Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''இலங்கையில் கொடுங்கோல் ஆட்சி!'' - ராஜபக்ஷேவின் முன்னாள் நண்பர் பாய்ச்சல்...-ஜூனியர் விகடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

''இலங்கையில் கொடுங்கோல் ஆட்சி!'' - ராஜபக்ஷேவின் முன்னாள் நண்பர் பாய்ச்சல்...

பிரபாகரனின் நம்பிக்கைமிகு தளபதியாக இருந்து, இன்றைக்கு அவருக்கு எதிராக அனல் கிளப்பிக் கொண்டிருக்கிறார் கருணா. எதிரும் புதிருமான நிலை எப்போதும் யாருக்கும் ஏற்படலாம் என்பதை நிரூபிக்கும் மற்றொரு உதாரணமாக அதே இலங்கையில் சமர வீரா! ராஜபக்ஷேவின் வலது கரமாகவும், அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பிரதான காரணகர்த்தாவாகவும் இருந்த மங்கள சமர வீரா, தற்போது அதிபருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார். இவர், ராஜபக்ஷே அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். இப்போது ராஜபக்ஷேவின் ஆட்சியை வீழ்த்த அமெரிக்க அரசின் உதவியை நாடுகிறார். இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து அவரிடம் கேள்விகளை வைத்தோம்.

''மகிந்த ராஜபக்ஷே இலங்கையின் அதிபரா வதற்கு நீங்கள் பெரிதும் உழைத்தீர்கள். ஆனால், இப்போது அவருடனான உறவை முறித்துக்கொண்டது ஏன்?''

''கடந்த 2005-ல் அதிபர் தேர்தல் நடைபெற்றபோது, ராஜபக்ஷேவுக்கு தலைமைப் பிரசார ஒருங்கிணைப் பாளராகச் செயல்பட்டேன். அவர் அதிபரானதும், எனக்கும் கேபினெட்டில் பங்கு கொடுக்கப்பட்டது. 2006 பிற்பகுதியில்தான் எங்கள் உறவில்

கசப்பு ஏற்படத் தொடங்கியது. குறிப்பாகச் சொன்னால்... திரிகோண மலையில் நான்கு மாணவர்கள் கொலை செய்யப்பட்டது குறித்தும், மூதூரில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்டது குறித்தும் நான் கவலை தெரிவித்த போதுதான் கசப்பு மேலிட்டது.

இத்தகைய கொடுமைகள் நடக்கும்போது அரசு செயலற்று இருந்தால், சர்வதேச அளவில் ஏற்படும் பழிச்சொல் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற முறையில் அவரிடம் எடுத்துரைத்தேன். நானும் ராஜபக்ஷேவும் அதிபர் சந்திரிகா குமார துங்காவின் ஆட்சியில் மூத்த அமைச்சர்களாக இருந்தபோது, இது போன்ற நிலைமைகளை சந்திரிகா எவ்வாறு கையாண்டார் என்பதை சுட்டிக் காட்டினேன். 1995-ல் போல்கோடா ஏரியில் பிணங்கள் மிதந்தபோது, சந்திரிகா அரசு குற்றவாளிகள் மீது உறுதியாக நடவடிக்கை எடுத்தது. கிருஷாந்தி குமாரசாமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கிலும் தொடர்புடைய ராணுவ அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்பட்டு, முடிவில் அவர்களுக்கு தண்டனை கிடைத்தது. ஆனால், இப்போது கோத்தபயவும், பசிலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றால், அது ராணுவத்தின் 'மனஉறுதியை'க் குலைத்துவிடும் என்று சாக்குச் சொல்லி எதிர்ப்புத் தெரி வித்தனர்.

எனவே, என் கவலைகளை எல்லாம் 13.12.2006-ல் அதிபருக்கு ஒரு கடிதமாகக் கொடுத்தேன். ஆறு வாரம் கழித்து 27.1.07-ல் நான் வெளியுறவுத் துறை அமைச் சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டேன். 9.2.2007-ல் அமைச்சரவையிலிருந்தே அகற்றப்பட்டேன். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் போற்றி வளர்த்த ஜனநாயக நிறுவனங்களை ராஜபக்ஷேவும் அவருடைய சகோதரர்களும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள். சிங்கள பௌத்தப் பேரினவாத கொடுங்கோலாட்சியை, பர்மிய அரசு மாதிரி நிறுவக் கனவுகாணும் தீவிரவாத சக்திகளான இவர்களின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை...''

''நீங்கள் உரிமைகளுக்காகப் பேசக்கூடியவராக அறியப்பட்டுள்ளீர்கள். உங்கள் நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''சிறீலங்கா சுதந்திராக் கட்சியை நிறுவுவதற்கு அடிப்படை யாக இருந்த ஜனநாயக சோஷலிஸக் கொள்கைகளை, உறுதியாக நம்புகிறவன் நான். ஆனால், ராஜபக்ஷே ஆட்சியில் மாற்றுக் கருத்துகளை சகித்துக்கொள்ளாத இருண்ட காலம் உருவாகி இருக்கிறது. தீவிரவாத சக்திகள், ஆளுங்கட்சியைக் கைப்பற்றி, அதன் மிதவாதக் கொள் கையை ஒழித்துக்கட்டிவிட்டு, ராணுவ சர்வாதிகாரம் போன்ற ஒன்றை உருவாக்கி வருகின்றன!

'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற போர்வை யில் ராஜபக்ஷே ஆட்சி, எம்முடைய நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புகளைத் திட்டமிட்டே நொறுக்கி வருகிறது. காவல் துறையும், தேர்தல் ஆணையமும் அரசு நிர்வாகமும் சுயேச்சையாக இயங்குவதை உறுதி செய்யும் 17-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை அலட்சியமாக ஒதுக்கித் தள்ளிவிட்டனர். நீதித் துறை கடுமையான நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளது. தலைமை நீதிபதியையே ஆட்சியாளர்கள் தாக்கி வருகின்றனர். இனவாதமே அரசாங்கக் கொள்கையாகிவிட்டது.

கொழும்பில் உள்ள தமிழர்களை 'வெளியாளர்கள்' என்று சொல்லி காவல் துறை சித்ரவதை செய்கிறது. 'இது ஒரு சிங்கள-பௌத்த நாடு. இங்கே சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்கு இடமில்லை' என்று ஜே.ஹெச்.யு. (ஜதிக ஹெல உருமய) அமைச்சரும், ராணுவத் தளபதி ஃபொன்சேகாவும் கூறிய கருத்தும் இதைத்தான் காட்டுகின்றன. அரசில் முக்கியப் பங்கு வகிப்ப வர்கள் இவ்வளவு மோசமான கருத்துகளை வெளியிட்டபோதும், யாரும் இதை மறுக்கவோ திருத்தவோ இல்லை!''

''ராஜபக்ஷே அரசு போர் வெறிபிடித்து அலைவதாக உலக நாடுகள் சிலவும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனவே?''

''இலங்கையின் மக்கள்தொகை வெறும் இரண்டு கோடிதான். ஆனால், இவர்களை ஆள்வதற்கு அனைத்து வசதிகளோடும் சலுகைகளோடும் 113 அமைச்சர்கள் உள்ளனர். இதனால் ஏற்படும் வீண்செலவும் ஊழலும் சேர்ந்து இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கின்றன. இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ஒரு கருவியாகத்தான் ராஜபக்ஷே போரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இலங்கை நிலைமை குறித்துக் கவலை தெரிவிக்கும் நட்பு நாடுகளைச் சேர்ந்த தூதர்களும், ஐ.நா. உயர்அதிகாரிகளும்கூட அரசு நடத்தும் ஊடகங்களால் புலி ஆதரவாளர்களாக தவறாகச் சித்திரித்துக் காட்டப் படுகின்றனர். இந்தப் போர், ஒரே நாட்டில் இரு இனக் குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல். இதில் வெற்றி பெற்றவர்கள், தோல்வியுற்றவர்கள் என்று யாரும் இல்லை. பயங்கரவாதத்தைத் தோற்கடித்து, நீடித்த அமைதி மலரச் செய்வதற்கு இங்கே ஒரே ஒரு வழி உண்டென்றால், அது தமிழ் மக்களின் உண்மையான மனக்குறைகளைப் போக்குவதுதான். ராஜபக்ஷே அரசாங்கத்தின் அப்பட்டமான சிங்களப் பேரினவாதக் கொள்கைகள், மிதவாதத் தமிழர்களைக்கூட அதிதீவிர நிலைகளுக்குத் தள்ளிவிடுகின்றன. தற்போதைய போரில் பிரபாகரனையே ஒழித்துவிட்டாலும், சிங்களப் பேரினவாதப் போக்கால் மேலும் பல பிரபாகரன்கள் உருவாகி விடுவார்கள் என்பது நிச்சயம். இதனால் இலங்கையின் துயரம் அடுத்த தலைமுறைக்கும் தொடரும்...''

''அப்படியென்றால், ராஜபக்ஷே மனதிலுள்ள திட்டம்தான் என்ன?''

''அதிபர் ராஜபக்ஷேவிடம் தீர்வு ஏதும் இருப்பதாக நான் நினைக்க வில்லை. அவரே அனைத்துக் கட்சி ஆய்வுக் குழுவிடம் 'ஒற்றையாட்சி திட்டத்தைத் தாண்டிச் சிந்திக்கவேண்டாம்!' என்று அறிவுறுத்தி இருக்கிறார். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவு செய்வதில் அவருக்கு அக்கறை இல்லை. கிழக்கு மாகாணத்தை விடுதலை செய்து, அங்கு 'ஜனநாயகத்'தை நிறுவி இருப்பதாக உலகுக்குக் காட்டுகிறார்களல்லவா..? அந்தக் கிழக்கு மாகாண கவுன்சிலுக்கே எவ்வித அதிகாரமும் தரப்படவில்லை. அப்பகுதியின் முதலமைச்சர், அரசுத் தரப்பின் ஆளாக இருந்தும் தனக்கு அதிகாரமே தரப்படவில்லை என்று கூறியிருக்கிறார். 13-வது சட்டத் திருத்தத்தின்படியான அதிகாரங்கள்கூட எந்த மாகாண கவுன்சிலுக்கும் தரப்படவில்லை.

'அனைத்துக் கட்சி ஆய்வுக்குழு' என்பது சர்வதேச நெருக்குதலையும், குறிப்பாக இந்திய நெருக்குதலையும் சமாளிப்பதற்காக நடத்தப்படும் கேலிக்கூத்து. இந்தியாவில் இருப்பது போன்ற கூட்டாட்சி அமைப்பே எம்முடைய சிக்கலைத் தீர்க்கத் தேவைப்படுவதாக நம்புகிறேன். 2000-த்தில் சந்திரிகா முன்வைத்த அரசமைப்புச் சட்ட வரைவை தமிழர் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகக் கருதலாம்.''

''த.சிவராமு, லசந்தா விக்ரமசிங்கே உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் இலங்கையில் உண்மைகளை வெளியிட்டதற்காகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் கள். இதன் பின்னணியில் அரசின் கைங்கரியம்தான் இருக்கிறது என்று சொல்லப்படுகிறதே?''

''லைசென்ஸ் இல்லாத மோட்டார் பைக்குகளில் வந்தவர்கள், ராணுவப் பாணி தாக்குதலில் இறங்கி ரத்மலானா விமான நிலையம் அருகில் உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் லசந்தாவை கொன்றனர். ஒரு சராசரிக் குடிமகன் நம்பர் பிளேட் இல்லாமல் இப்பகுதியில் 10 மீட்டர் தூரத்தைக்கூட கடந்து செல்லமுடியாது. நம்மிடம் திட்டவட்டமான சான்று ஏதும் இல்லையென்றாலும், பாதுகாப்புத் துறை வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ள நம்பத்தக்க தகவலின்படி, இது போன்ற நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கென்றே பயிற்சி பெற்ற கொலைக்குழுக்கள் சிறீலங் காவில் பல இருப்பதாகத் தெரிகிறது. 'கே-9' எனப்படும் இந்தக் குழு, பாதுகாப்புத் துறையில் உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரிக்கு மட்டும்தான் பதில் சொல்லவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை இவர்கள்தான் கொன்றனர். ராணுவத் தளபதியைப் பற்றிக் கட்டுரை எழுதிய கீத்நோயர் என்ற பத்திரிகையாளர் மீது நடைபெற்ற கொடுந்தாக்குதலும், மகாலட்சுமி மீது நடைபெற்ற தாக்குதலும், லசந்தா கொல்லப்பட்டதும்... இவை எல்லாம் இப்படியரு கொலைக்குழு இருப்பதையே காட்டுகின்றன. லசந்தா கொல்லப்படுவதற்கு முன்னர் என்னிடம், 'ஜெனரல் ஜனகபெரேரா கோரமாகக் கொல்லப்பட்டதற்குப் பின்னால் அரசாங்கமே உள்ளது என்று கொலைப்படையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் கிடைத் திருக்கிறது' என்று சொல்லி இருந்தார்.''

''ராஜபக்ஷேவின் ஆட்சி நடைமுறைக்கு எதிராக ஹிலாரி கிளின்ட்டனை அணுகி புகார் தெரிவிக்க நீங்கள் திட்டமிட்டு இருப்பதாகச் செய்தி வந்துள்ளது. உங்களின் முயற்சிக்குப் பலன் கிடைக்குமா?''

''பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே, அமெரிக்கக் குடிமகன். ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவும், பசில் ராஜபக்ஷேவும் பச்சை அட்டை வைத்திருப்பவர்கள். இந்த மூவரின் குற்றச் செயல்கள் குறித்து ஓர் ஆவணத்தைத் தொகுத்துக் கொண்டிருந்தபோதுதான் லசந்தா கொல்லப்பட்டார் என்பது எனக்குத் தெரியும். இப்போது நானும் வேறு சிலரும் சேர்ந்து இந்த ஆவணத் தொகுப்பை முடித்துவிட முடியும் என நம்புகிறோம். அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ட்டனிடம் இந்தத் தொகுப்பைக் கையளிப்பதற்காக சந்திப்பு நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்போம்.

ஒபாமா அரசாங்கம் ஜனநாயகத்திலும் சட்டத்தின் ஆட்சியிலும் உறுதியான பற்றுக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நேரத்தில், ஆசியாவின் மிகத் தொன்மையான ஜனநாயகங்களில் ஒன்றாகிய இலங்கையில் ஜனநாயகப் பாரம்பரியத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கக் குடிமக்களான இவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறோம். இதையெல்லாம் செய்வதற்காக என் மீதும் அரசுத் தரப்பு பழிவாங்குதலையும் தாக்குதலையும் நடத்தக்கூடும். என் ஆதரவாளர்கள் மூலமாக எதையும் சமாளித்து, ராஜபக்ஷேவின் கொடுங்கோலாட்சிக்கு முடிவு கட்டுவேன்... இதில் நான் உறுதியாக இருக்கிறேன்!''

- இரா.சரவணன்

-ஜூனியர் விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.