலிகள் தக்கவைத்துக் கொள்வது கடினம்.

அடுத்து இராணுவம் ஆனையிறவு மற்றும் முல்லைத்தீவினை நோக்கி நகரக்கூடும். 1998ம் ஆண்டு போல மறுபடியும் சிறீலங்கா இராணுவத்தை முறியடித்து புலிகள் கிளிநொச்சியை கைப்பற்றுவது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. காரணம் 1998ம் ஆண்டு புலிகள் ஒரு நாட்டினை எதிர்த்து தான் போரிட்டார்கள். எனவே அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற முடிந்தது. ஆனால் இம் முறை பல நாடுகளை எதிர்த்து போரிடுகிறார்கள். சிறீலங்கா, இந்தியா, பாக்கிஸ்தான், சீனா, அமெரிக்கா, ஈரான் என அனைத்து நாடுகளையும் எதிர்த்து ஒரே நேரத்தில் போரிடுகிறார்கள். எனவே கிளிநொச்சி இழப்பு என்பது மறுபடியும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றே எனக்கு தோன்றுகிறது. இது சரியானது தானா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

இந்தப் போர் குறித்து போரியல் நோக்கில் கட்டுரை எழுத தொடங்கினேன். இன்னும் போர் முடியவில்லை என எனக்கு தோன்றுகிறது. புலிகள் தங்களின் பலத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளனர். புலிகளின் பல அடுக்கு தற்காப்பு வளையத்தில் இரண்டு அடுக்குகளை தற்பொழுது இழந்துள்ளனர். முதல் அடுக்கு தங்களது எல்லைகளை பாதுகாப்பது என்பதாகவும், இரண்டாம் அடுக்கு முக்கிய நகரங்களைச் சுற்றியும், மூன்றாவது அடுக்கு இராணுவம் சார்ந்த பகுதிகள் மற்றும் கடற்கரைச்சார்ந்த முக்கிய நிலைகளை பாதுகாப்பது என்பதாகவும் அமைந்து இருந்தது. தற்பொழுது இரண்டு அடுக்குகளை சிறீலங்கா இராணுவம் உடைத்துள்ளது. இரண்டாம் அடுக்கு சார்ந்த சில முக்கிய நிலைகளை இனி புலிகள் தக்கவைப்பது கடினம். எனவே புலிகளின் மூன்றாவது தற்காப்பு வளையத்தை நோக்கி போர் நடைபெறக்கூடும். இது தான் இறுதிப் போர்.

எனவே போர் இன்னும் முடியவில்லை. என்றாலும் பல நாடுகளை ஒரே நேரத்தில் எதிர்த்து போரிடக்கூடிய பலம் புலிகளிடம் உள்ளதா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. கிளிநொச்சி, பரந்தன் போன்ற பகுதிகளின் இழப்பு புலிகளின் ஈழப்போராட்டத்தின் முடிவின் துவக்கமாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. கொழும்பு ஊடகங்கள் இதனை பிரபாகரனின் வாட்டர்லு என வர்ணிக்கின்றன. "புலிகளின் முட்டாள்தனத்தையும், மூர்க்கத்தனத்தையும் தந்திரோபாயம் என கொண்டாடுபவர்கள் தான் தமிழர்கள்" என ஒரு நண்பர் சில நாட்களுக்கு முன்பு கூறினார். இது உண்மையாக இருக்கலாம்.

இவ்வாறான சூழ்நிலையில் நான்காவது ஈழப் போர் சார்ந்த போரியல் வியூகங்களை தொடர்ந்து இங்கு முன்வைக்கிறேன். ஏனெனில் போர் கிளிநொச்சியுடன் முடிந்து விடப்போவதில்லை.

*********************

1916ம் ஆண்டு முதல் உலகப் போர் நடைபெற்ற சூழலில் இருந்த ஒரு யுத்த வியூகத்தினை நாம் கவனிக்க வேண்டும். ஒரு புறம் ரஷ்யா மற்றொரு புறம் பிரஞ்ச், பிரிட்டன் என இரு புறமும் இருந்த எதிரிகளை சமாளிக்கவும், தொடர்ச்சியான அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ளவும், அவர்களின் எதிர்தாக்குதல்களை முறியடித்து பிறகு தங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் ஒரு வலிந்த தாக்குதலை மேற்கொள்ளவும் ஜெர்மனி ஒரு நீண்ட தற்காப்பு வளையத்தை அமைத்து இருந்தது. இந்த தற்காப்பு வளையத்தை Hindenburg Line என குறிப்பிடுவார்கள். தங்களுக்கு சாதகம் இல்லாத இடங்களை கைவிட்டு, சாதகமான இடங்களை மட்டும் தக்கவைத்துக் கொள்வது ஜெர்மனியின் வியூகமாக இருந்தது (If this meant the relinquishment of territory to achieve dominant and fortifiable terrain and features, so be it.). அது தவிர சில முக்கிய நோக்கங்களும் ஜெர்மனி படையணிக்கு இருந்தது. ரஷ்யாவில் பிரச்சனைகள் ஏற்படும், அது தங்களுக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தும் என ஜெர்மனி நினைத்தது. எனவே அது வரையிலான காலத்தை கடத்துவது ஜெர்மனியின் நோக்கம். எனவே தன்னுடைய வலுவான நிலைகளை உள்ளடக்கி ஒரு நீண்ட தற்காப்பு அரணை அமைத்துக் கொண்டது. இந்தப் பகுதியை தங்களால் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதும், குறைவான படைகளே இதற்கு தேவைப்படுவார்கள் என்பதும் ஜெர்மனியின் வியூகம்.

ஜெர்மனியின் இந்த வியூகம் அதற்கு சாதகமாகவே அமைந்தது. தொடர்ச்சியான பிரஞ்ச் படையினரின் தாக்குதல்களை தங்களுடைய தற்காப்பு வியூகங்களால் முறியடிக்க முடிந்தது. மொத்த பிரஞ்ச் படையையே இந்த தற்காப்பு வியூகம் மூலமாக ஜெர்மனி தோற்கடித்தது. முறியடிக்கவே முடியாத நிலையில் இருந்த Hindenburg Line என்ற தற்காப்பு வியூகத்தை நவம்பர் 20, 1917ல் பிரிட்டன் படைகள் முறியடித்தன. இந்த யுத்தத்தை Battle of Cambrai என கூறுவார்கள்.

பிரிட்டன் படைகள் ஜெர்மனியின் வியூகத்தை உடைத்து உள்ளே சென்றதும், பிறகு ஜெர்மனியின் பதில் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமலும் பின்வாங்கினர். இதற்கு பிறகு ஒரு வலிந்த தாக்குதல்களை பிரிட்டன் எதிர்பாராத நேரத்தில் ஜெர்மனி தொடுத்தது. இதில் ஜெர்மனிக்கு கணிசமான வெற்றி கிடைதது.

இப்பொழுது ஈழத்திலே நடைபெற்று கொண்டிருக்கும் போரினை ஜெர்மனி-பிரிட்டன் யுத்தத்துடன் ஒப்பிட முடியும். புலிகளின் படைபலத்தை ஜெர்மனியுடன் ஒப்பிட முடியாது. என்றாலும் புலிகளின் வியூகம் ஜெர்மனி போலவே உள்ளதை கவனிக்க முடியும். தங்களுக்கு சாதகமான பகுதிகளைச் சார்ந்த தற்காப்பு அரணை புலிகள் அமைத்து உள்ளனர். தற்பொழுது கிளிநொச்சி சார்ந்த தற்காப்பு அரண் இராணுவத்தால் உடைக்கப்பட்டுள்ளது. என்றாலும் இன்னும் அவர்கள் வசம் எஞ்சி இருக்கிற பகுதிகளைச் சார்ந்து மற்றொரு தற்காப்பு அரணை அமைத்து உள்ளார்கள். இது தவிர கடல்சார்ந்த புலிகளின் பகுதிகளைச் சார்ந்தும் மற்றொரு தற்காப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. இறுதிப் போர் என்பது இந்த கடற்கரைச் சார்ந்த இறுதி தற்காப்பு அரணைச் சார்ந்தே அமையும் என போரியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறு பிரிட்டன் படைகள் தங்களின் அசுர மற்றும் நவீன ஆயுதங்களைக் கொண்டு ஜெர்மனியின் வியூகத்தை உடைத்தார்களோ அதைப் போலவே சிறீலங்கா இராணுவம் தங்களது நவீன ஆயுத பலம் மூலம் புலிகளின் தற்காப்பு அரணை முறியடித்து உள்ளனர்.

புலிகளின் தற்காப்பு அரண் தங்களின் படைகளை தற்காத்துக் கொள்ளும் நோக்கமும் கொண்டது. அது தவிர தங்கள் பலத்தை ஒரே இடத்தில் குவிப்பதும் புலிகளின் நோக்கமாக உள்ளது (Concentration of forces). புலிகளிடம் இன்னமும் 25,000 படைப்பிரிவினர் உள்ளனர். இவர்களில் 10,000 பேர் நவீன பயிற்சி பெற்றவர்கள். இந்தப் போரில் இது வரை புலிகளின் சார்லஸ் ஆண்டனி படையணி, இம்ரான் பாண்டியன் படையணி போன்றவை அதிகம் ஈடுபடுத்தப்படவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த தாக்குதல்களில் ஈடுபட்ட இந்தப் படையணிகள் எளிதில் குண்டு துளைக்காத உடைகவசம் அணிந்தும், தலையில் கவசம் அணிந்தும் போரில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களுடைய முக்கிய படையணிகளை தற்காத்துக் கொள்ளும் புலிகளின் வியூகத்தையே இது வெளிப்படுத்துகிறது.

எந்த தற்காப்பு போரும், இறுதியில் வலிந்த தாக்குதல்களை நோக்கமாக கொண்டே அமைக்கப்படும். அந்த வகையில் ஜெர்மனி எவ்வாறு தங்களுடைய தற்காப்பு வியூகத்தை ரஷ்யாவில் இருந்த உள்நாட்டு குழப்பத்தை எதிர்பார்த்து அமைக்கப்படிருந்ததோ அது போல புலிகளும் தங்களுக்கு சாதகமான ஒரு நிலையை எதிர்பார்த்து தங்களது தற்காப்பு வியூகத்தை அமைத்து உள்ளனர்.

இது வியூகமாக இருந்தாலும், இந்த வியூகம் எந்தளவுக்கு புலிகளுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை பொறுத்தே அவர்களின் எதிர்கால வலிந்த தாக்குதல் வெற்றிகளை கொடுக்கும். அது போல சிறீலங்கா இராணுவம் எந்தளவுக்கு புலிகளின் பலத்தை குறைத்து உள்ளதோ அதனைச் சார்ந்த அதனுடைய தற்போதைய வெற்றி நிலைக்க முடியும்.

முதலில் சிறீலங்கா இராணுவத்தின் வெற்றி எப்படியானது என்பதை நாம் கவனிக்க வேண்டும். சிறீலங்கா இராணுவம் புலிகள் வசம் இருந்த பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது அதன் முக்கிய வெற்றியாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் இந்த வெற்றியை தக்கவைப்பதும் எதிர்காலத்தில் இராணுவத்திற்கு இருக்ககூடிய சவால் என்பதையும் நான் கவனிக்க வேண்டும். இப்பொழுது கைப்பற்றியுள்ள இடங்களை தக்கவைக்க வேண்டுமானால் புலிகளின் பலத்தை இராணுவம் அழிக்க வேண்டும். அவ்வாறு இது வரை செய்திருக்கிறதா என்பதை ஆராய்ந்தால் அப்படியான எந்த வெற்றியும் இராணுவத்திற்கு ஏற்படவில்லை என்று தான் கூற வேண்டும். இது வரை புலிகள் தரப்பில் சுமார் 10,000 பேரை தாங்கள் கொன்று விட்டதாக இராணுவம் கூறி வருகிறது. ஆனால் புலிகள் ஆண்டுதோறும் வெளியிடும் மாவீரர்கள் பட்டியல் புலிகள் தரப்பில் கொல்லப்பட்டவர்களின் உண்மையான நிலவரத்தை தரும். அவ்வாறு நோக்கம் பொழுது புலிகள் தரப்பில் பெருத்த சேதங்கள் ஏற்படவில்லை என்பதை கவனிக்க முடியும். இது தவிர புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் வழங்கல் பாதை (Supply Lines) இன்னும் முழுமையாக முடக்கப்படவில்லை என்பதையும் சமீபத்தைய நிகழ்வுகள் உறுதி செய்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் சிறீலங்கா இராணுவத்தின் தற்போதைய வெற்றி என்பது உறுதியான வெற்றி அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அது போல புலிகளின் தற்காப்பு வியூகங்கள் எந்தளவுக்கு வெற்றி பெற்று உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். தங்களுடைய தற்காப்பு அரண் மூலம் இராணுவத்திற்கு பெருத்த சேதங்களை ஏற்படுத்துவது, தொடர்ச்சியான போர் மூலமாக சிறீலங்காவின் பொருளாதாரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது போன்றவை புலிகளின் நோக்கமாக இருந்தது. புலிகளின் இந்த முயற்சிக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை என்பதை நாம் போர் நிலவரங்கள் மூலம் கவனிக்க முடியும். சில குறிப்பிடத்தக்க இழப்புகளை இராணுவத்திற்கு புலிகள் ஏற்படுத்தியிருந்தாலும் அந்த இழப்புகள் இராணுவத்தை பொறுத்தைவரை மிகவும் குறைவே. அது தவிர கடந்த காலங்களில் கட்டுநாயக்க விமான தளம் மீதான தாக்குதல் போன்றவை மூலம் சிறீலங்கா பொருளாதாரத்திற்கு கடுமையான அழுத்தங்களை புலிகள் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் தற்பொழுது புலிகளால் அது போன்ற ஒரு பொருளாதார அழுத்தங்களை ஏற்படுத்த முடியவில்லை.

இவ்வாறான நிலையில் இந்தப் போர் எந்த வெற்றியையும், யாருக்கும் கொடுக்க முடியாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். என்றாலும் இடங்களை கைப்பற்றியதன் மூலம் இராணுவம் சில குறிப்பிடத்தக்க வெற்றிகளை நான்காவது ஈழப் போரில் பெற்றிருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

*************************

2008ம் ஆண்டு முடிந்து 2009ம் ஆண்டு தொடங்கி விட்டது. A32 சாலைக்காக நடந்த சண்டையில் இராணுவத்தின் Attrition warfare நோக்கம் தங்களுக்கு தெரிவதாகவும், அதற்கு ஏற்ப தங்களுடைய வியூகமும் அமையும் என புலிகள் அமைப்பின் ஒரு மூத்த தலைவர் தெரிவித்து இருந்தார். 2008ம் ஆண்டு போர் பற்றிய ஒரு தெளிவினை கொடுக்கும் என 2008ம் ஆண்டு ஆரம்பத்தில் அவர் கூறினார். 2008ம் ஆண்டு முடிந்து விட்ட நிலையில் ஒரு விடயம் தெளிவாகவே புரிகிறது..... அதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

2008ம் ஆண்டில் இது வரை இல்லாத அளவுக்கு பல தோல்விகளை புலிகள் அடைந்து உள்ளனர். அடம்பன், பூநகரி தொடங்கி தற்பொழுது பரந்தன், கிளிநொச்சி என பல இராணுவ முக்கியத்துவம் பெற்ற இடங்களை புலிகள் இழந்து உள்ளனர். கிளிநொச்சி தவிர முல்லைத்தீவு பகுதியையும் புலிகள் இழக்ககூடும். கிளிநொச்சியை புலிகள் தற்காக்க தீவிர போர் புரிந்த சூழ்நிலையில் அதனை தங்களுக்கு சாதகமாக சிறீலங்கா இராணுவம் பயன்படுத்திக் கொண்டது. முல்லைத்தீவினை நோக்கி இராணுவம் நகர்ந்து வருகிறது. முல்லைத்தீவு நகரை அண்டிய முள்ளியவளை, தண்ணீரூற்று, சிலாவத்தை ஆகிய இடங்களை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு பகுதியை தக்கவைக்க வேண்டுமானால் கிளிநொச்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலை தான் புலிகளுக்கு இருந்தது. அதைத் தான் தற்பொழுது புலிகள் செய்திருக்கின்றனர்.

நான் கடந்த பகுதியில் கூறியிருந்தது போல புலிகள் போன்ற சிறிய இராணுவ அமைப்பிற்கு பல முனைகளில் ஒரே நேரத்தில் நடத்தப்படும் பெரிய தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஆட்பலமோ, ஆயுதபலமோ இல்லை. அதைத் தான் இந்த வார நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கு என்ன காரணம் என்பதையும் விளக்க வேண்டும். தங்களுடைய தற்காப்பு அரண் முழுவதையும் பாதுகாப்பதற்கு போதிய போராளிகள் பலமோ, ஆயுத பலமோ புலிகளிடம் இல்லை. தற்காப்பு அரணை சார்ந்த பகுதிகளில் குறைந்த அளவிலான போராளிகளே இருப்பார்கள். இது இராணுவத்தின் ஆர்ட்லரி தாக்குதல்கள் போன்றவற்றை சமாளிப்பதற்கான ஒரு உத்தியும் கூட. இராணுவம் தாக்குதல் தொடுக்கும் பொழுது தாக்குதல் நடத்தப்படும் இடங்களுக்கு, தாக்குதல்களின் பலத்தை பொறுத்து போராளிகளையும், ஆயுதங்களையும் அனுப்புவது புலிகளின் வழக்கம். இது புலிகள் என்றில்லாமல் எல்லா இராணுவ அமைப்புகளின் செயல்பாடும் இவ்வாறு தான் இருக்கும். பல முனைகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் பொழுது இந்த வழங்கல் பாதையில் (Supply Lines) சுணக்கம் ஏற்படுகிறது. அது தவிர இராணுவத்தின் விமானத் தாக்குதல் இந்த வழங்கல் பாதையை குறிவைக்கிறது. இதன் காரணமாகவே புலிகளின் தற்காப்பு அரணை பல முனை, எதிர்பாராத தாக்குதல்களை மூலம் இராணுவம் முறியடிக்க முனைகிறது. அதற்கு வெற்றியும் கிடைத்து உள்ளது.

இதனை எதிர்கொள்ள தங்களால் பாதுகாக்க முடிந்த சிறிய பகுதிகளை மட்டும் பாதுகாத்து கொள்வதும், தங்களால் பாதுக்காக்க முடியாத முக்கிய நிலைகளை விட்டு பின்வாங்குவதும் புலிகளின் தற்போதைய வியூகமாக உள்ளது. தற்போதைய நிலையில் மூன்று புறமும் புலிகளை இராணுவம் சுற்றிவளைத்துள்ளது. ஒரு புறம் கடல் வழியே வரும் ஆயுதங்களை இராணுவம் தடுக்க முனைந்து வருகிறது. இருந்தாலும் புலிகள் அவ்வப்பொழுது ஆயுதங்களை பெற்றே வந்திருக்கின்றனர் என்பதையும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. புலிகள் எந்தளவுக்கு ஆயுதங்களை கடல் வழியாக பெறுகின்றனர் என்பதை பொறுத்தே போரின் எதிர்கால போக்கு அமையும். இந்த கடல் வழிப் பாதையை எந்தளவுக்கு இராணுவம் தடுக்கிறதோ அந்தளவுக்கு அது இராணுவத்திற்கு வெற்றியையும் கொடுக்கும்.

*************************

இராணுவத்தின் இந்த தொடர்ச்சியான வெற்றிகளை தடுக்க புலிகள் வலிந்த தாக்குதல்களை தொடுக்க வேண்டும். புலிகள் ஏன் தங்களுடைய வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ள வில்லை என்ற கேள்வி தொடர்ச்சியாக பல ஊடகங்களில் எழுப்பபட்டு வருகிறது. புலிகளிடம் வலிந்த தாக்குதல்களை தொடுக்க கூடிய பலம் இல்லை என இராணுவம் கூறுகிறது. அது உண்மையா என்பதை காலம் தான் பதில் சொல்லும்

http://blog.tamilsasi.com/2009/01/battle-f...llinochi-3.html

  • கருத்துக்கள உறவுகள்

சில பின்னூட்டங்கள்..

---------------

ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் பாலான தங்களின் அக்கறைகளும் கரிசணையும் சந்தேகத்திற்கப்பாற்பட்டது.

எனினும், போர் குறித்த தங்களது மதிப்பீடுகளும் அலசல்களும் பாரிய தவறான விளைவுகளை விளைவிக்கக்கூடியவை என்று கருதுகிறேன்.

சென்றமுறை ஸ்டாலின்க்ராட் தற்காப்புப் போருடன் நீங்கள் ஒப்பிட்டு எழுதியதே தவறென்று குறிப்பிட்டிருந்தேன. எங்ஙனம் என்பதை விரிவாக விளக்க நேரமில்லை.

சிங்கள ராணுவம் தோல்வியின் விளிம்பில் இருப்பதாகவும் அப்போது குறிப்பிட்டிருந்தேன்.

கிளிநொச்சியைக் கைப்பற்றிய செய்திகள் தற்சமயம் வந்துபோதும் எனக்கு அக்கருத்தில் பெருத்த மாற்றங்கள் ஏதுமில்லை.

கிளிநொச்சியைக் 'கைப்பபற்றியதாகச்' சொல்லும் சிங்கள அறிவிப்பு அம்முயற்சியில் எத்துனை புலிகளை வீழ்த்தியது, எத்துனை வீரர்களை இழந்தது என்பதான விவரங்கள் எதையும் கொடுக்கவில்லை.

புலிகள் எந்த இழப்பும் இல்லாமலே கிளிநொச்சியை மட்டுமல்ல அதைச் சுற்றியுமுள்ள பல பகுதிகளையும் விட்டு விலகியுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இதுவே சென்ற முறை நீங்கள் இப்போரை ஸ்டாலின்க்ராடுடன் ஒப்பிட்டதற்கு மறுப்பாக அமையும்.

நான் அறிந்த அளவில் இப்போரின் சில தந்திராபோய யுத்திகளைப் பேச விரும்பவில்லை.

தற்சமயம் நம்மைப் போன்றவர்கள் ஈழப் போரில் புலிகளின் போர் தந்திரங்கள் குறித்து வெளிப்படையாக பேசாது அரசியல் உத்திகள் சார்ந்து நீங்களும் நானும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து விவாதிப்பதும் செயலில் இறங்குவதும் மட்டுமே நடைமுறை அரசியலுக்கு உகந்தது என்று கருதுகிறேன்.

ஈழப் போரின் தந்திரோபாயங்கள் குறித்து எழுதி எனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்திக் கொள்வது சிங்கள இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்தை உஷார் படுத்தும் காரியமாக அமையும். அதைத் தவிர்க்க விரும்புகிறேன். நீங்களும் தவிர்க்கக் கோருகிறேன்.

அரசியல் ரீதியாக ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் எம்மைப் போன்றவர்கள் என்னவிதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, அமெரிக்காவில் இருக்கும் நீங்கள் (ஈழத் தமிழரல்லாத நீங்கள்) என்ன செய்வது என்பது குறித்து உரையாடுவதும் செயல்படுவதுமே இச்சந்தர்ப்பத்தில் மிக முக்கியமானது.

-----------

மிக நேர்த்தியான பார்வை. நன்றி

ஈழப்போர் குறித்த சில சந்தேகங்கள் என் மனதில் மாத்திரமல்ல, ராஜபக்சவின் மனதையும் குடையலாம்.

1. ஏன் இதுவரை புலிகள் வலிந்து தாக்குதலைத் தொடர விரும்பவைல்லை?

2. கிழக்கில் (மாவிலாறு) போருக்காக இலங்கை இராணுவம் தன் படைகளை வன்னி எல்லையில் இருந்து

கிழக்கிற்கு கொண்டு சென்றபோது வன்னியில் புலிகள் வலிந்த தாக்குதலைத் தொடர்ந்து சில இடங்களைக் கைப்பற்றி இருக்கலாம். ஏன் அந்த வாய்ப்பில் மௌனம் சாதித்தது?

3. முதலாம், இரண்டாம் ஈழப்போரில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் பயன்படுத முனைந்த அளவிற்குகூட இன்றைய போரில் ஏன் முயற்சிக்கவில்லை?

4.

கடந்த ஏழு ஆண்டுகாலத்தில் ஒரு அங்குல அளவைக்கூட புலிகள் புதிதாக கைப்பற்றவில்லை. புலிகள் வெற்றிபெற இன்னும் வாய்ப்புக்கள் வளர்கின்றன.

புலிக‌ளுக்கு எதிரான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளைப் போன்றே ஆத‌ர‌வான‌ க‌ருத்துக்க‌ளும் க‌ண்மூடித்த‌ன‌மாக‌ வைக்க‌ப்ப்ட்ட‌ன‌.

தேவை மிக நிதானமான ஆலோசனை.

---------------

தமிழீழம் இந்தியாவுக்கு அருகில் இருப்பது தமிழர்களுக்கு பாதிப்பானதுதான்... அதேபோல புலிகள் பலவீனம் அடையும் வரைக்கும் எல்லாரும் இலங்கை அரசுக்கு உதவிகளை செய்து இலங்கை அரசை தங்களின் கைகளுக்குள் வைத்திருக்க அரசுகள் விரும்புவதும் உண்மைதான்...!!

புலிகள் உண்மையில் பலவீனம் அடைந்து விட்டார்களாயின் இவ்வளவுகாலமும் செய்த உதவிக்களுக்கான பலனை அந்த நாடுகள் இலங்கையிடம் இருந்து எதிர்பார்க்காதா..??? அபடியாயின் இலங்கையின் கருணை யாருக்கு...?? இப்படியான கேள்விகள் உண்மையான விளக்கத்தை தமிழரின் போராட்ட முடிவை உணர வசதியாக இருக்கலாம்...

இனியும் புலிகள் போராடத்தான் போகிறார்கள்.. 2 வருடங்கள் இல்லை5 வருடங்கள் 10 வருடங்களாகா வேண்டுமானாலும் இலங்கை படைகளுக்கு சேதங்களை விளைவிக்க தான் போகிறார்கள்...

ஆப்கானில், ஈராக்கில், போராடும் அமெரிக்க, பிரித்தானிய படைகளுக்கு இல்லாத உதவிகள் இலங்கை படைகளுக்கு இருக்கிறது என்பது கொஞ்சம் அதிகமானது... ஆனாலும் ரஸ்யா, ஈரான் போண்றவை போராளிகளுக்கு உதவுகின்றன எண்று சொன்னாலும் அமெரிக்கர்களின் ஆழுமைக்கு அவை சமனானவைதான்..

இண்று இருக்கும் கேள்வி... புலிகள் இலங்கை படைகளை வெல்ல முடியவில்லை எண்று வைத்து கொள்ளலாம்... இலங்கை படைகள் வெண்று விட்டார்கள் எண்று கொள்ள முடியுமா..?? அப்படி அவர்களால் வெல்ல முடியுமா..?? எவ்வளவு காலத்தில் வெல்ல முடியும்..?? அப்படி எவ்வளவு காலத்துக்கு போரை மட்டுமே இலங்கை அரசால் நடத்த முடியும்..? பால்மாவின் விலை குறைப்பு எப்போது... மக்கள் அதுவரை பொறுத்து இருந்தாலும், இலங்கையில் போருக்காக முதலீடு செய்யும் வெளிநாட்டுகள் பொறுத்து இருப்பார்களா..??

சிறு உதாரணமாக அமெரிக்க தூதர் றொரேட் பிளேக் அவர்கள் தீர்வு ஒண்றை முன் மொழியுமாறு வேண்டு கோள் விடுக்கிறார்... இது அவர்கள் பொறுமை இழக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதுக்கான அறி குறி இல்லையா..?

----------

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.