Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டி.எஸ்.சேனநாயக்க ஆரம்பித்துவைத்த தமிழ்மண் அபகரிப்பு பணியை இடைவிடாது தொடரும் அரசுகள்

Featured Replies

டி.எஸ்.சேனநாயக்க ஆரம்பித்துவைத்த தமிழ்மண் அபகரிப்பு பணியை இடைவிடாது தொடரும் அரசுகள்

-வ.திருநாவுக்கரசு-

57 வருடங்களுக்கு முன் மறைந்தவராகிய இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி டி.எஸ். சேனநாயக்க தேசத்தின் தந்தை(Father of the nation) என வர்ணித்து வருடாவருடம் நினைவுகூர்ந்து கட்டுரைகளும் வெளியிடப்படுவதைக் காண்கிறோம். உண்மையில், அவர் தேசத்தின் பிரச்சினைகளின் தந்தை என்பதே மிகப் பொருத்தமானதாகும். இலங்கையில் முதலாவது முதலாளித்துவக் கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் ( ஐ.தே.க.) தலைவராய் விளங்கிய டி.எஸ். சேனநாயக்க விவசாயத் துறையில் அலாதியான ஆர்வம் கொண்டிருந்தவரென்று கருதப்படுவதுண்டு. நாடு 1948 இல் சுதந்திரமடைவதற்கு முன்பு அவர் விவசாய அமைச்சராயிருந்த காலப்பகுதியில் வெப்பவலய அபிவிருத்தி என்ற பெயரில் குடியேற்றத் திட்டங்களை ஆரம்பித்தவர். கல்லோயா, பதவியா போன்ற இடங்களிலேயே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை அவர் ஆரம்பித்தவர். குறிப்பாக கிழக்கில் காலாதிகாலமாகத் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்த தாயக நிலங்களை அபகரித்து அம்மக்களின் பொருளாதாரத்தைச் சிதைப்பதில் குறியாகச் செயற்பட்டவர். அத்தோடு, அவர்களின் சனத்தொகையையும் படிப்படியாகக் குறைத்து அவர்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தி அடக்கி ஒடுக்குவதற்கு வழி சமைத்தவர்.

தொடரும் நில அபகரிப்புகள்

டி.எஸ். ஆரம்பித்து வைத்த மேற்படி கைங்கரியத்தினை பின்பு பதவிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் தொடர்ந்து முன்னெடுத்துவந்தன . குறிப்பாக கிழக்கில் ஏறத்தாழ 25 தமிழ்க் கிராமங்கள் தொலைக்கப்பட்டுவிட்டன என்பதற்கான தரவுகள் ஏற்கனவே வெளிக்கொணரப்பட்டுள்ளன. அதேபோல், முஸ்லிம் மக்களின் நிலங்களும் தொடர்ந்து அபகரிக்கப்பட்டு வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி மற்றும் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா போன்ற முஸ்லிம் தலைவர்கள் ஆழ்ந்த விரக்தியும் கவலையும் தெரிவித்து வருவதைக் காணலாம்.

மேலும் கல்வி நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால், இன்று குறிப்பாக வடமேல் மாகாணத்தின் முஸ்லிம் மாணவர்கள் ஆளாக்கப்பட்டு வரும் புறக்கணிப்புகளைக் கண்டு மனம்புழுங்கிய நிலையில் , முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட வேதனையைக் காட்டிலும் பெரும்பான்மையினரின் கடும் இனவாதம் அதிகமானதென மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் சில மாதங்களுக்கு முன் கவலையடைந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

டி.எஸ். மகன் டட்லி மீது கொண்டிருந்த அவா

நிற்க, மீண்டும் டி.எஸ். சேனநாயக்க மீது பார்வையைச் செலுத்துவோமானால், தனது அரசியல் வாரிசாகவும் மகன் டட்லியைக் கொண்டு வருவதற்கு அவர் தீட்டிய திட்டத்தினைப் பார்ப்போம். இது வரலாற்று ரீதியாகப் பதிவாகியுள்ள விடயமாயினும் அதன் மீது இன்று மீள் பார்வை செலுத்துவது அவசியமாகிறது. ஏனென்றால் இதனை சகலரும் குறிப்பாக இளைய தலைமுறையினர் அறிந்து வைத்திருக்க வேண்டியதாகும். அதாவது, ஐ.தே.க. தலைமையிலான முதலாவது அரசாங்கத்தில் காலஞ்சென்ற எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சிரேஷ்ட அமைச்சராக இருந்தது மட்டுமல்லாது, சபை முதல்வராயும் விளங்கியவர். எனவே, அடுத்த பிரதமராய் அமர்த்தப்பட வேண்டியவர். ஆனால், தனக்குப் பின் தனயன் டட்லிக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டுமென்ற அவாவின் மேலீட்டினால் பண்டாரநாயக்கவை ஓரங்கட்டும் கைங்கரியத்தில் டி.எஸ். சேனநாயக்க தீவிரமாக ஈடுபட்டு ஊடகங்களையும் அதற்குத் தக்கவாறு பயன்படுத்தினார். அதற்கு உறுதுணையாகச் செயற்படுமாறு டி.எஸ். விடுத்த கோரிக்கையினை அன்றைய தேசாதிபதி சோல்பரி பிரபு ஏற்றுக்கொண்டு காய் களை நகர்த்தி வந்தார். ஆக , 1952 இல் டி.எஸ். குதிரை மேல் இருந்து வீழ்ந்து மரணத்தைத் தழுவியதும் டட்லி பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைத்தல்

விரக்தியுற்றிருந்த நிலையில் ஏற்கனவே ஐ.தே.க. விலிருந்து விலகியிருந்த பண்டாரநாயக்க 1951 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை (ஸ்ரீல.சு.க.) ஸ்தாபித்தார். அது தொடர்பாக வெளியிட்ட விஞ்ஞாபனத்தில் சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக்கப்படுமென உள்ளடக்கப்பட்டிருந்தது. அப்போது பண்டாரநாயக்கவுக்கு உறுதுணையாக இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தந்தையார் காலஞ்சென்ற டி.ஏ.ராஜபக்ஷ செயற்பட்டவர். பின்பு 1956 இல் பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்கு நாடு தயாராகிக் கொண்டிருந்த போது சிங்களம் மட்டுமே அரச கரும மொழியாக்கப்பட வேண்டுமென ஐ.தே.க. யோசனை வெளியிட்டிருந்தது. ஸ்ரீல.சு.க. வையும் பண்டாரநாயக்கவையும் தலையெடுக்க விடாமல் தடுப்பதற்கான தந்திரோபாயமாகவே ஐ.தே.க.வின் யோசனை முன்வைக்கப்பட்டதென்றால் பண்டாரநாயக்க அதற்கு பலியாகிவிட விரும்புவாரா? அவர் 1951 இல் வரைந்த கட்சி விஞ்ஞாபனத்தைக் காற்றில் பறக்கவிட்டு "" 24 மணித்தியாலத்தில் சிங்களம் மட்டும்' என்ற சுலோகத்தை முன்வைத்து பிரதமர் பதவியையும் எட்டிப்பிடித்துவிட்டார்.

ஐ.தே.க. ஸ்ரீல.சு.க. தமிழ் பேசும் மக்களை நசுக்குவதில் ஒருமித்த போக்கு

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் தக்கவைப்பதற்கும் ஐ.தே.க.வுக்கும் ஸ்ரீல.சு.க.வுக்கும் இடையில் கழுத்தறுப்புப் போட்டிகளும் காரசாரமான வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்று வந்தாலும் குறிப்பாகத் தமிழ் பேசும் மக்கள் மீது பாரபட்சங்கள் , புறக்கணிப்புகள் மற்றும் அடக்கு முறைகளைக் காலங்காலமாகக் கட்டவிழ்த்து விடுவதில் இரு கட்சிகளுக்குமிடையில் வேறுபாடொன்றும் இருக்கவில்லை. இரு கட்சிகளும் மேற்கொண்டு வந்த பேரினவாத அடக்குமுறைக் கொள்கைகளே இறுதியில் இந்தக் கொடிய யுத்தத்திற்கே இட்டுச் சென்றன. அசைக்க முடியாத இந்த வரலாற்றினை முற்றிலும் புறம் தள்ளியுள்ள நிலையிலேயே இவ்விரு கட்சிகளும் மிக அடாவடித்தனமாக செயற்பட்டு வந்துள்ளன. 25 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்திற்கும் அகதி வாழ்க்கைக்கும் தள்ளப்பட்டதற்கு இரு ஆளும் கட்சிகளுமே பொறுப்பு என்பது கிஞ்சித்தும் மறுக்கப்படக் கூடியதல்ல.

அரசியல் உறுதியில்லாத ஆளும் கட்சிகள்

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான அரசியல் உறுதியோ,ஆற்றலோ , அக்கறையோ எதுவுமின்றி இனவாத இராணுவ முனைப்பிலேயே இரு கட்சிகளும் ஈடுபட்டு வந்துள்ள நிலையில், நாடு பொருளாதார ரீதியிலும் பலத்த பின்னடைவைக் கண்டுள்ளது. இன்று உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக இலங்கையின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அரசாங்கம் இதனை மூடி மறைத்து விடலாமென பகீரதப் பிரயத்தனம் செய்து வந்துள்ளதாயினும், சிலரைப் பலகாலம், பலரைச் சிலகாலம் ஏமாற்றலாமென்றாலும், எல்லாரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாதென்ற நிலையில் தான், நிலைமையை மேலும் இருட்டடிப்புச் செய்ய முடியாதென்ற நிலையில் தான் சர்வதேச நாணய நிதியத்திடம் (I.M.F.) 1.9 பில்லியன் கடன் கோரப்பட்டுள்ளது. நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான பெருவாரியான வளங்களைக் கொடிய யுத்தம் விழுங்கிக் கொண்டிருப்பதால் தான் இந்த வங்குரோத்து நிலை ஏற்பட்டுள்ளது.

வன்னியில் யுத்தம் முடிவுக்கு வந்து கொண்டிருப்பதனால் விடுதலைப்புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு பயங்கரவாதம் நாட்டிலிருந்து முற்றாகத் துடைத்தெறியப்படும் நாள் நெருங்கி விட்டதாக அரசாங்கம் பறைசாற்றி வருகிறது. அதே நேரத்தில், சமாதானமும் எட்டாக்கனியாகி வருவதோடு, இன்று அரச கட்டுப்பாடற்ற வன்னிப் பகுதியிலுள்ள மக்கள் என்றாலும் சரி, அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றுள்ள மக்களென்றாலும் சரி சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறுபட்ட துன்ப துயரங்கள், அவலங்கள் மற்றும் நரக வேதனைகள் சொல்லும் தரமற்றவை. தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை அல்ல. நம்பகத்தன்மையான அரசியல் தீர்வுத் திட்டத்தினை முன்வைத்து ஏற்புடைய அரசியல் தீர்வு காண்பது தான் அவசியமானதென சர்வதேச மட்டங்களிலிருந்து அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றனவாயினும் அரசாங்கம் அவற்றுக்கெல்லாம் செவிமடுப்பதாயில்லை. மறு புறத்தில் தனது ஆட்சிக் காலத்தில் யுத்தத்தை நேரடியாக ஆரம்பித்து வைத்த ஐ.தே.க. விடமும் ஆக்கபூர்வமான அரசியல் தீர்வுத் திட்டம் இல்லாத நிலையில், ஆயுதப் படையினருக்குப் பாராட்டுத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் அதாவது, 2004 டிசம்பரில் இடம்பெற்ற கடல்கோள் பேரழிவினை அடுத்து சமாதான முயற்சிக்கு இட்டுச் செல்லக் கூடியதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்பேரழிவிலிருந்து மீள்வதற்கென உருவாக்குவதற்கென உத்தேசிக்கப்பட்டிருந்த P-Toms என அழைக்கப்பட்ட "கடல்கோள் அனர்த்தத்திற்குப் பின்னரான புனர் நிர்மாணக் கட்டமைப்பு' பொறிமுறை அதற்கு வழி சமைத்திருக்கும். ஆனால், சிங்கள கடும் போக்காளர்களின் தலையீடு காரணமாக அது நீதித்துறையினால் நிறுத்தப்பப்பட்டது.அந்த பேரழிவிலிருந்து மீள்வதற்கு சர்வதேச சமூகத்தினால் வழங்கப்பட்ட பெருந்தொகையான பணம் இதுவரை பயன்படுத்தப்படாமல் உள்ளதென அண்மையில் அரசாங்கத்தின் சார்பில் பிரதம கொறடா அமைச்சர் தினேஸ் குணவர்தன அண்மையில் பாராளுமன்றத்தில் அறிவித்தார். கடல் கோள் ஆழிப் பேரலை காரணமாக வடக்கு கிழக்கு, அதிலும் கிழக்கில் அம்பாறை மாவட்டமே படு மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். வடக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னரே வைப்பிலுள்ள பணம் பயன்படுத்தப்பட்டு புனர் நிர்மாண வேலைகள் மேற்கொள்ளப்படுமெனவும் தினேஸ் குணவர்தன அறிவித்திருந்தார். அன்றைய பேராபத்துக் காரணமாக சர்வதேச மக்கள் உடனடியாக வாரி வழங்கிய பணம், தேங்கிக் கிடக்கிறதென்றால் அதனை மனித நேயமற்ற அப்பட்டமான அலட்சிய மனோபாவம் என்றழைக்காமல் வேறென்ன என்று கூற முடியும்?

தேர்தல்கள் திருவிழாக் கோலத்தில்

இதனிடையில் தேர்தல்கள் திருவிழாக் கோலத்தில் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகளையும் கவர்ந்தெடுப்பதில் ஸ்ரீல.சு.க., ஐ.தே.க. இரு கட்சிகளும் முயன்று வருவது தெரிந்ததே. காலங் காலமாக எல்லா அரசாங்கங்களாலும், ஏமாற்றப்பட்டு விட்டோம் என மனம் வருந்தும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வும் திருப்பு முனையும் நிச்சயமாக அவசியமாகும். எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தல் அதற்கானதொரு அரிய சந்தர்ப்பமாய் அமையட்டும். ஒட்டு மொத்தமாக, பெரிய ஆளும் கட்சிகள் இரண்டும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக அல்லது ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதில் எதுவித ஐயமும் இருக்க வேண்டியதில்லை. இக் கட்சிகளோடு இணைந்து போட்டியிடும் தமிழ்க் கட்சிகள் விரிக்கும் சந்தர்ப்பவாத வலையில் மக்கள் வீழ்ந்து விடக் கூடாது என்பதும் உற்று நோக்கப்பட வேண்டிய விடயமாகும்.

எனவே, தான் தமிழ், முஸ்லிம் மக்களும் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் சிங்கள உழைக்கும் மக்களும் நம்பகத் தன்மையான இடதுசாரி சக்திகளைப் பலப்படுத்தி அதனூடாக மூன்றாவது அணியொன்றினைக் கட்டியெழுப்புவதற்கு முன்வர வேண்டும். அதற்கான அத்திவாரமாக மேல் மாகாண சபைத் தேர்தல் நோக்கப்பட வேண்டும். அழித்தொழிக்கும் நாசகார பேரினவாத முதலாளித்துவ கட்சிகளை இனிமேலும் நம்பி ஏமாறக்கூடாது.

http://www.thinakkural.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.