Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரத்தக் கறைபடிந்த கரங்களைக் குலுக்கியவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரத்தக் கறைபடிந்த கரங்களைக் குலுக்கியவர்கள்

பழ. நெடுமாறன்

2009-ம் ஆண்டு மே 19-ம் தேதி விடுதலைப் புலிகளை முற்றிலுமாக முறியடித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. போரின் இறுதி மூன்று நாள்களில் ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். நான்காம் கட்ட ஈழப்போரில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள். போர்ப் பகுதியில் இருந்து உயிர் தப்பிய 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை நலன்புரி முகாம்கள் என்ற பெயரில் முள்வேலி முகாம்களில் ராணுவப் பாதுகாப்போடு சிங்கள அரசு அடைத்தது.

போர் முடிந்து ஐந்து மாத காலத்துக்கு மேலாகியும் அந்த மக்கள் விடுவிக்கப்பட்டு. தங்கள் ஊர்களுக்கும் வீடுகளுக்கும் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. முகாம்களில் போதுமான தங்குமிடம், சுகாதார வசதிகள், உணவு, மருந்து ஆகிய எல்லாமே பற்றாக்குறையாக இருந்தது. இதன் விளைவாக தினமும் 200 முதல் 300 பேர் வரை மடிந்துகொண்டிருக்கின்றனர்.

இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களை வதைக்க ஹிட்லர் அமைத்த முகாம்களைவிட ராஜபட்ச அமைத்த முகாம்கள் மிகமோசமானவை என உலக நாடுகள் குற்றம் சாட்டின. இந்த முகாமில் இருந்த மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகள், இடப்பெயர்வு, வாழ்வாதாரம், கூடிப்பேசும் உரிமை, குறைகளை முறையிடும் உரிமை ஆகிய எல்லாமே மறுக்கப்பட்டன.

ஐ.நா. அமைப்புகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், பிற தொண்டு நிறுவனங்கள் ஆகியவையும் இந்த மக்களுக்கு உதவுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தியா உள்பட உலக நாடுகள் அளித்த உதவியில் ஒரு சிறு பங்குகூட இந்த மக்களுக்குக் கிடைக்கவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் இந்த முகாம்களில் உள்ள சீர்கேடான நிலைமை குறித்து மிகுந்த கவலையுடன் எச்சரித்தன.

அந்த மக்களை விடுவித்து அவர்களது ஊர்களுக்குத் திரும்ப அனுமதிக்கும்படி வலியுறுத்தின. ஆனால் ராஜபட்சவின் கேளாக் காதுக்கு இந்தக் குரல் எட்டவில்லை. இந்த நிலைமையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு ஒன்று முகாம்களை பார்வையிட அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டது.

இந்தக் கோரிக்கையைத் திசை திருப்பவும், இலங்கை முகாம்களில் நடக்கும் கொடுமைகளை மறைக்கவும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி தந்திரத் திட்டம் வகுத்தார். அதற்கிணங்க காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அனுப்புவதாக அறிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஏன் சேர்க்கவில்லை என்ற கேள்வி எழுந்தபோது, இலங்கை அதிபர் ராஜபட்சவிடமிருந்து தனக்கு வந்த அழைப்பின் அடிப்படையிலேயே இந்தக் குழுவை அனுப்புவதாக முதலமைச்சர் கூறினார். வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் இந்திய அரசை அணுகி அனுமதி பெற்று அவர்கள் போகட்டும் என எகத்தாளம் செய்தார்.

இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற முறையில் ராஜபட்ச, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு அனுப்பவில்லை. இலங்கை அரசின் அதிபர் என்ற முறையில் தமிழக முதலமைச்சருக்கு அவர் அழைப்பு அனுப்பினார். இது தனிப்பட்ட அழைப்பு அல்ல. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான அழைப்பாகும்.

முதலமைச்சர் என்ற முறையில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதலமைச்சர் கலந்து ஆலோசித்து அனைத்துக்கட்சி குழுவை அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அதற்கு ஆழமான உள்நோக்கம் உள்ளது.

இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ, இந்த முகாம்களைப் பார்வையிட இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

சர்வதேசப் பத்திரிகையாளர்களோ அல்லது உள்நாட்டுப் பத்திரிகையாளர்களோ கூட அனுமதிக்கப்படவில்லை. தனது நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையோ பத்திரிகையாளர்களையோகூட முகாம்களைப் பார்வையிட அனுமதிக்காத ராஜபட்ச, கருணாநிதிக்கு மட்டும் அழைப்பு அனுப்பி அவர் அனுப்பிய தூதுக்குழுவை ராசோபச்சாரத்துடன் வரவேற்று விருந்தளித்து, பரிசுகள் தந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட முகாம்களைப் பார்வையிட அனுமதித்ததன் நோக்கம் என்ன?

முகாம்களில் உள்ள மக்களை உடனே விடுவிக்காவிட்டால் இலங்கைக்கு அளிக்கப்படும் பொருளாதார உதவிகள் நிறுத்தப்படும் என பிரிட்டன் உள்பட பல நாடுகள் எச்சரித்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் அந்நாடுகளிடம் காட்டுவதற்கு ராஜபட்சவுக்கு ஒரு நற்சான்றிதழ் தேவை. அதை வழங்குவதற்கு அவர் தேர்ந்தெடுத்த நபர்தான் கருணாநிதி ஆவார்.

ராஜபட்ச விரும்பியதும் எதிர்பார்த்ததும் நடந்தது. காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிங்கள அரசு அழைத்துச் சென்ற இடங்களுக்கு மட்டுமே சென்றார்கள். அவர்கள் காட்டியவற்றை மட்டுமே கண்டார்கள். தாங்கள் விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என ஒரு போதும் கேட்கவில்லை.

இக்குழுவினர் சென்ற இடமெல்லாம், மக்கள் அவர்களிடம் எவ்வாறு தங்களுடைய குமுறல்களையெல்லாம் கொட்டியழுதார்கள் என்பது குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி, உதயன், வலம்புரி ஆகிய நாளேடுகள் பக்கம் பக்கமாகச் செய்திகளை வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளன. மலையகப் பகுதிக்கு இந்தக் குழுவினரின் வருகை ஏமாற்றத்தையே அளித்தது என மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையகத் தமிழர்களின் தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் குழுவில் சென்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் கொழும்பு வீரகேசரி நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில் "சர்வதேச நியமங்களுக்கு உள்பட்டே இலங்கையில் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மக்களின் பாதுகாப்புக்காகவே முள்கம்பிகள் போடப்பட்டுள்ளன'' என்று கூறியிருக்கிறார்.

இன்னொரு காங்கிரஸ் உறுப்பினரான ஜே.எம்.ஆரூண் இலங்கை செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்திய ஊடகங்களில் தெரிவிப்பதைப் போன்று இடம்பெயர் மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை' என்றும் கூறியிருக்கிறார்.

இந்தக் குழுவினர் இலங்கை அதிபர் ராஜபட்ச அவருடைய சகோதரர்கள் பசில் ராசபட்ச, கோத்தபய ராஜபட்ச ஆகியோரைச் சந்தித்து அளவளாவியுள்ளனர்.

ராஜபட்சவுக்கு பொன்னாடை போர்த்தியும் பரிசுகள் தந்தும் தங்களின் பக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அவரும் இவர்களின் விசுவாசத்தை மெச்சி, பரிசுகள் தந்து மகிழ்வித்திருக்கிறார். லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் ரத்தக் கறைபடிந்துள்ள ராஜபட்சவின் கரங்களை தமிழர்களே குலுக்கி மகிழ்ந்த அவலம் வரலாறு காணாததாகும்.

இக்குழுவினரை இலங்கைக்கு அனுப்புவதற்கு 20 நாள்களுக்கு முன்னதாகவே 22-9-09-ல் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, பின்வருமாறு அறிவித்ததை இப்பொழுது நினைவு கூரவிரும்புகிறேன்:

""இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து வெளிவரும் தகவல்கள் நமக்குத் திருப்தியை அளிக்கின்றன. தமிழக அரசும் இந்திய அரசும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளும், அமைச்சர்களும் அவசரமாகக் கூடி தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கின்றன என ஆய்வு செய்துள்ளனர் என நாளேடுகளில் வெளிவந்த செய்திகளைச் சுட்டிகாட்டியுள்ள முதல்வர், இவையெல்லாம் திருப்தியளிக்கின்றன'' எனக் கூறியுள்ளார்.

20 நாள்களுக்கு முன்னால், முதலமைச்சர் இவ்வாறு அறிவித்த பிறகு இலங்கைக்கு இவரால் அனுப்பப்பட்ட தூதுக்குழுவினர் இந்த அறிவிப்புக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்திருக்கிறார்கள்.

இக்குழுவினர் சென்னை திரும்பியதும் முதலமைச்சர் கருணாநிதி மூலம் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறியிருக்கிறார்கள்:

""முள்வேலி முகாம்களில் இருக்கிற மக்களின் துன்பங்கள் குறித்து அதிபர் ராஜபட்சவை நாங்கள் சந்தித்தபோது, அவரிடம் தொகுத்துக் கூறியுள்ளோம். இதனை மனிதாபிமான உணர்வோடு அணுகி, ஆவன செய்வதாக அவர் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார். முகாம்களில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்த்தும் கோரிக்கையை முன்வைத்தோம். மொத்தத்தில் முகாம்களில் உள்ள தமிழர்களை இலங்கை அரசு மீண்டும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நம்பிக்கையை இன்னும் இரண்டு வாரகாலத்தில் இலங்கை அரசு ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது.''

இந்த அறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர் கருணாநிதி, செய்தியாளர்களிடம் அறிவித்ததில் முக்கியமானவை பின்வருமாறு:

1. 15-10-09 முதல் 15 நாள்களில் 58 ஆயிரம் மக்கள், முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.

2. அநாதைக் குழந்தைகள் உடல் ஊனமுற்றோர் தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பில் ஒப்படைக்கப்படுவார்கள்.

3. இந்திய அரசு மேலும் உதவினால் நிலக்கண்ணி வெடிகள் விரைவில் அகற்றப்படும்.

4. முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் யாரும் கடத்தப்படுவதில்லை. கொலைசெய்யப்படுவதும் இல்லை.

5. தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து, இலங்கை அரசுக்கு விவரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் துன்பநிலை தொடராமல் பார்த்துக்கொள்ள இலங்கை அரசு ஒப்புக்கொண்டு அதற்கான ஒத்துழைப்பு இந்தியாவிலிருந்தும் கிடைக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பட்டியலிடாத ஒரு சாதனையை குழுவின் தலைவர் டி.ஆர். பாலு கூறியிருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ""இலங்கையும் - தமிழகமும் தொழில் கண்காட்சி நடத்தி இருநாடுகளிடையேயும் தொழில் வணிகம் பெருகவும், தமிழகம் இலங்கையில் முதலீடு செய்யவும் வழிவகை இதன்மூலம் ஏற்படும் என்று கூறி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.

இலங்கையில் நடைபெற்ற போரில் சிங்களப் படையினர் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது உறுதியாகியிருப்பதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது வணிகத் தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. ஆனால் இலங்கையோடு தொழில் வணிகத்தைப் பெருக்குவதற்கான வழிவகைகளை முதலமைச்சரின் குழு ஆராய்ந்து கூறியுள்ள வெட்கக்கேடு நிகழ்ந்துள்ளது.

தான் அனுப்பிய தூதுக்குழுவினர் ராஜபட்சவிடமிருந்து பெற்ற வாக்குறுதிகளை பட்டியலிட்டிருக்கிறார் முதலமைச்சர். ஆனால் அவருடைய அறிவிப்பை மாபெரும் சாதனையாகச் சித்திரித்து சுவரொட்டிகள் அச்சடித்து தி.மு.க.வினர் சென்னையெங்கும் ஒட்டியுள்ளனர். சுவரொட்டியில் உள்ள பசை உலர்வதற்கு முன்னாலேயே முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அனுப்பப்பட்ட 2,500 தமிழர்கள் நடுவழியில் மறிக்கப்பட்டு மற்றொரு முகாமில் அடைக்கப்பட்டுவிட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.

செப்டம்பர் 15-ம் தேதியன்று வவுனியா முகாம்களிலிருந்து 2000 தமிழ் அகதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இப்போது வேறு எங்கோ சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 11-ம் தேதியன்று யாழ்ப்பாணம் முகாமில் இருந்து 568 தமிழ் அகதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் கைத்தடி என்ற இடத்தில் மீண்டும் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை, திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 1706 அகதிகளும் அவரவர் வீடுகளுக்குப் போய்ச் சேராமல் வழியில் எங்கேயோ தடுத்துக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விவரங்களை மனிதநேய நடவடிக்கைகளுக்கான ஐ.நா. சபையின் ஒருங்கிணைப்பு அலுவலகம் கூறியுள்ளது.

தமிழக மீனவர்கள் துன்ப நிலை தொடராமல் பார்த்துக்கொள்ள இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது என முதல்வர் கூறிய இரு நாள்களிலேயே அதாவது அக்டோபர் 18-ம் தேதியன்று ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி அவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து படகுகளையும் சேதப்படுத்தி விரட்டியடித்த செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை சென்ற தூதுக்குழு தனி முகாமில் அடைக்கப்பட்டுள்ள 12,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இளம்பெண்கள் குறித்து எதுவும் விசாரித்தறியவில்லை என்பது அதிர்ச்சி தருகிறது. புலிகள் எனக் குற்றம் சாட்டி இவர்கள் பிரித்தெடுக்கப்பட்டு தனி முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதுவர் பலித்த கோஹண என்பவர் அக்டோபர் 15-ம் தேதி பின்வருமாறு கொழும்பில் அறிவித்தார்:

தனி முகாம்களில் உள்ள 12,500 பேர் புலிகளாவர். மேலும் மற்ற முகாம்களில் 10,000 புலிகள் இருக்கக்கூடும். இவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு அழிப்பதே எங்கள் நோக்கம் என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சரான டேவிட் மிலிபண்ட் பின்வருமாறு கூறியுள்ளார்: இலங்கைப்போரில் பாதிக்கப்பட்டு முகாம்களில் வாழும் 12,500 பேரை விடுதலைப்புலிகள் என்று கூறி, தனி முகாம்களில் சிங்கள அரசு அடைத்து வைத்துள்ளது. ராணுவம் ஆய்வு நடத்திய முறை வெளிப்படையாக இல்லை என்பதால் இவர்கள் உண்மையிலேயே விடுதலைப்புலிகளா என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களைச் சந்திக்க ஐ.நா. அமைப்புக்கோ அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கோ இன்றுவரை அனுமதியளிக்கப்படவில்லை என்பதும் கவலையளிக்கிறது'' என்று கூறியுள்ளார்.

உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்த முகாமை தமிழகத் தூதுகுழு எட்டிப்பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல. அதுபற்றிய உண்மையைக் கூட விசாரித்தறிய முற்படவில்லை. எங்கேயோ பிரிட்டனில் இருக்கக்கூடிய வெளியுறவுத் துறை அமைச்சர், இந்த இளைஞர்கள் குறித்துக் கவலைப்படுகிறார். ஆனால் இலங்கைக்கே சென்ற தூதுக்குழுவினர் இதைப்பற்றிக் கொஞ்சமும் கவலையோ பொறுப்புணர்வோ இல்லாமல் நடந்துகொண்டுள்ளனர்.

முகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தும் அங்ககீனமாகியும் உள்ளனர். இயலாத முதியவர்களும் குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்கு மருத்துவ வசதிகள் போதுமான அளவுக்கு அளிக்கப்படுகிறதா என்பது குறித்து இக்குழுவினர் விசாரித்து அறிந்ததாகத் தெரியவில்லை.

குடும்பங்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு முகாம்களில் பிரித்து அடைக்கப்பட்டுள்ளவர்களை ஒன்றாக வைக்கவேண்டும் என இக்குழுவினர் வலியுறுத்தியதாகவும் தெரியவில்லை.

கடற்கரை மாவட்டங்களில் வாழும் மக்கள் மீன் பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி அந்த மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கவேண்டும் என இக்குழுவினர் கேட்டதாகவும் தெரியவில்லை.

முகாம்களில் உள்ளவர்களின் முழுமையான பட்டியல் இருக்கிறதா என்று கேட்டு அதைப் பார்வையிட்டு சிலரையாவது அழைத்துப் பேசி உண்மை அறிந்தார்களா என்பதற்கும் சான்று இல்லை. போரின் கடைசிக் கட்டத்தில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் விவரப்பட்டியலை குழுவினர் கேட்டதாகவும் தெரியவில்லை.

இந்தியா உள்பட உலக நாடுகள் அளித்த உதவி முறையாக செலவிடப்பட்டதா என்பது குறித்து விசாரித்து அறியவோ அல்லது அதைக் கண்காணிக்க சர்வதேச குழு ஒன்று அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தவோ இக்குழுவினர் எந்த முயற்சியும் செய்ததாகத் தெரியவில்லை.

தமிழகக் குழுவின் பயணம் ராஜபட்சவுக்குச் சாதகமான அறிக்கை அளிப்பதற்காகவே சென்றுள்ளது என்ற சந்தேகம் வலுப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே தனக்குச் நற்சான்றிதழ் அளித்துவிட்டார்கள் என அவரைக் குறை சொல்லும் நாடுகளுக்கும் ஐ.நா. அமைப்புக்கும் கூற இந்த அறிக்கை ராஜபட்சவால் பயன்படுத்தப்படுமே தவிர முகாம்களில் உள்ள மக்களின் துயரைப் போக்குவதற்கு எள் முனை அளவு கூட உதவாது. போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக்கொண்ட லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்ற இந்திய அரசு தவறிவிட்டது. இங்கிருந்து கப்பல்களை அனுப்பி அந்த மக்களைப் பத்திரமாக இந்தியாவுக்குக் கொண்டுவந்திருக்கலாம்.

1983-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் படுகொலை தாண்டவமாடியபோது, இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி இரண்டு கப்பல்களை அனுப்பி கொழும்பு நகரில் சிக்கிக்கொண்ட தமிழர்களை மீட்டெடுத்து யாழ்ப்பாணத்தில் கொண்டு சேர்க்க உதவினார். ஆனால் மன்மோகன் சிங் அரசு அந்த மனிதநேய கடமையைக் கூட செய்யத்தவறிவிட்டது. இந்த மாபெரும் தவறை மூடி மறைக்க அவருக்கும் கருணாநிதியின் இந்த நற்சான்றிதழ் உதவும். ôஜபட்சவை போர்க் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என உலக நாடுகளின் குரல் வலுத்துவரும் இந்த வேளையில் அவரைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி பரிசுகள் தந்து மகிழ்ந்த இக்குழுவினரை என்னென்று சொல்வது.

1936-ம் ஆண்டில் இத்தாலியின் சர்வாதிகாரியாக முசோலினி திகழ்ந்தபோது, காங்கிரஸ் தலைவராக இருந்த ஜவாஹர்லால் நேரு சுவிட்சர்லாந்தில் தனது மனைவி கமலாவின் சிகிச்சைக்காகத் தங்கியிருந்தார். கமலா அங்கேயே காலமானார். இச்செய்தியை அறிந்த முசோலினி சுவிட்சர்லாந்தில் இருந்த இத்தாலியத் தூதர் மூலம் நேருவுக்கு இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பினார். அத்துடன் தனது விருந்தினராக ரோம் வந்து தங்கும்படியும் அவருடன் பேச விரும்புவதாகவும் செய்தியனுப்பினார். ஆனால் ஜவாஹர்லால் நேரு, இந்த அழைப்பை ஏற்க மறுத்தார். ஆப்பிரிக்காவில் உள்ள அபிசீனியா மீது படையெடுத்து நச்சு வாயு குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஒரு பாசிச சர்வாதிகாரியான முசோலினியின் ரத்தக் கறைபடிந்த கரங்களால் அனுப்பப்பட்ட அழைப்பை ஏற்க மறுக்கிற துணிவு ஜவாஹர்லால் நேருவுக்கு இருந்தது. அபிசீனிய மக்களோடு எத்தகைய ரத்தத் தொடர்பும் நேருவுக்கு இல்லை. ஆனாலும் அவரிடம் இருந்த மனிதநேய உணர்வு அவரை இவ்வாறு செய்ய வைத்தது.

ஆனால் நம்முடன் தொப்புள் கொடி உறவு கொண்ட ஈழத்தமிழர்களின் ரத்தத்தால் நனைந்து கறைபடிந்திருக்கிற ராஜபட்சவின் கரங்களைக் குலுக்கி நட்பு பாராட்ட தன் மகள் உள்பட தமிழர்களைக் கொண்ட குழுவையே அனுப்பி உறவு கொண்டாடிய கருணாநிதியின் மனித நேய உணர்வையும் மான உணர்வையும் என்னென்று சொல்வது?

thinamani editorial source

அய்யா எனக்கு விளங்குது நீங்கள் சொல்வது ஆனா ஒருவனும் கேட்கமாட்டேனென்று சொல்லுறாங்கள்

முதலில் உங்கட நாட்டுப்பிரச்சனையை பாருங்கோ பிறகு எங்களிட்டிட வாருங்கோ எங்கிறாங்கள்.அதை விட உங்கட தொகுதியில ஒருக்கா கட்டுக்காசு எடுங்கோ பிறகு பார்ப்பம் எண்டுற்றாங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.