Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எல்லை மீறும் சிரீ லங்கா தூதரகம்- ( நக்கீரன்)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடரின் அண்மைய பதிவு----

அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அவர்கள் நக்கீரனுக்காக எழுதியது

ஒருவகையில் இருளின் காலமே நமக்கு நம்பிக்கையாகவும் ஆயிற்று. நக்கீரன் வாசகர்கள் அத்தகு நம்பிக்கையின் குறியீடாக மாறியதையும் வரலாற்றிற்காய் இங்கு பதிவு செய்ய விழைகிறேன்.

ஈரோட்டிலிருந்து ஒரு தாய். நேரில் பார்த்ததில்லை. தொலை பேசினார். நக்கீரன் வாசகர், ""ஈழத்து அகதி, அனாதைக் குழந்தை கள் 20 பேரைத் தாருங்கள், எல்லாம் நான் பொறுப்பேற்கிறேன். மருத்துவம், பொறியியல், வர்த்தக மேலாண்மை... எந்தப் படிப்பென் றாலும் நான் படிக்க வைக்கிறேன்'' என்றார். இந்த உரையாடல் நிகழ்ந்தது மே மாத இறுதியில். மீண்டும் தளபதி பால்ராஜ் அவர்களைப் படித்துவிட்டுப் பேசினார்.

இரு வாரங்களுக்கு முன். திருச்சியிலிருந்து வந்திறங்கி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தேன். மஞ்சள் மீட்டரும் கறுப்பு நிறமுமான வாடகை வாகன ஓட்டுநர் ஒருவர் வாகனத்தை விட்டிறங்கி ஓடோடி வந்து வணக்கம் சொன்னார். ""தலைவர் இருக்கிறாரில்லெ சார்...?'' என்று படபடப்புடன் கேட்டார். நான் பதில் ஏதும் கூறாது நின்றேன். ""சார்... என்னாலெ வாகனம் ஓட்ட முடியும், வாரம் ஒருநாள் தர முடியும், மாதம் செலவுகள் போக 300 முதல் 500 வரை மிச்சம் பிடித்து தர முடியும்'' என்றார். உலகினர் கண்களுக்கு ஏழையாகவும் உணர்வில் மிக்க செல்வம் உடையவராகவும் என் முன் நின்ற இந்த மனிதரின் பெயரைக் கேட்குமுன்னரே காவலர் விசில் அடித்ததால் வாகனத்தை எடுக்க ஓடிவிட்டார்.

நெல்லையிலிருந்தும் ஒரு தாய். ஹோமியோபதி மருத்துவர். ""சோனியாகாந்தியும் ஒரு தாய்தானே. 100 பெண்கள் நாங்கள் புதுடில்லி வரை நடந்தே போய் அவரது பாதங்களில் விழுகிறோம். தண்டித்தது போதும், தாயாகிய நீங்கள் எம் தமிழ் உறவுகளை இன அழித்தலிலிருந்து காப்பாற்றுங்கள் என மன்றாடுவோம்'' என்றார்.

நல்லசிவன் என்ற உணர்வாளர் நெய்வேலி புத்தக விழாவில் நக்கீரன் வெளியிட்ட "வீரம் விளைந்த ஈழம்' படித்துவிட்டுப் பேசினார். நிறைய படிக்கிறவர், தெளிவான பார்வை களும், உறுதியான நிலைப்பாடு களும் உடையவரென்பதும் தெரிந்தது. ""100 புத்தகங்கள் வாங்கி அரசுக் கல்லூரிகளின் தமிழ்த் துறைகளுக்கு அனுப்பி வையுங்கள். அச்செலவினை நான் ஏற்றுக் கொள்கிறேன்'' என்றார்.

"வீரம் விளைந்த ஈழம்' படித்துவிட்டு சராசரி தினம் பத்து பேராவது கடிதம் எழுது கின்றனர். எல்லா கடிதங்களிலும் இரண்டு விஷயங்கள் இழையோடி நிற்கின்றன. ஏழு கோடி தமிழர்கள் நாம் கையாலாகாதவர்களாய் இருந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வும், ஏதேனும் செய்ய வேண்டுமென்ற அங்கலாய்ப்பும்.

சென்னையிலுள்ள ஸ்ரீலங்காவின் தூதரக அதிகாரிகளும் கூட மிகுந்த உணர்வுக் கொந்தளிப்பிலும் அங்கலாய்ப்பிலும் இருப்பதாக பத்திரிகைத்துறை நண்பர் ஒருவர் கவலையுடன் கூறினார். ""சற்றேறக்குறைய இங்கு எல்லோரையும் சரிக்கட்டி விட்டோம், நக்கீரனையும் இந்த ஜெகத் கஸ்பரையும் மட்டும் வழிக்குக் கொண்டுவர முடியவில்லை''யென்ற கோபமாம். ""குறிவைத்து அடித்தால்தான் சரிப்பட்டு வருவார்கள்'' என்று சிலுப்பியதாகவும் சொன்னார்.

அவர்களது வெற்றிப் பிரகடனம் உண்மைதான். சற்றேறக்குறைய இங்கு முக்கியமான பலரையும் அவர்கள் சரிக் கட்டி விட்டார்கள்தான். கடந்த பொங்கல் விழா காலத்தில் லி மெரிடியன் ஐந்து நட்சத்திர விடுதியில் பத்திரிகை துறை யினருக்காய் ஸ்ரீலங்கா தூதரகம் உல்லாச விருந்து வைத்ததும், 24 பேருக்கு தலா ஐந்து சவரன் தங்கச் சங்கிலி வழங்கியதும், தொடர்ந்து மூன்று நாளிதழ்களுக்கு தலா முப்பது "லேப்-டாப்' கம்ப்யூட்டர்கள் அன்பளிப்பாக அனுப்பியதும், தமிழுணர்வின் பாரம்பரியம் கொண்ட ஒரே ஒரு நாளிதழ் மட்டும் அக்கம்ப்யூட்டர்களை ஸ்ரீலங்கா தூதரகத்திற்கே திருப்பி அனுப்பியதும்... இன்னும் யார் யாருக்கு என்னென்ன "சப்ளை அண்ட் சர்வீஸ்' நடந்ததென்பதும் நமக்குத் தெரியும். இவையும் தெரியும். இதற்கு மேலும் தெரியும்.

"மன்னவனும், நீயோ, வளநாடும் உனதோ?' என்று மதர்த்த கம்பனும், "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என நிமிர்ந்து நின்ற நக்கீரனும், "தேரா மன்னா செப்புவது உடையேன்' என்று உண்மை முழங்கி காற்சிலம்பை வீசிய கண்ணகியும், "நாம் ஆர்க்கும் குடி அல்லோம்' என்று முழங்கிய நாயன்மார்களும் பெருமையுடன் உலவித் திரிந்த இப்புனித பூமியில் இன அழித்தலுக்குத் துணை நின்று கூலி பெறும் கூட்டமொன்று வாழ்வது காண நெஞ்சு பொறுக்குதில்லை தான். அங்கு துடித்துச் சிதறிய தமிழ் உயிர்களின் மரணப் பழியில் இவர்களுக்கும் தூரத்துப் பங்கு உண்டுதான். துரோகி கள், இழிநிலையோர் ஆனாலும் அவர்கள் இந்நிலத்தவர்கள்- நம் தமிழகத்தவர்கள்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்ரீலங்கா தூதரகம் தனது எல்லைகளை நம் நிலத்தில் தங்கு தடையின்றி மீறி வருவது மட்டுமல்ல -"இங்கு எதுவும் செய்யலாம், எவரும் கேட்கமாட்டார்கள்' என்ற ஆணவத் திமிரோடு தங்களை நடத்திக் கொண்டு வருகிறது.

நாடுகளுக்கிடையேயான உறவு ஒழுங்குகளின்படி அவர்கள் இந்திய அரசின் விருந்தினர்களாக இருக்கலாம். ஆனால் தமிழர்களாகிய நம்மைப் பொறுத்தவரை இன அழித்தல் செய்த ஒரு கொலைகாரக் கும்பலின் பிரதிநிதிகள். இன்னும் 3 லட்சம் தமிழ் மக்களை திறந்த வெளிச் சிறையில் அடைத்து அணு அணுவாகக் கொன்றுவிடும் இரக்கமற்ற ஓர் கூட்டத்தின் ஊதுகுழல்கள். சாமிகளும், ஞானிகளும், ராமர்களும் அவர்களது பந்தியில் அமர்ந்து களிக்கட்டும். தமிழர் களது அழிவில் எப்போதும் களிப்பவர் கள்தான் அவர்கள். ஆனால் மானமுள்ள தமிழர்கள் நிறையபேர் இங்கு மிச்சம் இருக்கிறார்கள் என்பதை மட்டும் அவர்கள் நினைவில் கொள்ளட்டும்.

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி. எம்., சிறுத்தைகள், ச.ம.க., புதிய தமிழகம் என எல்லா கட்சிகளினது தொண்டர் களுமே துன்புறும் ஈழத் தமிழனுக்காய் இதயத்தில் இரத்தம் சிந்தும் ஈரத்தமிழர் களாகவே இருக்கிறார்கள். கடந்த புதன் கிழமையன்று வணக்கத்திற்குரிய மேயர் அவர்களை சந்திக்க மாநகராட்சி அலு வலகம் சென்றிருந்தேன். அமர்வு அரங்கில் கூடிநின்றோர் பலர் தி.மு.க.வின் கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்கள். எல்லோரும் நக்கீரன் படிப்பதாகக் கூறினார்கள். தமது உணர்வுகளை வெளிப்படுத்திய பாங்கு உண்மையிலேயே நெகிழ்ச்சி தந்தது. இப்போதைய போப்பாண்டவருக்கு முன்பிருந்த இரண்டாம் ஜான்பால் ஒரு முறை குறிப்பிட்டார், ""மனித இதயங்கள் தரையில்லாத பாதாளங்கள் போல. எழுச் சிக் குமுறல்கள் எரிமலையாய் எப்போது வெடிக்குமென எவருக்கும் தெரியாது'' என்று.

மதுரையில் கடந்த சனிக்கிழமை நாம் தமிழர் இயக்க கூட்டம் நடந்தது. "முட்கம்பிகளுக்குள் உயிர்வாடும் மூன்று லட்சம் தமிழர்களை விடுதலை செய்' என்று இயக்குநர் சீமான் முழங்கினார். இருபதாயிரத்திற்கும் மேலான இளைஞர்கள் உணர்வுப் பிழம்பாய் திரண்டிருந்தார்கள்.

கரம் பற்றும் நக்கீரன் வாசகர்கள் எல்லோரும் கேட்பது இரண்டு விஷயங்கள். முதலாவது தலைவரைப் பற்றியது. இரண்டாவது ""ஈழம் இனி சாத்தியமா?'' என்ற கேள்வி. நான் சொல்வது -இன்றில்லா விட்டாலும் என்றேனும் ஒருநாள் நிச்சயம் ஈழம் மலரும். ஆனால் அதற்கு சில விஷயங்கள் நடந்தாக வேண்டும். அதில் முதலாவது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும், பாதுகாப்புக் கொள்கையும் மாறவேண்டும். அது நடந்துவிட்டதென்றால் உலக அளவில் ஈழத்திற்கு ஆதரவான கருத்துருவாக்கம் வேகம் பெறும். வேலுப்பிள்ளை பிரபாகரன் இதனைத் தெளிவாக அறிந்திருந்தார். எனது நேர்காண லின் நிறைவாக அவர் குறிப்பிட்டவை என்றும் மறக்க முடியாதவை: ""இந்தியா வேகமாக வளர்ந்துவரும் ஒரு பிராந்திய வல்லரசென்ப தும், இந்தியாவைக் கடந்து இப்பகுதியில் உலக ஒழுங்கு பெரிதாக மாறுபட்டு இயங்கா தென்பதும் எமக்குத் தெரியும். இந்திய அமைதிப்படையின் வருகையும் தொடர்ந்த பல துன்பியல் நிகழ்வுகளும் எமது உறவுகளில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டதோடு, எமது இறுதி இலக்கான ஈழம் அமைவதற்கும் சவாலாக நிற்கிறது. இந்நிலையை மாற்ற நேர்மையோடும் உளப்பூர்வமாகவும் விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது'' என்றார்.

ஆம், இந்தியாவின் நிலைப்பாடு முதலில் மாறவேண்டும். எப்படி மாறும்? இது விஷயத்தில் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு கருத்தில் இணைவது அதற்கான முதற்படி. குறைந்தபட்ச கோரிக்கை யாக 3 லட்சம் மக்களும் உடனடியாக விடுவிக்கப்பட்டு தங்கள் வாழ் விடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். நில உரிமை -கல்வி உரிமை -பண்பாட்டு, மொழி உரிமை -சட்ட -ஒழுங்கு உரிமை ஆகியவற்றை உறுதி செய்யும் கூட்டாட்சி அரசியல் சட்ட ஏற்பாடு ஆகியவற்றையேனும் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நடுவணரசுக்கு முன்வைக்கவேண்டும். இத்துணை பேரழிவு நடந்துவிட்ட பின்னரும் ஒருவரையொருவர் இழித்தும் பழித்தும் அரசியல் நடத்தாமல் இணைந்து கோரிக்கை வைத்தால் நடுவணரசு கேட்கும், கேட்டுத்தான் ஆகவேண்டும்.

இரண்டு வாரங்களுக்கு முன் ஞானி என்ற நாடகப் பேர்வழி வாரப்பத்திரிகையொன்றில் ""இந்தவார மர்மம்'' என தலைப்பிட்டு ""விடுதலைப்புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் தீவிர கொள்கை பிரச்சாரச் செயலாளராக செயல்படும் பாதிரி கெஜத்கஸ்பரும், புலி எதிர்ப்பை கொள்கை யாகக் கொண்ட மத்திய ஆளுங்கட்சியான காங்கிரஸ் பிரமுகர் கார்த்திசிதம்பரமும் கஸ்பரின் தமிழ் மையத்தின் நிதிவசூல் நெடும் ஓட்டத்தில் இணைந்து செயல்படுவதன் மர்மம் என்ன?'' என்று கேட்டிருந்தார்.

முற்போக்கு முகம் தரித்து மிக நீண்ட காலம் தமிழர்களை மோசடி செய்த இவருக்கு நான் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் கார்த்தி சிதம்பரம் எனக்கு நண்பர் தான், அவரது தந்தை எனது மதிப்பிற் குரியவர்தான்.

அக்கட்சியின் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் போன்றோரும் என் மிகுந்த மதிப்பிற்குரியவர்கள்தான். ஒளிந்து மறைப்பதும் நுட்பமாக இயங்குவதும் மோசடிக்காரர்களின் வேலை. நாம் அதைச் செய்யவேண்டிய தில்லை. நமக்கு இன்று தேவை எல்லோரது நட்பும், ஞானியைப்போன்ற சூத்திரதாரிகளின் கூடாநட்பை தவிர்த்து அத்தனைக் கட்சித் தலைவர்களும் ஈழத்தமிழருக்காய் இணையும் நாள் விரைவாக வர உழைப்பது நம் யாவரதும் கடமை.

ஈழம் மலர வேறென்ன விஷயங்கள் நடக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போராட்டத்தினை மக்கள் மயப்படுத்துவதில் வெகுஜனத்துறையின் பங்கு தலையானது, அந்தப்பணியில் தமிழரிற்காகப் போராடும் தலை சிறந்த போராளியாக கஸ்பார் அடிகளார் விளங்குகிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லேப்டாப் களை திருப்பியனுப்பிய ஊடகவியலாளர்கள் நாம் தமிழர் என்று பறைசாற்றிய சி.பா.ஆதித்தனாரின் ஊடகம் எண்டு நான் நினைக்கிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.