Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்துக்குமாருக்கு ஒரு கடிதம் - எங்கே இருக்கிறான் எமக்கான தலைவன்!-ஆனந்த விகடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முத்துக்குமாருக்கு ஒரு கடிதம் - எங்கே இருக்கிறான் எமக்கான தலைவன்!

முத்துக்குமார்...

கண்ணீர் வணக்கம். சாவின் விளிம்பில் எழுதிய சாசனத்தில்கூட, 'வேலைக்குப் போகும் அவசரத்தில் இருக்கும் உங்களை இப்படிச் சந்திக்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன்' என எழுதிய ஈரத் தமிழா!

p116xk9.jpg

தன்னையே மாய்த்துக்கொள்வது தவறுதான். ஆனால், 30 வருடங்களுக்கும் மேலாக பிஞ்சுக் குழந்தைகளை, அப்பாவிப் பெண்களை, பாவப்பட்ட மக்களைக் கொன்று வீசும் குரூரமான இன வெறிக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத சமூகத்தில் வாழ்வதே அவமானம் என்பதையும் அறிவோம்.

p117ke2.jpg

உனது இறுதி ஊர்வலத்தைப் போராட்டக் களமாக்கித் திரண்ட இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இவர்களின் உண்மையான கண்ணீரையும் கோபத்தையும் இந்தக் கடிதத்தில் உனக்கு அனுப்பிவைக்கிறேன். ஏனெனில், இங்கே அது மட்டுமே உண்மை!

நீ பேசாமல்கிடந்த அந்த மூன்று நாட்கள், இதுவரை பேசிப் பேசி எம்மை ஏமாற்றிப் பிழைத்தவர்களின் முகமூடிகளைக் கிழித்தெறிந்த தினங்கள். 'காதலர் தினத்தில்' காதலிக்குக் கடிதம் எழுதிக்கொண்டு இருக்கக்கூடிய வயதுதான் உனக்கும். ஆனால், நீ எழுதிய கடைசிக் கடிதம், பிரிவின் பெருவலியில் துடிக்கும் பிரபஞ்சக் காதலின் குரல். பார்க்கச் சகியாத அவலத்தை அடித்து நொறுக்கும் அன்பின் விரல். அதனால்தான் தமிழ்நாட்டுக்கு வந்த சிங்களத் தம்பதியினர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்தாய்.

'உலகத் தொழிலாளர்களே... ஒன்றுபடுங்கள்' என்ற குரலின் நீட்சியாய், 'உலகத் தமிழ் இளைஞர்களே... ஒன்றுபடுங்கள்' என அறைகூவிவிட்டுச் செத்துப்போன நண்பனே... தனிமனிதப் பொருளாதாரம், பொழுதுபோக்கு, சுகம், சுயநலம், வக்கிரம், கூத்து என ஒரு தலைமுறை உருவாகிறதோ என்ற சந்தேகத்துக்கெல்லாம் சாட்டையடியானது, உன் கடிதத்துக்குப் பிறகான நிகழ்வுகள். இளைஞர்களும் மாணவர்களும்தான் உன் மரணத்துக்கு மரியாதை தரத் திரண்டார்கள். இனப் படுகொலைக்கு எதிரா கக் கிளர்ந்தார்கள். எங்கெங்கோ பெயர் தெரியாமல் உண்ணாவிரதம் இருந்து சுருண்டார்கள். கல்லூரி வளாகங்களில், பேருந்து-ரயில் நிலையங்களில், தெருக்களில், சந்திப்புகளில் நீ சொன்ன செய்திகளையும், இன அழிப்பின் பயங்கரத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துச் சென்றார்கள். ஒட்டுமொத்தமாக அவர்கள் உன் முன் வைக்கும் ஒரே கேள்வி என்ன தெரியுமா? 'எங்களை வழிநடத்த யார் இருக்கிறார்கள்? நடக்கும் அநியாயத்துக்கு எதிராக ஒலிக்கும் எங்கள் குரல்களை ஒன்றுதிரட்டி முன்னெடுக்கும் உண்மையான தலைவன் எங்கே?'

இங்கே யாருமில்லை நண்பனே... உண்மையில் யாருமே இல்லை!

'எனது உடலைத் துருப்புச்சீட்டாக்கி, ஈழ மக்களுக்கான போராட்டத்தைத் தொடருங்கள்' என்பதுதான் உனது தியாகத்தின் முதல் செய்தி. தொழிலாளர் புரட்சி வென்றதன் சாட்சியாக லெனினின் உடலைப் பல வருடங்களாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தது ரஷ்யா. 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்த திலீபனின் உடலை ஈழம் முழுக்க ஊர்வலமாக எடுத்துச் சென்ற பின்பு, கிளர்ந்தது புது எழுச்சி. உனது உடலை மூன்று நாட்கள் பாதுகாத்து வைத்ததே இளைஞர்களின், மாணவர்களின் கோபாவேசம்தான். உன்னையும் உண்மையையும் உடனே புதைக்கத்தானே விரும்பும் அரசியலும் அதிகாரமும். உனது சொந்த ஊர் தூத்துக்குடி வரை ஊர்வலத்தை எடுத்துச் செல்லலாம் என்கிற யோசனையைக்கூட செயல்படுத்த முடியவில்லை. 'சட்டம் - ஒழுங்கு கெட்டுவிடும்' என உளவுத் துறை அரசுக்கு ஓலை அனுப்பியதாம். ஒரு பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் கெடாத 'சட்டம் - ஒழுங்கா' கெட்டுவிடப்போகிறது?

உனது இறுதி ஊர்வலத்தில் சாலையின் இருபுறமும் திரண்டு, வட சென்னைக் குடிசைவாசிகள் ஏற்றிய தீபங்களை 'அணையாத தீபமாக்க' வேண்டியது யார் பொறுப்பு?

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசியல் ரீதியான போராட்டங்களில் நிற்கும் இன உணர்வாளர்கள் நீங்கலாக தா.பாண்டியன், ராமதாஸ்,வைகோ,திருமாவளவன்

ஆகியோருக்கு உன் சார்பாக நன்றி. பசி, பட்டினி, ஊனம், சாவு எனத் தினம் தினம் நம் மக்கள் அழிந்து மடியும் அவலத்தை... உண்மை நிலவரத்தை மக்கள் சபைக்கு எடுத்துச் செல்லும் மிகச் சிலரில் இவர்களும் உண்டு. ஆனால், அரசு அதிகாரத்துக்குச் செவிசாய்ப்பதும், தேர்தல் அரசியலுக்கான 'கூட்டு அரசியல்' யோசனைகளில் தடுமாறிப் பின்வாங்குவதும் இவர்களின் பலவீனம் என்பதையும் நீ அறிவாய். பதவிக்கும் அரசியல் பாதுகாப்புக்கும் கிஞ்சித்தும் சாய்ந்திடாமல், நம் மக்களுக்காக எவரேனும் முழுதாக முன்வரும் காலம் எப்போது வருமோ... அன்றுதான் உனது உன்னத நோக்கங்களை நிறைவேற்றும் தகுதியும் உண்மையும் உரியவர்களுக்கு வரும்.

முதல்வரைப் பற்றி நீயே கடிதத்தில் 'தெளிவாக' எழுதியிருக்கிறாய். உனது இறுதி ஊர்வலத்தில் முதல் ஆளாக நின்றிருக்க வேண்டியது 'கல்லக்குடி போராளி'தானே. மனிதச் சங்கிலி, தீர்மானம், ராஜினாமா விளையாட்டு... என 'ஆறப் போட்டு, ஊறப் போட்டு' மறக்கடிக்கிற அரசியல் யுக்தியை இதிலுமா செயல்படுத்துவது? அவரது 'நிலை' நமக்குப் புரிகிறது முத்துக்குமார். 'முதல்வரே... பகிரங்கமாகச் சொல்லுங்கள். என்னால் முடியவில்லை என்று சொல்லுங்கள். நல்லது, நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.' - இதைத்தானே நீ சொல்ல வந்தாய்?

சினிமா ஆடியோ ரிலீஸ் விழாக்களில் எல்லாம் கூடிச் சிரிக்கும் குடும்பத்திலிருந்து ஒருவர்கூட வரவில்லையே நண்பா!

'ஈழத் தமிழர்களின் நிலையை முன்னிட்டு இந்த வருடம் என் பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம்' என அழகிரி சொன்னதுதான் 2009-ன் மெகா மெகா ஜோக். கலைஞர் டி.வி-யில் ஒரு காமெடி சேனல் ஆரம்பித்து, அதற்கு அழகிரியைப் பொறுப்பாளராகப் போடலாம்.

விஜயகாந்த் யாரென்றும் நீ சொல்லிவிட்டாய், நண்பனே... தமிழர்களுக்கான தைரியமும் தனிக் குரலும்தானே அவரது அடையாளமென நம்பினோம்! மகனுக்கு 'பிரபாகரன்' எனப் பெயர் வைத்திருக்கிறாரே என வியந்தோம். ஆனால், உனது அறைகூவலுக்கும் ஈழ மக்களின் துயர்துடைப்புக்கும் கூப்பிட்டால், 'ஷூட்டிங் காம்'... 'கூட்டணி மீட்டிங்காம்'..! சார் ரொம்ப பிஸி. 'லிஸ்ட்ல நம்மளை விட்ருவாய்ங்களோ' என உஷாராகி, 'நாடாளுமன்றத் தேர்தல் புறக் கணிப்பு' என 'போகாத' ஊருக்கு வழிகாட்டி, அறிக்கை அட்டைக் கத்தி சுழற்றுகிறார் கேப்டன். ஈழ மழையில் வேஷம் கலைந்து தெரிவதுதான் அவரது நிஜ முகமோ?

ஜெயலலிதாவைப் பற்றி உனக்கு நன்றாகவே தெரியும். 'உறுதியான நிலைப்பாடு' என்கிற பெயரால் இன உணர்வைக் கொச்சைப்படுத்தும் அவருக்கு, ஈழத் தமிழர்களாவது... எழவாவது?

காங்கிரஸ்காரர்களைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால், 'கருமாதி வீட்டில் இட்லிக்கு அடித்துக்கொள்கிறார்கள்.' 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக் கட்டிலைவிட்டு தமிழன் தன்னை ஒதுக்கியே வைத்திருக்கிற ஆத்திரம்கூட அவர்களுக்கு இருக்கலாம். அதற்காக, தமிழ் இனத்தையேவா ரத்தச் சேற்றில் மிதக்கவிட்டு வெறுப்பைத் தீர்த்துக்கொள்வது? பரவாயில்லை... இன்னும் 400 ஆண்டுகள் ஆனாலும் இங்கே இவர்களை நுழையவிடாமல் இவர்களே செய்துகொள்வார்கள்!

'உங்களுக்குத் தமிழன் அழிய வேண்டுமென்றால், எங்கள் பழங்கதைகளில் வருகிற மாதிரி ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்துகொள்கிறோம். எங்கள் சகோதரிகளையும் குழந்தைகளையும் விட்டுவிடுங்கள்' எனக் கதறினாய் நீ. ஆனால், நாம் அளித்த பதவிகளைக்கூட தூக்கி எறிய முடியாத தலைவர்களை அல்லவா நாம் பெற்றிருக்கிறோம்.

கவிதை ஒன்று படிக்கக் கிடைத்தது எனக்கு.

'அப்பாவித் தமிழர்கள் மீது

பேரினவாத ராணுவம் நடத்திய

கொலைவெறித் தாக்குதலில்

ஐம்பது பேர் பலியானார்கள்

ஐந்நூறு பேர் புலியானார்கள்!'

அது அங்கே... ஆனால், இங்கே?

இங்கேயும் மாற்றத்துக்கான ஒளித் தீற்றல்கள் தெரிகின்றன. ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழகத் தமிழர்களுக்காகவும், உலகளாவிப் புதிய வியூகங்களில் போராட்டத்தையும், வன்முறைக்கு எதிரான புரட்சியை முன்னெடுக்கவும் நமது இளைஞர்கள் தயாராகி இருக்கிறார்கள் நண்பனே.

சுயலாபங்களுக்காகப் பிற உயிரை மதிக்காத ஒவ்வொருவரும் நமக்கு எதிரியே. உனது சிந்தையை, கனவை, கோபத்தை, குரலை, உண்மையை, மனிதநேயத்தை முன்னெடுத்துச் செல்ல இளைஞர்களும் நல்ல இதயங்களும் உனது பெயரால் சேர்வார்கள்.

உன் குரலாகவே மாறி நம் மக்களுக்குச் சொல்கிறேன். இனி உண்ணாவிரதங்கள் வேண்டாம், தீக்குளிப்புகள் வேண்டாம். அதே நேரம், குமுறல்களைப் பூட்டி வைத்திருக்கவும் வேண்டாம் உங்கள் உள்ளத்துக்குள்ளேயே... வாருங்கள் வீதிக்கு, இணைந்து போராட!

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான ஒரு சகோதரன்

p118mn5.jpg

- ஆனந்த விகடன்

விகடனில் வந்த சிறந்த தமிழ் தேசிய கட்டுரை ஒன்று இது... சில பின்னூட்டல்களையும் இணைக்கின்றேன் (புலி எதிர்ப்பு பின்னூட்டல்களை இணைக்கவில்லை)

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

விகடனை தேச விரோத பத்திரிகை என்று குறிப்பிடிருக்கும் நண்பர்களே,காவிரிப்படுகையில் எலிக்கறி தின்ற விவசாய தொழிலாளர்களுக்கு இந்திய தேசியம் என்ன செய்தது?ராணுவத்தை அனுப்பி காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதா?400 தமிழக மீனவர்களை சுட்டுகொன்ற இலங்கை கடல்படைக்கு எதிராக இந்திய தேசியம் என்ன செய்தது?ஒரு கண்டன அறிக்கையை கூட எவனும் வெளியிடவில்லை.இன்று வரைக்கும் கண்ணில் படும் மீனவர்களை சுட்டுக்கொன்று கொண்டுதான் இருக்கிறது இலங்கை கடற்படை.எதற்கு எடுத்தாலும் தமிழர்களை தாக்குகிறார்களே அண்டை மாநிலத்தில் அதை இந்திய தேசியம் தடுத்ததுண்டா?தமிழ் தொலைக்காட்சிகளுக்கும் திரைப்படங்களுக்கும் ஒரு கூட்டம் தடை விதிக்கிறதே இதை இந்தியாவின் அரசியல் சட்டம் அனுமதிக்கிறதா?அப்படி அரசியல் சட்டம் அனுமதிக்காத பட்சத்தில் அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது இந்திய தேசியம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்த தேசிய கட்சிகள் உச்சநீதிமன்ற தீர்ப்பை எப்போதாவது மதித்தது உண்டா?ட்ரிப்யூனல் தீர்ப்பு வந்தததும் கர்நாடாகாவில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைத்ததா?ஒரு ஜனநாயகத்தின் மிகவும் உயர்ந்த அமைப்பு உச்சநீதிமன்றம்.அதன் தீர்ப்புகளையே குப்பை தொட்டியில் போட்டவர்கள் எல்லாம் இந்திய தேசியம் குறித்தும் இறையாண்மை குறித்தும் பேசுவது வெட்கக்கேடு

------------------------

நமக்கென்ன, நாம நல்லாதானே இருக்கோம், எவன் எப்படி போனால் என்ன, செத்து ஒழிஞ்சா தான் நமக்கு போட்டியிருக்காது என்கிற பொறாமை மனப்பான்மை கொண்டவர்களே ஈழத்தமிழர் ஆதரவை பழிப்பார்கள். எதற்கெடுத்தாலும் புலிகளை காரணம் காட்டுவார்கள். இதே வீராதி வீரர்களை கேட்கிறேன் - இசுலாமிய தீவிரவாதிகள் இதுவரை இந்தியர்களின் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து எத்துனை இந்தியர்கள் தீக்குளிப்பு நடத்தினார்கள்?? ஒருவர் கூட நடத்தவில்லை, காரணம் எல்லோரும் பாரத அரசு இதை கட்டுப்படுத்தும், நம்மை பாதுகாக்கும் என்கிற நம்பிக்கையில் அமைதியாக துக்கம் அனுசரித்து விட்டு தமது பனிகளை தொடருவார்கள். ஆனால் ஈழத்தமிழர் பிரச்சனையில் நிலைமை அது போல் இல்லை, ஈழத்தமிழ்ர்கள் கொல்லப்படுவதை பாரத அரசு தடுப்பதும் இல்லை, கட்டுப்படுத்துவதும் இல்லை. மாறாக ஈழத்தமிழர்களை சிங்கள அரசு இனப்படுகொலை செய்ய அனைத்து விதங்களிலும் சோனியா சர்க்கார் ஆதரவாக இருந்து ஊக்கம் அளிக்கிறது - இது போன்ற நிலையில் இன உணர்வு உள்ளவர்கள் சும்மா இருப்பார்களா? அவர்களை ஒடுக்க நினைப்பது எவ்விதத்தில் மனித உரிமையாகும்?? ராஜீவை இரண்டு தமிழர்கள் கொண்றார்கள் என்கிற காரணத்தால் மொத்த ஈழத்தமிழினத்தையும் அழிக்க நினைக்கும் "சோனியாவின் சபதத்தை" ஆதரிப்பது முறையா? தமிழனாய் பிறந்தவர், மனிதராய் வாழ்பவர் யாரும் ஒரு இனப்படுகொலையை ஆதரவிக்கவே மாட்டார்கள்.

------------------------------------------

திரு. குமார் அவர்களே. யாரும் இங்கே பிரபாகரனின் துதி பாடவில்லை. ஈழத்திலே செத்து மடியும் சக மனிதர்களுக்காக, தமிழுணர்வு வேண்டாம், உங்கள் மனதில் மனிதம் கொஞ்சமாவது மிச்சமிருந்தால் இந்திய அரசைத் தட்டிக்கேட்கச் சொல்லுங்கள். இலங்கை அரசு விடுதலைப்புலிகளின் மீது மட்டும் தான் போர் தொடுக்கிறது என்பது உண்மையானால், செஞ்சிலுவைச் சங்கத்தை வன்னியிலிருந்து எதற்காக வெளியேறச் சொல்ல வேண்டும்? அய்யா, ஈழத்தில் செத்து மடியும் தமிழர்களைக்கூட விட்டு விடுங்கள், நம் தமிழக மீனவர்களைச் சுட்டுத்தள்ளுகிறதே சிங்கள கடற்படை அதையாவது கேடகலாமே இந்திய அரசு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.