Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''பச்சை வேட்டை'' இலங்கை சாயலில் இந்தியாவில் ஒரு உள்நாட்டுப் போர் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

''பச்சை வேட்டை'' இலங்கை சாயலில் இந்தியாவில் ஒரு உள்நாட்டுப் போர் ஆரம்பம்

மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காகப் 'பச்சை வேட்டை' என்கிற பெயரில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசு.

மாவோயிஸ்டுகள் செல்வாக்குள்ள பகுதிகளில் ஏற்கெனவே குவிக்கப்பட்டிருந்த 45,000 துணை ராணுவப் படைகளோடு மேலும் 30,000 வீரர்கள் சென்ற இரு மாதங்களில் இதற்காக இறக்கப்பட்டுள்ளனர். 18-பெடாலியன் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இதில் அடக்கம். நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கென சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட 'கோப்ரா' கமாண்டோக்கள், இப்படியான நடவடிக்கைகளுக்கென மாநில அளவில் பயிற்சிபெற்ற 'சிறப்பு நடவடிக்கை போலீஸ் பிரிவுகள்(SAG)' ஆகியனவும் இந்தத் தாக்குதல் படைகளில் உள்ளடக்கம்.

இவர்களைக் கொண்டு மேற்கு

வங்கத்தில் லால்கரைச் சுற்றியுள்ள பங்குரா, புருலியா மற்றும் மேற்கு மெதினிபூர் மாவட்டங்கள், ஒரிசாவில் நாராயண பட்ணாவை உள்ளடக்கிய கோராபுட் மாவட்டம், சட்டிஸ்கரில் தாண்டேவாடா, மகாரஷ்டிர எல்லையிலுள்ள கட்சிரோலி முதலிய பகுதிகளில் ஏற்கெனவே நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன.

'மிகப்பெரிய உள்நாட்டு ஆபத்து' என வெளிப்படையாக அறிவித்து, பிரதமர் மன்மோகன்சிங்கும் உள்துறை அமைச்சர் சிதம்பரமும் தொடங்கியுள்ள இந்தத் தாக்குதலால் இப்பகுதிகள் எல்லாமே முழுமையான போர்ப் பகுதிகளாகவே காட்சியளிக்கின்றன. வெளியார்கள் யாரும் அங்கே நுழைய முடியாது. மனித உரிமைப் போராளிகளோ, அல்லது ஹிமான்சு குமார் போன்ற காந்தியவாதிகளோகூட இப்பகுதிகளில் செயல்பட முடியவில்லை.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக தாண்டேவாடா மாவட்டத்தில் ஆசிரமம் அமைத்துப் பழங்குடி மக்கள் மத்தியில் சேவை செய்துவரும் ஹிமான்சு குமார், நக்சலைட் வன்முறைகளையும் கண்டிக்கத் தவறாதவர். தொடர்ந்து வந்த அரசுகளால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட தாண்டேவாடா பகுதியில், பழங்குடி மக்கள் உவந்தளித்த துண்டு நிலத்தில் ஓலைக் குடிசை ஒன்றை அமைத்துப் பணியைத் தொடங்கியவர்கள் ஹிமான்சு தம்பதியர். இன்று அவர்கள் அந்த இடத்தைக் காலி செய்ய வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

எச்சரித்தவர்கள் யார்? 'சல்வாஜுடும்' என அழைக்கப்படும் கூலிப் படையினர். மாநில காவல் துறையால் ஆயுதமும், அரசாங்க கஜானாவிலிருந்து ஊதியமும் வழங்கப்பட்டு ஆளும் பாரதீய ஜனதா கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இரண்டின் ஆசியுடன் இயங்கும் இந்தச் சட்ட விரோதக் கூலிப்படையின் செயல்பாடுகளை தேசிய மனித உரிமை ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவை கண்டித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 'சல்வா ஜுடும்' மாடலில், மாவோயிஸ்டுகள் செல்வாக்குள்ள பகுதிகள் அனைத்திலும் இதுபோன்ற கூலிப் படைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒரிசாவில் இப்படி உருவாக்கப்பட்ட -'சாந்தி குழு' என்கிற அமைப்பு, சென்ற மாதம் இப்பகுதியில் என்ன நடக்கிறது என்று கண்டறியச் சென்ற முழுக்கப் பெண்களை உள்ளடக்கிய உண்மை அறியும் குழு ஒன்றைத் தாக்கி விரட்டியுள்ளது. சென்னையிலிருந்து சென்றிருந்த பேராசிரியர் மதுமிதா தத்தா, சுவேதா நாராயணன் ஆகிய மனித உரிமைப் போராளிகள் தாக்கப்பட்டவர்களில் அடக்கம்.

சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவது என்கிற பெயரில் இப்படி அரசாங்கங்களே சட்ட விரோதக் கூலிப் படைகளை நடத்துவதை என்ன சொல்வது?

160 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் வேரூன்றி உள்ளதாக அரசாங்கமே ஒப்புக் கொள்கிறது. வட கிழக்கே மேற்கு வங்கத்தின் லால்கர் மற்றும் பீகார் பகுதிகளில் தொடங்கி, ஜார்கண்ட் மற்றும் சட்டீஸ்கரின் செறிந்த காட்டுப் பகுதிகளின் ஊடாகவும், பழங்குடியினர் மிகுந்துள்ள ஒரிசாவின் கொராபுட் மற்றும் மல்கன்கிரி பகுதியின் ஊடாகவும், கீழிறங்கி தெற்கே ஆந்திர மாநிலத்தின் முனை வரை உள்ள இப்பகுதி, 'சிவப்பு நடைவழி'(Red Corridor) என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலும் பழங்குடியினர், தலித்துகள், அரசியல் வலுவற்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோர் வசிக்கும் இப்பகுதிகளில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றுவரை கிடையாது. மின்சாரம், குடிநீர், பள்ளி, மருத்துவமனைகள் என்று எதுவுமே கிடையாது. அவர்களது மொழியில் வானொலி, தொலைக்காட்சிகூட இயங்குவதில்லை. 'இரவானால் உன் கையை நீயே பார்க்க முடியாது' என்பது இப்பகுதியில் பேசப்படுகிற ஒரு புகழ்பெற்ற சொலவடை. அந்த அளவுக்குக் குறைந்தபட்ச வசதிகள்கூட இல்லாத இப்பகுதிகளில்தான் இந்தியாவின் இன்னும் தோண்டி எடுக்கப்படாத கனிம வளங்கள் ஏராளமாகப் புதையுண்டு கிடக்கின்றன.

உலகமயப் பின்னணியில் பழங்குடி மக்களுக்குப் பாரம்பரிய உரிமையுள்ள இந்நிலங்களில் இருந்து, நீர் மற்றும் கனிம வளங்கள் ஆகியவை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வாரி வழங்கப்படுகின்றன. எந்த அடிப்படை வளர்ச்சியையும் சந்தித்திராத இம்மக்களின் அனுமதியின்றியே இப்படி நடக்கும்போதும், தமது இடங்களிலிருந்து வலுக்கட்டாயமாக இடம் பெயர்க்கப்படும்போதும் அவர்கள் போராடுகின்றனர். சென்செக்ஸ் குறியீடு, ஷாப்பிங் மால்கள், 8.9 சதவிகித பொருளாதார வளர்ச்சி இவை பற்றியெல்லாம் காதாலும் கேட்டிராத இம்மக்களின் கோரிக்கைகள் 'குடிநீர், மருத்துவம், கல்வி, தமது நிலங்களில் தமக்குள்ள உரிமை' ஆகியவைதான்.

இவற்றுக்காக இம்மக்கள் போராடும்போது இவர்களுக்கு ஆதரவாக நிற்பது மாவோயிஸ்டுகள் மட்டுமே. -'தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் வளர்ச்சி அடிப்படையில் மாற்றங்கள்' என்கிற தலைப்பில் இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, மத்திய அரசின் திட்டக்குழு இரண்டாண்டுகளுக்கு முன் குழு ஒன்றை அமைத்தது. மேற்கு வங்க அரசின் முன்னாள் அரசுச் செயலர் பண்டோபாத்யாயா, பல்கலைக்கழக மான்யக் குழு தலைவர் சுக்தியோ தோரத், புகழ்பெற்ற மனித உரிமைப் போராளி டாக்டர் பாலகோபால் ஆகியோர் அடங்கிய இக்குழு, 2008-மார்ச் மாதம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. 'வளர்ச்சி இல்லாமையே தீவிரவாதத்திற்குக் காரணம்' என்பதைச் சுட்டிக்காட்டிய இக்குழு, 'மாவோயிஸ்ட் பிரச்னையை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகவும், பாதுகாப்புப் பிரச்னையாகவும் பார்க்காமல், அவர்களை ஒரு அரசியல் சக்தியாக அங்கீகரித்துப் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்' என்று பரிந்துரைத்தது.

ஆனால், அரசு அதற்குத் தயாராக இல்லை. கடுமையான அடக்குமுறை ஒரு புறம். சிறிய அளவில் அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் நடவடிக்கைகளை(ameliorative measures) மேற்கொள்வது இன்னொரு புறம் என பிரச்னையை எதிர்கொள்வதே கடந்த காலங்களில் மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடுகளாக இருந்துள்ளன.

நவீன ஆயுதங்கள், கண்ணிவெடி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றுள்ள மாவோயிஸ்டுகள், ஆயுதப் போராட்டத்தினூடாக இதை எதிர்க்கின்றனர். போலீஸ்காரர்கள், கூலிப்படையினர், துணை ராணுவப் பிரிவினர், இவர்களுக்கு உளவு சொல்வதாகச் சந்தேகப்படக்கூடிய சாதாரண மக்கள் ஆகியோரைக் கொல்வது தவிர எதிர்ப்பைக் காட்டுவதற்காக பள்ளிக்கட்டிடங்கள், ரயில் போக்குவரத்து முதலிய வளர்ச்சிப் பணிகளையும் தாக்குகின்றனர்.

'தும்பை விட்டு வாலைப் பிடிப்பதைப்போல' அரசு இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது, வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகவே கருதி இன்று போரைத் தொடங்கியுள்ளது. பிரச்னை என்னவெனில், யாரை எதிர்த்து இவர்கள் போர்

நடத்தப் போகிறார்கள்? என்பதே. மாவோயிஸ்டுகளையும் பழங்குடியினரையும் படையினரால் பிரித்தறிய முடியாது. ஏற்கெனவே ஆயிரக்கணக்கான கிராமங்களிலிருந்த லட்சக்கணக்கான பழங்குடியினர் வெளியேற்றப்பட்டு உள்நாட்டிலேயே அகதிகள் முகாம்களில் முடக்கப்பட்டுள்ளனர். அங்கே பொய்க் கைதுகள், போலி மோதல்கள், ஆட்கள் காணாமல் போவது, சித்ரவதைகள் என்பவை குறித்து ஏராளமான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

'உள்ளூர் போலீஸ், துணை ராணுவம், கூலிப்படையினர் ஒன்றாக இணைந்து மேற்கொள்ளும் இக்கொடுமைகளை நேரில் வந்து பாருங்கள்' என சிதம்பரத்தை, ஹிமான்சு குமார் வேண்டியபோது, அவர் வருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் வரவில்லை. மாறாகப் படையினர்தான் வந்தனர். ஹிமான்சு குமார் நாடெங்கும் சுற்றிப் பிரசாரம் செய்தார். உண்ணாவிரதமிருந்தார். அடுத்து என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நிற்கிறார் இந்தக் காந்தியவாதி. நல்லவேளை காந்தி இன்று இல்லை. இருந்திருந்தால் அவருக்கும் இந்தக் கதிதான்.

மாவோயிஸ்டுகளும் சரி, அரசும் சரி. தமது உச்சபட்ச நிலைப்பாடுகளிலிருந்து இறங்கி வரவேண்டும். மாவோயிஸ்டுகள், 'பேச்சுவார்த்தைக்குத் தயார்' எனச் சொல்லியுள்ளனர். ஆனால், 'அது தனக்குத் தெரியாது' என்கிறார் சிதம்பரம். 'போரெல்லாம் ஒன்றுமில்லை. பத்திரிகைகள் பெரிதுபடுத்துகின்றன' என்றும் கூறியுள்ளார். கூலிப்படையினர் தவிர 75,000 துணை ராணுவம் நிறுத்தப்பட்டு, லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டு அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள், மனித உரிமைப் போராளிகள் உள்ளே நுழைய முடியவில்லை. ஆக, இது போர் இல்லை என்றால், வேறு என்ன பெயர்?

http://www.suriyakathir.com/

Muthamizh

Chennai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரைவில் இந்தியாவும் குப்பை மேடானால் சரி தான்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் அடிப்படை வசதிகள் இல்லை என்று மாவோ தோழர்கள் வீட்டுக்கு வீடு சிறிது சிறிதாக பணம் சேகரித்து.. இலவசமாக மக்களோடு மக்களாக சேர்ந்து உழைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றினால். அதை இந்தி ய ஜனநாய்கள் அது நான் செய்தது என்று அரசாங்கத்திற்கு கணக்கு காட்டி ஊர் காசை தனது வங்கி கணக்குக்கு மாற்றினால் .. அவ்வாறான ஜனநய்கள் கொல்லபடவேண்டியவர்களே.. வாழக் மாவோ தோழர்கள் போராட்டம்..

நல்லவங்கள் எல்லாரையும் கொல்லவேணும் எண்ட முடிவோட தான் தொடங்கி இருக்கிறாங்கள்...

வாழ்க... வளர்க...

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவங்கள் எல்லாரையும் கொல்லவேணும் எண்ட முடிவோட தான் தொடங்கி இருக்கிறாங்கள்...

வாழ்க... வளர்க...

இது புதிய ஜனநாய்யகம்.

காலஞ்சென்றுதான் எல்லோருக்கும் புரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.