Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாசிசம் – சில குறிப்புக்கள்:அஸ்வத்தாமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாசிசம் – சில குறிப்புக்கள்:அஸ்வத்தாமா

அறிமுகம்

172.jpg

நாம் வாழுகின்ற உலகம் அடிக்கடி புதிய திசைவழிகளில் பயணிக்கிறது. உலக வரலாற்றுப் போக்கின் ஒரு கரையிற் போர்களும் கொலைகளும் மரண ஓலங்களும் குருதி தோய்ந்தபடி வரலாற்றுப் பக்கங்களை நிரப்ப, மறுகரையில் வீரம் செறிந்த மக்கள் போராட்டங்களும் புரட்சிகளும் நம்பிக்கையை விதைக்கின்றன. 20ம் நூற்றாண்டு உலகம் இரண்டு உலகப் போர்கள், கெடுபிடிப்போர், புரட்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி எனப் பலவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்க, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் 21ம் நூற்றாண்டு முன்னையதிலிருந்து மாறுபட்டுப் “பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்” எனப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. காலத்துடன் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சில அம்சங்களும் அடிப்படைகளும் மாறாதவையாகத் தொடர்வதையும் அவதானிக்கலாம். அவ்வகையிற், தொடர்ந்து நிகழ்வனவற்றுள் முக்கியமான ஒன்றாக பாசிஸத்தைக் கொள்ள முடியும். வடிவத்திலும் தோற்றத்திலும் வேறுபட்டாலும் பண்பியற் தன்மைகளில் மாற்றமின்றித் தொடர்வது பாசிஸத்தின் முக்கியமான ஒரு கூறுபாடு.

ஒரு வரலாற்றுப் பார்வை

பாசிஸம் 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து துவங்குகிற, ஏகாதிபத்தியக் காலகட்டத்தின் ஒரு நிரந்தரமான போக்காகும். ஒரு குறிப்பிட்ட காலம் வரை, ஓரிடத்தில் மறைவாகவும் மற்றோர் இடத்தில் வெளிப்படையான தன்மையோடும், சில நேரங்களிற் சில நாடுகளில் ஆதிக்கச் சக்தியாகவும், எப்போதும் குறிப்பிட்ட நாட்டின் வரலாற்றுச் சூழ்நிலை, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றின் பின்னணியில், பிரத்தியேக வடிவங்களில் அது தோன்றியுள்ளது. இத்தாலியர்கள் அதற்கு ‘பாசிஸம்’ என்று பெயர் சூட்டு முன், இக் கோட்பாட்டு வடிவம் ‘ஒருங்கிணைந்த தேசியம்’ என்ற பெயரில் 19-ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் தீவிர வலதுசாரிகளின் கோட்பாடாக உருவெடுத்தது. ஐரோப்பாவின் பல பகுதிகளில், முதன்முறையாகப் பிரத்தியேக அம்சமான முறையில் உருவான இடது சோசலிஸ்டுகளின் வெகுஜன அடித்தளங்களுக்கு எதிர்ப்புடன் விளங்கியது. ஜெர்மனியிலும், பிரான்சிலும் மிகுந்த பலத்துடன் இருந்தது. 20-ம் நூற்றாண்டின் வளர்ச்சிப் போக்கில் அது ஐரோப்பிய எல்லைகளைக் கடந்து ஒரு உலக அளவிலான அம்சமாகவும் மாறியது. பரந்த அளவில் பின்பு உருப்பெற்ற அதன் தன்மைகளை நோக்குவோம்.

பாசிஸத் தத்துவம் உருவானபோது, அது அடிப்படையிற் பொருள்முதல்வாதத்திற்கு எதிரானதாகவும் மார்க்சியத்திற்கு எதிரான முறையிற் பகுத்தறிவுக் கருத்துக்களுக்கு மாறாக 19-ம் நூற்றாண்டின் இனவாதக் கோட்பாடுகளிலிருந்து பெருமளவிலான கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டதாகவும் இருந்தது. வர்க்கப் போராட்டமே வரலாற்றின் உந்துசக்தி என்ற மார்க்சிய முடிபுக்கு எதிராகத் தீவிரமான ஆன்மிகத்தன்மை வாய்ந்த தேசியத்தை பாசிஸம் முன் வைத்தது. ஒவ்வொரு தேசமும் தனக்கான குறிப்பிட்ட இனத்தையும் கலாசாரத் தன்மைகளையும் கொண்டிருப்பதால், இத்தகைய நாகரிகங்கட்கு இடையிலான மோதலே வரலாற்றில் முதன்மையானது என்ற கருத்தை முன்வைத்தது. இதன் வழி, சாமுவெல் ஹண்டிங்டன் எழுதிய நாகரிகங்களுக்கிடையிலான மோதல் ( (Clash of Civilizations) ) என்ற நூல் முக்கியமானது. வர்க்கப் போராட்டத்தின் படைப்பே அரசு என்றும் அது ஆதிக்கம் செலுத்தும் வர்க்க நலன்களுக்கானது என்றும் கூறும் மார்க்சியச் சிந்தனைக்கு மாறாக, அரசு என்பதை ஒட்டுமொத்தமான தேச ஆன்மாவின் ஒற்றுமையை வலியுறுத்தக்கூடிய உச்சகட்டமான அமைப்பு எனவும், வர்க்க மோதலைப் பற்றிப் பேசுகிற எவரும் தேசத்தின் எதிரி எனவும் பாசிஸம் பிரசாரம் செய்தது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் உருவான நான்கு வகையான முக்கியமான புதிய மாற்றங்களை அய்ஜாஸ் அகமட் பின்வருமாறு விளக்குகிறார்.

முதலாவது வகை மாற்றம்

பாசிஸம் என்ற சொல் கடும் விவாதத்திற்குள்ளாகிய பின்னணியில், தங்களைப் பெருமையோடு பாசிஸவாதிகள் என அழைத்துக் கொண்டவர்களும் நாற்ஸி ஜெர்மனியை ஒரு முன்மாதிரியான தேசமாக மகிழ்ச்சியோடு அங்கீகரித்தவர்களும், பாசிசம் ஆதிக்க நிலையில் இருந்த வரை —அதாவது ஹிட்லரின் தோல்விக்கு முன்பு வரை— அவ்வாறு இருந்தார்கள். தற்போது அவ்வாறு இருப்பாதாகக் காட்டிக் கொள்வதை கைவிட்டுத் தங்களைத் தேசியவாதிகள் என மட்டும் அறிவித்துக் கொள்கின்றனர். பிரான்சின் தேசிய முன்ணணி, இத்தாலியின் தேசியக் கூட்டணி, முன்னாள் சோவியத் யூனியனிலும் யூகோஸ்லாவியாவிலும் கொலைவெறித் தன்மையுடைய தேசிய வாதமாகவும் இனத் தூய்மைக்கான இயக்கங்கள், இந்தியாவில் இந்து ராஜ்யமும் இந்து தேசியமும் இன்னும் இவை போலப் பலவாகவும் பாசிஸம் உருவெடுத்தது.

mussolini_hitler.jpg

இரண்டாவது வகை மாற்றம்

இரண்டாவது உலகப்போரின் முடிவின் பின்னணியில் மிக வேறுபட்ட இரண்டு காரணங்களால், வரலாற்றில் முதலாளித்துவத்தின் பல்வேறு காலகட்டங்களில் வெளிப்படையான இனவெறியை நேரடிக் கொள்கை யாகத் தக்கவைக்க இயலவில்லை. இதற்கு ஒரு காரணம், கொலனி யாதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் வெற்றி பெற்ற பின்னணியில் ஐரோப்பிய வகைப்பட்ட இனவெறி தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ள முடியாமலிருந்தது. மறு காரணம், லத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நடைமுறைப் படுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையின் வடிவங்கள், பாசிஸத்தால் எடுத்து வரப்பட்டு, நாற்ஸிகளின் பகுத்தறிவற்ற, மேன்மையான இயந்திரத் தொழில் நுட்பத்தால் லட்சக்கணக்கான யூதர்களை விஷவாயு அறைகளில் அடைத்துக் கொன்றமை பாசிஸ நடைமுறைக்குப் பெரிய சவாலாக இருந்தது. இங்கு, புதிய ஒரு முகத்துடன், வேறுபட்ட வடிவில் தன்னைக் காட்டவேண்டிய தேவை அதற்கு ஏற்பட்டது. இந் நிலையில் தேசியம் என்ற பெயரில் பாசிஸம் மீண்டும் எவ்வாறு தலைகாட்ட ஆரம்பித் துள்ளதோ, அவ்வாறே, இனவாதமும் மாயமான வடித்தில் ‘கலா சாரம்’, ‘தேசிய கலாசாரம்’ என்றவாறான பெயர்களிலும் மறுபடி தலைகாட்டத் துவங்கியுள்ளது.

மூன்றாவது வகை மாற்றம்

‘தேசம்’, ‘கலாசாரம்;’ ஆகியவற்றை மதத்தோடு இணைத்துப் பார்க்கிற நிலை உருவானது —ஆனால், பழைய ‘மரபு’க்குத் திரும்புகிற வகையிலல்ல. முப்பரிமாணத்தன்மை வாய்ந்த தேசம் ,கலாசாரம் ,மதம் சார்ந்த குடிமக்களாக இருப்பது அவசியம் என்று போதிக்கப்பட்டது. அடிப்படைவாத ஈரானைப் போல் ஒருவகையிலும் மிக நவீனமான இஸ்ரேல் போல இன்னொரு வகையிலும் இருப்பது புனிதமானதாகும். இதன் தொடர்ச்சியாக, வெளிப்படையாக இனவாதம் மதிக்கப்பட்ட நாட்களில் ‘மரபணுவியல்’ வகித்த இடத்தை, இப்போது ‘கலாசாரம்’ வகிக்கிறது.

நான்காவது வகை மாற்றம்

இது வர்க்கஞ் சார்ந்த கோட்பாட்டோடும் எகாதிபத்தியத்தியத்தோடும் தொடர்புடையது. புரட்சிகரமான காலகட்டத்தில், சோசலிசத் திட்டம் உருவான பின்னணியில் உருவான பழைய வகை பாசிஸம், கொலனி எதிர்ப்புத் தேசியவாதம் கொலனிகளில் உருவான பின்னணி யில் தனக்கென உருவாக்கிக் கொண்ட ஒருவகையான தேசபக்த சிந்தனைகளோடு, தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளிலிருந்தும் குட்டி பூர்ஷ்வாக்களிடமிருந்தும் சிறிய முதலாளிகளிடமிருந்தும் ஒரு வகை யான வர்க்கத் தீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டது. நாற்ஸிகள் தங்களைத் ‘தேசிய சோசலிஸ்டுகள்’ எனறு அழைத்துக் கொண்டனர். முசோலினி முதலில் சோசலிஸ்ட் கட்சியின் புகழ்பெற்ற தலைவராக இருந்து, பின்னர் பாசிஸத்தின் அமைப்பாளராக மாறி, பாசிஸ அரசின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்தவராவார். அடிப்படையில் அதன் ‘தேசியம்’ பெருமளவும் ஏகாதிபத்தியச் சார்புடையது. அதன் வர்க்கத் தீவிரவாதத்திற் பெரும் பகுதி மக்களைக் கவர்வதற்காகச் சொல்லப்பட்டதே. பாசிஸம், பின்னர் அவற்றைக் கைவிட்டு, முற்றாக ஏகாதிபத்திய மூலதனத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டது.

நியாயமாகச் சிந்தித்துப் பார்த்தால், போர்கட்கு இடைப்பட்ட காலத்தில் உருவான பாசிஸத்தை உலக எதிர்ப் புரட்சியின் ஈர்ப்பு மையம் எனக் கூறலாம். எனினும் அவர்களும் தங்களைப் புரட்சி வாதிகளாகவே கூறிக் கொண்டனர். தீவிர வலதுசாரித் தன்மையோடு இணைந்து ஏகபோக முதலாளித்துவம் நம்மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் காலம் வரை, பாசிஸத்திற்கெதிராகப் போராடுமாறு நாம் நிர்ப்பந்திக்கப் படுவோம். அதிகபட்ச லாபங்களை அடையும் தனது பாதையில் இதர வடிவங்களில் அமைந்த ஆட்சிமுறைகள் தடைக்கற்களாக மாறும்பொழுது ஏகபோக முதலாளித்துவம் பாசிஸத்தை ஆதரிக்கச் சற்றும் தயங்காது.

ஏகபோக முதலாளித்துவம், அதனுடைய பொதுவான நெருக்கடிக் காலகட்டத்தில், மிக உச்சமான தொழில் லாபமடையும் கொள்கைகளைப் பின்பற்ற முடியாது. அத்தகைய கொள்கைகட்கு எதிராக மக்கள் தலையிடக்கூடிய குறைந்தபட்ச சாத்தியப்பாடொன்றை ஜனநாயக அமைப்புகள் ஏற்படுத்தினாற்கூட ஏகபோக முதலாளித்துவம் அத்தகைய அமைப்புகளை ஒழித்துக்கட்ட முனையும். ஜனநாயக ஆட்சிக்குப் பதிலாகப் பிற்போக்கான ராணுவ ஆட்சிகளைக் கொண்டு வர முற்படும். பாசிஸம் என்பது அத்தகைய பெருந் தொழில், பெரு வர்த்தக சர்வாதிகாரங்களின் மிகவும் கொடூரமான, நாசகரமான, வளர்ச்சியடைந்த வடிவமேயாகும்.

பாசிஸம் என்பது ஏகபோக மூலதனத்தின் மேல்தட்டு வட்டாரங்களின் மிகவும் பிற்போக்கான பகுதியினருடைய அப்பட்டமான, அதி கொடூரமான சர்வாதிகாரம் என்று விளக்குவது அவசியம். அவ்வாறு தான் உண்மையான பகைவனைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டி அவனுக்கெதிரான போராட்டத்தை நடத்த இயலுமாகும். அதன் பிறகே பாசிஸத்திற்கெதிராகப் பரந்துபட்ட இயக்கத்தை அணிதிரட்ட இயலு மாகும் . பாசிஸமானது, முதலாளித்துவத்தின் தத்துவார்த்தக் கருவி களைக் கைக்கொண்டு அவற்றைப் பெரும் ஆயுதங்களாக ஆக்கியுள்ளது. ஜெர்மனியில் ஹிட்லரின் பாசிசம், கம்யூனிச எதிர்ப்பையும் யூத எதிர்ப்பையும் தன் பிரதான அரசியல், தத்துவார்த்தக் கருவிகளாக ஆக்கிக் கொண்டது. இத்தாலிய பாசிசம் கம்யூனிச எதிர்ப்பையும் இனவெறியையும் தன் பிரதான கருவிகளாகப் பயன்படுத்தியது.

பாசிஸத்தால் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளைத் தீர்க்க முடியவில்லை. பல காலமாக அது அவற்றை மூடி மறைத்திருந்தது. ஆனால் ஏதாவதொரு வழியில் அவை தொடர்ந்து தலை தூக்க ஆரம்பித்தன. இவ்வாறு பாசிஸத்திற்கெதிரான போராட்டங்களுக்குப் புதிய வாய்ப்புக்கள் தோன்றின. போராட்டத்திற்கான சாத்தியப்பாட்டை முரண்பாடுகள் திறந்துவிட்டாலும் அணிதிரட்டிய வெகுஜனப் போராட்டத்தின் மூலம் மட்டுமே பாசிஸத்தைத் தோற்கடிக்க முடியும்.

காலக்கண்ணாடியூடு பாசிஸத்தின் பலமுகங்கள்

புதிதாக நடைபெற்ற போர்கள், பெரும் கொலனியாதிக்கச் சக்திகள் தங்கட்கிடையே உலகைப் பங்கிட்டுக் கொண்ட பிறகு, உலகை மீளவும் மறுபங்கிடுவதற்கான போர்களாயிருந்தன. இந் நிலையில், போட்டி என்பது, யாரும் கைப்பற்றாத பகுதிகளைக் கைப்பற்றுவதுடன் அல்லாமல், கொலனியாதிக்க சக்திகள் தங்களுக்கென ஒதுக்கி வைத்திருந்த ஏற்றுமதிச் சந்தைகள், முடிவு உற்பத்திப் பொருட்களுக்கான மூலவளங்கள், முதலீட்டு வாய்ப்புகள் போன்றவற்றுக்கு மாக இருந்தது. ‘உலக மகாயுத்தம்’ என அழைக்கப்பட்ட, உலகின் மிகப் பெரிய சூதாட்டக் களமாக, அவ்வளவு நாடுகள் பங்கேற்ற போர் வரலாற்றில் இதுவரை காணாத ஒன்றான இதன் பின்ணணியிலேயே பாசிஸத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இத்தாலியில் முசோலினியின் பாசிஸ ஆட்சியின்போது அதற்கெதிராகப் போராடியவர்களில் முக்கியமான ஒருவரான டோளியாட்டி ( Togliatti) தனது அனுபவங்களின் அடிப்படையில் பின்வரும் முடிவு களுக்கு வருகிறார்.



  • பாசிஸம் என்பது முதலாளித்துவ நாடுகளில் ஒரு அபாயமாக உள்ளது. ஆனால் அது தவிர்க்கமுடியாத வளர்ச்சிக் கட்டமல்ல.
  • பாசிஸத்தால் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் முதலாளித்துவ அடிப்படையில் தீர்க்க முடியாது. எனவே அடிப்படையான வர்க்க முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் தொடரும்.
  • பாசிஸம் அதிகாரத்திலிருக்கும் பொழுது, மிக மோசமான நிலைமைகளிலும் கூட ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்கி பாசிசத்தைத் தோற்கடிப்பதற்குப் போராடுவது சாத்தியமே.
  • பாசிஸமானது தன்னுடைய சொந்த உள் முரண்பாடுகளால் நொறுங்கி விழுந்துவிடாது.

பாசிஸத்தை உளவியல்முறையில் ஆராய்ந்த எரிக் ஃப்ரொம் ( (Eric Fromm) ) 1941ல் வெளியிட்ட தனது “விடுதலையிலிருந்து தப்புதல்” (Escape from Freedom ) என்ற தனது நூலில் முதலாளிய சமூகத்தின் விடுதலை உணர்வு மனிதனுக்குச் சில பொறுப்புகளையும் சுமத்துகிறது. முதலாளியத்தால் தனியராக்கப்படும் மனிதர் தனது தேவைகள், நலன்கள் ஆகியவற்றைத் தானாகவேதான் சாதித்துக் கொள்ள வேண்டும். சந்தையின் போட்டி, வெற்றிதோல்விகள் ஆகியவற்றை நேரடியாகத்தான் சந்தித்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு, விடுதலை மனிதரைத் தனிமனிதராக்கி விடுகிறது. தலைக்கு மேலும் காலுக்குக் கீழும் எதுவுமில்லாதது போன்ற நிலை அவருக்கு ஏற்படுகிறது. ஒரு விதமான பாதுகாப்பு உணர்வுக்கு மனிதர்கள் ஏங்குகின்றனர். தலைக்கு மேலே ஒரு பியூரர் (தலைவர்: இங்கு ஹிட்லரைக் குறிக்கும்), காலுக்குக் கீழே ஆரிய ஜெர்மானிய இனம், உடன் நடக்கவும் உரத்துக் கோஷமிடவும் ஒரு பெரிய கூட்டம், இவை யெல்லாம் மனிதருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை, ஆதரவைத் தரு கின்றன. தனிமையிலிருந்து தப்பித்து விட்டதாக மனிதர் உணர் கின்றனர். இதுதான் பாசிஸம் என்று எரிக் ஃப்ரொம் எழுதினார்.

பாசிஸத்தை ஆய்வு செய்தவர்களில் முக்கியமானவர் ஹேர்பேட் மார்க்யூஸ் ( (Herbert Marcuse) இவர் 20ம் நூற்றாண்டின் முக்கியமான நவமார்க்சியராகக் கொள்ளப்படுபவர். பாசிசத்தின் தோற்றத்திற்கும் ஐரோப்பிய சமூகத்தில், குறிப்பாக ஜெர்மானிய வரலாற்றில் நீண்ட காலமாக வழக்கில் இருக்கும் உடன்பாட்டுக் கலாசாரத்திற்கும் ( affirmative culture) உட் தொடர்பு உள்ளதாக சொல்லும் மார்க்யூஸ் இடைக்கால ஜெர்மனியில் வழக்கிலிருந்த மேட்டுக்குடிக் கலாசாரத் தைத் தீவிரமாக மறுதலித்து ( (negate ) விமர்சிக்காமல் அக் கலாசாரத்துடன் உடன்பட்ட நிலையிலேயே நவீன ஜெர்மானிய கலாசாரம் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது என்கிறார். எனவே அதனை மார்க்யூஸ் உடன்பாட்டுக் கலாசாரம் என்கிறார். கலாசார வாழ்வில், இடைக்கால மேட்டுக்குடிச் சமூக விழுமியங்கள் ஆன்மீகம் என்ற அடைமொழியுடன் தங்கிநிற்கின்றன. அவை சராசரி மனிதனின் அன்றாட வாழ்விலும் அவ் வாழவின் தேவைகளிலும் அக்கறையின்றி அவற்றை இழிநிலையில் வைத்துப் பார்க்கின்றன.

சமூக முரண்பாடுகளையும் மக்கள் பிரச்சினை களையும் இவ்வகைக் கலாசாரம் ஆன்மீகம் என்ற திரை போட்டு மறைக்கிறது. வாழ்க்கைத் தளத்தில் அல்லாது ஆன்மீகத் தளத்தில் மேற்குறித்த பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு இருப்பதாக அது பம்மாத்துச் செய்கிறது. உடல், உணர்ச்சிகள், சுய நலன்கள் ஆகியவற்றைக் கடந்த ஓர் உலகுக்குள் வருமாறு அது சகலரையும் அழைக்கிறது. சாதாரண மக்களுக்கு அது சாத்தியப் படாமற் போவதே சகல பிரச்சினைகளுக்கும் காரணம் என்றும் அது கூறுகிறது. ஆன்மீகக் கலாச்சாரம் அமைதியையும் நிம்மதியையும் சாந்தியையும் வழங்கும் என அது பிரச்சாரம் செய்கிறது. ஆன்மாவும் ஆன்மீகமும் உலகியல் ஈடுபாடற்ற, கட்டுப்பாடற்ற அதிகாரத்தின் புராதன வடிவங்கள். எந்த விதக் கேள்விக்கும் இடமின்றிச் சகலவற்றையும் ஆன்மா தனக்கு அடிமையாக்கும். பிரத்தியட்ச வாழ்க்கைக்கு அருகில் வரப் பிடிவாதமாக மறுத்து, வாழ்வால் ஒவ்வொரு கணமும் தீண்டப் படும் மனம், அறிவு ஆகியவற்றை ஏற்க மறுக்கும் ஆன்மீகத் தத்துவங்களைச் சிலாகித்துப் பாராட்டும் நாடுகளில் பாசிஸத்திற்கு வாய்ப்புண்டு என்றும் ஆன்மீகமயப்பட்ட சமூகத்தில் தனி மனிதர்கள் சர்வாதிகாரத்தை எளிதில் ஏற்றுக் கொள்ளுவர் என்றும் மார்க்யூஸ் கூறுவார். எனவே மனிதர்கள் தமது உணர்ச்சிகளைச் சமூக வரலாற்று யதார்த்தத்தோடும் சமூக மாற்ற நோக்கங்களோடும் இணைக்காமல் போகும் போது அவை பாசிஸமாக உருவெடுக்கும் என்று மார்க்யூஸ் குறிப்பிடுகிறார்.

பாசிஸம் இன்று புதிய முகங்களைத் தேடியபடி முதலாளித்துவ அதிகாரத்தின் ஒரு முகம் ஜனநாயகம் என்றால் அதன் மற்ற முகம் பாசிஸம் ஆகும். ஜனநாயக வரையறைக்குள் தன் சுரண்டலை மேற்கொள்ளவும் அதிகாரத்தைத் தொடரவும் இயலாமற் போகும்போது அடக்குமுறையை வெளிப்படையாகக் கையாளும் நிர்ப்பந்தம் முதலாளித்துவத்துக்கு ஏற்படுகிறது. அப்போது அது தனது ஜனநாயகப் போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு நேரடியான முதலாளித்துவ இராணுவ சர்வாதிகாரமாக மாறுகிறது.

தீவிர தேசியவாத உணர்வுகளைத் தூண்டுதல், சர்வாதிகாரம், அடக்குமுறை, வலதுசாரித் தன்மை, ஜனநாயக உரிமை மறுப்பு போன்றன அதன் பொதுவான இயல்புகளாகும். முகங்கள் மாறினாலும் இப் பண்புகளை எல்லாச் சூழ்நிலைகளிலும் காணலாம். முக்கியமாக எல்லா வேளைகளிலும் பாசிஸ அரசு நேரடியாகவே முதலாளித்துவ அதிகாரத்தின் பிரதிநிதியாகச் செயற்படும். பாசிஸம் நாட்டுக்கு நாடு வேறுபட்ட வடிவங்களிலும் வேறுபட்ட வழிகள் மூலம் அதிகாரத்திற்கு வந்தாலும் இப் பண்புகள் மாறாமல் அப்படியே இருக்கும். இதைப் பழைய இத்தாலி, ஜேர்மனி, ஸ்பெயின் முதலாக 1960கள் முதல் 1980கள் வரை நீடித்த மூன்றாம் உலகின் பாசிஸவாத ஆட்சிகளைக் கொண்டிருந்த சிலி, இந்தோனீசியா, தென் கொரியா, ஆர்ஜென்டீனா போன்ற பல நாடுகளிலும் காணலாம். அவற்றையொத்த தன்மைகளையுடைய பல “ஜனநாயக” நாடுகளை இன்றைய உலக ஒழுங்கிற் காணலாம்.

இன்று பாசிஸம் ஜனநாயக முகமூடியை அணிந்தபடி வெற்றி கரமாக வலம் வருகிறது. கெடுபிடிப் போர்க் காலப்பகுதியிலும் அதைத் தொடர்ந்த ஒற்றை மைய உலக ஒழுங்கிலும் இயங்கிய பாசிஸ ஆட்சிகளுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு எப்போதுமே இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்த வரையில் தனது தேவைகளுக்கு ஆதரவானதாக பாசிஸ ஆட்சி இருக்குமிடத்து அதற்கு ஆதரவு வழங்கப் பின்னிற்பதில்லை. அதே வேளை ஒரு நாட்டில் பாசிஸவாத ராணுவ ஆட்சியை உருவாக்கு வதன் மூலமே தனது நலன்களைக் காக்க முடியும் என்ற நிலையில் அவ்வாறன ஆட்சியை உருவாக்கவோ வழிநடத்தவோ ஒருபோதும் தயங்கியதில்லை. இன்றைய உலக ஒழுங்கிலும் இந் நிலையே தொடர்கிறது.

அரசியல் நெருக்கடி, பொருளாதார மந்தம், தலைமை இல்லாமை, முற்போக்கு சக்திகளிடையே ஐக்கியமின்மை ஆகியன மக்கள் நடுவே தோற்றுவிக்கும் விரக்தி உணர்வு பாசிஸவாதிகட்கு மிகவும் பயன்படுகிறது. இதை எவரையும் விடச் சரியாகப் பாசிஸவாதிகளே பயன் படுத்துகிறார்கள். ஒரு சமூகமாக ஒவ்வொரு சமூகமும் கவனத்தில் எடுக்கவேண்டிய அம்சம். அவ்வாறான பாசிஸப் போக்குக்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு சமூகத் தினதும் கடமை. தவறுமிடத்துச் சமூகமாகப் பாரிய அவலங்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை உறைக்கும்படி வரலாறு பல முறை உணர்த்தியிருக்கிறது.

ஐரோப்பிய பாசிஸம் பற்றிய அனுபவம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் மக்கள் அது பற்றி மிகவும் விழிப்புடன் இருக்கின்றனர். ஆயினும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை போன்ற பிரச்சினைகள் மோசமாகும்போது, பாசிஸ சக்திகள் தலையெடுக்கின்றன. குறிப்பாக ஜரோப்பாவில் உள்மறைந்திருந்த பாசிஸக் கூறுகள் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராகவும் வந்தேறுகுடிகளுக்கு (குறிப்பாக ஆசியர்களுக்கு) எதிராகவும் வெளிப்பட்டதை அவதானிக்க முடியும்.

ஆனால் மூன்றாமுலக நாடுகளில் இந்த விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம். கொலனித்துவ ஆட்சியின் தொடர்ச்சியாகப், பணிந்துபோகும் மனப்பாங்கு தலைமுறைகள் தாண்டியும் விதைக்கப் பட்டிருப்பதால் அடிப்படையான உரிமை மறுப்பும் அடக்குமுறையும் பாரிய எல்லையை எட்டும் வரை, அவை மக்களுக்குப் பிரச்சனைகளாகத் தெரிவதில்லை. அவை பிரச்சனைகளாகத் தெரியத் தொடங்கும் போது பாசிஸம் தன்னை உறுதியாக நிலைநிறுத்தியிருக்கும். இந் நிலையில் மிகச் சிறிய எதிர்ப்போ மாற்றுக் கருத்தோ சகித்துக் கொள்ளப்பட மாட்டாது.

நிறைவாக பாசிஸம் என்பது முதலாளிய சமூகத்தின் மிக உக்கிரமான வடிவம. ஆரம்பகால முதலாளியம் தனிமனித, சிறுமுதலாளியப் போட்டிகட்குத் தனக்குள் இடமளித்தது. ஆனால் பாசிஸமோ ஏகபோக நிதிமூலதன முதலாளியம். அது உள் முரண்பாடுகளைச் சகித்துக் கொள்ளாமல் ஒரு மொத்தத்துவ ( (totalitarian) ) சர்வாதிகார வடிவை எடுக்கிறது. உள் முரண்பாடுகளை அழிப்பதற்காகத் தேசம், இனம், நாடு என்பது போன்ற ஒட்டுமொத்த அடையாளங்களைப் பாசிஸம் பயன்படுத்திக் கொள்கிறது. சமூக முழுமையின் “ஒழுங்கைக்” காப்பதற்காகத் தனி மனித சுதந்திரம், உரிமைகள் ஆகியவற்றைப் பாசிஸம் ஒடுக்குகிறது. அறிவையும் சமூக இலட்சியங்களையும் பொய்யென அறிவித்து இன உணர்ச்சிகளை மட்டும் மனிதர்களின் மரபு என்றும் சொந்த இருப்பு என்றும் பாசிஸம் கூறுகிறது. கற்பனாவாத (utopian) உறுதி மொழிகள் சிலதை அது வழங்குகிறது. இனம், மதம், தேசியம் போன்ற ஒரு பேரடையாளத்தைப் பற்றி அது பேசுகிறது. பாசிஸம் இக் கூறுகளை ஒரு பண்பாட்டு இணைவாக்கத்துக்கு ( cultural synthesis) உட்படுத்து கிறது. இப் பண்பாட்டு இணைவாக்கம் பாசிஸக் கருத்தியலுக்கு வெகுசன ஆதரவைத் திரட்டவல்லதாக உள்ளது. இந்த ஆதரவு பாசிஸ ஆட்சி தன்னை நிலைநிறுத்தப் பெரிதும் உதவுகிறது.

எதிர்ப்புகள் பாசிஸத்தால் மிகக் கவனமாக் கட்டுப்படுத்தப்படுகின்றன. நெருக்கடிகளும் வேலை நிறுத்தங்களும் அரசுக்கு எதிரான போராட்டங்களும் தேசியத்தை, நாட்டைப் பலவீனப் படுத்துவதாக பாசிஸம் கூறுகிறது. எனவே பலம் கொண்ட நாடாக உருவாவதற்கு சர்வதேசப் பொருளாதார, ராணுவப் போட்டியில் நாடு வெற்றி பெறுவதற்கு இது அவசியம் என பாசிஸம் பிரச்சாரம் செய்கிறது. இதன் அடிப்படையில் பாசிஸம் இன்றும் உலகில் வெற்றிகரமாகக் கோலோச்சுகிறது. அதற்கெதிராக போராடுவது அவசியமாகிறது. அப் போராட்டம் பரந்துபட்ட மக்கள் ஜக்கியத்தின் மூலம் மட்டுமே இயலும்.

http://inioru.com/?p=12041

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.