Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நினைத்ததும் நடப்பதும்

Featured Replies

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நினைத்ததும் நடப்பதும்

ஈழச்சிக்கலுக்காக தமிழகத் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும். ஈழச் சிக்கலுக்க மட்டுமல்ல, தமிழக உரிமைக்கும் இதுவே தீர்வு என்கிற கருத்தை, தொடர்ந்து மண்மொழி இதழில் எழுதி வந்ததை வாசகர்கள் பலரும் அறிவர். இந்த நிலையில் இப்படிப்பட்ட அமைப்பு தோற்றம் பெற்றதை வைத்து நண்பர்கள், வாசகர்கள் பலரும் தொலைபேசி, உரையாடல், மற்றும் குறுஞ்செய்தி வாயிலாகவும், நேர்ப் பேச்சிலும் பரவாயில்லை உங்கள் வேண்டுகோள் உருவேறி யிருக்கிறது என்கிற நிறைவையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் அவ்வளவு சீக்கிரம் மகிழ்ச்சி யடைந்து விட வேண்டாம். இன்னும் கடக்க வேண்டிய தடைகள் பல எவ்வளவோ இருக்கின்றன என்று அறிவுறுத்துவதாக இருக்கிறது நடந்தேறி வரும் நிகழ்வுகள்.

எனவே, இதுபற்றி வாசகர்கள் புரிதல்களுக்காகவும் தெளிவுக்காகவும் சில செய்திகள். ஈழத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தமிழகத்தில் விரிவான ஒரு பரந்துபட்ட ஈழ ஆதரவு தளத்தை உருவாக்க சில நடைமுறைகளை மண்மொழி 25 வது இதழ் பக்கம் 10இல், “ஈழச் சிக்கலும் தமிழர் கடமையும்” என்ற கட்டு ரையில் குறிப்பிட்டிருந்தோம்.

அதில் தற்போது ஈழத்துக்காக குரல் கொடுப்பவர்கள், (1) தனி ஈழக் கோரிக்கையை ஏற்பவர்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை (2) விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரிப்பவர்களாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்ற தெரிவித்திருந்தோம். அதாவது ஒரு பரந்து பட்ட, விரிந்த தளத்தை உருவாக்கும் முயற்சியில் அதற்கு மேற்கண்டுள்ள இரண்டும் தடையாக, முன்னிபந்தனை யாக ஆகிவிடக் கூடாது என்கிற நோக்கில் அந்த இரண்டிலும் மாறுபட்ட கருத்து இருந்தாலும் அதற்கும் அப்பாற்பட்ட மனிதாபிமானிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சனநாயகக் சிந்தனை யாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஈழ மக்களின் மீதான படுகொலையைத் தடுத்து நிறுத்தவேண்டும். இந்திய அரசைப் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரி யிருந்தோம்.

ஏறக்குறைய இதற்கு நெருக்க மாகத்தான் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்” தோற்றுவிக்கப் பட்டுள்ளது. 28-01-2009 அன்று அண்ணா நகர் ‘ராஜ் பேலஸ்’ விடுதியில் உருவாகிய இவ்வியக்கம், தன் முதல் கட்ட தொடக்க போராட்ட அறிவிப்பு செய்யும் நிகழ்ச்சியை 31-01-09 அன்று தி.நகர் சர்.டி.பி. தியாகராயர் அரங்கில் நடத்தியது. அன்றைய அறிவிப்பின் படிதான் பிப்ரவரி 4ஆம் நாள் இது இலங்கையின் சுதந்திர நாள் என்பதால் அந்த நாளில் இங்கு தமிழகத்தில் முழு அடைப்பு நடத்துவது, 7ஆம் நாள் மாலை 4 மணி முதல் 6 மணிவரை கறுப்புக் கொடி ஊர்வலம் நடத்துவது என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இந்தப் போராட்ட அறிவிப்புகளில் எவருக்கும் பெரிய அளவில் எந்த மாற்றுக் கருத்தும் இருந்ததாக, இருப்பதாகச் சொல்ல முடியாது. சிக்கல் இயக்க நடைமுறை யில்தான். இது என்ன என்பதை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

1. இயக்கத்தின் பெயர் : நாம் வேண்டுகோளில் முன் மொழிந்து, தற்போதும் எல்லோர் வாயிலும் இயல்பாக வெளிப்பட்டு வருவதும் “ஈழத்தமிழர்” என்கிற சொல்லாடல் தான். இதுபற்றி செய்தி வெறியிட்ட ஜுனியர் விகடன் தன் 4-2-09 தேதியிட்ட இதழில் அமைப்பு பற்றி குறிப்பிட்ட மூன்று இடங்களிலும் ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்றே குறிப்பிட்டுள்ளது. (பக். 8-9) அடுத்து 7-2-09 தேதியிட்ட இதழிலும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி எல்லோர் உள்ளத்திலும் பதிந்து போன வார்த்தை ‘ஈழத்தமிழர்’. செய்தியைப் படித்த பலரும் நம்பிக் கொண்டிருந்ததும் இந்தப் பெயரைத் தான். ஆனால் தொடக்க நாளான 31.01.09 அன்று மேடையில் கட்டியிருந்த பதாகையைப் பார்க்கும் போதுதான் தெரிந்தது, “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்” என்பது.

ஒரு அனுமானமாக யோசிப்போம். ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., இ.க.க. இதில் யார் “ஈழத்தமிழர்” என்கிற சொல்லாடலுக்கு எதிராக இருந்திருப்பார்கள். ஒரு வேளை அகில இந்தியக் கட்சியான இ.க.க., அப்புறம் பின்னால் வந்து சேர்ந்த பா.ஜ.க.வும் இதற்கு ஆட்சேபம் தெரிவித்திருக்கலாம். சரி, அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்ட இந்த சொல் ஒரு தடையாக இருக்க வேண்டாமே என்று கருதியும், அரசியல் உறவுகள் கருதியும், எப்படியானாலும் இன்றுவரை இலங்கை அரசமைப்புச் சட்டப்படி அவர்கள் அந்த நாட்டுக் குடிமக்கள் தானே, இலங்கைத் தமிழர்கள்தானே, தனி ஈழம் மலர்ந்த பிறகல்லவா அவர்கள் ஈழத் தமிழர்கள் என்கிற வாதம் கருதியும் அவர்கள் இந்தப் பெயரை வைத்ததாகக் கொள்வோம்.

ஒற்றுமை கருதி நாமும் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்வோம்.

2. கோரிக்கைகள் : தனி ஈழம் குறித்தோ, விடுதலைப் புலிகள் குறித்தோ ஆதரவாகவோ எதிராகவோ எவரும் பேச வேண்டாம் என்று முடிவெடுத்திருக் கிறார்களாம். சரி, இதுவும் கூட ஒரு பரந்துபட்ட ஒற்றுமை கருதிய ஏற்பாடாக, அப்படிப்பட்ட வாதங்களெல்லாம் இப்போது வேண்டாம், முதலில் போர் நிறுத்தம் கோருவோம், மற்றதைப் பிறகு பார்த்துக் கொள்வோம் என்கிற நோக்கில் முடிவு செய்யப்பட்டதாக ஏற்றுக் கொள்வோம்.

இவை இரண்டும் நமது வேண்டுகோளில் நாமே முன்வைத்தவை என்பதால் அவ்விரண்டையும் ஏற்றுக் கொள்வதில் நமக்குச் சிக்கல் இல்லை. உணர்வாளர்கள் பலருக்கும் சிக்கல் இருக்காது என்று நம்பலாம்.

ஆனால் 01-02-09 தமிழோசை நாளேட்டில் அறிவிக்கப்பட்ட 10 கட்டளைகள் படி, எந்தக் கட்சியைப் பற்றியும் எந்தத் தலைவரையும் பற்றியும் யாரும் பேசக் கூடாது, விமர்சிக்கக் கூடாது என வாய்ப்பூட்டு போடும் ஒரு நிபந்தனை உரு வாக்கப்பட்டிருக்கிறதே, அது எதற்கு? யாருக்காக இந்த நிபந்தனை. வி.சி.க., தி.மு.க.வோடு இருக்கிறது. பா.ம.க. காங்கிரசோடு இருக்கிறது. ஆகவே அவ்விரு கட்சிகள் பற்றி யாரும் பேசக்கூடாது என்று தொடங்கி பின் ம.தி.மு.க. அ.தி.மு.க.வோடு இருப்பதால், அது பற்றியும் பேசக் கூடாது என்று நீண்டு பிறகு யாருமே எந்தக் கட்சி பற்றியும், எந்தத் தலைவர்கள் பற்றியுமே பேசக் கூடாது என்று ஒரு முடிவு வந்திருக்கிறாற் போலிருக்கிறது என்று அனுமானிக்க வேண்டியிருக்கிறது.

ஓர் அமைப்பு என்றால் அது சில கோரிக்கைகளை வைத்துப் போராட முனைகிறது என்றால், எதிரி யார், நண்பர் யார் என்று அடையாளம் காட்டாமல், அவர்களை விமர்சிக்காமல் போராடுவது என்றால் எப்படி?

நாம் திரும்பத் திரும்பச் சொல்கிறோம். ஈழ மக்களுக்கு முதல் எதிரி சிங்கள அரசு, சிங்கள இராணுவம். இரண்டாவது எதிரி இந்திய அரசு, காங்கிரஸ். மூன்றாவது எதிரி தமிழக அரசு தி.மு.க. இவை மூன்றும் முக்கிய எதிரிகள். அதிகாரத்தில் உள்ள எதிரிகள். இந்த எதிரிப் பட்டியலில் ஜெய லலிதாவுக்கு இடமில்லையா என்று சிலர் கேட்கலாம். உண்டு. ஆனால் அவர் தற்போது அதிகாரத்தில் இல்லாத எதிரி. இப்போது அவர் ஈழத்துக்கு எதிராக நமது கோரிக்கைகளுக்கு எதிராக நேரடியாக எதுவும் செய்து விட முடியாது. அப்படியேதான் இ.க.க.மா.வும். அதனால் அவர்களை இம் மூவருக்கும் நிகரான எதிரிப் பட்டியலில் நிறுத்த முடியாது. நிறுத்த முடியாது என்பதால் அவர்களைப் பற்றிப் பேசவே கூடாது, விமர்சிக்கவே கூடாது என்பதல்ல, தாராளமாகப் பேசலாம். தாராளமாக விமர்சிக்கலாம். ஆனால் அது இந்த மூவருக்கும் நிகரான தாகவோ அல்லது இதில் மூன்றாம் எதிரியை மறைப்பதாக, அதைப் பின்னுக்குத் தள்ளுவதாகவோ அமைந்து விடக்கூடாது.

நிலைமை இப்படி யிருக்க, இதில் யாரைப் பற்றியுமே எதுவுமே பேசக் கூடாது என்றால் எப்படி? எதிரியை அடையாளம் காட்டாமல், விமர்சிக்காமல், மக்களைத் திரட்டுவதும், போராடுவதும், கோரிக்கையை வெல்வதும் எப்படி? வெறும் நிழல் சண்டை போட்டா, வெற்றிடத்தில் கத்தியைச் சுழற்றியா, யாரோடு சண்டை போடுகிறோம் என்று சண்டையிடும் மக்களுக்குத் தெரியாமல் எப்படி சண்டையிடுவது. எதிரி மக்களுக்குத் தெரிய வேண்டாமா?

தமிழகம் இவ்வளவு கொந்தளித்தும் அதைக் கிஞ்சித்தும் மதிக்காமல் கேவலப்படுத்தி, இழிவுபடுத்தும் தில்லி அரசை, அதற்குத் துணைபோய் தமிழர்களுக்குத் துரோகம் செய்தும் காட்டிக் கொடுத்தும் தமிழர்களுக்கு பாவ்லா காட்டியும் வெத்து வேட்டு வறட்டு வசனங்களால் போதையூட்டியும் தில்லிக்குக் கங்காணி வேலை பார்க்கும் கருணாநிதி அரசை மக்களுக்கு அடை யாளம் காட்டாமல், விமர்சிக்காமல் எப்படி ஈழப் பிரச்சினையைப் பேசுவது, கோரிக்கையை வென்றெடுப்பது?

நிச்சயம் முடியாது. இது நடக்கிற காரியம் அல்ல. இது போகாத ஊருக்கு வழி காட்டுவது. சரி, இந்த நிலைப்பாடு எங்கிருந்து வருகிறது. எல்லாம் கூட்டணி அரசியலிலிருந்து வருகிறது. அதாவது ஈழ மக்களுக்கென்று உருவாக்கப்பட்ட கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளாளுக்கு ஒரு கூட்டணியில் இருப்பதால், அந்தக் கூட்டணிக் கட்சிகள் மனம் நோகாமல் புண் படாமல் இருக்க வேண்டுமே என்பதற்காக வருகிறது. அதாவது யாருக்கும் வலிக்காமல் பிரச்சினைக்கு வயத்தியம் பார்க்க முயல்கிறது. நோய்க்குக் காரணமான அல்லது அதை ஊட்டி வளர்க்கும், அதற்கு ஊக்கம் கொடுக்கும் கிருமிகளை அழிக்காமல் நிவாரணம் தேட முயல்கிறது.

இப்படி இருந்தால் இது என்ன ஆகும்? இன்றோ நாளையோ நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் படலாம். அதனுடன் சேர்ந்தே சட்டமன்றத் தேர்தலையும் நடத்தி, ‘மைனாரிட்டி தி.மு.க.’ என்கிற இழி சொல்லையும் அழித்துக் கொள்ள கருணாநிதியும் முயற்சிக்கலாம்.

அப்படி ஒரு அறிவிப்பு வந்தால் என்ன ஆகும். அந்தந்த கட்சியும் அந்தந்த கூட்டணிக்குப் போய் தேர்தல் பிரச்சாரம் செய்யும். ஈழச் சிக்கல் என்னாகும்? இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ன ஆகும். முன்பு அம்போ ஆன தமிழ் பாதுகாப்பு இயக்கம் போல இதுவும் அம்போ என்று நடுத்தெருவில் நிற்கும். ஒன்றுமில்லை, திருமங்கலம் என்கிற ஒரு தொகுதி இடைத் தேர்தலின் போதே ஈழச்சிக்கல் பற்றிய கவனம் குறைந்து, அதில் ஒரு தேக்கம் ஏற்பட்ட நிலையில் நாடு தழுவிய பொதுத் தேர்தல் வந்தால், இந்த இயக்கம் என்னாகும் என்பது கேள்விக்குறி.

இந்தச் சிக்கல் எல்லாம் எதனால் வருகிறது? ஈழத்துக்கு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு ஒரு கூட்டணி, என்று வெவ்வேறு கூட்டணி வைப்பதனால் உருவாகிறது. ஆகவே இதற்கு மாற்றாக, எந்தச் சிக்கலும் எந்த முரணும் இல்லாத ஒரு ஆலோசனையை முன் வைக்க விரும்புகிறோம். அதாவது, தேர்தலுக்கு ஒரு கூட்டணி, ஈழத்துக்கு ஒரு கூட்டணி என்றில்லாமல், இரண்டுக்குமான ஒரே கூட்டணியை உருவாக்கக் கோரு கிறோம். இதன்படி இப்போதுள்ள “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமே” தேர்தலுக்கான கூட்டணியாகவும் அமைந்தால் எந்தச் சிக்கலும் இருக்காது. ஈழத்துக்காக எதைப் பேசுகிறோமோ அதையே தேர்தலுக்கும் பேசலாம். தேர்தலுக்குரிய பிரச்சினைகளுள் ஒன்றாக ஈழப் பிரச்சினையையும் ஆக்கி ஈழம் சார்ந்த கோரிக்கைகளையும் மக்கள் முன் வைத்து பிரச்சாரம் செய்யலாம். அதையே வாக்குறுதிகளில் ஒன்றாகவும் முன் வைக்கலாம்.ஈழ எதிர்ப்புக் கட்சிகளையும்அம்பலப்படுத்தி அவற்றைத் தனிமைப்படுத்தலாம். இதைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது மட்டுமல்ல. இதைத்தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் இ.த.பா.இ. தலைவர்கள் என்ற செய்கிறார்கள். வார்த்தைக்கு வார்த்தை இது ஈழத்துக்கான கூட்டணியே தவிர, தேர்தலுக்கான கூட்டணி அல்ல என்று தம் பிடித்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இப்படி சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். அவரவர்கள் சார்ந்துள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு சந்தேகம் வந்து விடக்கூடாது, வருத்தம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது ரெண்டு பெண்டாட்டிக் காரன் மாதிரி இரண்டு பேரையுமே திருப்திப் படுத்த இரண்டு குதிரை சவாரி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இது நடைமுறைக்கு ஆவாத, ஒவ்வாத கதை. தமிழீழத்துககு தமிழகத்துக்கு பலன் தராத பாதை. ஆகவே, இ.த.பா.இ. தலைவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் வி.சி.க, தி.மு.க. உறவை விட்டும், பா.ம.க. காங்கிரஸ் உறவை விட்டும் வெளியேற வேண்டும். இப்படி வந்தால் ம.தி.மு.க.வும் அ.தி.மு.க. உறவை விட்டு வெளியேறி வந்துவிடும். அதைத் தொடர்ந்து இ.க.க.வும் வரலாம். வரவேண்டும். இப்படி இந்த நான்கு கட்சிகளும் உறுதியாக நின்றால் இந்த நோக்கில் இருக்கிற சிறு கட்சிகளும் அமைப்புகளும் இதற்கு ஆதரவாக நிற்கும். எப்போதும் இம் முயற்சிகளுக்கு ஆதரவாக இருக்கிற திரு. பழ.நெடுமாறன் அவர்களும் தமிழீழ ஆதரவு அமைப்புகளும் உடன் நிற்கும். இந்த அணி வலுப்படும். தற்போது இந்த அணியில் பல்வேறு தமிழ் அமைப்புகள், சமய அமைப்புகள் எல்லாம் இருக்கின்றன. பா.ஜ.க.வும் இருக்கிறது. இவ் வமைப்புகள் எல்லாம் இருப்பது பற்றி நாம் குறை ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் எந்த ஒரு அமைப்பும், தான் செல்லும் திசை அறிந்து, தன் நோக்கம் அறிந்து, அதற்கான செயல் திட்டத்தோடு இயங்க வேண்டும்.

அப்படி அல்லாமல் பொத்தாம் பொதுவான ஆதரவு என்றால் உணர்வுள்ள எல்லோரும் தான் அதில் அங்கம் வகிப்பார்கள். ஆனால் இயக்கத்தின் நட வடிக்கைகளைப் பொறுத்து போகப் போகத்தான் எத்தனை பேர் இதில் உறுதி யாக நிற்கிறார்கள், யார் யார் தொடர்ந்து உடன் வருகிறார்கள், யார் யார் பின் தங்குகிறார்கள், முரண் படுகிறார்கள், எதிராகப் பேசுகிறார்கள் என்பது தெரிய வரும். ஆகவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தற்போதுள்ள இ.த.பா.இ. தலைவர்களுக்கு நாம் ஆலோசனைகளாகச் சொல்ல விரும்புவது.

1. ஈழத்துக்கு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு ஒரு கூட்டணி என்று முரண்பட்ட இரண்டு கூட்டணிகளை வைத்துக் கொள்ளாமல் இரண்டுக்கும் சேர்ந்து ஒரே கூட்டணியை உருவாக்க முயலுங்கள்.

2. இப்படி உருவாகும் கூட்டணி, ஈழ மக்கள் ஆதரவுக்கு குரல் கொடுக்கும் அதே வேளை, தமிழக உரிமைகளுக்கும் தமிழர் நலன்களுக்கும் குரல் கொடுக்கும், அதாவது தமிழீழ, தமிழக உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் ஒரே கூட்டணியாக இது அமையும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

3. இப்படி அமைய இந்த இயக்கம், தனக்கான குறைந்த பட்ச வேலைத் திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு இந்த வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொள்கிற அதற்காக செயல்பட முன் வருகிற, அமைப்புகளை மட்டும் இதில் இணைத்துக் கொண்டு ஒன்றாகச் செயல்பட முனையுங்கள். இப்படி முதலில் இந்த மூன்று அம்சங்களின் அடிப்படையில் ஒரு இயக்கத்தைத் தொடங்கினால் போகப் போக இதன் வளர்ச்சிப் போக்கில் கிடைக்கப் பெறும் அனுபவங்களை வைத்து மற்றதை முடிவு செய்து கொள்ளலாம்.

இதில் சிலருக்கு சில கேள்விகள் எழலாம். அதற்கான சில விளக்கங்கள்:

1. ஈழத்தமிழர் பாதுகாப்பென்று அமைப்பு தோற்றுவித்துக் கொண்டு தமிழகத் தமிழர் உரிமைக்கு குரல் கொடுக்க முடியுமா, சாத்தியப் படுமா என சிலர் வினவலாம். ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்பது தமிழகத் தமிழர் உரிமையோடு தொடர்புடையது. தமிழகத் தமிழர் உரிமை பல பறிபோய் இருப்பதுதான், அதாவது பேச்சுரிமை, எழுத்துரிமை, இல்லம் தேடி வந்தோர்க்கு அடைக்கலம் தந்து விருந்தோம்பும் உரிமை, சிகிச்சை அளிக்கும் உரிமை, பிற உதவிகள் செய்யும் உரிமை மறுக்கப் பட்டிருப்பதுதான் ஈழ மக்கள் படும் துயருக்கு பெரும் காரணம். இந்த உரிமைகள் மட்டும் தமிழக மக்களுக்கு இருந்திருந்தால் ஈழம் என்றோ மலர்ந்திருக்கும். எனவே இதை யெல்லாம் கருத்தில் கொண்டு கவனத்தில் கொண்டு நாம் செயல் பட வேண்டும். அதற்கு தற்போதுள்ள அமைப்பின் பெயரில் உள்ள இலங்கையை நீக்கிவிட்டு “தமிழர் பாதுகாப்பு இயக்கம்” என்பதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இது ஏற்கெனவே காணாமல் போன தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் போல தொலைந்து போய்விடாமல் உரிய திட்டம் வகுத்து செயல்படவேண்டும்.

2. இப்படி பெயர் வைத்தால் இது தமிழர் உரிமைக்கு மட்டும் தான் போராடுமா, மற்றவர்கள் உரிமைக்குப் போராடாதா என்று சிலர் கேட்கலாம். தமிழ் நாட்டில் எத்தனை சாதி இருந்தாலும், எத்தனை மதம் இருந்தாலும், எத்தனை அரசியல் கட்சிகள், அமைப்புகள் இருந்தாலும், பேசும் மொழியாலும், தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள் என்ற வகையிலும் தமிழர்கள். இதில் மொழிச் சிறுபான்மையினர் கொஞ்சம் பேர் இருக்கலாம். அது ஒரு சிறு எண்ணிக்கை அளவுதான். மற்றபடி பெருமளவும், அடிப் படையாகவும், தொன்று தொட்டும் இங்கு வாழ்பவர்கள் தமிழர்கள்தாம். எனவே இங்குள்ள தமிழருக்கும் அண்டையில் உள்ள ஈழத் தமிழர்க்கும் இத்துடன் உலகெங்கும் வாழும் தமிழர்க்கும் இந்த அமைப்பு குரல் கொடுக்கும்.

இதனால் தமிழர் அல்லாத எவரும் பாதிக்கப்பட்டால் இவ்வமைப்பு குரல் கொடுக்காது என்பதல்ல, மனித நேய அடிப்படையில் மனித உரிமை நோக்கில் உலகின் எந்த மூலையில் எந்த மனிதன் பாதிக்கப் பட்டாலும் இது குரல் கொடுக்கும் என்பதை இதன் நோக்கங்களில் ஒன்றாக வைத்துக் கொள்ளலாம். இதனடிப் படையில் விரிவான தளத்தில் இவ்வமைப்பு இயங்கலாம். ஆனால் அடிப்படை, முதன்மை தமிழர் நலம், தமிழர் உரிமைதான்.

ஆகவே இந்த அடிப்படையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்பதில் உள்ள இலங்கையை நீக்கி விட்டு “தமிழர் பாதுகாப்பு இயக்கம்” என்பதை மட்டும் வைத்து, தற்போது இன்னலுக்குள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு உடனடியாகவும், தொலை நோக்கில் உரிமை பறிக்கப்பட்டு அந்த உணர்வின்றி வாழும் தமிழனுக்கு இதனூடாக விழிப் பூட்டியும், தமிழீழ மற்றும் தமிழக மக்களின் நலன் காக்க, உரிமை காக்கப் போராட இவ்வமைப்பு வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.

சரி, இலக்குகளையும் செயல் திட்டங்களையும் சொல்லியாகி விட்டது. இனி இதற்கு யார் யார் இணங்குவார்கள், இதில் யார் வருவார்கள் என்று யோசிப்போம். முதலில் அடிப்படையாக ஐந்து அமைப்புகள், ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., இ.க.க., தமிழ், தமிழீழ ஆதரவு அமைப்புகள் ஆகியவை ஒன்று சேர்ந்து இயங்கலாம். இந்த ஐந்து அமைப்புகளும் ஏற்றுக் கொள்ளும் குறைந்த பட்ச செயல் திட்டத்துடன் இவர்கள் இந்த அமைப்பைத் தொடங்கி வழி நடத்தலாம். சரி, வெறும் தமிழர் பாதுகாப்பு இயக்கமாய் செயல்படுகிற வரை இது சரி. ஆனால் தேர்தலுக்கும் இதே அணிதான் என்றால் பிரச்சினை வராதா என்று சிலர் கேட்கலாம். நியாயம்தான். ஆனால் பிரச்சினை எதில் வரும்? கொள்கை கோட்பாட்டில் எழாது. ஏனென்றால், தமிழர் நலன் காக்கும் கொள்கையில் தான் ஏற்கெனவே எல்லோரும் ஒன்றுபட்டு நிற்கிறார்களே. ஆகவே அதில் பெரும் பாலும் பிரச்சினை வராது. இதில் மாற்றுக் கருத்து கொண்ட கட்சிகளுடன் கூட்டு வைத்தால்தான் சிக்கல் வரும். இது ஒத்த கருத்துள்ள கட்சிகளின் கூட்டணி என்பதால் அதுபோன்ற சிக்கல்கள் எழாது. ஆனால், பிரச்சினை யார் பெரிய கட்சி, யாருக்கு அதிக இடங்கள் என்று தொகுதியைப் பங்கிட்டுக் கொள்வதில்தான் சிக்கல் வரும்.

இது தவிர்க்க முடியாததுதான் என்றாலும், இதை அவ்வப்போது பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டியதுதான் தமிழர் நலன், தமிழர் உரிமை, தமிழர் ஒற்றுமை கருதி ஒருவருக் கொருவர் சற்று விட்டுக் கொடுத்துதான் அமைப்பைப் பாதுகாக்க வேண்டும்.

சரி, இதில் தேர்தலில் பங்கு கொள்ளாத அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சி சாராத தமிழர் அமைப்புகள் பங்கு என்ன என்று சிலர் கேட்கலாம்.

மேற்குறித்த 5 அமைப்புகள் உருவாக்கும் குறைந்தபட்ச வேலைத் திட்டத்தை பரிசீலித்து அதில் திருத்தங்களோ மாற்றங்களோ முன் மொழிந்து, அதில் ஒருமித்த கருத்து ஏற்படும் பட்சத்தில் இவை இவ்வமைப்பில் இணைந்து அங்கமாகச் செயல் படலாம்.

தேர்தல் வரும்போது அதில் பங்கேற்கலாம். பங்கேற்காமல் போகலாம். பிரச்சாரம் செய்யலாம், செய்யாமலும் போகலாம். வாக்களிக்கலாம், அளிக்கா மலும் போகலாம். இது அவரவர் உரிமை சார்ந்த சேதி. எனவே, இந்த உரிமை யில் எவரும் தலையிடாமல் இதில் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் வகையில் ஒரு ஏற்பாட்டுக்கு வந்து இதைச் செயல் படுத்தலாம்.

இப்படியெல்லாம் திட்ட வட்டமாகவும் தெளிவாகவும் பேசி ஒரு முடிவுக்கு வந்து, அதற்கு உரிய அளவில் இயக்கத்தை மறு சீரமைப்பு செய்து, இலக்குகளையும், அதற்கான வேலைத் திட்டத்தையும், உருவாக்கிக் கொண்டு செயல்பட்டால் தான், தமிழீழ, தமிழக மக்கள் நலன், உரிமை பாதுகாக்கப் படும்.

அல்லாமல் அப்போதைக்கப்போது ஒரு கூட்டணி, அப்போதைக் கப்போது ஒரு செயல்பாடு என்று ஏதோ அந்தந்த நேரத்துப் பிரச்சினைக்கு அந்தந்த நேரத் திற்கு ஒரு செயல்பாடு என்று இருந்தால் ஏதோ எல்லா பிரச்சினைக்கும் நாமும் மாரடித்தோம், ஒப்பாரி வைத்தோம் என்றுதான் பேர் இருக்குமே தவிர, ஒரு பிரச்சினையும் உருப்படியாகத் தீராது. தமிழர் வாழ்விலும் நலன் பிறக்காது. எனவே, இப்படி பேருக்கு வாழ்ந்து மறைவதற்காக பிறந்திருக்க வில்லை நாம்.மாறாக தமிழீழம் காத்து தமிழகஉரிமைகள் காத்து தமிழினத்தை பாது காக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற அப்படிப்பட்ட வரலாற்றைப் படைக்கப் பிறந்தவர்கள் நாம் என்பதைத் தமிழகத் தலைவர்கள் உணர வேண்டும். அந்த நோக்கில் ஒன்றுபட்டு செயல் திட்டம் வகுத்துத் தமிழினத் துக்காகப் போராட முன் வரவேண்டும்.

இராசேந்திர சோழன் எழுதிய கட்டுரை

நன்றி : கீற்று

http://changefortn.blogspot.com/2009/02/blog-post_23.html

மிக அருமை! கோடு போட்டு காட்டியிக்கிறார். புரிந்துகொள்ளுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.