Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர்கள் - ஒரு புலம்பெயர்ந்த இந்தியத் தமிழனின் பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் - ஒரு புலம்பெயர்ந்த இந்தியத் தமிழனின் பார்வை

- முகிலன்

இலங்கைப் பிரச்சனை சூடு பிடித்த காலம், நான் சிறுவனாக தென் தமிழகத்தில் வசித்து வந்த காலம். இலங்கைப்பிரச்சனை, விடுதலைப் புலிகள், பிரபாகரன், ஜெய்வர்த்தனே போன்ற பெயர்களை என் அப்பா அவர்தம் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் கேட்டிருக்கிறேன். கொடும்பாவி ஒன்றை பாடைகட்டித் தூக்கிக்கொண்டு போன ஊர்வலங்களில் “ஜெயவர்த்தனே பொண்டாட்டி எங்களுக்கு வப்பாட்டி” என்று அர்த்தம் புரியாமலே கோஷம் போட்டுப் போயிருக்கிறேன்.

பருவ வயதுச் சிறுவனாக, இந்திய அமைதிப் படையில் போன ஒரு தமிழ் ராணுவ வீரர், வட இந்திய வீரர்கள் அங்கே செய்த அட்டூழியங்களைப் பட்டியல் இட்ட போது கதறி அழுதிருக்கிறேன். ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு ஒற்றைக்கண் சிவராசனையும் சுபாவையும் சி.பி.ஐ தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டி தேடிக்கொண்டிருந்த போது அவர்கள் மாட்டிவிடக்கூடாது என்று உள்ளூர ஆசைப்பட்டிருக்கிறேன். அவர்கள் போலீஸால் சுற்றி வளைக்கப்பட்டு வீர மரணம் அடைந்த போது அவர்களுக்காக சில துளி கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.

பிறிதொரு நாளில் ஒரு என்.எஸ்.எஸ் கேம்பின் போது ஒரு இலங்கை அகதிகள் முகாமில் நான் சந்தித்தவர்கள் இந்தியாவில் படும் கஷ்டங்களைக் கேட்டு நானும் கஷ்டப்பட்டிருக்கிறேன். என்னால் ஏதும் செய்ய இயலாத போதும் அவர்கள் சாய்ந்து அழுது தங்கள் பாரத்தை இறக்கிவைக்க ஒரு தோளாக உதவியிருக்கிறேன்.

2004ம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்தேன். பல இலங்கைத் தமிழர்களுடன் நேரடியாகப் பழக வாய்ப்புக்கிடைத்தது. பலர் இனிமையாகப் பழகினார்கள். சிலர் பட்டும் படாமலும். பட்டும் படாமலும் பழகியவர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு இந்தியர்களால் எதாவது கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். எனக்கு இங்கே புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களைப் பார்க்கும்போது ஒரு பரிதாபமும் குற்ற உணர்ச்சியும் இருக்கும்.

பின்னாளில் தெரிந்து கொண்டேன் நான் பழகிய பல தமிழர்கள் இலங்கைப் பிரச்சனை தீவிரமாகுமுன் புலம்பெயர்ந்தவர்கள். ஆனாலும் பலர் அங்கே கஷ்டப்பட்டிருக்கிறார்கள். கொழும்புவில் இருந்து வெள்ளவத்தைக்கு ரயிலில் போகும்போது தமிழில் பேசினால் அடி விழுமாம். அப்படி கஷ்டங்களையும் இவர்கள் அனுபவித்து வந்திருக்கிறார்கள்.

நான் சந்தித்த பழகியவர்களில் பெரும்பாலானோர் பிரபாகரனைப் பிடித்தே இருந்தது. ஒரு சிலருக்கு தங்களுக்கென்று ஒரு தேசம் அமையும் பட்சத்தில் திரும்பிப் போக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. பெரும்பாலானோர் அமெரிக்க வாழ்க்கைக்கு மாறியிருந்தனர். அவர்களுக்குத் திரும்பிப் போக விருப்பமும் இல்லை.

அதுவரை இலங்கைத் தமிழர்கள் அனைவரும் தனி ஈழம் விரும்புபவர்கள் என்றும் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். என் மனதில் இருந்த பிம்பம் உடையும் நாள் வந்தது.

ஒபாமா ஜனாதிபதியான பின்னர் ஒருநாளில் ஒபாமாவின் வெற்றிக்காக உழைத்த ஒரு தமிழரைப் பார்க்க நேரிட்டது. அவரும் மற்ற தமிழர்களும் சூடான விவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஈழத்தில் போர் உச்சக் கட்டத்தில் இருந்தது. அந்த நபர் ஒபாமாவின் அரசு இலங்கைப் போரை நிறுத்த எந்த முயற்சியும் எடுக்காது. எடுக்கவும் கூடாது என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் பிரபாகரனையும் கடும் சொற்களால் சாடிக்கொண்டிருந்தார். பிரபாகரனால் தான் இலங்கைப் பிரச்சனை இவ்வளவு மோசமானதாகவும், சிங்களவர்களுடன் இயைந்து போயிருந்தால் எப்போதோ சமரசம் வந்திருக்கும் இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம் என்பதும் அவரது வாதங்கள். எனக்கு அவருடைய வாதத்தில் உடன்பாடு இல்லை.

அவரிடன் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். “உங்களாலேயே இலங்கையை விட்டு வெளியேறி அமெரிக்காவில் நல்ல வாழ்க்கை நடத்த முடியும்போது எதற்காக பிரபாகரன் போர் முனையில் மொத்த குடும்பத்தையும் இருத்திக்கொண்டு போரிட்டுக்கொண்டிருக்க வேண்டும்? அவர் நினைத்தால் வெளியேறியிருக்கலாமே? லத்தீன் அமெரிக்காவில் பல குட்டி நாடுகளில் காசை விட்டெறிந்தால் முழு ராணுவ பாதுகாப்புடன் வசதியாக வாழ வைத்திருப்பார்களே” என்ற என் கேள்விக்குக்கு அவரிடம் பதில் இல்லை.

அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தற்காலிகத் தேக்கநிலை உருவானதும் சிங்களவர்கள் கை ஓங்கியதும் அனைவருக்கும் தெரியும்.

இந்தக் காலகட்டம் வரை எனக்குப் பதிவுலகம் அறிமுகமாகவில்லை. பின்னர் மெதுவாக பதிவுகள் பல படிக்கும் வழக்கமும் பதிவுகள் என்ற பெயரில் மொக்கைகள் எழுதும் பழக்கமும் எனக்குள் வந்தது. இப்போது இந்தப் பதிவை நான் எழுதிக் கொண்டிருக்கவும் இந்தப் பதிவுலகமே காரணம்.

நான் படித்த பதிவுகளில் வந்த பின்னூட்டங்களில் சில புலம்பெயர்ந்த தமிழர்களை வன்மையாகத்தாக்கி இருந்தன. வன்னியில் தமிழினம் கஷ்டப்படும்போது அவர்களில் பார்ட்டிகள் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்ததாக. அதே போல சில புலம்பெயர்ந்த தமிழர்கள் கொழும்பில் வசித்து வரும் பதிவர்களை சிங்களவனிடம் பிச்சையெடுத்து வாழ்ந்து வருவதாகத் திட்டியும் எழுதியிருந்தார்கள்.

இன்னும் சில பதிவுகளில் முஸ்லிம் தமிழர்களுக்கும், இந்துத் தமிழர்களுக்கும் இடையில் நிகழ்ந்த சில நடக்கக்கூடாத சம்பவங்களைப் பற்றிய விவாதங்களையும் கண்டேன். சிங்களவனின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நம்மவர்கள் பலியானதைக் கண்டு நொந்து நூலானேன்.

என்னைப்போன்ற இந்தியத் தமிழர்கள் பலர் இந்த ஈழப் பிரச்சனையை ஒரு உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே அணுகுகிறோம். அதற்கு நாங்கள் வளர்ந்து வந்த சூழலும் நாங்கள் பார்த்து வளர்ந்த அரசியல்வாதிகளுமே காரணம். தமிழனை என்றுமே ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வைத்திருந்து வைத்திருந்தே அரசியல் நடத்தி வந்திருக்கிறார்கள் எங்கள் அரசியல்வாதிகள்.

நாங்கள் உணர்ச்சிவசப்படும்போது எங்களில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பவர்களை சுரணையில்லாதவர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். புலிகளைத் திட்டிப் பேசுபவர்களை தமிழினத் துரோகிகள் என்று எண்ணுகிறோம்.

எங்களிலும் சிலர் முழுமையான ஈழ வரலாறு தெரியாமல் ராஜிவ் காந்தியின் மரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அப்படி அவர்கள் ஏற்றும் போதெல்லாம் என்னாலான எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டே வருகிறேன்.

கிரிக்கெட் என்பது விளையாட்டு அதில் அரசியலைக் கலக்கக்கூடாது என்பது என் எண்ணமாக இருந்து வந்தது. எனக்கு அதில் விழுந்த முதல் அடி, இலங்கை வீரர்களின் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்ட போது அதில் விடுதலைப் புலிகளின் கை இருக்கலாம் என்று கூசாமல் சிங்கள அரசு சந்தேகப்பட்ட போது எனக்கு ஆத்திரம் வந்தது. மதத்தின் பேரால் ஆயுதம் ஏந்தி போராடும் ஈனர்களுடன் விடுதலைப் போராட்டம் நிகழ்த்தும் எங்கள் வீரமறவர்களை சம்மந்தப்படுத்துவதா என்று.

மேலும் அந்தச் சம்பவத்தின் போது இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே தங்கள் நாட்டின் தீவிரவாதிகள் தங்களுக்கு இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்காகத் தயார்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னபோது எனக்கு கிரிக்கெட் ஒரு அரசியல் விளையாட்டுத்தான் என்ற எண்ண விதை விழுந்தது. அதை உறுதிப்படுத்துவது போல கடந்த ஆண்டுகளில் இந்திய-இலங்கை அணிகள் அளவுக்கு அதிகமாக மோதிக்கொண்டன. இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளிலும் இது தொடரும்.

இதற்கு முக்கியக் காரணம் இலங்கைத் தமிழர்களில் பலர் இலங்கைச் சிங்கள அணியின் ரசிகர்கள். அவர்களுக்கு இந்திய-இலங்கைப் போட்டிகள் இந்தியர்களின் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் போல உணர்ச்சிவசப்படுத்தக்கூடியவை. இந்தியா இலங்கையுடன் தோற்கும் போதெல்லாம் நான் பழகக் கூடிய இலங்கைத் தமிழர்கள் என்னைக் கேலிசெய்வார்கள். இதை நான் இந்தியா பாகிஸ்தானுடன் தோற்கும் போது அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பாகிஸ்தானியர்களால் கேலி செய்யப்படுவதற்கு ஒத்தான நிகழ்வாகவே பார்க்கிறேன். இப்படி இந்தியர்களையும் இலங்கைத் தமிழர்களையும் கிரிக்கெட் போதையேற்றி மற்ற விசயங்களை மட்டுப்படுத்தி வைப்பதற்காக பாசிச இந்திய அரசும் நாசிச இலங்கை அரசும் மேற்கொள்ளும் மட்டமான உத்திகள். நாமும் போதையேறிப்போய் அலைகிறோம்.

எனக்கு நான் பார்த்த வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மீது ஒரு பெரிய வருத்தம் உண்டு.

இவர்களில் 80% தமிழ் பேசுவதில்லை. நான் கவனித்த ஒரு விசயம்.

1. பெற்றோர்களில் யாராவது ஒருவருக்கு ஆங்கிலம் பேச வராதென்றால் பிள்ளைகள் தமிழில் நன்றாகப் பேசுகின்றனர்.

2. அம்மம்மா, அப்பம்மா, அப்பப்பா, அம்மப்பா யாராவது உடன் வசித்தால் பிள்ளைகள் தமிழிலும் பேசுகின்றனர்.

3. பெற்றோர் இருவரும் ஆங்கிலம் நன்றாகப் பேசினால், பிள்ளைகள் தமிழை மறந்து விடுகின்றனர்.

இதில் தமிழ் பேசுவது என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாக இங்கே எடுத்தாளப்பட்டிருக்கிறது. தங்கள் பிறந்த, வளர்ந்த இடத்தின் எச்சமாக நம்மில் ஒட்டிக் கொண்டிருப்பது மொழி மற்றும் கலாச்சாரமே என்பது என் நம்பிக்கை.

விதையாகத் தூவப்பட்டு வளர்ந்த நாற்றை பிடுங்கி நன்றாக வளர்வதற்காக மாற்று இடத்தில் நடுவது போன்றது என்னைப் போல புலம்பெயர்ந்த இந்தியர்கள்.

முன் கடவாய்ப் பற்கள்.. மிகவும் சீராக... முளை விட்டுப் பளிச்சிடும் போது.. பாதியிலேயே குறடு கொண்டு வெடுக்கென்று பிடுங்கிப் போட்டால் எப்படி இருக்கும்? (நன்றி கலகலப்ரியா) - இது புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள்.

இப்படிப் பிடுங்கிப் போட்டவர்கள் தங்கள் நாட்டை நினைவுபடுத்தும் விசயங்களைச் செய்து/தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன் நான். அப்படிப் பெரும்பாலானவர்கள் இல்லாததை நினைக்கும்போது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கும். இப்படியே போனால் மூன்றாவது தலைமுறைக்குத் தங்களது பூர்வீகமும் வீரம் செறிந்த வரலாறும் தெரியாமல் போய்விடும். தங்கள் பெயரால் மட்டுமே இந்தியப் பரம்பரையாக அடையாளம் காணப்படும் மேற்கிந்தியத் தீவின் இந்தியர்களைப் போலாகி விடுவோம்.

வாருங்கள். யூதர்களைப் பார்த்து கற்றுக்கொள்வோம்.

http://pithatralkal.blogspot.com/2010/05/blog-post_17.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.