Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் கணிப்புகள்: வடக்கில் யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் கணிப்புகள்: வடக்கில் யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

முத்துக்குமார்

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை முஸ்லீம் பிரதேசங்களில் தேர்தல் களம் சூடுபிடித்த அளவிற்கு தமிழ்ப் பிரதேசங்களில் சூடு பிடித்ததாக கூற முடியாது. அதற்கு பிரதான காரணம் யுத்த பாதிப்பிலிருந்து மக்கள் விடுபடாமையே. பாராளுமன்ற அரசியலுக்கு அப்பால் விடுதலைப் போராட்ட அரசியலுக்குள் பயணித்த மக்கள் திரும்பவும் பாராளுமன்ற அரசியலுக்குள் வருவதற்கு விருப்பமற்று காணப்படுகின்றனர்.

மக்களின் இந்நிலை வேட்பாளர்களைத்தான் பெரிதும் பாதித்துள்ளது. அவர்கள் நடாத்தும் பிரச்சார கூட்டங்களுக்கு மக்கள் குறைந்தளவில் கூட செல்வதில்லை. ஒரு பிரச்சார கூட்டத்திற்கு 50 பேர் சமூகமளித்தால் கூட அது பெரிய பிரச்சார கூட்டமாகக் கருதப்படுகின்றது. குறிப்பாக இளைஞர்கள் தேர்தல் தொடர்பாக எதுவித ஆர்வங்களுமற்று காணப்படுகின்றனர். யுத்த பாதிப்புகளுக்கு அப்பால் நுகர்வுக் கலாச்சாரத்தின் தாக்கமும் இதற்கு காரணமாகும்.

புலிகளின் காலத்தில் கூட நீண்ட காலமாக இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் அரசியல் செயற்பாடுகள் எதுவும் நடைபெறாமையும் இளைஞர்களின் நடத்தையை பாதித்துள்ளது. தமிழரசுக் கட்சியின் கூட்டங்களுக்கு கூட வெள்ளை முடியுள்ள தலைகளை பார்க்க முடிகிறதே தவிர உணர்வு பூர்வமான இளைஞர்களை அங்கு காணமுடிவதில்லை.

இதனால் தேர்தல் பிரச்சாரத்துக்கான ஆள்வளங்களுக்கும் வேட்பாளர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பெரிய பிரச்சார கூட்டங்கள் எதுவும் நடத்த முடியாத நிலையில் சிறிய கூட்டங்களும் நேரடி பிரச்சாரங்களுமே பிரச்சார வழிமுறைகளாக எஞ்சியுள்ளன. அதற்கும் ஆள்பலம் அதிகமாகத் தேவை. தேர்தல் அலகு மாவட்டமாக உள்ளமையால் ஆள்வளங்கள் போதியளவு இல்லாமல் பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியாது.

அரசாங்க கட்சியினரும், ஐக்கிய தேசிய கட்சியும் ஆட்களுக்கு சம்பளம் கொடுத்து பிரச்சாரம் செய்ய வைக்கின்றனர். இதற்காக நிறையப் பணத்தினைச் செலவிடுகின்றனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்க் காங்கிரஸ் என்பனதான் பெரிய நெருக்கடிகளை சந்திக்கின்றன. இவ்விரண்டு அணியினரிடமும் ஒரு சிலரைத் தவிர மற்றையவர்களிடம் நிதி பெரியளவில் புழங்குவதாகத் தெரியவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஒரு சிலருக்கு இந்தியா நிதி உதவியினை வழங்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. குறிப்பாக சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் நிறைய பணம் புழங்குகின்றது என்றும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அவருக்காக பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுகின்றனர் என்றும் கதைகள் வருகின்றன.

மாவட்ட ரீதியாக தேர்தல் நிலைவரங்களைப் பார்த்தால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 கட்சிகளும் 12 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. எனினும் போட்டி தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும், கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்குமிடையே தான் நிலவுகின்றது. சுயேட்சைக் குழுக்களில் செங்கை ஆழியான், தணிகாசலம் பிள்ளை, கவிஞர் சோ. பத்மநாதன், தெணியான் போன்றவர்கள் போட்டியிட்டாலும் பெரியளவிற்கு அவை வாக்குகளை எடுக்கப்போவதில்லை.

சுயேட்சைக் குழுக்களில் சற்று வலிமையாக இருப்பவை இரு சுயேட்சைக் குழுக்கள்தான். சிறுபான்மைத் தமிழர் மகா சபை சார்பில் போட்டியிடும் தெணியான் தலைமையிலான சுயேட்சைக் குழுவும், புதிய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் செந்தில்வேல் சார்பான சுயேட்சைக் குழுவுமே அவையாகும்.

சிறுபான்மை தமிழர் மகாசபை சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பழைய அமைப்பாக உள்ளமையினால் பரவலான அறிமுகம் அதற்கு இருக்கின்றது. ஆனால் அது சாதிவாதத்தை முன்னிலைப்படுத்த முயற்சிப்பதை பெரும்பான்மையான, சாதியால் தாழ்த்தப்பட்டதாக கூறப்படும் மக்கள் விரும்பவில்லை.

விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சி, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் போன்றனவற்றினால் சாதி ஒடுக்குமுறை வெளித் தெரியாத அளவிற்கு குறைந்துள்ளன. இந்நிலையில் சாதி அடையாளத்தை அரசியலாக்குவதை அவர்கள் பெரியளவிற்கு விரும்பவில்லை தேசிய இனஅடையாளத்தையே விரும்புகின்றனர். இன்று குடாநாட்டில சாதிப்பாகுபாடு திருமண விடயங்களில் மட்டுமே நிலவுகின்றது. அது கூட பேச்சுத் திருமணங்களில் மட்டும் தான். காதல் திருமணங்களில் அது கூட பெரியளவிற்கு இல்லை. வன்னியில் போராளிகள் திருமணம் செய்த போது சாதி ஒரு தடையாக என்றுமே அவர்களுக்கு இருந்ததில்லை

சாதி அடையாள அரசியலை விட இயல்பான வளர்ச்சிகள் மூலமாகவும், தேசிய இன அரசியல் மூலமாகவும் மீதியாகவுள்ள சாதிப் புறக்கணிப்புகளையும் தீர்க்கலாம் என்ற நம்பிக்கையும் சம்பந்தப்பட்ட மக்களின் படித்தவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

எனினும் தெணியான், அன்ரனி போன்ற பிரமுகர்கள் போட்டியிடுவதானாலும். சாதிப் போராட்டங்களில் ஈடுபட்ட பழைய தலைமுறையினர் சிலர் பழைய நிலையிலேயே தற்போதும் இருப்பதனாலும் பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் சாதியை முன்னிலைப் படுத்தியும், முன்னிலைப் படுத்தாமலும் பிரச்சாரங்களை மேற்கொள்வதனாலும் கணிசமான வாக்குகள் இக்குழுவுக்கும் கிடைக்கலாம். ஆனால் ஒரு ஆசனமாவது கிடைக்கக்கூடிய வாக்குகளைப் பெற்றுக் கொள்வார்கள் எனக் கூறிவிடமுடியாது.

செந்தில்வேல் தலைமையிலான சுயேட்சைக் குழு அரசியல் கொள்கையின் அடிப்படையில் போட்டியிடும் ஒரு குழுவாகும். இடதுசாரிக் கொள்கையை அடிப்படையாக வைத்தே அவர்கள் போட்டியிடுகின்றனர். எனவே இடதுசாரி கொள்கை சார்பானவர்கள் அவர்களை ஆதரிக்க முன்வரலாம். தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பாக இலங்கைத் தேசியத்திற்குள் நின்று கொண்டுதான் அவர்கள் தமிழ்த் தேசியத்தைப் பார்க்கின்றனர். இதன் காரணமாக ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பங்கீட்டினை ஆதரிக்கின்றனர். இதற்கு மேலான தமிழ்த் தேசிய அரசியலை அவர்கள் ஆதரிப்பதில்லை. எனினும் இக்குழுவினர் உண்மையான தமிழ்த் தேசிய சக்திகளோடு இணைந்து கொள்ளும் வாய்ப்பு எதிர்காலத்தில் உண்டு.

இக்குழுவினருக்கு புத்தூர், சிறுப்பிட்டிப் பிரதேசங்களில் ஓர் ஆதரவுத் தளம் உண்டு. செல்வம் என அழைக்கப்படுகின்ற புத்தூரைச் சேர்ந்த கதிர்காமநாதனே புதிய ஜனநாயகக் கட்சியின் வடபிரதேச அமைப்பாளர். இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளராகவும் இருப்பதால் புத்தூர் சிறுப்பிட்டி பிரதேசங்களில் இவருக்கு சற்று வலிமையான செல்வாக்கு உண்டு.

இவ்விரண்டு சுயேட்சைக் குழுக்களைத் தவிர ஏனையவற்றிற்கு குடாநாட்டில் எந்தவித செல்வாக்கும் கிடையாது. இச் சுயேட்சைக் குழுக்களில் புதிய ஜனநாயகக் கட்சியைத் தவிர்ந்த ஏனைய எல்லா சுயேட்சைக் குழுக்களுமே ஜனாதிபதி மஹிந்தவினால் பணம் கொடுத்து இறக்கி விடப்பட்டவையாகும். ஒரு குழுவிற்கு 15லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

சுயேட்சைக் குழுக்கள் குறைந்தளவில் வாக்குகளை எடுத்தாலும் மொத்தமாகப் பார்க்கும் போது கணிசமான வாக்குகள் இவர்களுக்கு விழலாம். எனினும் எல்லாக் குழுக்களும் மொத்த செல்லுபடியான வாக்குகளில் 5 வீதத்திற்கு குறைவான வாக்குகளையே எடுக்கும் நிலை உள்ளதால் இவை பெற்ற வாக்குகள் கணிப்பீட்டிலிருந்து நீக்கப்படவே போகின்றன. இவை மொத்தமாக நீக்கப்படும் போது கணிசமான வாக்குகள் கணிப்பீட்டுக்குள் வராமல் போகலாம். இந்நிலைமை கணிப்பீட்டுக்குரிய மொத்த வாக்குகளை குறைக்கவே பார்க்கும்.

இவ்வாறு கணிப்பீட்டிற்கான மொத்த வாக்குகள் குறையும் போது ஒரு ஆசனத்திற்கு தேவையான வாக்குகளின் எண்ணிக்கையும் குறையும். இந்நிலை வந்தால் கணிசமான ஆசனங்களை அரசாங்கக் கட்சி பெறக்கூடிய நிலை ஏற்படும்.

ஆனால் இங்குள்ள நெருக்கடி என்னவென்றால் சுயேட்சை குழுக்களில் வலிமையான குழுக்கள் இரண்டும், டக்ளஸ் தேவானந்தாவின் வாக்குகளையே ஊடறுக்கும் சக்தி கொண்டவையாக உள்ளன. அவருக்கு கோப்பாய், மானிப்பாய் தொகுதிகளில் உள்ள் கிராமங்களில் கணிசமான செல்வாக்கு உண்டு. கட்சி உறுப்பினர்களும் இப்பிரதேசங்களில் உள்ளனர். இக்கிராமங்கள் முன்னர் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் கிராமங்களாக இருந்தன. தற்போது ஈ.பி.டி.பியின் கைகளுக்கு மாறியுள்ளது.

பழைய EPRLF கிராமங்களில் சுரேஷ் பிரேமசந்திரனுக்கு எந்தச் செல்வாக்கும் கிடையாது. அவருடைய செல்வாக்குத் தளம் அவரது பிறந்த இடமான கட்டைப்பிராயைச் சுற்றியுள்ள இருபாலை, கல்வியங்காடு பிரதேசங்களிலேயே உள்ளது. இவை தமிழரசுக் கட்சியின் செல்வாக்கிற்குட்பட்ட பிரதேசங்களே.

எனவே சுயேட்சைக் குழுக்கள் டக்ளஸ் தேவானந்தாவின் வாக்குகளை ஊடுறுவுகின்றன என்றால் டக்ளஸ் தேவானந்தா செல்வாக்கானவராக வருவதையும் ஜனாதிபதி விரும்பவில்லைப் போலவே தெரிகிறது. ஒருவருக்கு எதிராக இன்னொருவரை பயன்படுத்தி விழுத்துதல் என்ற அரசியல் மூலம் இறுதியில் எல்லோரையும் விழுத்தும் தந்திரோபாயம் தான் இங்கு பின்பற்றப்படுகிறது.

ஜனாதிபதி கருணாவை பயன்படுத்தி புலிகளை வீழ்த்தினார். பின்னர் பிள்ளையானைப் பயன்படுத்தி கருணாவை வீழ்த்தினார். இந்தந்திரோபாயம் வடக்கிற்கும் வந்துவிட்டதா? என்ற சந்தேகம் எழுகின்றது.

டக்ளஸ் தேவானந்தா கடைசிவரை தனித்துப் போட்டியிடுவதிலேயே அக்கறையாக இருந்தார். ஆனால் ஜனாதிபதி அதற்கு இடம் கொடுக்கவில்லை.

டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஏற்பட்ட இன்னோர் நெருக்கடி அரசாங்கக் கட்சி சார்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நேரடி வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டமையாகும். EPDP சார்பில் 8 பேரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 3 பேரும் அரசாங்கக் கட்சியில் போட்டியிடுகின்றனர். அம் மூன்று பேரும் தனியாகப் பிரசாரம் செய்கின்றார்களே தவிர டக்ளஸ் தேவானந்தவுடன் இணைந்து பிரச்சாரம் செய்வதில்லை. அவர்களில் அங்கஜன் இராமநாதன் என்ற இளைஞர் பணத்தினை தண்ணீராய்க் கொட்டி பிரச்சாரம் செய்கின்றார்.

இடம்பெயர்ந்த மக்களிற்கான நிவாரணம் வழங்கலையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தனியாக மேற்கொள்கின்றனர். நிவாரணத்திற்கு செல்லும் மக்களிடம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவ விண்ணப்பப்படிவம் கொடுக்கப்பட்டு நிரப்பி வாங்கப்படுகின்றது. இதனால் சலுகைக்காக செல்கின்ற மக்கள் தற்போது டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்குச் செல்வதில்லை. மாறாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கே செல்கின்றனர். இது டக்ளஸ் தேவானந்தாவின் சலுகை அரசியலில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஊர்காவற்றுறை தொகுதியில் டக்ளஸ் தேவானந்தாவிற்கே அதிக செல்வாக்கு இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலிலும் மகிந்தா ராஜபக்ஷ வெற்றிக் கொண்ட ஒரேயொரு தொகுதி ஊர்காவற்றுறை தொகுதிதான். வலிகாமப் பகுதியிலும் ஓரளவு செல்வாக்கு இருக்கின்றது. இதனால் அரசாங்கக் கட்சியின் சார்பில் டக்ளஸ் தேவானந்தா நிச்சயமாகத் தெரிவுசெய்யப்படுவார். அரசாங்கக் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைக்கும் என நிச்சயப்படுத்திச் சொல்லலாம். சிலவேளைகளில் இரண்டு ஆசனங்கள் கிடைக்கலாம். அவ் இரண்டாவது ஆசனம் அங்கஜன் இராமநாதனுக்கு அல்லது EPDP யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாருக்கு கிடைக்கலாம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்காளர்கள் அதிகமாக உள்ள கோப்பாய், மானிப்பாய், நல்லூர் தொகுதிகளில் ஆதரவு உள்ளது. ஆனாலும் கோப்பாய் மானிப்பாய் தொகுதிகளிலுள்ள உள் கிராமங்களில் பெரிய ஆதரவு இல்லை. அந்த கிராமங்களுக்கு பெரியளவிலான பிரச்சார செயற்பாட்டையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை. மொத்தத்தில் கூட்டமைப்பின் பிரச்சாரம் பலவீனமாகவே உள்ளது. ஆள்பற்றாக்குறையே பிரதானக் காரணம். நிதி நெருக்கடியும் உண்டு.

மானிப்பாய், வட்டுக்கோட்டைத் தொகுதிகளிலிருந்து வேட்பாளர்களும் சேர்க்கப்படவில்லை. இதனால் தொகுதியின் சொந்த வேட்பாளர் இல்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. காங்கேசன்துறை தொகுதி வாக்காளர்கள் பலர் இடம் பெயர்ந்துள்ளதால் மானிப்பாய் தொகுதியிலிருந்து வேட்பாளர்களைச் சேர்த்துக் கொள்ள மாவை சேனாதிராஜா விரும்பவில்லை. தான் தோல்வியடையலாம் என்ற அச்சமே இதற்கு காரணமாகும். அதன் பின்னரும் வெற்றி பற்றி சற்று அச்சத்தில் அவர் இருப்பதாகவே செய்திகள் வருகின்றன. 2004 தேர்தலிலும் விளிம்பு நிலையிலேயே அவர் வெற்றி பெற்றிருந்தார்.

தீவுப் பகுதியிலும் வடமாராட்சியிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு செல்வாக்கு குறைவு. தென்மராட்சியில் சாவகச்சேரி றிபேக் கல்லூரி அதிபர் அருந்தவபாலன் போட்யிடுவதால் அங்கு ஆதரவு சற்று அதிகமாக உள்ளது. கிளிநொச்சியிலும் கணிசமான வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கலாம்.

மொத்தத்தில் தமிழ்த் தேசிய சக்திகளின் ஆதரவு குடாநாட்டில் அதிகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே இருப்பதால் அதற்கே அதிக ஆசனங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நான்கு ஆசனங்கள் நிச்சயமாகக் கிடைக்கும். சிலவேளைகளில் ஐந்து ஆசனங்கள் கிடைக்கலாம்.

சுரேஷ் பிரேமச்சந்திரன், அருந்தவபாலன், றொமீடீயஸ், சிவஞானம், மாவை சேனாதிராஜா ஆகியோர் வெற்றியடையலாம். ஏனையோருக்கு பெரிய வெற்றி வாய்ப்புக்கள் இல்லை.

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு பாரம்பரியமான தமிழ்க் காங்கிரசின் வாக்குகளும் தீவிர தேசிய சக்திகளின் வாக்குகளும் விழுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. குறிப்பாக வடமராட்சிப் பகுதியில் இவர்களுக்கு ஆதரவு அதிகமாக இருக்கின்றது. அவர்களும் அதிகளவில் வடமராட்சியை மையப்படுத்தியே பிரச்சாரம் செய்கின்றனர். கிராமிய உழைப்பாளர் சங்கம் இவ்வமைப்புக்கு ஆதரவு கொடுப்பதனால் மானிப்பாய், கோப்பாய்த் தொகுதிகளிலுள்ள கிராமங்களிலிருந்தும் கணிசமான வாக்குகள் அளிக்கப்படலாம்.

மிதவாத தமிழ்த் தேசிய சக்திகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து இவர்கள் பிரிந்துச் சென்றமை தொடர்பாக அதிருப்தி நிலையிலேயே உள்ளனர். இதைவிட இவர்களின் கருத்துக்களும் பெரியளவிற்கு மக்கள் மத்தியில் ஊடுருவவில்லை. பிரச்சார செயற்பாடுகளிலும் இவர்கள் தீவிரமாக ஈடுபடுகின்றனர் எனக் கூறிவிடமுடியாது. அதற்கான போதிய கால அவகாசமும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆள்வளங்கள், நிதிவளங்கள் என்பவற்றின் பற்றாக்குறை இவர்களுக்கும் உள்ளது. அதைவிட தமிழ் உயர் குழாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நிற்பதால் ஒழுங்குப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் ஆதரவும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. ஊடகங்கள் வேண்டுமென்றே இவர்களைப் புறக்கணிப்புச் செய்வதால் ஊடகங்கள் மூலமான பிரச்சாரங்களையும் செய்ய முடியாது உள்ளனர்.

வரதராஜன், குழந்தைவேலு என்பவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு இவர்களுக்கு கைகொடுக்கலாம். போர் பாதிப்பில் மக்கள் இருப்பதனால் இவர்களின் தீவிரக் கருத்துக்களும் மக்கள் மத்தியில் எடுபட சற்றுச் சிரமப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு வரலாற்றில் தவிர்க்க முடியாத கொள்கை ரீதியான பிளவு என்பதையும் மக்கள் மத்தியில் தெளிவாக கொண்டு செல்ல இவர்களால் முடியவில்லை.

தமிழ்த் தேசிய அரசியலை தொடர்வதா? இல்லையா? என்பது தான் உண்மையில் பிளவுக்கு காரணம். இந்தக் கொள்கைப் பிரச்சினை மக்கள் மத்தியில் பேசப்படாமல் தனிப்பட்டப் பிரச்சினைகளே மக்களிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களினால் கொண்டுச் செல்லப்பட்டன.

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைக்கும் கஜேந்திரகுமார் வெற்றியடைவார். மற்றயவர் யாரென உறுதியாகக் கூற முடியாது.

ஏனைய கட்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் இடதுசாரி முன்னணியும் கணிசமான வாக்குகளைப் பெறலாம். ஆனால் ஒருவராவது தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. சிலவேளைகளில் மீதி வாக்குகள் காரணமாக மகேஸ்வரனின் துணைவியார் விஜயகலா மகேஸ்வரன் வெற்றியடையலாம். அவருக்கு காரைநகர் பிரதேசத்தவர்களையும் நகரிலுள்ள வர்த்தக சமூகத்தையும் தவிர ஏனையவர்கள் வாக்களிக்க கூடிய சூழல் இல்லை.

இவ்வாக்குகள் கூடத் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக வருகின்ற வாக்குகளே தவிர ஐக்கிய தேசியக் கட்சிக்குரிய வாக்குகள் அல்ல. ஐக்கிய தேசிய கட்சிக்கு குடா நாட்டில் எந்தவித செல்வாக்குத் தளமும் கிடையாது. கொள்கை ரீதியாக ஆதரிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியிடம் எதுவுமில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனந்த சங்கரி தலைமையில் போட்டியிடுகின்றது. கணிசமான வாக்குகள் இதற்கு விழலாம். ஆனால் ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இல்லை. அச்சுவேலிப் பிரதேசம், கிளிநொச்சிப் பிரதேசங்களில் கணிசமான வாக்குகள் அளிக்கப்படுவதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு. இதன் பிரச்சாரங்கள் குறைந்த மட்டத்திலாவது இருப்பதாகத் தெரியவில்லை.

வயது போன நேரத்தில் பகிரங்கக் கடிதங்களை அவர் எழுதிக் கொண்டிருக்க வேண்டியது தான். முன்னர் பிரபாகரனுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். தற்போது ஜனாதிபதிக்கு எழுதிக் கொண்டிருக்கிறார். இனி சோனியா காந்திக்கு எழுத வேண்டியது தான் பாக்கி.

சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் இடதுசாரி முன்னணியின் சின்னத்தில் போட்டியிடுவதால் அதற்கும் கணிசமான வாக்குகள் கிடைக்கலாம். குறிப்பாக வடமராட்சிப் பகுதி, தீவுப் பகுதிகளில் கணிசமான வாக்குக் கிடைக்கலாம். எனினும் ஒரு ஆசனமாவது கிடைக்கக்கூடிய நிலை இல்லை. சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் அணியுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் வெற்றியடைந்திருக்க முடியும். ஆனால் ஸ்ரீகாந்தாவை விட்டு வரமறுத்தததினால் சிவாஜிலிங்கம் இணையவில்லை. ஸ்ரீகாந்தா கொள்கை ரீதியாக உறுதியில்லாதவர், குழப்பக்காரன் என்பதால் அவரை இணைக்க கஜேந்திரகுமார் விரும்பவில்லை.

சிவாஜிலிங்கம் தன்னையும் பலவீனப்படுத்தி, கஜேந்திரகுமார் அணியையும் பலவீனப்படுத்தியதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. ஜனாதிபதி தேர்தலில் புலம் பெயர் மக்களினுடைய பணம் சிவாஜிலிங்கத்திற்கு கிடைத்தது. இந்தத் தடவை அதுவும் பெரியளவிற்கு கிடைக்கவில்லை. இதனால் நிதிவளம், ஆள்வளம் என்பவற்றிற்கும் அவர் பெரிதும் சிரமப்படுகின்றார்.

ஐக்கிய தேசிய கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, இடதுசாரி முன்னணி, சுயேட்சைக் குழுக்களாகப் போட்டியிடும் சிறுபான்மைத் தமிழர் மகாசபை, புதிய ஜனநாயகக் கட்சி ஆகியன இணைந்து 30,000 தொடக்கம் 40,000 வரையிலான வாக்குகளைப் பெறலாம். ஆனால் இவைத் தனித்தனியாக 5 வீதத்துக்கு குறைவான வாக்குகளே எடுக்கக்கூடிய நிலை இருப்பதனால் அவை கணிப்பீட்டுக்கு வராது. இந்நிலை மொத்தக் கணிப்பீடடுக்குரிய வாக்குகளை வெகுவாக குறைக்கும். இக்குறைவு அரசாங்கக் கட்சி அதிகமான ஆசனங்களைப் பெறுவதற்கு சாதகமான சூழ்நிலையினை உருவாக்கலாம்.

வன்னியில் வாக்களிப்புப் பற்றிச் சொல்வது கடினம். இடம்பெயர்ந்தவர்கள் இன்னமும் முழுமையாகக் குடியேற்றப்படவில்லை. குடியேற்றப்பட்டவர்களும் சுதந்திரமாக செயற்படும் நிலை இல்லை. முகாம்களில் இருப்பவர்கள் மீதும், குடியேற்றப் பட்டவர்கள் மீதும் அரசாங்கத்தின் செல்வாக்கே அதிகமாக உள்ளது. இம்மக்கள் மத்தியில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்வதற்கும் பெரியளவிற்கு அனுமதிக்கப்படவில்லை.

வவுனியா நகரப்பகுதியும் மன்னார் குடாபகுதியும் ஓரளவிற்கு சுதந்திரமாக வாக்களிக்க கூடிய நிலையில் உள்ளன. இப்பகுதிகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அதிக வாக்குகள் கிடைக்கலாம். மன்னார் பகுதி வாக்குகள் ஆயரின் செல்வாக்கில் இருப்பதனால் பெரும்பான்மையாக கூட்டமைப்புக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளது.

வவுனியா நகரப்பகுதி வாக்குகளும், இடம்பெயர்நதவர்களின் வாக்குகளும்தான் பிரிபடக் கூடிய நிலை ஏற்படும். முஸ்லீம் வாக்குகள் முஸ்லீம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சி சின்னத்தில் போட்டியிடுவதனால் அதற்கே அதிகளவில் கிடைக்கும். தமிழ் வாக்குகள் சிறியளவிலும், சிங்கள வாக்குகள் சிறியளவிலும் அதற்கு கிடைக்கலாம். எனவே ஒரு ஆசனம் அதற்கு நிச்சயமாக கிடைக்கும். முஸ்லீம் காங்கிரசின் சார்பில் போட்டியிடும் நூர்தீன் மசூர் தெரிவு செய்யப்படலாம்.

சிங்கள வாக்குகள் அரசாங்கக் கட்சிக்கே அதிகம் கிடைக்கும். றிசாத் பதியுதீன் போட்டியிடுவதனால் முஸ்லீம் வாக்குகளும் கணிசமான அளவு கிடைக்கலாம். அரசாங்கத்தின் ஆதிக்கத்துக்குள் இருப்பதால் இடம் பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளும் கணிசமானளவு அரசாங்கக் கட்சிக்கு கிடைக்கலாம். இவையெல்லாம் சேர்ந்து ஒரு ஆசனத்தை கிடைக்கச் செய்யலாம். ரிசாத் பதியுதீன் அல்லது சுமதிபாலா தெரிவு செய்யப்படலாம். தமிழர்கள் அரசாங்க கட்சி சார்பிலோ ஐக்கிய தேசிய கட்சி சார்பிலோ தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்புக்கள் அறவேயில்லை.

வவுனியா நகரப் பகுதியில் புளட் இயக்கத்திற்கும் கணிசமானளவு செல்வாக்கு இருக்கின்றது. இதனால் மீதி வாக்குகளிலாவது அக்கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைக்கலாம். அவ்வாறு கிடைத்தால் சித்தார்த்தனே அக்கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படுவார்.

எனவே மொத்த ஆறு ஆசனங்களில் 3 ஆசனங்கள் ஏனைய கட்சிக்கு செல்ல 3 ஆசனங்கள் மட்டுமே தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்கலாம். சிலவேளைகளில் 4 ஆசனங்கள் கிடைக்கலாம். அவ்வாறு கிடைத்தால் அரசாங்கக் கட்சிக்கு அல்லது புளட் இயக்கத்திற்கு ஆசனம் இல்லாமல் போகலாம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சூசைதாசன், டாக்டர் ஜெயகுலராஜா ஆகியோர் தெரிவு செய்யப்படலாம். கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வன்னியில் போட்டியிடுவதைத் தவிர்த்ததால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை பெரியளவிற்கு ஊடுறுவக் கூடிய சக்திகள் இல்லை. இந்த வகையில் வட-கிழக்கு முழுவதிலுமேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நெருக்கடி குறைந்த தேர்தல் மாவட்டமாக வன்னி மாவட்டமே உள்ளது எனலாம். வன்னியிலுள்ள தீவிர தேசியவாதிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆதரிப்பதனைத் தவிர வேறு தெரிவு இல்லை.

தெரிவு செய்யப்படக்கூடியவர்களில் சூசைதாசனைத் தவிர செல்வம் அடைக்கலநாதனும் ஜெயகுலராஜாவும் கஜேந்திரகுமார் அணியுடனும் எதிர்காலத்தில் இணைந்து செயற்படக் கூடியவர்கள். அவர்களுக்கிடையே பகைமை உணர்வு எதுவும் கிடையாது.

கட்சிகளின் பிரச்சாரங்கள் யாழ் மாவட்டத்தைப் போல மந்தமாகவே உள்ளது. பெரிய பிரச்சாரக் கூட்டங்கள் எதுவும் கிடையாது. சிறிய கூட்டங்கள் மட்டுமே நடைபெறுகின்றன. வன்னியில் கிராமங்களுக்கிடையிலான தூரம் மிகப் பெரிதாக இருப்பதனால் நேரடிப் பிரச்சாரத்திலும் மந்த நிலையே உள்ளது. இம்மந்ததிற்கு முழு வட - கிழக்கிற்குமான பொதுவான காரணங்களே இங்கும் ஆதிக்கம் செலுத்துகின்றது.

http://www.ponguthamil.com/paarvai/paarvaicontent.asp?sectionid=2&contentid={6BC3AC41-53F5-4DE1-800E-B352E502D207}

வயது போன நேரத்தில் பகிரங்கக் கடிதங்களை அவர் எழுதிக் கொண்டிருக்க வேண்டியது தான். முன்னர் பிரபாகரனுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். தற்போது ஜனாதிபதிக்கு எழுதிக் கொண்டிருக்கிறார். இனி சோனியா காந்திக்கு எழுத வேண்டியது தான் பாக்கி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.