Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரவங்சவின் பேயாட்டமும் (தொவில) செய்தியும் ‐ சுனந்த தேசப்பிரிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரவங்சவின் பேயாட்டமும் (தொவில) செய்தியும் ‐ சுனந்த தேசப்பிரிய ‐ GTNற்காக

22 July 10 12:41 am (BST)

பேயாட்டமும் நிறைவடைந்துவிட்டது. அமைச்சர் விமல் வீரவங்சவின் 60 மணித்தியால தற்கொலை (உண்ணாநிலை) தாக்குதலின் பின்னர் இராப்போசனத்திற்காக அம்பியூலன்ஸ் வண்டியொன்றின் மூலம் அவர் இராணுவ வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த உண்ணாவிரதத்தினால் ஏற்படப் போகும் தனது மரணத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பதையும் அவர் தொலைக்காட்சிகளுக்கு வழங்கிய இறுதி வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இது அற்புதமான இறுதி வாக்குமூலமாகும். எனது மரணத்திற்கு ஜனாதிபதி பொறுப்பல்ல. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமே பொறுப்பு என விமல் வீரவங்ச கூறியிருந்தார். இதில் அற்புதம் என்னவென்றால் அதில் ஜனாதிபதியை சேர்த்துக்கொண்டதுதான். வீரவங்சவின் தனிப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஜனாதிபதி பொறுப்பு கூறவேண்டியதில்லை என விமல் வீரவங்ச, உலகத்திற்கு கூற தீர்மானித்தது எதற்காக?. மறைமுகமாக இதற்கு ஜனாதிபதிதான் பொறுப்பு கூற வேண்டும் என்பதைப் போலும், நான் அந்தப் பொறுப்பை ஏற்கிறேன் என கூறுவதாகவும் அமைந்திருந்தது. எவ்வாறாயினும், இறுதியில் ஜனாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதியைத் தவிர வேறு எவராலும் தனது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என உண்ணாவிரதத்தைக் கைவிடுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் வீரவங்ச பகிரங்கரமாக கூறியிருந்தார். இந்த நிலையில், ஜனாதிபதி வழங்கிய தண்ணீரை அருந்திவிட்டு விமல் வீரவங்ச தனது தற்கொலைத் தாக்குதலை முடித்துக் கொண்டார். எனினும், பான் கீ மூனின் நிபுணர் குழுவோ, விமல் வீரவங்சவோ மரணமடையவில்லை.

விமல் வீரவங்சவின் ஆர்ப்பாட்டம் மற்றும் செயற்பாடுகள் ராஜபக்ஷ வாதிகளால்கூட விமர்சிக்கப்பட்டன. ஜெனீவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தயான் ஜயதிலக்க, ஐக்கிய நாடுகள் செயலாளரின் நிபுணர்கள் குழு இலங்கையின் இறையாண்மைக்குப் பாதிப்பானது அல்ல எனவும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இலங்கைக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். விமல் வீரவங்சவின் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதியைத் தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பிரதானிகள் எவரும் செல்லவில்லை. ஜனாதிபதியின் பெரிய மகன் என குறிப்பிடப்படும் விமல் வீரவங்ச, பதற்றமான முறையில் செயற்பட்டு நடத்திய ஆர்ப்பாட்டத்தினால் பான் கீ மூன் அன்றி ராஜபக்ஷவே அசௌகரியத்திற்கு உள்ளானார். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பான் கீ மூனின் இலங்கைத் தொடர்பான நிலைப்பாடு சரியானது என எண்ணும் நாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஐக்கிய நாடுகளுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் குறித்து செய்திகளை வெளியிட்ட அனைத்து சர்வதேச ஊடகங்களும், வீரவங்சவின் போராட்டத்தை வரையறையை மீறிய அரசாங்கத்தின் அனுசரணையில் அரசியல் இலாபம் கருதி மேற்கொள்ளப்பட்ட குறுகிய நோக்கத்திலான நடவடிக்கையென அவை தெரிவித்திருந்தன. ராஜதந்திர ரீதியில் தீர்க்க வேண்டிய பிரச்சினையை, வீதியில் இறங்கித் தீர்ப்பதற்கு விமல் வீரவங்ச மேற்கொண்ட போராட்டம் தோல்வியடைந்தது. இதுவே முதலாவது செய்தி!

வீரவங்சவின் உண்ணாவிரதம் இலங்கை மக்களை ஏமாற்றுவதற்காக ஆடப்பட்ட பேயாட்டம் என்பது அவர் இரண்டு நாட்களில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதன் மூலம் தெரியவந்தது. காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு இதனைவிட பல நாட்கள் உண்ணாமல் இருக்க முடியும் என வீரவங்சவை நன்கு அறிந்த ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்திருந்தார். விமல் வீரவங்ச உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த போது அவர் தலைக்கு அருகில் லெமன் பொப் பிஸ்கட் பெட்டியொன்று இருப்பதைப் போன்ற புகைப்படமொன்றை இணையத்தளப் பதியேற்றாளர் ஒருவர் வெளியிட்டிருந்தார். மாற்றுக் கருத்துள்ள சிங்கள இணையத்தளப் பதிவேற்றாளர்கள், விமல் வீரவங்சவின் உண்ணாவிரதத்தை கடுமையாக கேலியாக விமர்சித்திருந்தனர். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரிக்கா ஜான்ஸ், விமல் வீரவங்சவின் இந்த உண்ணாவிரதத்தின் பின்னர் அவரை ஏமாற்றுக்காரர் என அடையாளப்படுத்தியிருந்தார். விமல் வீரவங்ச தனது உண்ணாவிரதத்தின் போது சிற்றுண்டிகளை உட்கொண்டதாக இராணுவக் காவல்துறையின் தரப்புத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு லங்கா நியூஸ்வெப் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

உண்ணாமல், குடிக்காமல் உண்ணாவிரதம் இருப்பவர் ஒருவர் திடீரென உயிரிழக்க நேருமானால் அவர் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்ட ஒருவராகவே இருக்க வேண்டும். 1973ம் ஆண்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில் நியமிக்கப்பட்டிருந்த நிர்வாகிகளுக்கு எதிராக விஜேவீர உட்பட இரண்டாயிரம் பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டோம். மீதமிருந்த பாண் துண்டுகளையும், ஒரு கரண்டி தேனீரை மாத்திரம் தினம் அருந்தி, உப்பு கலந்த நீரை அருந்தியவர்கள் பலர் ஆறு நாட்கள் வரை தேக ஆரோக்கியத்துடன் இருந்தனர். உயிர்த் தியாகம் மூலம் அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக வியட்நாமின் குவான்டக் தேரர் தனது உடலில் தீ வைத்துக்கொண்டார். இந்திய இராணுவத்திற்கு எதிராக தனது உயிரைத் தியாகம் செய்த திலீபன் 10 நாட்களுக்குப் பின்னர் நீர் அருந்துவதை நிறுத்திய பின்னரே உயிரிழந்தார். உண்ணாவிரதம் 11வது நாளைத் தாண்டியே 1987 செப்டம்பர் 26ம் திகதி அவர் உயிரிழந்தார்.

சீனி கலந்த லெமன் பொப் பிஸ்கட்டை உண்டு, நீரை அருந்தி வந்தால் இரண்டு மூன்று வாரங்களுக்கு மேலாக இவ்வாறான உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடலாம். உண்மையில் விமல் வீரவங்ச சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவில்லை. அது அரசியல் ரீதியிலான உண்ணாவிரதப் போராட்டமாகும். உண்ணாவிரதப் போராட்டம் என்ற கதையில் விமல் வீரவங்ச பளிச்சிடும் வகையில் அவர் அணிந்திருந்த ஹமீடியாஸ் ஆடை விற்பனை நிலையத்தின் பெறுமதிமிக்க மேற்சட்டை மற்றும் தலைமுடியை இருகச் செய்யும் ஜெல் என்பன பளிச்சிடும் வகையில் ஊடகங்களில் வெளிப்பட்டன. எனினும், அரசியல் அடையாளத்தின் அர்த்தமானது அதனைவிட ஆழமாக பதிந்தது. இது இரண்டாவது செய்தியாகும்!!

ஜனாதிபதி ராஜபக்ஷ தனது மரணத்திற்குப் பொறுப்பாளி அல்ல என வீரவங்ச கூறிய போதிலும் அவரது ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் உதவி கிடைத்திருந்தது. ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்த காவல்துறை உயர் அதிகாரியை கடுமையாகத் திட்டி, காவல்துறையினரை அங்கு அனுப்பிய காவல்துறை மா அதிபரைப் பதவியிலிருந்து நீக்கப் போவதாக பாதுகாப்புச் செயலாளரின் அச்சுறுத்தல் அடங்கிய ஒலிப்பதிவை லங்கா ட்ருத் இணையத்தளம் பகிரங்கப்படுத்தியிருந்தது. அந்தக் குரல் போலியானது என அரசாங்கம் கூறவில்லை. இது அந்தக் குரல் பதிவை மறைமுகமாக அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, அதனை காவல்துறையினருக்கு வழங்கிய முறைமுகமான சமிக்ஞை எனத் தெளிவாக்கியது. விமல் வீரவங்ச போன்றவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களை காவல்துறையினர் தடுக்கக் கூடாது என்பதே அந்த சமிக்ஞையாகும். பிரதி காவல்துறை அத்தியட்சகர் ஒருவரைக் கூட சுட்டிக்காட்டி அச்சுறுத்தும் அதிகாரங்கள்கூட விமல் வீரவங்சவின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு இருந்தது. காவல்துறையினர் வாலை சுருட்டிக்கொண்டு பின்வாங்கினர்.

அதுமாத்திரமல்ல, இலங்கையில் நீதித்துறையைக் கட்டுப்படுத்துவதற்காக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஒருவரான அமைச்சரும், சட்டப் பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ், விமல் வீரவங்சவின் ஆர்ப்பாட்டம் இலங்கையின் ஜனநாயகத்திற்கு அமைய நடத்தப்பட்டதாகவும், அதனைத் தடுக்க சட்டத்தில் இடமில்லையெனவும் கூறியிருந்தார். அதிஉயர் பாதுகாப்பு வலயமான கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் பிரதான அலுவலகத்திற்கு முன்னால் மேடையொன்றை அமைத்து ஐக்கிய நாடுகள் செயலாளர் இலங்கை தொடர்பாக நியமித்துள்ள நிபுணர் குழுவைக் கலைக்கும் வரை ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்குள் எவரும் உட்செல்லவோ, வெளியேறவோ அனுமதிக்கப் போவதில்லையெனவும் அந்த அலுவலகத்திற்கு எதிரில் பேயாட்டம் நடத்தியமை என்பன சட்டரீதியானது என்பதே ஜீ.எல்.பீரிஸின் கருத்தாகும்.

நிராயுதபாணிகளாக பேரணியில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை காவல்துறையினர் துரத்தித் துரத்தித் தாக்கினர். அமைதியான முறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள், காவல்துறையினரால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஜெனரல் சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அமைச்சர் மேர்வின் சில்வாவின் குண்டர்கள் தாக்குதல் நடத்திய போது ஜீ.எல்.பீரிஸின் ஜனநாயக முறைமை கடைபிடிக்கப்படவில்லை. பேயாட்டம் அல்ல ராஜபக்ஷ நிர்வாகத்திற்குரிய திணைக்களத்திற்கு எதிரில் சாம்பிராணிப் புகையைக் காட்டி, இரண்டு தேசிக்காய்களை வெட்டுவதற்காவது இடமளிக்கப்படுமா?

அரசாங்கத்தில் அதிகாரத்திலுள்ளவர்கள் நாட்டில் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பேயாட்டங்களை நடத்த உரிமை இருக்கிறது என்பதையே வீரவங்சவின் பேயாட்டச் செய்தி உணர்த்துகிறது. பேயாட்டத்துடன் ஆரம்பமான இந்த ஆட்டம் சிறு கீறலைக்கூட ஏற்படுத்தாமல் முடிவுக்கு வந்தது. இது விமல் வீரவங்ச ஐக்கிய நாடுகள் செயலாளரை அச்சுறுத்துவதற்காக எழுதிய திரைக்கதை அல்ல. இது தேசிய அரசியல் இலாபம் கருதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். காரணம் இவ்வாறான ஆட்டங்கள் மூலம் சர்வதேச ராஜதந்திர பிரச்சினைகளை வெற்றிகொள்ள முடியாது. விமல் வீரவங்ச உண்ணாவிரதம் இருந்த தும்முல்லச் சந்திக்கு உண்ணாவிரதச் சந்தி என கேலிக்குள்ளாக்கும் அடைமொழியை சேர்க்கலாம்.

‐ சுனந்த தேசப்பிரிய

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=27533&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.