Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ‐ வயற்கடல் வெளி ‐ மன ஆறுதலுக்காக அம்மாளிடம் வந்திருக்கிறேன் ‐ நாங்கள் வேறு எங்கு போக முடியும் ‐ குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன்

Featured Replies

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ‐ வயற்கடல் வெளி ‐ மன ஆறுதலுக்காக அம்மாளிடம் வந்திருக்கிறேன் ‐ நாங்கள் வேறு எங்கு போக முடியும் ‐ குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன்

vattappalai20620copy.jpg

கடந்த வருடம் யுத்தம் மிகத் தீவிரமாகி மக்கள் அனைவரும் வன்னியை விட்டு வெளியேறிய ஒரு சில நாட்களில் வற்றாப்பளை அம்மன் வருடாந்த திருவிழா வந்தது. முன்பு வற்றாப்பளை அம்மன் கோயிலை சுற்றி லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருக்கும் நிலையில் அந்த வருடம் கோயிலையோ திருவிழாவையோ யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் ஆகி விட்டது. வற்றாப்பளை ஆலயத்தை சுற்றி மிக அண்மையில்தான் மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

நான் வற்றாப்பளை ஆலயத்திற்கு செல்லும் பொழுது இருட்டி விட்டது. வற்றாப்பளை சந்தியில் இறங்கி பார்த்த பொழுது தூரத்தில் கலர் மின் குமிழ்கள் எரிந்து கொண்டிருப்பது தெரிந்தன. கோயிலில் சனக்கூட்டம் நிறைந்திருப்பதைபோல தெரியவில்லை. ஏனென்றால் அந்த வீதியில் இறங்கி நடப்பவர்கள் முதல் அந்த வீதியால் வரும் பொழுது வரும் வாகனங்கள் வரை எல்லாமே மிக குறைவாக காணப்பட்டது. தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற பொழுது அங்கு சனக்கூட்டங்கள் பெரியளவில் காணப்படவில்லை. ஆனால் எப்படியிருந்த கோயில் எப்படி இருந்த சனக்கூட்டம்தான் என்ற நினைவுகள்தான் எனக்கு மேலிட்டன.

இந்த கவர்ஸ்டோரியில் நான் முதலில் சந்தித்த பாத்திரம் கோயிலின் முன்பாக இருந்த நந்திக் கடலை காட்டி என்னுடன் பேசத் தொடங்கியது. அவர் சமீபத்தில் விடுதலையான முன்னாள் போராளி சிறையிலிருந்த வெளியில் வந்த மகிழ்ச்சியை நந்திக்கடல் மறைத்துக் கொண்டிருந்தபடி பேசுகிறார்.

"இந்தக் கடலில்தான் எங்கள் பிணங்கள் போனவருடம் மிதந்து கொண்டிருந்தன. இப்பொழுது மிக அமைதியாக இந்தக் கடல் இருக்கிறது. இடையிடையே பெருஅலைகள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. மிக இறுதிநேரத்தில்தான் நான் வெளியேறினேன். கொல்லப்பட்ட உடல்கள் நிறைய மிதந்து கொண்டிருந்தன. எங்கள் தோல்வி, உலகம் காப்பாற்றும் என்ற நம்பிக்கை, கணக்கிட முடியாத மரணம் எல்லாவற்றையும் இந்த நந்திக் கடல் இன்று பிரதிபலிக்கிறது. இந்தக் கடல் எங்கள் வாழ்க்கையிலும் மரணத்திலும் மிக நெருக்கமானது. இந்தக் கடலில் இருந்துதான் தண்ணீர் எடுக்கப்பட்டு அதில்தான் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. அடங்காத பல உயிர்கள் அதில் எரிந்து கொண்டிருப்பதைப்போல எனக்கு இருக்கிறது"

vattappalai20220copy.jpg

இம்முறை மக்கள் பெரியளவில் வரமாட்டார்கள் என்பதை யாராலும் முற்கூட்டியே புரிந்து கொள்ள முடிந்திருக்கும். வந்தவர்களினதும் வராதவர்களினதும் கதைகள் ஆயிரம் ஆயிரம் எனது காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தன. முதலில் கோயிலுக்குள் சென்றேன். மிக குறைவான மக்கள் வணங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் தேவாரங்களை படித்துக் கொண்டிருந்தார்கள். கோயில் தொண்டு செய்து கொண்டிருந்த ஒரு முதியவருடன் பேசினேன்.

"இந்தக் கோயிலின் பழமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். வன்னியில் இந்தக் கோயில் ஆண்டாண்டு காலாக மக்களின் மனநிலைகளுடன் இணைந்து வந்திருக்கிறது. எங்கள் நம்பிக்கை சமூக அடுக்கு பொருளாதார நிலை என்பவற்றுடன்தான் இந்தக் கோயிலை நீங்கள் பார்க்க வேண்டும். அதற்கமைவாகவே திருவிழா நடக்கிறது. இதில் நாங்கள் நிறைய நம்பிக்கைகளை வைத்திருக்கிறோம். இந்த ஆலயத்திற்கு ஏற்றும் தீபத்திற்கு கடல் நீரை எடுத்து வருவதற்காக ஏழுபேர் போகிறார்கள். அவர்கள் சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கமைவுகளையும் சார்ந்தவர்கள். எல்லா சமூகத்தவரும் ஒரு விடயத்தை நடத்த அவசியமானவர்கள் என்பதை இதில் நீங்கள் புரிந்து கொள்ளலாம்"

கடல் நீரில் ஏற்றும் தீபம் உள்ளே எரிந்து கொண்டிருந்தது. அதற்கு தொடர்ந்து நீரை விட்டுக் கொண்டிருந்தார்கள். இறுதிப் பூசைக்காக பூசகர்கள் தயராகிக் கொண்டிருந்தார்கள். தொடர்ந்து பேசிய அந்த முதியவர் கடலில் அந்த நீரை எடுக்கும் முறை பற்றி குறிப்பிட்டார்.

"கடலுக்கு இந்த நீரை எடுப்பதற்காக செல்லும் பொழுது வரும் சிறிய அலைகளை தவிர்த்து ஒரு பெரிய அலைக்காய் காத்திருப்போம். அந்த அலை வரும் பொழுது ஒருவர் அதில் மூழ்க்கி ஒரு குடம் நீரை எடுப்பார். அந்த நீரில் இந்த தீபம் எரியும். அந்த ஒரு குடம் நீரில் முதலில் காட்டு விநாயகர் கோயிலில் எட்டு நாட்கள் வரை தீபம் வைப்போம். பின்னர் இறுதி இரண்டு நாட்கள் இந்தக் கோயிலில் தீபம் வைப்போம். இது பல ஆண்டு காலமாக நடந்து வருகிறது. உங்களுக்கு நம்பமுடியாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் பார்க்கும் அந்த தீபம் தண்ணீரில்தான் எரிகிறது. நாங்கள் நம்புகிறோம். இந்த தீபத்தை சுற்றி எங்கள் நம்பிக்கைகள் பல இருக்கின்றன"

அந்த விளக்கு எரிந்து கொண்டுதான் இருக்கிறது. அவர் குறிப்பிடும் நம்பிக்கையை மக்கள் வாழ்வுடன் வைத்துப் பார்க்க வேண்டும். வரலாற்றுப் பின்னணிகளுடன் வைத்துப் பார்க்க வேண்டும். வற்றாப்பளை அம்மன் கோயில் என்றதும் அந்த தீபம்தான் மக்களின் முதல் நம்பிக்கையும் ஆச்சரியமுமாக இருக்கிறது என்பதை நாம் எல்லோருமே அறிந்திருக்கிறோம். அந்த தீபத்தை சுற்றி என்ன என்ன நம்பிக்கைகளை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன்.

"நீரை எடுக்கும் பொழுது குறைக்குடமாக வரக்கூடாது. தீபம் ஏற்றும் பொழுது அது அணைந்துவிடக்கூடாது. கடைசியாக திருவிழா நடந்ததிற்கு முதல் முறை அப்படி குறைக்குடமாக நீர் வந்தது. அப்பொழுது முதல் எங்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டுவிட்டன. ஆனால் இம்முறை நிறைகுடமாக வந்திருக்கிறது. தீபமும் அணையால் எரிகிறது"

vattappalai20320copy.jpg

கண்ணகி கோயிலின் பின்புறமாக தீபங்களை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். கோயிலுக்குள் இன்னொரு இடத்தில் புராணம் படித்துக் கொண்டிருந்தார்கள். வயது முதிர்ந்தவர்கள் சிலர் ஓலையில் உள்ள புராணத்தை பாடிக் கொண்டிருந்தார்கள். காட்டு விநாயகர் ஆலயத்திலிருந்து கண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்த வரலாற்றை சொல்லும் புராணம் என்று புராணம் படிக்கும் ஒருவர் குறிப்பிட்டபடி புராணத்தை பாடிக் கொண்டிருந்தார். வற்றாப்பளையின் பழைய பெயர் பத்தாப்பளை என்றும் காட்டு விநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்ட கண்ணகி ஒன்பது இடங்களுக்கு சென்றுவிட்டடு பத்தாவது இடமாக குறித்த இடத்திற்கு வந்தமையால் அதை அப்படி பத்தாப்பளை என அழைப்பதாக அந்தப் புராணத்தில் பாடினார்கள்.

கோயிலுக்கு வெளியில் மணல் திட்டுகளில் வயல்களில் அமர்ந்திருந்த பலரை சந்தித்து பேசத் தொடங்கினேன். அவர்களில் பலர் இன்னமும் தடுப்பு முகாங்களிலிருந்து விடுதலையாகவில்லை. பலர் கோயிலுக்குள் உள்நுழையாமல் வெளியில் இருக்கிறார்கள். மணல் திட்டுகளில் படுத்துறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

"இராமநாதன் முகாமிலிருந்து வந்திருக்கிறேன். என்னுடன் சித்தி வந்திருக்கிறார். சித்தியின் பிள்ளைகள் வந்திருக்கிறார்கள். எனது அம்மா வரவில்லை. எங்கள் அப்பா சண்டை நடத்த பொழுது காணாமல் போயிருந்தார். அதனால் அம்மா வரவில்லை. நான் எல்லோருக்காகவும் சித்தியுடன் சேர்ந்து அர்ச்சனை செய்துவிட்டு இருக்கிறேன்"

இப்படி என்னுடன் பேசிய சிறுவன் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறான். முகாமல் வாழ்ந்து கொண்டிருப்பதற்குரிய அடையாளங்கள் அவனிடம் நிறைய தெரிகின்றன. இயல்புக்கு மாறாக மெலிந்து போயிருந்தான். களைப்பும் சோர்வும் முகத்தில் தெரிந்தது. தொடர்ந்து ஒரு பல்கலைக்கழக மாணவனை பார்த்து பேசினேன்.

"பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன். முன்பு உயர்தரம் படித்துக் கொண்டிருந்த பொழுது எங்கள் பெற்றோருடன் இந்தக் கோயிலுக்கு வருவோம். ஆனால் எங்கள் வகுப்பு மாணவர்களை ஆசிரியர்களை இந்தக் கோயிலில் வைத்து எப்படியாவது சந்திருக்கிறோம். போரால் எனது நண்பர்கள் என்னவானார்கள் என்று தெரியவில்லை. நிறையப் பேருடைய தொடர்புகள் இல்லை. அவர்களை இன்று சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் கோயிலுக்கு வந்தேன். நீங்கள் பார்க்கும் இந்த நண்பனை இன்றுதான் கோயிலில் வந்து சந்தித்தேன்"

இப்படி பல இளைஞர்கள் தங்கள் நண்பர்களைத் தேடுகிறார்கள் என்பதை அவர்கள் ஒவ்வொருவருடைய முகத்தையும் கூர்ந்து பார்ப்பதிலிருந்து புரிய முடிகிறது. பலர் களைத்துப் போய் கோயிலைச் சுற்றியிருந்தார்கள். வயதான முதியவர் ஒருவரை மற்றொரு இடத்தில் வைத்து சந்தித்தேன்.

"முகாமிலிருந்து போம் போட்டுத்தான் வந்திருக்கிறேன். முக்கியமாக ஊரைப் பார்க்க வேண்டும். ஊர் எப்படி இருக்கிறது. வீதிகள் எப்படி இருக்கின்றன என்று பார்க்க வேண்டும் என அவாவுடன்தான் வந்தேன். கோயிலுக்குள் உள்நுழையும் அளவில் என் மனம் இல்லை. எவ்வளவோ நடந்து விட்டன. அடுத்த வருடம் கோயிலுக்குள் போவதைப் பார்ப்போம்."

தொடர்ந்து பேச முடியாதபடி வெளித் தெரிந்த அவருடைய பதில்கள் விரக்கியடைந்தனவாக தெரிந்தன. அவருக்கு பக்கத்தில் சில நிமிடங்கள் மௌனமாக இருந்து விட்டு செல்கையில் ஒரு வயதான அம்மாவைப் பார்த்தேன். ஒரு பாயில் இருந்து கொண்டு தனியே யோசித்தபடியிருந்தார்.

"தனியே கோயிலுக்கு வரும்பொழுது எப்படி மனம் வலிக்கும் என்று இன்றுதான் எனக்கு தெரிகிறது. நான் இப்பொழுது தனி மரமாயிருக்கிறேன். பொங்கல் செய்யிற மாதிரி எனக்கும் எந்த நேத்திகளும் நிறைவேறவில்லை. சண்டை நடந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பொழுது நான் வாய்க்கு வாய் வற்றாப்பளை அம்மாளை வேண்டிக் கொண்டிருந்தேன். இறுதியில் எல்லாரையும் இழந்துவிட்டேன். இன்று மன ஆறுதலுக்காக அம்மாளிடம் வந்திருக்கிறேன். நாங்கள் வேறு எங்கு போக முடியும்? இங்கு பொங்கல் செய்யும் எல்லாருமே நேத்தி நிறைவேறியதால் பொங்கவில்லை. ஏதோ ஒரு ஆறுதலுக்காக பொங்குகிறார்கள்"

மிக கனத்துப்போன மனதுடன் இருக்கும் அந்த அம்மாவை இந்தத் கோயிலில் பல வருடங்கள் வந்து போகிறார். அவர் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர். இன்னும் மீள்குடியமர்வு செய்யாத நிலையில் உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருக்கிறார். நீண்ட தூரத்திலிருந்து வரும் சில பறவைக் காவடிகளையும் தேவாரங்களுடன் வரும் சில காவடிகளையும் பார்த்துக் கொண்டு தொடர்ந்து பேசினார்.

"இம்முறை சனங்கள் குறையவே வந்திருக்கிறார்கள். முன்புடன் ஒப்பிடும் பொழுது கால்வாசியினாதான் வந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் நீண்ட காலம் வராமல் இருந்தவர்கள். வன்னிக்கு வெளியில் இருந்து வந்தவர்கள், முஸ்லீம்கள் என முக்கால்வாசிப்பேர் புதியவர்களாக இருக்கிறார்கள்"

இங்கு அந்த அம்மா குறிப்பிடும் பொங்கல் நிகழ்வுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கோயிலில் நேத்தியை நிறைவேற்றியமைக்காக அப்படி பொஙகுவதும் ஒரு சிறப்பான நிகழ்வாயிருக்கிறது. வழமையான திருவிழாப்போல எதிர்பார்க்காமல் மிக குறைவான பானைகளை பொங்கலுக்காக தயார்படுத்தி வைத்திருந்த பொழுதும் அவற்றில் அதிகளவானவை பொங்கப்படாமல் அடுக்கப்பட்டு இருந்தன.

"நான் புத்தளத்தில் இருந்து வருகிறேன். எங்கள் இடம் முள்ளியவளை. நாங்கள் 90 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து போயிருந்தோம். சமாதான காலத்தில் வந்து எங்கள் ஊரை பார்த்திருக்கிறேன். நான் ஊரைப் பார்க்க வேண்டும் என்று வந்தாலும் நாங்களும் இந்தக் கோயில் திருவிழாவுக்கு வந்து போகும் பழக்கம் இருப்பதாக வாப்பா சொன்னார். அதனால் கோயில் திருவிழாவுக்கு கலந்து கொள்ள வேண்டும் என்பதால் கொழும்பு போன்ற பல இடங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நமது நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து வந்திருக்கிறோம்"

இப்படி சொல்லும் ஒரு முஸ்லீம் சகோதரர் என்னுடன் தானாக முன் வந்து அறிமுகம் செய்து கொண்டு பேசினார். அப்படி, முஸ்லீம் சகோதரர்கள் பலர் பேருந்துகளில் வந்தார்கள். அங்கிருந்த பலரை தேடிச் சென்று தங்களை அறிமுகப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் நள்ளிரவளவில் கோயிலை விட்டு புறப்படும் பொழுது வழியில் ஒரு முதியவர் பேசிக் கொண்டு வந்தார்.

வற்றாப்பளை அம்மாள் சக்தி மிக்கவள் என்றும் அவள்தான் இந்தப் பகுதி மக்களை மீள இந்த இடத்திற்கு எங்களை கொண்டு வரப் பண்ணினாள் என்றபடி புன்னகைத்தார். படைகள் பாம்புகளை பார்த்தாகவும் அவைகள் மிரட்டியதாலும் அவர்களுக்கு, நோய் உண்டாகியதாலும்தான் எங்களை இந்த இடத்திற்கு குடியமர்த்தினார்கள் என்றும் பிரமிப்புடன் சொல்லுகிறார். இந்த வருடத்தில் அம்மாளுக்கு திருவிழா செய்வது மட்டுமல்ல முல்லைத்தீவுப் பகுதிக்கு நாங்கள் குடியேற எத்தனை ஆண்டுகள் ஆகுமோ என்ற ஏங்கியிருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இப்படி தமிழ் மக்களின் வாழ்க்கை அன்றாட நிகழ்வுகள் நம்பிக்கைகள் என்று எல்லாவற்றுடனும் இந்தக் கோயில் இணைந்திருப்பதை தரிசனமாகப் பார்க்க முடிகிறது.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜா பார்த்தீபன்

www.globaltamilnews.net

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

.

"நீரை எடுக்கும் பொழுது குறைக்குடமாக வரக்கூடாது. தீபம் ஏற்றும் பொழுது அது அணைந்துவிடக்கூடாது. கடைசியாக திருவிழா நடந்ததிற்கு முதல் முறை அப்படி குறைக்குடமாக நீர் வந்தது. அப்பொழுது முதல் எங்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டுவிட்டன. ஆனால் இம்முறை நிறைகுடமாக வந்திருக்கிறது. தீபமும் அணையால் எரிகிறது"

வற்றாப்பளை கண்ணகி அம்மன், இந்தவருடமாவது தமிழனுக்கு நல்லது செய்வார் என்னும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.