Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெஞ்சில் நிறைந்த ராவணன் !

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

raavana.jpgaish.jpg

மகாபாரதத்தில், கர்ணன் துரியோதனனின் நட்பின் உயர்வை விளக்கி 'தளபதி' திரைப்படத்தை எடுத்த மணிரத்னம், இலங்கையரசன் ராவணனின் உயர்வை விளக்கும் வண்ணம் இயக்கியிருக்கும் திரைப்படம்தான் 'ராவணன்'.

வரலாற்றில் நடந்த ஒரு சில சம்பவங்களோடு ஏராளமான கட்டுக்கதைகளையும், பத்துத்தலை ராவணன் போன்ற பகுத்தறிவுக்குப் புறம்பான கற்பனைகளையும் கொண்டு எழுதப்பட்ட ஒரு Fiction தான் ராமாயணம். அப்படியானால் வரலாற்றில் நடந்த அந்த சம்பவங்கள் என்ன? இந்து மதத்தின் புராண இதிகாசங்கள் அனைத்தும் ஆரியரின் பண்பாட்டுப் படை எடுப்புக்களின் தொகுப்புக்கள்தாம்.

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினை ஆய்வு செய்த ராகுல் செங்கிருத்யாயன், ஜவகர்லால் நேரு போன்றவர்கள், ஆரியர்களுக்கும் தமிழர் மற்றும் சில பழங்குடியினருக்கும் நடந்த போர்கள்தாம் புராண இதிகாசங்கள் என்பதனை ஒப்புக் கொள்கின்றனர்.

வடமொழியில் வால்மீகியால் எழுதப்பட்ட இந்த கதை அதன் பின்னர் பலரால் பலவிதமாக எழுதப்பட்டுள்ளன. இன்று எத்தனையோ விதமான ராமாயணக் கதைகள் உலாவுகின்றன. இந்தியில் எழுதப்பட்ட துளசிராமாயணம், தமிழில் எழுதப்பட்ட கம்பராமாயணம் என பல உள்ளன. ஆனந்த ராமாயணம் என்று ஒன்று உள்ளதாம். அதில் சீதை ராவணனின் மகளாக குறிப்பிடப் பட்டிருக்கிறதாம். அதனை வைத்து நடிகர் ஆர்.எஸ். மனோகர் 'இலங்கேஸ்வரன்' எனும் நாடகத்தை பட்டி தொட்டி எங்கும் நடத்தினார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த புலவர் குழந்தை அவர்கள் 'இராவணகாவியம்' எனும் நூலை எழுதினார். ராமனை தெய்வமாக்கி ராவணனை அரக்கனாக்கிய கம்பரின் நூலுக்கு சரியான மறுப்பு நூலாகவே புலவர் குழந்தையின் 'இராவணகாவியம்' அமைந்தது. சிறுகதை எழுத்தாளர் தி.க.சி. அவர்கள் ராமனைக் காட்டிலும் ராவணன் எவ்வளவோ மேல் என சீதையே எண்ணுவதாக ஒரு சிறுகதையை எழுதியிருந்தார்( சிறுகதையின் பெயர் நினைவில் இல்லை, வெற்றிக் களிப்பு என நினைக்கிறேன்) மணிரத்னத்தின் இத்திரைப்படமும் அப்படிப்பட்ட ஒன்றுதான். எல்லா ராமாயாணக் கதைகளிலும் ஒன்று மட்டும் மாறாமல் உள்ளது. ராமனால் ராவணன் கொல்லப்பட்டான் என்பதுதான். இத்திரைப் படமும் அவ்வாறே அமைந்துள்ளது. இனி திரைப்படத்திற்குச் செல்வோம்.

ராமாயணத்தை நன்கு அலசியவர்கள் இத்திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் நுணுக்கமாக பதிவு செய்திருப்பதை ஒப்புக் கொள்வார்கள். முரட்டுத் தோற்றமும், வன்முறையாளனாகவும் உள்ள ராவணன் அதேசமயம், நேர்மையும், வீரமும் கொண்ட ஒருவனாக காட்டப்பட்டிருக்கிறான். இன்று போய் நாளை வா! என்ற கம்பரின் வரிக்கு மாறாக, கடைசியில் ராவணனாலயே ராமனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கப் படுகிறது.

கண்ணியமான தோற்றத்துடனும் கௌரவமான பதவியுடனும் வரும் ராமன், பேடித்தனமும் கபடமும் நிறைந்த ஒருவனாகவே காட்டப் பட்டிருக்கிறான். ராமாயணக் கதையில் தனது தங்கை சூர்ப்பனகையை ராமனின் தம்பி லட்சுமணன் அவமதித்த உடனேயே ராவணன் சீதையைக் கடத்துகிறான். இங்கும் அவ்வாறே காட்டப்பட்டுள்ளது. ராவணனின் தங்கை வெண்ணிலா (சூர்ப்பனகை) காவல்துறை அதிகாரியால் (லட்சுமணன்) கெடுக்கப் பட, அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள். அதற்கு பழி வாங்க எஸ்.பி. தேவ் பிரசாத்தின் (ராமன்) மனைவி ராகினியை (சீதை) கடத்துகிறான் ராவணன். ராவணனை முதலில் வெறுக்கும் சீதையின் மனம் பின்னர் மாறுகிறது. காவல் துறையால் அந்த மக்கள் பட்ட அவமானங்களையும் துயரங்களையும் அவர்களுக்கு அரணாக விளங்கும் ராவணனின் பாசமும் வீரமும் அந்த மாற்றத்தை அவளிடம் கொண்டு வருகிறது. சீதையின் மேல் ராவணன் கட்டுக்கடங்காத காமத்தில் திளைத்திருந்தான் என ராமாயணம் கூறுகிறது. இத்திரைப்படத்திலும் அது காட்டப் படுகிறது, ஆனால் கரைபுரண்டோடும் காம உணர்வாக அல்லாமல், முரட்டு ராவணனிடமிருந்து மென்மையான காதலாக அது அரும்புகிறது. கண்ணியத்தோடு பழகும் ராவணன் மேல் சீதைக்கு மதிப்பு வந்து விடுகிறது.

ராமாயணத்தில் யாராலும் நியாயப் படுத்த முடியாத பாதகச் செயல் என்றால் அது ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றதுதான். ஆச்சாரியார் ராஜகோபாலரால்கூட (ராஜாஜி) அதனை நியாயப் படுத்த முடியவில்லை. அதுவும் இத்திரைப் படத்தில் காட்டப் படுகிறது. ஆனால் வாலியை அல்ல ராவணனையே கூட்டத்திற்கு நடுவில் மறைந்திருந்து துப்பாக்கியால் சுடுகிறான். ராமாயணக் கதையில் தன்னை நாடிவரும் விபீஷணனை ராமன் சகோதர பாசத்துடன் ஆட்கொள்வதுபோலவும், ராவணனிடம் தூது செல்லும் அனுமானின் வாலில் ராவணன் நெருப்பைக் கொளுத்திவிடுவது போலவும் சொல்லப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் அது வேறு விதமாக காட்டப் பட்டிருக்கிறது (ஒரு வேளை இப்படித்தான் உண்மையாக நடந்திருக்குமோ!) நிராயுதபாணியாக சமாதானம் பேசப்போகும் ராவணனின் தம்பி விபீஷணனை ஈவிரக்கமற்று சுட்டுத்தள்ளுகிறான் ராமன். அதே சமயம் யாருக்கும் தெரியாமல் சீதையிருக்குமிடம் சென்று ராமனின் கணையாளியை கொடுக்க முனையும் அனுமானை கைது செய்து அவனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறான் ராவணன்.

ராமாயணத்தில் ஜடாயு என்றொரு பாத்திரம் இருக்கிறது. அது ஒரு பறவை. ராவணன் சீதையைக் கடத்திக் கொண்டு செல்கையில், இடைமறித்த ஜடாயு ராவணனுக்கு எதிராகப் போராடியது. அப்போது அதன் இறகுகளை ராவணன் வெட்டி வீழ்த்தியதாக எழுதப் பட்டிருக்கிறது. இத்திரைப் படத்திலும் அது போன்ற சம்பவம் வருகிறது. தனது தங்கையை காதலித்து ஏமாற்றிய மேட்டுக்குடி வாலிபனின் கையை ராவணன் வெட்டுகிறான். குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் அவனை ராமன் சந்திக்கும்போது ராவணனின் தங்கையை காதலித்த குற்றத்திற்காக அவனை மேலும் சித்திரவதை செய்கிறான் ராமன். உயர்சாதியைச் சார்ந்த நீ, தாழ்த்தப் பட்ட பெண்ணை எப்படிக் காதலிக்கலாம் என்று கேட்பது போல்தான் உள்ளது.

இறுதியில் சீதைக்காக ராமனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறான் ராவணன். கட்டுக்கடங்காத காதலுடன் ராமனை நோக்கி வரும் சீதையிடம், உன்னை ஏற்க முடியாது நீ கெட்டுப்போனவள் என மறுக்கிறான் ராமன். அப்போது, "ராவணனிடத்தில் நான் சிறைவைக்கப் பட்டபோது நீ வந்து என்னை நிச்சயம் மீட்பாய் என்ற மன உறுதியுடன் நான் உயிரோடு இருந்தேன் இப்போது எனது மனமே உடைந்து விட்டது" என ராமாயணக் கதையில் சீதை பேசிய அதே வசனங்கள் ஒரு வரியும் பிசகாமல் இதிலும் சீதையால் சொல்லப் படுகிகின்றன. அவள் எவ்வளவோ கெஞ்சியும் ராமன் அவளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். நிர்க்கதியற்ற அவள் ராவணனின் இருப்பிடத்திற்கே வந்து அவனுடன் சேருகிறாள். சீதையைப் பின்தொடர்ந்து அவளுக்கே தெரியாமல் தனது சக பரிவாரங்களுடன் அங்கு வந்து சேரும் ராமன், தனக்கு உயிர்ப்பிச்சை அளித்த ராவணனை நயவஞ்சகமாகப் போட்டுத் தள்ளுகிறான். ராவணனின் இறப்பைத் தாங்க முடியாத சீதையின் கதறலுடன் நிறைவடைகிறது படம்.

படத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பு சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு. தமிழ் இந்தி இரண்டையும் பார்த்தவன் என்ற வகையில் சொல்கிறேன். சில காதாபாத்திரங்களும் உடைகளும் மாற்றப் பட்டுள்ளன. மற்றும்படி படத்தில் வேறு எந்த மாற்றமும் இல்லை. இந்தியைக் காட்டிலும் தமிழில்தான் ராவணன் ராவணனைப் போன்று இருக்கிறான். இறுகிய உடலும் முரட்டுத் தோற்றமும் அபிஷேக் பச்சானைக் காட்டிலும் விக்ரமிற்குத்தன் மிக நன்றாகப் பொருந்துகிறது. அபிஷேக் பச்சானின் ஒல்லியான தோற்றம் ராவணன் பாத்திரத்திற்கு பொருத்தமில்லை. அதைப் போன்று வெளியில் கம்பீரமாகவும், அழகாகவும், மற்றவர்களால் போற்றப்படும் காவல்துறை அதிகாரியாகவும் அதேசமயம் உள்ளத்தில் வில்லத்தனமாகவும் உள்ள ராமன் பாத்திரம் இந்தியில் விக்ரமைக் காட்டிலும் தமிழில் பிருதிவிராஜ் இற்குத்தான் கனகச்சிதமாகப் பொருந்துகிறது. நகைச்சுவைக் காதாபாத்திரமான அனுமான் பாத்திரம் இந்தி கோவிந்தாவைக் காட்டிலும் தமிழில் கார்த்திக்குக்குத்தான் பொருந்துகிறது. குரங்கு போல் மரத்திற்கு மரம் தாவுவதில் கார்த்திக் செய்யும் போது இருந்த தத்ரூபம் கோவிந்தா செய்யும்போது காணவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக பிரபுவைப் பார்த்தால் அசல் கும்பகர்ணன் போல் தெரிகிறது, இந்தியில் நடித்த நடிகருக்கும் கும்பகர்ணனுக்கும் வெகு தூரம். படத்தில் குளிர்ச்சி சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் மட்டுமல்ல, 37 வயதிலும் ஐஸ்வர்யா ராயின் அழகும் அவ்வாறே உள்ளது. தகிக்கும் சூரியனாக ராவணனும் தண்ணிலவாக சீதையும் இருப்பது படத்தின் கூடுதல் அழகு.

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

ராவணன் - மணிரத்னம் கட்டமைத்த போலிக்கலாச்சாரத்தின் வீழ்ச்சி

-அசாதி

கடந்த 15 ஆண்டுகளாகப் பாலச்சந்தர், மணிரத்னம் போன்ற பார்ப்பன இயக்குனர்களிடமிருந்து தப்பித்து, தமிழ்ச்சினிமா வேறுதிசைகளில் பயணிக்கிறது. தமிழ்ச்சினிமாவின் தொழில்நுட்பங்களை உயர்த்தியது, தமிழ்த்திரையிசைக்கு ஏ.ஆர்.ரகுமானைத் தந்தது ஆகியவற்றை மணிரத்னத்தின் முக்கியப் பங்களிப்பாகக் கருதலாம். ஆனால் அரசியல்ரீதியாக மணிரத்னம் உருவாக்கிய ஆபத்தான படங்கள் குறித்துப் பலரும் பலமுறை பேசியாயிற்று. ஆனால் மணிரத்னம் உருவாக்கிய போலியான சினிமா மொழி குறித்து அதிகமும் பேசப்பட்டதில்லை. சேரன், பாலா, செல்வராகவன், அமீர், பாலாஜிசக்திவேல், வசந்தபாலன் எனப் புதிதான ஒரு இளம் சினிமா தலைமுறை உருவானபின்பு தமிழகத்தில் மணிரத்னத்தின் சினிமாக்களுக்கு இறங்குமுகம்தான். ’அலைபாயுதே’க்குப் பிறகான மணிரத்னத்தின் அத்தனை சினிமாக்களும் தோல்விகளைச் சந்தித்துள்ளன. அவை எல்லாவற்றையும் விட ஒரு மகத்தான தோல்வியை ராவணன் சந்திக்கப்போவது நிச்சயம் என்பதை படம் பார்த்த மக்களின் மனநிலையிலிருந்து புரிந்துகொள்ளலாம். வீட்டில் இழவு விழந்தால் கூட, ‘எங்கே, எப்படி, விழுந்துடுச்சா, இழவு’ என்பது மாதிரியான துண்டுதுண்டான வசனஙகள், கிசுகிசுப்பான குரலில் பரிமாறப்படும் மொழி என மணிரத்னம் உயர்நடுத்தர வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் ரசனைக்கென உருவாக்கியிருந்த போலிக்கலாச்சாரத்தை இப்போது கௌதம்வாசுதேவ்மேனன் போன்ற ஒருசிலரைத் தவிர வேறு யாரும் பின்பற்றுவதில்லை என்பதே நிதர்சனமாயிருக்கிறது.

பார்ப்பன மற்றும் உயர் சாதி-இந்துக்களின் பாத்திரச்சித்தரிப்புகளிலிருந்து விலகி தமிழ்ச்சமூகத்தின் பல்வேறு வகையினங்களைப் பிரதிபலிக்கும் போக்குகள் தமிழ்ச்சினிமாவில் உருவாகியுள்ளன. இவற்றில் நன்மையும் தீமையும் கலந்தே கிடக்கின்றன. என்றாலும் பெருந்தேசியக் கதையாடல்கள் எவையும் இவற்றில் இல்லை. மேலும் கிசுகிசுப்பான குரல்மொழிக்கு மாறாக உரத்துமொழிதலே இப்போது மேலெழும்பியுள்ளது. இயல்பாகவே தமிழர்கள் உரத்துப்பேசுபவர்கள், நிறைய பேசுபவர்கள். ஆனால் மணிரத்னம், கௌதம் வகையறாக்களின் கதைமாந்தர்கள் ‘சுருக்கமாக ரகசியம் பகிர்பவர்கள்’. இங்கு நாம் திராவிட இயக்க சினிமா வரலாற்றை நோக்கலாம். நாடகப்பின்னணியிலிருந்து வந்த கலைஞர்களால் ஆளப்பட்ட தமிழ்ச்சினிமா இயல்பாகவே நாடகத்தன்மை கொண்டதாக இருந்தது. அதன் உடல்மொழி தொடங்கி குரல்மொழி வரை இவை அப்படியாகவே அமைந்தன. மணிரத்னத்தை வசனங்களுக்கு மாற்றாக காட்சிப்படுத்துதலை முன்வைத்தவராகக் கொண்டாடுபவர்கள் பலரும் இயக்குனர் ஸ்ரீதர் குறித்து மௌனம் சாதிப்பவர்களாகவே உள்ளனர்.

உண்மையில் ஒருபக்கம் திராவிட இயக்கத்தினரின் சினிமா, இன்னொரு புறம் பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வகையினரின் நாடகபாணியிலான மிகையுணர்ச்சியை மய்யப்படுத்திய சினிமாக்கள் மத்தியில் இயல்பான மாற்றாக அமைந்தவை ஸ்ரீதரின் படங்களே. அவற்றின் வசனங்களும் காட்சிப்படுத்தல்களும் நாடகபாணியிலிருந்து விலகியிருந்தன. இன்னும் சொல்லப்போனால் ஷங்கர், மணிரத்னம், கௌதம்வாசுதேவ்மேனனின் ஆகியோரின் சித்தரிப்புகளில் உள்ள மொன்னைத்தனங்களும்கூட ஸ்ரீதர் படங்களில் இராது. மேலும் ஸ்ரீதர் கதாநாயகன்xவில்லன் என்ற இருமை எதிர்வுகளுக்கு அப்பாலான படங்களையும் உருவாக்கினார். பாரதிராஜா தமிழ்ச்சினிமாவை ஸ்டுடியோக்களிலிருந்து வெளிக்கொண்டுவந்து எதார்த்தத்தைப் பதிவுசெய்தவர். ஆனால் ஸ்ரீதர், பாரதிராஜா போன்ற்வர்களுக்குக் கிடைக்காத அங்கீகாரம் மணிரத்னத்திற்கு ‘தமிழ்ச்சினிமாவின் நவீனமுகம்’ எனக் கிடைத்தது.

இத்தகைய அங்கீகாரத்தின்பின்னே மணிரத்னத்தின் தமிழ்விரோதம், திராவிட இயக்க எதிர்ப்பு, முஸ்லீம் வெறுப்பு ஆகிய அனைத்துமிருந்தன. இந்திய-இந்து தேசியப் பெருங்கதையாடல்களைக் கட்டுவதே அவரின் பெரும்பாலான அரசியல்சினிமாக்களின் உள்ளடக்கமாக இருந்தது. இந்த உள்ளடக்கம் குறித்து தமிழில் இடதுசார்புடைய, பல்வேறு அரசியல் போக்குடையவ்ர்களும் மிகச்சரியாகவே சுட்டிக்காட்டி, அம்பலப்படுத்தி, விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் மணிரத்னத்தின் சினிமா வடிவம் ஒருவகையான ‘எதார்த்த வடிவமாக’ ஏற்றுக்கொள்ளப்பட்டது ஒரு அவலம்தான்.

பெருவாரியான மக்களின் வாழ்க்கை, இருப்பிடம், பகிரப்படும் மொழி, வார்த்தைகள் ஆகியவற்றுக்கு மாறான ஒரு போலிக்கலாச்சாரத்தை நவீனத்தின் பேராலும் தொழில்நுட்பத்தின் அழகியல்துணையோடும் உருவாக்கியவைதான் மணிரத்னத்தின் சினிமாக்கள். இவற்றை எந்த விமர்சனங்களுமின்றி வெகுஜன ஊடகங்கள் கொண்டாடியதில் நமக்கு ஆச்சரியமில்லை. ஆனால் திராவிட இயக்க சினிமாக்களில் உள்ள நாடகத்தன்மையையும் மொழிப்பகட்டையும் விமர்சித்த விமர்சகர்கள்கூட மணிரத்னம் சினிமாக்கள் உருவாக்கிய இத்தகைய போலிக்கலாச்சாரம் குறித்து அதிகம் பேசியதில்லை.

ஒருபுறம் வெகுஜன ஊடகங்கள் மணிரத்னத்தைத் தமிழ்ச்சினிமாவின் ஆதர்சங்களில் ஒன்றாகக் கட்டியமைத்தன என்றால் இன்னொருபுறம் அ.ராமசாமி, யமுனாராஜேந்திரன், சமயங்களில் சாருநிவேதிதா போன்ற சிறுபத்திரிகை இலக்கியவாதிகளும் மணிரத்னத்தைக் கொண்டாடினர் அல்லது ’விமர்சனத்துடன்’ அங்கீகரித்தனர். கலைஞரின் பராசக்திக்கும் பெண்சிங்கத்துக்கும் உள்ள வேறுபாட்டை நம்மால் உணரமுடிகிறது. ‘பெண்சிங்கம்’ எப்படி எதார்த்தத்துக்கு அப்பாலான ஒரு குப்பைப்படமோ அதேபோல் ராவணன் உள்ளிட்ட மணிரத்னத்தின் பெரும்பாலான படங்களும் எதார்த்தத்துக்கு அப்பாலான குப்பைப்படங்கள்தான். இனி ‘ராவணன்’ படத்துக்குள் செல்வோம்.

மணிரத்னத்தின் போலிக்கலாச்சாரம் முதல் காட்சியிலேயே தொடங்கிவிடுகிறது. போலீஸ் அதிகாரி பிருத்விராஜின் மனைவி அய்ஸ்வர்யாராயைக் கண்ணைக் காட்டி விக்ரம் படகில் கடத்துகிறார். கண்ணைக்கட்டிய நிலையில் எதிரில் உள்ளது யாரென்று தெரியாத நிலையில் அய்ஸ்வர்யாராய், ‘ஜெயமுண்டு பயமில்லை மனமே இந்த ஜென்மத்தில் விடுதலை உண்டு” என்று பாரதியாரின் பாடலை ஒப்புவிக்கிறார். பாதிப்பாடலை அய்ஸ்வர்யா சொல்ல, மீதிப்பாடலை, கல்விவாசனை மறுக்கப்பட்ட மலையின இளைஞனான விக்ரம் சொல்லி முடிக்கிறார். இதேபோல் தன் மனைவி கடத்தப்பட்ட செய்தி வந்தவுடன் போலீஸ் அதிகாரி பிருத்விராஜ் பேசும் வசனம், ‘எங்கே, எப்படி?”.

ஒரு குறிப்பிட்ட மக்கள்குழுவின் வாழ்க்கையைக் காட்டுவதற்கு முன்பு அதுகுறித்த குறைந்தபட்ச அறிதல், தேடல் மற்றும் அது தொடர்பான தரவுகளைச் சேகரித்தல் என்பதுதான் ஒரு உண்மையான படைப்பாளியின் கடமையாக இருக்கும். ஆனால் காஷ்மீர்ப்பிரச்சினை குறித்து எந்த அடிப்படை அறிவுமில்லாமல், தேசியக்கொடியைக் கொளுத்திப்போட்டு, இந்தியத்தேசிய வெறியை உசுப்பிவிடுவதே போதுமானது என்கிற நம்பிக்கையோடு களமிறங்குகிற ‘தைரியம்’ மணிரத்னத்துக்கு மட்டுமே சாத்தியம். ஈழப்பிரச்சினையை முன்னிட்ட ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, திராவிட இயக்கத்தை மய்யப்படுத்திய ‘இருவர்’ என மணிரத்னத்தின் அரைவேக்காட்டு முயற்சிகள் தொடர்வதற்குக் காரணமே அதை எப்படியும் தேசிய அரசியல் பின்னணியில் வியாபாரம் ஆக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கையும் விமர்சகர்களின் கள்ளமவுனங்களும்தான்.

இங்கு ராவணனாகச் சித்தரிக்கப்படும் வீரா கொஞ்சம் மாவோயிஸ்டைப் போலவும் கொஞ்சம் சந்தனக்கடத்தல் வீரப்பனை நினைவூட்டுவதைப் போலவுமான பாத்திரம். வட இந்தியாவுக்கு ‘மாவோயிஸ்ட்’, தமிழகத்துக்கு ‘வீரப்பன்’ என்னும் மணிரத்னத்தின் வழக்கமான தந்திரம்தான். மாவோயிஸ்ட்கள் குறித்து வழக்கமான மணிரத்னத்தின் விஷமத்தனமான சித்தரிகள் உள்ளதா என்பதற்கு இந்திப்பதிப்பைப் பார்க்க வேண்டும். ஆனால், தமிழில் ஒருசதம் கூட உண்மையான சித்தரிப்பாக இல்லாமல் வீரா பாத்திரம் பல்லிளித்து நிற்கிறது. மலைவாழ்மக்களின் வாழ்விடங்களாக காட்டப்படுபவை ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் குடிசைகளைப் போலிருக்கின்றன.

பழங்குடிமக்களின் உணவு, கலாச்சாரம் குறித்து மணிரத்னத்துக்கு அறிவோ முயற்சிகளோ இல்லாததால் அவர்கள் ’பழையசோறும் பச்சைமிளகாயும்’ சாப்பிடுபவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். மலையினத்தைச் சேர்ந்த வீரா (விக்ரம்) கமல்ஹாசன், ஞானக்கூத்தன் வகையறாக்களைப் போல ‘ஒருபக்கம் தத்துவம், ஒருபக்கம் நியாயம், நான் என்ன செய்ய? மண்டைக்குள்ள குரல் கேட்குது” என்று வஜனம் பேசுகிறார். அய்ஸ்வர்யாராயிடம், ‘’உங்க புருஷன் போஷாக்கா இருக்கார்” (அவர் புருஷன் என்ன பாரெக்ஸ் சாப்பிடும் குழந்தையா?) என்கிறார். வசனம் : சுகாசினி. சுகாசினி இயக்கிய இந்திரா படத்தை இங்கு நினைவுகூரலாம்.

கிராமத்தில் ஆதிக்கசாதியினருக்கும் தலித்மக்களுக்குமிடையிலான மோதலில் தலித்துகள் ஊரைவிட்டு விலகி இன்னொரு கிராமத்தில் குடியேறிவிடுவார்கள். ’இந்திரா’ படத்தில் டைட்டில் போடுவதற்கு முன்பான இந்த காட்சிக்குப் பின் டைட்டில் முடியும். அதற்குப் பின் விரியும் காட்சி. தலித் மக்களில் ‘ஊர்ப்பெரியவரான’ நாசரின் வீட்டில் பல பெண்கள் மருதாணி வைத்துக்கொண்டும், பட்டுப்பாவாடைகள் சரசரக்க சிறுமிகள் சிரித்துக்கொண்டும் திரிவார்கள். நாசரின் ஒரே மகள் இந்திரா இப்படியாக கர்நாடக இசையை அவிழ்த்துவிடுவார், ‘நிலா காய்கிறது, நெஞ்சம் வேகிறது, யாரும் ரசிக்கவில்லையே!”. இதுதான் சுகாசினியின் அறிவு மற்றும் லட்சணம் என்றால் ராவணன் படத்து வசனங்களில் நம் இதற்குமேல் சுகாசினியிடம் எதிர்பார்க்க எதுவுமில்லை. கொடுமையிலும் கொடுமையின் உச்சியாக, மலையினப் பெண்ணாகிய பிரியாமணியின் திருமணம், எங்கோ ராஜஸ்தானில் உள்ள ஒரு கோட்டையில் நடைபெறுகிறது. விக்ரம், பிரபு, பிரியாமணி என மலையினச் சாதியினர் அனைவரும் சம்பந்தமேயில்லாமல் அரை-திருநெல்வேலி பாஷை பேசுகிறார்கள்.

படத்தில் அதிகபட்சப் ’புரட்சிகரம்’ பிரபு ஒருகாட்சியில் அய்ஸ்வர்யாராயைப் பார்த்தும் விக்ரம் ஒருமுறை அய்ஸ்வர்யாராயைப் பார்த்தும் ‘மேட்டுக்குடி’ என்கிறார்கள். 'பண்டிட்குயின்’ படத்தில் சீமாபிஸ்வாஸ் நிர்வாணமாகப் பலாத்காரப்படுத்தப்படும் காட்சியில் நமக்கு நெஞ்சுதுடிக்கும். ஆனால் இங்கு பிரியாமணியைப் போலீசார் பாலியல்பலாத்காரத்துக்கு உள்ளாக்கும் காட்சி எந்த சலனமும் இல்லாமல் கடக்கிறது. ஆனால் ஒப்பீட்டளவில் மூன்றுபோலீசாரை மலையின மக்கள் உயிரோடு எரிக்கும் காட்சி சற்று அழுத்தமாகப் பதியப்பட்டிருப்பதிலிருந்தே மணிரத்னத்தின் அரசியல்சார்பு அம்மணமாகிறது.

வீரா தலைமையிலான மலையின மக்கள் எதற்காகப் போராடுகிறார்கள், அவர்களது கோரிக்கைகள் என்ன, அவர்களது போராட்டத்தின் அரசியல்தன்மை என்ன, அவர்கள் மீது ஏவிவிடப்பட்ட அடக்குமுறை அல்லது மறுக்கப்பட்ட உரிமைகள் என்ன, பிருத்விராஜ் தலைமையில் போலீசார் விக்ரமை வேட்டையாடும் அளவிற்கு வீரா இழைத்த ’குற்றங்கள்’ என்ன என்கிற எந்த கேள்விக்கும் படத்தில் பதிலில்லை. வழக்கமாக மணிரத்னம் படத்திலுள்ள உயர்சாதிய-வர்க்கச்சார்புடைய போலியான, மொன்னையான அரசியல் காரணங்களோ அரசியல் ‘நியாயங்களோ’ கூட இந்த படத்தில் இல்லை. அரசியலைத் தவிர்த்துப் பார்த்தாலும் விக்ரமுக்கு அய்ஸ்வர்யாராயின் மீது காதல் வருவதற்கான அழுத்தமான காரணங்கள். பிருத்விராஜுக்கும் அய்ஸ்வர்யாவுக்கும் இடையில் உள்ள நெருக்கம், அய்ஸ்வர்யாராய்க்கு விக்ரம் மீது உள்ளது அனுதாபமா, காதலா என்பது போன்ற எந்த உணர்வுசார்ந்த அடிப்படைகளும் படத்தில் இல்லை.

ராமாயணத்தைப் பிரதியெடுக்கிற மணிரத்னத்தின் முயற்சி படுவேடிக்கையாக இருக்கிறது. கார்த்திக் அனுமன் வேடத்தைப் பிரதிபலிப்பவர் என்பதால் அவரை மரத்துக்கு மரம் தாவவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள், ஜீப்பின்மீது தலைகீழாக படுக்க வைத்திருக்கிறார்கள், குரங்குசேட்டை செய்யவைத்திருக்கிறார்கள். இத்தனை செய்தும் ரசிகர்கள் புரிந்துகொள்வார்களா என்கிற சந்தேகத்தில் அவருக்கு மங்கிகேப்பும் மாட்டிவிட்டிருக்கிறார்கள். இப்படி படுகேவலமான பல காட்சிகளும் உத்திகளும் படத்தில் உண்டு. மலையினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் விக்ரம் விலங்குகளைப் போலக் குரலெழுப்புவது, பிரியாமணி மோப்பம் பிடிப்பதைப் போல மூக்கைச் சுளித்துக்காட்டுவது என்கிற அபத்தமான, சாதிய மனநிலையுடன் கூடிய கேவலமான உத்திகளும் உண்டு.

தன் மனைவியைச் சந்தேகப்படுவதைப் போல நடிப்பதற்காகக் கீழ்த்தரமான கேள்விகளைப் பிரித்விராஜ் எழுப்புவதும், அதனால் விக்ரமிடம் ஓடிவந்து தன் கணவன் ’வீரா தன்னைப்பற்றிச் சொன்னதாகச் சொன்ன தகவல்கள் உண்மையா’ என்று தெரிந்துகொள்வதற்காக அய்ஸ்வர்யாராய் வருகிற காட்சிகள் வரை ராமாயணத்தைப் பிரதியெடுத்த மணிரத்னத்தால் ராமன் சந்தேகத்தை முன்வைத்து ஒரு போலிப்பெண்ணிய நாடகத்தைக்கூட நிகழ்த்திக்காட்டவும் துப்பில்லை. எப்படியோ இதுவரை தமிழ்ச்சினிமாவில் மணிரத்னம் உருவாக்கிய போலிக்கலாச்சாரத்தின் வீழ்ச்சிதான் ராவணனின் தோல்வி என்று சொல்லலாம்.

ஒரு இந்துப்புராணப்பிரதியை நகலெடுக்கம் செய்த முயற்சியிலேயே மணிரத்னம், தம்பதி சகிதமாக அம்பலப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. ராமாயணத்தை நகலெடுக்கும் முயற்சியில் ஈழப்பிரச்சினையை மய்யப்படுத்திய கதையாடல் ஒன்றையோ இந்துத்துவக் கதையாடல் ஒன்றையோ மணிரத்னம் எடுத்துத் தொலையாமலிருந்ததற்கு வேண்டுமானால் நாம் ஆறுதலடையலாம்.

http://www.lumpini.in/thiranayvu-005.html

சோபா சக்தியிடம் கேள்வி.ராவணன் படத்திற்கு விமர்சனம் எழுதுங்கோ.

பதில் நான் ராஜேஸ்குமார்,புஸ்பா தங்கத்துரையின் கதைகளுக்கு விமர்சனம் எழுதுவதில்லை.

எனக்கும் இந்த கருத்து சரியாகவேபடுகின்றது.இவர் உலக அழகியை வைத்து வியாபாரம் செய்கின்றார் போலிருக்கு.

படத்தை பற்றி விரிவாக விமர்சனம் எழுதுவதற்கான எந்த அம்சங்களும் அதிலில்லை.சினிமா என்பதே மிகைப்படுத்தலும் போலியும் என்றாகிவிட்டது.

பாவம் விக்ரம் பிதாமகனில் இருந்து இன்னமும் விடுபடவில்லை.பிரமாண்டம் மட்டுமே எஞ்சி நிற்கின்றது.

ஏனோ எனக்கு ஒரு பாலாவின்,கமலின்,சேரனின்,அமீரின் படம் பார்த்த பீலிங் இல்லை.முழு முழு செயற்கைத்தனம்.

அறளை பெயர்ந்து விட்டதோ என்னமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.