Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வழிகாட்ட ஒருவரின்றி...?:

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழிகாட்ட ஒருவரின்றி...?:

"பிரதேசவாதத்தையும்", "தமிழ்த் தேசியத்தையும்" கையில் எடுத்து- "விமர்சித்து- மோதிக் கொள்ளும்" நிலையில் ஈழத் தமிழினம்......

ltte_caders_20090825.jpg

உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் யார்? உண்மையாக- நேர்மையாக நடந்து கொள்வது யார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தொடங்கிய உட்கட்சிப் பூசல் இன்று பிரதேசவாதத்தையும், தமிழ்த் தேசியத்தையும் கையில் எடுத்து- விமர்சித்து- மோதிக் கொள்ளும் நிலையை உருவாக்கி விட்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியபோது- ஏற்பட்ட விரிசல் தமிழ்கட்சிகள் மத்தியிலும் பல பிளவுகளை ஏற்படுத்தி விட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி என்று மூன்று அணிகளாகப் பிரிந்து போய் நிற்கின்றன.

கடந்த தேர்தலில் இந்த மூன்று அணிகளுமே ஒன்றாக நின்றவை- ஆனால் இப்போது பிளவுபட்டு நிற்கின்றன.

இது தமிழ்த் தேசியத்துக்கு விழுந்து பேரிடி- இன்னொரு வகையில் சொல்லப் போனால் தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு சாபக்கேடு.

thalaivar_hand_20090912.jpg

புலம்பெயர் சமூகத்தினரின் தவறான வழிகாட்டலில் தான் கஜேந்திரகுமார் தலைமையில் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் சமூகத்தினர் தம்மை வழிநடத்த முடியாது என்றும் கூறுகிறது. இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றைக் கைவிட்டு, இந்தியாவின் கைப்பொம்மையாக- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதன் தலைவர்கள் மாற்றி விட்டதாக விமர்சிக்கிறது தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி.

அதேவேளை தாம் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து விலகமாட்டோம் என்றும்- ஆனாலும் தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப நெகிழ்வுப் போக்குடனான இராஜதந்திர அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாகவும் நியாயம் கற்பிக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இப்படியே ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவதும் கேவலப்படுத்துவதுமாகச் சென்று கொண்டிருக்கிறது தமிழ்த் தேசிய அரசியல். இந்தக் கட்டத்தில் தமிழ்மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஒன்று தோன்றுவது இயல்பு.

உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் யார்? உண்மையாக- நேர்மையாக நடந்து கொள்வது யார்? என்பன போன்ற கேள்விகள் அவர்களிடத்தில் உருவாகியுள்ளன.

தமிழ் மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய அடிப்படைக் கொள்கைகளில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகவில்லை என்று கூறியுள்ள நிலையிலும்- அது சில விடயங்களில் முன்னைய நிலைப்பாடுகளில் இருந்து பின்வாங்க ஆரம்பித்துள்ளது உண்மை.

அதாவது கடந்த தேர்தலில் புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தையே மறந்து விடும் நிலைக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது. இது சரியான மாற்றமா அல்லது தவறான முடிவா என்பதைத் தீர்மானிக்கப் போவது தமிழ்மக்கள் தான். அது தேர்தலின் போது வெளிப்படும்.

தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு அரசியல்தீர்வு நோக்கிச் செல்வதே இன்றைய தேவை.

ஆனால் கூட்டமைப்பு தாம் இந்தக் கோட்பாடுகளில் இருந்த விலகவில்லை என்று கூறியிருந்தாலும், இன்னொரு பக்கத்தில் சர்வதேச அதரவைப் பெறுவதற்கும்- யதார்த்தத்துக்கும் ஏற்ப நெகிழ்வுப் போக்குடனான சில முடிவுகளை எடுத்திருப்பதாகவே கூறுகிறது..

தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகள் தொடர்பான விட்டுக் கொடுப்புகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி விட்டதா என்ற சந்தேகத்தையே இது எழுப்பியுள்ளது.

இந்தியாவினதோ அல்லது சர்வதேசத்தினதோ விருப்பத்துக்கேற்ப தீர்வொன்றைத் தயாரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயராகி விட்டது. இதை அதன் தலைவர்களே உறுதி செய்துள்ளனர்.

ஆனால் தமிழ் மக்களின் விருப்பத்துக்கேற்ற தீர்வை தயாரிப்பது முக்கியமா அல்லது சர்வதேசத்தின் விருப்பத்துக்கேற்ற தீர்வை நடைமுறைப்படுத்துவது முக்கியமா என்று தீர்மானிக்க வேண்டிய கட்டம் இது.

தமிழ்மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போது-அந்த உரிமைகளுக்காக தொடங்கப்பட்டதே அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டங்கள்.

ஆனால் இந்தக் கட்டத்தில்; தமிழரின் விருப்பம்-அபிலாஷைகளைப் பற்றிக் கருதிலெடுக்காமல், சர்வதேசத்தின் விருப்பத்தை நிறைவேற்றுகின்ற தீர்வை உருவாக்குவது பொருத்தமான காரியமாக இருக்காது.

ஏனென்றால் சர்வதேசத்தின் விருப்பத்துக்காகத் தொடங்கப்பட்ட போராட்டமல்ல இது. இந்தத் தெளிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

அதேவேளை, கடந்த வருடம் ஒரு அரசியல்தீர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரித்திருந்தது. ஆனால் அதை தமது உறுப்பினர்களிடமே காண்பிக்கவில்லை.

கிட்டத்தட்ட சந்திரிகா ஒரு தீர்வுப் பெட்டகத்தை வைத்திருப்பதாகக் கூறிக் காலத்தைக் கடத்தியது போலவே இதுவும் இருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்காக தீர்வுத்திட்டத்தை உருவாக்கியது.?

எதற்காக அதை உருவாக்கியது?

என்ற கேள்விகள் முக்கியமானவை.

தீர்வுத்திட்டம் உருவாக்கப்பட்டது பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்பதற்காகவல்ல.

அதை தமிழ் மக்களிடம் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அது அவர்கள் செ;யதிருக்க வேண்டிய முதலாவது வேலை.

அடுத்து அதை சர்வதேசத்தினதும் இலங்கை அரசினதும் கவனத்ததுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். எதையுமே செய்யாமல் அதை வைத்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒஸ்லோ உடன்பாட்டுக்கு அமைவாகவே தீர்வுத்திட்டத்தை தயாரித்திருப்பதாக இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார்.

இலங்கை அரசும் புலிகளும் இணக்கப்பாடு கண்டதன் அடிப்படையில் இந்தத் தீர்வுத்திட்டத்தை உருவாக்கியதாகவும் புதிய எம்.பிகள் அதுபற்றித் தீர்மானிப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார் அவர்.

ஆனால் ஒஸ்லோ உடன்பாட்டுக்கு அமைவாக தீர்வுத்திட்டததை உருவாக்கியிருந்தால் கூட- அதை வெளியிடாமல் மறைத்து வைப்பதால் எதுவும் நடக்கப் போவதில்லை.

தமிழ்மக்களிடம் கொண்டு சென்று அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களி;ன் ஆணையைப் பெற்றிருப்பினும்- தீர்வுத் திட்டம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அதற்கு இருக்கிறதென்பதை மறந்து விடக் கூடாது.

அதேவேளை அந்தத் தீர்வுத் திட்டத்தை இந்தப் பொதுத்தேர்தலுக்கு முன்னர் தமிழ்மக்களிடத்தில் முன்வைத்து அவர்களின் ஆணையைப் பெறுவதற்கு கூட்டமைப்பு முனைய வேண்டும்.

1977 பொதுத்தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாகப் பெற்ற ஆணையைக் கொண்டு தான் இன்று வரை பெரும்பாலான தமிழ்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது அரசியல்தீர்வுத் திட்டத்தை முன்வைத்து மக்களின் ஆணையைப் பெறுமானால் அதற்கு சர்வதேச ஆதரவும் பலமும் இன்னமும் அதிகமாகவே கிடைக்கும்.

அத்துடன் இலங்கை அரசினாலும் தட்டிக் கழிக்க முடியாத நிலை உருவாகும்.

தமிழ்த் தேசியகத்தை முன்னிறுத்தி வார்த்தைகளால் மோதிக்கொள்வதால் யாருக்கும் எதுவும் கிடைத்து விடப் போவதில்லை. இது உறுதியானது. அதேவேளை தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு பிரதேச வாதத்தை கிளறிவிட்டு அதில் குளிர் காய முற்படுவதும், ஒன்றுபட்ட பலத்தை வெளிப்படுத்துவதற்கு முரணான காரியங்களில் இறங்குவதும் தமிழரின் எதிர்காலத்துக்கு சாவுமணி அடிப்பதாக அமையும்.

கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் தமிழரின் ஆயுதபலம் சிதைந்து- பேரம்பேசும் ஆற்றல் பறிபோனது. அதை அரசியல் வழியில் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குவதே பொருத்துமானது.

அதேவேளை தமிழரின் அபிலாஷைகள் விருப்பங்களுக்கு முரணாக எதையும் செய்யலாம் என்ற நினைப்பு எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிக்காவது இருக்குமேயானால் அதை இப்போதே தூக்கியெறிந்து விடவேண்டும்.

உலக நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு இராஜதந்திரத்துடன் நடந்து கொள்வதாக கூட்டமைப்பு கூறினாலும், அவர்களின் இராஜதந்திர ஆற்றலைத் தமிழ்மக்கள் அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதே பார்க்க முடிந்தது.

எனவே அனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு ஒரே வழியில் தமிழ்த் தேசியத்தின் பிடிமானத்தில் இருந்து விலகாத வகையில்- தமிழரின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முன்வருவது தான் தமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் நடத்துவோரின் முன்பாக இருக்கும் வரலாற்றுக் கடமை.

"அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை... சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது... "

தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்

ஹரிகரன் -

ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. "எத்தனை மக்களை போராடவைத்தான்" என்பதிலிருக்கிறது "தலைவனின் ஆளுமையும் வெற்றியும்" புரிகிறது

புலிகளுக்கு போர் வெறியை தவிர வேறு என்ன தெரியும்.

இன்போ தமிழ்.

புலிகளுக்கு போர் வெறியை தவிர வேறு என்ன தெரியும்....

இன்று எமது விடுதலை இயக்கம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியான சூழலைப் பயன்படுத்தி சில தீய சக்திகள் எது இயகத்தினதும் தலைவரினதும் உன்னதமான தியாகங்களை கொச்சைப்படுத்தியும் கேவலப்படுத்தியும் வருவதுடன் மக்களை குழப்பும் முகமாக பேசியும் எழுதியும் வருகின்றனர். இவர்களின் இச்செயல்களுக்கெல்லாம் பதிலெழுதி நேரத்தை வீணாக்குவது எமது நோக்கமல்ல. மாறாக புலிகளோடு கூட இருந்தவர்களே இன்று முற்போக்கு சிந்தனையாளர்கள் என்ற போர்வையில் எமது தலைவரினதும் மாவீரரினதும் தியாகங்களை கொச்சைப்படுத்தும் போது எமது மக்ககளே வேதனையடைகின்றனர். அத்துடன் புலிகளின் தியாகங்களை கொசைப்படுத்தும் அதேவேளை எதிர்கால்த்தில் புலிகள் தமிழ் மக்களின் தலைவிதியைப்பற்றியோ அவர்களுக்கன விடுதலை பற்றியோ பேசத்தகுதி இல்லாதவர்கள் அத்தோடு அரசியல் இராஜதந்திர முதிர்ச்சி அற்றவர்கள் என்றும் கருத்துக்களை முன்வைக்க முற்பட்டுள்ளனர். இந்த கருத்துருவாக்கமானது மிகவும் ஆபத்தானதும் கண்டிக்கத்தக்கதுமாகும் என்கின்ற அடிப்படையில் எமது இயக்கத்தின் வழிகாட்டுலில் இந்த இலட்சியப் பயணத்தில் தொடர்ந்து எமது மக்களுக்கான விடுதலையைப் பெறும் வரை தலைவனின் சிந்தனையில் உதித்த தாயக வேட்கையை தமிழீழ இலட்சியத்தை எந்த இடர் வரினும் அவற்றை எதிர்கொண்டு தொடர்ந்து பயணிப்போம் என்ற நம்பிக்கையுடன்.........

விடுதலைப்புலிகள் மீதான அவதூறுகளை அள்ளி வீசூம் சீர்குலைவு சக்திகள்

ஈழத்தமிழினம் ஒரு மிகப்பெரிய அழிவை சந்தித்திருக்கிறது. மூன்று லட்சம் மக்கள் சிங்கள இனவெறி அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ஈழத்தமிழர்களின் விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. உலகத் தமிழினம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. தமிழகத் தமிழர்கள் புழுங்கிச் சாகின்றனர்.

இத்தகையச் சூழலில், ஈழத்தமிழர்களின் இந்த அவல நிலைக்குக் காரணமான சிங்கள இனவெறி அரசையோ, அதற்கு முழு உதவிகள் புரிந்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளையோ கண்டிக்க துணிவில்லாத ஒரு கூட்டம்,

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும், போராட்ட இயக்கத்தையும், இயக்கத் தலைமையையும் வேண்டுமென்றே கொச்சைப்படுத்தியும், அவதூறு செய்து எழுதியும் பேசியும் மகிழ்ச்சி கொள்கிற மனசாட்சி இல்லாதவர்களாக இன்றைக்கும் பரப்புரை செய்து வருகின்றனர்.

ஒரு இனவாத அரசால் ஒடுக்கப்படுகின்ற ஓர் இனம், அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கான விடுதலைக்காகப் போராடும் பொழுது அந்த இனத்தில் உள்ள பலவீனமான குழுக்களை இவ் இனவாத அரசு முதலில் அடையாளம் காணும் வேலையைச் செய்யும். அப்படி அடையாளம் காணும் குழுக்களை நேரடியாக ஒடுக்குகின்ற இனத்தின் ஆளும் வர்க்கம், தன்னுடன் இணைத்துக் கொள்வதும் உண்டு. மாறாக, அவர்களை இருக்குமிடத்தில் அப்படியே வைத்துக் கொண்டு அங்கிருந்து நீங்கள் எங்களுக்கான வேலையை செய்யுங்கள் என உத்தரவிடுவதும் உண்டு.

டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்றவர்கள் முதல் வகையாக இருக்கும் புலிஎதிர்ப்புச்சக்திகள், அதுபோல் முற்போக்கு முகமூடி போட்டுத் திரியும் தமிழ் இலக்கிய அரசியற்சித்தாந்த வாதிகள், உள்ளிட்ட அமைப்புகள், “துக்ளக்” சோ, சுப்பிரமணியசுவாமி, “இந்து” என்.ராம், அ.மார்க்ஸ், இரயாகரன், சோபாசக்தி ஜெயபாலன் உள்ளிட்ட போலித்தனமான முற்போக்கு முகமூடிகள் அணிந்த தனிநபர்கள் என இரண்டாம் வகை செயற்பாட்டுகுழுமத்தின் பட்டியல் நீள்கிறது.

இங்கு இந்திய புலி எதிர்ப்பு வாதிகள் போன்றவர்களைப் பற்றி நாம் விவாதிக்கத் தேவையில்லை. அவர்கள் நேரடியாக எதிரி முகாமில் எதிரிக்காகவே எழுதியும் பேசியும் வருபவர்கள் என்பது வெளிப்படை. ஆனால், ஜெயபாலன்., இரயாகரன், அ.மார்க்ஸ், சோபா சக்தி உள்ளிட்டவர்கள் அப்படியானவர்கள் அல்ல. அதாவது சிங்கள அரசின் வெளிப்படையான சேவகர்களுமல்ல. மறைமுக சேவகர்கள் என்பது மட்டும் உண்மை. இவர்கள் நடுநிலவாதிகள் புத்தியீவிகள் மானிட விடுதலயாளர்கள் என்ற தமக்கான கற்பனை உலகில் வாழ்ந்தும் எழுதியும் வருபவர்கள் .

கேள்விகளுக்கு பதில் கேட்டால் அதற்குப் பதிலளிக்காமல் அக்கேள்விகளை மறுபடியும் கேள்விக்குட்படுத்துவதும், “ஏழனப்படுத்தியும்” கொச்சைப்படுத்தி பேசி கேள்வியை திசைமாற்றுவதும், வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு “நாங்கள்தான் புரட்சியாளர்கள்.. நீங்களெல்லாம்*(புலிகள்) துரோகிகள்/எதிரிகள்" என்று நகைச்சுவை செய்வதும் புரியாத மொழியில் மானுடம்,சித்தாந்தம்,மனிதம் என பேசுவதும் எழுதுவதும் இவர்களுக்கு கைவந்த கலை என்பதனை இவர்களது செயற்பாடுகள் எமக்கு உணர்த்தியது.

விமர்சனம் என்ற போர்வையில் ஜெயபாலன்., இரயாகரன் உள்ளிட்டோர் செய்து வரும் வேலைகளை மென்மையான முறையில் அ.மார்க்ஸ், சோபா சக்தி போன்றோர் “முற்போக்கு” முகமூடியில் ஒளிந்து கொண்டு செய்கின்றனர்.

தமிழீழ விடுதலைக்கு உதவ முடியாமலும், தம் இரத்த உறவுகளை போர் அழிவிலிருந்து காப்பாற்ற முடியாமலும் போய் விட்டதே என்ற வருத்தம் தமிழ்நாட்டுத் தமிழர் மனதில் ஆறாக் காயத்தை வடுவை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து சிங்கள அரசிற்கு உதவிகளை வழங்கி சிங்கள பேரினவாதத்துடன் “நட்புறவு” பேணும் இந்தியாவின் இந்த போக்கு, இந்திய அரசின் மீதான கோபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்திய அரசின் மீது மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மீதும் தமிழக மக்களுக்கு இயல்பானதொரு கோபமும் இருக்கின்ற நிலையில், இவற்றைத் தணிக்க பெருந்திட்டம் தீட்டி வருகின்றது,இந்திய அரசு.

அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் தமிழ்நாட்டில் எழுச்சி பெற்றுவரும் தமிழ்த் தேசியம், தமிழீழ விடுதலை குறித்த கருத்தியல்கள் மீது அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றது, இக்கூலிக் கும்பல.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்கள்

“புலிகள் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. வலதுசாரிய முதலாளித்துவ சிந்தனையுள்ளவர்களாக இருந்தனர். சாதி ஒழிப்பைப் பற்றி எங்கும் அவர்கள் பேசவில்லை. புலிகள் முஸ்லிம்களை விரட்டினார்கள். சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து புலிகள் செயல்படவில்லை. மாற்று இயக்கத்தினருடன் இணைந்து பணியாற்றவில்லை. மக்களுக்கு விழிப்புணர்பை ஏற்படுத்தவில்லை தமிழ் மக்களை புலிகள் அழித்தொழித்தனர்”

என்பவைதான் புலிகள் மீதான இக்கூலிக்கும்பலின் பிரதான குற்றச்சாட்டுகள். இந்தக் குற்றச்சாட்டுகளை எழுப்புவதால் இவர்கள் எல்லோரும், ஏதோ சனநாயகவாதிகள் என்றோ, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்றோ கருத முடியாது. சர்வதேச தொண்டு நிறுவனங்கள் . மனிதநேய அமைப்புகள் செய்யும் பணிகளுக்கு பின்னால் ஏகாதிபத்தியச்சக்திகள் எவ்வாறு ஒளிந்து கொண்டுள்ளதோ அதே போன்று தான் இவர்களது நடவடிக்கைகளுக்குப் பின்னால், தமிழ்தேசிய எதிர்ப்பு வாத சக்திகள் ஒளிந்து கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவர்களது செயற்பாடுகளை உற்று நோக்கினால், சிங்களப் பேரினவாதம் செய்யும் வேலையை இவர்கள் தமிழ்மக்களுக்குள் இருந்து கொண்டே செய்கிறார்கள் என்பது புலப்படும். இன்னும் சரியாக சொல்லப் போனால், சனநாயகம், மார்க்சியம் போன்ற முற்போக்கு கருத்தியலின் சொல்லாடல்களைக் கொண்டு, அவதூறுகளை அள்ளி வீசும் அற்பத்தனங்களை திறம்பட செய்பவர்கள் இவர்கள் என வரையறுக்கலாம்.

புலிகளின் பரப்புரையாளன் என்கின்ற வகையில், விடுதலைப் புலிகள் என்றுமே விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர்கள் கிடையாது. அவர்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள் தான். அந்த விமர்சனத்தை அவர்கள் மீது எழுப்புகின்றவர்களின் நோக்கமும், விதமும் தான் விமர்சனங்களை எழுப்புபவர்களின் அரசியலைத் தீர்மானிக்கிறது.

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கம், தன் மீதான விமர்சனங்களுக்கு ஏற்ப தன்னை திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும் என்று இவர்கள் எண்ணுவதில்லை. மாறாக, அப்போராட்ட அமைப்பு மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர்கள் ஒரு மக்கள் விரோத சக்தி என உண்மைக்கு மாறன கருத்துக்களை முன்வைத்து அவர்களை மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்துவதன் மூலம், சிங்களப் பேரினவாதத்திற்கு மறைமுகமாக துணை போவது தான், இந்த எழுத்துப் போர் “சித்தாந்திகளின்” வேலைத்திட்டம்.

அண்மையில் நான் சந்தித்த மாற்றுக் கொள்கைகளையுடைய நண்பர் கருத்துரைக்கும் போது, ”நல்ல நண்பன் குறைகளை சுட்டிக் காட்டுவான்” என்று கூறியிருந்தார். அந்தக் கருத்து உண்மையானால் நான் திருப்பிக் கேட்கிறேன், “நீங்கள் என்றைக்கு புலிகளுக்கு நண்பனாக இருந்தீர்கள் என்று சொல்லுங்கள் முதலில்”. வாய்த்திறந்தாலே “புலிகள் பாசிஸ்ட்கள்” என்று சொல்வதும், புலிகள் தலைமை வழிபாட்டுக்காறர் என்றும், எழுதுவதும் பேசுவதையும் தவிர உலக அரங்கில் வதைபடும் இனத்துக்காய் தமிழீழவிடுதலைக்காய் செய்த வேலை தான் என்ன?

“பிரபாகரன் ஒரு பாசிஸ்ட்டு” - “புலிகள் இயக்கம் ஒரு பாசிச இயக்கம்” , புலிகள் சர்வாதிகாரிகள் என்று தம்மைச் சந்திக்கும் இராஜ தந்திரிகளிடமும் சர்வதேச சக்திகளிடமும் கூறிவந்ததுதான் இவர்களது ”வீரதீர” செயற்பாடுகள்.

விமர்சனம் என்ற பெயரில் தாம் மேற்கொண்டுவரும் காட்டிக்கொடுப்பு வேலைகளையும், அவதூறுகளையும் இதுவரை யாருமே அங்கீகரித்தில்லை என்பது தெரிந்தும் அதனை மட்டுமே தொடர்ந்து செய்து வரும் இவர்களது “வீரதீர” நடவடிக்கைகள் வேடிக்கையாக இருக்கிறது. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பற்றி இவர்கள் எழுதுவதிலிருந்தே இதனை நாம் தெரிந்து கொள்ளலாம். இவர்களைப் போன்ற சிங்கள இனவெறி அரசின் இராணுவ துணைக்குழுக்கள் எழுப்பும் கேள்விக்கெல்லாம் நாம் பதில் எழுதும் பட்சத்தில் அவர்கள் திருந்திவிடப் போவதில்லை. மாறாக, அப்படிப்பட்ட துரோகக் குழுக்களின் உண்மை தெரியாமல் சிக்கியிருக்கும் அப்பாவி தமிழ் இளைஞர்களை மீட்டெடுப்பதற்கும், அவர்கள் மீது கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பங்களை உடைத்தெறியவுமே அவை உதவும்.

விடுதலைப் புலிகள் அரசியலை முன்னெடுக்கவில்லையா?

புலிகள் அரசியலை முன்னெடுக்கவில்லை என்று இக்குழுக்கள் கூறுகின்றன. இன்றைய பின்னடைவுக்கும் புலிகளிடம் அரசியல் அறிவும் இராஜதந்திரச் செயற்பாடும் இல்லாமைதான் காரணம் என இவர்கள் கூறி வரும் நிலையில்..

இதற்கான பதிலை விடுதலைப் புலிகளே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு வெளியிட்ட “சோசலிச தமிழீழம்” என்று தலைப்பிடப்பட்ட விடுதலைப்புலிகளின் அரசியல் வேலைத் திட்டம் குறித்த நூலில் இதற்கான பல விளக்கங்கள் உள்ளன. அதன் முதற்பகுதி விடுதலைப்புலிகள் இயக்கமும், தேசிய விடுதலைப் போராட்டமும் என்று தலைப்பிடப்பட்டது. இரண்டாம் பகுதி அரசியல் வேலைத்திட்டமும் கொள்கை விளக்கமும் என்று தலைப்பிடப்பட்டதாகும். இந்நூலை தற்பொழுது எடுத்துக்காட்டுவதன் நோக்கம், புலிகள் இயக்கம் தாயக விடுதலைக்காய் ஆயுதமேந்திப் போராடத் தொடங்கிய காலத்திலிருந்தே மேற்கொண்டு வந்த பல கொள்கைகளும், வரையறுப்புகளும் தற்பொழுது பெரும்பாலானோருக்கு தெரிந்திருப்பதில்லை. அதனால் இதனை இப்பொழுது எடுத்துக் காட்டுகிறேன்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலைப் பயணம் - தியாகம் - உறுதிமிக்க ஆயுதப் போராட்டம் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் அரசியல் பரப்புரை பிரிவு விரிவான கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

' தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போரும் தமிழ் மக்களுக்கான அரசியல் நோக்கும்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையினை நீங்கள் படித்தறிந்து கொள்ளுவதும் அவசியமாகின்றது.

அதே நேரத்தில், 1980 களின் தொடக்கத்தில் இலட்சிய உறுதியுடனும் போர்க் குணத்துடனும் செயல்படத் தொடங்கியவர்களில், இறுதி வரை அதே போர்க்குணத்துடனும் இலட்சிய உறுதியுடனும் நீடித்தவர்கள் ஒருசிலரே. ஆனால், புலிகள் அவ்வாறல்லாமல், தனது தொடக்க காலத்தில் தனக்கென வரையறுத்த கொள்கைகளையும், கோட்பாடுகளையும் இறுதி வரை கடைப்பிடித்தனர். அதனால் தான் புலிகள் என்கின்ற மக்களின் இயக்கம் இன்று வரை உலகத் தமிழர் மனதில் நீங்கா இடத்துடனும், உலக வரலாற்றில் வேறு எந்த கெரில்லா விடுதலைப் போராட்ட இயக்கமும் செய்திராத மாபெரும் சாதனைகளை செய்தும் உள்ளது.

“எமது இயக்கம் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அரசியல் இலட்சியமே ஆயுதப் பாதையை வழிநடத்த வேண்டும் என்பதில் நாம உறுதியாக இருக்கிறோம்.

ஆரம்பகாலத்திலிருந்து எமது இயக்கம் அரசியல் பிரிவிலிருந்து இராணுவ அமைப்பை வேறுபடுத்தவில்லை. பதிலாக, இரு பிரிவுகளும் ஒன்றிணைக்கப்பட்ட அரசியல் - இராணுவ வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. இந்த வேலைத்திட்டம் ஆயுதப் போராட்டத்தை ஒரு அதியுயர்ந்த அரசியற் போராட்ட வடிவமாகவே கொள்கிறது."

ஒரு அரசியல் சக்தியாக இல்லாவிட்டால், புலிகள் அம்மண்ணில் கடந்த 35 வருடங்களாக காலூன்றி நின்றிருக்க முடியாது. மக்களை அரசியல்மயப்படுத்தியதன் காரணமாகத்தான், புலிகள் கைகாட்டியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்கள். மக்களை அரசியல்படுத்தியதால் தான், “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற பிரகடனம் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று இன்றைக்கு உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகின்றது.

புலம் பெயர் மக்களை புலிகள் அரசியல்படுத்தியதால் தான் அவர்கள் புலம் பெயர் நாடுகளில், அந்தந்த நாடுகளின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் மக்கள் திரளாக அவர்களால் வளர முடிந்திருக்கிறது.

இவ்வாறு, ஈழத்தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் தனது இராணுவ நடவடிக்கைகளின் மூலமாகவே அரசியல்மயப்படுத்தியவர்கள் புலிகள். இவர்களைப் பார்த்து மக்களை அரசியல்மயப்படுத்தவில்லை என்ற குற்றம் சாட்டுகின்றது, இந்த சித்தாந்தக் கும்பல்.

புலிகள் மீது மட்டுமின்றி, அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவோர் மீதும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் படுகின்றன.

“அரசியல் போராட்டத்தின் முதிர்ந்த வடிவம்தான் ஆயுதப் போராட்டம் என்பதையும், அரசியல் போராட்ட அனுபவத்தினூடாக ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை மக்கள் உணரச் செய்யவேண்டும்” என்று நாம் கூறுவதையும் இவர்கள் ஏன் ஏற்க மறுக்கிறார்கள்.”

அரசியல் போராட்டத்தின் முதிர்ந்த வடிவம் தான் ஆயுதப் போராட்டம் என்று எழுதும் இந்த புதிய ஜனநாயகக் கும்பல், ஏன் அதனை புலிகளின் செயல்வடிவத்தினூடாக ஏற்க மறுக்கின்றனர், இவர்களது அறிக்கைகள் பலவற்றில், “ஆயுதாங்கிய பாதையில் அணி திரள்வோம்” அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தறிவோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், 30 வருடங்களாக தன்னை நம்பியுள்ள தோழர்களிடம் மட்டைத்துப்பாக்கியைக்கூட காட்டியது கிடையாது. இது தான் இவர்களின் அரசியல் சித்தாந்தம். அப்பாவித்தனமாக இவர்களிடம் சிக்கியிருக்கும் இளைஞர்களின் நிலை தான் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

விடுதலைப்புலிகள் வலதுசாரிச் சிந்தனையுள்ளவர்களா?

எமது இலக்கு சுதந்திர சோசலிச தமிழீழத் தனியரசே என்று முதலிலேயே தனது அரசியலை பிரகடனப்படுத்தியவர்கள் விடுதலைப்புலிகள். தேசிய இன விடுதலை பற்றிய மார்க்சியப் புரிதல்களுடன் தான் எமது போராட்ட இயக்கம் கட்டமைக்கப்பட்டது. தேசிய விடுதலையும், சோசலிச சமூகப் புரட்சியுமே எமது இயக்கத்தின் அடிப்படை அரசியல் இலட்சியங்கள் கோட்பாடுகள் என்று அன்றே தலைமைத்துவத்தால் பிரகடனப்படுத்தப்பட்டவை.

உலகமையம் அழித்து வரும் தேசிய இன அடையாளங்களை பாதுகாப்பதன் மூலமும், தேசிய இன அடையாளத்தை மீட்டெடுப்பதன் மூலமும், தேசிய இன விடுதலைக்குப் போராடுவதன் மூலமும் உலக மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் புலிகள். தாயக மண்ணில் எந்தவொரு ஏகாதிபத்தியமும் காலூன்ற முடியாத படி தனது இராணுவத்தைக் கட்டமைத்தது நிர்வாக அலகுகளைக் கொண்டிருந்தது புலிகள் இயக்கம். ஏகாதிபத்தியம், காலனித்துவம், நவ-காலனித்துவம், இனவாதம் ஆகியவையே உலக மக்களின் பொது எதிரிகள் என்று புலிகள் வரையறுத்திருந்தனர்.

“தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. அதே சமயம், எமது சமூகத்தை பிரபுத்துவ சமூக வடிவமாகவும் சித்தரிக்க முடியாது. தமிழீழ சமுதாய அமைப்பானது தனக்கேயுரிய ஒரு தனித்துவமான பொருளுற்பத்தி வடிவமாகத் திகழ்கிறது.

வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்சசொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு சிக்கலான பொருளாதார அத்திவாரத்தில் எமது சமுதாயம் கட்டப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் எமது சமுதாயத்திற்கு அத்திவாரமாக விளங்கும் பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்குமுறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது.

எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சுதந்திர சோசலிச சமதர்மத் தமிழீழத் தனியரசுக்கான சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்.”

இரண்டு சகாப்தங்களுக்கு முன்பே எம்மால் எழுதப்பட்ட மேற்கண்ட வரிகள், புலிகளின் தமிழ்ச் சமூகத்தின் மீதான புரிதல்களையும், மார்க்சிய இயங்கியல் கண்ணோட்டத்திலேயே தமிழர் பிரச்சினையை புலிகள் அணுகியதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

சாதி ஒடுக்குமுறை பற்றி புலிகள் பேசவில்லையா?

சாதிய ஒடுக்குமுறை பற்றி புலிகள் எங்குமே பேசவில்லை. யாழ்ப்பாண வெள்ளாள சமூகத்தினரின் மனநிலையே புலிகள் இயக்கத் தலைமையின் மனநிலை என்று ஒரு பெரும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த அவதூறுகளுக்கும் புலிகளின் முதல் அரசியல் அறிக்கையே பதில் அளிக்கிறது.

“எமது சமுதாய மேம்பாட்டிற்கு ஒரு சாபக்கேடாகவும் சமூக சமத்துவத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாகவும் இருந்துவருவது சாதியக் கொடுமையாகும். சாதிய அமைப்பு எமது கிராமியப் பொருளாதார வாழ்வுடன் ஒன்று கலந்திருக்கிறது. வர்க்க அமைப்புடன் இணைய பெற்றிருக்கிறது. தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட பொருள் உற்பத்தி உறவுகளுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. மத சித்தாந்த உலகிலிருந்து வேரூன்றி வளர்ந்திருக்கிறது.

தொழிலின் மகத்துவத்தை இழிவுபடுத்தி, மனிதனை மனிதன் வேறுபடுத்தும் இந்த மூட வழக்கு முறையை முற்றாக ஒழித்துக்கட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் திடசங்கற்பம் பூண்டிருக்கிறது. சாதியத்தின் பெயரால் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து நசுக்கப்பட்டுவரும் தமிழீழப் பாட்டாளி வர்க்கத்தின் விடிவிற்காக எமது இயக்கம் அயராது உழைக்கும். உழைப்பின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச பொருளாதாரத் திட்டத்தை அமுலாக்குவதன் மூலமும், புரட்சிகரமான கல்விமுறை வாயிலாகவும் இந்த சமூக தீமையை எமது இயக்கம் ஒழித்துக்கட்டும்.”

சாதியைப் பற்றி எங்குமே புலிகள் பேசவில்லை என்ற அவதூற்றை, 1980களிலேயே விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட அரசியல் பிரகடன அறிக்கையின் மேற்கண்ட வரிகள் புலிகளின் உண்மை நிலைப்பாட்டினை எடுத்துக் காட்டுகின்றன. சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும் உடனடியாக அதனை ஒழிக்க முடியாது என்பதையும் அதற்கு தொடர்ச்சியான நீண்டகாலத் திட்டங்கள் தேவை என்பதனையும் புலிகள் உணர்ந்திருந்தனர் என்பதனை இவை காட்டுகின்றன. எமது இயக்கப் போராளிகள் அவரவர் சொந்த சாதியிலேயே திருமணம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்ததை இச்சமயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

முஸ்லிம்கள் மீதான அணுகுமுறை

இலங்கை வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் தனித்துவமான ஒர் இனக்குழு என்றும் முஸ்லிம்களின் தாயகம் வடகிழக்குப் பிரதேசமே என்றும் புலிகள் அங்கீகரித்திருந்தனர்.

“வடகிழக்குப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் பொதுவான தாயகத்தையும், பொதுவான மொழியையும், பொதுவான பொருளாதார வாழ்வையும், பொதுவான நலன்களையம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விதம் ஒன்றிணைந்த சமூகப் பொருளாதா வாழ்வு காரணமாக ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் தங்கியிருப்பதால் தமிழரும் முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்ட சக்தியாக ஒருங்குசேர்ந்து தமது உரிமைக்காகப் போராடுவது அத்தியாவசியமானதாகும். முஸ்லிம் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்றால், தமது நலன்களை அடைந்து நல்வாழ்வு காண வேண்டுமென்றால், முக்கியமாக, தமது இன, மத, கலாச்சார தனித்துவத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்றால் தமிழருடன் ஒன்றுபட்டு வாழ்ந்து, தமிழருடன் ஒருங்கிணைந்து போராடுவதே சாலச்சிறந்ததாகும்.”

“தமிழ் பேசும் மக்களின் ஐக்கியத்தைக் குலைத்து, தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டை சிதறடிக்கும் நோக்கத்துடன் சிங்கள இனவாத அரசானது தமிழர் முஸ்லிம் மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டிவிடும் நாசகார முயற்சிகளில் ஈடுபட்டு வருவதோடு எமது பொதுத் தாயகப் பூமியையும் படிப்படியாக விழுங்கி வருகின்றது. பொதுவான எதிரியையும், பொதுவான இலட்சியங்களையும் எதிர்கொள்ளும் தமிழ் முஸ்லிம் மக்கள் தமது தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட ஒன்றுபட்டுப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.”

புலிகள் முஸ்லிம் மக்களுடன் உறவு பேண விரும்பியதையும், அவர்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற ஈடுபாட்டையும் புலிகள் கொண்டிருந்தனர் என்பதனை மேற்கண்ட வரிகள் தெளிவுபடுத்துகின்றன.

காலப்போக்கில், முஸ்லிம் மக்கள் சிங்கள இனவெறியர்களுடன் உறவு பேணியதால், சில துன்பியல் சம்பவங்கள் நடைபெற்றன. முஸ்லிம் மக்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற நோக்கில், புலிகளின் முதல் முஸ்லிம் போராளியின் படத்தைத் தாங்கியபடி “ஒன்றிணைந்து போராடுவோம்” என்று புலிகளின் அரசியல் பிரிவு ஒரு புத்தகத்தையும் இந்நேரத்தில் வெளியிட்டது. அந்த புத்தகத்தில் புலிகள் முஸ்லிம் மக்களுக்கும் தமிழர்களுக்குமான பொது எதிரியான சிங்களப் பேரினவாதத்தை முறியடிக்க ஒன்றிணைந்து போராடுதல் அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தி இருந்தார்கள்.

சிங்களப் பேரினவாதம் தமிழ் - முஸ்லிம் மக்களிடையிலான உறவை சீர்குலைத்து, பகைமையைக் கட்டமைக்கும் வழிமுறைகளில் ஈடுபட்டிருந்ததையும் புலிகளின் வெளியீடுகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தனர். ஆனால், முஸ்லிம் இனவாதக் குழுக்கள் பல உருவாக்கப்பட்டு, சிங்கள இனவெறி சக்திகளுடன் இணைந்து கொண்டு ஆயுதம் தரித்து தமிழர்களை வேட்டையாடிதை வரலாறு கண்டது.

சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகன நடவடிக்கைகளில் தொடர்ந்து பல முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஈடுபட்டு வந்தன. இவர்களுக்கு எதிராக புலிகளின் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட சிலரை வைத்துக் கொண்டு, ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களுக்கும் எதிரானவர்கள் புலிகள் என்ற ஒரு கருத்துருவாக்கம் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது. யாழ் மற்றும் மூதூர் வெளியேற்றங்கள் குறித்து மூச்சுக்கு முன்னூறு தடவை பேசுகின்ற பலரும், அந்த வெளியேற்ற நடவடிக்கைக்காக புலிகள் பகிரங்கமாக பலதடவைகள் மன்னிப்புக் கேட்டது குறித்து வாய்த்திறக்காமல் மூடிக்கொள்வதற்கு, பின்னணியில் பேரினவாதம் தான் ஒளிந்து கொண்டுள்ளது.

புலிகள் சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடவில்லையா?

“சிறீலங்காவின் பாசிச அரசானது தமிழ் பேசும் மக்களது விரோதி மட்டுமின்றி ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் சிங்களப் பாட்டாளி மக்களதும் பிரதான எதிரியாகும். இந்தப் பாசிச அரச இயந்திரத்தை இயக்கிவரும் ஆளும் வர்க்கமானது தமிழருக்கு எதிரான இனவெறியைக் கிளறிவிட்டு தனது ஆட்சி அதிகாரத்தை நீடித்து வருகிறது. பேரினவாத சித்தாந்தத்தைப் பரப்பி தமிழ் - சிங்கள பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டையும் சிதறடித்து வருகிறது. இந்தப் பேரினவாத பாசிச அரசையே விடுதலைப் புலிகள் இயக்கம் தனது எதிரியாகக் கருதுகிறதே தவிர, சிங்களப் பொது மக்களை அல்ல. சிங்கள பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர தோழமை சக்தியாகவே எமது இயக்கம் செயல்படும். சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக நாம் முன்னெடுக்கும் சுதந்திரப் போராட்டம் சிங்களப் பாட்டாளி வர்க்கத்தின் சுபீட்சத்திற்கும் வழி வகுக்கும் என்பது திண்ணம்.

.... சுதந்திர தமிழீழத்தில் தமிழ் பேசும் மக்களோடு ஐக்கியமாக வாழவிரும்பும் சிங்கள மக்களை தமிழீழப் பிரஜைகளாக ஏற்று, அவர்களுக்கு சகல சனநாயக சுகந்திரங்களையும், உரிமைகளையும் வழங்க எமது விடுதலை இயக்கம் முடிவு செய்திருக்கிறது.”

விடுதலைப்புலிகளின் முதல் கொள்கை விளக்க அறிக்கையிலேயே தெளிவுடன் சிங்களப் பாட்டாளி வாக்கத்துடன் இணைந்து போராட தயாராக இருந்ததாக புலிகளின் மேற்கண்ட வரிகள் தெரிவிக்கின்றன. புலிகளின் இம்முடிவை அங்கீகரித்து தமிழ்ப் பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து போராட முற்பட்ட சிங்கள பாட்டாளி வர்க்க சக்திகள் ஏதேனும் ஒன்றையாவது இந்தக் கூலிக்கும்பல் அடையாளம் காட்ட முடியுமா?( எம்மால் இனங்காணப்பட்டு இன்றும் எம்மோடு பயணிக்கும் சிலரை தவிர) முடியாது.

சிங்கள இனத்தில் அப்படிப்பட்ட பாட்டாளி வர்க்க சக்திகளே இல்லாத நிலையில், தமிழ்த் தேசிய இனம், தனது விடுதலைப் போராட்டத்தை ஒத்தி வைத்து விட்டு, சிங்கள இனத்தின் பாட்டாளி வர்க்கம் எழுந்து நிற்கிற வரை சிங்கள இனவெறிக் கும்பலின் ஒடுக்குமுறைகளை தாங்கிக் கொண்டு அப்படியே அழிந்து போக வேண்டுமாம். இது தான் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்று கருத்துரைக்கிறது, சோபாசக்தி, அ.மார்க்ஸ், ஜெயபாலன். கும்பல். இது தான் இந்திய சிங்கள கும்பலின் ஆசையும் கூட..

“ஒன்றுபட்ட இலங்கை” என்ற பெயரில் ஓலமிடும் இந்திய சிங்கள கும்பலின் முழக்கத்திற்கும் “சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடுங்கள்” என்று முழக்கமிடும் இரண்யன்., சோபாசக்தி உள்ளிட்ட கூலிக்கும்பலின் முழக்கத்திற்கும் வித்தியாசம் இது தான். இக் கும்பல் “தேசிய ஒருமைப்பாடு” என்று கூச்சலிடுவதை, மார்க்சிய சாயம் பூசி கொள்கை முன்னெடுப்புச் செய்கின்றது என்பது தான் வித்தியாசம். இந்தியாவின் போலிக் கம்யுனிஸ்டுகளின் “ஒன்றுபட்ட இலங்கை” முழக்கத்தையே அதிலிருந்து பிறந்த இந்தக் குழுக்களும் வலியுறுத்துகிறன.

பாட்டாளி வர்க்க சர்வதேசிய சாயமடித்து பிராந்திய நலன்சார் முதன்மைத்துவத்தை திணிக்கும் கலையில் இவர்களுக்கு நிகர் அவர்களே தான்.

முதலில் தமிழ் இனம் ஒர் அங்கீகரிக்கப்பட்ட தேசத்தை பெற வேண்டும் அதற்குப் பிறகு தான் சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து சர்வதேசியத்தைப் பற்றி சிந்திக்க முடியும் என்று இவர்கள் துணிந்து சொல்வதற்கு இவர்களுக்குத்துணிவில்லை. ஆனால், தாயக விடுதலைக்காகப் போராடும் புலிகளை மட்டும் சிங்களர்களைப் போலவே இவர்களும் சேர்ந்து இழிவுபடுத்துவதை மட்டும் தவறாமல் செய்கிறார்கள். இதுதான் இவர்களது விழிப்புமிக்க சர்வதேசியம்..!

ஒரு பாட்டாளி வர்க்கம் தனக்கான ஒரு நாடு, வரையறுக்கப்பட்ட எல்லைகள் கொண்ட இறையாண்மையுள்ள ஒர் ஆட்சிப் பகுதி இருந்தால் தான் அங்குள்ள அதிகார வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தையும், உலகு தழுவிய உலகமயமாக்கலுக்கு எதிரான சர்வதேசியப் போராட்டத்திலும் பங்கெடுக்க இயலும். தனக்கருககில் உள்ள அண்டை தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து போராடவும் இயலும். இதுவே மார்க்சிய அடிப்படை.

ஒடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் தேசிய விடுதலைக்கான தீர்வை இன்னொரு நாட்டின் பாட்டாளி வர்க்கம் வரையறுக்கக் கூடாது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

தயாகம்,தேசியம்,சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டின் அப்படையிலான தமிழீழக்கோரிக்கை, தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை என்பது போல, தவறாக புரிந்து கொண்டிருக்கும்இக் கும்பலின் கூற்று பலதவறான கற்பிதங்களுக்கன கருத்துருவாக்கமே . தமிழீழ மக்களின் வாழ்வுரிமைக்காக தமிழ்த் தேசிய இனம் நாடிய தீர்வே தமிழீழக்கோரிக்கையாகும். இதனை அவர்கள் 1977இல் நடந்த தேர்தலின் மூலம் வெளிப்படுத்தியிருந்தர்கள். இதன் அடிப்படையில் தான் புலிகளும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான வடிவம் தமிழீழமே எமது இலட்சியம் என வகுத்துக்கொண்டார்கள். இது இந்த சித்தாந்திகளுக்கு நன்கு தெரியும். ஆனால், அதை அவர்கள் எவ்வாறெல்லாமோ மழுப்பி கடைசியில் “ஒன்றுபட்ட இலங்கை” குட்டைக்குள்ளும் “பாட்டாளி வர்க்க சர்வதேசிய” சொல்லாடல்களிலும் விழுந்து விடுவார்கள்.

ஒடுக்குகின்ற இனத்தின் பாட்டாளி வர்க்கம் தனது விடுதலைக்காக முன்னெழுந்து போராடுகின்ற நிலையில், ஒடுக்கப்படும் இனத்தின் பாட்டாளி வர்க்கம் அதனுடன் சேர்ந்து செயல்பட முடியும். ஆனால், ஒடுக்கும் இனத்தில் அவ்வாறான பாட்டாளி வர்க்க சக்திகள் இல்லாத நிலையில், ஒடுக்கப்படும் இனம் எவ்வாறு அவர்களுடன் சேர்ந்து செயல்பட இயலும்?

ஜனதா விமுக்தி பெரமுனே ஜேவிபி கட்சி சிங்கள இனத்தின் பாட்டாளி வர்க்கக் கட்சியாக அடையாளப்படுத்தப்பட்டு, இன்று சீரழிந்த இனவாதக் கட்சியாக உள்ளது. இது போன்ற சிங்களப் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் இனவாதத்தில் விழுந்து போவதற்குக் காரணம் என்ன?

சிங்கள உழைக்கும் மக்களின் உளவியல் தான் காரணம். இவ்வாறான உளவியலைக் கொண்ட சிங்கள உழைக்கும் மக்கள், தமிழ்ப் பாட்டாளி வர்க்கத்தின் விடியலுக்காக இதுவரை செய்தது தான் என்ன?

செய்யப் போவது தான் என்ன?

ஒன்றுமில்லை..

ஆனால் இவை பற்றி எண்ணாமல், சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் உறவு பேணவே புலிகள் விரும்பினர். எழுச்சியுடன் ஜே.வி.பி. வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவர்களுடன் உறவு பேண புலிகள் முயற்சி எடுத்தனர். “ஹீரூ” -HIRU என்ற ஜே.வி.பி. ஆதரவு பத்திரிக்கை புலிகளின் முயற்சியை வரவேற்று, புலிகளின் கொள்கைகளையும் அங்கீகரித்து எழுதியது. பின்னால், அப்பத்திரிகையின் ஆசிரியர் துரத்தியடிக்கப்பட்டு அம்முயற்சி ஜே.வி.பி.யாலேயே உடைத்தெறியப்பட்டது. இது மறுக்க முடியாத உண்மை.

புலிகள் மாற்று இயக்கத்தினருடன் இணைந்து செயல்படவில்லை என்கிறார்கள். மாற்று இயக்கத்தினர் என்று இக்கூலிக்கும்பல் சொல்லும் அனைத்து இயக்கங்களையும் அவர்களே “ஒட்டுக்குழுக்கள்” என்று தான் விமர்சிப்பார்கள்.

சிங்கள பேரினவாதத்துடன் இந்திய தலைமையுடனும் சமரசம் செய்து கொண்ட அது போன்ற ஒட்டுக்குழுக்களுடன் புலிகளும் இணைந்து தமிழ் மக்களுக்கு “சேவகம்” புரிய வேண்டுமாம்.

இதைத் தான் இந்தக் கூலிக்கும்பல் விரும்புகிறது. அதாவது, சிங்கள பேரினவாதத்துடனும், இந்திய உளவுத்துறையினருடனும் சமரசம் செய்து கொண்டு புலிகள் இருக்க வேண்டுமாம்.

இந்த ஒரு வாதமே இந்தக்கூலிக்கும்பலை யாரென அம்பலப்படுத்துகின்றது. தமிழ் மக்களை புலிகள் கொன்றார்கள் என்று சிங்களவர் குரலில் பேசும் இந்தக் கூலிக்கும்பலுக்கும், அந்தக் கூலிகளே “சதியாளர்கள்” என விமர்சிக்கும் இந்து என்.ராம், , சோ, சு.சுவாமி, போன்றவர்களுக்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தும் இந்தத் துரோகக் குழுக்கள், இந்த விமர்சனங்களை எழுப்புகின்ற போர்வையில் ஒளிந்து கொண்டு,

நீங்கள் இதுவரை தமிழ் மக்களுக்காக செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினால் மட்டும் இருந்த இடம் தெரியாமற் காணாமற் போய்விடுவார்கள்.

புலிகளின் மீது இந்த கும்பலுக்கு இருக்கும் வன்மம், புலிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் செயல்படும் தமிழ்த் தேசிய சக்திகளையும் விட்டுவைப்பதில்லை.

இந்தியாவின் ராஜதந்திரம் தோற்றுவிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறிவருகிறார். இன்னும் இந்தியத் தேசிய மனநிலையிலிருந்து முற்றிலும் விடுபடாத அவரது இக்கருத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியவாதிகள் அனைவரும் இந்தியத் தேசியததை ஏற்பவர்கள் என்று முழங்கி வரும் மாக்சிய சிந்தனா வாதிகளின் செயல்பாடுகள் இதற்கொரு எடுத்துக்காட்டாக அமைகின்றது.

உண்மையான தமிழ் உணர்வாளர்கள், இந்தியத் தேசியத்தை ஏற்கவில்லை என்பது இந்த கும்பலுக்கு நன்கு தெரியும்.

இருந்தாலும், அவ்வப்போது நெடுமாறன் கோபால்சாமி இராமதாஸ் திருமாவளவன் போன்ற பலவீன சக்திகளை மையப்படுத்தி தமிழ் உணர்வாளர்களை, இனவாதிகள் என முத்திரை குத்த வேண்டும் என்று செயல்படுவது இவர்களது தமிழ்நாட்டு வேலைத்திட்டத்துள் ஒன்று. இது தனது எஜமானர்களிடமிருந்து மாக்சிய வாதிகள் கற்றுக் கொண்ட ராஜதந்திரம்.

இதன் ஒரு பகுதியாகத் தான், புலிகள் மீது எப்படி யாழ்ப்பாண வெள்ளாளர் மனநிலை உள்ளவர்கள் என்று முத்திரைக் குத்தப்படுகின்றதோ அதே போல, தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியவாதிகள் மீது தொடர்ந்தும் ஆதிக்க சாதி வெறி முத்திரை குத்தப்படுகின்றது. புலிகளுக்கு சோபாசக்தி, ஜெயபாலன் போல, தமிழ்நாட்டு தமிழ்த் தேசியவாதிகளுக்கு மதிமாறன் போன்றவர்கள் செயல்படுகின்றனர்.

வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் தனது மரண சாசனத்தில் குறிப்பிட்டது போல, தமிழர் என்ற ஒற்றுமை உணர்வை சீர்குலைக்கவே உளவுத்துறையினர் சட்டக்கல்லூரி சாதி மோதலை தூண்டினர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

ஈழமண்ணில் ஏற்பட்டுள்ள இன அழிவால் தமிழகத்தில் தற்பொழுது ஓரு தமிழ்த் தேசிய அலை மெல்ல எழுந்து வருகின்றது. அனைத்துத் தரப்பிலிருந்தும் “நாம் தமிழர்” என்ற முழக்கம் சாதி வேறுபாடின்றி, மத வேறுபாடின்றி மெல்ல அரும்பி வருகின்றது.

இச்சூழல் இந்தியத் தலைமைகளுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனை சீர்குலைக்க மற்றொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழர் என்ற அடையாளத்தை அழித்து சாதி வேற்றுமையை முதன்மைப்படுத்துவது தான் அது. இல்லையெனில், எப்பொழுதோ எழுந்த ஒரு விவாதத்தை “நாம் தமிழர்” என்று எல்லோரும் உணர்ந்து வரும் இவ்வேளையில் வெளியிட்டு,

தமிழ்ச் சமூகத்தின் சாதி வேற்றுமைகளை வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டும் என்று எண்ணுகிற “குமுதம்” இதழ் குசும்பிற்கு சற்றும் சளைக்காத மதிமாறன்கள் தற்பொழுது வேகமாக செயல்படவேண்டிய அவசியம் என்ன?

நட்பு சக்திகள் போல் வேடமிட்டு வரும் சீர்குலைவு சக்திகளை நாம் அடையாளம் கண்டு கொண்டால் தான், நாம் எதிரியை நோக்கி முன்னேறிச் செல்ல முடியும் என்ற புரிதலை நாம் பெற்றாக வேண்டும்.

இது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட.

இந்தக் கூலிக்கும்பல்களின் போலிச் சித்தந்தத்தையும் புரியாத மொழியிலான புலம்பல்களையும், காலச்சூழலை கருத்தில் எடுத்து இனியாவது சிந்திக்க வேண்டும்.

ஏனெனில் இந்த உலகத்தில் அசைவியக்கத்தின் ஆதாரமுள்ளவரை தமிழினத்தின் குறியீடாக பிரபாகரன் என்கின்ற ஆத்மாவும், விடுதலைப் புலிகள் என்கின்ற வடிவமும் இருந்துகொண்டே இருக்கும். காரணம் விண்ணிருந்து பார்ப்போம் விடுதலையை என்று சொல்லி கண்ணெதிரே கல்லறையில் தூங்கும் காவிய நாயகரின் கல்லறைகள் கருத்தரிக்கும்.........

http://www.infotamil.ch/

புலிகள் அமைப்பு இன்னமும் கலைக்க படவில்லை....! சில குழப்பமான நிலைகள் வருவது தமிழர்களுக்கு இது தான் முதல் முறையும் இல்லை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.