Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதியும் நவீன அரசியலும் - யதீந்திரா

Featured Replies

1

முள்ளிவாய்க்கால் மனித அவலம் நிகழ்ந்து ஒரு வருடமாகிவிட்டது. எல்லாவற்றுக்கும் நினைவு தினம் அனுஸ்டிப்பது போன்றே இதனையும் நினைவு தினமாக அனுஸ்டித்து நம்மை நாமே ஆற்றுப்படுத்திக் கொண்டோம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நம்மீது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்கு முறைகளுக்கு எதிரான நினைவு தினங்கள் அனைத்தும் இயலாமையின் வெளிப்பாடாக இருந்திருக்கின்றனவே தவிர செயலுக்கான அணிச் சேர்க்கையாக, செயலுக்கான முனைப்பாக இருந்ததில்லை.

இதற்கு மேல் இந்த இடத்தில் முள்ளிவாய்க்கால் பற்றி நான் எதுவும் பேசப்போவதில்லை. எனது அவதானம் முள்ளிவாய்க்கால் மனித அவலத்திற்கு பிற்பட்ட காலத்தில் என்னுள் எழுந்த ஒரு கேள்வியின் மீதான விசாரனையாகவே அமைகிறது. அது நவீன அரசியலில் நீதி என்னும் கருத்துநிலை வகிக்கும் இடம் பற்றியது. உண்மையில் இன்றைய நவீன அரசியல் சூழலில் நீதி அல்லது அறம் பற்றிய வாதங்களுக்கு ஏதாவது இடமுண்டா? முள்ளிவாய்காலுக்கு பிற்பட்ட அரசியல் என்பது வெறுமனே தமிழ்ச் சூழலுக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல. அது ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து சிந்திக்கும் அனைத்து களங்களிலும் உரையாடப்பட வேண்டிய விடயமாக (Issue) இருக்கிறது. இது விடுதலைப்புலிகள் மீதான விமர்சனம், அவர்களின் ஒற்றைத்தன்மையான அணுகுமுறைகள் என்பவற்றுக்கு அப்பாற்பட்ட கேள்வி.

இன்றைய நவீன அரசியல் என்பது அடிப்படையில் வல்லரசுகளின் பலமையங்களுக்கு இடையிலான போட்டியில் வேர் கொண்டுள்ளது. இந்த போட்டிகளில் ஒரு துருப்புச் சீட்டாக இருப்பதுதான் பயங்கரவாதம் மற்றும் சனநாயகம் என்னும் செற்பதங்களும் அது பற்றிய உரையாடல்களும். துருப்புச் சீட்டின் ஒரு பக்கம் பயங்கரவாதம் என்றால் அதன் மறு பக்கம் சனநாயகம் அகும். இந்த இருபக்க துருப்புச் சீட்டைத்தான் தமது நலன்சார் அரசியலை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் வல்லரசுகள் சதா கையாண்டு வருகின்றன. இதில் இடது, வலது என்ற கருத்தியல் பிளவுகளுக்கு இடமில்லை. எவரெல்லாம் இந்த அரசியல் சதுரங்கத்தில் தமது நலன்சார்ந்து காய்களை நகர்த்துகின்றனரோ அவரெல்லாம் இந்த துருப்புச் சீட்டை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகவே அமையும். இங்கு நான் இடது வலது என்ற பிரிவை அரசுகளைக் கருத்தில் கொண்டு பயன்படுத்தியிருக்கிறேனே தவிர நபர்கள் சார்ந்து அல்ல. ஒரு வகையில் இன்றைய பலமையங்களின் போட்டிக் களமாக இருக்கும் நவீன அரசியல் போக்கானது, பண்டைய பேரரசுகால அரசியலை நவீன சொற்களின் துணைகொண்டு தொடர்வதுதான். பண்டைய கிரேக்க தலைவர்களில் ஒருவரான கிளியான் நீங்கள் ஒரு பேரரசை பெற வரும்பினால், அதனைக் கட்டிக் காக்கக் தேவையான ஈரமற்ற செயல்களைச் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றார்.

1980களுக்கு பின்னரான காலத்தில் குவாட்டமாலாவின் மாயன் பழங்குடி மக்களில் இரண்டு லட்சம் பேர்வரை கொல்லப்பட்டனர். இந்த மக்கள் படுகொiலைக்கு 98வீதம் அரசும் அதன் மரணப்படைகளுமே காரணம் என நீதி விசாரனைக் குழு (Truth Commission) ஆதாரபூர்வமாக நிரூபித்தது. இதற்கு பொறுப்பாக இருந்த Deth Squads எனப்படும் மரணப் படைகளை உருவாக்கி அதனை வழிநடத்தியது அமெரிக்க அரசும் அதன் வெளியகப் புலனாய்வுப் பிரிவான CIA அமைப்புமே என்பதை விசாரனைக் குழு தெளிவாக நிரூபித்திருந்தது. National Security Archivesஎனப்படும் ஆய்வு நிறுவனம் இதற்கான ஆதாராங்களைத் திரட்டிக் கொடுத்தது. இந்தக் காலத்தில் அமெரிக்காவின் இராணுவத் தளபதியாக இருந்த ஜேம்ஸ் டுலிட்டில் (James Doolittle) இவ்வாறு கூறிச் செல்கிறார். “எங்களுடைய விளையாட்டுக்கு எந்த விதிகளும் ஒழுங்குகளும் இல்லை. இதுவரை காலமும் பேசப்பட்டு வந்த மனித ஒழுக்கம், மனிதம் எல்லாம் இங்கு சரிப்பட்டு வராது”

இந்த இடத்தில் இந்த கட்டுரை அடிக்கோடிட முனையும் விடயம் பிறிதொன்றாகும். அதற்காகவே இந்த சம்பவம் எடுத்தாளப்படுகின்றது. நாம் மேலே பார்த்த கிளியானின் ‘நீங்கள் ஒரு பேரரசை பெற விரும்பினால், அதனைக் கட்டிக் காக்கத் தேவையான ஈரமற்ற செயல்களைச் செய்ய தயாராக இருக்க வேண்டும்’ என்னும் கி.பி ஜந்தாம் நூற்றாண்டு கால பிரகடணத்துக்கும் ஜேம்ஸ் டுலிட்டிலின் இருபதாம் நூற்றாண்டு நியாய வாதத்துக்கும் இடையில் என்ன வேறுபாட்டை நாம் கான முடியும்? இதிலிருந்து பேரரசுகால ஆதிக்க நியாயவாதமே நவினகால அரசியலில் சனநாயக முக மூடி தரித்து இயங்குகின்றது என்ற முடிவுக்கு நாம் வர முடியாதா? இங்கு ஆதிக்க நலன்சார் அரசியலின் சார்பியல் தன்மையில் மட்டுமே மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அங்கு அனைத்தும் பேரசரைச் சுற்றி இருந்தது ஆனால் நவீன அரசியலில் ஒரு குறிப்பிட்ட ஆளும் வர்க்கப் பிரிவைச் சார்ந்திருக்கிறது. எனவேதான் இந்த கட்டுரை வாதிட முயல்கிறது நவீன அரசியலில் நீதி அல்லது அறம் என்னும் சொல்லுக்கு பெறுமதியில்லை என்று.

2

அரசியல் என்பது மிகத்துல்லியமான விஞ்ஞானமல்ல அது வலுவுள்ளவர்களின் கலையாகும் என்றார் பிஸ்மார்க். இதனை இன்றைய சூழலில் சொல்வதானால் நவீன அரசியல் என்பது ஆற்றல்வாய்ந்தவர்களின் வியாபாரமாகவே இருக்கின்றது. இந்த அரசியலில் நீதி என்பதன் பொருள் நலன் என்பது மட்டுமே. ஒரு வியாபார முயற்சியில் ஈடுபடும் வர்த்தகரின் ஒரேயொரு நோக்கம் இலாபாம் என்பதாக மட்டுமே இருக்கும். அந்த இலாபத்தை அடைந்து கொள்ளும் வழிமுறைகள் இங்கு ஒரு விடயமல்ல. சந்தையில் ஒரு பொருள் தட்டுப்பாடாக இருக்கும் போது அந்தப் பொருளை வெளியில் பதுக்கிவைத்து நல்ல விலை கிடைத்ததும் விற்கும் ஒரு வியாபார முறையும் இருக்கின்றது. இங்கு பதுக்கிவைத்தல் ஒரு தவறான வழிமுறையாகக் கருதப்படுவதில்லை. வியாபார அர்த்தத்தில் அது ஒரு வகை வர்த்தகச் சாணக்கியம ஆகும். இது போன்றுதான் நாம் எதிர்கொண்டிருக்கும் நவீன அரசியலும். இங்கு அரசியல் அர்த்தத்தில் தமது நலன்களுக்கு சாதகமான அனைத்துமே தர்மங்கள்தான். எதுவுமே தவறல்ல. இதனைத்தான் அந்த அமெரிக்கப் படைத் தளபதி தனது மொழியில் சொல்லியிருந்தார்.

இந்த விடயம் குறித்து நமது தமிழ்ச் சூழலில் போதிய ஆர்வம் அல்லது தேடல் இருக்கிறதா என்பது குறித்து என்னால் குறிப்பாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இது குறித்த தெளிவான அவதானம் நமது சூழலில் இல்லை போல்தான் தெரிகிறது. விடுதலைப்புலிகளுக்கும் - சிறிலங்கா அரசுக்கும் இடையிலான யுத்தத்தில் புலிகள் தமது முடிவை நெருங்கிக் கொண்டிருந்த வேளையது. அந்தச் சூழலில் ஆக்கபூர்வமாக சிந்திப்பதைவிட்டுவிட்டு மேற்கு காப்பாற்றும் குறிப்பாக அமெரிக்கா வரும், அங்கு வித்தியாசமான ஒபாமா இக்கிறார் போன்ற அபிப்பிராயங்கள் நமது மதிப்புக்குரிய புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் மத்தியில் நிலவியது. இவ்வாறான நமது அப்பாவித்தனமான நம்பிக்கைகள், நவீன அரசியலில் நீதி, அறம் போன்ற சொற்களின் உண்மையான தார்ப்பரியங்களை நம்மவர்கள் அறிந்து கொண்டிருக்கவில்லை என்பதையே துலாம்பரமாக்கியது.

ஒரு வாதத்திற்காக ஒபாமாவின் அமெரிக்கா வரும் அல்லது ஜரோப்பா வரும் என்றே வைத்துக் கொள்ளுவோம். ஆனால் அவற்றால் தெற்காசியாவின் சக்தியான இந்தியாவைப் புறம்தள்ளிவிட்டு வர முடியுமா? ஆனால் முடியும் மேற்கால் நீதிக்காக மட்டுமே சிந்திக்க முடிந்திருந்தால் நிட்சயமாக எவரையும் பொருட்படுத்தாமல் தலையிட்டிருக்க முடியும். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. ஏன் அவ்வாறு நிகழவில்லை? நமது பதில், அனைத்தும் நலன்சார் அரசியலில் நிலைகொண்டுள்ளது என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

இதனை மேலும் விளக்கும் வகையில் பிறிதொரு சம்பவத்தையும் இங்கு எடுத்தாளுகின்றேன். 2001, செப்டம்பர் 11, அமெரிக்காவை மட்டுமல்ல ஜரோப்பாவையே உலுக்கியெடுத்த தாக்குல் இடம்பெற்ற நாள். அதற்கான பதிலை வழங்குவதற்கு அமெரிக்கா தன்னை தயார் செய்து கொண்டிருந்தது. தாக்குதல் இடம்பெற்று சில மணித்தியாலங்களில், பாக்கிஸ்தானின் ஒத்துழைப்பை பெறும் நோக்கில் அப்போதைய அமெரிக்காவின் பிரதி இராஜங்கச் செயலரான றிச்சர்ட் ஆமிரேய்ட் (U.S. Deputy Secretary of State Richard Armitage) ஜெனரல் முஸ்ரப்பை எச்சரிக்கும் நோக்கில் இவ்வாறு தெரிவித்திருந்தார். குண்டுகள் வீசப்படுவதற்கு தயார்நிலையில் இருக்கின்றன, கற்காலத்திற்கு செல்வதற்காக தயாராக இரு (""Be prepared to be bombed. Be prepared to go back to the Stone Age). அப்போதைய பாக்கிஸ்தானிய உளவுப் பிரிவுத் தலைவர் மூலமே அந்தச் செய்தி அனுப்பப்பட்டது. தமது நடவடிக்கைளுக்கு ஆதரவாக ஒத்துழைப்புக்களை வழங்காவிட்டால் அதன் விழைவு பாக்கிஸ்தானின் எதிர்காலம் கற்காலத்திற்கு செல்வதாகவே இருக்கும் என்ற அர்த்தத்திலேயே ஆமிரேய்ட் தனது எச்சரிக்கையை விடுத்திருந்தார். இதனை பறிதொரு வகையில் உறுதிப்படுத்துவது போன்றே அப்போதைய புஸ் அரசாங்கத்தின் இராஜங்கச் செயலரான கோலின் பவல் (Secretary of State Colin Powell ) நீங்கள் எங்களுடனா அல்லது அவர்களுடனா என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்ற தோறனையில் மறைமுக எச்சரிக்கையை ஒன்றை விடுத்திருந்தார் (You are with us or against us)" இறுதியில் ஜெனரல் முஸ்சரப், நான் ஒரு நாட்டின் தலைவர் என்னை இப்படி விரட்டுகின்றார்கள் என்று அழுதுகொண்டு எல்லாவற்றுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு இணங்கினார். இது தொடர்பான தகவல்களை பர்வேயிஸ் மு~ரப் 2006 இல் வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே குறிப்பிட்டிருந்தார்.

(During a 24 September 2006 interview with Steve Kroft on 60 Minutes, Musharraf said that then-U.S. Deputy Secretary of State Richard Armitage had called Musharraf's intelligence director shortly following the 9/11 attacks and threatened military action if Pakistan did not support the U.S.-led "war on terror". According to Musharraf, Armitage warned: "Be prepared to be bombed. Be prepared to go back to the Stone Age’ - Pervez Musharraf - Wikipedia,)

பாக்கிஸ்தான் ஒரு சாதாரணமான நாடல்ல, தெற்காசியாவில் இந்தியாவிற்கு அடுத்து அணுவாயுத பலமுள்ள நாடு. பலமான இராணுவக் கட்டமைப்பைக் கொண்டுள்ள நாடு. பத்துக்கோடிக்கு மேற்பட்ட மக்களைக் கொண்டிருக்கும் நாடு. இப்படிப்பட்டதொரு நாட்டிற்கு தனது நலன்சார்ந்து எச்சரிக்கைவிட்டு பணியவைக்க முடிந்த அமெரிக்காவால் மிகச்சிறிய இனமான நமது மக்களை காப்பாற்றுவது கடினமானதொரு விடயமா? பாக்கிஸ்தானுடன் ஒப்பிட்டால் கருத்தில் கூட எடுக்க முடியாததொரு நாடான சிறிலங்காவின் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்துவது அமெரிக்காவின் இராட்சத பலத்திற்கு முன்னால் அசாதரணமான விடயமா? ஆனால் தனக்கு இலாபம் இல்லாத எந்தவொரு விடயத்திலும் அமெரிக்கா ஒருபோதும் தலையிட்டதில்லை. இது அமெரிக்காவின் வரலாறு முழுவதும் விரவிக் கிடக்கும் உண்மை. சும்மா ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம் ஒசாமா பின்லேடன் இலங்கையில் இருப்பதாக ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டால் அமெரிக்கா சிறிலங்காவை தனது இராணுவ வழையத்துக்குள் கொண்டுவருவதை எவரால் தடுக்க முடியும் ?

இங்கு வெள்ளிடைமலையாகும் உண்மை என்னவென்றால் ஒடுக்கப்பட்ட அல்லது வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக எந்த அரசுகளும் இல்லை என்பதுதான். இங்கு புரட்சிகர அரசு என்ற கருத்துநிலை வலுவிழந்த ஒன்றாகும். இன்றைய நவீன அரசியல் உலகு அறவழி சிந்தித்திருக்குமாயின் தமிழர்களுக்கு என்றோ விடுதலை கிட்டியிருக்கும். இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கின்றது. 111 நாடுகளில் சித்திரவதைகள் தொடர்பாக அது மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவிலிருந்து ஜநா சபையின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்திருக்கும் மன்னிப்புச் சபை, இன்று நீதி அதிகம் அரசியல் மயப்பட்டுவிட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறது. முள்ளி வாய்க்கால் இன்று நீதி, அறம் குறித்து சிந்திக்கும் நபர்கள் மற்றும் அமைப்புக்களை நோக்கி ஒரு தார்மீக நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இன்று இலங்கை தொடர்பாக இலங்கையர்களுக்கு தெரியாத பல விடயங்களை சர்வதேசம் அறியும். எனவே நாம் சர்வதேசத்திற்கு எதனையும் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. எல்லா ஆதாரங்களும் அதனிடம் உண்டு. இது குறித்து கருத்துத் தெரிவித்திருந்த தமிழர்களுக்காக குரல் கொடுத்துவரும் பேராசிரியர் பிரான்சிஸ் போயல், இறுதிப் போர் தொடர்பான சட்ரலைட் ஒளிப்படங்கள் அமெரிக்காவிடம் உண்டு. அதன் மூலம் என்ன நடந்தது என்பதை துல்லியமாக அறிய முடியும், ஆனால் அதனை அமெரிக்கா வெளிப்படுத்தப் போவதில்லை என்று கூறியிருந்தார். பொஸ்னிய யுத்தத்தின் போதும் இது போன்றே அமெரிக்கா சட்ரலைட் மூலமாக அனைத்தையும் ஆவணப்படுத்தியது ஆனால் இன்றுவரை அதனை வெளிப்படுத்தியதில்லை.

இங்கு பிரச்சனை என்னவென்றால் ஆதாரங்கள் என்பவை தமது நலன்சார் அரசியல் காய்நகர்த்தலுக்கான கருவியாகவே வல்லரசுகள் கைக்கொள்ளும். தேவைப்படும் போதே அதனை பயன்படுத்தும். இங்கு கொல்லப்பட்ட மக்களின் சிதறிக் கிடக்கும் உடலங்கள் பற்றிய ஆவணங்கள் அனைத்தும் நலன்சார் அரசியலுக்கான முலப்பொருட்களாகும். இதில் நீதி, நியாயம், தர்மம் என்னும் சொற்களுக்கெல்லாம் எந்தப் பெறுமதியும் இல்லை. வேண்டுமானால் அவற்றை நமது கோடாம்பக்க வர்த்தகத் திரைப்படங்களை மெருகுபடுத்துவதற்கு பயன்படுத்த முடியும்.

அப்படியானால் இதற்கு வழிதான் என்ன? நவீன அரசியலில் நீதியின் பெறுமதி என்ன என்பதை நாம் நன்கு விளங்கிக் கொண்டால்தான் நாமும் அதற்கு ஏற்றதான புதிய வழிமுறைகள் குறித்து சிந்திக்க முடியும். அவ்வாறில்லாது வெற்று சுலோகங்களையும் நாம் உயர்த்திக் கொண்ருக்க முடியும் ஆனால் அது நமக்கு ஆத்ம திருப்தியைக் கொடுக்குமே தவிர ஆக்க பூர்வமான செயலுக்கான வழியைக் காட்டப் போவதில்லை. நவீன அரசியலில் இராஜதந்திரம் என்பதே மோசடிகளில் நிலை கொண்டுள்ள ஒரு நாகரீக விளையாட்டுத்தான். அமெரிக்க பல்துறை அறிஞர் ஹொட்மேயரின் மொழியில் சொல்வதானால் அது கேவலமான விசயங்களை அழகாகச் சொல்வதும் செய்வதுமாகும். (The diplomacy mean do or say the nastiest think in the nicest way). இங்கு பழைய பாணியிலான இடது வலது என்னும் சுலோக வாதங்கள் எல்லாம் பொருத்தமற்றவை. இங்கு கருத்துநிலைக்கு அப்பால் எல்லோரது அணுகுமுறையும் தத்தமது நலன் என்று வரும்போது இந்த வட்டத்துக்குள் சென்றுதான் ஆக வேண்டும். அதுதான் நவீன அரசியல் விதி. இந்த விதிக்கு மாறாக அவர்கள் தொழிற்படுவார்கள் என்பது நமது கற்பனாவாதமே தவிர அவர்களின் தவறல்ல. இதில் அமெரிக்கா எப்படியோ அப்படித்தான் சோவியத் யூனியனும், சீனாவும். அப்படித்தான் கியூபாவும், ஏனைய நாடுகளும். ஆனால் அமெரிக்கா சாதா அது குறித்து இயங்கிக் கொண்டிருப்பதால் அது சற்று தூக்கலாகத் தெரிகிறது. அவ்வளவுதான் வித்தியாசம்.

அதிபர் ஜிம்மி காட்டரின் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவிவகித்த சிபீக்நியு பிறேசின்ஸ்கி எழுதிய பாதுகாப்பு தொடர்பான நூலின் தலைப்பு பெரிய சதுரங்க விளையாட்டு ( The great chess game) என்பதாகும். இதில் அவர்; அமெரிக்காவின் உலக ஆதிக்கமானது யூரேசியா கண்டத்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதில் தங்கியிருப்பதாக வாதிடுகிறார். அதற்கான காரணங்களை ஆய்வதுதான் அந்த நூலின் அடிப்படை. நவீன அரசியல் அத்தியாயத்தில் எங்கும் ஆதிக்கத்திற்கான தேடலும், செயலும்தான் விரவிக் கிடக்கின்றது. எங்கோ ஒரு மூலையில் நீதிக்கான குரல்கள் வலுவற்று கொஞ்சம் கொஞ்சமாக உயிர்ச்சக்தியை இழந்து கொண்டிருக்கின்றன.

பிறேசின்ஸ்கி தலைப்பிட்டிருப்பது போன்று, நவீன அரசியல் என்பதே ஒரு பெரிய சதுரங்க விளையாட்டுத்தான். இதில் தமது நலன்களை கருத்தில் கொண்டு காய்நகர்த்தத் தெரிந்தவர்கள் மட்டுமே வெற்றிக் கணிகளை பறிக்க முடியும். இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்களை நீதி, நியாயம், தர்மம், மனிதம் என்றவகைச் சொற்கள் எல்லாம் காப்பாற்றப் போவதில்லை. குறிப்பாக ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் இனங்கள் தந்திரோபாய ரீதியாக இயங்குவதன் மூலம் மட்டுமே தமது இருப்பை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் இங்கு இருத்தல் என்பதே எல்லாவற்றையும் விட முக்கியமானது. துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சுமெத்தை என்று கூறி அழிந்து போவதில் பெருமை பேசும் வாதங்கள் பெறுமதியற்றவை. அவ்வாறான வாதங்கள் வரலாற்றின் சுவையான கதைகளாகவே இருக்க முடியும். நீதிக் கதைகள் போன்று.

‘’’

http://www.lumpini.in/a_punaivu-006.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.