Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிந்தோ, அறியாமலோ - யானை தன் தலையில் தானே...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிந்தோ, அறியாமலோ - யானை தன் தலையில் தானே...

[ வியாழக்கிழமை, 01 ஏப்ரல் 2010, 03:36 GMT ] [ புதினப் பணிமனை ]

புதினப்பலகை-க்காக நந்தன் அரியரத்தினம்

தமிழ்த் தேசிய அரசியலின் படிமுறை வளர்ச்சிப் போக்கின் ஒவ்வொரு அங்குலத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்களினதும், போராளிகளினதும் உயிர்த் தியாகங்களும் உழைப்பும் இருக்கின்றது.

இன்று - ஆயிரக்கணக்கான வன்னி மக்கள் அடுத்த வேளை உணவுக்காகக் கையேந்தி நிற்கும் அவலமும், ஆயிரக்கணக்கானவர்கள் தமது அங்கங்களை இழந்து ஆதரவற்றிருப்பதும் நாம் இதுவரை பேசிவந்த தமிழ்த் தேசியத்தின் பேரால் தான்.

ஆனால் - இன்று எல்லோரது மனங்களையும் ஆக்கிரமித்திருக்கும் கேள்வி நாம் இவ்வளவு விலை கொடுத்தும் கண்டதென்ன?

இந்தக் கேள்விக்கு தமிழ்த் தேசியம் பற்றிப் பேசும் எந்த ஒரு நபரிடமும் பதில் இருக்கப் போவதில்லை.

இதனை எழுதும் என்னிடமும் பதில் இல்லை.

இன்று - நாடு கடந்த அரசு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள்வாக்கெடுப்பு என்றெல்லாம் பேசும் எவரிடமும் இதற்கு பதில் இருக்கப் போவதில்லை.

இது தான் இன்றைய ஈழத்தின் அரசியல் யதார்த்தம். அப்படியானால் நாம் என்ன செய்வது?

அமைதியாக சிங்களத்தின் நிகழ்சிநிரலை ஏற்றுக் கொண்டு வாழப் பழகுவதா, அல்லது எல்லாவற்றையும் இழந்து விட்டாலும் நம்மிடம் எஞ்சியிருப்பவற்றைக் கொண்டு நமது சுயமரியாதையை உறுதிப்படுத்தும் வகையில் செயலாற்றுவதா?

இதில் எது நமது தெரிவாக இருக்கப் போகிறது?

இது தான் இன்றைய பாராளுமன்ற தேர்தல் களம் நம் முன் நிறுத்தியிருக்கும் கேள்விகள்.

பயணத்திற்குச் சாதகமான வழியில் செல்வதா அல்லது படுகுழிகள் நிறைந்த பாதையொன்றை தெரிவு செய்வதா...?

இன்றைய பாராளுமன்ற தேர்தலின் முக்கியத்துவம் என்ன...?

ஏன் இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை சிதைப்பதற்கான இரகசிய நிகழ்சிநிரலொன்று [Hidden Agenda] அமுல்படுத்தப்பட்டிருக்கிறது...?

இந்த கேள்விகளுக்கான விடைகள் தான் இன்றைய தேர்தல் களத்தில் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணிதிரள வேண்டிய காலத் தேவையை உணர்த்த வல்லன.

இது கடந்த முப்பது வருடங்களாக ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டத்தின் உச்சத்தை தொட்டு நின்றதாக கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தலாகும்.

விடுதலைப் புலிகளின் அழிவு என்பது நமது தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரையில் ஒரு நம்பிக்கை மிகு சகாப்தத்தின் துயர முடிவாகும்.

அந்தத் துயரத்திலிருந்து மீண்டெழுவதற்கு முன்னரே நம் முன் மீண்டுமொரு சவால்.

நமது அரசியல் அடையாளத்தை எவ்வாறு பேணிப் பாதுக்காக்கப் போகின்றோம், எத்தகைய வடிவத்தில் பாதுகாக்கப் போகின்றோம்?

இங்கு கவனம் கொள்ள வேண்டிய முக்கியமான புள்ளியொன்று இருக்கிறது,

2009 மே 19இல் இலங்கையில் கடந்த முப்பது வருடங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக சிறிலங்கா அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றது.

இதற்கு - முதல் நாள் புலிகளின் அரசியல் துறைத் தலைவர் நடேசன் உட்பட பலர் வெள்ளைக் கொடியுடன் சரணடைய முற்பட்டபோதும், சர்வதேசப் போரியல் நியமங்களை மீறி அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளன என்பதற்கு அப்பால் - அரசியல் அர்த்தத்தில் - இதன் சிங்கள உள்நோக்கம் வேறு ஒரு பரிமாணம் கொண்டதாகும்.

நடேசனின் சரணடைவு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் விடுதலைப் புலிகள் புதியதொரு அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபடுவதற்கும் செயலாற்றுவதற்குமான வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம்.

அவர்களின் இராணுவ ரீதியான கட்டமைப்புக்கள் நிர்மூலமான நிலையில், நிச்சயமாகப் புதிய புவிசார் அரசியல் நிலைமைகளை கருத்தில் கொண்டு, உள்ளக சுயநிர்ணய அடிப்படையில், ஜனநாயக ரீதியாகப் போராடுவது குறித்து நடேசன் தலைமையில் புலிகள் சிந்தித்திருக்கலாம்.

ஆனால் - சரணடைந்த நடேசன் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்களின் படுகொலை மூலம் அது தடுக்கப்பட்டுவிட்டது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புடன் புலிகளின் இராணுவ ரீதியான அனைத்து செயற்பாடுகளும் முடிவுக்கு வர, நடேசன் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டும், குறிப்பிட்ட மேலும் சிலர் அறியமுடியாத அளவிற்குத் தடுத்து வைக்கப்பட்டதன் மூலமும் புலிகள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து போராடுவதற்கான சந்தர்ப்பமும் முற்றாக அழிக்கப்பட்டது.

இவ்வாறான ஒரு அரசியல் பின்புலத்தில் தான் தமிழ்த் தேசியத்தை பாதுகாக்கும் வரலாற்றுப் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது விழுகிறது.

"திம்புக் கோட்பாடுகள்" என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய அரசியல் பதங்களை முன்னிறுத்தி மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தும் உறுதியான அமைப்பாகத் தன்னை வெளிக்காட்டியது.

புலிகளின் அதிர்ச்சி மிகு அழிவுக்குப் பின்னர் தமிழ்த் தேசியத்தின் அடிப்படையில் மக்களை ஒன்றுபடுத்தும் அரசியல் தலைமை ஒன்று இருக்கப் போவதில்லை என்றும், அப்படியொரு வாய்ப்பு குறுகிய காலத்தில் தமிழ் மக்களுக்குக் கிடைக்காது என்றும் சிங்களம் கணக்குப் போட்டுக் கொண்டிருந்த சூழலில் தான் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதியதொரு வரலாற்றுக் கடமையுடன் தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த ஒன்று தான் சிங்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தைக் குறிவைத்துச் சிதைக்க முயலும் வேலைத் திட்டத்தின் பின்னாலுள்ள காரணமாகும்.

தமிழ் மக்கள் மீண்டும் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டு நிற்பதைச் சிங்களப் பெருந் தேசியவாத சக்திகள் அறவே விரும்பவில்லை.

அவ்வாறு மக்கள் ஒன்றுபட்டு நிற்பார்களானால், தற்போதைய சர்வதேச சனநாயக ஒழுங்கிற்கு ஏற்றவாறான தீர்வு ஒன்றை நோக்கிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் கொழும்பிற்கு ஏற்படலாம்.

தனது பிராந்தியப் பாதுகாப்பிற்குத் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளில் சுமுகமான நிலைமை இருப்பது அவசியம் என்று இராஜதந்திரக் கணக்குப் போடும் இந்தியாவிலிருந்தும் கொழும்பிற்கு சில நெருக்குவாரங்கள் வரலாம் என்றும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் கணக்குப் போடுகின்றனர்.

இதனைத் தங்களது நிகழ்சிநிரலுக்கு ஏற்ப தடுத்து நிறுத்த வேண்டுமாயின் தமிழ் மக்கள் வலுவானதொரு அரசியல் தலைமையைக் கொண்டிருக்கக் கூடாது என்பதை ஒரு எதிர்த்-தந்திரேபாயமாகவே [Counter strategy] கொழும்பு கருதுகிறது.

கொழும்பைப் பொறுத்தவரையில், அது வடக்கு-கிழக்கு இணைந்த தமிழர்களின் அரசியல் ரீதியான அதிகாரப்பகிர்வுக் கோரிக்கையை பிரிவினைவாதக் கண்ணாடி கொண்டு நோக்கி வரும் கடும்போக்கு சிங்கள தரப்பினரின் நிகழ்சிநிரலையே தமது ஆளுகைக்கான நிகழ்சிநிரலாகக் [Rulling Agenda] கொண்டிருக்கிறது.

ஆனால், இதுவரைக்கும் சிங்களம் சர்வதேசத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான நிகழ்சிநிரலில் தனது சிங்கள நலன்சார் நிகழ்சிநிரலை வெற்றிகரமாகப் பொருத்தியதன் மூலம் தனது நலன்களை வெற்றிகொண்டு வந்திருக்கிறது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைக்கு ஊடாக - அதிகாரப்பகிர்வுக் கோரிக்கையை முன்வைக்கும் போது - அதனை சர்வதேசத்தின் துணை கொண்டு தடுக்கும் உபாயங்கள் எதுவும் சிங்களத்திடம் இல்லை. ஏனென்றால், அது சாத்திமற்ற ஒன்றாகும்.

இதனைத் தடுக்கும் நோக்கிலேயே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவ எண்ணிக்கை மட்டுப்படுத்துவதன் மூலம் அதன் பேரம் பேசுவதற்கான அரசியல் பலத்தைச் சிதைக்க முடியும் என்று சிங்களம் கருதுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்மைப்பிற்கு வர வேண்டிய ஆசனங்கள் - மட்டக்களப்பில் ஒரு பிள்ளையான் குழுவினருக்கும், யாழ்ப்பாணத்தில் டக்கிளஸ் தேவானந்தாவிற்கும் போகுமானால், அவர்களைக் கொண்டே வடக்கு-கிழக்கு இணைப்பை எதிர்க்கும் அரசியல் காய்நகர்த்தல்களை கொழும்பு முடுக்கிவிடும்.

ஆனால், இதில் உள்ள புரியாத புதிரும் முரண்நகையான விடயமும் என்னவென்றால் அது தமிழ் காங்கிரசின் அரசியல் வேலைத்திட்டம் தான்.

இன்று, வடக்கு-கிழக்கு எங்கிலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரித்தாளும் நோக்கில் பல்வேறு கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் களமிறக்கப்பட்டிருக்கின்றனர்.

இதில் கொள்கை ரீதியான முரண்பாட்டை முன்வைக்கும் கட்சி திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் மட்டுமே ஆகும்.

இவர்களுக்கு பின்னால் சில புலம்பெயர் தமிழ் சக்திகளும் இருப்பது எல்லோரும் அறிந்த விடயம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பற்றியும் அவரை ஆதரிக்கும் புலம்பெயர் சக்திகள் பற்றியும் இந்த இடத்தில் நான் எந்தவிதமான விமர்சனங்களையும் முன்வைக்கவில்லை.

அல்லது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை அப்பழுக்கு இல்லாத சுத்தமானது என வாதிடுவதும் எனது நோக்கமல்ல.

ஆனால், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அறிக்கையும் கொழும்பின் நிகழ்சிநிரலும் எவ்வாறு பொருந்திப் போகின்றது என்பது தான் புரியாத புதிராக இருக்கின்றது.

இது அவர் அறியாமலே நிகழ்ந்த ஒன்றா?

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது அறிக்கைகளில் திருகோணமலையில் சம்மந்தரையும் யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரமச்சந்திரனையும் அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்றுவதே தனது நோக்கம் என்று கூறியிருக்கிறார்.

கொழும்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை குறிவைத்து செயற்படுகிறது.

அரசின் எதிர்த்-தந்திரோபாயமும், தமிழ் காங்கிரசின் 'குறிப்பிட்ட தலைமைகளை அகற்றும்' கொள்கை நிலைப்பாடும் எவ்வாறு சந்திக்கின்றது?

சில வேளை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறியாமல் இந்த வலையில் சிக்குண்டுவிட்டாரா...? இது குறித்து பல கேள்விகள் எழுகின்றன.

திருகோணமலையில் தமிழ் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் செல்வாக்கானவர்களோ, அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்லும் "இரு தேசம்" கோட்பாட்டை விளங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்டவர்களோ, அல்லது அதற்கான அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்களோ அல்ல.

அவர்கள் நிச்சயம் வெல்லப்போவதும் இல்லை.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையிலும் தமிழ் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன.

எனவே இங்கு தமிழ் காங்கிரஸ் சாதிக்கப் போவது, தமிழரசுக் கட்சியின் கீழ் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வர வேண்டிய வாக்குகளில் சில ஆயிரங்களைப் பிரித்தெடுத்து, தமிழர் நலனிற்கு எதிரானவர்களி்ற்குப் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குவது மட்டும் தான்.

திருகோணமலையைப் பொரறுத்தவரையில் கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இரு பிரதிநித்துவங்கள் கிடைத்தது.

ஆனால், இம் முறை - தமிழ் காங்கிரஸ் ஏனைய அரச சுயேட்சைக் குழுக்களுடன் இணைந்து பிரிக்கப் போகும் வாக்குகளால் இரண்டாவது தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

ஆனால் - இங்கு விடயம் என்னவென்றால், இதன் மூலம் கொழும்பு நினைப்பது நிறைவேற்றப்படுகிறது.

எனவே தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம் குறித்துச் சிந்திப்போர் மேற்படி நிலைமைகளை கருத்தில் கொண்டு செயலாற்றுவது காலத்தின் கட்டாயமாகும்.

இன்றைய சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சதிகளால் பலவீனப்படுத்தப்படுமாயின், கொழும்பின் எதிர்த்-தந்திரோபாய அணுகுமுறை வெற்றி பெறும்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சிகள் மேலும் பின்நோக்கித் தள்ளப்படும்.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதுடன் முப்பது வருடங்கள் பின்நோக்கித் தள்ளப்பட்ட தமிழரின் அரசியல் எதிர்காலம், மேலும் முப்பது வருடங்கள் பின் நோக்கித் தள்ளப்படலாம்.

இக் காலத்தில் ஏற்படும் புவிசார் அரசியல் [Geopolitics] நலன்களுக்கான போட்டியைச் சாதமாகக் கைக் கொள்ளுவதன் மூலம் தமிழ் மக்களின் தனித்துவமான அரசியல் இருப்பு வாதத்தை நிரந்தரமாக அமைதிப்படுத்துவதில் கொழும்பின் மூளை வெற்றிபெறலாம்.

இந்த வெற்றிக்கான வாயப்பை நாமே வாரி வழங்கப் போகின்றோமா, அல்லது சிங்கள உபாயத்தை தடுத்து நிறுத்துவதில் வெற்றிபெற முயற்சிக்கப் போகின்றோமா என்பதே இன்றைய காலத்தின் கேள்வி!

* நந்தன் அரியரத்தினம், இலங்கையி்ல் வாழும் ஒர் அரசியல் ஆய்வாளரும் இலக்கியவாதியுமாவார். கட்டுரை பற்றிய கருத்துகளை அவருக்கு எழுதுவதற்கு: AriNanthan@gmail.com

http://www.puthinappalakai.com/view.php?20100401100825

  • கருத்துக்கள உறவுகள்

நடேசனின் சரணடைவு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் விடுதலைப் புலிகள் புதியதொரு அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபடுவதற்கும் செயலாற்றுவதற்குமான வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம்.

அவர்களின் இராணுவ ரீதியான கட்டமைப்புக்கள் நிர்மூலமான நிலையில், நிச்சயமாகப் புதிய புவிசார் அரசியல் நிலைமைகளை கருத்தில் கொண்டு, உள்ளக சுயநிர்ணய அடிப்படையில், ஜனநாயக ரீதியாகப் போராடுவது குறித்து நடேசன் தலைமையில் புலிகள் சிந்தித்திருக்கலாம்.

ஆனால் - சரணடைந்த நடேசன் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்களின் படுகொலை மூலம் அது தடுக்கப்பட்டுவிட்டது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புடன் புலிகளின் இராணுவ ரீதியான அனைத்து செயற்பாடுகளும் முடிவுக்கு வர, நடேசன் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டும், குறிப்பிட்ட மேலும் சிலர் அறியமுடியாத அளவிற்குத் தடுத்து வைக்கப்பட்டதன் மூலமும் புலிகள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து போராடுவதற்கான சந்தர்ப்பமும் முற்றாக அழிக்கப்பட்டது.

இக்கட்டுரையாளர் புலிகளின் கதை முடிந்தே முடிந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்திவிட்டு இதனை படைத்திருக்கிறார். இவரும் சிங்களவர்களைப் போல புலிகளை எங்கிருந்தோ வந்தோர் வரிசையில் நின்று பார்க்கின்றார்.

விடுதலைப்புலிகளின் நீண்ட கால உறுப்பினர் என்ற வகையில் நடேசன் அண்ணாவின் அரசியல் செயற்பாடுகள் தமிழ்செல்வன் அண்ணாவின் திடீர் இழப்பை நிரப்ப முன்னிறுத்தப்பட்டிருந்ததே தவிர நடேசன் அண்ணா ஒரு அரசியல் போராளி என்று தலைவரால் வளர்க்கப்பட்டவரல்ல. கடைசியாக நடந்த பேச்சு மேடைகளில் அவர் தோன்றி இருந்தாலும்.. ஒரு காலத்தில் தனிக் குழுவினரால யோகி அண்ணன் போன்றவர்கள் தனித்து நேரடியாக பேச்சுக்களில் ஈடுபட்டது போன்று இவர் ஈடுபட வைக்கப்படவில்லை.

அதுமட்டுமன்றி கடந்த சமாதான கால எல்லாப் பேச்சுக்களின் போதும் உருத்திரகுமாரன் அண்ணா தலைவரால் அன்ரன் பாலசிங்கம் அண்ணாவிற்கு அடுத்தப்படியாக முக்கியம் அளித்து கலந்து கொண்டிருந்தார். அவருக்கு தேசிய தலைவரின் அரசியல் அணுகுமுறைகள் பற்றிய அறிவு நடேசன் அண்ணாவைப் போன்றிருக்க வாய்ப்புக்கள் அதிகம்.

அதுமட்டுமன்றி நடேசன் அண்ணா சரணடடைந்து கொல்லப்பட்டிருக்காவிட்டால் கூட கட்டுரையாளர் மேலே தானே சுட்டிக்காட்டியது போல.. அறியமுடியாத அளவிற்கு எதிரியால் தடுத்து வைக்கப்பட்டே இருந்திருப்பார்.

பாலகுமாரன் அண்ணா.. யோகி அண்ணா.. புதுவை அண்ணா.. தமிழினி அக்கா என்று பலர் உயிரோடு இருந்தும்.. அரசியல் ரீதியாகக் கூட செயற்பட வாய்ப்பிருந்தும்.. எதிரியால் அவர்கள் அதற்கு அனுமதிக்கப்படவில்லை. அப்படியான ஒரு நிலையில் எப்படி நடேசன் அண்ணா மட்டும் உள்ளிருந்து செயற்பட்டிருப்பார்.

இங்கு புலிகள் இராணுவ ரீதியில் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருப்பதை மையமாகக் கொண்டு புலிகளின் அரசியல் கொள்கையும் அதன் நோக்கமும் தோற்றுவிட்டதாக படம் காட்டுவதை தவிர்ப்பது நன்று.

1988 - 90 களில் ஜே வி பியும் ரோகண விஜயவீராவும் அழிக்கப்பட்ட போது எத்தனையோ ஆயிரம் சிங்கள இளைஞர்கள் சிங்களப் படைகளாலேயே கொல்லப்பட்டனர். உடுகம்பொல போன்றவர்கள் செய்த மனித உரிமை மீறல்கள் எந்த போர்க்குற்றமும் இன்றி மூடி மறைக்கப்பட்டன என்பதையும் இந்த உலகம் அறியும். சிறீலங்காவின் வரலாற்றில் சிங்களப் பேரினவாத முதலாளித்துவ அரசுகள் செய்த மனிதப் படுகொலைகளை உலகம் ஏதோ இறைவனின் சேவையாக கருதி அங்கீகரித்து நிற்பதுதான் இங்கு வேடிக்கையாக இருக்கிறது.

அது ஜே வி பி மீதான படுகொலைகளாக இருக்கட்டும்.. 1983 இல் இருந்தான தமிழ் மக்கள் மீதான படுகொலைகளாக இருக்கட்டும்.. அவற்றை இந்த உலகம்.. பெரிது படுத்தியதும் இல்லை.. அதற்காக சிங்களப் பேரினவாத அரசுகளுக்கு தண்டனை வழங்கியதும் இல்லை. இந்த நிலைதான் அவர்களை படுகொலை செய்யத் தூண்டுவதோடு அழகாக மூடி மறைக்கவும் செய்யச் சொல்கிறது. இதுவே ஆபத்தான ஒன்று இன்றைய நிலையில் இலங்கையில்.

மற்றும்படி சிறீலங்காவில் உண்மையான ஜனநாயகம் இருக்குமாயின் சர்வதேசம் அதனை நிலைநிறுத்துமாயின் உறுதிப்படுத்துமாயின் விடுதலைப்புலிகள் அரசியல் ரீதியில் மக்கள் முன் வருவதில் தடை இருக்க வாய்ப்பில்லை.

ஜே வி பி கூட அதன் தற்போதைய தலைவரை வெளிநாட்டுக்கு அனுப்பி அங்கிருந்து அவர் செயற்பட்டதன் பின்னணியில் தான் அரசியல் ரீதியில் புத்துயிர்ப்புப் பெற உதவியது. விடுதலைப்புலிகளைப் பொறுத்த வரையும் அந்தத் தகுதி உருத்திரகுமாரன் அண்ணா போன்றவர்களுக்கு நிறையவே இருக்கிறது. எனவே முள்ளிவாய்க்காலோடு விடுதலைப்புலிகளின் சகாப்தமே முடிந்துவிட்டது என்ற சிங்களத்தின் பெருவிருப்பிற்கு நாமும் பலம் சேர்க்கும் வகையில் எழுதிக் கொண்டு இருக்காமல்.. எங்கோ அறியமுடியாத படிக்கு மறைத்து வைக்கப்பட்டுள்ள அந்த சரணடைந்த போராளிகளையாவது மீட்கும் பணியில் காத்திரமாக இராஜதந்திர வழியில் செயற்பட வேண்டும். அதற்காக சில வரையறைகளோடு சிங்களப் பேரினவாத அரசோடு கூட்டிணைவதில் கூட தவறிருக்கும் என்று நினைக்க முடியாது. ஆனால் செயற்பாடுகளில் இதய சுத்தி.. இனப்பற்று.. தமிழ் இனத்தின் அரசியல் அபிலாசைகளை அடையும் உண்மை இலட்சியம்.. இருக்க வேண்டும்.

கட்டுரையாளர்.. யானையை உதாரணம் காட்டி தானே தனக்கு மண்ணள்ளிப் போடும் நிலையை இனங்காட்டிக் கொண்டிப்பதிலும்.. யானைக்குள் சிறு எறும்பு செய்யும் குழப்பம் எவ்வளவு வலிதானது என்பதைச் சொல்வது நன்று. தமிழர்கள் அந்தச் சிறு எறும்பு நிலையில் பெரிய யானைகளை சமாளிக்க வேண்டிய நிலையில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமன்றி அவர்களிடம் தன்னம்பிக்கை ஊட்டலே இன்று அதிகம் தேவைப்படுகிறது. அது இன்றேல்.. எதிரியின் இழுப்புக்கு எல்லாம் இழுபடும் நிலைக்கு தமிழர்கள் இலகுவாக கொண்டு செல்லப்பட்டு விடுவர். இது எல்லாவற்றையும் நாசம் செய்துவிடும்.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.